இன்னொரு உரிமை/நூலிழையில் ஒரு பந்தம்

நூலிழையில் ஒரு பந்தம்

நாலைந்து பேர் சுமக்க முடியாமல் சுமந்து முற்றத்தில் சாற்றி வைக்கப்பட்டிருந்த கட்டிலை இழுத்துப் போட்டு அதிலே வைரமணியைப் போட்டார்கள். அவன் கண்கள் மேல் நோக்கிச் சொருகிப் போயிருந்தன. வாந்தி எடுக்கப் போவது மாதிரி வாயைப் பண்ணிக் கொண்டிருந்தானே தவிர, வாந்தி வரவில்லை. வேட்டி சட்டை அனைத்தும் தெப்பமாக நனைந்திருந்தது. நேராகப் பார்க்கும் ஆட்டுக் கிடா மாதிரி கூர்மையான அந்தக் கண்கள் ஒடுங்கிக் கொண்டும், வைரம் பாய்ந்திருந்த அவன் உடம்பு ஆடிக் கொண்டும் இருந்தன. அவனுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம்.

அப்போதுதான் மாட்டை அவிழ்த்துக் கொண்டிருந்த அவன் தந்தை மாடசாமி மாட்டை அப்படியே விட்டு விட்டு, மகனிடம் ஓடி வந்தார். அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவன் கண்களைப் பார்க்கப் பார்க்க ஏதோ ஒரு உண்மை புலப்பட்டது போல், தலையில் அடித்துக் கொண்டே "ஐயோ... என் பிள்ளைக்கு கண்ணு சொருகுதே!" என்று கத்தினார்.

சமையல் கட்டுக்குள் துவையல் அரைத்துக் கொண்டிருந்த அவன் அம்மா, அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தாள்: மகன் படுத்திருந்த கட்டில் காலில் தலையை மோதிக் 

கொண்டே "என் ராசா! ஒனக்கு என்னடா பண்ணிட்டு, பண்ணிட்டு" என்று கதறிக்கொண்டிருந்தாள். அவன் தம்பி இருபத்திரண்டு வயது கனகராஜ் அண்ணனின் கைகால்களைத் தடவி விட்டுக்கொண்டே விம்மிக்கொண்டிருந்தான்.

தோட்டத்தில் இருந்து அவன் தலையை ஒருவர் தோளிலும் கால்களை இன்னொருவர் தன் தோளிலும் வைத்திருக்க நடுவில் இரண்டுபேர் தத்தம் கைகளால் அவன் முதுகையும் வயிற்றையும் சுமந்துகொண்டு பிள்ளையார் கோவில் வழியாக வந்தபோது அவர்கள் பின்னால் ஊரே திரண்டு வந்தது.

சொல்லமுடியாத கூட்டம். "வழி விடுங்கல... காத்து போகட்டும்" என்று சொல்லிக்கொண்டே ஐயாசாமி தாத்தா முண்டியடித்துக்கொண்டு முன்னே போனார். அவன் கையைப் பிடித்து "நாடி" பார்த்தார். "நாடி விழுந்து கிட்டே இருக்கு சீக்கிரமா ஆஸ்பத்திரிக்குத் தூக்குங்க” என்றார்.

"அதுவரைக்கும் தாங்காதே மாமா!" என்றார் ஒருவர்.

"ஆமாம் இன்னும் பத்து நிமிஷத்துல என்ன பண்ணனுமோ! அதைப் பண்ணிடனும் இல்லன்னா..."

ஐயாசாமி சொல்லவந்ததை முடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தபோது, வைரமணியின் மனைவி லிங்கம்மா தோட்டத்தில் 'ஒடிச்ச' அவுத்திக்கீரைகளைத் தோளில் வைத்துக்கொண்டு பரக்கப்பரக்க விழித்தவாறு அங்கே மெதுவாக வந்துகொண்டிருந்தாள்.

"எதையும் தின்னுருப்பானா?"

"இருக்காது: விஷத்தைக் குடிக்சிருந்தா! இதுக்குள்ள உயிரு போயிருக்கும். ஏதாவது கடிச்சிருக்கும்... வாயிலே கூட நுரை வருது பாருங்க”



'பாம்பு’ என்ற வார்த்தையை 'ஏதாவது' என்ற புற்றுக்குள் ஒளித்து வைத்துப் பேசியவர் மீண்டும் "இன்னா அவன் வீட்டுக்காரியே வந்துட்டா! அவள் கிட்ட கேளுங்க", என்றார்.

இதற்குள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த அம்மாக்காரி "புருஷன் துள்ளத் துடிக்கக் கிடக்கான். நீ அவுத்திக் கீரையை வச்சிக்கிட்டு. ஆடி அசைஞ்சா வார... சண்டாளி. ஒன்ன என்னைக்குக் கைப்பிடிச்சானோ அன்னைக்கே என் பிள்ளை அர உயிரா ஆயிட்டான். காளியம்மா இந்த மூளியலங்காரி மூதேவி சண்டாளியத் தந்துட்டு நான் பெத்த மவன எடுத்துக்கிட்டுப் போகப் பாக்கியே... இது ஒனக்கே நல்லா இருக்கா? நல்லா இருக்கா?" என்று அழுகுரலை அதிகமாக்கினாள்.

