இயல் தமிழ் இன்பம்/நன்னூலும் நடைமுறை இலக்கணமும்

21. நன்னூலும் நடைமுறை
இலக்கணமும்

இலக்கணம் என்றால் என்ன?

இயற்கையாக - தானாக ஓடும் ஆறு, கண்டபடி ஓடி எதையும் சிதைக்காதவாறும் அதன் நீரும் வீணாகாதவாறும், இடைக் காலத்தில் மக்களால் செயற்கையாக இரு பக்கமும் கட்டப்பட்ட கரைகள் போன்றதாகும் மொழிக்கு இலக்கணம். இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் என்பது அறிந்த செய்தி. மக்களின் பேச்சு வழக்குதான் இலக்கியமாகும். அப்பேச்சு வழக்கு பின்னர் எழுத்து வடிவம் பெற்றது.

பேச்சு வழக்கு, தொடக்கத்தில் கரையின்றி ஓடும் ஆறு போல் ஊருக்கு ஊர் சிதைந்து வேறுபட்டிருந்தது. அதையொட்டி எழுத்து வடிவிலும் சிதைவு காணப்பட்டது. இந்நிலைமையை எண்ணிப் பார்த்த அறிஞர் சிலர், கண்டவர் கண்டபடி பேசுதலும் எழுதுதலும் கூடா; மொழியை இப்படித்தான் பேச வேண்டும் - இப்படித்தான் எழுத வேண்டும் - என்று பொதுவான சில விதிகளை அமைத்தனர். ஆறு செவ்வனே ஓடும்படி இடப்பட்ட கரை போல, மொழி செவ்வனே இயங்கும்படி வகுக்கப்பட்ட விதிகளே இலக்கணம் என்னும் பெயர் பூண்டன.

பயன்

மேலும் மேலும் மொழி சிதையாமலும் பிரியாமலும் இருக்க உதவுவது இலக்கணம்; மொழியைப் பிழையறப் பேசவும் எழுதவும் துணை புரிவது இலக்கணம்; இலக்கியங்களைச் சுவைத்து இன்புற உதவுவது இலக்கணம், மூன்று கொள்கைகள்

இலக்கணம் கற்பது தொடர்பாக மூவகைக் கொள்கைகள் உள்ளன. ஒன்று: இலக்கணம் என ஒன்று கற்பிக்கப்பட வேண்டியதில்லை. நடந்த பையன் என்பதில் ‘நடந்த’ என்பது பெயரெச்சம் என்றும், good boy என்பதில் ‘good’ என்பது adjective என்றும் தெரிந்து கொண்டுதானா மொழியைப் பேசவும் எழுதவும் வேண்டும்? தேவையில்லையே! பல நூல்களைப் படிப்பதனால் தானாக இலக்கண விதி அமைந்துவிடும். எனவே இலக்கணத்தைத் தனிப்பாடமாகக் கற்கவேண்டியதில்லை. இலக்கணம் கல்லாமலேயே சிலர் இதழ்களில் எழுதிவரவில்லையா என்பது முதல் கொள்கை.

இரண்டாவது கொள்கையாவது: இலக்கணம் என்ற ஒரு பாடம் கட்டாயம் தனியே கற்றே தீரவேண்டும். இன்றேல், மொழியை முற்றிலும் பிழையறப் பேசவும் எழுதவும் இயலாது - என்பது.

மூன்றாம் கொள்கை

இலக்கணம் வேண்டா என்பது பொருந்தாது. அது வேண்டியதே. ஆனால், இலக்கணப் பாடத்தைத் தனிப் பாடமாகக் கற்பிக்காமல், இலக்கியப் பாடங்களுடன் - அதாவது - உரைநடைப் பாடத்துடனும் கட்டுரைப் பாடத்தொடும் செய்யுள் பாடத்தோடும் இணைத்துக் கற்பிப்பதே சாலச்சிறந்தது - என்பது.

மூன்று பற்றிய தீர்ப்பு

இலக்கணப் பாடமே வேண்டா என்பதை நூற்றுக்கு நூறு ஒத்துக்கொள்ளவே முடியாது. இலக்கணம் இல்லையேல் மொழி சிதையும் - மொழி பிரியும். அடுத்து-இலக்கணப் பாடத்தைத் தனிப்பாடமாக நடத்த வேண்டாஇலக்கியப் பாடத்துடன் இணைத்துக் கற்பித்தால் போதும் என்பதை ஒரு சிறிதளவுதான் ஒத்துக்கொள்ள முடியும். அதாவது, நடு நிலைப் பள்ளிவரையும் இலக்கணத்தை இலக்கியத்துடன் இணைத்துக் கற்பிக்கலாம். அதற்கு மேற்பட்ட உயர்நிலைப்பள்ளி - மேல்நிலைப்பள்ளி வகுப்புகளிலும் கல்லூரிகளிலும் தனிப்பாடமாகக் கற்பிப்பது இன்றியமையாததாகும். அவ்வளவு ஏன்? எல்லாநிலை வகுப்புகளிலுமே, வாய்ப்பு நேருங்கால், இலக்கியப் பாடத்தில் இலக்கண நுட்பங்களை எடுத்துக்காட்டிக் கற்பிக்கலாம். ஆனால், எல்லா இலக்கணச் செய்திகளையும் இலக்கியப் பாடத்தோடு இணைத்துக் கற்பிக்க முடியாதாதலின், இலக்கணம் தனிப்பாடமாகவே கற்பிக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

கருவிப் பாடம்

இலக்கணத்திற்கு இவ்வளவு இன்றியமையாமை தர வேண்டியதற்கு உரிய மற்றொரு சிறந்த காரணமும் உண்டு. மொழி ஒரு கருவிப் பாடம் (Tool Subject). அதாவது, கணக்கு, அறிவியல், வரலாறு, நில நூல் முதலிய எல்லாப் பாடங்களையும் மொழியின் வாயிலாகவே கற்பிக்கிறோம். கணக்கையும் கருவிப் பாடம் எனக் கூறுவதுண்டு. அறிவியல் முதலிய சில பாடங்களில் எண்கள் இன்றியமையா இடத்தைப் பெற்றிருப்பதால், கணக்கும் கருவிப் பாடமே. கணக்குக்கு அடிப்படையான எண்கள் எழுத்துக்களின் சுருக்கக் குறியீடேயாகும். எண்களை நாம் எழுத்தாலேயே ஒலிக்கிறோம். 999999999 என ஒன்பது முறை 9 என்னும் எண்ணை எழுதிவிட்டுப் படிக்க வேண்டுமாயின், “தொண்ணூற்றொன்பது கோடியே தொண்ணூற்றொன்பது இலட்சத்துத் தொண்ணூற்றொன்பது ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது என எழுத்துகளாலேயே ஒலிக்கிறோம். எண்கள் சொற்களின் சுருக் கெழுத்துக் (Short hand) குறியீடுகளாம். எனவே, ஒருவகைக் கருவிப் பாடமாக உள்ள கணக்குக்கும் மொழி கருவிப்பாடமாகும். எனவே, மொழியைப் பிழையின்றிக் கையாளத் தெரிந்தால்தான், மற்ற பாடங்களையும் பிழையின்றிக் கற்று எழுத முடியும். ஆகவே, இலக்கணத்தின் இன்றியமையாத் தேவை இப்போது புலனாகும்.

