இன்னொரு உரிமை/பெங்களுர் தெரஸா



பெங்களுர் தெரஸா

ர்நாடகத் தலைநகரில்-அதன் முதல் சொல்லுக்கு எதிர்மாறான பகுதி. கலைச்செல்வமிக்க பண்டைய திரைப் படங்களைப் பேணிக்காக்கும் பாதாமி இல்லத்திற்கும், நிஜச் செல்வம் கொழிக்கும் பல்மாடி அங்காடிக்கும் இடையே சிக்னல் விளக்குகள், விலங்குகளின் இரவுக் காலக் கண்கள் போல மின்னின. குறுக்குச்சால் ஒட்டும் சைக்கிள்களில் இருந்து, அகலக் கால் விரிக்கும் பஸ்கள் வரை புலியின் உறுமலுடன், பூனையின் பெளவியத்துடன் ஒட்டப்பந்தய தளத்தில் ஆயத்த நிலையில் நிற்கும் 'பி. டி. உஷாக்களைப் போலப் பரபரத்து நின்றபோது

ஒரு வரிசை வண்டிகளின் நடுப்பகுதியில் அந்த அரசாங்க அம்பாஸிடர் காரில் ஒட்டுநர் இருக்கையில் உட்கார்ந்திருந்த லிங்கையா எதையும் நோக்காமல் தனக்குள் தன்னையே நோக்கிக் கொண்டிருந்தான்.

அவன் மனச்சாட்சி தன் பக்கமும், மனைவியின் பக்கமும் பெண்டுலம்போல் ஆடியது. இந்த எட்டாண்டுக் கால சர்விஸில், கடந்த ஐந்தாண்டு காலமாக- அதாவது இப்போதைய அதிகாரி பதவியேற்ற பிறகு ஒவ்வொரு ஞாயிற்றுக் ஒழமையும், பெரும்பாலான அரசாங்க விடுமுறை நாட் களிலும் அதிகாரியின் வீட்டுக்குக் காரோடு போய், அவரின் மனைவி மக்களைச் சுமந்துபோவதையும், அரிசி மூட்டை, மளிகைச் சாமான்கள் அடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்தான்.

 அந்த வீட்டில் அதிகாரியின் இடத்தை அவர் மனைவி ஆக்கிரமித்துக்கொண்டதுடன், தன் உறவினர்கள் முன்னிலையில் அவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காக லிங்கையாவை கால் கடுக்கக் காக்க வைப்பதையும், கன்னாபின்னா என்று திட்டுவதையும், அவள் பிள்ளைகள் கூட, 'டேய் லிங்கையா' என்று கூப்பிடுவதையும் தன் புது மனைவியிடம் உளறி விட்டான்.

அவ்வளவுதான். அவள் அவனுக்கு ஆணையிட்டுவிட்டாள். 'திட்டு வாங்குவதற்கு அவள் அதிகாரி-புருஷன் இருக்கப்போ ஒங்களுக்கு என்ன தலைவிதியா’ என்று கேட்ட தோடு, இனிமேல் அரசாங்கப் பணி நாட்களில் எப்படித் தொலைந்துபோனாலும் விடுமுறை நாட்களில், அவன் அதிகாரி வீட்டுப் பக்கம் தலையைத் திருப்பக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள்.

புது மனைவியின் கண்டிப்புக்கும், பழைய அதிகாரியின் 'முறை வாடிக்கைக்கும்' இடையே அல்லாடிய விங்கையா, நேற்று அதிகாரி, 'நாளைக்குக் காலையிலேயே வந்துடுப்பா, என் வீட்டுக்காரி மாமியார் வீட்டுக்குப் போகணுமாம்’ என்று சொன்னபோது, இனிமேல் லீவு நாளையிலே எல்லாம், எனக்கு வேலை இருக்கும் லார்’ என்று பயந்து பயந்து சொன்னான். அதிகாரி அவனைப் பயமுறுத்துவதுபோல் பார்த்தாரே தவிர. எதுவும் பதில் சொல்லவில்லை.