"தோட்டத்தில் என்னம்மா நடந்தது?" என்றார் ஒருவர். லிங்கம்மா பேசாமல் இருந்தாள்.

"சொல்லித் தொலையேம்மா... ஒன்னையும் கூட்டிக் கிட்டு தோட்டத்துக்கு நல்லாத்தானே போனான். என்ன நடந்தது... மூதேவி... வாயில கொழுக்கட்டையா வச்சிருக்க . சொல்லித் தொல... இல்லன்னா... வெள்ளச் சேல கட்டணும். சொல்லேன். நாய்ப்பய மவள..." என்றார் அப்பாக்காரர். மகன் நிலைமை மேலும் மோசமானதால் அவளைத் திட்டுவதை விட்டுவிட்டு, பெற்ற பிள்ளையின் முகத்தைப் பார்த்துக்கொண்டே ஏங்கி ஏங்கி அழுதார்.

லிங்கம்மாவை இரண்டு பேர் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவள் பரக்கப் பரக்க விழித்தாளே தவிர, பதில் சொல்லவில்லை. புலன் விசாரணை செய்தவர்கள் கோபத்தை அடக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்த போது ஐயாசாமி தோன்றினார்.

"பேய்ப் பய மக்கா... அவள் 'கூறுதான்' ஒங்களுக்கே தெரியுமே... அவளப் போயி மிரட்டுனா எப்படி? போங்கல. போயி வைத்தியரக் கூட்டிக்கிட்டு வாங்க! லிங்கம்மா

பயப்படாதே. நீ நல்ல பொண்ணு. ஒன் புருஷன் தோட்டத்துல என்ன பண்ணினான்? சொல்லும்மா என் ராசாத்தி, சும்மாச் சொல்லு. அட ஒன்னத்தாம்மா! சொல்லு. நீ சொன்னாத்தான் அவனைக் குணப்படுத்த முடியும்! என்ன பண்ணுனான்?"

"பாத்தி போட்டுக்கிட்டு..."

"சரி! பாத்தி போட்டுட்டு... என்ன தின்னான்?"

" எதையோ தின்னாரு... பச்சை நிறத்துல, உருண்டை உருண்டையா!"

"நீ என்ன பண்ணுன?"

"எனக்கு ஒண்னு தாங்கன்னேன். "

"தந்தானா?”

"இல்ல! உன் வேலயப் பாருன்னு கத்துனாரு.'

"அவன் தின்னது தங்கரளிக்கொட்டையா? இல்ல... வேற எதுவுமா?’’

"நான் சரியாப் பாக்கல.

வைரமணிக்கு நுரை அதிகமாகத் தள்ளிக்கொண்டே போனது. வைத்தியரைத் தேடி ஒருவர் பின் ஒருவராக நான்கைந்து பேர் போய்விட்டனர்.

'மயினிக்காரி' பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த தம்பிக்காரன் கனகராஜால் தாளமுடியவில்லை. வெறிப் பிடித்தவன்போல் லிங்கம்மாவின் முடியைப் பிடித்துக் கொண்டு கன்னத்திலும் முதுகிலுமாக அடித்தான்.

"செருக்கி மவளுக்குப் புத்தி இருக்கா? கட்டுன புருஷன் செத்துக்கிட்டுகிடக்கான். என்ன தின்னான்னு பாக்கலியாம். புருஷன் மேல அவ்வளவு அக்கறை."

ஐயாசாமி அடித்தவனுக்கு ஒரு அறை கொடுத்துவிட்டு "ஒனக்கு அறிவிருக்கா? அவள் சங்கதிதான் தெரிஞ்ச விஷய மாச்சே! போடா... அந்தப் பக்கமா" என்றார்.



 "விடும்மாமா. அவன்கூட இவளையும் சேத்துப் புதைக்கணும். புருஷன் தலைவிரி கோலமா கிடக்கான். இவள் இன்னும் இந்த அவுத்திக்கீரையைக் கீழே போடாம நிக்கிறத பாரும்!' 
கனகராஜ் ஐயாசாமியை ஒரு பக்கமாகத் தள்ளிவிட்டு, லிங்கம்மாவைக் காலால் மிதித்தான். அவன் சக்தி வாய்ந்த கால் இடுப்பில் பட்டதால், அப்படியே சுருண்டு விழுந்த விங்கம்மா சிறிதுநேரம் அசைவற்று இருந்துவிட்டு, பிறகு சிதறிக் கிடந்த அவுத் திக்கீரைகளை எடுத்துக்கொண்டிருந் தாள்.
கனகராஜ் மேலும் அடித்திருப்பான். ஐயாசாமியைத் தவிர வேறு யாரும் அவனைத் தடுத்திருக்க மாட்டார்கள். அதற்குள் வைரமணி அந்த அரைக்கண் மயக்க நிலையிலும், தன் சட்டைப்பைக்குள் விரலைக் கொண்டு போனான். உடனே ஒருவர் அவன் பைக்குள் கையை விட்டார்.
"தங்கரளிக்கொட்டையைத் தின்னுருக்கான்."
"இருபது... இருபத்தஞ்சு முட்டையை உடச்சு.... வெள்ளக்கருவை மட்டும் எடுத்துக்கொடுங்க. ஒரு நொடில முறிச்சிடும். சீக்கிரமாக் கொண்டு வாங்க."
ஒவ்வொரு வீட்டிலும் 'உறி'யில் வைக்கப்பட்டிருந்த முட்டைகள் அங்கே குவிந்தன.
வைத்தியர் ஒரு பச்சிலையை ரகசியமாக வைத்துக் கொண்டு வரும்போது, 'சச்சுவேசன் வைத்தியர்' கொடுத்த யோசனையில் வைரமணிக்கு முட்டைகள் உடைக்கப்பட்டு வெள்ளைக்கரு வாயில் ஊட்டப்பட்டது. பத்து நிமிடத்தில் உரை வருவதும், கண் சொருகுவதும் நின்றுவிட்டன. ஆள் பிழைத்துவிடுவான் என்ற நம்பிக்கையில் பலர் பேசத் துவங்கினார்கள். எல்லோருக்கும் அவன் தற்கொலை செய்துகொள்ளப் போனதற்குரிய காரணம் தெரியும். இருந்தாலும் அதை வெளிப்படையாகக் கூறாமல் தீர்ப்பு களை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

