இன்னொரு உரிமை/லவ் ஆல்

லவ் ஆல்


சென்னை நகரில், ஒரு சிக்கனப் பகுதி.

கள்ளப் பணம் வைத்திருப்பவர்கள் போல், வெளியே புறாக்கூண்டு போலவும் உள்ளே மொஸைக் தரை போட்ட பல்நோக்கு அறைகளைக் கொண்ட, பல மாடிக் குடியிருப்புப் பகுதி, கண்ணின் கணக்குக்கு வராமல், உணர்வின் உரைக் கல்லாக உள்ள அரசாங்கக் குடிருப்பு வளாகம். தீப்பெட்டிகளை சதுர சதுரமாய், ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கியது போன்ற மாடிகள். அவற்றின் உச்சிகளில் சிலுவை போலிருந்த தொலைக் காட்சி ஏரியல்கள்.

ஈஸ்வரனின் ஆடல் பாதத்தில் அகப்பட்ட முயலகன் போல் சூரியச் சூட்டில் வீட்டிற்குள்ளேயே சிறை வைக்கப்பட்டிருந்த பலர் கடல் காற்று வீசத் துவங்கியதால், பால்கனிகளில் வந்து நின்ற நேரம். சில பெண்கள், மாடிப்படிகளைத் தாண்டி நான்குபுற கட்டிடச் சுவர்களுக்கு நடு நாயகமாக உள்ள மைதானத்தில் லேசாய் நடமாடிக் கொண்டிருந்த வேளை.

மைதான மத்தியில் ஏழெட்டு இளசுகளும், ஓரிரண்டு நடுத்தரவாதிகளும் இரண்டு கம்பங்களுக்கு இடையே, வாலி பால் நெட்டை கட்டிக்கொண்டிருந்தார்கள். இருபுறமும், ஆட்டத்தைப் பார்ப்பதற்காக, ஸ்கர்ட் சிறுமிகளும், ஜீன்ஸ் பையன்களும், லேசாய் ஆடியபடி நின்றிருந்தார்கள்.

குப்பைத் தொட்டிக்கு அருகே நான்கைந்து சொறி நாய்கள், குட்டிகள் சசிதமாய், ஒன்றின் கழுத்தில், இன்னொன்று பொய்க்கடி கடித்தபடி கோலோச்சிக் கொண்டிருந்தன. மைதானத்தில் தலையை லேசாய்ப் பின்புறமாய் திருப்பியபடி படுத்துக் கிடந்த வெள்ளைப் பசு ஒன்று, அசை போட்டுக் கொண்டிருந்தது.

வாலிபால் நெட் கட்டப்பட்டது. தெற்கு அணியின் சதுரக் கோட்டின் மூலையில் சம்பத் கையில் பந்தை வைத்து உருட்டிக் கொண்டிருந்தான். 'கட்’ அடிப்பதற்காக, நெட்டிற்கு முன்னால் இடது பக்கம் நின்றவர், கையைத் தூக்கி, நெட்டோடு நெடுகத் தாவி, வலது பக்கம் கையை கொண்டு போனார். உடனே எதிராளியும் அப்படியே துள்ளி, அப்படியே கையை அந்தரத்தில் துழாவினார். சர்விஸ் போட வேண்டிய சம்பத் ஆட்டத்தை மறந்து, ஆட்டக்காரி போல் நின்ற ஒரு பால்கனி பெண்மேல் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தான். உடனே, அவன் அணியைச் சேர்ந்த ஒருவர், “சர்வீஸ் போடேண்டா, ஆபீஸ் மாதிரியே இங்கேயும் அசமஞ்சமாய் நிற்கறியே” என்றார் ஆபீஸ் என்றதும் பலருக்கு வாயாடியது.

“ஆமா மீதி அடிஷனல் டி. ஏ. எப்போ கிடைக்கும்?”

“எப்பவாவது கிடைக்கும்.”

“இல்லப்பா ஒருவேளை ஜி.பி. எஃப்ல சேத்திடப் படாது பாரு.”

“நோ நோ. அப்படி வராது.”

“வெயிட் அண்ட் ஸீ.”

