இன்னொரு உரிமை/தலைக்குனிவு



தலைக்குனிவு


மைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தவன் ‘காலிங்பெல்’ சத்தம் கேட்டு கண் விழித்தான். பட்டப்பகல் பன்னிரெண்டு மணியளவில், சுகமான தூக்கத்திற்கு துக்கமணி அடிப்பதுபோல், மீண்டும் காலிங்பெல் சத்தம்; அவனுக்கு எரிச்சலாக இருந்தது. காலிங்பெல் அழுத்தப்படும் விதத்தை வைத்தே வந்திருப்பது அந்நியர் என்பதைப் புரிந்துகொண்டான். பால்காரராக இருந்தால் கதவைத்தான் தட்டுவார். மனைவியாக இருக்கமுடியாது. அவளாக இருந்தால், காலிங்பெல்லில் வைத்த கையை விடாமலே, ஒற்றைக்காலை தரையிலும், ஒரு விரலை பெல்லிலும் வைத்தபடி பிடிவாத மணியடிப்பவள் வேறு யாராக இருக்கும்? யாராவது இருந்துவிட்டுப் போகட்டும். எவனும் கொடுத்த கடனை ‘இந்தாருங்கள் ரொம்பத் தேங்க்ஸ்’ என்று சொல்லி வரப்போவதில்லை. கடன்காரனாக இருந்தால் திறக்கவேண்டிய அவசியமில்லை. தபால்காரராக இருந்தால் கதவுக்கு கீழே இருக்கும் இடைவெளியில் கடிதங்களைப் போட்டுவிட்டுப் போவார். ஏதாவது டொனேஷன் கிராக்கிகளாக இருக்கும். இதுகளுக்காக இயற்கையின் டொனேஷனான தூக்கத்தை விட அவன் தயாராக இல்லை.

அவன் மீண்டும் படுத்தான். மின்விசிறியை தட்டிவிட்டுக் கொண்டு, போர்வையை உச்சிமுதல் உள்ளங்கால் வரை மூடிப் படுப்பதில் உள்ள சுகத்திற்கு ஈடாக எதிலும் குறைந்தபட்சம் அப்போது இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. கலைத்திருந்த போர்வையை கலக்கி, உடல் முழுதும் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்தான். காலிங்பெல் சத்தம் கேட்கவில்லை; ஆறுதலாகவும் அனாவசியமாகவும் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மீண்டும் மணியோசை.

ஆத்திரத்தோடு எழுந்தான். யாராக இருந்தாலும் ‘ஒனக்கு மூளை இருக்கா... அப்படியிருந்தால் நீயும் இப்போ தூங்குவே’ என்று சொல்லிவிடுவது என்று உறுதியுடன், தன் தூக்கத்தை யாராலும் தடுக்கமுடியாது என்ற தைரியத்தில், போர்வையை மடித்து வைக்காமல் பனியனை சட்டையால் மறைக்காமல், வேட்டியை லுங்கியால் மாற்றாமல், தூக்கக் கலக்கம் போய்விடலாகாது என்பதற்காக முகத்தை அலம்பாமல் எரிச்சலோடு கதவைத் திறந்தான். ஆள் எதுவும் உள்ளே வரமுடியாத அரையடி இடைவெளியில் கதவை வைத்துக்கொண்டே “யாரது” என்று அதட்டினான்.

அவன் கண்ணுக்கு முதலில் ஒரு சிவந்த கரமும், அப்புறம் வளையல் பதித்த சதை வட்டமும் அப்புறம் ஒரு நீலப்புடவையும் தோன்றியது. கதவு அளவுக்குமீறிய அகலத்தோடு பிரிந்தது.

வந்தவள் அவனை எதிர்பாராததுபோல் திடுக்கிட்ட குரலில் திரும்பிப் போகப்போகிறவள்போல் படபடப்போடு பேசினாள்.

“மிஸ்ஸஸ் சேகர் இல்லிங்களா...”

சேகர் யோசிக்காமல் பதிலளித்தான்.

“பிளீஸ்... கம் இன் பஸ்ட்...”

“மிஸ்ஸஸ் சேகர் இல்லிங்களா...”

மிஸ்ஸஸ் சேகர் இல்லை என்று சொல்லாமலும், இருக்கிறாள் என்று பேசாமலும், பெட்ரூமைப் பார்த்தான். உடனே அவள் இருக்கிறாள் என்று அனுமானித்தவள்போல உள்ளே வந்தாள்.

“எனக்கு யாரையும் நிற்க வைத்துப் பேசுறது பிடிக்காது... பிளீஸ் சிட்டவுன்” என்று புன்னகை பீடிகையோடு இன்மொழிந்தான் சேகர்.

