இன்னொரு உரிமை/கோமதியின் கதை

கோமதியின் கதை


'உங்களிடம் ஒரு கதை இருக்கிறதா?' என்று குமுதம் கேட்டிருந்தது. ஏராளமான வாசகர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை எழுதியிருந்தார்கள்.

குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த கோமதி தன் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறியிருந்தார். அதை மையமாக வைத்து, சிறுகதையை எழுதியிருக்கிறார். இதற்காகவே தக்கலைக்குச் சென்று கோமதியைச் சந்தித்துப் பேசினார், சந்திப்புப் பற்றிச் சமுத்திரம் கூறுகிறார்:

"சின்னஞ்சிறிய வீடு-அதுவும் வாடகை வீடு. கோமதியும் அவரது குழந்தைகளும் அன்புடன் வரவேற்றார்கள். கோமதியிடம் அவரின் அனுபவத்தை மெல்லக் கேட்டேன். ஆரம்பத்தில் அதை இயல்பாக விளக்கிய அவர், இறுதியில் கண் கலங்கச் சொன்னார், ஒருமணி நேரத்திற்குப் பிறகு, விடைபெற்றுக் கிளம்பினேன். அந்தக் குடும்பத்தினர் காட்டிய அன்பை மறப்பதற்கில்லை. என்னைப்பற்றி எதுவுமே தெரியாத அவர்கள் காட்டிய பாசத்தில் முழுக்க முழுக்க, நனைந்தேன்.

ஒருவரை நேரில் சந்தித்து அவரது அனுபவத்தைக் கண்டறிந்து கதையாக எழுதுவது சாத்தியம்தானா என்ற சந்தேகத்துடன் தான் நாகர்கோவில் புறப்பட்டேன். ஆனால், ஓர் இயல்பான குடும்பத்தின் யதார்த்தமான தரிசனம், பல இலக்கிய, சுகப்பிரசவ இன்பங்களைவிட அதிகமானது என்ற பெருமிதமான அனுபவத்துடனும், திருப்தியுடனும் திரும்பினேன்.“ -சு. சமுத்திரம்

முக்கடல்கள் சங்கமித்த பகுதிக்கு அருகே, அவற்றின் சங்கநாதம் விழும் காதுப்பகுதி போல் இருந்தாலும், எந்தப் பகுதியுடனும் சங்கமிக்க விரும்பாததுபோல், துண்டித்த தாய், துண்டிக்கப்பட்டதாய் நின்ற கிராமம். நின்ற கிராமமல்ல, காகங்களின் கரவை குறட்டை ஒலியாகவும் பள்ளத் தரையைப் படுக்கையாகவும் கொண்டு கும்பகர்ணனைக் குல தெய்வமாகக் கொண்டதுபோல் படுத்துக் கிடந்த பகுதி. நிலமகளின் ஆழமான காயம்போல் நிரடு தட்டிய ஊர். மின்னொளி அங்கே பாயாத காலம். காலம் என்பதை அதன் மாறுதல்களை வைத்தே அனுமானிக்க வேண்டும் என்று வைத்துக்கொண்டால், பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு, பதினெட்டாவது நூற்றாண்டு ஆட்சி செய்ததாய் அர்த்தப்படுத்திக்கொள்ளவைக்கும் குக்கிராமம்.

சேவல்கள் கூவி முடித்துவிட்டு, கோழிகளைப் பார்த்து ஒடிய நேரம்

வீட்டில் முக்கியமான காரியங்களை வெளியே போய் நடத்தத் தீர்மானித்ததுபோல், கோமதியின் மாமியார் விட்டுச் சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு தொட்டில் சேலையை விளக்கி, பேத்தியை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டு, நடை வாசலுக்கு வந்தாள். புறக்கடையில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தாய்ப்பசுவிடம் சேர்த்துக்கொண்டிருந்த கோமதி கன்றின் கயிற்றை அவிழ்த்து விடும்போது குவிந்திருந்த விரல்களை நிமிர்த்தாமலே, மாமியாருக்குப் பின்னால் ஓடிவந் தாள். சத்தம் கேட்டுத் திரும்பிய மாமியார் பின்னோக்கித் திரும்பி, உடம்பைத் கேள்விக்குறி மாதிரி வளைத்துக்கொண்டு மருமகளைப் பார்த்தாள்.