இப்போது லிங்கையாவுக்கு உதறல் எடுத்தது. அந்த அதிகாரி தொலை தூரப் பகுதியான குல்பர்காவிற்கோ பிஜாப்பூருக்கோ தன்னை மாற்றிவிடப்படாதே. ஒரு அதிகாரி நினைத்தால், ஏதாவது ஒரு காரணத்தைக் கற்பித்து சஸ்பெண்ட் செய்துவிடலாமே!

ஸ்டியரிங்கில் குப்புற முகம் சாய்த்தபடி கிடந்த லிங்கையா, 'காக்கா குருவி' போன்ற காச்சி மூச்சி சப்தத் களைக் கேட்டுத் திடுக்கிட்டான். ஒருத்தன் 'சைடில்' ஆட்டோவை விட்டபடியே 'ஏய்... மவனே' என்றான்.

முன்னால் பார்த்தான். பல்வேறு வாகனங்கள். மஞ்சள் நிறம் மாறும் முன்பு, குறுக்கு நடைபாதையைக் கடக்கப் பறந்துகொண்டிருந்தன. பின்னால் பார்த்தான். ஏராளமான வாகனங்கள் அவன் காரை இடிக்காத குறையாய் ஹார்ன் சப்தங்கள் மூலம் நச்சரித்துக்கொண்டிருந்தன. லிங்கையா, முன்னால் ஒடிய வாகனங்களை இடைவெளி கொடுக்காமல் எட்டிப் பிடிக்கும் நோக்கத்துடனோ என்னவோ... வேகவேகமாய்க் காரை ஒட்டி, சாலையின் மத்தியில் முள்வேலிபோல் வெள்ளைக் கோடுகள் போட்ட நடைபாதையைத் தாண்டப் போனபோது-

திடீரென்று காரின் முன்னால் தோன்றிய ஒருத்தி, 'எம்மா' என்ற கத்தலுடன் பின்பக்கமாய் விழுந்தாள். காரின் வலதுபக்கம் மல்லாந்து கிடந்தாள். வலது காலில் பலத்த அடி. கண்ணில் போட்டிருந்த கண்ணாடி சுக்கல் சுக்கலாகிப் பரவிக் கிடந்தது. அவள் 'எம்மா... எம்மா...' என்று மெல்ல முனங்கி, 'என் பிள்ளிங்க... என் பிள்ளிங்க' என்று பெரிது பெரிதாய் ஊளையிட்டு, ஒடப்போகிற உயிரைப் பிடிக்கப் போகிறவள்போல கைகளைத் தலைக்கு மேல் கொண்டுபோய் அங்குமிங்குமாய் ஆட்டினாள்.

விங்கையா வண்டிக்குள் சிறிதுநேரம் மரத்துப் போய்க் கிடந்தான். வாகனங்களில் போனவர்கள் அவற்றை நிறுத்தாமலே அவனை வைதபடியே ஒட்டம் பிடித்தார்கள். நடைபாதை வாசிகள் சாலையின் ஒரு பக்கத்தை அடைத்தார்கள். அந்த அம்மாவை அனுதாபத்துடனும், அவனைக் கோபமாகவும் மாறி மாறிப் பார்த்தார்கள். 'ஒ. சர்க்கார் காரா.. அதான்' என்று அரசு டிரைவராக செலெக்டாக முடியாமல் போன ஒருத்தன் உறுமினான். லிங்கையா சுதாரித்துக் கொண்டான்.

அடிபட்டவளைச் சூழ்ந்த கூட்டத்தை விலக்கியபடி உள்ளே போனான். வலியால் துடித்த வலதுகாலை இரு கரத்தால் ஏந்தியபடியே 'என் பிள்ளிங்க... என் பிள்ளிங்க...'

 என்று தலையை அங்குமிங்குமாய் ஆட்டியபடி உழன்ற வளை காலோடு தலையாய் வாரியெடுத்து, பிளாட்டாரச் சுவர்ப் பக்கம் கொண்டுபோய் சுவரில் சாத்தினான்.