அவள் ஷோபாவில் உட்கார்ந்தாள். சேகர் உள்ளே போனான். மனைவியை எழுப்பப் போகிறான் என்று நினைத்தபடி, அவள் வரவேற்பு அறையில் மாட்டியிருந்த புத்தருடைய படத்தையும், திராட்சைக் கொத்துபோல் திரண்டிருந்த கடல்பாசிக் குவியலையும், பல்வேறு வண்ணங்களில் எளிமையான கம்பீரத்தால் ஆங்காங்கே சுவர்களில் மாட்டப்பட்டிருந்த கடல் சிப்பிகளையும் பார்த்துக்கொண்டிருந்தாள். காலடிச் சத்தம் கேட்டு, “ஹலோ மிஸ்ஸஸ். சேகர்” என்று கூவப்போனவள், கோழியைக் காணும் சேவல் தன் இரு இறக்கைகளையும் அடிப்பதுபோல், சேகர் சட்டையின் இருபுறத்தையும் இழுத்து இழுத்துவிட்டுக் கொண்டே அவள் முன்னால் தோன்றினான்.

“மிஸஸ் சேகர் இல்லிங்களா?”

“என்ன சொன்னிங்க?”

“ஒங்க ஒய்ப் இல்லிங்களா?”

“சொந்தக்காரங்களைப் பாத்துட்டு இதோ வரேன்னு போனாள். இன்னிக்குத்தான் இதோ என்கிறதுக்கு எவ்வளவு நேரமுன்னு அவள் மூலம் தெரிஞ்சிக்கணும்...”

அவள் பயப்பட்டவள்போல் புன்னகைத்தாள்.

“சரி, அப்படின்னா... நான் அப்புறமா வாரேன்.”

“ஒரு டென் மினிட்சில வந்துடுவாள்... இருந்துட்டு...”

“பரவாயில்ல... நான் பக்கத்துலதான் இருக்கேன்... அப்புறமாய் பார்த்துக்கலாம்...”

“நீங்க மிஸஸ் பாஸ்கரன்தானே!”

அவள் அவனை வியப்போடு பார்த்துவிட்டு தலையாட்டினாள்.

“டில்லியிலிருந்து இப்போதுதான் வந்திருக்கீங்க, இல்லியா... டில்லியைப் பிடிக்கலன்னு... அந்த ‘லைப்’ பிடிச்ச ஹஸ்பண்டை நச்சரிச்சு டிரான்ஸ்பர் கேட்டு வரவழைச்சிட்டிங்க. இல்லியா? இப்போ அங்கு உங்களை அவரு நச்சரிக்கிறார். தில்லிக்குப் போகலாம் என்கிறார். அம் ஐ கரெக்ட் மேடம்!”

மிஸஸ் பாஸ்கரன் அவனே வியப்படையும்படி வியப்பால் பார்த்தாள். பிறகு வாயகல “ஒங்க மிஸஸ் எல்லாத்தையும் சொல்லிட்டு—தா...” என்றாள்.

“எடிட் பண்ணித்தான் சொல்லியிருப்பான்னு நினைச்சேன்! பட் டில்லி ‘லைப்’ அருமையான லைப்பாச்சே மேடம். அங்கே போனதும் நாம இன்டலெக்சுவலோ இல்லியோ... நமக்கே அறிவாளி என்கிற எண்ணம் வருமே! இங்கே ஜாதி உட்ஜாதி மாதிரி ஒரு வட்டத்துல சுற்றிச்சுற்றி வார நமக்கு அங்கே இந்த ஜாதி ஈர்ப்பு சக்திக்கு மீறிய ஆகாயத்தில் மிதக்குறதுமாதிரி ஒரு பீலிங் வருமே... சர்தார்ஜிகள், பெங்காலிகள், ஜாட்டுகள், சிந்திகள், மெட்ராஸ்கள் இப்படி எல்லாரையும் ஒரு சேரப் பார்த்து... ஒரு சேர வாழும்போது ஏதோ ஒருவித விவரிக்க முடியாத மோசமான பீலிங் வருமே... ஒங்களுக்கு வர்லியா மேடம்!”

‘மேடம்’ சிரித்துக்கொண்டே பதிலளித்தாள்.

“நீங்க சொல்றது சரிதான்... எனக்கும் டில்லி லைப் பிடிச்சது. ஆனால் வின்டர் ஒத்துக்கல. அதோட ஆகாயத்துல சுத்துனாலும், அடித்தளத்துக்கு வந்துதானே ஆகணும். இங்கேன்னா ஒரு ‘பிளாட்’ வாங்கி, ஏதாவது கட்டலாமில்லியா... பிரபஞ்சத்தை ரசிக்கனுமுன்னால்கூட, நாம நிக்கிறதுக்கு ஸ்பேஸ் இருக்கணுமில்லியா? ஒன்னுல நின்னுதானே, இன்னொன்ன பார்க்க முடியும்.”