"நீ எதுக்குடா சாவணும்? ஆம்பிள ஆயிரம் பொண்டாட்டி கட்டிக்கலாம்."

"பொண்டாட்டி பிடிக்கலன்னா இன்னொரு பொண்டாட்டி கட்டிக்கறது. இதுக்குப் போயி... பைத்தியக்காரன்... என்ன மாமா நான் சொல்றது?"

'என்ன மாமா'வான மாயாண்டி இரண்டு பெண்டாட்டிக்காரர் மட்டுமல்ல. இதனால், ஆப்பசைத்த குரங்கு மாதிரி ஆனவர், ஆகையால் தன்னை விழித்து, தன் அங்கீகாரத்திற்காகச் சொல்லப்பட்ட வார்த்தையால், சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்தவர்போல் பேசினார்.

"ஏண்டா உனக்கு இந்தப் புத்தி? பொண்டாட்டி என்கிறவளும் ஒரு மனுஷிதானே. கட்டினவளுக்குத் துரோகம் பண்ணப்படாது. ஒருத்தியைத் தாலி கட்டிட்டு இன்னொருத்தியை வச்சிக்கலாமே தவிர கட்டிக்கக்கூடாது."

"நீரு கிடயும், எல்லாம் எங்க பெரியப்பாவால வந்தது. சரியான லூஸைக் கட்டிவச்சிட்டாரு. இன்னும் இந்த வீட்ல என்னெல்லாம் நடக்கப்போவுதோ."

ஐயாசாமியால் பேசாமல் இருக்க முடியவில்லை. வைர மணியின் நாடியைப் பார்த்துக் கொண்டே "ஏய் லிங்கம்மா! இங்க வாம்மா, உன்னோட தாலி பாக்கியத்தால தான் இந்தப் பயல் பிழைச்சிக்கிட்டான். இல்லன்னா இவன் இவ்வளவு தின்னதுக்கு எப்பேர்ப்பட்ட டாக்டராலும் காப்பாத்த முடியாது. உன் தாலி கெட்டியான தாலி தான். அங்கே ஏம்மா நிக்கிற? அவுத்திக்கீரையைப் போட்டுட்டு வா. வாம்மா இவன் காலைப் பிடிச்சுவிடு."

லிங்கம்மா அவுத்திக்கீரையைப் பிரிய மனமில்லாதவள் போல் தயங்கி வைத்துவிட்டு, புருஷனின் கால்களைப் பிடித்து விட்டாள். கூட்டத்தினர் ஏதோ ஒருவித குற்ற உணர்வின் சுமை தாங்கமாட்டாதவர்கள் போல் நழுவிக் கொண்டிருந்தார்கள்.

 வைரமணியின் குடும்பம், அந்தக் கிராமத்தில் வசதியுள்ள பிறருக்குக் கடன் கொடுக்கக் கூடிய நிலையில் உள்ள குடும்பம். அவன் தந்தை 'வழக்காளி.' வெளியூர்களில் இருந்து கூட 'விவகாரம்' பேசுவதற்காக அவரை 'வில் வண்டி'யில் வைத்து அழைத்துப் போவார்கள். பிறர் மனதில் இருப்பதைப் பக்குவமாக வரவழைத்துத் தெளிவாக 'பைசல்' செய்வார். அப்படிப்பட்டவர் மகனுக்குப் பெண் பார்த்தபோது, 'அய்யா' சொல்லுக்கு அடுத்த சொல் சொல்லாத வைரமணியும், பெண்ணைப் பார்க்க வேண்டு மென்று ஜாடை மாடையாகக் கூடச் சொல்லவில்லை.