அவளை உற்றுப் பார்த்தான். ஐம்பது வயதிருக்கலாம். வெள்ளைப் பார்டர் போட்ட கறுப்புச் சேலை. நிர்மலமான கண்கள். பெங்களுர் நகருக்கே உரிய மிளகாய்ப் பூ போன்ற மூக்கு. 'நான் யாருக்கும் எதுவும் செய்யலியே’ என்பதுமாதிரி எல்லோரையும் பார்த்தாள். பிறகு, 'எம்மோ... எம்மோ...' என்று வலது கால் வாதையை இடது காலைச் சுண்டியிழுத்து கட்டுப்படுத்த முயற்சித்தாள். இந்த முயற்சியோடு முயற்சியாய் 'என் பிள்ளிங்க...என் பிள்ளிங்க’ என்ற வார்த்தைகள் உச்சரிப்புப் பெற்றன.

லிங்கையா வாதைப்பட்ட அவள் வலது காலை லேசாய்ப் பிடித்தான். அவள் வீறிட்டுக் கத்தியபடியே மீண்டும், 'என்... பிள்ளிங்க... என் பிள்ளிங்க' என்றாள். லிங்கையாவுக்கு அவளைப் பார்க்க பார்க்க இளமையில் காலமான தன் தாயைத் தரிசித்ததுபோல் தோன்றியது. வாய் தடுமாற, நெஞ்சம் நெகிழ அழாத குறையாய்ப் பேசினான்.

"கவலைப்படாதீங்கம்மா. உங்களுக்குப் பெரிசாய் எதுவும் ஆகலம்மா..."

"என் பிள்ளிங்க... என் பிள்ளிங்க..."

"நானும் உங்களுக்கு ஒரு பிள்ளை மாதிரிதாம்மா. என் உயிரை விற்றாவது உங்களைக் காப்பாத்துவேம்மா! "

அவள் லிங்கையாவை உற்றுப் பார்க்கிறாள். அத்தனை வாதனையிலும், அவள் உதட்டில் லேசான புன்னகை.

விங்கையா அவளைத் துாக்கிக் காரின் பின்னிருக்கையில் இடத்தினான். கார்க் கதவை மூடிவிட்டு, இருக்கையில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்யப்போன போது, 

"டேய்... அவங்களை நீ காப்பாத்தலாம். ஒன்னை யாருடா காப்பாத்துறது" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான். வண்டிக்கு முன்னால் போக்குவரத்துப் போலீஸ்காரர்.

லிங்கையா வெலவெலத்தான். அவரோ, "உன் பேரு என்னய்யா. எத்தனை வருஷமாய் வண்டி ஒட்டுறே? எத்தனை தடவை கோர்ட்ல அபராதம் கட்டியிருக்கே? சொல்லுடா எல்போர்டு !"

"ஸார்! மொதல்ல இவங்களை ஆஸ்பத்திரியில சேர்க்கணும். வாதையில் துடிக்கிறதைப் பாருங்க."

"அது எனக்குத் தெரியும். அடிபட்டவங்களைக் கவனிக்காமல் அடித்தவனைக் கவனிக்கறதுதான் போலீஸ்டுட்டி. புரியுதா! இந்தாங்கம்மா ஒங்க பேரு என்னம்மா?’’

அவள் தயங்கினாள். கான்ஸ்டபிள் முகம் கடுக்கக்கேட்டார்.

"என்னோட டுட்டியைச் செய்யவிடுங்கம்மா! உங்க பேரு என்னம்மா? அட்ரஸ் என்னம்மா?’’

"என் பிள்ளிங்க... என் பிள்ளிங்க."

"அவங்களைக் கூட்டிவரத்தான் கேக்கேன்!"

"தெரேஸா... சிவாஜி நகர்ல."

லிங்கையா கான்ஸ்டபிளைக் கையெடுத்துக் கும்பிட்டான்.

"ஸார் ஏற்கனவே ஒரு கேஸ் இருக்குது ஸார்! குடித்து விட்டு மோட்டார் பைக்குல வந்த ஒருத்தன் என் கார்லே மோதித் தன்னோட கையை முறிச்சுக்கிட்டான். போலீஸ் என்மேலேயே கேஸ் போட்டிருக்கு! இந்தக் கேஸாம் சேர்ந்தால் வேற வினையே வேண்டாம். கோர்ட் மன்னிச்சாலும் என்னோட டிபார்ட்மெண்ட்லே மன்னிக்காது ஸார்!