“பரவாயில்லியே! நீங்க பிராக்டிக்கலாவும் பேசுறீங்க! பிலாஸபிக்கலாவும் பேசுறிங்க.”

“நோ... நோ! எல்லாம் என்னோட ஹப்பியோடடுயூஷன்! ஒருநாளைக்கு ஒய்போட வீட்டுக்கு வாங்க. அவருக்கு ஒங்களப் பிடிக்கும். நான் வாரேன் ஸார்! மிஸஸ் சேகரை என் வீட்டுக்கு வரச்சொல்லுங்கோ!”

“பை தி பை ஒங்க பேரு... ஸாரி தப்பா நினைக்காதீங்க! எனக்கு கணவர்பேர்ல மனைவியைக் கூப்புடுறது பிடிக்காது. என் மனைவியோட பெயர் லட்சுமி. உங்க பெயரைச் சொல்றதும் சொல்லாததும்...”

“அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். பிறகு எழுந்து கொண்டே நீங்க சொல்றது மாதிரிதான் என் விட்டுக்காரரும் சொல்வார். என் பெயர் ரமா. நான் வாறேன் ஸார்!”

“ஓ.கே. மேடம்... எனக்கும் தூக்கம் வருது. என்னோட சரிபாதி எப்போ வாராள்னும் தோணல. அவள் வந்தவுடனே சொல்றேன்!”

“ஸாரி... ஒங்க தூக்கத்தைக் கெடுத்துட்டேன்.”

“நோ நோ! நீங்க வரும்போது சவுண்ட் தூக்கத்துலதான் இருந்தேன். அதாவது ஒரு சவுண்ட்ல கலையும்படியான தூக்கம்.”

ரமா உடல் விட்டுக் குலுங்கி, வாய்விட்டுச் சிரித்து, கண் பொங்கப் பார்த்து, கால் பெயர்ந்தாள். சேகரும் சடாரென்று கதவைத் தாழ்ப்பாள் போட்டான். பால்கனி வரைக்கும் சென்று வழியனுப்பவில்லை. கூடாது, ஒருத்தியைவிடாமல் பிடிக்கவேண்டும் என்றால், முதலில் விட்டுப்பிடிக்க வேண்டும். இதுதான் டெக்னிக். தயக்கமாக வந்தவளை சகஜமானவளாக மாற்றியாகிவிட்டது. சகஜம் உரிமையாவதற்கு நாட்களைத்தான் எண்ண வேண்டும்.

டெலிவிஷனில் சினிமாப்படத்திற்கு இடையில் செய்தியைப் பார்ப்பவர்கள் முகம் சுழிப்பதுபோல் மூன்று மாதகாலமாக வாழ்வில் சுழித்த அவனுக்கு மீண்டும் இன்னொரு ‘அட்வென்சர்’ கிடைக்கப்போகிற ஆனந்தம். போர்வையை மடித்து வைத்துவிட்டு, போகிறவளையே மனதில் உருவகித்தான். மஞ்சள் சிவப்பு; சற்று உயரம்; பரவாயில்லை. மடியாத சதைப்பிடிப்பு உயரத்தைக் குறைத்துக்காட்டி அழகைக் கூட்டிக் காட்டுகிறது. சொல்லுக்குச் சொல் ‘அவர் அவர்’ என்றாளே பரவாயில்லை... அந்த ‘அவர்’ சொல்லும் பல பெண்களின் சங்கதிகள் தெரிந்ததுதானே! அவர் என்பது ஒரு கேடயம்... கேடயம் போர்க்களத்தில்தான் போடப்படும். ஆயுள் முழுதும் உணர்ச்சியில் போராடும் பெண்கள் உச்சரிக்கும் கேடய வார்த்தைதான் ‘அவர்’. பல ‘இவர்களை’ மறைப்பதற்காக ஒரு ‘அவர்’ அவ்வளவே.

சேகர் திருப்தியோடு அசுரத்தனமான அமைதியோடு ஒரு செய்திப் பத்திரிகையைப் புரட்டினான். வாரப் பத்திரிகை ஒன்றைப் புரட்டினான். சிறுகதை ஒன்றைப் படித்தான். அதைப் படித்து முடித்ததும், அப்போது அவள் வீட்டுக்கு ஓட வேண்டும்போல் தோன்றியது.

இரவு மனைவியோடு பேசுகையில், வேண்டா வெறுப்பாகச் சொல்லி வைத்தான். கண்டவர்களை எல்லாம் கண்ட நேரத்துக்கு, வரும்படிச் சொல்லி கண்டபடி பேசலாகாது என்று தன் கண்கண்ட மனைவியிடம் சொல்லி வைத்தான். “பாவம்! அவள் ரொம்ப நல்லவள். அவளோட ஹஸ்பெண்ட் எப்பவும் டூர்ல. இருப்பார். வீட்டுக்கு வந்தால் டூர்ல இருந்துவந்த களைப்புல இருக்காராம்! இப்போ நான் தான் அவளுக்கு ஆறுதல்” என்று மனைவி சொல்லி முடித்ததும், “அவளுக்கு நீ ஆறுதல்... ஒனக்கு நான் ஆறுதல் ஆளப்பாரு! தொணதொணன்னு பேசிக்கிட்டு தூங்கவிடு” என்று சொன்னான். தூங்காமலே இரவைக் கழித்தான்.

