இன்னொரு உரிமை/பெண்மைக்கு முதுமை இல்லை
பெண்மைக்கு முதுமை இல்லை
அந்த வீட்டுக் காம்பவுண்ட் கேட்டைத் திறந்து மூடிய சத்தத்துடன் சத்தமாக பாட்டியின் கோபச் சத்தத்தையும் கேட்ட, ராமநாதன் தாத்தாவுக்கு பதில் கோபம் வர வில்லை. பதிலளிக்க வேண்டும் என்றும் தோன்றவில்லை. சந்தோஷம் தாங்காதவர்போல், அவர் தனது முதுகுபோல் முன்னுக்கு வளைந்த கைத்தடியைத் தூக்கி, சிலம்பம் ஆடப் போகிறவர்போல் லேசாய் சுற்றியபடியே பாட்டியையே பார்த்தார். “எப்பா... இந்த மாதிரி உறவுக்குக் கை கொடுத்து உரிமைக்குக் குரல் கொடுக்கும் இவளை இதே தோரணையில் பார்த்தும், கேட்டும் எவ்வளவு நாளாச்சு... பத்து வருஷம் இருக்குமா... கூடவே இருக்கும். எப்போ பேரன் பிறந்தானோ அப்பவே என்னை விட்டுட்டாள். கண்டுக்காம விட்டுட்டாள். அந்தப் பயலுக்கே இப்போ பன்னிரெண்டு வயசு.
தாத்தா, முன்னறையில் முக்கால் பகுதியை வியாபித்த சோபா செட்டில் உட்கார்ந்து கைகளை விரித்துப் போட்ட படியே பாக்கியம் பாட்டியைப் பார்த்தார். பாட்டி பொறிந்தாள். ஏதோ சேதி சொல்லப்போனவரை வழி மறித்துக்கேட்டாள்.
சி.-1 “நான் இங்க வெறுமையா கிடக்கேன். ரஞ்சித் கண்ணுக்குள்ளே நிக்கான். கண்ணப்பன் நெஞ்சுக்குள்ளேயே நிக்கான்.”
“ஒன் மருமகள்.”
“அவள்மேல இருந்த கோபம்கூட போயிட்டு. அவளையும் பார்க்கணும் போல தோணுது.”
“அப்போ பம்பாய்க்கு போயிட்டு வா! பிளைட்ல வேணும்னாலும் போ!”
“ஒங்கள இப்படி தனியா விட்டுட்டா.”
“எப்பா... இப்படிப்பட்ட வார்த்தயக் கேட்டு பன்னி ரெண்டு வருஷமாச்சு! வனவாசம் முடிஞ்சுட்டு, எனக்கும் புரிய வேண்டியது புரிஞ்சுட்டு; ஒனக்கும் தெரிய வேண்டியது தெரிஞ்சுட்டு.”
“டி.வி சினிமா பார்த்து ரொம்பத்தான் கெட்டுப் போயிட்டீங்க.”
தாத்தா, பாட்டியின் கையைப் பிடித்து இழுத்தார். அவளும், அது பொறுக்காதவள் போல் அவரருகே உட்கார்ந் தாள். தாத்தா அவள் மஞ்சள் கயிற்றைத் தூக்கிப் பிடித்து, அங்குமிங்குமாய் ஆட்டியபடியே எதையோ பாராமல் படித்து ஒப்பிக்கும் பள்ளி மாணவன் போல் ஒப்பித்தார்.