ஆனால்-

மணமேடையில் அவன் பெண்ணைப் பார்ப்பதற்கு முன்னதாகவே "போயும்... போயும் இவள் தானா கிடைச்சாள்" என்று சொந்தக்காரர்கள் அவனிடம் பேசத் துவங்கினார்கள். இதனால் பாதி உயிர் போனவன் போல் துடித்த வைரமணி, பெண்ணைப் பார்த்ததும் முழு உயிரும் போனவன்போல், தலைக்குமேல் வெள்ளம் போன இயலாமையில் ஒரு ஜடமாகவே உட்கார்ந்திருத்தான், அவனைச் சுற்றி ஏதோ ஒரு வேடிக்கை நடப்பதுபோலவும், அவனுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாதது போலவும் அவனை அறி யாமலே அவன் மனம் பாவித்துக் கொண்டது.

அவனவள்-அது தான் லிங்கம்மாவும் அசைவற்று உட் கார்ந்திருந்தாள். குச்சிக் கால்கள்; குச்சிக் கைகள் ; முற்றிப் போன டி. பி. நோயில் விழுந்தவள் போன்ற உடல்; குறுகிப் போன கழுத்து, லேசாகக் கூன் விழுந்த முதுகு; உள் நோக்கிப் பாய்ந்த கண்கள், நெற்றி எது. தலை எது என்று அடையாளம் காண முடியாத தலை.

திருமணம் முடிந்த மூன்று மணி நேரத்தில் அவள் தோற்றத்தில் மட்டுமல்ல, குணபாகத்திலும் குறைவான வள் என்பது பிள்ளை வீட்டாருக்கு நிரூபணமாகியது.

அவள் யாரிடமும் பேசமாட்டாளாம். ஒரு கேள்வியை மூன்று தடவை கேட்டால், லேசாகத் தலையை ஆட்டுவாளாம். அதட்டிக் கேட்டால்தான் பதில் சொல்லுவாளாம். உட்கார்ந்த இடத்தில் ‘பிடித்து வைத்த பிள்ளையார்’ மாதிரி, அசைவற்று உட்கார்ந்திருப்பாளாம். அதே நேரத்தில், அவளால் யாருக்கும் எந்தவிதமான தீமையும் ஏற்படாதாம். தெருவில் நடக்கும்போதுகூட, அவள் ஒருத்தியைத் தவிர, உலகத்தில் எதுவுமே இல்லாதது மாதிரியே போய்க் கொண்டிருப்பாளாம்.

அப்படி இப்படியாகச் சேகரித்த இந்தத் தகவல்கள் அவனிடம் கூறப்பட்டபோது அவன் அதிர்ச்சியடைய முடியாத பேரதிர்ச்சியில் மூழ்கிப் போயிருந்தான். முதலிரவிலேயே அவளைப் பற்றிய சங்கதிகள் அத்தனையும் உண்மை என்பதையும் புரிந்துகொண்டான்.

அறைக்குள் போன அரைமணி நேரத்திற்குள். அவன் அழுதுகொண்டே வெளியே வந்து படுத்துக்கொண்டான். அவன் தந்தையால் அவனை நேருக்கு நேராகப் பார்க்க முடியவில்லை. இன்னொரு ‘வழக்காளி’யை நம்பிப் பெண்ணைப் பார்க்காமல் மோசம் போய்விட்டோமே என்று தனக்குள்ளேயே குமைந்துகொண்டார்.

ரிரு மாதங்கள் ஓடின.

ஊரில் உள்ளவர்கள் வைரமணியிடம் துக்கம் விசாரிக்கத் துவங்கினார்கள். ‘மாடசாமி நாடார் மவன் வைரமணி. மாதிரில்லா இருக்கணும்’ என்று ஒரு காலத்தில் சொன்ன தந்தைமார்களிடம் ‘நான் பொண்ணப் பாக்காமக் கட்ட முடியாது. அப்புறம் வைரமணிக்கு வந்தது மாதிரித்தான் முடியும்’ என்று இளைஞர்கள் வாதாடினார்கள்

அந்த ஊரில் வைரமணியின் கதை, நல்லதங்காள் கதை. பஞ்சபாண்டவர் வனவாசம் மாதிரி மேற்கோள் காட்டப்படும் அளவுக்குப் போய்க்கொண்டிருந்தது. மகன் மனதுக்குள் வெந்துகொண்டிருப்பதை அறிந்த மாடசாமி நாடார், ‘வழக்கு’ பேசப் போவதையும் நிறுத்திவிட்டு, தனக்குள்ளேயே அடிக்கடி வழக்குப் பேசிக்கொண்டார்.

வைரமணி ஒரு முடிவுக்கு வந்தான். ‘இரண்டாவது கல்யாணம்.’ அம்மாவிடம் தனக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்று அரைகுறை வார்த்தைகளால் அவன் சொன்னபோது, “அன்னைக்கு எழுதுனத அடிச்சி எழுத முடியுமா? உன் தலையெழுத்து அப்படி ஆயிட்டு... சட்டியா பானையா... மாத்தரதுக்கு” என்று சொல்லிவிட்டாள்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் வைரமணி தோட்டத்துக்குப் போய், அங்கே தங்கரளி மரத்தில் இருந்த காய் ளைப் பறித்துத் தின்றுவிட்டான். தீராத பிரச்னைக்கு தற்கொலை முயற்சியை ஒரு தீர்வாக நினைத்தான்.