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு சேகர் மனைவியின் நச்சரிப்புக்குத் தாளாதவன்போல், மிஸ்டர் பாஸ்கரன் ‘வீட்டுப் பேமிலி’யோடு போனான். ஞாயிற்றுக்கிழமை காலை, மிஸ்டர் பாஸ்கர் சனிக்கிழமை மாலையிலேயே ‘கேம்ப்’ போய்விட்டாராம். ரமா தலையை உலர்த்திப் போட்டபடி சோபாவில் உட்கார்ந்திருந்தாள். வலது பக்கமாய் சற்று ஒயிலாகத் தலையைச் சாய்த்து இடதுகையால் கூந்தலை ஆட்டி ஆட்டி, அவள் கேசத்தை உலர்த்திய விதத்தில் சேகர் ராட்டினத்தில் சுற்றுவதுபோல் கிறுகிறுப்பானான். அவர்களைப் பார்த்ததும் அவள் எழுந்து கூந்தலுக்கு ஒரு முடிச்சுப் போட்டாள். முடிச்சுக்குக் கீழே தொங்கிய முடிக்கற்றை ஸ்டாண்டில் பொருத்தப்பட்ட மெல்லிய ஊதுபத்தி கொத்துபோல் தோன்றின. அவை, அவள் போட்டிருந்த சிவப்பு ஜாக்கெட்டில் தொட்டு எரிந்து கொண்டிருப்பதுபோலவும் தோன்றியது. இப்படி கூந்தலை முடிச்சுப் போட்டுவிடும் பெண்களை பின்பக்கமாக ‘டை’ கட்டுபவர்கள் என்று முன்பு கணவன் தன்னிடம் சொன்னதை நினைத்து மிஸஸ் சேகர்—அதுதான் லட்சுமி. இப்போது சிரித்தாள். ரமா... குதூகலமாகக் கூவினாள்.

“வாங்கோ! வாங்கோ!”

“அடடே... மிஸ்டர் பாஸ்கர் இல்லியா?”

“நேற்று டூர் போயிட்டார்.”

“ஏய் லட்சுமி! இதை என்கிட்டே சொல்றது என்ன?”

“சும்மா பிகு பண்ணாமல் உட்காருங்க ஸார். லட்சுமி! ஒங்களோட ‘ஹிப்பியை’ ரொம்பதான் டாமினேட் பண்ணவிட்டிருக்கீங்க.”

லட்சுமி ஏதாவது பேசினால் அது மூதேவித்தனமாக இருக்கும் என்று நினைப்பவள்போல், சேகர் எடுத்த எடுப்பிலேயே பதிலளித்தான்.

“ஒங்க வீட்ல எப்படியோ.”

“அதிர்ந்து பேசமாட்டார். பெர்பெக்ட் ஜென்டில் மென்!”

“ஒங்களுக்குத் தெரியுமா மேடம் மனைவிகிட்ட எந்த கணவனும் ஜென்டில்மேனாய் இருக்க முடியாது! இருக்கப்படாது... டு யு அண்டர் ஸ்டாண்ட்.”

லட்சுமிக்கு அண்டர்ஸ்டான்ட் ஆகாததால், அவள் மேஜைமீது ஏறியிருந்த ஒரு ஸ்டாண்டில் உள்ள அலங்காரப் பொருளைப் பார்த்தாள். ரமா புரிந்துகொண்டவள்போல், லட்சுமியைச் சங்கடத்தோடு பார்த்து அவனை சலிப்போடு பார்த்தாள். சேகர் உதட்டைக் கடித்தான். பிறகு “மேடம்! நான் ஒரு லேட்டர் பாக்ஸ் உள் அர்த்தம் வச்சுப் பேச வராது” என்று சொல்லி தன் பேச்சின் உள்ளர்த்தத்தைக் கோடிட்டுக் காட்டினான்.

திடுக்கிட்டவள்போல் கூந்தலைப் பிடித்த ரமா, மீண்டும் சகஜமானவள்போல லேசாகச் சிரித்தாள். பிறகு “டிரிங் கூலா... ஹாட்டா வேணுமா” என்றாள்.

