இந்தி எதிர்ப்பு ஏன்?/இந் நூலின் நோக்கம்…
இந் நூலின் நோக்கம்...
“யார் இந்த நாட்டை ஆள்வது? நானா? இல்லை இராமசாமி நாய்க்கரா? பார்த்து விடுகிறேன்” என்ற ஆணவம் ஆர்ப்பரிக்க இந்தியைத் தமிழகத்தில் 1938-ல் கட்டாய பாடமாக அறிமுகப்படுத்தினார் தன்னிகரற்ற அரசியல் தந்திரி என்று பாராட்டப்படுகிற இராசகோபாலாச்சாரியார்.
அவரை அடியொற்றி இரண்டாம் முறையாக ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் இந்தியைத் திணிக்க முயன்றார். மீண்டும் ஒரு முறை பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில் 1957-ல் இந்தித் திணிப்பு முயற்சி தொடங்கி முனை முறிந்துப்போயிற்று.
அதென்ன தமிழ்நாட்டிலே மட்டுமேதானே இந்தித் திணிப்பு எதிர்க்கப்படுகிறது என்பவர்களுக்கு ஒரு வார்த்தை:
இந்தி பேசும் மாநிலத்தவரே அதைப்பற்றி அக்கறையே காட்டாதிருந்த நேரத்தில் முதன்முதலாகப் பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டது தமிழகத்தில் மட்டுந்தானே!
‘இந்தி மட்டுமே ஆட்சிமொழியாகத் தகுதி பெற்றதா’ என்பதெல்லாம் பேசிச் சலித்துப்போன வாதங்கள்.
மக்களாலே தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அரசியல் நிர்ணய சபையில், இந்திய விடுதலைக்குத் தாங்கள் மட்டுமே காரணம் போலக்காட்டிக் கொண்டிருந்த காங்கிரசுக்காரர்கள் நிறைந்திருந்த நிலையில், ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில்தானே இந்தியாவின் ஆட்சி மொழித் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டது!
அப்போதே ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழி என்று முடிவு செய்திருந்தால்... வெள்ளையர் மீது வெறுப்புணர்ச்சி மண்டிக் கிடந்த அந்த நிலையில் இந்திக்கு விட்டுக் கொடுத்த நமது பெருந்தன்மை இன்று பலவீனமாகக் கருதப்பட்டு விட்டது!
இயற்கையாகவே இரண்டாகப் பிரிந்து வட இந்தியா – தென்னிந்தியா என்று இணையவே முடியாத இரு துருவங்களை வெள்ளையர்கள் தங்கள் ஈட்டிமுனை வலிவோடும் – துப்பாக்கிகளின் துணையோடும் ஒரே இந்தியாவாக ஆள முயன்றார்கள் என்றால், காங்கிரசுக்காரர்கள் அதைக் கதர் நூலாலே கட்டி இணைத்துவிடப் பார்த்தார்கள்! பொருளாதார ஆதிக்கவெறி உள்ளூடாய் இழையும் அவர்களது போலித்தனமான 'தேசபக்தி'க்குக் கதர்கை கொடுக்கவில்லை. அதனாலே இந்தியாவே ‘ஏக இந்தியாவைக் கட்டிக் காப்பாற்ற அலைகிறார்கள்.'
1938-ல் இந்தி எதிர்ப்புப் போர் துவக்கப்பட்ட நாளில் பிறந்த தமிழனுக்கு இன்று 47 வயது – வேகமும் விவேகமும் இணைந்து வாழ்க்கைக்கு வழிகாட்டும் பருவம். இந்த அரை நூற்றாண்டுக்குப் பிறகும் நாம் இன்னும் அதைப்பற்றிப் பேசிக்கொண்டே இருக்கவேண்டி இருக்கிறதே! 1957-ல் இந்தி மீண்டும் நம்மீது திணிக்கப்பட்ட நேரத்தில் வட ஆர்க்காடு மாவட்டத்துத் திருவண்ணாமலையில் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசிய கருத்தாழமிக்க பேச்சை மீண்டும் வெளியிட்டு, இந்தியைத் திணிக்க முயலும் வடநாட்டு ஏகாதிபத்தியவாதிகளின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.
