இன்னொரு உரிமை/காதல் புறாக்கள்



காதல் புறாக்கள்


ந்த வீட்டுப் புற வாசலில் இருந்து கும்மாளம்மா வெளிப்பட்டாள்.

புறவாசலுக்குக் கதவுபோல் தோன்றும் பச்சைக் குடை விரித்த வாகை மரத்தில், தலைகீழாய்ப் பாய்ந்த ஒரு அணில் வேரில் தத்திக்கொண்டிருந்த சிட்டுக்குருவிகளைத் துரத்தியதையோ, கரிச்சான் குருவிகளை கரக்கிளையில் தாங்கிக் கொண்டு காற்றோட்டத்தில் அவற்றைக் குலுக்கி குலுக்கித் தாலாட்டும் வாதமடக்கி மரத்தையோ பார்க்காமல், நேராய் அந்த புறாக்கூண்டை நோக்கியே போனாள். அதன் அருகே குடைபோல் குவிந்து கிடந்த கோழிக்கூட்டை, கால் தற்செயலாய் இடறி, உள்ளே கிடந்த தாய்க்கோழி புலிப் பாய்ச்சலில் உறுமியபோது, அவள் அதையும் பொருட்படுத்தாமல் அந்தக் கூண்டுக்கு அருகே கீழே குனிந்து பக்கவாட்டில் கையை நீட்டினாள்.

அவளைப் பார்த்தவுடனேயே உள்ளே கிடந்த புறாக்கள் கும்மாளமிட்டன. துள்ளித் துள்ளிக் குதித்தன. இரும்புத்துவாரங்கள் வழியாக உடம்பைத் திணிக்கப் பார்த்தன. கையிலிருந்த ஒரு கிண்ணத்தையும், தூக்குப்பையையும் புறாக்கூண்டுக்குக் கீழே வைத்துவிட்டு, அவள் அதன் கதவைத் திறந்துவிட்டாள். மூன்று அடுக்குகள் கொண்ட கூடு. ஒவ்வொன்றிலும் நான்காக முந்நான்கு பன்னிரண்டு பலகைக் “குடில்களிலிருந்து” ஜோடிப் புறாக்கள் வெளிப்பட்டன. இரண்டே இரண்டு பலகைக் குடில்களில்தான் இரண்டு புறாக்கள் தனிக்குடித்தனம் நடத்திவந்தன.

கும்மாளம்மா சுவரில் குப்புறச் சாய்த்து வைக்கப்பட்ட தட்டை எடுத்து வந்தபோது, அத்தனை புறாக்களும் அங்கே கூடிவிட்டன. அந்தத் தட்டை அங்கே வைத்துவிட்டு தூக்குப் பைக்குள் இருந்த கேழ்வரகு, கம்பு தானியங்களை அந்தத் தட்டின் அடிவாரம் மறையும்படி படரவிட்டாள். பெரும்பாலான புறாக்கள் தானியங்களைக் கொத்திக் கொத்தி உடைத்து, துகள்களாக்கி உள்ளே போட்டுக்கொண்டிருந்தன. அந்தப் பக்கமாய் வந்த காகங்களைத் துரத்தின. அணில்களைப் பார்த்து அலகுகளால் எச்சரித்தன. இந்தப் புறாக் கும்பலுக்கு இடையே ஒரு சின்னப் புறா. பெரிய புறாக்களுக்கு இடையே முந்தியடித்து தானியங்களைக் கொத்தப்போன போது—

கும்மாளம்மா தான் பெற்ற பிள்ளைகளைப்போல் அந்தப் புறாக் குவியலையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். வண்ணத்துப் பூச்சிகள், பறவைகளாய் உருமாற்றம் ஆனது போன்ற காட்சி. உலகில் தெரியும் அத்தனை வண்ணங்களையும் காட்டும் அலங்கார கலாபங்களானது போன்றத் தோற்றம். ஒளிப்பிழம்புகளை ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை மாற்றி மாற்றிப் போட்டும், இன்னும் அது தோற்றுவிக்கும் எண்களுக்கு எப்படி முடிவு காணவில்லையோ, அப்படி ஏழு வண்ணங்களும், ஏழேழு வண்ணச் சாயல்களும் கூடியும், குலவியும் தேடியும், திரட்டியும் வண்ணக் கூட்டுக்களை சுமக்கும் மேனிகள்.