 நான் கார் தொழிலாளி, நீங்க போலீஸ் தொழிலாளி. நீங்களும் ஏழை, நானும் ஏழை. ஏழைக்கு ஏழை உதவா விட்டால் வேற யார் ஸார் உதவுவாங்க?"

கான்ஸ்டபிள் டிரைவர் லிங்கையாவை ஏடாகோடமாய்ப் பார்க்கத் துவங்கி இறுதியில் அந்தப் பார்வையை இரக்கத்தோடு முடித்தார்.

"இந்தா பாருப்பா! உன்னைக் காப்பாத்தறதுக்காக என்னைச் சாகடிச்சுக்க முடியாது. ஆனாலும் மனசு கேட்கலை. உன்னோட வேலையில் கோளாறு பண்ண விரும்பல. அதனால இந்தம்மாவை உடனடியாய் ஏதாவது நிர்ஸிங் ஹோம்லே சேர்த்துடு. ஆக்ஸிடெண்டுன்னு சொல்லாதே! எடுத்துக்கமாட்டாங்க! ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாதே! போலீஸுக்குப் போன் போடுவாங்க!"

லிங்கையா, அவரைக் கையெடுத்துக் கும்பிட்டபடியே, காருக்குள் வந்தான். வலதுகாலைக் குறுக்காய் மடிக்க முடியாமல் அல்லாடிய தெரேஸாவை, நேருக்கு நேராய்ப் பார்க்க முடியாமல், அவன் சாய்வாய்ப் பார்த்தான். ஒரு வார்த்தைகூட 'அடப்பாவி, இப்படிச் செய்திட்டியேடா’ என்று சொல்லாத அவளை அதிசயித்துப் பார்த்தான். அவளோ, "என் பிள்ளிங்க... என் பிள்ளிங்களைப் பார்க்கணும். அங்கே கொண்டு போப்பா! அய்யோ என்ன மாய் வலிக்குது. என் பிள்ளிங்க!" என்று அரற்றினாள். லிங்கையா நினைத்ததைத்தான் சொன்னான்.

"நானும் உனக்குப் பிள்ளைதாம்மா!"

அவனைப் பார்த்த அவள் கண்களில் ஒரு மின் வெட்டு: உயரமாகிக் கொண்குருந்த உதட்டோரம் ஒரு புன்னகை. வலியை மறைக்கும் வலிய வந்த குறுநகை.

லிங்கையா நீர் கொண்ட கண்களோடு வண்டியை பலமாக இயக்கினான்.

வழியில் முதலில் தோன்றிய பிரம்மாண்டமான அந்த நர்ஸிங் ஹோமின் முன்னால் வண்டியை நிறுத்தினான்" அதன் போர்ட்டிக்கோவே. இரும்புத் தூண்களும் யந்திர வாகனங்களுமாய் பெரிய அரண்மனைபோலத் தோன்றியது.

லிங்கையா, கைத் தாங்கலாகக் கொண்டுவந்த தெரேலாவைப் பார்த்த டெலிபோன் மங்கை 'இவளுக்கென்ன இங்கே வேலை' என்பதுமாதிரி பக்கத்தில் நின்ற ஒருத்தியின் இடுப்பைக் கிள்ளி அவர்களைச் சுட்டிக்காட்டினாள். இந்தச் சமயத்தில் ஒரு டாக்டர் அந்தப் பக்கமாய் வந்தார். லிங்கையாவை அதட்டிக் கேட்டார்.

"ஒ ஆக்ஸிடெண்ட் கேஸா? கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போ! போலீஸோடு நாங்க மாரடிச்சது போதும். உம், சீக்கிரமாய் போப்பா!"

லிங்கையாவுக்கு நாடி நரம்புகள் அடங்கிப்போயின. கடைசியில் போலீஸ் கேஸ்தானா? வேலை பறிபோய். வீதியில் நிற்க வேண்டியதுதானா? அந்த அம்மா அவன் தோளோடு தோளாய் நிற்க முடியாமல் ஊசலாடினாள். "வலிக்குதே, வலிக்குதே" என்று வேதனையோடு கத்தினாள் லிங்கையாவின் மனத்தில் ஒர் உத்தி.