'எப்பக்கம் வந்து புகுந்து விடும் இந்தி? எத்தனை பட்டாளம் கூட்டி வரும்?' என்று வீரக்குரல் கொடுத்து எதிர்த்தாரே பாரதிதாசன்! இன்று எல்லா பக்கங்களிலும் இந்தி புகுந்து கொண்டிருக்கிறது: சாம, பேத, தான, தண்டங்களின் துணைகொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கிறது!
தமிழகத்தில் இந்தி எதிர்ப்புத் தீயின் கோரவிளைவுகளாலே பாடம் பெற்றது போலக் காணப்பட்ட வடக்கு – இந்தியைத் திணிப்பதிலே இடையிலே நிதானம் காட்டிக் கொண்டிருந்த மத்திய அரசு – இன்று நிதானமிழந்து நிலை தடுமாறுகிறது. இந்திராகாந்தி இருந்தவரை தம் பக்கத்திலே இருந்த உத்திரப்பிரதேசத்துக்காரர்களின் இந்தி வெறியை ஓரளவு அடக்கி வைத்திருந்தார் என்பது உண்மை. ஆனால் தூய்மையானவர் போலவும், நியாயவான் போலவும் பத்திரிகைகளாலும், வானொலி – தொலைக் காட்சிகளாலும் தூக்கிக் காட்டப்படுகிற இளைஞர் ராஜீவ் காந்தி தலைமை அமைச்சர் பொறுப்பேற்ற பின்னாலே இந்தித் திணிப்புப் பேச்சு அமளிதுமளிப்படுகிறது. அண்மையில் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி பேசிய ஒரு கருத்து இந்திக்காரர்களின் வெறிக்குத் தூபம் போடுவதாக அமைந்து விட்டிருக்கிறது!“இந்தியாவில் இத்தனை தேசியமொழிகள் இருக்கின்றன என்று எண்ணும் போது நான் வெட்கப்படுகிறேன்”.
ஆட்சிமொழி, இணைப்பு மொழி, தேசிய மொழிகள் – இவைகளுக்கு உள்ள வேறுபாடு புரியாதவரா ராஜீவ் காந்தி? இல்லை! அடிக்கடி நம் பெரியார் சொல்வது போல பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது! ராஜீவ் காந்தியின் அடிமனத்தின் ஆழத்தில் (Sub Conscious Mind) கருமையம் கொண்டிருந்த கருத்து அவரை அறியாமலே வெளிப்பட்டு விட்டது! அதற்கு முன்னால், ‘இந்தியாவில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன என்பதையேநான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பாரதம் ஒரே தேசிய இனம் கொண்ட நாடு’ என்று சொல்லித் தமது எதேச்சாதிகார எண்ணத்தை வெளியிட்டார்!!
இத்தகைய எண்ணங்களின் ஒட்டு மொத்தமான வெளிப்பாடுதான் இந்தித் திணிப்பில் இப்போது காட்டப்படுகிற வேகம்!
டெல்லியிலே சமைக்கப்படுகிற இந்த டெல்லி விஷத்தை நமக்கும் சேர்த்துத் தெளிக்கிற தெளிவிஷமாக டெலிவிஷன் போக்கு மாறிவருகிறது.
‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்றானே பாரதி. அதை மெய்யாகத் திட்டமிட்டு மெல்ல மெல்ல டெல்லிவிஷத்தை டெலிவிஷன் மூலம் பாய்ச்சித் (Slow Poisoning) தமிழைக் கொன்று வருகிறார்கள். தமிழரை அடிமைகளாக ‘அங்கீகரித்து'க் கொண்டிருக்கிறார்கள்.வானொலியின் நிகழ்ச்சிகளே தமிழருக்காகப் பெரும்பாலும் இருப்பதில்லை; இப்போதோ நிகழ்ச்சித் தலைப்புகளே கூட ‘வாத்திய விருந்தா’ போல மாறி வரும் போக்குத் தென்படுகிறது.