திருமணமான பத்து மாதங்களுக்குள்ளேயே எட்டு மாதத் தாய்மைப்பேறைப் பெற்ற கும்மாளம்மா, அந்த புறாக் கூட்டத்தில் தனது செல்ல பிள்ளையைத் தேடினாள். அது இல்லையோ என்பதுபோல் அடிமடியில் கை வைத்தாள்.

பிறகு இருக்கிறது என்பதுபோல் தலையாட்டினாள். அந்த சின்னப் புறாவும், அவளைப் பார்த்துச் செல்லமாகத் தலையாட்டியது. உடனே இவள் கிண்ணத்திலிருந்து ஊறவைத்த கடலையை கல்வம்போல் இருந்த கல்லில் படரவிட்டு அதனைக் குரல் கொடுத்துக் கூப்பிட்டாள். ஆனால் அவளது அந்தச் செல்லப் புறா “நான் பெரிய மனுஷி ஆயுட்டேனாக்கும். என்னால இந்த கேழ்வரகைக் கொத்தித் தின்ன முடியுமாக்கும்” என்பதுபோல் இதரப் புறாக்களுடன் முந்தியடித்தது. உடனே, இவள் அந்தப் பக்கமாய்ப் போய் அந்தப் புறாச் சிறுமியைப் பிடித்துக்கொண்டாள். அதன் நீலக் கண்களில் மாறிமாறி முத்தமிட்டாள். பதில் முத்தம் கொடு என்பதுபோல் அதைப் பார்த்துவிட்டு, பிறகு அதன் அலகை எடுத்து தனது கன்னத்தில் தடவிவிட்டாள். ‘பறந்து காட்டு’ என்பதுபோல் கையிலிருந்து உயரமாக அதைத் தூக்கிவிட்டபோது, அது பறந்துபோய் அவள் வீட்டு ஓட்டில் போய் உட்கார்ந்தது.

கும்மாளம்மா புறாக்களை எண்ணிப் பார்த்தாள். இருபதுக்கு ஒன்று குறைந்தது. அந்தச் சமயம் பார்த்து ஒரு இருமல் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்துக்காரர் புறாக் கூண்டுக்குப் பக்கத்தில் போடப்பட்ட ஒரு வட்டக்கல்லில் உட்கார்ந்திருந்தார். அந்த ஆசாமிதான் ஒன்றை அமுக்கியிருக்க வேண்டுமென்று அவளுக்கு ஒரு சந்தேகம். அதை பட்டும் படாமலுமாகக் கேட்டாள்.

“என்ன தாத்தா, காலங்காத்தாலேயே இங்க வந்து ஒக்காந்துட்டீரு? ஒரு புறாவ வேறக் காணல. உம்மமேல பழிவரப்படாது பாரும்!”

அடியும் தலையும் ஒரே மாதிரியான குச்சிபோல் அமைந்த அந்த எழுபது வயது தாத்தா அவளை மேலும் கீழுமாகப் பார்த்துக்கொண்டு பதிலளித்தார்.

“இந்தா பாரு தாயீ... சும்மாப் பூடகமாப் பேசாத... நீ கல்யாணம் ஆயி ஊருக்கு வந்த புதுப்பொண்ணு. அதனால் தான் தராதரம் தெரியாம அப்படிப் பேசற. தராசும் படியும் ஊருல. வேணுமின்னா என்னைப்பத்தி ஊருல கேட்டுப் பாரு... ஆஸ்துமா கோளாறு... ஊதக்காத்துல மேல்மூச்சும் கீழ்மூச்சும் ஒண்ணா முட்டுது. புறாக் காத்துப் பட்டா கொஞ்சம் சொகம் கிடக்கும். அதுக்காவ வந்தேன். வேணாமின்னா போயிடறேம்மா...”