நன்னூலின் இடம்

இப்போது முழுமையாகக் கிடைத்திருக்கும் தமிழ் இலக்கண நூல்களுள் தொல்காப்பியமே பழமையானது விரிவானது. இந்நூல், ஒரு தோற்றம், இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. கி. பி. பதின் மூன்றாம் நூற்றாண்டில், பவணந்திமுனிவர் என்பவர், நன்னூல் என்னும் ஒரு நல்ல இலக்கண நூலைப் படைத்துத் தந்துள்ளார். இந்நூலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரு பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகளாக ஐந்து இயல்கள் உள்ளன.

பவணந்தியார் தொல்காப்பியத்தில் உள்ள சில செய்திகளை விட்டுவிட்டார்; தொல்காப்பியத்தில் இல்லாத பிற்காலத்தில் மக்களின் நடைமுறை வழக்குகளில் உண்டான சில செய்திகளை நன்னூலில் சேர்த்துள்ளார்; தொல்காப்பியத்திலும் நன்னூலைச் சுருக்கமாக அமைத்துள்ளார். அதனால், இக்காலத்தினர் நன்னூலைப் பெரிதும் கையாள்கின்றனர். நன்னூலுக்குப் பிறகு எழுந்த எந்த நூல்களும் நன்னூலின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை. எனவே, நாமும் இப்போது பெரிதும் நன்னூலை அடிப்படையாகக் கொண்டு நடைமுறை இலக்கணம் பற்றி ஆராயலாம். நடைமுறை இலக்கணம் என்பது, இக்காலத்தில் நடைமுறையில் பின்பற்றப்பட வேண்டிய இன்றியமையாத இலக்கணச் செய்திகளாகும். நன்னூல் முழுவதும் கற்கப்பட வேண்டியது எனினும், இப்போது நடைமுறைக்கு இன்றியமையாது தேவைப்படுகிற இலக்கணச் செய்திகள் சிலவற்றை நன்னூலிலிருந்து எடுத்துக் கொள்வோமாக.

மொழிப் பயிற்சியின் வகை

கேள்விப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, படிப்புப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி எனமொழிப் பயிற்சி நால்வகைப்படும். முறை வைப்பும் இஃதே. கேட்டதைத்தான் பேசமுடியும். தமிழ்க் குழந்தைகள் குழவிப் பருவத்தில் ஆங்கிலம் கேட்க வில்லை - தமிழ்தான் கேட்கிறார்கள் - அதனால் அவர்களால் தமிழ்தான் பேசமுடிகிறது. தமிழ் கேட்காத ஆங்கிலக் குழந்தைகளால் தமிழ் பேச முடிவதில்லை - ஆங்கிலமே பேசுகின்றனர். எனவே, பேசுவதற்குக் கேள்விப் பயிற்சி (காதால் கேட்கும் பயிற்சி) இன்றியமையாதது. ஆகவே, சிறார்கள் நல்ல பேச்சுகளைக் கேட்க நிரம்ப வாய்ப்பளிக்க வேண்டும். திருத்தமாகப் பேசினால்தான் திருத்தமாகப் படிக்கவும் எழுதவும் முடியும். சொற்பொழிவாளர் ஒருவர், ‘உதாரணமாக வல்லுவரையே எடுத்துக் கொல்லுவோமே’ என்று பேசினார். உண்மையாக நடந்தது இது. வள்ளுவரையே எடுத்துக் கொள்ளுவோமே என்று பேசுவதற்குப் பதில் இவ்வாறு பேசியுள்ளார். சிலருக்கு, ‘வெல்லம் பல்லத்தில் பாய்வதும் உண்டு ல, ள, எழுத்துகளைத் திருத்தமாக ஒலிக்க இளமையிலிருந்தே பயிற்சி பெற்றிருந்தால், இந்த இழிநிலைக்கு இடம் ஏற்பட்டிராது. இன்னும் ஒன்று. தமிழர்களுள்ளேயே சில பகுதியினர் ‘ழ’ என்பதை ‘ள’ எனவே ஒலிக்கின்றனர். எனவே, ல - ள - ழ என்பவற்றையும், ர - ற என்பவற்றையும், ண - ந - ன என்பவற்றையும் எவ்வாறு ஒலிக்க வேண்டுமெனப் பயிற்சி அளிக்கவேண்டும். பிறப்பியல்

எழுத்துகளின் பிறப்பு ஒலி இலக்கணத்தில் இருபதாம் நூற்றாண்டில்தான் மேலைநாட்டினர் கருத்து செலுத்தியுள்ளனர். தொல்காப்பியரோ தம் தொல்காப்பிய நூலில் இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன்பே, இதற்காகப் பிறப்பியல் என ஒரு தனி இயலே அமைத்துள்ளார். பவணந்தியார் தம் நன்னூலில், எழுத்ததிகாரத்தில் உள்ள எழுத்தியலில், எழுத்துப் பிறப்பொலி இலக்கணத்தை விளக்கியுள்ளார். எனவே, இந்தப் பகுதி நன்னூலில் மிகவும் கற்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஒலிப்பு திருந்தினால்தான் பேச்சு திருந்தும். பேச்சு திருந்தினால்தான், படிப்பதும் எழுதுவதும் திருத்தமாயிருக்கும். கிரீனிங் (Greening) என்னும் அறிஞர், “திருத்தமான எழுத்து நடை என்பது, ஒழுங்கு செய்யப்பெற்ற பேச்சு நடையின் பயனேயாகும்” - என்று கூறியுள்ளார். இதைத்தான் ஒளவையார், “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” - என ஒரு தனிப்பாடலில் அறிவித்துள்ளார். எழுத்து கண்டுபிடிப்பதற்கு முன்பே, கல்வி இருந்தது; அது பேச்சுவாயிலாகவும் கேள்வி வாயிலாகவும் நடைபெற்று வந்தது என்னும் கருத்தை ஈண்டு நினைவில் கொள்ளல் வேண்டும்.