எதிரெதிர் அணியாய் நின்றவர்கள். நெட்டிற்கு அருகே கூடி அடுத்த பஞ்சப்படி, சேமிப்பு நிதியில் வைக்கப்படுமா அல்லது ரொக்கமாகத் தரப்படுமா என்று பட்டிமண்டபம் நடத்திக்கொண்டிருந்தார்கள். ஆட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த சின்னப்பிள்ளைகள் அவர்களை எரிச்சலோடு பார்த்தார்கள். நாமே விளையாடலாமே என்பதுபோல் ஒரு பயல் சம்பத் கீழே போட்ட பந்தை எடுத்து ‘புட்பால்’ ஆடப் போனான். இதைப் பார்த்த சர்விஸ் இளைஞன் “டேய் ஸ்கவுண்ட்ரல்” என்று அவனைத் துரத்தினான் பையனைப் பிடிக்க முடியவில்லையானாலும், அவனால் பந்தைப் பிடிக்க முடிந்தது. ‘டி. ஏ.’ விவாதத்தை முடித்து விட்டு, அவர்கள் அணி பிரியப் போனபோது ஒருவர் ஒரு விவரத்தை விவகாரமாக்கினார்.

“ராகவன் ஆபீஸ் காரை எப்படியெல்லாம் மிஸ்யூஸ் செய்றார் பாருங்க! பசங்களை ஸ்கூல்ல இருந்து கொண்டு போறதுக்கும் வரதுக்கும் ஆபீஸ் கார்தான். தோ, பாருங்க. மிஸஸ் ராகவன் கார்ல இருந்து முருங்கைக்காயோடு இறங்குறதை. சீ இப்படியா மிஸ்யூஸ் செய்யுறது.”

“ஸாரி! இது மிஸ்யூஸ் இல்ல.”

“அப்படின்னா?”

“அப்யூஸ்.”

“ஒங்களுக்கு லிஃப்ட் கொடுக்கலன்னா மிஸ்யூஸ்ன்னு அர்த்தம். தேன் எடுத்தவன் புறங்கையை நக்கத்தான் செய்வான்னு சொல்றது ஏன் ஸார் புரியவில்லை? ஒங்களுக்கு எப்பவுமே டபுள் ஸ்டாண்டர்ட், டபுள் டச்சு.”

“ஸாரி, ராகவன் ஒன்னோட அத்திம்பேர் என்கிறதை. மறந்துட்டேன்!”

“நீங்ககூடத்தான் சுற்றுலா போறதாய் எல். டி. சி. போட்டு பில் காட்டிப் பணம் வாங்கினீங்களாம். பட், மெட்ராஸ் பெஸண்ட் நகரை விட்டுத் தாண்டவே இல்லையாம்.”

“சைலன்ஸ்: ரிஷிமூலம், நதிமூலம் ஆபீஸ் மூலம் பார்க்கப்படாது. லெட் அஸ் பிளே ஏய் சம்பத்! சர்விஸ். போடுடா!”

சம்பத், பின்நோக்கிப் போய், முன் நோக்கி நின்றான். எல்லோரும் அவன் கையில் இருந்த பந்தையே பார்த்த போது. அவன் வலது கரத்தைப் பின்புறமாய்க் கொண்டு போய், இடது கரம் ஏந்திய பந்தை தூக்கிப் போட்டு ‘மட்டையடி’ அடித்தான். அவ்வளவு தான். அந்தப் பந்து விண்வெளிக்கலம் போல் மேல்நோக்கிப் போய், அப்புறம் அரை வட்டமாகி, கீழ்நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. அந்த பந்து 'அவுட்டா' என்பதுபோல நோட்டம் பார்த்த எதிர் அணி சர்விஸ்காரர். இரண்டு கரங்களையும், விரல் பரவக் குவித்து, விழப்போகும் பந்தை, விழியாடாது குறி பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒரு பக்கம் நான்கைந்து பெண்கள், வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்த பழக்காரரிடம் பைசாக் கணக்கில் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் பூக்காரக் கிழவியிடம் சில பெண்கள் முழம் போட்டு வாங்காமல் நாக்குகளை முழக்கணக்கில் காட்டிச் சரி பார்த்துவிட்டுக் கேட்டிருக்க வேண்டும். இல்லையானால் பூக்காரக் கிழவி அப்படித் தலையில் கை வைத்தபடி அவர்களைப் பார்த்திருக்கமாட்டாள்.