கும்மாளம்மாவுக்கு என்னவோபோல் இருந்தது. ஊருக்கு வந்திருக்கும் களக்கூத்தாடிகளில் ஒருவன் கையில் நேற்றொரு புறா இருந்ததாக நாத்தனாக்காரி சொன்னதும் நினைவுக்கு வந்தது. உடனே அவரிடம் “ஒக்காருவதுக்கு மணக்கட்டத் தரட்டுமா” என்றாள். எழப்போன அந்தப் பெரியவர் மீண்டும் உட்கார்ந்துகொண்டே அவளை அன்போடு பார்த்துக்கொண்டு பேசினார்.

“அதோ கோழிக்கூண்டுக்கு பக்கத்தல ஒரு புடவச்சிருக்கே! அது என்னன்னு தெரியுமா? தெரியாதுன்னா தலையாட்டுற? இறப்பாளி பய மவளே... கீரி பூமிக்குக் கீழே கால்வாய் மாற்றி குடஞ்சிட்டுகிட்டு வருது. கோழிக்கூட்டுக்குள்ள கீழே இருந்தே கன்னம் வச்சி ராத்திரிக்கு ஒரு கோழிய கவ்விக்கிட்டுப் போறதுக்குப் பிளான் போட்டிருக்கு. இது தெரியாம என்னமா கோழிப்புறா வளக்க? பேசாம தாத்தாக்கிட்ட ஒரு மம்புட்டிய கொடு. கீரி பிள்ளையா இருந்தா ஒரே வெட்டா வெட்டறேன். இல்லாட்டாலும் அந்தப் புடைய வெட்டிப் போடறேன்!”

கீரியின் தந்திரத்தால் சிறிது அசந்து, பிறகு ஆத்திரப்பட்ட கும்மாளம்மா மண்வெட்டியை எடுக்கப் போனாள். இதற்குள் எல்லாப் புறாக்களும் வடக்கு நோக்கிப் பறந்தன. அவளது செல்லப் புறா மட்டும் அவள் வீட்டு ஓட்டுக்குத் தாவி அவளையே பார்த்தது. அவள் ‘வந்துவிடு வந்துவிடு’ என்பதுபோல் கையாட்டினாள். ஆனால், அதுவோ இன்றைக்கு அவங்ககூட போகப்போறேன் என்பதுபோல் பறந்தது. அவள் எவ்வளவு கூப்பிட்டும் அவளை எட்டிப் பார்த்ததே தவிர திரும்பவில்லை அவளும் அலட்டிக்கவில்லை. முந்தாநாள் கூட ஒரு கிலோ மீட்டர் போய்த் திரும்பிவிட்டது. இன்றைக்கு இரண்டு கிலோமீட்டர் வேண்டுமானால் போகலாம்.

பின்தங்கிப்போன அந்தப் புறாச் சிறுமி, பெரியவர்களோடு இணையாகப் பறப்பதற்கு இறைக்கைகளை மாறி மாறி அடித்து இறுதியில் அவற்றுடன் சேர்ந்துகொண்டது. ஐந்து கிலோ மீட்டர் பறந்ததும், லேசாய் மூச்சு வாங்கியது. ஆனாலும் கிழடுகளுக்கு இளக்காரமாகிவிடும் என்பதற்காக அது எட்டிப் பறந்தது. மரங்களுக்கு மேலே ஆகாயத்தின் அந்தரத்தில் கீழே தெரிந்த அத்தனை மனித உருவங்களும் அவளுக்குச் சிறியதாய்ப்போன ஒரு சந்தோஷம். பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தாண்டியதும், பெரிய புறாக்கள் ஆங்காங்கே உள்ள மரங்களில் உட்கார்ந்தன. ஆனால், இந்தப் புறாச் சிறுக்கி தனது தனித்தன்மையைக் காட்ட வேண்டும் என்பதுபோல் மேலும் பறந்துகொண்டே பாய்ந்தது. இறுதியில் கிளைகளில் இருந்த அந்தப் புறாக்கள் கண்படும் தொலைவில் உள்ள காட்டுப் பகுதிக்குள் இறங்கி ஒரு நாணல் புதர்மேல் உட்கார்ந்தது. அங்குமிங்குமாய் நோட்டம்விட்டது.