அளபெடை

எழுத்தியலில் ‘இசை கெடின்’ (91) என்று தொடங்கும் நூற்பாவில் அளபெடை பற்றிப் பவணந்தியார் கூறியுள்ளார். போய் என்பதைப் ‘போஒய்’ எனவும், கெடுப்பதும் என்பதைக் ‘கெடுப்பதூஉம்’ எனவும், நிறுத்தி என்பதை ‘நிறீஇ’ எனவும், நெடிலுக்குப்பின் அதன் இனக்குறிலை அமைத்து அளபை (மாத்திரையை - ஒலி அளவை) மிகுதியாக எடுப்பது அளபெடையாகும்.

இக்கால நடைமுறை இலக்கியத்தில் அளபெடை கையாளப்படவில்லை. மேலே கூறிய உயிர் அளபெடைக்கே இக்காலத்தில் இடம் இல்லையெனில், இலங்ங்கு - எங்ங்கு என்பன போன்ற ஒற்றளபெடைக்கு இக்காலத்தில் சிறிதும் இடமில்லை. ஆனால், ‘அம்பிகாபதி காதல் காப்பியம்’ என்னும் எனது நூலில் நான் அளபெடைகளை ஓரளவு கையாண்டுள்ளேன்.

தொல்காப்பியரும் நன்னூலாரும், செய்யுளில் இசை (ஓசை) கெடுவதால் அவ்விடத்தை நிரப்ப மற்றோரெழுத்தைப் போட்டு அளபெடுக்கச் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளனர். இது தவறு பொருள் பொதிவு கருதியே தொடக்கக் காலத்தில் அளபெடை எழுந்தது. நாளடைவில் அதை இடம் நிரம்பப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அளபெடை பொருள் பெறுமானம் உடையது.

கற்போர்க்குச் சுமையைக் குறைக்க வேண்டின், நன்னூல் பாடத்திட்டத்திலிருந்து அளபெடையை விலக்கிவிடலாம். இதே நோக்கத்திற்காக, நன்னூலின் தொடக்கத்தில் உள்ள பாயிரப் பகுதியையும் விலக்கிவிடலாம். வேண்டுவோர் பிற்காலத்தில் படித்துக் கொள்ளலாம்.

உறுப்பிலக்கணம்

நன்னூல் பதவியலில் கூறப்பட்டுள்ள, முதல் நிலை (பகுதி), இறுதி நிலை (விகுதி), இடை நிலை, சாரியை, சந்தி (இணைப்பு), விகாரம் (வேறுபாடு) என்னும் அறுவகை உறுப்பு இலக்கணம் கற்கப்படவேண்டும். இந்த உறுப்பிலக்கணம் கற்பதனால் விளையும் பயன்கள் இரண்டு. ஒன்று: சொல்லாராய்ச்சி செய்ய இஃது உதவும்; இரண்டு: புதிய சொல்லாக்கம் செய்யவும் உதவும்.  நிகழ்கால இடை நிலைகள்

உறுப்பிலக்கணம் பற்றித் தொல்காப்பியர் தனியே கூறவில்லை; முதல் நிலை (பகுதி), இறுதி நிலை (விகுதி) என்னும் இரண்டையும் பற்றி ஆங்காங்குக் கூறியுள்ளார்; இடைநிலை பற்றி அவர் ஒன்றும் கூறிற்றிலர். ‘புதியன புகுதல்’ என்ற முறையில், நன்னூலார் கூறியுள்ளார். மக்களின் அக்கால நடைமுறைப் பேச்சு வழக்கையொட்டி இவ்வுறுப்புகள் நன்னூலில் கூறப்பட்டுள்ளன. நிகழ்காலம் காட்டும் இடைநிலைகளாகக் கிறு-கின்று-ஆநின்று என்னும் மூன்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

“ஆநின்று கின்று கிறு மூவிடத்தின்
ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைநிலை” (143)

என்பது நன்னூல்பா. இந்த நிகழ்கால இடைநிலைகளைத் தொல்காப்பியர் கூறாதது மட்டுமன்று; சங்க இலக்கியங்களிலும் இவை இடம்பெறவில்லை. ஆனால், இடைக்கால இலக்கியங்களில் இவை இடம்பெறத் தொடங்கிவிட்டன.

“மின்னொளிர் கானம் இன்றே
போகின்றேன் விடையும் கொண்டேன்”

என்னும் கம்பராமாயணத்தின் (அயோத்தியா காண்டம் - கைகேயி சூழ்வினைப் படலம்) பாடல் பகுதியில், ‘போகின்றேன்’ எனக் ‘கின்று’ என்னும் இடைநிலை ஆளப்பட்டுள்ளது. ‘போகிறேன்’ என்பதைக்காட்டிலும் ‘போகின்றேன்’ என்பது அழுத்தம் திருத்தத்தை அறிவிக்கிறது. கிறு, கின்று என்பனவே மிகுதியாக இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. ‘ஆநின்று’ என்பது அரிதாகவே உள்ளது. இம் மூன்றுமே நிகழ்காலம் காட்டினும், கிறு-கின்று என்பவற்றிற்கும் ஆநின்று என்பதற்கும் வேற்றுமை உண்டு. இதன் விளக்கம் வருமாறு:  தொடர் நிகழ்காலம்

ஆங்கிலத்தில் They go என்பதற்கு, அவர்கள் போகிறார்கள் என்பது பொருள். இது, Present Tense - நிகழ்காலம் எனப்படும் They are going என்பதற்கு அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது பொருள் இது, Present Tense continuous - தொடர் நிகழ்காலம் எனப்படும். இந்த ஆங்கில வழக்காறுகள் போல, கிறு - கின்று என்பன பெற்று நிகழ்காலத்தைக் குறிக்கும். ஆநின்று என்பது தொடர் நிகழ்காலத்தைக் குறிக்கும். இதற்கு இலக்கியச் சான்று காட்டினால்தான், இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளப்படும். இலக்கிய அகச்சான்று இதோ:-

தேவார ஆசிரியர்கள் மூவருள் ஒருவராகிய நாவுக்கரசர் திருவானைக்கா தேவாரப் பதிகப்பாடல் ஒன்றில் இதனைக் கையாண்டுள்ளார்.

“எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்;
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை;
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்”-

என்பது பாடல் பகுதி. ஒருவர் இறந்து விடின், வேறு யாரும் தம் உயிரை விட்டு, இறந்தவரின் உயிருடன் துணை போக மாட்டார்கள். செத்த உடம்பாகிய பெருவிறகை, மரக்கட்டையாகிய சிறு விறகால் தீமூட்டிக் கொளுத்திச் செல்வர் - என்பது இதன் கருத்து. இங்கே, ‘செல்லா நிற்பர்’ என்பதை ஊன்றி நோக்க வேண்டும். சுடுகாட்டில் ஈமக் கடன்கள் முடித்த பிறகு, திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது, தொன்று தொட்டுப் பெரியவர்கள் பின்பற்றி வரும் வழக்கமாகும். (இப்போது திரும்பிப் பார்க்காமல் போனாலும், பின்பொருநாள் தாமாக வந்து தான் தீரவேண்டும்). திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற காரணத்தால் சென்று கொண்டே இருப்பார்கள் என்னும் பொருளில் ‘செல்லாநிற்பர்’ என்பது கூறப்பட்டது. இது தொடர் நிகழ்காலம் (Present Tense Continuous) ஆகும். ‘ஆநில்’ என்னும் வேர்ச்சொல் தொடர்ச்சியை அறிவிக்கிறது. செல்லா நிற்பர் என ‘ப்’ எதிர்கால இடைநிலை வந்திருக்கிறதே என வினவலாம். எப்போதும் வழக்கமாக உள்ளதை எதிர்காலத்தால் சொல்வது மரபு. “இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்” என்பது தொல்காப்பிய (கிளவியாக்கம்-19) நூற்பா. இந்த நூற்பாவை நன்னூலாரும் அப்படியே தம் நூலில் (404) பெய்து கொண்டார். ஆங்கிலத்தில் ‘Would’ என்னும் துணை வினை (Auxiliary Verb) போடுவது போன்றது இது.

எனவே, உறுப்பிலக்கணம் தெரியின், சொல்லாராய்ச்சி செய்து, அதனால் பெறப்படும் சுவையை நுகர முடியும். ஆகவே, நன்னூலில் உள்ள உறுப்பிலக்கணத்தைக் கட்டாயம் கற்க வேண்டும். இந்த அமைப்பு, சங்க காலத்தில் இல்லாமல், பின்னர் வந்த நடைமுறை இலக்கணமாகும்.

புணர்ச்சி இலக்கணம்

அடுத்து, புணர்ச்சி இலக்கணம் மிகவும் இன்றியமையாததாகும். நன்னூலில் உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என்னும் மூன்று இயல்களில் புணர்ச்சி இலக்கணம் கூறப்பட்டுள்ளது. நிலைமொழி எனப்படும் முதல் சொல்லும், வருமொழி எனப்படும் இரண்டாவது சொல்லும் ஒன்றோடொன்று புணரும்போது-இணையும்போது, இரண்டிற்கும் இடையே ஏற்படும் நிலைமையைச் சொல்வதற்குத்தான் புணர்ச்சி இலக்கணம் என்று பெயராம். மழை பெய்தது என்னும் தொடரில் இடையே எந்த மாறுதலும் இல்லை; இது இயல்பு புணர்ச்சி. மழைக்காலம் என்னும் தொடரில் இடையே ‘க்’ என்னும் வல்லொற்று மிக்கிருக்கிறது; இது விகாரப் புணர்ச்சி. இந்தப் புணர்ச்சி இலக்கணம் தெரிந்தால்தான், எந்த இடத்தில் இயல்பாயிருக்கும் - எந்த இடத்தில் புதிதாய் ஓரெழுத்து மிகும் - எந்த இடத்தில் இருக்கும் எழுத்துகளுள் ஒன்று கெடும் - எந்த இடத்தில் ஓரெழுத்து இன்னோரெழுத்தாகத் திரியும் - என்னும் விதிகளை அறிந்து மொழியைப் பிழையின்றி எழுதவியலும்.

புணர்ச்சி இலக்கணமே தவறு

ஒருவகையில் புணர்ச்சி இலக்கண அமைப்பே தவறானது என்று கூறலாம். கடல் + தாவு படலம் என்பது கடறாவு படலம் என்றாகும் என்பது புணர்ச்சி விதி. முள்+தாள் - தாமரை என்பது ‘முட்டாட்டாமரை’ என்றாகும் என்பது புணர்ச்சி விதி. எல்லாப் புணர்ச்சி விதிகளும் இன்னவையே. உண்மையில் இவை சரியா? இந்த விதிகள் இலக்கணம் என்ற பெயரில் எவ்வாறு எழுதப்பட்டிருக்கக் கூடும்? ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்றபடி, மக்கள் சொற்களை இணைத்துப் பேசும் வழக்குகள், இவ்வாறு தவறான உருவங்களைப் பெறுகின்றன. இந்த அடிப்படையில், மொழி அறிஞர்கள், இன்னின்ன சொற்கள் சேரின் இன்னின்னவாறு ஆகும் என்று முடிபு கூறிவிட்டனர். இது தான் புணர்ச்சி இலக்கணம் (புணர்ச்சி விதி) எனப்படுகிறது.

இதன் பயன் என்ன? இந்த முடிவு இல்லாவிடின், மக்கள் இன்னும் பலவிதமாக நாளுக்குநாள் சிதைத்துப் பேசியும் எழுதியும் வருவர். எனவே, இப்படித்தான் எழுத வேண்டும் என முடிவு கட்டிக் கூறிவிடின், மேலும் சிதைக்காமல் பேசுவர் - எழுதுவர் ஆகவே, மொழி என்னும் ஆறு கண்டபடி ஓடாதவாறு இந்த இலக்கணக் கரை ஓரளவு காத்து வருகிறது. கால வெள்ளத்தில் இந்தக் கரை உடைபடின், மீண்டும் கரையைப் புதுப்பிக்க வேண்டி யுள்ளது. அதாவது, மீண்டும் இலக்கணத்தில் மாறுதல் செய்யவேண்டும். இந்த மாறுதல்களைப் பிற்கால உரையாசிரியர்கள் தம் உரைகளில் சேர்த்துக்கொண்டு உள்ளனர். தொல்காப்பியத்தினும் மாறுதலாகச் சில இடங்களில் நன்னூல் கூறுவதும் இஃதே. இதுதான் நடைமுறை இலக்கணம் எனப்படுகிறது. ஆனால், மாறுதலை ஓரளவே ஏற்கலாம்; கண்டபடி ஏற்க முடியாது.