“ஆயிரம் பிள்ளை பெத்தாலும், ஐயாயிரம் பேத்தி எடுத்தாலும் முதல்ல இருந்து முடிவுவரைக்கும் புருஷனுக்குப் பெண்டாட்டியும், பெண்டாட்டிக்கு புருஷனும்தான் துணை என்கிறது எவ்வளவு நெசமாயிட்டு பாரு! இடையில வாரதுங்க இடையிலேயே போகுதுங்க. மகள் என்கிற செடிய பதியம் போட்டு எடுத்துட்டுப் போறாங்க! மகன் என்கிற கிளையை வேற இடத்துல நடுறாங்க, இது தெரியாமல், பேத்தியைப் பார்த்து புருஷன் பெண்டாட்டியை மறக்கான்! பேரனைப் பார்த்து பெண்டாட்டி புருஷனை மறக்காள். கடைசியில இந்த ரெண்டுபேரையும் பிள்ளைங் களும், பேரன் பேத்திகளும் மறக்கும் போதுதான்... வயசான புருஷனும் வயசான மனைவியும் ரெண்டாவது இல்லறத்தை துவக்குறாங்க. உடம்பு படாம உள்ளம் மட்டும் படுற இல்லறம், இளமையில போட்ட ஒத்திக முதுமையில நிசமாவுற...”
“நீங்க சொல்றது ஒரு வகையில சரிதான்... ஆனாலும் நீங்க நினைக்கறது மாதிரி நான் ஒங்களை மறக்கலியாக்கும். மகள்கள் வீட்டுக்குப் போனாலும் சரி, மருமகளை திட்டிக்கிட்டோ, இல்ல திட்டு வாங்கிட்டு நிற்கும்போதோ சரி, நீங்க நல்லா இருக்கீங்களான்னு ஒங்கள ஒரு பார்வ பார்ப்பேன். எங்கே “சுத்துறீங்க, தள்ளாத வயசு தாங்காதுன்னு கேட்கப் போவேன். அதுக்குள்ள நான் கேட்க நெனச்சத கண்ணப்பன் கேட்டுடுவான், நீங்க தொலவுல நின்னாலும் முன்னால நீங்க கொடுத்த நினைப்பாலேய ஓங்கள மான சீகமா என் பக்கம் இழுத்துப் பிடிச்சு விடாம இருந்தேனாக்கும்.”
“நீ தப்பா நெனக்காட்டால் நான் ஒண்னு சொல்லட்டுமா...”
“பழைய மாதிரியேதான் பேசுறீங்க.”
“அதாவது நல்லதுலயும் ஒரு கெட்டதுண்டு, கெட்டதுலயும் ஒரு நல்லதுண்டு... நம்ம பையனும், மருமகளும் பேரன் பேத்திகளோட பம்பாய் போன இந்த ரெண்டு நாளா வீடே சூன்யமா, தெரியுறது நிசந்தான். ஆனாலும் பன்னிரண்டு வருஷத்துக்குப் பிறகு இந்த ரெண்டு நாளாத் தான் நாம பழையபடியும் மனம் விட்டு அன்னியோன்னியமாய்... என்னப்பா அப்டி முறைக்கே!”
“முதல்ல கண்ணாடிய மாத்துங்க, நான் ஒன்னும் முறைக்கல! சிரிக்கப் பார்க்கேன், அழுக வருது! அழப்பாக்கேன், சிரிப்பு வருது!” "ஒன் முகத்த முழுசா பார்க்கதுக்காவது கண்ணாடிய மாத்தணும். பட்... இந்த பவருக்குமேல கண்ணாடியே கிடையாதாம். இந்தச் சனியன சும்மா மூக்கும் காதும் வெறுமனே சுமந்திட்டு இருக்கு."
"இனிமேல் வாக்கிங் கீக்கிங்கின்னு போமாட்டிங்களே? கச்சேரி அரட்டைன்னு சுத்தமாட்டீங்களே!"
"படிப்படியா குறைச்சுடுறேம்பா! படிப்படியா என்ன இப்பவே, இந்த நிமிஷத்துலயே உன் பார்வை படுற இந்த தெருவையே குறுக்கும் நெடுக்குமா நடப்பேன். வெள்ளிக் கிழமை மட்டும் மயிலை கபாலீஸ்வரன் கோவிலுல நம்ம அப்பனையும் அம்மனையும் பார்க்க அலோ பண்ணணும்."