எதிரே உள்ள மூங்கில் புதரில் உட்கார்ந்திருந்த இன்னொரு இளம் புறா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப்போல் ஆகாயத்தில் பாய்ந்து கும்மாளம்மாவின் புறாப் பக்கம் வந்து உட்கார்ந்தது. அந்தப் புறாவும் அங்கே போய் இன்னொரு விழுதில் உட்கார்ந்து இதையே முறைத்துப் பார்த்தது. இதைத் தாங்கமுடியாத கும்மாளம்மாவின் புறா மீண்டும் புல்வெளியில் வந்து குதித்தது.

உடனே அந்தப் புறாவும் சிறிதுநேரம் அந்த விழுதில் இருந்துவிட்டு அங்கே வந்து பக்கத்தில் அமர்ந்தது. இறக்கைகளைத் தூக்கிக்கொண்டு செந்துாரம் தெறித்தது போன்ற உடம்பைக் காட்டிகொண்டு கழுத்தை அறைவட்டமாக்கிக் கொண்டு “கெக் கெக்” என்று ஒலி எழுப்பிக்கொண்டே இருந்தது.

கும்மாளம்மாவின் செல்லப் புறா ஏறிட்டுப் பார்த்தது. அந்த ஆண் புறா எழுப்பிய ஆண்மைச் சத்தமும் கம்பீரப்பட்ட முகமும், நீண்ட கீழ் அலகை நீட்டி குட்டையான மேல் அலகைத் தூக்கி, ஜோதியான நாக்கை அங்குமிங்கும் ஆட்டிய அதன் தோரணையில் இதற்குக் கிறக்கம் வந்தது. இதுவரை கண்டிராத இன்ப அதிர்வுகள் உடலெங்கும் வியாபித்தன. இப்போதுதான் இது ஆண் புறா ஒன்றைப் பார்ப்பதாக அர்த்தமில்லை. கூண்டிலும் இரண்டு பிரம்மச்சாரிகள் உள்ளன. ஆனால் ஆண்கள் என்றாலும் அசல் பொட்டைகள். இதேபோல் காட்டுப் பெண் புறாக்களில் முரட்டுத்தனத்தைக் கண்ட அந்த ஆண் புறாவிற்கும் இந்த ‘குடும்பப்பாங்கான’ புறாவைப் பார்த்ததும், ஒரு மயக்கம் ஏற்பட்டுவிட்டது. மீண்டும் ‘கெக்கெக்’ என்று ஆண்மையை வெளிப்படுத்தும் கம்பீரச் சத்தத்தை எழுப்பியது. பிறகு மெல்ல மெல்ல தனது இறகைத் தூக்கி கும்மாளம்மா புறாவின் கழுத்தில் லேசாய்த் தடவியது. அதற்கு உடன்பட்டதுபோல் கும்மாளம்மாவின் புறா, சும்மாயிருந்த மெளனச் சம்மதத்தால் அந்தக் காட்டுப்புறா அதை நெருக்கியடித்துக் கால்மேல் கால்சாத்தி, கழுத்துமேல் கழுத்தைப் போட்டு அதன் அலகை தனது அலகால் தடவிவிட்டுக் கொண்டிருந்தது.

எதிர்பாராது கிடைத்த இந்த காதல் அனுபவத்தில், இரண்டு புறாக்களும் முகங்களை ஒட்ட வைத்துக்கொண்டு அங்குமிங்குமாய் பார்த்தன. புல் தரையில் உட்கார்ந்திருந்த அவற்றிற்குப் புல்லிதழ்களில் காதலர்களின் வருகைக்காகக் காத்திருக்கும் பெண் மின்மினிப் பூச்சிகள் கண்ணில் பட்டன. இந்தப் பாவப்பட்ட மின்மினிப் பெண்களுக்கு பறக்கும் சக்தி கிடையாது. ஆகையால் உடம்பிலே ஒளி சிந்தி ஆண்களை வரவழைக்க வேண்டும். அதற்காகக் காத்திருக்கின்றன. அப்படிப்பட்ட அவசியம் தங்களுக்கு இல்லை என்பதுபோல் இந்தப் புறாச்ஜோடி பெருமையோடு தலைகளை ஆட்டிக்கொண்டன. அருகே ஒரு புகைவண்டிப்புழு, தரையிலுள்ள சிவப்புப் புள்ளிகளில் மரக்குச்சி ஒன்று விழுந்ததால், உடம்பெல்லாம் பச்சை நிறமாக ஒட்டிக்கொண்டிருந்தது. இந்த சைவப்பிராணிகள் அதை எதுவும் செய்யவில்லை. ஆனாலும்—