நன்னூலின் தவறுகள்

நன்னூலில் உள்ள புணர்ச்சி இலக்கணம் கற்கப்பட வேண்டியது என்று சொல்லப்பட்டது. ஆனால், மக்களின் பேச்சு வழக்காற்றுக்கு மாறாக, நன்னூலில் - ஏன் - தொல்காப்பியத்திலுங்கூட, சில புணர்ச்சி விதிகள் கூறப்பட்டுள்ளன. இந்தத் தவறான விதிகளை, மொழி அறிஞர்கள் கூடிப்பேசி விலக்கிவிட வேண்டும். இவற்றைக் கற்க வேண்டியதில்லை. இத்தகைய தவறான முடிபுகளுள் சிலவற்றைக் காணலாம்.

ஒரு மொழியிலுள்ள ஒலிப்பு முறைகள் - புணர்ச்சி விதிகள், வேறுசில மொழிகளிலும் ஒத்திருப்பதுண்டு. சில காட்டுகள் வருமாறு.

கால் + ஒடிந்தது என்பதை மக்கள் பேசுங்கால், கால் ஒடிந்தது - கால் ஒடிந்தது - காலொடிந்தது - என்கின்றனர். நிலைமொழியாகிய கால் என்பதின் இறுதியில் உள்ள ‘ல்’ என்னும் உடல் (மெய்) எழுத்தின் மேல் வருமொழி யாகிய ‘ஒடிந்தது’ என்பதின் முதலில் உள்ள ‘ஒ’ என்னும் உயிர் (எழுத்து) ஒன்றி (ல் + ஒ) ‘லொ’ என்றாகி, ‘காலொடிந்தது’ என்பது உருவாயிற்று. இதனை நன்னூல்

“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே”

என்னும் நூற்பாவால் (204) அறிவிக்கிறது. பிரெஞ்சு மொழியிலும் இந்த விதி உண்டு. Comment என்னும் பிரெஞ்சுச் சொல்லைத் தனியே ஒலிக்கும்போது கொம்மா(ன்)’ என்றே ஒலிப்பர். இங்கே t என்பது ஊமை எழுத்தாகும். நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? - How do you do? - How are you? - என்னும் பொருளில் comment allez vous என்பதை ஒலிக்கும் போது, comment என்பதின் இறுதியில் t என்னும் மெய்யெழுத்து ‘த்’ என்னும் ஒலி பெற அதன்மேல் வருமொழி முதலில் உள்ள ‘a’ என்னும் உயிர் எழுத்து ஒன்ற, ‘ta’ என்பன ‘த’ என்னும் ஒலி பெறும். எனவே, இத்தொடர், ‘சொம்மான் தலே வு’ என ஒலிக்கப்பெறும். allez, vous என்பவற்றின் இறுதி எழுத்துகளாகிய Z, s என்பன ஊமை (Silent) எழுத்துகளாம்.

அடுத்து, கல் + உடைந்தது என்பதை மக்கள் ஒலிக்குங்கால், கல் உடைந்தது - கல் உடைந்தது - கல்லுடைந்தது என்கின்றனர். இங்கே நிலைமொழியில் ‘க’ என்னும் தனிக்குறிலின் பக்கத்தில் ‘ல்’ என்னும் ஒற்று இருக்க, அதனோடு, வருமொழி முதலில் உள்ள ‘உ’ என்னும் உயிர் சேரும் போது ‘ல்’ என்னும் ஒற்று இரட்டித்தது - அதாவது - மற்றொரு ‘ல்’ வந்து கல் + ல் + உடைந்தது = கல்லுடைந்தது என்பதை உருவாக்கிற்று. இதனை நன்னூல்,

“தனிக் குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” (205)

எனக் கூறுகிறது. ஆங்கிலத்திலும் இத்தகைய அமைப்பு உண்டு.

Big என்பது, Bi(பி) + g(க்) எனத் தனிக்குறில் முன் (முன் = பக்கத்தில்) ஒற்று வந்த நிலைமொழி யாகும். இதனோடு, வருமொழியில், Superlative degree குறியீடாகிய ‘est’ என்னும் உயிர் (e) முதல் மொழி வந்ததும், ‘g’ என்னும் ஒற்று இரட்டிக்க, Big + g + est = Biggest என்பதும் உருவாயிற்று. cut + t + ing cutting என்பதும் இத்தகையதே.

தமிழில் “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (164) என்னும் நன்னுால் விதிப்படி, விளக்கு + எரிந்தது என இரண்டு உயிர்கள் இணையின் ஓருயிர் கெடும். இங்கே ‘கு’ என்பதில் உள்ள ‘உ’ போக, ‘க்’ என்பதில் ‘எ’ சேர விளக்கெரிந்தது என்பது உருவாயிற்று. ஆங்கிலத்தில், No one என்பதில் ஓர் ‘O’ கெட none என்பதும், No + ever என்பதில் உயிர் O கெட never என்பதும் உருவானமை காண்க. I have என்னும் பொருள் உடைய Je + ai என்னும் பிரெஞ்சு தொடரில், ‘சு’ என்னும் உயிர் கெட, ‘J’ ai என்பது உருவானமையும் காண்க.

‘உயிர்வரின் உடம்படு மெய்யென்றாகும்’ (162) என்னும் நன்னூல் விதிப்படி, மணி + அடித்தான் என்பதில் உள்ள இ + அ என்னும் இரண்டு உயிர்களை இணைக்க ‘ய்’ என்னும் உடம்படுமெய் (ஒன்று சேர்க்கும் மெய்) வர, மணியடித்தான் என்பது உருவாயிற்று. இதேபோல் ஆங்கிலத்தில் a + egg என்பதை இணைக்க, இடையே N என்னும் உடம்படு மெய்வர an egg என்பது உருவானமையும் காண்க.

குறிப்பிட்ட ஓர் இலக்கை அடைவதற்காக இவ்வளவு பயணம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. காலொடிந்தது என்பதிலே, ஒலிப்பு முயற்சி ‘கா’ என முதலில் நீண்டு செலவிடப்பட்டதால், அங்கே ஒன்று இரட்டிக்கவில்லை. கல்லுடைந்தது என்பதிலே, ஒலிப்பு முயற்சி முதலில் அழுத்தம் பெறாமல் அடுத்து அழுத்தம் பெற்றதால் அங்கே ஒன்று இரட்டித்தது. இதுதான் இயற்கையான புணர்ச்சி விதிமுறையாகும்.