சி-2 மாமியாருக்கு அருகே நின்று கொண்டு கோமதி தலையைச் சொறிந்தாள். பிறகு "அம்மாவைப் பார்த்துவிட்டு வந்துடட்டுமா?" என்றாள்.

மாமியார்க்காரி, 'ஏன் பேசாமல் நிக்கறே' என்றாள்.

தான் சொன்னது, தனக்குத்தான் கேட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட மருமகள், அந்தப் பெரிய மனுஷியைப் புரியாதவள் போல் பார்த்துக்கொண்டு "அம்மாவை..." என்று சொல்வதற்காக அடித்தொண்டையை ஈரப்படுத்தியபோது கன்றுக்குட்டி எவ்வளவு நேரமாய்ப் பால் குடிக்குது! அதத் தொழுவுல கொண்டு கட்டிப்போடு! உம்... சீக்கிரம்" என்று மாமியார் நிதானமாக உறுமியபோது மாமியார் சொன்னதைச் செய்துவிட்டு. அதற்குப் பிறகே அவளிடம் வரங்கேட்க நினைத்தவளாய்க் கோமதி கொல்லைப்புறம் போய், பசுங்கன்றை இழுத்துப் பிடித்து. இன்னொரு இடத்தில் குடியமரச் செய்துவிட்டு, ஓட்டமும் நடையுமாக நடைவாசலுக்கு வந்தாள்.

மாமியார் தெருக்கோடிக்குப் போய்விட்டார். பின் தொடர்ந்து போய்க் கேட்க முடியாது, கேட்டால், கேட்கக்கூடாத பதில் கிடைக்கும். 'வழிமறிக்க வந்துட்டியோ' என்று சொல்லலாம். 'நாங்கள்ளாம் ஆட்களாத் தெரியலியா?' என்று கேட்கலாம். அதுவும் தெருவில் உள்ள எல்லாரும் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்பது போல் மாமியார் சத்தம் தொடுக்கலாம்.

மாமியாரிடம் கேட்டுவிடுவது என்று விடியவிடிய நினைத்துத் தூங்குவதும், 'அம்மா' என்று சொல்லிக் கொண்டே எழுவதுமாக இருந்தவள். அம்மாவின் ஒருமணி நேரப் பிரிவில் கூட வாடி வதங்கியவள். போனவருடம். திருமணமாகி, கணவனுடன் இந்த ஊருக்குப் புறப்பட்ட போது, அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டே அழுதவள். அவளைப் பிரிய விரும்பாதவள் போலவும்,

அம்மாவையும் தன்னோடு கூட்டிக்கொண்டு போகிறவள் போலவும் இறுகப் பிடித்தவள். அப்புறம் இங்கே வந்து, கணவனிடம் தனித்துப் பேசும்போதுகூட, சொல்லுக்குச் சொல். வார்த்தைக்கு வார்த்தை 'அம்மா-அம்மா’ என்று மட்டுமே சொன்னவள். கட்டிய கணவன் அதைத் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லையானாலும், மாமியார் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை. 'நானும் உனக்கு அம்மாமாதிரி தானம்மா...' என்று சொல்லவேண்டியவர், 'எப்பப் பார்த்தாலும் அம்மா தானா! இங்க பிடிக்கலன்னா, வெளிப்படையாச் சொல்லிடேன்," என்று சொன்னதில் கோமதி அரண்டு போனாள். தன் மனத்துக்குள்ளேயே 'அம்மா’ என்ற வார்த்தையைச் சொல்லிச் சொல்லி அந்த மனத்தைப் படலாக்கப் பார்த்தாள். முடியவில்லை.

கோமதி கருத்தரித்ததும் மாமியார் மகிழ்ந்து போனாள். கோமதியும் மகிழ்ந்துபோனாள். அம்மாவுடன் மூன்று மாதம் இருக்கலாம். ஏழாவது மாதத்திலே போய்விடலாம். மூன்று மாதமா... இல்லை, நாலுமாதம்... ஐந்து மாதம் முடியுமானால் ஆறுமாதம்.