கும்மாளம்மா புறா, அந்த இடத்தை நோட்டமிட்டது. கிராமத்துக்காரன் நகரத்துக்கு வந்தது போன்ற திகில். வாகை மரங்கள், பூவரசுகளுடன் குலவிக்கொண்டிருந்தன. செடியாகவும் மரமாகவும் இல்லாத வேலிக்காத்தான்கள் வெள்ளை, சிவப்பு மலர் முகங்களைக் காட்டிக்கொண்டிருந்தன. பேருக்கு எதிர்மாறான நச்சுக்கொட்டைமரம், மெல்லிய கீரைகளை வெளிப்படுத்திக்கொண்டு தென்னை மரத்தோடு உரசிக்கொண்டிருந்தது. சின்னச் சின்ன பனைகள் முள்ளம்பன்றிகள் போல் சிலிர்த்துக்கொண்டு இருந்தன.

“ஆமா... என்ன அது?”

அருகே ஒரு பள்ளம். அங்கே தண்ணிர்க் காடு. வெளியே ஒரு பகுதியை விட்டுக்கொண்டிருந்ததால், சுத்தமாக இருப்பதுபோல் தெரிந்தது. அங்கே ஒரு பூனை ஒரு கல்லில் பதுங்கிக்கொண்டு முன்காலில் ஒன்றை எடுத்து தண்ணிருக்குள் நீட்டுகிறது. திடீரென்று அதை மேலே தூக்கிக் காலில் கவ்விய மீனை பாறையில் மோதி அங்குமிங்குமாகச் சிதறடித்துபிறகு வாய்க்கு கொண்டுபோகிறது.

இதைப் பார்க்கப் பயந்த கும்மாளம்மாவின் புறா, நடுங்கிவிட்டது. அதை மறைப்பதற்காக ஆகாயத்தைப் பார்த்தது. அங்கே ஈச்சமரத்தில் தம்புராமாதிரி ஒரு கூடு.

மேலே ஒரு பறவை—அதுதான்—நல்லாப்பாடுமே அது! ஒரு கிளையில் உட்கார்ந்திருக்கிறது. கூட்டிலிருந்து, ஆகாய விமானம் மாதிரி உள்ள வால் குருவி வெளியே பறந்ததும் இந்தக் குயிலு அந்தக் கூட்டுக்குள் போகிறது. ஒரு முட்டையை வாயால் கவ்விக் கீழே போட்டு உடைக்கிறது. பிறகு பின்பக்கமாகத் திரும்பி உடம்பின் பின்பகுதியை அந்த கூட்டுக்குள் கொண்டுபோகிறது. அப்புறம் பறக்கிறது. இப்படியா அட்டூழியம் செய்யறது? அதென்ன?... அடுத்தவள் வீட்டுக்குள்ள போயி... அவ முட்டையை ஒடச்சிட்டு, தன் முட்டையைப் போடறது.

கும்மாளம்மாவின் புறாவிற்கு வெறுப்பு வந்துவிட்டது. அதோடு அவளின் ஞாபகமும் வந்துவிட்டது. அதற்கு வீட்டிற்குப் போகவேண்டும்போல் தோன்றியது. அருகே அணைத்துக்கொண்டிருந்த ஆசைக் காதலனை ஏறிட்டுப் பார்த்துக் காலால் இடறியது. “நா போகப் போறேனாக்கும்.”