ஒரு வாரம் ஆகியிருக்கும். ஒருவாறு தேறி, மீண்டும் தோட்டத் துறைகளுக்குப் போகத் துவங்கினான். அவனுடன் அவன் தம்பிக்காரனும் மெய்க்காவலாளன் போல் போய்க்கொண்டிருந்தான் அண்ணன் மொச்சைக் கொட்டையைத் தின்றால்கூட, “காட்டு பார்க்கலாம்” என்று கட்டாயப்படுத்துவான்.

இதற்கிடையே இன்னொரு நிகழ்ச்சி.

வைரமணியின் அம்மா இன்னொரு ஊரில் ‘துஷ்டி’ கேட்கப் போயிருந்தாள். அவன் அப்பா உடம்பெல்லாம் வீங்கி, படுத்த படுக்கையாகக் கிடந்தார். லிங்கம்மாவைக் ‘காவலுக்கு’ வைத்துவிட்டு அண்ணன், தம்பி இருவரும் வயலுக்குப் போயிருந்தார்கள். திரும்பி வந்து பார்த்தால் மாடசாமி நாடார் கால் கை விறைத்துப்போய், வாயில் ஈக்கள் மொய்க்கக் கிடந்தார். லிங்கம்மா, கட்டிலில் சாய்ந்து கூரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அவர் இறந்திருக்க வேண்டும்.

கொஞ்ச நேரம் "அய்யா அய்யா" என்று அழுத வைரமணி, "நீயில்லாம்... ஒரு பொம்பிளையா... செத்துப் போயிருக்காரு. அதக்கூட அக்கம்பக்கம் சொல்லணுமுன்னு தெரியலியா? நீயும் அவரோடப் போயிடு" என்று சொல்லி பயங்கரமாக அடித்து, முதன் முறையாக அவளைத் 'தொட்டபோது' தம்பிக்காரன் அவனைப் பிடித்துக்கொண்டான். பிறகு மயினிக்காரியைக் கையைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தான். மரியா தியா ஒப்பன் வீட்டப் பாத்துப் போயிடு. நீ இங்க... ஆவாது என்று சொல்லிவிட்டு, ஒரு பையனிடம் கையில் பத்து ரூபாயைக் கொடுத்து. லிங்கம்மாவை பிறந்த வீட்டில் கொண்டு போய் விட்டுவிடும் படிச் சொல்லிவிட்டான்.

போகிறோமே என்று வருத்தப்படாமலும், போகச் சொல்லி விட்டதற்காகச் சந்தோஷப்படாமலும் லிங்கம்மா பஸ் ஏறினாள். ஒருவேளை, அவள் மனதுக்குள் ஏதேனும் நடந்து கொண்டிருந்ததோ... என்னவோ?

வைரமணி மீண்டும் வயல் வரப்புக்குப் போகத் துவங்கியபோது, அவன் அம்மாக்காரி கிட்டத்தட்ட படுத்த படுக்கையாகிவிட்டாள். இதுவரை 'ரெண்டாவது கல்யாணம் நம்ம குடும்பத்து பழக்கமல்ல' என்று வாதாடியவள். "நொண்டியோ... மூக்கரையோ... நம்மள சதமுன்னு வந்ததை நாம தள்ளி வைக்கலாமாய்யா?" என்று எதிர்க் கேள்வி கேட்பவள், இப்போது "நான் கண்ண மூடுமுன்ன நீ ஒரு நல்ல பொண்ண கல்யாணம் பண்றதப் பாக்கணும்" என்று அடிக்கடி சொன்னாள்.

வைரமணிக்கும் அம்மா சொல்வது நியாயமாகவே பட்டது. 'அம்மா பிழைக்கணுமுன்னா நாம ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கணும்' என்று அவன் புறமனம், அடிமன அபிலாஷையை நாகரிகமாக வெளிப்படுத்தியது. 'பொண்ணு இருக்கா... பொண்ணு இருக்கா'ன்னு தண்டோரா போட்டால் கூட விஷயம் அப்படிப் பரவியிருக்காது. ஏற்கனவே வைரமணி கதையை வாசித்துக்கொண்டிருந்த ஊரார்கள், இந்தப் புதிய அத்தியாயத்தைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பினார்கள், "சே ஒரு பொண்ண தள்ளி வச்சிட்டு இன்னொரு பொண்ணு வாழணுமா?" என்று நினைத்துக்கூடப் பார்க்காமல் பல பெண் வீட்டார் போட்டியிட்டார்கள்.

வெளியூர் என்றாலே கிலி பிடித்துப் போன வைரமணி உள்ளூரில் ஏழைக் குடும்பத்துப் பெண் ஒருத்தியை மணக்கச் சம்மதித்தான், நல்ல அழகு, நல்ல குணம்.

நிச்சயதாம்பூலமும் ஆகிவிட்டது.

இதற்கு முன்பு கல்யாணம் என்ற ஒன்று நடக்காதது மா திரி, ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்தன. பந்தலுக்கு அட்வான்ஸ்: மேளத்துக்கு அட்வான்ஸ்; ஆக்கிப் போடுபவர்கள்- இப்படியாக தினமும் இரண்டு கட்டு வெற்றிலை செலவாகும் அளவிற்கு சதா ஏதாவது ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருந்தது.