இப்போது இந்த அம்மாவைக் குணப்படுத்த வேண்டியது தான் முக்கியமே தவிர வேலையில்லை போலீஸ் கேஸானாலும் பரவாயில்லை என்பதுபோல் அவளை மார்போடு மார்பாய்ச் சுமந்து கார்ப் பக்கம் போனபோது அவர்களை வினோதமாய் பார்த்தபடியே ஒரு வார்ட்பாய் எதிர்த் திசையில் இருந்து வந்தான். லிங்கையாவுக்கு ஒரு நைப்பாசை. கேட்டுவிட்டான்.

"இந்த அம்மா என் காரில் அடிபட்டுட்டாங்க! நீதான் இவங்களை எப்படியாவது இங்கே சேர்க்கணும் தம்பி!"

"என்னப்பா நீ! பெரிய பெரிய பங்களாக்காரங்களுக்கே இங்கே இடம் கிடைக்காது. அதோடு ஆக்ஸிடெண்ட் கேஸ். அதோடு நான் வெறும் வார்ட்பாய்!"

"ஆஸ்பத்திரிகளில் வார்ட்பாய் ஆதிக்கம்தானே தம்பி அதிகம். நீயும் ஏழை; நானும் ஏழை; இந்தம்மாவும் ஏழை. ஏழைக்கு ஏழை உதவப்படாதா? இவங்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தால் அரசாங்க டாக்டர்களால் இவங்க கால் போயிடும்! போலீஸ் கேளானால் என் வேலை போயிடும். எப்படியாவது உதவு தம்பி பணத்தைப்பற்றிக் கவலையில்லை. என் பெண்டாட்டிகிட்டே தங்க நகை பத்து பவுன் வரைக்கும் இருக்குது."

வார்ட்பாய், லிங்கையாவை உற்றுப்பார்த்தான். காக்கி யூனிபாரத்தில் கண்ணீர் வழியக் கசங்கிப்போயிருந்த அவனைப் பார்த்ததும் அவனுள் ஒரு பச்சாதாபம் ஏற்பட்டது.

“ஒரு காரியம் பண்றேன்! ஆறாம் நம்பர் ரூமுக்கு ஒசைப்படாமல் கொண்டு வா! டெக்னிஷியன்கிட்டே எப்படியாவது சொல்லி எக்ஸ்ரே எடுக்க வச்சுடுறேன். டாக்டருங்க கருமிப் பசங்க எக்ஸ்ரேக்கு காசு வசூலிக்கதுக்காவது அம்மாவை அட்மிட் செய்துடுவாங்க!”

வார்ட் பாய் தன் பாட்டுக்கு நடந்தான்.

அரைமணி நேரத்திற்குள் தெரேஸவிற்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. வலது காலில் முறிவு ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு பாண்டேஜூம் போடப்பட்டது. "எப்படி இந்தம்மா இங்கே?" என்று கத்திய டாக்டரிடம் "என்னைக் கேட்டால்?" என்று வார்ட்பாய் அமர்த்தலாய்ப்பதிலளித்து விட்டு தெரேஸாவை ஒன்பதாம் நம்பர் அறைக்குக் கொண்டு வந்தான். மாத்திரைகளைச் சாப்பிட்டதால் வாதை குறைந்த தெரேஸா லிங்கையாவிடம் கேட்டாள்.

"என்னவாம்?’’

 "வலதுகால் எலும்பு முட்டிக்குக் கீழே உடைஞ்சுட்டு தாம்மா! மூன்று மாதம் பெட் ரெஸ்ட் எடுக்கணுமாம். நான் பாவிம்மா! படு பாவிம்மா! என்னை மன்னிச்சிடுங்கம்மா!"

தெரேஸாவின் உதட்டோரம் மீண்டும் ஒரு புன்னகை.

"என் பிள்ளைங்களைக் கூட்டிவாப்பா அட்ரஸ் எழுதிக்கிறியா?"

தெரேஸா சொன்ன முகவரியைக் குறித்துக்கொண்ட லிங்கையா வெளியே வந்தான். டெலிபோன் பெண்ணுக்குக் கூழைக் கும்பிடு போட்டு அலுவலகத்திற்கு டெலிபோன் செய்து சமாசாரத்தைச் சொன்னான்.