முன்கால்களை வளைத்து, பின்கால்களை அது லேசாகத் தூக்கியபோது, அந்த ஆண்புறா, அது போக வேண்டாம் என்பதுபோல் அதன் முன்னால் போய் நின்று தன் கழுத்தைக் கொடுத்து அலகை நிமிர்த்தியது. இங்கேயே குடித்தனம் செய்யலாம் என்பதுபோல் மீண்டும் ‘கெக்கெக்’ என்று சத்தம் போட்டு அந்தப் பெண்புறாவிற்கு இன்ப அதிர்வுகளைக் கொடுத்தது. தாய்க்காரி கும்மாளம்மாவை தனது ஜோடியோடு காட்ட வேண்டும் என்று அந்தப் புறாச் சிறுமிக்கு ஒரு ஆசை. நீயும் வாயேன் என்பதுபோல் ‘கெக்கெக்’ புறாவிற்கு இணையாக ஒரு சத்தம் போட்டது. ஆனாலும், அது தன்னோடு வராது என்று புரிந்து கொண்டதுபோல் நான்கடி தாவி, அதை திரும்பிப் பார்த்தது. பிறகு ஜெட் விமானம்போல் நேராக ஆகாயத்தில் எம்பிப் பறந்தது. மீண்டும் மனம் கேட்காமல் திரும்பி வந்து அந்த ஆகாயத்தையே ஏக்கமாகப் பார்த்த காதலனை நோக்கி வட்டமடித்தது. அதற்கும், அந்த ஆண்புறா அசைந்துகொடுக்காமல் இருந்ததைப் பார்த்துவிட்டு, இதற்கும் ஒரு வைராக்கியம் திரும்பிப் பாராமலேயே பறந்தது.

உயரே பறந்துகொண்டிருந்த புறாச்சிறுமிக்கு மேலே ஒரு உருவம் தென்பட்டது. அதன் நிழலில் பார்வை சற்று மங்கியது. புறா இனத்தின் எதிரியான வைரிக்குருவி, இப்படி ஆகாயத்தில் இரைக்கு மேல் பறந்து தனது நிழலை வைத்து அதை திக்குமுக்காட வைத்து, இறுதியில் கொன்றுவிடும் என்பதை அதன் உள்ளுணர்வு உணர்த்தியது. ஆகையால் பயந்துபோய், கூக்குரலிட்டபடியே, தாழப்பறந்து அது ஓலமிட்டபோது, அதற்கு இணையாக ஒன்று பறந்தது. “அடடே நீயா? நீதான் இப்படி பயப்படுத்திட்டியா? சரி வா! அம்மாகிட்ட போகலாம்!”

அந்த இரண்டு புறாக்களும், தாங்களே ஆகாயத்தில் ஒரு சொர்க்கத்தை சிருஷ்டித்துக்கொண்டே போவதுபோல் ஒன்றையொன்று சிணுங்கிச் சிணுங்கிப் பார்த்தபடியே பறந்தன. அந்தரங்கமான காதலை அந்தரத்தில் விடப்போவதில்லை என்பதுபோல் நூலிழைகூட பிசகாமல் ஒரே சீரில் பறந்தன.

காட்டுப்புறாவும், வீட்டுப்புறாவும் அந்த வீட்டின் கூரை மேல் ஜோடியாக உட்கார்ந்தன. பிறகு சேர்ந்தாற்போல் ஒரு மாமரத்தின்மீது குவிந்தன. அந்தப்புறா, இன்னும் வராதது கண்டு தலையில் கை வைத்தபடியே புறாக்கூட்டின் பக்கம் நின்ற கும்மாளம்மா அதைப் பார்த்த உடன் வரவேற்பதுபோல் கையை ஆட்டினாள். அங்கே வந்த லுங்கிக்காரனிடம் அது கூட்டி வந்திருக்கும் ஜோடியைக் காட்டினாள். உடனே அவன் ஏதோ சொல்ல, இவள் அடிக்கப்போவதுபோல் கையை ஓங்கினாள். “வா வா அம்மாகிட்ட போகலாம்” என்று புறாச்சிறுமி சொன்னதைக் கேட்ட காட்டுப்புறா அங்கிருந்து பாய்ந்து கும்மாளம்மாவின் காலடியில் உட்கார்ந்தது. அவள் பூக்கரத் தடவலில் மெய் மறந்தபடியே மாமரத்திலிருந்த காட்டுப் புறாவை கண் சிமிட்டிப் பார்த்தது. பிறகு தனது கூட்டின்மேல் ஏறி உட்கார்ந்தது. எதிரே மரத்தில் உட்கார்ந்திருந்த புறாவை வா வா என்று அழைத்தது. காதல் சமிக்ஞை தொக்கி நிற்கும் வினோத ஒலியை எழுப்பியது.