பண்புப் புணர்ச்சி

உண்மை - இவ்வாறிருக்க, நன்னூலார் பண்புத் தொகைப் புணர்ச்சியில் தவறிவிட்டார். செம்மை + ஆம்பல் என்பதுதான் சேதாம்பல் என்றாயிற்று - பசுமை + தார் என்பதே பைந்தார் என்றாயிற்று - என்று கூறியுள்ளார். இச்செய்தி ‘ஈறு போதல்’ (136) என்னும் நூற்பாவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால் + ஒடிந்தது = காலொடிந்தது என்பதும் கல் + உடைந்தது = கல்லுடைந்தது என்பதும் இயற்கையான மக்கள் வழக்காற்றுப் புணர்ச்சி விதியாகும். ஆனால், இதுபோல, செம்மை + ஆம்பல் என்பதைச் செம்மை ஆம்பல் - செம்மை ஆம்பல் எனப் பதினாயிரம் முறை கூறினும் சேதாம்பல் என்பது உருவாகாது. பசுமை + தார் என்பதைப் பசுமைத்தார் - பசுமைத்தார் என நூறாயிரம் முறை கூறினும் பைந்தார் என்பது உருவாகாது. இவற்றின் உண்மையான புணர்ச்சி விதி வருமாறு:-

செம்மை + ஆம்பல் என்பது சேதாம்பல் என்றாக வில்லை; சேது + ஆம்பல் என்பதே சேதாம்பல் என்றாயிற்று. சேது என்னும் சொல்லுக்கும் செம்மை (சிவப்பு) என்னும் பொருள் உண்டு. ‘சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச்சேதா’ என்னும் நற்றிணைப் (359) பாடல் பகுதி காண்க. இதிலுள்ள சேதா’ என்பதைச் சேது + ஆ எனப் பிரித்துச் சிவப்புப் பசு எனப்பொருள் கொள்ளல் வேண்டும்.

அடுத்து- பசுமை + தார் என்பது பைந்தார் என்றாகவில்லை. பை + தார் என்பதே பைந்தார் என்றாயிற்று. ‘பை’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்கே பசுமை என்னும் பொருள் உண்டு என்பதை, ‘பை தீர் பாணரொடு, (மலைபடுகடாம்-40), ‘நும் பை-தீர் கடும்பொடு’ (பெரும் பாணாற்றுப்படை-105) முதலிய இலக்கிய வழக்குகளால் அறியலாம். ‘பை தீர் பாணர்’ என்பதற்கு, பசுமை-வளமை தீர்ந்த ஏழைப் பாணர் என்பது பொருளாம். எனவே இந்தப் பண்புத் தொகைப் புணர்ச்சி விதிகளை அறிஞர்கள் ஆய்ந்து நன்னூலிலிருந்து விலக்கிவிட வேண்டும்.

தொண்ணூறும் தொள்ளாயிரமும்

மற்றும் - ஒன்பது + பத்து என்பதுதான் தொண்ணூறுஎன்றாயிற்று - ஒன்பது + நூறு என்பதுதான் தொள்ளாயிரம் என்றாயிற்று எனத் தொல்காப்பியமும் நன்னூலும் கூறுகின்றன.

“ஒன்பானொடு பத்தும் நூறும் ஒன்றின்,
முன்னதின் ஏனைய முரணி, ஒவ்வொரு
தகரம் நிறீஇப், பஃதகற்றி, னவ்வை
நிரலே ணளவழி திரிப்பது நெறியே” (194)

என்பது நன்னுாற்பா. இந்தப் புணர்ச்சி விதிகள் நூற்றுக்கு நூறு தவறாகும். ஒன்பது + பத்து - ஒன்பது பத்து என்று ஓராயிரம் முறை கூறினும் தொண்ணூறு என்பது வராது. ஒன்பது + நூறு - ஒன்பது நூறு என ஒரு நூறாயிரம் முறை கூறினும் தொள்ளாயிரம் என்பது வராது. இந்த எண்களின் புணர்ச்சிகட்கும் வேறு விதிகள் உள்ளன. சுருக்கமாக அவை வருமாறு:-

தெலுங்கு மொழியில் ஏழு (7) என்பதைக் குறிக்கும் சொல் ‘ஏடு’ என்பதாகும். ஏடு என்னும் சொல்லுக்கு ‘அழுதல்’ என்னும் மங்கலமற்ற பொருளும் உண்டு. அதனால் சிலர், ஏழு (7) என்னும் எண்ணைக் குறிக்க, ‘ஏடு’ என்னும் சொல்லைப் பயன்படுத்தாமல் ‘ஆறன் ஒக்கட்டி’ (ஆறும் ஒன்றும்) என்னும் சொல்லைப் பயன்படுத்துவர். இது போலவே, தமிழில் ஒன்பது (9) என்னும் எண்ணைக் குறிக்கப் பண்டைக் காலத்தில் ‘தொண்டு’ என்னும் சொல் பயன்படுத்தப் பெற்றது. இச் சொல்லுக்கு இன்னும் வேறு பொருள்கள் உள்ளமையால் குழப்பம் உண்டாகும் ஆதலானும், குறிப்பாக இச்சொல்லுக்குப் பரத்தைமை (மாமா வேலை) என்னும் பொருளும் சில பகுதிகளில் உண்டாதலானும் இச் சொல்லுக்குப் பதில் ‘ஒன்பது’ என்னும் சொல்லைப் பயன்படுத்தினர். இதற்கு எழுத்துச் சான்று காட்டின் விரியு மாதலின் விடுப்பாம். ஒன்பது என்னும் சொல் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே வழக்கில் வந்து விட்டது.