சற்று நேரத்தில் காரியாலயத்திலிருந்து கார் ஓட்டத் தெரிந்த செளக்கிதார் நண்பன் வந்துவிட்டான். அவனிடம் விவகாரத்தைச் சுருக்கமாகக் கூறிவிட்டு தெரேஸாவின் பிள்ளைகளைக் கூட்டி வரும்படி முகவரியையும் கார்ச் சாவி யையும் கொடுத்துவிட்டு வெளியே போய் ஒரு பன்னீர் சோடாவுடன் தெரேஸாவின் அறைக்குள் வந்தான். தெரேஸா, குழந்தைமாதிரி கேட்டாள்.

"மூன்று மாதம் நடக்க முடியாதம்மே!"

லிங்கையா சோடாவை உடைத்து ஒரு குவளையில் ஊற்றி அவள் வாயில் சொட்டுச் சொட்டாய் விட்டான். "என்னை மன்னிச்சிடுங்க அம்மா!" தெரேஸா முகத்தில் ஒரு சின்னச் சிரிப்பு.

இந்தச் சமயத்தில்,

பூட்ஸ் சத்தங்களும், சலங்கைச் சத்தங்களும் கலவையான வினோத ஒலி கேட்டன. "அம்மா, அம்மா’’ என்ற அலறலுடன் இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் தெரேஸாவைச் சூழ்ந்தார்கள். குஸ்தி பயில்வான் மாதிரி தோன்றி யவன் அம்மாவின் தலையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டான். இன்னொருவன் அவள் காலைத் தூக்கி தன்

இடுப்போடு இணைத்துக்கொண்டான். இருபது வயது கொண்ட ஒருத்தி அம்மாவின் கையைப் பிடித்தபடி கதறினாள். இன்னொரு சிறுமி கீழே உட்கார்ந்து கட்டில் காலில் முகத்தை வைத்து மோதினாள். ஒரே ஒருத்தி மட்டும் மஞ்சள் கயிறு போட்டவள்-நிதானத்தை இழக்காமலே அழுதுகொண்டிருந்தாள். "அம்மா அம்மா" என்ற ஆண் பெண் கோரஸ் ஒலி பாசத்தின் பரிமாணங்களைக் காட்டும் வெளிப்பாடுகள். மொத்தத்தில் அந்த அறையே வாசலென்ற வாய்மூலம் ஓலமிடுவது போல் தோன்றியது.

எந்நாளும் இல்லாத இந்நாளில் ஏற்பட்ட சத்தம் கேட்டு டாக்டர்கள், நர்ஸ்கள் ஓடிவந்தார்கள், ஒரு ஏழைக் குடும்பத்தின் பாசப்பிடிப்பில் சிறிதுநேரம் கட்டுண்டு நின்றார்கள். பின்னர் அழுதவர்களை அதட்டினார்கள். அருகருகே இருந்த பணக்கார நோயாளிகள் கூடத் தட்டுத் தடுமாறி அங்கே வந்து ஆச்சரியமாகப் பார்த்தார்கள். இந்த நர்லிங்ஹோமில் எவராவது இறக்கும்போதுகூட இப்படிப் பட்ட அழுகை ஏற்பட்டதில்லை. பணம் ஏறஏறப் பாசம் குறையுமோ, நாகரீகம் படப்பட பாசமும் பட்டுப் போகுமோ.

லிங்கையா ஒடுங்கிப்போய், மூலையோடு மூலையாய் நின்றான். தெரேஸாவின் பையன்களைப் பார்க்கப் பார்க்க அவனுக்குப் பயமெடுத்தது. அம்மாவைப் பார்த்தே இந்த அழுகை அழுதவர்கள் அவனைச் சும்மாவா விடப் போகிறார்கள்?

அவன் எதிர்பார்த்ததுபோலவே, தெரேளாவின் மூத்த மகன் அம்மாவின் தலைமாட்டில் உட்கார்ந்தபடியே லிங்கையாவைச் சூடாகப் பார்த்தான். பிறகு, "நீங்கதான் டிரைவரா?" என்றான். லிங்கையா பட்டும் படாமலும் தலையாட்டியபோது, இன்னொருத்தனும் அந்தப் பெண்களும், அவனை ஒட்டுமொத்தமாகப் பார்த்தார்கள்.