“கூலா பேசாமலும், ஹாட்டாய் வெடிக்காமலும் இருக்கிங்களே! அதுவே எனக்குப்போதும்” என்று சேகர் சொல்லிவிட்டு, தான் சொன்னதைப் புரிந்துகொண்டாளா என்பதுபோல் ரமாவைப் பார்த்தான். அவள், லேசாக உட்சிரிப்பாகச் சிரித்துவிட்டு உள்ளே போனாள்.

ரமா டிரேயில் குளிர்பானம் கொண்டு வந்தாள். அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, தனக்கும் எடுத்துக்கொண்டாள். சேகர் கொடுத்ததை அவள் உதட்டைப் பார்த்தே பருகிக் கொண்டே, “மேடம், செல்பில நிறைய புத்தகம் இருக்கே” என்றான்.

“நான் நிஜமாகவே படிக்கிறவள் ஸார்! அழகுக்கு அடுக்கி வைக்கல.”

“இஸ் இட்.”

“நான்... இங்கிலீஷ் லிட்டரேச்சர்ல போஸ்ட்கிராஜுவேட், கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பிரைவேட் காலேஜில, அஸிஸ்டெண்ட் புரொபஸராய் இருந்தவள். அது மறக்கமுடியாத நாட்கள்”.

“இப்பகூட வேலைக்குப் போகலாமே!”

“அவருக்குப் பிடிக்கல.”

‘வீக்’ பாயிண்டை சொல்லிவிட்டவள்போல், ரமா முகம் சுளித்தாள். அவளை வீக்காக்குவதற்கு ஒரு பாயிண்ட்டைக் கண்டறிந்தவன்போல் சேகர் தன்னையறியாமலே சப்புக் கொட்டினான். லட்சுமி இப்போது மேஜையிலிருந்த ஸ்டாண்டை விட்டு விட்டு சுவரில் மாட்டியிருந்த ஒரு திரைச்சீலை ஓவியத்தைக் கண்களால் பிடித்துக்கொண்டிருந்தாள். இந்தச் சமயத்தில் வெளியேயிருந்து ஒருவன் வந்தான். பாராட்டும்படியான உருவமோ, பழிக்கும்படியான தோற்றமோ இல்லாதவன். இருபத்திரண்டு வயது இருக்கலாம். நடுவழியில் தயங்கி நின்றவனைப் பார்த்து ரமா, “உட்காருடா” என்றாள்.

பிறகு—

“இவன்தான் என்னோட ஒரே தம்பி கோபால் என்ஜினியரிங் பைனல் படிக்கிறான். இவ்வளவு நாளும் ஹாஸ்டல்ல இருந்தான். இப்போ இவன்தான் எனக்குக் காவல் அதோட ஆறுதல்! இவரு, நான் சொல்லலே. அவர்தாண்டா மிஸ்டர் சேகர். இவரும் என்ஜினியர்தான்.”

அந்தப் பையன் சேகரை மரியாதையோடு பார்த்துவிட்டு, ‘வணக்கம் ஸார்’ என்றான்.

“வணக்கம்! நீங்க மெக்கானிக்கலா ஸிவிலா?”

“எலெக்ட்ரிகல் ஸார்!”

“குட்... நானும் எலெக்ட்ரிக்கல்தான். பாடத்தில் சந்தேகம் வந்தால் என்கிட்டே கேளுங்க.”

‘தேங்க் யூ ஸார்’

மூன்றாவது ஆள் ஆக்கிரமிப்பில் சேகரால் ரமாவுடன் இச்சையோடு பேச முடியவில்லை. புறப்படலாம் என்பதுபோல், லட்சுமியின் கரத்தை வலிக்கும்படிக் கிள்ளினான். பிறகு “தேங்க் யூ மேடம்... நீங்களும், அவரோட எங்க வீட்டுக்கு வாங்க” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான்.

ஒரு மாத காலத்திற்குள், ஓராண்டு கால பழக்கம் ஏற்பட்டது. ‘பாஸ்கரன்களும்’, ‘சேகர்களும்’ மாறி மாறி ஒருத்தர் வீட்டுக்கு இன்னொருவராக வந்து சந்திப்புக்களையும் சமையல்களையும் பரிமாறிக்கொண்டார்கள். சேகர், மிஸ்ஸஸ் பாஸ்கரனை, ரமா என்று அழைக்கும் அளவிற்குப் போய்விட்டான். அதை, அவளோ அவள் கணவனோ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிலசமயம் (A) ஜோக்குகள்கூட அடித்தான். அவனிடம் ரமாவும், தன் கணவனின் ஏனோதானோ போக்கைச் சொல்லி குறைபட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் அவன் ஆறுதலாகப் பேசுவான். லட்சுமிகூட, அவனிடம் ‘நீங்க... ரமாகிட்ட ஓவராப் பேசுறீங்க! நேற்றுகூட, ஆபாசமாக ஜோக் அடிக்கிறிங்க! தப்பா எடுத்துக்கப்போறாள்’ என்று தெரிவித்தாள். உடனே சேகர், ‘எடுத்துக்கப்போறாள்’ என்பதை இன்னும் எடுக்கவில்லை என்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு, ‘நீ ஒரு அசடுடி... ஒரு பெண்கிட்ட சகஜமாய் பேசுறதுல தப்பில்ல... இன்னும் சொல்லப்போனால், அப்படி சகஜமாய் பேசினால்தான், தப்பான எண்ணம் வராது’ என்று அடங்கா ஆசையுடன் மனைவியை அடக்கி வைத்தான். ‘ஒனக்குத்தான் ஸோஷியலாய் பழகத் தெரியல! இவ்வளவுக்கும், நீயும் காலேஜ்ல குப்பை கொட்டினவள்’ என்று தூங்கியவளை எழுப்பிச் சொன்னான்.