ஒன்பது என்பதற்கு, ஒன்று குறைந்த பத்து அதாவது பத்தில் ஒரு பகுதி குறைந்தது என்பது பொருள். பத்துக்கு முன்னால் ஒன்று போட்டால் ஒன்பது என்னும் பொருள் கிடைப்பதை இலத்தீன் எண்ணில் (Roman Number) காணலாம். X என்பது இலத்தீனில் பத்து. அதற்கு முன்னால் ஒன்று போட்டு IX என்று எழுதின் ஒன்பது என்பது கிடைக்கும். 19 என்பதைத் தமிழில் பத்தொன்பது என்றும், ஆங்கிலத்தில் nineteen என்றும் ஒலிக்கிறோம். இலத்தீனில் XIX என்று அமைத்தால் X + IX = (10 + 9 =) 19 ஆகும். இலத்தீன் மொழியில் இதனை ஒன்று குறைந்த இருபது - அதாவது - undeviginti என்கின்றனர். இலத்தீனில், Viginti என்றால் இருபது; de என்றால் from - அதிலிருந்து கழிவது; un என்றால் ஒன்று. எனவே, ஒன்று குறைந்த இருபது (20-1=19) என்னும் பொருளில் 19=XIX ஒலிக்கப்படுகிறது.

தமிழ் எண்கள், க(1), உ(2), ரு(5), எ(7), அ(8), வ(1/4), ப(1/20) என எழுத்துருவங்களால் குறிக்கப்படுதல் போலவே, இலத்தீனிலும் V(5), X(10) என எண்கள் எழுத்தால் குறிக்கப்படுகின்றன. இவற்றிற்கு முன்னால் ஒன்று சேர்க்கின், IV = 4, 1X = 9 என்பன கிடைக்கும். இந்த எண் அமைப்பு ஒற்றுமையின் துணை கொண்டு தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பவற்றின் புணர்ச்சி விதிக்குத் தீர்வு காணலாம்.

தொள் + நூறு = தொண்ணூறு - அதாவது - நூறில் - பத்துப்பத்தில் ஒரு பகுதி குறைந்தது என்பது இதன் பொருள்; அதாவது (100 - 10 =) 90 என்பதாம். தொள் + ஆயிரம் = தொள்ளாயிரம் - அதாவது - ஆயிரத்தில் - பத்து நூறில் ஒரு பகுதி குறைந்தது என்பது இதன் பொருள். அதாவது (1000 - 100) 900 என்பதாம். தொள் என்பதற்குத் துளைக்கப் பட்டது - குறைக்கப் பட்டது என்னும் பொருள் உண்டு. ‘தொள்ளைக் காது’ என்னும் வழக்காறு காண்க. எனவே, ஒன்பது + பத்து என்பதுதான் தொள்ளாயிரம் எனவும் ஆனதாகக் கூறுவது தவறாகும்.

ஆகவே, இந்தப் பொருந்தாப் புணர்ச்கி விதிகளை நன்னூலிலிருந்தும் தொல்காப்பியத்திலிருந்தும், விலக்கி விட வேண்டும். எனது ‘தமிழ் இலத்தீன் பாலம்’ என்னும் நூலைப் படித்தால் இது பற்றி இன்னும், விரிவாக அறிந்து கொள்ளலாம். அடுத்து, இனி, ஒற்று மிகல் - மிகாமை பற்றிய புணர்ச்சி விதிகளைப் பார்க்கலாம்.

வல்லொற்று மிகும் / மிகா இடங்கள்

இந்த வேற்றுமையில் வல்லொற்று மிகும்; இந்த வேற்றுமையில் மிகாது. இந்த அல்வழியில் ஒற்று மிகும்; இந்த அல்வழியில் மிகாது. இந்தத் தொகையில் மிகும்; இந்தத் தொகையில் மிகாது. இந்த எச்சத்தில் மிகும்; இந்த எச்சத்தில் மிகாது. இந்தக் குற்றிய லுகரத்தில் மிகும்; இதில் மிகாது - என்றெல்லாம் விதிகள் சொல்லப்பட்டிருத்தலின், வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி, வேற்றுமைத் தொகை, பண்புத்தொகை, இருபெயர் ஒட்டுப் பண்புத்தொகை, உவமைத் தொகை, வினைத் தொகை, உம்மைத்தொகை, வினை முற்று, வினையெச்சம், பெயரெச்சம், குற்றியலுகரம் (முற்றிய லுகரம் முதலியன பற்றி நன்னூலிலிருந்து தெளிவாகக் கற்றுக்கொள்ளல் வேண்டும். அன்மொழித் தொகையை ஆகுபெயரில் அடக்கிக் கற்கலாம்.

வல்லொற்று மிகும் இடங்கள்

க் - ச் - த் - ப் என்னும் வல்லின ஒற்றுகள் மிகக்கூடிய இன்றியமையாத சில இடங்களைப் பார்க்கலாம். கீழே தரப்படும் எடுத்துக்காட்டுகளில் ஒற்று மிக்கதைக் காணலாம்.

குவளைக் கண் - உவமைத்தொகை. சாரைப் பாம்பு - இரு பெயர் ஒட்டுப் பண்புத்தொகை. ஓடாக் குதிரை - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ஓடிப் போனான் - ‘இ’ ஈற்று இறந்தகால வினையெச்சம். போய்ப் பார்த்தான் - ‘ய்’ ஈற்று இறந்த கால வினையெச்சம், படிக்கச்சென்றான் - ‘செய' என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.

செத்துப் போயிற்று = வன்றொடர்க் குற்றிய லுகரமாக உள்ள ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.

அவனன்றிச் செய்திருக்க முடியாது, அவன் இன்றிச் செயல் நடக்காது - அன்றி, இன்றி என்னும் குறிப்பு வினையெச்சம் எட்டுத் தொகை - வன்றொடர்க் குற்றிய லுகரம். நண்டுக்கால் - வேற்றுமைத் தொகையாக உள்ள மென்றொடர்க் குற்றியலுகரம்.

அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, சங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் இடப்பொருள் உணர்த்தும் மென்றொடர்க் குற்றிய லுகரங்களின் பின் வலி மிகும். ஒற்றைக் கால், இரட்டைத் தலைகள் - இறுதியில் ‘ஐ’ பெற்ற எண்ணுப் பெயர்கள்.

வீடு + சாப்பாடு = வீட்டுச் சாப்பாடு, வயிறு + போக்கு = வயிற்றுப் போக்கு - ஒற்று இரட்டித்த நெடில் தொடர் - உயிர்த்தொடர்.

இறுதியில் ‘ஐ’ பெற்றுவரும் சில சொற்கள்-பண்டைக் காலம், நேற்றைக் கூலி, அற்றைத் திங்கள்.

அப்பையன் - அந்தப் பையன், இப்பொருள் - இந்தப் பொருள் - அ, இ, சுட்டு.

எக்குதிரை - எந்தக் குதிரை - எ வினா.

முருகனைப் பார்த்தேன் - இரண்டாம் வேற்றுமை - ‘ஐ’ உருபு.