"ஒங்கள ரொம்பத்தான் முடக்கிப் போடுறேனோ... செயிலுல வைக்கதுமாதிரி வைக்கேனா."
"இல்லப்பா... நீதான் என் கபாலிச்சரம்! நீதான் என் அம்மன்! நீதான் என் வாக்கிங் ஸ்டிக்! நிசமாத்தாம்பா சத்தியமாப்பா."
தாத்தாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் மோவாய்கள் உரசும்படி சொல்லி வைத்தது போல் பார்த்தார்கள். எழுபது வயது தாத்தா அறுபதைத் தாண்டிய பாட்டியை நாற்பதாண்டுகளுக்கு முன் நிறுத்திப் பார்த்தார். அந்தப் பார்வையோடு பார்வையாக, அந்தக்கால கண்ணாடியில் பார்த்துக் கொண்ட தனது முகத்தையும் கண்ணாடி இல்லாமல் பெருமிதமாகப் பார்த்த தன் உடம்பையும் இப்போது அவை மாறாது இருப்பதுபோல் அனுமானித்தபடியே பாட்டியைப் பார்த்தார், பயித்தங்காய் போன்ற கலையம்ச விரல்கள் முக்கால் வட்டமாகவும், கால் செவ்வகமாகவும் உள்ள உருண்டு திரண்ட வித்தியாசமான அதேசமயம் அழகான முகம். இதோ சிரிக்கப்போகிறாள்... என்பது மாதிரியான உதட்டுக் குவியல். பேசப்போவது சரியாய் இருக்குமா என்பதுபோல் அங்குமிங்குமாய் பார்க்கும் குழந்தைத் தோரணை.கீழே குதித்து விழப்போவது போன்ற கண்கள்... அவர் அவளை நெருங்கும்போதெல்லாம், சுற்றுச் சூழலை, தலையைச் சுற்றிப் பார்த்து “வேண்டாம்... இப்போ வேண்டாம்” என்று மெல்ல முனங்கியபடியே, முகத்தை கழுத்தோடு சேர்த்து இரண்டு தோள்களுக்கும் மேல படும் படி தலையாட்டும் லாகவம் கடிகாரப் பெண்டுலம் மாதிரி.
பாட்டியை அந்த அழகுக் காலத்தில், இருத்தி வைத்து விட்டு, பிறகு இந்த இறுதிக் காலத்திற்குக் கொண்டு வந்த தாத்தாவிற்கு, இப்போதும் அவள் அழகாகவே தெரிந்தாள். முகம், கொட்டைப்பாக்கு மாதிரி சுருங்கிப்போனாலும், அந்த மூக்கு மட்டும் இன்னும் முகத்துக்கே மூக்குத்திபோல் மின்னியது. தாத்தாவுக்குத்தான்.
தாத்தா, கடந்த காலத்திற்குள் மூழ்கி, முத்துக்களையும், சொத்தைகளையும் கொண்டு வந்தார். முத்துக்கள் அவரை முறுவலிக்க வைத்தாலும், சொத்தைகள் அவரைத் துளாவித் துளாவி கேட்க வைத்தன.
“இப்போ நினைச்சாக் கூட சங்கடமா இருக்கு. ‘பாக்கி’ சில சமயம் நானும் ஒன்ன படாதபாடு படுத்தியிருக்கேன்.'”
“இல்ல... இல்லவே இல்ல... விரல் விட்டு சொல்லுங்க.”
“என்னப்பா மறந்துட்டியா... சிந்தாதிரிப் பேட்டையில பால்காரன் வீட்ல நாம ஒரு போர்ஷன்ல இருக்கப்போ, பெரிய பெண் வயித்துல இருந்தாள். மூணுமாசம். எங்கம்மா ஏதோ சொன்னத்துக்கு நீ திருப்பிக் கத்துனே. அம்மா என்னைக் கையாலாகாதவன்னு திட்டுனாள். உடனே பட்டுன்னு ஒன் கன்னத்துல... நான் நடந்துகிட்டதே சொல்றதுக்கே வெட்கமா இருக்கு!”