அங்கே போகலாமா, வேண்டாமா என்பதுபோல், அந்தக் காட்டுப்புறா யோசித்தது. சுற்றுமுற்றும் பார்த்தது. அதற்கு எதுவுமே பிடிக்கவில்லை. கும்பலாக வந்த மாடுகள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு நின்றன. பச்சையாக இருந்த செடியில் முளைத்திருந்த சப்பாத்திப் பூக்களைப் பார்த்துவிட்டு, சில மாடுகள் மிரண்டு ஓடின. ஒரு பூனிக் குருவியை ஒரு காகம் கிட்டத்தட்ட கொல்லப்போன சமயம், உடனே ஒரு பூனிக்குருவி பட்டாளமே அந்த காகத்தின்மீது மோதிக்கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் ஒரு மாட்டின் முதுகில் இரண்டு பக்கமும் கயிற்றைப்போட்டு அமுக்கிக் கீழே தள்ளுகிறார்கள். பிறகு அதன் முன்னங் கால்களையும், பின்னங் கால்களையும் கட்டிப்போடுகிறார்கள். யாரோ ஒரு மனிதன், ஒரு ஆணியையும், சிப்பி அளவுக்கான லாடங்களையும் கொண்டு அதன் காலில் அறைகிறான். காட்டுப் புறா கண்ணை மூடிக்கொண்டது. ஐயோ இது என்ன கொடுமை... இன்னொரு பக்கம் திரும்பிப் பார்க்கிறது. அங்கே கொல்லர் ஒருவர் எதையோ ஒன்றை அமுக்கி அமுக்கி ஒரு குழியில் தீப்பிழம்புகளை எழுப்புகிறார். இன்னொரு இடத்தில் மேட்டுப்பகுதியில் ஒரு குழாயை நாலைந்து பெண்கள் மாறி மாறி அடித்து யாரையோ வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள். இது போதாதென்று ஒரு நாய், புறாக் கூட்டின் இரும்பு வாய்களுக்குள் மூக்கைவிட்டு மோப்பம் பிடிக்கிறது. ஐயய்யோ ராத்திரி நிம்மதியா தூங்கமுடியாது போலிருக்கே. அந்த லுங்கிக்காரன் பார்வை வேற சரியில்லை. என்னை ஏன் ஏக்கமா பாக்குறான்.

காட்டுப்புறா, காதலியிடம் விடை பெறப்போவது போல் இறுதியாகப் பார்த்துவிட்டு மாமரத்திலிருந்து ஒரு புன்னை மரத்தில் உட்காருகிறது. இதைத் தாளமுடியாத புறாச்சிறுசு அங்கே அதன் முன்னால் போய் வழிமறிக்கிறது. தனது கழுத்தால் அதன் அலகை தாங்கிக்கொள்கிறது. ஆனாலும் அந்த ஆண்புறா பிடிவாதமாகக் காட்டுப்பகுதியையே பார்ப்பதைப் பார்த்து இதற்கு அழுகை வருகிறது. அவலம் ஏற்படுகிறது. ‘என்னோடு வா’ என்று காதலன் கூப்பிடுவது அதற்குக் கேட்கிறது. ஆனாலும் கும்மாளம்மாவை விட்டுப் பிரிய அதற்கு மனமில்லை. புறாத் தோழர்களை விட்டு நீங்கவும் இஷ்டமில்லை. இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரியான நிலைமை. மனதை கல்லாக்கிக்கொண்டு மீண்டும் அந்தக் கூட்டின் மேல் உட்காருகிறது. பிறகு அதன் வாசல் வழியாக உள்ளே புகுகிறது. அந்தப் புறாவிற்கு மீண்டும் ஒரு தடவை அழைப்பு விடுக்கிறது. பிறகு முதல் தட்டின் மத்தியிலுள்ள தனது பலகை வீட்டில் குதித்து ஏறிக்கொள்கிறது. அந்த ஆண்புறாவைப் பார்த்து ‘இதுதான் என் வீடு! நீயும் ஏன் இதை உன் வீடாக்கிக் கொள்ளக் கூடாது?’ என்பதுபோல் பார்க்கிறது. பிறகு அது வராது என்று அனுமானித்து அதற்கு முகத்தை மறைக்கும் வகையில் பின்பக்கமாகத் திரும்பித் தலையை அங்குமிங்கும் ஆட்டுகிறது. தாளாத சோகச்சுமையை தட்டின் மரச்சுவரில் சாய்க்கிறது.