திருமணத்திற்கு ஒரு நாள் இருந்தது.

வைரமணி 'டெய்லரிடம்' சட்டைக்கு அளவுஅகொடுத்துக்கொண்டிருந்தவன் தேள் கொட்டியவன் போல் துள்ளிக் குதித்தான்.

லிங்கம்மாவும் அவள் தந்தையும் வந்துகொண்டிருந்தார்கள். வைரமணி ஆத்திரத்தோடு ஏதோ பேசப் போனான். ஆனால் மாமனார் வரும்போதே பேசிக்கொண்டு வந்தார்.

"ஒங்க கல்யாணத்தை நிறுத்தறதுக்காக வர்ல மாப்பிள்ள. நான் கோர்ட்டுக்குக் கூடப் போயி உங்கள ஜெயிலுல போட முடியும். ஆனால் நான் செய்யப்போறதில்ல. ஏன்னா உங்க நிலைமை எனக்குப் புரியுது. இவ

ளோட அம்மா எட்டாவது வயசில இறந்துட்டா. ஊருப்பயலுவ பேச்சைக் கேட்டு ரெண்டாவது கல்யாணம் பண்ணுனேன். அந்தப் பாவி பிள்ளையை அதட்டி அதட்டியே உருப்படாமப் பண்ணிட்டா. எட்டு வயசு வரைக்கும் ஓடுற பாம்பைப் பிடிக்கிற மாதிரிதான் இந்தப் பய மவள் இருந்தாள், இவள் தலையெழுத்து நான் ரெண்டாவது பண்ணிக்கிட்டேன்.

ஒங்க நெலைமையிலே யாரு இருந்தாலும் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கத்தான் செய்வாங்க! அதை நான் தப்புன்னு சொல்லல. ஆனால் இவள என் வீட்ல வைக்க முடியல. அன்னாடு குத்துப்பழி, வெட்டுப்பழிதான். இவள, எனக்கு 'வாச்ச' கைகேயி கைநீட்டி அடிக்கிறத என் கண்ணால பார்த்ததுக்கப்புறமும் நான் உயிர் வாழ்றேன்னா நான் ரோஷங் கெட்டவனாகத்தான் இருக்கணும்.

அதனால மாப்பிள்ளை, நீரு மகராஜனா கல்யாணம் பண்ணிக்கிடும், ஆனால் இவளையும் இங்கேயே வச்சிக்கிடும். அடிச்சாலும் சரி, அணைச்சாலும் சரி ஒம்ம இஷ்டம். ஒங்க வீட்ல எத்தனையோ மாடுக இருக்கு. ஆடுங்க இருக்கு. அதுலே இவளையும் ஒண்ணா நெனச்சி கஞ்சி ஊத்தும்: ஒம்ம மேல் எனக்கு எந்தவித கோபமும் கிடையாது. வரேன் மாப்பிள்ள, வரேன் மாப்பிள்ள... வரேன் லிங்கம்மா!"

மாமனார் போய்விட்டார், லிங்கம்மா அய்யா போவதைக்கூடத் திரும்பிப் பார்க்காமல் புருஷனுக்கு அருகே போய் நின்றாள். வைரமணிக்கு என்னவோ போலிருந்தது.

ரவு வேளை வந்தது. விடிந்தால் திருமணம்.

முற்றத்தில் போடப்பட்டிருந்த பந்தலில் உள்ளூர் மேளம் வெளியூருக்கும் கேட்கும்படி ஒலித்துக்கொண்டிருந்தது. வைரமணி புது வேட்டி, சட்டை கட்டி, துண்டை எடுத்துத் தோளில் போடப்போனபோது ஐயாசாமி தாத்தா  வந்தார். இந்தத் திருமணம் தேவையா, தேவையில்லையா என்று சொல்ல முடியாத நிலையில் இருந்தார். 'முன்னால் போனால் கடித்து, பின்னால் போனால் உதைக்கும்' இந்தக் 'கழுதைப் பய விஷயத்துல' அவரால் ஒரு திட்டவட்டமான முடிவுக்கும் வர முடியவில்லை. எப்படியோ மாப்பிள்ளைகளை சுடலை மாடசாமி கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போகிறவர் அவர் தான். கைராசிக்காரர் என்பதோடு சுடலையாண்டி அவர் பிரார்த்தனையைத் தட்டமாட்டான் என்று ஊரார் மட்டுமல்லாமல் அவரும் நம்பினார். அந்த நம்பிக்கையில் மாப்பிள்ளையை அதட்டினார்.

"முட்டாப்பய மவன! துண்டை தோளுல போடா தடா! ஓடுப்பில எடுத்துக்கிட்டுக் கோவிலுக்குப் பணிவா போவணும்! இல்லன்னா மாடன் கோவிச்சுக்குவான். ஆமாம் மாலை எங்சேடா?"

"உள்ள இருக்கு."

"உள்ள என்னடா சத்தம்?"

"அவதான்!"

"அவன்னா யாரு?"

"என் சம்சாரம்-- வைரமணி தலையைக் குனிந்து கொண்டான்.