லிங்கையா கூனிக் குறுகி ஏச்சுக்கும், ஒருவேளை உதைகளுக்கும் தன்னை ஆயத்தம் செய்தபடி கண்மூடி நின்றான். அரை நிமிடமாகியும் எதுவும் ஏற்படவில்லை. கண்ணைத் திறந்து பார்த்தால் பிள்ளைகள் மீண்டும் தெரேஸா அம்மாவைச் சூழ்ந்தபடி, ஆழ்ந்த கவலையோடு நின்றார்கள். அவனை ஒரு பொருட்டாகக் கருதாததுபோல அம்மாவின் காலை மட்டுமே பார்த்தபடி நின்றார்கள்.

லிங்கையா தன்னை மறந்து, அந்தக் குடும்பத்தைக் கையெடுத்துக் கும்பிடப் போனபோது-

ஜல்ஜல் சத்தத்துடன் துருத்திய வயிற்றோடு சோடா பாட்டில் கண்ணாடியுடன் ஒருத்தர் உள்ளே வந்தார், அவனுடைய அதிகாரி!

அவரைப் பார்த்ததும் அவரிடம் ஆறுதல் நாடி லிங்கையா, அழப்போன போது அவரே அதட்டினார்.

"கடைசியில் இவங்களையும் அடித்துப் போட்டுட்டியா. உன்னை இப்படியே விட்டால் இன்னும் எத்தனை பேரை சாகடிப்பியோ! இந்தாங்கம்மா, நடந்ததை ஒரு ஸ்டேட் மெண்ட்டாய் கொடுங்க. இவனையும் தீர்த்துக் கட்டிட்டு, உங்களுக்கும் டில்லிக்கு எழுதி, பத்தாயிரம் ரூபாயில் இருந்து இருபதாயிரம் ரூபாய் வரைக்கும் நஷ்டஈடு வாங்கித் தரேன். சூட்டோடு சூடாய் எழுதித்தாங்க. ஏய் லிங்கையா வேர் இஸ் யுவர் லாக் புக் மேன். இந்தாம்மா நீ எழுது. அம்மா கையெழுத்து போடும். இரண்டு மாதத்துல பணம் வந்துடும்."

தெரேஸா நிச்சயமாக ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் எந்தவிதச் சந்தேகமும் ஏற்படாமல் அதிகாரி, பூட்ஸ் காலைத் தூக்கித் தூக்கி அடித்த படி நின்றார்.

கதி கலங்கிப் போன லிங்கையா எந்தவித உணர்வையும் காட்டாமல் கிடந்த தெரேஸவையும் பார்த்தான்.

அம்மா, அம்மா’’ என்று மனதுக்குள் கூவியபடியே

அவளை கண்கள் கெஞ்சும்படி பார்த்தான், தெரேஸாவின் முகத்தில் பழைய மாதிரியான ஒரு புன்னகை. அரும்பாகி மொட்டாகி மலரான குறுஞ் சிரிப்பு.

திடீரென்று தலைமாட்டில் இருந்த தன் மகனை நகரும் படிச் சொல்கிறாள். அவன் நகர்ந்த இடத்தில் லிங்கையாவை அமரும்படி சைகை செய்கிறாள். அவனைப் பார்த்து லேசாய்க் கையை ஆட்டிச் சிரிக்கிறாள். அவனை தன் பிள்ளைகளோடு சேர்த்துச் சேர்த்துப் பார்க்கிறாள். தயங்கி நிற்கும் லிங்கையாவை நோக்கி, தாய்போலக் கையை நீட்டுகிறாள்.

லிங்கையா புரிந்துகொள்கிறான்.

அவளின் தலைப்பக்கம் போகாமல், கால் பக்கம் போகிறான். அவளின் இடது பாத விரல்களுடன், தனது வலதுகை விரல்களைச் சேர்த்துக்கொள்கிறான். 'நான் ஒனக்கு பிள்ளையோ... இல்லியோ... நீதான் எனக்கு அம்மா! நீயே எனக்கு அம்மா!' என்று விம்முகிறான். புன்னகை மாறாத தெரேஸாவிற்குக் கண்ணிரால் பாத பூஜை செய்கிறான்.