அந்த ஆண் புறா திரும்பிப் பாராமல் பறந்தது. அப்போது கூட்டுக்குள்ளிருந்த வீட்டுப் புறா இறக்கைகளைத் தட்டி மாரடித்தது. இதற்குள் ஒரே பாய்ச்சலாய் ஆகாயத்தில் பறந்த ஆண்புறா மீண்டும் அங்குமிங்குமாய்ப் பறந்தது. ஒரு கோழியை ஒருத்தன் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு போவதைக் கண்டு திகைத்தது. நாலைந்து பெண்கள் ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரிக்கொண்டு காட்டுக் கத்தலாகக் கத்துவதைப் பார்த்துப் பயந்தது. நாலைந்து சிறுவர்கள் புட்டான்களை நூலில் கட்டி அங்குமிங்குமாக ஆட்டிக்கொண்டு போவதைப் பார்த்து அசந்தது. ஒரு வண்டியில் கழுத்தைக் கொடுத்திருந்த இரண்டு மாடுகளை அந்த வண்டியிலிருந்தவன் சாட்டைக் கம்பால் விளாசுவதைப் பார்த்துவிட்டு அதிர்ந்தது. ஒரு பன்றியை யாரோ ஒரு பயல் பெரிய கல்லைத் தூக்கி எறிய அது அவலச் சத்தம் எழுப்பிக்கொண்டே ஓடுவதைப் பார்த்து தானும் ஓடப்போவதுபோல் கால்களைக் குவித்தது. இதற்குள் எதிரே தென்பட்ட கூட்டில் நடுப்பகுதியில் ஒரு ஓரமாக சாய்ந்து கொண்டு தன்னையே பார்த்த அவளை விட்டுப்போகவும் அதற்கு மனமில்லை. காடு சுதந்திரமானது என்றாலும், அந்த சுதந்திரத்தை அருமைக் காதலிக்காக விலையாய்க் கொடுக்கலாம் என்பது போன்ற ஒரு காதல் வேகம். கிருஷ்ணனைப்போல் கூண்டுக்குள்ளே பிறந்த காதலியுடன் கூட்டாக இருக்க வேண்டும் என்ற ஒரு ஆசை.

அந்தக் காட்டுப்புறா அதற்குப் பிறகு எதுவுமே யோசிக்கவில்லை.

ஆகாயத்திலிருந்து நேராக தரையிறங்கியது. லாடம் அடிப்பதற்காகக் கிடத்தப்பட்ட மாட்டை நோட்டம்விட்டுக் கொண்டே முதலிரவுக்குப் போவதுபோல் மெல்ல மெல்ல நடந்தது. கூட்டை நெருங்கியதும் ஒரே குதியாய்க் குதித்து காதலி இருந்த தட்டில் போய் நின்றது. ஆனந்த அதிர்ச்சியில் சிறிதுநேரம் ஒலியற்று நின்ற பெண் புறா ஆனந்தமாய்க் குதித்தது. காதலனின் கழுத்தை தனது அலகால் கோதிவிட்டது. பிறகு என்னையும் அப்படியே இயக்கு என்பதுபோல் அதையே பார்த்தது. பயந்து நடுங்கிக்கொண்டிருந்த அந்த ஆண் புறா இப்போது எல்லாவற்றையும் மறந்து ஒன்றை மட்டும் நினைத்தபடி சத்தம் எழுப்பியது. கும்மாளம்மா வந்து அந்தக் கதவைப் பூட்டினாலும் அந்த பாதிப்பைப்பற்றி கவலைப்படாமல் அந்தச் சிறையையே ஒரு சிங்காரச் சோலையாய் நினைத்து சத்தம் எழுப்பியது. எழுப்பிக்கொண்டேயிருந்தது.

‘கெக்கெக்... கெக்கெக் கெக்கே...’