"லிங்கம்மாவா! அதுவும் நல்லத்துக்குத் தான். ஏய் லிங்கம்மா! அந்த மாலையை எடுத்துக்கிட்டு வாம்மா... வா நேரமாவுது."

லிங்கம்மா மல்லிகைச் சர மாலையைக் கையில் ஏந்திக் கொண்டு வந்து நின்றாள், முகத்தில் எந்தவித சலனமுமில்லை. ஐயாசாமி தாத்தா அழுகையை அடக்கிக் கொண்டார்.

"உன் புருஷன் கழுத்திலே நீயே மாலையைப் போடு." போட்டாள். மாலையோடு கையையும் அவன் தோளில் வைத்துக்கொண்டு அதை எடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் நின்றாள்.

"லிங்கம்மா எதுக்கு மாலை போடுறேன்னு தெரியுமா? சொல்லும்மா, உன்னத்தாம்மா எதுக்கு?"

"அவியளுக்குக் கல்யாணம்.

"நாளைக்கு நீ அவங்க ரெண்டுபேருக்கும் திருநீர் பூசணும். அவங்க நல்லா இருக்கணுமுன்னு சாமியைக் கும்பிடணும். சரிதானே சொல்லும்மா."

"சரிதான்."

லிங்கம்மா மீண்டும் உள்ளே போய்விட்டாள், ஐயா சாமி, வைரமணிக்குத் தெரியாமலும், வைரமணி ஐயா சாமிக்குத் தெரியாமலும் தத்தம் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள் .

"மாமா!"

"என்னடா ராஜா?"

"அவளையும் கோவிலுக்குக் கூப்பிடும்."

"இல்ல நீரே கூப்பிடும்."

"லிங்கம்மா உன்னத்தாம்மா... நீயும் கோவிலுக்கு வா, வாம்மா! சீக்கிரம்... நாழியாவுது."

உள்ளே ஏதோ சத்தம் கேட்டதே தவிர அவள் வரவில்லை. என்னமோ ஏதோன்னு வைரமணி உள்ளே போனான்.

லிங்கம்மா பூனைக்குட்டி ஒன்றை மடியில் எடுத்து வைத்திருந்தாள். வெளி வீடுகளில் சுற்றாமல் அங்கேயே முடங்கிக் கிடக்கும் வெள்ளை முதுகும் மஞ்சள் கழுத்தங் கொண்ட அழகான சின்னக்குட்டி. அதன் காலில் ஏதோ ஒரு காயம், லிங்கம்மா சோற்றை அந்தப் புண்ணில் அப்பி, ஒரு துணியை' எடுத்து அதன் மேல் கட்டிக்கொண்டிருந்தாள். வைரமணி அவளையும், அந்தப் பூனைக் குட்டியையும் மாறி மாறிப் பார்த்தான். போனவனைக் காணாமல் ஐயாசாமியும் அங்கே வந்தார்.

"பாத்தியாடா! அவள் பூனைக்குட்டியை எவ்வளவு பாசமா வச்சிருக்கா! இவளுக்குப் பாச பந்தமே இல்லன்னு நினைச்சது எவ்வளவு பெரிய தப்பு பாரு! அவள் மனசுல பாசம் இருக்கு. ஆனா வாயுள்ள பிராணிங்ககிட்டே அதைக் காட்ட பயந்துக்கிட்டு வாயில்லாப் பிராணிங்ககிட்ட காட்டுறா. எல்லாம் மாடன் செயல். சரி சரி. நேரமாயிட்டு புறப்படு."

"அவளைக் கூப்பிடும் மாமா!"

"லிங்கம்மா எழுந்துரு, கோவிலுக்குப் போவலாம்."

லிங்கம் மா பூனைக்குட்டியை மடியில் வைத்துக் கொண்டே புறப்பட்டாள்.

"பூனைக்குட்டிய கீழே விடும்மா. கோவிலுக்கு அது வரக்கூடாது. சீக்கிரமா விடு."

லிங்கம்மா விடவில்லை. அந்தப் பூனைக்குட்டி இல்லாமல் கோவிலுக்குப் போக விரும்பாதவள் போல் மீண்டும் கீழே உட்கார்ந்தாள். அதை அவர்கள் பிடுங்கிவிடுவார்கள் என்று பயந்தவள் போல் குட்டியை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள். அதன் கால் புண்ணில் வாயால் ஊதினாள்.

வைரமணி அந்த வாயில்லாப் பிராணியையும் வாயுள்ள பிராணியையும் பார்த்துக்கொண்டே நின்றான். அப்போது ஒலி பெருக்கியில் 'ஆயிரத்தில் ஒருத்தியம்மா' என்ற பாடல் ஒலித்தது.

வைரமணி நெஞ்சைப் பிடித்துக்கொண்டே சிந்தித்தான்.

'இந்தப் பச்சைக் குழந்தையைத் தள்ளிவிட்டு, இன்னொரு வயது வந்தவளைப் பிடித்து வாழவேண்டியது அவசியந்தானா? பூனைக்குட்டிக்கு அடைக்கலம் கொடுத்த அவளுக்கு யார் அடைக்கலம்? இந்த ஊரில் இருப்பவர்கள் வேலை பார்ப்பது, கல்யாணம் செய்வது, பிள்ளை பெறுவது, வயல் தோட்டங்களை விற்பது அல்லது வாங்குவதைத் தவிர வேறு எதைக் கண்டார்கள்? எத்தனையோ பேர் வாழ்ந்துவிட்டுப் போன இந்த ஊரில் என்ன மிஞ்சி இருக்கு?