நாளாக நாளாக நட்பிற்கு ஆண்டுக்கணக்கில் வயதாகியது. ரமாவின் தம்பிக்கு வலியப்போய் பாடங்களை போதித்தான். மற்றவர்கள் சந்தேகப்படக்கூடாது என்பதற்காக, அவனைத் தன் வீட்டுக்கும் வரவழைத்து ‘டியூஷன்’ போட்டான். அவனை ‘வாடா போடா’ என்று சொல்லுமளவிற்கும் வந்தான்.

காய் கனிவதுபோல் தோன்றியது. ஓரிரு தடவை, ரமாவை தண்ணீர் வாங்கும் சாக்கில் தொட்டுப் பார்த்தான். அவள் விலகவும் இல்லை. விரையவும் இல்லை. அதேசமயம் அவள் அன்னியோன்னியமாக பழகுபவள்போல் அவனைப் பார்க்கும்போது மாராப்புச் சேலையை மூடவில்லை. தலைமுடியை ஒதுக்கிக்கொள்ளவில்லை. பேசும்போதுகூட தம்பியிடமோ, கணவனிடமோ பேசும் சகஜ நிலையிலேயே பேசினாள். அவன் முன்னால் சில பாடல்களைக்கூட முணுமுணுத்தாள். அதுவும் டூயட் பாட்டுக்களை.

ரமா தன்னுடைய பெருந்தன்மையில்தான் இன்னும் விடப்பட்டிருக்கிறாள் என்ற மிதப்போடு நினைத்த சேகர், தானாக தேடாமல் அவளாக வரட்டும் என்ற தோரணையில் சிறிது பொறுமையாகக்கூட இருந்தான். அன்று அவனுக்கு டில்லி ‘கேம்ப்’. மனைவி சூட்கேஸை நிரப்பி மூடியபோது, சேகர் பூட்ஸ் லேசைக் கட்டிக்கொண்டிருந்தான். கோபால் விடுவிடுவென்று ஓடிவந்தான்.

“ஸார்... போகிற வழியில ஸிஸ்டர் ஒங்களை பார்த்துட்டுப் போகச் சொன்னாங்க.”

“என்னவாம்?”

“சொன்னாத்தானே எனக்குத் தெரியும். அவள் சொல்லல...”

ஏதோ சலிப்போடு போகிறவன்போல் முகத்தைச் சுழித்துக்கொண்டே எழுந்தான். ஒரு வார காலம் கேம்ப்பில் இருக்கப்போகிறவன். அவள் இங்கே வந்து வழியனுப்ப வருவாள் என்று நினைத்து அவள் வராததால் எரிச்சலடைந்த அவனுக்கு அவள் அழைப்பு மாபெரும் கர்வத்தைக் கொடுத்தது. சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு புறப்படப் போனபோது, கோபால் “ஸார்! ஒங்க பழைய நோட்ஸை தரேன்னு சொன்னிங்களே... இப்போ கிடைக்குமா?” என்றான்.

“ஒனக்கு சமயம் சந்தர்ப்பம் தெரியாது... கேம்ப்ல இருந்து வந்ததும் தாரேன்!”

“ஸாரி ஸார்! அர்ஜண்டா தேவையா இருக்கு.”

“இவன் ஒருத்தன்... எனக்கு இப்போ நேரமில்ல. ஆபீஸ் போயிட்டு ஸ்டேஷன் போகணும். இந்தா லட்சுமி... இவன் ஏதோ கேட்கிறான். எது கேட்டாலும் தேடிக்கொடு! சரி நான் வரட்டுமா?”

மனைவி மிரட்சியான பார்வையோடு பிரிவாற்ற முடியாத சோகத்தோடு வழியனுப்பி வைக்க, சேகர் சூட்கேஸோடு தெருவில் ஓடினான். ரமா அவனை எதிர்பார்த்தவள்போல வாசல் பக்கமே நின்றாள். “ஒங்கள சூட்கேஸோட பாக்கறதுக்கு ஆர்ம்ஸ்டிராங் மாதிரி இருக்கு” என்றாள்.