குழந்தையின் பிறப்பில், தாயின் தரிசனம் கிடைக்கப் போவதில்லாமல் போன விரக்தியில் நிலைப்படியில் உட்கார்ந்தாள் அவள். இரவு முழுவதும் மாமியாரிடம் எப்படி நின்று எப்படிப் பேசவேண்டும் என்று மனக்கண்ணில் நிறுத்தி, தனக்குள்ளேயே ஒத்திகை பார்த்துக்கொண்டது மாமியாரின் ஒரு நிமிடப் பார்வையில் பஸ்பமாகிவிட்டது. ஆனால் தன் தாயை அன்றைக்குப் பார்க்கமுடியாது என்ற எண்ணம், நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்ற ஆறுதலைத் தருவதற்குப் பதிலாக அன்றைக்கே பார்த்தாக வேண்டும் என்ற அசுர வேகத்தைக் கொடுத்தது.

அந்த வேகம் அவளை முன்னும் பின்னும் நகர்த்தியது. கண்ணில் நீராகவும் காதில் இரைச்சலாகவும் தலையில் பாரமாகவும் நெஞ்சில் நெருப்பாகவும் அந்த வேகம் அவளை அலைக்கழித்தது. அம்மாவை, இன்னைக்குப் பார்த்தாணும். எப்படிப் பார்க்க முடியும்? இப்போ போற மாமியார் எப்போ வருவாளோ சொல்ல முடியாது. நாளைக்குப் பொங்கல். மறுநாளைக்கு மாட்டுப் பொங்கல். அம்மாவைப் பார்க்க முடியாது... அப்புறம் ரெண்டுநாள் வீட்டுக்குள்ள அடைபட்டுக் கிடக்கும் மாமியார் அதுக்குப் பிரதியா நாலு நாளைக்கு வெளிய போவாள். அப்புறம் கோவில் விசேஷம். ஒரு வாரம் அம்மா என்கிற பேச்சைக்கூட எடுக்க முடியாது. அப்படின்னா அம்மாவை எப்போ பார்க்கறது... எப்போ பார்க்கறது...'

திருவனந்தபுர நகரத்தில், ஆறு அண்ணன் தம்பிகளோடு ஒரே பெண்ணாக, செல்லமாக வளர்ந்தவள் கோமதி. அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டே ஆனந்தப்பட்டவள், பிரசவத்திற்காகத் தாய் வீடு போனாள். குழந்தை, பத்தாவது மாதத்தில் பிறக்காமல் பதினோராவது மாதத்தில் பிறக்க வேண்டும் என்றுகூட நினைத்துக் கொண்டாள்.

குழந்தை பிறந்த நாற்பத்தோராவது நாள், இந்த ஊருக்குப் புறப்பட்டபோது, அவள் அம்மா, "இனிமேல் தாம்மா ஒரு தாயோட தவிப்பு உனக்கு அதிகமாகப் புரியும். எனக்கு ஆஸ்த்மா அதிகமாகிக்கிட்டு வருது. எப்போ போகப் போறேனோ தெரியல. ஒரு தடவையாவது என்னை வந்து பாப்பியம்மா? பேத்திய எனக்குக் காட்டுவுயாம்மா?" என்று ஒரு நாளும் அழாத அம்மா அன்று ஆசை தீர அழுதாள்.

கல்யாணமாகி ஒரு வாரத்திற்குள் பிறந்த வீட்டுக்கு வந்தபோது அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, 'அம்மா அந்த ஊரு எனக்குப் பிடிக்கலம்மா. லைட்டு இல்ல. பஸ் இல்ல... செருப்பு போட்டு நடந்தாக் கூட சிரிக்கிறாங்க." திருவனந்தபுரத்துல இருந்துட்டு, அங்க இருக்கக் கஷ்டமாயிருக்கும்மா' என்று சொன்னபோது அவள் அம்மா 'நான் பிறந்ததும் உன் புருஷன் ஊருக்குப் பக்கத்து ஊர்தாம்மா... இந்த டவுனுக்கு வரும்போது இது பிடிக்கல்ல... விஷயம் என்ன தெரியுமா? அப்போ, எனக்கு என் அம்மாகிட்ட இருக்க ஆசை. இப்போ உனக்கும் என்கிட்ட இருக்க ஆசை. சும்மா ஒப்புக்கு ஊர்மேல பழி போடுறே? என்று சொல்லிக் கொண்டு மகளுக்கு முத்தங் கொடுத்தபோது கூட அழாத அம்மா, குழந்தையும் கையுமாகப் புறப்பட்டபோது அழுதாள்.