எப்படியோ வாலிபால் துள்ளத் துவங்கியது. பெண்கள் தலைகளில் பூச்சூடிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் சப்போட்டா பழத்தை சப்பிக்கொண்டிருந்தார்கள்.

திடீரென்று ஒரு பிளிறல் சத்தம். அந்த சத்தத்தை மூழ்கடிக்கும் நாய்களின் உறுமல் சத்தம். குப்பைத் தொட்டிக்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருந்த அதோ அந்த சொறி நாய்கள் வியூகம். எப்படியோ எங்கிருந்தோ வந்த ஒரு சின்ன பன்றிக்குட்டி சுவரோடு சுவராக நிற்கிறது. வெள்ளைப் புள்ளிகள் கொண்ட அழகான குட்டி. அதை அப்படியும் இப்படியும் தப்பிக்க முடியாதபடி நாய்கள் நெருங்கிக்கொண்டிருந்தன, ஐந்து நாய்களும், ஒருமுகப் பட்டதுபோல் அல்லது ஒரு உடம்பில் ஐந்து முகங்கள் கொண்டவைபோல் பன்றியை நோக்கி சுவராஸ்யமாக நெருங்கின. நெருக்கியடிக்கப்பட்ட பன்றி ‘த்தூ... த்தூ... என்று ஒலமிட்டது. தாய்ப் பன்றியை விட்டுத் தனியாக வந்த தலைவிதியை நோவதுபோல், தலையைச் சுவரில் வைத்துத் தேய்த்தது. துவக்கத்தில் மெல்லக் கத்திய அந்தச் சின்னக்குட்டி இப்போது, பிரளயத்தைப் பிரசவிப்பதுபோல் ஒலமிட்டது. அந்த ஓலம் வாலிபால் ஆர்ப்பாட்டத்தைக் கூட மிஞ்சியது. உடல் கடிபடு முன்னாலேயே உயிரோலம் போட்ட அதன் பார்வை, வாலிபால் வீரர்களையும் பூச்சூடிய பெண்களையும், பழம் தின்ற சிறுவர்களையும் மாறி மாறிப் பார்த்தது. அந்தப் பந்துபோல் சுருண்டு, பழம் போல் நசிந்து, பூப்போல் மடிந்து அது புலம்பிய புலம்பல் இருக்கிறதே, அதைப் பார்க்காதவர்கட்கு, கேட்காதவர்கட்கு விளக்கமுடியாது. உதவி கிடைக்கும் என்றோ அல்லது மரண பயத்தாலோ அது கத்திய கத்தலுக்குப் பாதி பலன் கிடைத்தது.

பூச்சூடிய பெண்கள் திரும்பிப் பார்த்தது உண்மைதான். ஆனால் திரும்பிய வேகத்திலேயே தலையைத் திருப்பிக் கொண்டார்கள். அரைகுறைப் பார்வையோ அல்லது அசுர மகிழ்ச்சியோ டையன்கள் ஸாடிஸ வடிவாக நின்றார்கள். வாலிபால் மைதானத்திற்குள் முக்கியத்துவமில்லாத இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். ஆனாலும் பன்றியின் மரணப் புலம்பலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

நாய்களுக்கும், பன்றிக்கும் ஒரு அடிதான் இடைவெளி. குட்டியின் கண்களில் இருந்து நீர் விழுந்தது. அதன் வெண் சிவப்பு வாயில் துரை தள்ளியது. போராட முடியாத பதினைந்து நாள் குட்டி. கண்களை மூடியபடி அது பரிதாபமாய்க் கத்தியபோது, சர்விஸில் அவுட்டான பந்து, அந்தப் பக்கமாய் உருண் டோடி வந்தது. சம்பத் அதை எடுப்பதற்காக ஓடி வந்தான். நாய்கள் தங்களைத்தான் அந்த மானுடன் துரத்த வருவதாக நினைத்து, சற்றுப் பின்வாங்கின. அதேசமயம் பன்றிக்குட்டி தப்பிக்கமுடியாதபடி இடைவெளிவிட்டுச் சூழ்ந்து நின்றன. ஓடி வருகிறவன் என்ன செய்கிறான் என்பதையும் பன்றிக் குட்டியையும் மாறிமாறி நோட்டம் விட்டபடி காதுகளை நிமிர்த்தி, வால்களை விறைப்பாக்கி நின்றன. மாட்டிக்கொண்ட பன்றிக் குட்டியும் அவனை எதிர்பார்ப்போடு பார்த்தது.