“வரச்சொன்னிங்களாமே...”

“ஆமாம், தில்லியில... ஒரு பஞ்சாபி பிரண்ட் இருக்காள். ஒங்களை மாதிரியே என்கிட்ட பழகுவா. குளோஸ் பிரண்ட். அவளுக்கு குங்குமச்சிமிழ் ‘பாக்’ செய்திருக்கேன். பேக்கிங்கிலே அட்ரஸ் இருக்கு. கரோல்பாக்குல சென்னா மார்க்கெட்...”

“எனக்கு பிரசண்ட் இல்லியா...”

“அய்யோ... கேட்டா வாங்குறது?”

“ஒங்களை ஒரு வாரம் பார்க்க முடியாதது போர் அடிக்கும்.”

“நீங்க சொல்லிட்டிங்க... நான் சொல்லல!”

சேகர் உணர்ச்சிவசப்பட்டு விட்டான். “ரமா, என்னை ஒன்னால பிரிந்திருக்க முடியாது. ‘ஒன்னையும்’ என்று பேசிக்கொண்டே போனவன் ‘என்னால்’ என்ற வார்த்தையை விழுங்கிவிட்டு, ‘பிரிந்திருக்க முடியாது’ என்பதை வார்த்தையாகச் சொல்லாமல் செயலாகக் காண்பித்தான்.

ரமா தனது இரண்டு தோள்களிலும் விழுந்த மன்மதக் கரங்களை தன் கையாலேயே தூக்கி வீசியடித்தாள். அவனையே வெறித்துப் பார்த்தாள். நடந்ததை நம்பமுடியாதவள் போல் வாய் திறந்து, வலதுகரம் விரல் பிரிந்து. முகத்தில் குவிய ஸ்தம்பித்து நின்றாள். அரை நிமிட உஷ்ணமான மௌனத்திற்குப் பிறகு "இட் இஸ் திஸ் நான்சென்ஸ் ஸார்... நீங்க உள்ளன்போட பழகுறீங்கன்னு நினைச்சேன்! கடைசில உடலன்போட பழகியிருக்..."

"ஐ ஆம் ஸாரி ரமா..."

"சேய் மிஸஸ் பாஸ்கரன்..."

"ஐ அம் ஸாரி... மிஸஸ் பாஸ்கரன்... இந்தக் காலத்துல செக்ஸ் மூலவிக்ரஹம் இல்ல. வெறும் உற்சவமூர்த்திதான். நீங்க நாகரீகமான பெண் என்கிறதுனாலே, நீங்ககூட ஒரு சமயம் செக்ஸ் இஸ் லைக் பொட்டட்டோன்னு சொன்னதால... ஐ ஆம் ஸாரி"

"ஓஹோ! ஒங்க கருத்துப்படி செக்ஸ் ஒரு உடல் தேவைன்னு சொல்ற பெண்ணுல்லாம் உடனே வாரவள், ஆணுக்குச் சரி நிகர் சமமாய் பழகுற பெண்களெல்லாம் ஒருவன் கூப்பிடுறதுக்காக காத்திருக்கிறவள். என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க ஸார் இப்பவும் சொல்றேன், செக்ஸ் ஒரு உடல்தேவைதான். அதாவது கணவன் மனைவிக்கு, ஒங்க அம்மாவுக்கும் அப்படித்தான். எனக்கும் அப்படித்தான். பேமிலிமேனான நீங்க இப்படி நடக்கக் கூடாது ஸார்! கணவன் மனைவி என்கிற வரம்பும், கற்பு என்கிற நெறியும் இருக்குறதுக்குக் காரணம், ஒருவனும் ஒருத்தியும் ஒருவருக்கு இன்னொருவர் தன்னை இழந்து பிறிதொருவரைப் பெறுவது என்கிறதுக்காகத்தான்... நீங்க சொல்லலாம். உணர்ச்சிவசத்துல தப்பு நடக்கிறது சகஜமுன்னு... அது கணவனுக்கு துரோகமாகாதுன்னுகூட வாதாடலாம். சந்தர்ப்பவசத்துல தப்புச் செய்கிறவங்களை அனுதாபத்தோடு பாக்கலாம். ஆனால் அதையே நம்முடைய தப்புக்கு அங்கீகாரமாய் எடுத்தால், அந்த அனுதாபமே போலித்தனமாகிவிடும். தேவை என்கிற அளவில் செக்ஸ் ரொம்ப சாதாரணம், அதுக்கும் கற்புக்கும் சம்பந்தமில்ல ஆனால் அதை வேற வகையிலயும் பாக்கலாம். உதாரணமாய் நம் தேசக்கொடி பொறித்த துணியை ஏற்றும்போது எதுக்காக எழுந்து வணங்குகிறோம். அதை ஏன் தோளுல துண்டாவோ நாப்கீனாவோ பயன்படுத்தணும்னு தோணமாட்டேங்கறது! காரணம் துணியென்றாலும் துணியல்ல; ஒரு நாட்டோட ஆத்ம அறிகுறி. அறுபது கோடி மக்களோட சிம்பல், இதேமாதிரிதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள கற்பு. அது வெறும் செக்ஸ் கட்டுப்பாடு அல்ல. கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கிற உறவை உருவகப்படுத்தும் ஒரு சிம்பல்... இதை ஒரு அயோக்கியனால் புரிஞ்சிக்க முடியாது. ஸாரி... பார் புரூட்டலி பிராங், நானும் ஒங்களுக்கு சலனம் ஏற்படும் வகையில் நடந்தால் மன்னிங்க. இனிமேல் நீங்க தனியா வரப்படாது. அதுக்காக வராமலும் இருக்காதீங்க. ஒய்போட வாங்க. நானும் அவரோட வாரேன்! லெட் அஸ்பி பிரண்ட்ஸ்! ஓகே... காபி சாப்பிடுறீங்களா..."