“கவலைப்படாதிங்க... இன்னும் ஒரு மாதத்துள்ள கோமதியைக் கூட்டி வரேன்” என்று அருகே நின்ற கணவர் சொன்னார்.

ஆனால் இங்கே வந்து இரண்டு மாதமாகிவிட்டது. அம்மா வருவோர் போவோரிடம் சொல்லியனுப்புகிறார். ஆஸ்த்மாவின் கொடுமை தாங்கமுடியவில்லையாம். கடைசித் தடவையாய்ப் போய்ப் பார்க்கணுமாம். கோமதி கணவனிடம் சொல்லிப் பார்த்தாள். அவர், ‘அம்மாகிட்டே கேக்குறேன்’ என்றார். அப்பா இல்லாமல் அம்மாவால் வளர்க்கப்பட்ட அவர் தாயைப் பார்த்ததுமே ஆறு வயதுக்கு வந்துவிடுகிறார். ஒரு தடவை அம்மாவிடம் கேட்டுவிட்டு, ஒன்பதை வாங்கிக்கொண்டார். இறுதியில் தானே மாமியாரிடம் கேட்பது என்று தீர்மானித்துத்தான் கேட்கப் போனாள்.

கோமதி அரைமணி நேரமாக அப்படியே விக்கித்து இருந்தாள். பின்னர் அம்மா இருக்கும் திசையைக் கண்களால் கட்டிக்கொண்டு வருகிறவள்போல் வெறித்துப் பார்த்தாள். அடுத்த வாரம் பார்க்கலாம், அல்லது அடுத்த மாதம் பார்க்கலாம் என்று ஒரு நிச்சய நிலைமை இருந்தால் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கலாம். எப்போது பார்ப்போம் என்பதே தெரியாமல் இருந்தால் அது நரக வேதனைப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். கோழியுடன் சென்ற குஞ்சுகளைக் கோமதி வெறித்துப் பார்த்தபோது திடீரென்று, தொட்டிலில் தூக்கம் கலைந்த குழந்தை கத்தியதில், கோமதி தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு எழுந்தாள். அவசரத்தில் கைகளை ஊன்றாமலே எழுந்ததால் சிறிது தடுமாறி, தள்ளாடும் கிழவிபோல் நடந்து பிறகு ஒரே தாவாகத் தாவி, குழந்தையை எடுத்தாள். மூன்று மாதக் குழந்தை. அன்னை திடீரென்று இருபத்திரண்டு வயது வாழ்க்கை முற்றுப்புள்ளியாகி விட்டதோ என்று மறுகியபோது, அந்தப் புள்ளியைக் கோடு கிழித்து ‘கமாவா’ ஆக்கியதுபோல், அழுத பிள்ளை அம்மாவைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டியது.

குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த கோமதிக்குத் தாய்மையின் பெருமிதத்தைவிட, தாய்ப் பாசத்தின் அடர்த்தி அதிகமாகிறது. நானும்... இப்படித் தானே அம்மாவிடம் பால் குடித்திருப்பேன். இவள், ‘என்னை விடமாட்டேன்’ என்பதுபோல், என் விலா எலும்பில் ஒரு கையையும் தோளில் ஒரு கையையும் வைத்துக்கொண்டு அழுந்தப் பிடிக்கிறாளே. அப்படித் தானே நானும் பிடித்திருப்பேன்?

திடீரென்று கோமதி இன்பதுன்ப எல்லைப் பரப்பைத் தாண்டிய பிரத்தியட்சத்தின் ஈர்ப்புச் சக்திக்கு அப்பாற் பட்ட ஒரு சுகமான கற்பனைப் போதையில் மிதந்தாள். குழந்தையைத் தன்னைப்போலவும், தன்னைத் தன் தாயைப் போலவும் கற்பனை செய்து பார்த்தாள். தானே தன்னைப் பெற்றுக்கொண்டாள். தானே தன்னைப் பிறப்பித்தவளானாள். பிறகு, பெற்றவளாகவும், பிறப்பித்தவளாகவும் கற்பித்துக்கொண்ட ‘துவைதம்’ போய் ஏதோ ஒருவித ஒருமை உணர்வில் குழந்தைக்குள் தாயையும் தாய்க்குள்ளே குழந்தையையும் காணும் ‘அத்வைதத்தில்’ அவள் இரண்டறக் கலந்தபோதுகொல்லைப்புறத்தில் கன்றுக்குட்டி, ம்மா... ம்மா... என்று கூக்குரலிட்டது. அருகே இருந்தாலும் அரவணைக்க முடியாத அந்தக் குட்டியைப் பார்த்து, அந்தத் தாய்ப் பசுவும் ம்மா... ம்மா...' என்று திருப்பிக் கத்தியது.