“நீங்களாவது என்ன அடிக்கறதாவது சிந்தாதிரிப் பேட்டையில இல்ல, மயிலாப்பூர்ல! நீங்க லேசா கைய தூக்குனீங்க... உடனே கன்னத்த நேரா நிமுத்துனேன். உடனே ஒங்க கைய கதவுல வச்சு அடிச்சீங்க... அப்புறம் நைட்ல 'நல்லபடியா' இருக்கப்போ என் கையத் தூக்கி ஒங்க கன்னத்துல அடிச்சீங்க... இடத்த மாத்துனாலும் கதைய மாத்தப்படாது!"
"அது அப்புறம். மயிலாப்பூர்ல இல்ல அடிக்க வந்தது: திருவல்லிக்கேணில. அடிச்சது சிந்தாதிரிப்பேட்டையில."
"ஒங்களுக்கு வயசாயிட்டுதா... நெனவு குழம்பிட்டு... என் ராசா, என்னை அடிச்சிருக்கார்... பிடிச்சிருக்கார்... கடிச்சிருக்கார். ஆனால் எல்லாமே தாபத்துலதான்கோபத்துல இல்லை."
"சரி போவட்டும். ஒருதடவ சினிமாவுக்குப் புறப்பட்டோம். நீ டிரஸ் பண்ண டயம் எடுத்தே, நான் கரடியா கத்தியும் பிரயோசனம் இல்ல. உடனே நான் சினிமாவும் வேண்டாம். கினிமாவும் வேண்டாம்னு ஆபீஸைப் பார்த்து போயிட்ட காலத்துல பெத்த பிள்ளிங்கதானே பேரண்சுக்கு வசதிகள்... எப்படியோ பம்பாய் வசதியாய் இருக்குன்னு போயிட்டான். எனக்கும் பாக்கிக்கும் மனது கேட்க மாட்டக்கு... பம்பாய்க்கு அவனோட செட்டிலாயிட்லா முன்னால், அவன் கூப்புடல. ஒகே... ஏய் பாக்கியம் இன்னுமா கிட்சன் வேல முடியல?"
"பாக்கியம்மா! காபி கிடக்கட்டும், மொதல்ல வாங்க!"
பாக்கியப் பாட்டி வெளிப்படவில்லை. ராமநாதன் தாத்தா பாஸ்கரத் தோழனின் தோளில் கையூன்றியபடியே எழுந்து நடந்தார். சமையலறையில் பாட்டி இல்லை. பக்கத்து அறையை பரபரப்பாக எட்டிப் பார்த்தார். உள்ளே ஒரு கட்டிலில் பாட்டி குப்புறக் கிடந்தாள். மோவாய் கட்டில் சட்டத்தில் இடிக்க, தலையில் முக்காடு போட்ட படி கிடந்தாள். தாத்தா பயந்துபோனார்.
"ஏய்! என்னம்மா ஆச்சு..." "ஒரே தலைவலி. எழுந்திருக்க முடியல!"
"யார் வந்திருக்கா தெரியுமா!"
"தெரியும். ஆனால் யாருக்காகவும் என்னால் எழுந்திருக்க முடியாது."
"சரி அவன கூட்டிட்டு வாறேன்"
"ஒங்களத்தான்... நில்லுங்க! யாரையும் நான் பார்க்கிறாப்போல இல்ல. ஒருத்ர கூட்டிட்டு வந்து அவமானப் படுத்தாதீங்க!"
ராமநாதன் தாத்தா தட்டுத்தடுமாறி பாஸ்கரத் தாத்தாவிடம் வந்து உளறுகிறார்.
"பாஸ்கரா... அவளுக்கு உடம்பு சரியில்லயாம்! அய்யய்யோ நான் போய் பார்க்கணும்."