சேகர் வியர்த்துப்போனது உண்மைதான் என்றாலும், வெந்துபோகவில்லை. எப்படியோ மழுப்பிவிட்டுப் புறப்பட்டான் அவனுக்கு வருத்தத்திற்குப் பதிலாகக் கோபம் வந்தது தன் ஆண்மைக்கும், கவர்ச்சித் திறனுக்கும் அவன் சவாலிடுவது போலிருந்தது. ‘என்னடி நினைச்சிக்கிட்டே... என்னோட சைக்கலாஜிகல் தாக்குதலை இனிமேல் பயன்படுத்துகிறேன் பாரு. ஒன்னால தாக்குப்பிடிக்க முடியுமான்னு பாரு. ஒரு வாரம் விசுவாமித்திரர் மாதிரி இருந்து காட்டுறேன். நீ மேனகையா வராமல் இருப்பியான்னு பாத்துடலாம்! ஒன்னைமாதிரி எத்தன பொண்ணுங்க இப்படி என்கிட்ட புலம்பி இருக்கிறாங்க! அப்புறம் பொறுத்துப் பாருடி! லெட் அஸ்பி பிரண்ட்ஸ்ன்னு சொன்னதுலேயே, ஒன் வீக்பாயிண்டை புரிஞ்சுட்டேன்! ஒன்னை நீ டிலேய் பண்ணமுடியும்; டினை பண்ண முடியாது. இது சவால் மேடம்!

சேகர் தன்னையறியாமல் சிறிது சத்தம் போட்டுக்கூட கத்தினான். தெரு மூலைக்குப் போனவன் அவள் வாசலிலேயே நிற்பதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு திரும்பிப் பார்க்க விரும்பாதவன் போல் நடந்தான். அலுவலகத்திற்கு வந்ததும் கேம்பில் செய்யவேண்டிய வேலைகளுக்கு ‘பைல்’களைத் தேடி ஒன்றுசேர்த்தான். அப்படியும் இப்படியுமாய் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. ரயில் நிலையத்திற்குப் புறப்படப் போகிற நேரம். ஆக்ரா கேன்டோன்மென்ட்டில் ஏற்பட்ட ரயில் விபத்தால் அவனை இப்போது வரவேண்டாம் என்று தில்லியிலிருந்து டெலக்ஸ் செய்தி வந்தது.

சேகர் வீட்டைப் பார்த்துப் புறப்பட்டான். வழியில் ஒரு சினிமா தியேட்டர். ‘பெண்களை வசப்படுத்துவது எப்படி?’ என்ற தலைப்பு. ‘மென் அண்ட் உமன்’ என்ற ஆங்கிலப் படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, சேகருக்கு ஒருவேளை, தானும் இந்த விவகாரத்தில் கற்க வேண்டியது ஏதாவது இருக்கலாம் என்று நினைத்தான். அதோடு, அங்கேகூட, இந்த ரமாவைவிட அழகான ஒருத்தி கிடைக்கலாம்.

தியேட்டர் கவுண்டரில் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு உள்ளே போனான். வெளிச்சம் விலகிக்கொண்டிருந்த சமயம், ஒளியை இருட்டு விழுங்கிக் கொண்டிருந்த வேளை; இனிய நாதத்தை ‘நொய்ங் நொய்ங்’ சத்தம் துரத்திக் கொண்டிருந்த நேரம். அப்போது பழக்கப்பட்ட குரல்களைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தான், அவன் இருந்த இடத்திற்கு முன்வரிசையில்-

லட்சுமியும், கோபாலும் ஒருவர் தலையில் இன்னொருவர் தலைபட, ஒருவர் தோளில் இன்னொருவர் கை பட...