கோமதி கனவிலிருந்து நனவுக்கு வந்தாள். வயிறு முட்டப் பால் குடித்த குழந்தை அதன் வாய்முட்ட, பால் துளிகள் பற்கள்போல் மின்ன அம்மாவின் தோளில் பற்றிய கையை எடுத்து அவள் கண்ணில் வைத்தது. இதற்குள் மாறிமாறி . ம்மா... ம்மா..." என்று பசுவும் கன்றும் ஒரே சமயத்தில் கத்தின.

கோமதி குழந்தையை எடுத்து அவசர அவசரமாகத் தொட்டிலில் போட்டுவிட்டுக் கொல்லைப் பக்கம் போய், “கொஞ்சம் பொறு... ஒன்னையாவது ஒன் அம்மாகிட்ட சேர்க்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே கன்றின் கயிற்று முடிச்சை அவிழ்க்கப் போனாள்.

அதற்குள் வாசல் பக்கம், “கோமதி... கோமதி...” என்ற குரல் கேட்டது. பெரியண்ணன் குரல் மாதிரி...

கன்றுக்குட்டியின் கட்டை அவிழ்க்காமலே வாசலுக்கு ஓடினாள். வாசல் வழியை மறிப்பதுபோல் ஒரு டாக்ஸி நின்றது. அதிலிருந்து பெரிய அண்ணன் மெளனமாக இறங்கி வாசலுக்கு வந்து கோமதியைப் பாதத்திலிருந்து கேசம் வரை உற்றுப் பார்த்தார். வாயடைத்தவளாய் அண்ணனையே பார்த்தாள் அவள். ஆனந்தமாகப் பார்த்தாள். பிறகு “அம்மாவையும் கூட்டிக்கொண்டு வரப்படாதா?” என்றாள்.

அண்ணன்காரர் எப்படிச் சொல்வது என்று புரியாமல் தங்கையைப் பார்க்காமல் வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டே, “சீக்கிரமாய்ப் புறப்படும்மா...” என்றார். கோமதி ஒன்றும் புரியாதவளாக அண்ணனின் தோளை உலுக்கிக்கொண்டே, “என்னண்ணா... ஏன் இப்படிப் பார்க்கிறே?” என்றாள்.

அண்ணன் மடமடவென்று ஒப்பித்தார். “அம்மாவுக்கு ராத்திரி ஆஸ்த்மா அதிகமாகி... ஆஸ்பத்திரிலே சேர்த் திருக்கோம்... இனிமே... இனிமே... பிழைக்கறது கஷ்டம். ஒவ்வொரு மூச்சுக்கும் கோமதி கோமதின்னு புலம்பறாள். அவளோட அவஸ்தயப் பார்க்க முடியல... ஒன்னைப் பார்த்தால்தான் அவள் நிம்மதியாச் சாவாள்!”

கோமதி முன் நெற்றியில் கைவைத்து நிலைகுலைந்து, மறுகி நின்ற அண்ணனையே ஆறுதலாகப் பற்றிக்கொண்டு ஸ்தம்பித்தாள். அங்கே நின்ற அண்ணன், அவனைக் கொண்டுவந்த கார், ஓட்டிவந்த டிரைவர் அக்கம்பக்கத்து வீடுகள் ஆகிய அனைத்துமே மாயமாய் மறைந்து, தன்னைப் பெற்றெடுத்த அம்மா மட்டுமே அங்கே விஸ்வரூபம் எடுத்தவளாய் வானுக்கும் பூமிக்கும் வளர்ந்தவளாய், அவளை ‘வா வா’ என்று இருகரம் நீட்டி அழைப்பவளாய்த் தோன்றினாள்.

சிறிது நேரம், அப்படியே அசையாது நின்றவள், அண்ணனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “அம்மா... அம்மா...” என்று விம்மினாள், பிறகு “என் அம்மாவைக் கொன்னுட்டாங்களா?” என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் கத்திவிட்டு அண்ணனை விட்டு அகன்று, வாசல் கதவில் தலையைக் கொண்டு போய் மோதினாள்.