"வேண்டாம். அந்த இடியட்... நீ இப்போ பாக்காண்டாம். ஒன் அட்ரஸைக் கொடு. நானே வாறேன்."
பாஸ்கரத் தாத்தா எழுந்தார், அவருக்கு எதுவுமே புரியவில்லையானாலும் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றங்களாய் பெற்ற அனுபவத்தில் ராமநாத சிநேகிதனை முதுகில் தட்டிக்கொடுத்தபடியே வெளியேறினார். அவர் கேட்டைத் தாண்டுவது வரைக்குக்கூட பொறுமை இல்லாத வீட்டுத் தாத்தா பாட்டியிடம் வேகவேகமாய் வந்தார், அவள் இன்னும் குப்புறக் கிடந்தாள்.
"ஏண்டி, கூஸ்... ஆயிரந்தான் உடம்புக்கு வரட்டும். வீடு தேடி வந்த ஒரு வயசான மனுஷன், அதுவும் என் பிராண சிநேகிதனை ஒரு வார்த்த உபசரிக்க முடியாமலா போயிட்டு..."
"சொன்னது மறந்துட்டோ ..."
"அவன் என்ன சொன்னான். நான் என்ன சொன்னேன்!" இப்போ இல்ல... அப்போ... 1954ம் வருஷம் ஜனவரி பொங்கல் நாளு. டில்லிக்குப் போயிட்டு மத்தியானமா வந்தீங்க. நான் காபியக் கொடுத்துக்கிட்டே "பாஸ்கர் எப்படி இருக்கார். பெண்டாட்டிய கிராமத்துல விட்டுட்டு டில்லில ஹோட்டலுல சாப்பிடுறாரே... உடம்பு இளைச் சிருக்குமேன்னு கேட்டேன். நீங்க என்ன சொன்னீங்க!"
"எனக்கு எதுவுமே ஞாபகத்துக்கு வரலே!"
"எப்படி வராமப் போகும்? "என்னடி வந்ததும் வராததுமா அவனையே கேட்கிறே! இங்க இருக்கும்போது தான் கேட்டே! அங்கே போன பிறவுமான்னு கேட்கக் கூடாத குரலுல கேட்டிங்க. நீங்க அப்படிக் கேட்கும்போது நம்ம கண்ணப்பன் அப்... அப்னு உங்களப் பார்த்து தவழ்ந்து வாரான். ரெண்டாவது மகள் குழந்தைய தன் சடைய வச்சே செல்லமா அடிக்காள். உடனே மூத்தவள் தம்பிய தூக்கமுடியாமத் தூக்கிட்டு தங்கச்சிய அடிக்கப் போறாள். அப்போதான் நீங்க கேட்டது. ஒருத்தர அண்ணன்னு சொல்லாட்டா... அவரு அண்ணன்னு இல்லன்னு அர்த்தமா... இப்போ எந்த முகத்த வச்சுட்டு கூப்பிடுறீங்க!"
"அப்போ அவன் போட்ட லட்டருங்கள..."
"நான்தான் கிழிச்சேன்னு வச்சுக்குங்களேன்."
ராமநாதன் தாத்தா அதிர்ந்துபோனவர்போல், நிலை குத்திப் பார்த்தார். கால்களை ஒன்றின்மேல் ஒன்றாகத் தேய்த்தார். ஈரம் பட்ட மூக்குக் கண்ணாடியை துடைத்த படியே வெளியே வந்தார். அவரும் ஒரு குற்றவாளிதான்.
அந்தச் சம்பவம் அவருக்கு ஞாபகம் வரவில்லையா னாலும், அப்படிப்பட்ட ஒரு அரைகுறை எண்ணம் வந்தது நிசந்தான். அதிகமாகவும் இல்லை... அதிக நாளாகவும் இல்லை. ஆனால் பாட்டிக்கு...
பெண்ணுக்கு முதுமை உண்டு. ஆனால் பெண்மைக்கு ஏது?