சில பாங்குகள் தவிர அரசுடைமையாக்கப் பட்டபெரும்பாலான பாங்குகளிலும், ஸ்டேட் பாங்கிலும் பெயர்ப் பலகைகள்மேலே தமிழிலும், கீழே ஆங்கிலத்திலும் – ஆக இருமொழிகளில் மட்டுமே இருந்தன. அண்மைக்காலமாக அவை அகற்றப்பட்டு இடையிலே இந்தியில் எழுதப்பட்ட மும்மொழிப் பெயர்ப்பலகைகள் இடம் பெற்றிருக்கின்றன. பாங்குகளில் வேலைக்கான தேர்வுகளும், CAIIB என்ற பாங்கு ஊழியர்களின் பதவி உயர்வை நிர்ணயிக்கிற தேர்வும் சென்ற ஆண்டிலிருந்து இந்தியிலும் எழுதலாம் என்று அறிவித்துவிட்டார்கள்.
அஞ்சல்நிலையம், பாங்குக் கிளைகள், மத்திய அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் குறைந்தபட்சம் இத்தனை சதவீதப் பணிகள் இந்தியில் நடந்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அரசு ஆணைகள் வந்துவிட்டன.
மத்திய அரசு மானியம் பெறும் நிறுவனங்களும் தங்கள் பணியைக் குறிப்பிட்ட அளவு இந்தியில் நடத்தியாக வேண்டும்: இல்லையேல் மானியத் தகுதியை இழப்பர் என்று ஆணை வந்திருக்கிறது (தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதைத்திரும்ப பெறப்பட்டதாகச் சொல்லப்பட்டது)
இந்த அளவு இந்திவெறியைக் காட்டும் திமிர் நடவடிக்கைகளுக்குக் காரணம் என்ன?அண்மையில், இந்தியாவை வெள்ளையர் கைப்பற்றிய நோக்கம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் சிலர் ஒரு ஆய்வுக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
“வணிகநோக்கம் எதுவும் வெள்ளையருக்கு முதன்மையாக இல்லை. நாடு பிடிக்கும் எண்ணமே — அரசியல் ஆதிக்கத்தை வளர்க்கும் எண்ணமே முதன்மைக் குறிக்கோள் ஆகும். ஆனால் அதை மறைத்து தங்களுக்கு வணிக வரிவு நோக்கம் இருப்பது போலக் காட்ட கிழக்கு இந்தியக் கம்பெனியை ஒரு உருமாற்றாகப் (Camoflauge) பயன்படுத்தினார்கள். இதற்கான எழுத்து மூல ஆதாரங்கள் அண்மையில் கிடைத்தன.”
இதேபோலத்தான் வடநாட்டில் தயாரிக்கப்படும் எல்லா பொருள்களின் சந்தைக் காடாகத் தென்னாட்டை ஆக்குகின்ற ஒரு திட்டமிட்ட முயற்சியின் உருமறைப்பாக இந்தி மொழியைத் திணிக்க முயல்கிறார்கள். தென்னகத்தாரின் மொழி, இன, கலைவழித் தனித்தன்மைகளைத் தொலைத்துக்கட்டிவிட்டு இந்தி மொழிக்காரர்களில் அங்கீகரிக்கப்பட்ட அடிமைகளாக நம்மை ஆக்கிவிடத் துடிக்கிறார்கள்.
இத்தகைய கொடுமையான கால கட்டத்திலேதான், 1938-ல் இந்தி எதிர்ப்பு முதற்போரில் மூலமுழக்கமிட்ட முப்பெருந்துறவிகளில் ஒருவரான அருணகிரி அடிகளார் தலைமையிலே திருவண்ணாமலையில் 1957ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கிய முழக்கத்தை இப்போது வெளியிட வேண்டிஇருக்கிறது.இந்தப் பேச்சைப் படித்தபிறகு நீறு பூத்த நெருப்பாய் இருக்கும் நம் இந்தி எதிர்ப்புக் கனல் கொழுந்து விட்டு எரியட்டும்.”
இந்தியை இடையிலே உள்ள மும்மொழிப் பலகைகளைக் காணுந்தோறும் நாம் வடநாட்டின் அங்கீகரிக்கப்பட்ட அடிமைகள் – இந்தியத் துணைக்கண்டத்தின் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற உணர்வு கிளர்ந்து எழட்டும்.
தென்னவரை அடிமைப்படுத்தும் கருவியாகிவிட்ட ஆட்சிமொழி பற்றிய அரசியல் சட்ட விதியே அகற்றப்பட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் உருவாகிப் பரவட்டும்.
— பதிப்பகத்தார்