அண்ணன் அவளைத் துரக்கி நிறுத்தி, தன்னோடு சேர்த்து லேசாக அணைத்துக்கொண்டு, “சரி... அழுது என்ன பிரயோசனம்? சீக்கிரமாய்ப் புறப்படு...” என்றார்.

அப்போதுதான் ஓரளவு சுயநினைவுக்கு வந்த கோமதி, வீட்டின் உட்பக்கத்தை வெறுமையாகப் பார்த்தாள். பிறகு தன்னை மறந்தவளாய், “அம்மா பிழைப்பாளா அண்ணா?” அவள... நான் உயிரோட பார்ப்பேனா? செத்துப்போனவள உயிரோட இருக்கிறதா பொய் சொல்றியோ? உள்ளத்த சொல்லிடு... உள்ளத்தச் சொல்லிடு” என்று கத்தினாள்.

இரு கரங்களையும் கூர்வாள்போல் ஆக்கிக்கொண்டு. தலையில் அடித்துக்கொண்டாள். தடுக்க வந்த அண்ணனை மூர்க்கத்தனமாகத் தள்ளினாள்.

இதற்குள் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டுக்காரர் கள் வெளியே வந்தார்கள். நிலைமையை யூகித்துக் கொண்டு “பாவம்... எப்பப் பார்த்தாலும் அம்மா என்கிற சொல்லுக்கு அடுத்த சொல் சொல்லமாட்டாள். ஒரு மாசமா அம்மாவைப் பார்க்கணும் பார்க்கணுமுன்னு துடியாய்த் துடிச்சாள். துடிச்சு என்ன பிரயோஜனம்? ஜெயிலுல இருக்கிறவள் மாதிரி இருக்கிறவள்...” என்று ஒரு பெண் கோமதியின் அண்ணனிடம் சொன்னாள்.

இன்னொருத்தி “சரி, வீட்டைப் பூட்டிட்டுப் புறப்படு, உன் மாமியார் வந்தா நாங்க சொல்லிக்கிறோம்” என்றாள்

கோமதி கண்ணிர் வெள்ளத்திற்கிடையில் பொய்யுருவங்களாய்த் தெரிந்த கூட்டத்தைப் பார்த்து, “அவரு ஆபீஸ் போயிட்டார். மாமியார் திறவுகோலை எடுத்துட்டுப் போயிருக்கார். அம்மா... ஒன்னை உயிரோட பார்ப்பேனா? இந்தப் பாவி பார்ப்பேனா? என்னைப் பார்க்க முடியாத ஏக்கத்துலேயே நீ இளைச்சிருப்பே... ஒன்னை இந்த நிலைக்குக் கொண்டுவந்தது நான்தான்... நான்தான்” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

அவள் அண்ணன் கூட்டத்தைப் பொதுப்படையாகப் பார்த்துக் கேட்டார்.

“யாராவது ஒருத்தர் இந்த வீட்டைப் பார்த்துக்கணும்: நான் கோமதியைக் கூட்டிக்கிட்டு போறேன். மாப்பிள்ளையையும் அவரு அம்மாவையும் உடனே வரச்சொல்லுங்க! சரி கோமதி. இனிமே அழப்படாது வண்டில ஏறு:” கோமதி தள்ளாடிக்கொண்டே கீழே விழப் போனபோது அண்ணன் அவளைத் தாங்கிப் பிடித்து, டாக்ஸிக்கு அருகே நகர்த்திக்கொண்டே யாராவது உள்ளே போய்க் குழந்தையை எடுத்துக்கிட்டு வாங்க; ஒரு ஆளு வீட்ல இருங்க" என்றார்.

மெளனமாக நின்ற கூட்டத்தின் சார்பில் ஒருத்தி அவருக்குப் பதிலளித்தாள். “எந்த வீட்டப் பார்த்தாலும் இந்த வீட்டப் பார்த்துக்க முடியாது. நாங்க எதையாவது திருடிக்கிட்டோமுன்னு பழி போடுவாங்க! மருமகளை நம்புறது மாதிரி வீட்டைத் திறந்து போடுறது... நம்பாதது மாதிரி திறவு கோலக் கொண்டு போறது... இப்படி நடக்கிற பொம்பிளைகிட்ட நாங்க மாட்டிக்கிட்டால், அவ்வளவு தான்.”