சம்பத் கீழே குனிந்தபோது அவன் கல்லை எடுப்பதாக நினைத்து, நாய்கள் முதுகைக் குனிந்து, முன்கால்களைத் தூக்கி ஒட்டமெடுத்துப் போயின, ஆனால் சம்பத் பந்தை எடுத்துக்கொண்டு பன்றிக் குட்டியையும் நாய்களையும் லேசாய்ப் பார்த்தபடியே திரும்பி ஓடிய போது, நாய்கள் நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை. குதிகால் பாய்ச்சலில் வியூகம் கலையாமலே பன்றிக்குட்டியை அகோரப் பசியோடு நெருங்கின. காலுக்கு ஒன்றும், தலைக்கு ஒன்றும், வயிற்றுக்கு ஒன்றும் குறிபார்த்தபடி, வாய் பிளந்து முண்டியடித்தன. இத்தருணம் எப்படியோ கிடைத்த இடைவெளிக்குள் பன்றிக்குட்டி பாய்ந்து ஓடியது. நாய் வியூகத்தில் இருந்து விடுபட்டு அது குதிக்கப் போனபோது-

ஒரு நாய், அதன் வாலைக் கல்விப் பிடித்து இழுத்தது. இன்னொரு நாய் காலைக் கவ்வியது. குட்டியோ குய்யோ முறையோவாய்க் கூப்பாடு போட்டது. பூப்பெண்கள் பார்த்துக்கொண்டு நின்றதுபோல்தான் தெரிந்தது. வாலி பால்காரர்கள் காதுகளில், அதன் இறுதிக் குரல் விழுந்தது போல்தான் இருந்தது. என்றாலும் பன்றிக் குட்டியின் வாலைக் கவ்விய நாய், அதைத் தன் பக்கமாய் இழுத்துக் கொண்டிருந்தது. காலைக் கவ்விய நாய் இன்னொரு பக்கம் இழுத்தது. பன்றிக்குட்டி கோரமாய்க் கத்தியது. மானுட ஜீவிகளை விழி பிதுங்கப் பார்த்தபடியே ஓலமிட்டது.

‘யார் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன’ என்பது மாதிரி படுத்துக் கிடந்த அந்த வெள்ளைப் பசு சத்தம் கேட்டு தலையைச் சாய்த்தது. அவ்வளவுதான். எப்படி எழுந்தது, எப்படிப் பாய்ந்தது என்பதைச் சொல்லமுடியாது. கழுத்தை வளைத்து, கொம்புகளை அம்புகளாக்கி நாய்ப் பட்டாளம் மேல் பாய்ந்தது. தலையை அங்குமிங்கும் ஆட்டி கால்கள் தரையில் பதியாமல் அங்குமிங்குமாகக் குதித்தது. நான்கு பக்கமும் சிதறிய நாய்களை ஒன்றன்பின் ஒன்றாய்த் துரத்தியது. கட்டிட வளாகத்திற்கு அடியில், அவற்றை விரட்டிவிட்டு பன்றிக்குட்டியை லேசாய் சாய்த்துப் பார்த்துவிட்டு, மீண்டும் எந்த இடத்தில் எப்படிப் படுத்திருந்ததோ அந்த இடத்தில் அப்படி படுத்தது.

நகரத் திராணியின்றி குன்றிப்போய் நின்ற பன்றிக் குட்டி, தொலைவில் நான்கைந்து குட்டிகளோடு அங்குமிங்குமாய் அலைமோதிக் கொண்டிருந்த தாய்ப் பன்றியைப் பார்த்ததும் இது அதை நோக்கியும், அது இதை நோக்கியும் நெருங்கிக் கொண்டிருந்தன.

பூச்சூடிய பெண்கள் அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். வாலிபால் சம்பத் இப்போது வேறு பக்கம் நின்று சர்வீஸ் போட்டான். இப்படிச் சொன்னபடியே பந்தை எகிறவிட்டான்.

“லவ் ஆல்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=இன்னொரு_உரிமை/லவ்_ஆல்&oldid=1664385" இலிருந்து மீள்விக்கப்பட்டது