நாம ஏன்... இவளோட வாழக்கூடாது? 'மாடசாமி நாடார் மவன் மாதிரி மாட்டிக்க மாட்டோமு'ன்னு சொல்லுற இளைஞர்களிடம், 'மாடசாமி மவனப் பாருங்கல... கிடைச்சவள வச்சிக்கிட்டு எவ்வளவு சந்தோஷமா இருக்கான்' என்று ஊர்க்காரர்கள் சொல்லும்படி நாம ஏன் முன்னுதாரணமா வாழக்கூடாது?

தென்காசிக்குப் போயிருக்கும்போது, கிருபானந்த வாரியாரோ கிருஷ்ணவாரியாரோன்னு ஒருவர், நளாயினி, குஷ்டரோகம் பிடிச்ச புருஷனைக் கூடையில் சுமந்ததாகச் சொன்னாரே, நாம ஏன், குணரோகம் பிடிச்ச இவள திருத்தக்கூடாது?

வீட்டு நாய்கிட்ட, அது நாயுங்கறதுக்காக ஆசை வைக்காமலா இருக்கோம்? இவளும் ஒரு மனுஷிதான். 'இளையோடியா' கிட்ட அவஸ்தபட்டதுல மிரண்டு போயிருக்காள். இன்னொரு கல்யாணம் பண்ணி அவள்கிட்டேயும் இவள் அவஸ்தைப்படணுமா? இவள் அவஸ்தையிலே கிடைக்கிற கல்யாணம், அதுலகிடைக்கிற சுகம் ஒரு சுகமா?

பிறந்தாலே சாவு இருக்குன்னு அர்த்தம். சாவப்போற நாம ஏன் அதுவரைக்கும் இவளுக்காக வாழக்கூடாது? நமக்குப் பேசின பொண்ண ஏன் தம்பிக்குக் கட்டி வைக்கக் கூடாது? அப்படித்தான் செய்யணும்.

சிந்தித்துக் கொண்டிருந்த வைரமணியின் தோளைத் தட்டி "நேரமாவுதுடா'" என்றார் ஐயாசாமி.

"மாமா... ஒங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும். நீங்க தான், தம்பிகிட்ட பேசி... அவனைச் சம்மதிக்க வைக்கணும்..."

ஐயாசாமி அவனை ஆச்சரியமாகப் பார்த்தார்.

வைரமணி ஐயாசாமி தாத்தாவின் கண்களை முதன் முதலாக நேருக்கு நேராகப் பார்த்தான், அவனுக்கே தான் ஒரு 'பிடி' அதிகமாக வளர்ந்துவிட்டது போன்ற எண்ணம் ஏற்பட்டது. மார்பு பரிசுத்தமாக நிமிர்ந்து நிற்பதுபோன்ற ஒரு பெருமிதம். மூச்சு எந்தவித இடர்ப்பாடுமில்லாமல் கம்பீரமாக விரிவது போன்ற உணர்வு. சாதாரணமான மனிதர்களைவிட, தான் அசாதாரணமானவன் என்கிற நினைப்பு. ஏதோ ஒருவித தியாகத்தினால், இழப்பு ஏற்படாமல் இன்பம் ஏற்பட்டிருப்பது போன்ற தெம்பு. வாழ்க் கையில் முடியாமல் நிற்கும் ஆன்மாவை அடையாளம் கண்டு கொண்ட ஞானோதயம். வாழ்வின் முழுப் பொருளையும் அறிந்து கொண்டது போன்ற ஒரு தெளிவு.

வைரமணி சொல்லச் சொல்ல, ஐயாசாமி தாத்தாவால் தன் மகிழ்ச்சியையும் கண்ணீரையும் அடக்க முடியவில்லை. "ஏல, கனகராஜ் ஓடியாடா, ஓடியாடா" என்று சொல்லிக் கொண்டே பிள்ளை இல்லாத அந்த வீட்டில், தாத்தா துள்ளி விளையாடிக் கொண்டிருந்தார்.

வைரமணி லிங்கம்மாவை புதிய பாசத்தால் புன்னகை தவழ பார்த்துக் கொண்டே இருந்தான்.

அப்போது-

லிங்கம்மா தன் தோளில் நகத்தை வைத்துச் செல்லமாகப் பிராண்டிக் கொண்டிருந்த பூனைக்குட்டியை பொய்க் கோபத்தோடு பிடிப்பதற்கு முயற்சி செய்தாள்.

அந்தப் பூனைக்குட்டியும் அவளுக்குச் சளைக்காதது போல், அவள் கழுத்தில் தொங்கிய மங்கல நாணை வாயால் கௌவி, மகிழ்ச்சியோடு சேலைக்கு மேலே கொண்டுவந்து வைரமணிக்குக் கம்பீரமாகக் காட்டிக் கொண்டிருந்தது.