அண்ணன் என்ன செய்வதென்று புரியாமல், கூட்டத்தை அதிசயமாகவும், அருவருப்பாகவும் பார்த்தார். வீட்டை இப்படியே போட்டுவிட்டுப் போனால் அந்த அம்மா வீட்டில் இருந்த நகைகளைத் தங்கச்சியோட உதவியுடன் நானே எடுத்துக்கொண்டு போனதாய்ச் சொல்லலாம். ஒரு தடவை எனக்குப் பெண் பார்ப்பதற்காகத் தங்கையைக் கூட்டிக் கொண்டுபோக வந்தபோது, ‘அவளை அனுப்பமுடியாது, கூட்டிக்கிட்டுப் போவதாய் இருந்தால் ஒரேயடியாகக் கூட்டிட்டுப் போகலாம்’ என்று சொன்ன மகாராணி. பக்குவமாய்த்தான் நடந்துக்கணும் என்ன செய்யலாம்.

யோசித்துக்கொண்டிருந்த அண்ணனைக் கோமதி உற்றுப் பார்த்துவிட்டு பிறகு அவர் மோவாயைப் பிடித்துக் கொண்டே, “நீ இங்க இரு அண்ணா! நான் போய் அம்மா வைப் பார்த்துட்டு ஓடி வந்துடறேன். நான் போறேன் அண்ணா! என்னை அம்மாகிட்டே போக விடு அண்ணா!” என்று புலம்பினாள்.

அவள்மீது பரிதாபம் கொண்ட ஒருசில பெண்கள் மாமியார்க்காரியை அசிங்கமாகத் திட்டினார்கள்! உடனே டாக்ஸி டிரைவர் “ஒருத்தரைக் குறை சொல்றோம்னா அவங்களால் ஏற்பட்ட வில்லங்கத்தைப் போக்குறத்துக்கு நாம தயாராய் இருக்கணும். சும்மா ஒண்னுக்கும் உதவாமல் திட்டுறதுல அர்த்தமில்லை. ஏழு மணிக்குப் புறப்பட்டோம், இப்போ மணி பத்து. அந்த அம்மா பாவம்! இந்நேரம்...”

டிரைவர் சொன்னதை முடிக்க முடியாமல் திணறிய போது கோமதி ஓலமிட்டாள். பிரசவத்தின்போது கத்தியதைவிடப் பேரிரைச்சலான ஓலம் எலும்புகளை நெகிழ வைக்கும் அவல ஒலி.

அண்ணன்காரர், தங்கையின் கையைப் பிடித்துக் கொண்டார். “சரிம்மா... நாகர்கோவில்ல போய் என் மதனியைக் கூட்டிட்டு வரேன். டிரைவர் அண்ணே!”

டாக்ஸி மின்னல் வேகத்தில் பறந்தது. கோமதி வண்டிக்குப் பின்னால் ஓடினாள். இரண்டு மூன்று பெண்கள் அவளைப் பிடித்து வீட்டுக்குள் கொண்டுவந்து உட்கார வைத்தார்கள்.

கலைந்த கொண்டை காற்றிலாட விழிநீர் கழுத்தில் தோரணமாக, கோமதி வீட்டுக்கும் தெருக்கோடிக்குமாக நடந்துகொண்டிருந்தாள். மாமியார் வருகிறாளா என்று பார்த்தாள். டாக்ஸி திரும்புகிறதா என்று எட்டி எட்டிப் பார்த்தாள். அவள் நடந்த நடையின் துரத்தைக் கணக்கிட்டால் தொலைவில் உள்ள திருவனந்தபுரத்திற்கே போயிருக்கலாம்.

டாக்ஸி திரும்பி வந்தது. அண்ணன் மட்டும் வெறுமையோடு வெளிப்பட்டார். “என் மதனியைக் கூப்பிட்டேன். அவங்களால வரமுடியாதாம். கையெடுத்துக்கூடக் கும்பிட்டுப் பார்த்தேன். முடியாதுன்னா முடியாதாம். அவருக்கு, மாறி மாறிப் பேசிப் பழக்கமில்லையாம்.” கோமதி, அழுகையை அடக்கிக்கொண்டே, “சரி... வாண்ணா போகலாம். வீடு எக்கேடாவது கெடட்டும். அவரு தள்ளி வைச்சால் வைக்கட்டும் , அம்மாவை தான் பார்த்தாகணும்; என்ன நடந்தாலும் சரி”, என்றாள்.

நாலும் தெரிந்த அண்ணன் அசையாமல் நின்றபோது, கோமதி “டிரைவர் அண்ணா, உங்களுக்குக் கோடிப் புண்ணியம். என்னை இப்பவே அம்மாகிட்டே கொண்டு விட்டுடுங்க! தயவுசெய்து காரை எடுங்க. டிரைவர் அண்ணா உங்களைத் தான்... இனிமேலும் என்னால இருக்க முடியாது. இருக்கவே முடியாது” என்று கத்தினாள்.

டிரைவர் கண்களைத் துடைத்துக்கொண்டபோது, அம்மாவின் ஆசை விமோசனம் தங்களுக்கு சாபமாகிவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்த அண்ணன் “ஒரு மூட்டை நெல்லையும் ஒன் வாழ்க்கையையும் ஒரே தட்டுல நிறுத்துப் பார்க்கிறவள் உன் மாமியார். கொஞ்சம் பொறுத்திரு. உன் மாப்பிள்ளையை எப்படியாவது தேடிப் பிடிச்சுக் கொண்டு வரேன்... டிரைவர் வண்டிய எடுக்கிறீங்களா? இந்த வீட்டை இப்படியே போட்டுட்டுப் போனால், இவள் அப்புறம் இங்கே வரவே முடியாது”.

முப்பது மைல் தொலைவில் உள்ள இடத்தில் வேலை பார்க்கும் மாப்பிள்ளையைத் தேடிப் பிடிக்கக் கார் பறந்தது.

கார் போவதையே பார்த்துக்கொண்டிருந்த கோமதி, வீட்டுக்குள் வந்து சமையலறையில் கல்லாய்ச் சமைந்தாள். இடம் பொருள் ஏவலென்று எதுவுமின்றித் தானிருப்பது. தனக்குப் புரியாதவளாய், நடந்ததை நம்ப முடியாதவளாய், நம்புவதை நிராகரிப்பவளாய்க் காலத் துளியில் கரைந்து போனவள்போல், கண்ணீர் விடாமலே இருந்த இடத்திலேயே இருந்தாள். தொட்டிலில் கிடந்த குழந்தை கத்தியது. அந்தக் கத்தல், அவள் காதில் விழவில்லை. எவளோ ஒருத்தி, குழந்தையை எடுத்துக்கொண்டு வந்து அவள் மடியில் திணித்துவிட்டு, “மீனா பசியில துடிக்கிறாள்... பால் கொடம்மா” என்றாள்.

கோமதி குழந்தையைப் பார்க்கவில்லை. அதைக் கொண்டு வந்தவளை நோக்கவில்லை. குழந்தை கத்தியது. “நீயும் வாழப்படாது... நானும் வாழப்படாது.டி. உலகத்துல பெண்ணாய்ப் பிறக்கவே படாதுடி! பாலும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம். பேசாம சாகுடி” என்று தன் பாட்டுக்குப் புலம்பினாள்.

குழந்தை கத்திய களைப்பில் மூச்சு வாங்கி முனகிய போது, தாய்மையின் ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டவள்போல குழந்தையைக் கைகளில் ஏந்திக்கொண்டாள்.

கோமதிக்கு இப்போது அண்ணனோடு போன கார் மறந்துவிட்டது. அதில் கணவனோ அல்லது அவன் அனுப்பும் சேதியோ அந்தக் காரில் வரும் என்ற எண்ணமில்லை. அவளைப் பொறுத்தமட்டில் மாமியார் என்ற ஒருத்தி மரித்தேபோய்விட்டாள். கணவன் என்ற ஒருவன் காணாமலே போய்விட்டான் வாழ்க்கை என்பது ‘அம்மா’ என்ற ஒருத்தியாக மட்டுமே ஆகிவிட்டது.

இடுப்பில் குழந்தையை ஏந்தியபடி திருவனந்தபுரம் இருந்த திசையை நோக்கி ஓட்டமும் நடையுமாக போய்க் கொண்டிருந்தாள். ✽


(18-9-80 குமுதம்)