கண்ணனுக்குத் தந்தான் - நான்காம் வேற்றுமை - ‘கு’ உருபு.

பலாப்பழம், களாக்காய் - ‘ஆ’ ஈற்று மரப் பெயர்கள்.

ஈக்கூட்டம், தீப்புண் - ஈ இறுதித் தனி நெடில்.

மரம்+கிளை=மரக்கிளை, வட்டம்+பலகை=வட்டப் பலகை - இறுதி ‘ம்’ கெட நின்ற அகர ஈற்றுப் பெயர்ச் சொற்கள்.

கேட்டார்ப் பிணிக்கும் தகை - இரண்டாம் வேற்றுமைத் தொகையாக உள்ள உயர்திணைப் பெயர்கள். மேற் கூறியிருப்பனவற்றின் பக்கத்தில் வல்லெழுத்து வருமொழிவரின் இடையில் வல்லொற்று மிகும்.

வல்லொற்று மிகா இடங்கள்

இனி வல்லொற்று மிகா இடங்கள் வருமாறு:- நம்பிதந்தார், அறிஞர் சொன்னார்-என உயர்திணைப் பெயரின் பின் வலி மிகாது.

செய்து, என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களுள், பட்டுப் போயிற்று-விற்றுக் கொண்டான் என்பன போன்ற வன்றொடர்க் குற்றியலுகரங்களில் தவிர, மற்றபடி வந்து கற்றான், கொய்து சென்றான்-என மென்றொடர் இடைத் தொடர்க் குற்றிய லுகரங்களாக உள்ள ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களில் மிகாது.

அன்று, இன்று, என்று, பண்டு, முந்து முதலிய காலப்பொருள் தரும் மென்றொடர்களில் மிகாது.

எட்டுத் தொகை, பத்துப் பாட்டு என எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களில் தவிர, வேறு எந்த எண்ணுப் பெயர்களிலும் மிகாது.

பொதுவாக, வன்றொடர் அல்லாத மற்ற தொடர்க் குற்றியலுகரங்களில் அல்வழியில் பெரும்பாலும் மிகாது.

தும்மு குமரா, கதவு பெரிது, அது சிறிது, இது பெரிது, எது கரியது, அவ்வளவு-இவ்வளவு-எவ்வளவு கொடுத்தார் முதலிய முற்றிய லுகரங்களில் மிகாது.

உண்ணிய சென்றான் -‘செய்யிய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம், மிகாது. ஓடாக் குதிரை என்பது போன்ற ஈறுகெட்ட எதிர் மறைப் பெயரெச்சங்களில் தவிர, வேறு எந்தப் பெயரெச்சத்திலும் மிகாது.

வந்த பையன், வருகிற பையன் = தெரிநிலை வினைப் பெயரெச்சம். கரிய குதிரை, சிறிய காடு-குறிப்புப் பெயரெச்சம், ஓடாத குதிரை= எதிர் மறைப் பெயரெச்சம். வாழ்க கண்ணா, வாழிய புலவ-வியங்கோள் வினைமுற்று, ஓடு முருகா, கொடு தம்பி-முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று.

வேற்றுமை உருபுகளுள். இரண்டாவதின் ‘ஐ’, நான் காவதின் ‘கு’ ஆகிய உருபுகள் தவிர, வேறு எந்த வேற்றுமை உருபுகளிலும் மிகாது.

மகனொடு - மகனோடு சென்றார் - ஓடு, ஓடு மூன்றன் உருபுகள். மலையினின்று குதித்தான், வீட்டிலிருந்து புறப் பட்டான் - நின்று, இருந்து - ஐந்தன் சொல்லுருபுகள். எனது கை, என்னுடைய பொருள்-அது, உடைய-ஆறன் உருபுகள். கண்ணா கொடு, முருகா செல்-எட்டாம் வேற்றுமையில் மிகாது. அவனா செய்தான் - ‘ஆ’ ஈற்று வினா அவனோ செய்தான் - ‘ஓ’ ஈற்று வினா. நானே செய்தேன்-ஈற்று ‘ஏ’ இடைச் சொல். ஓடு குதிரை, தாழ்குழல் - எந்த வினைத் தொகையிலும் மிகாது. இரவு பகல் படித்தான், கைகால் பிடித்தான்-உம்மைத்தொகை, மாதாபாசம்-தமிழ் எழுத்துருவம் பெற்ற வடமொழித் தொடரில் மிகாது.

பதினெட்டு மெய்யெழுத்துக்களுள் ய் - ர் - ழ் என்னும் மூன்றில் தவிர, மற்ற பதினைந்து மெய்யெழுத்துக்களுள் எதன் பக்கத்திலும் இன்னொரு மெய்வராது. எனவே, கற்க்கண்டு, நட்ப்பு, ஆட்ச்சி என்றெல்லாம் எழுதுதல் தவறு.

குறுக்கு வழி

நன்னூல் நூற்பாக்களை மறந்து, அவற்றிலிருந்து எடுத்த ஒரு பிழிவாக ஒரு குறுக்கு வழி காண்பாம். பொதுவாக எந்த ஈற்றில் முடியும் அஃறிணைப் பெயர்ச் சொற்கட்கும் பின்னே - சிறப்பாக ‘இ’ ஈற்றிலும் ‘ஐ’ ஈற்றிலும் முடியும் அஃறிணைப் பெயர்ச் சொற்கட்குப் பின்னே, வருமொழியில் பெயர்ச் சொல்வரின் இடையே வல்லொற்று மிகும். வருமொழியில் வினைச் சொல் வரின் இடையே ஒற்று மிகாது. சில எடுத்துக்காட்டுகள் வருக;- அரிசிச்சோறு, மலைப்பாதை, வரகுக் கஞ்சி, தாய்ப்பால், யாழ்க்கம்பி - வருமொழியில் பெயர்ச்சொற்கள் வந்ததால் வல்லிமிக்கது.

அரிசி போட்டார், மலைகண்டான், வரகு தந்தார், தாய் பேசினாள், யாழ் கொடுத்தார் - வருமொழியில் வினைச்சொற்கள் வந்ததால் ஒற்று மிகவில்லை.

இந்த விதி பெரும்பாலும் பொருந்தும். ‘மலை கிழ வோனே’ என்பதுபோல் எங்கோ ஒருசில விதிவிலக்கு இருக்கலாம்.

இடை - மெலி மிகுதல்

இது காறும் வல்லின ஒற்று பற்றிப் பார்த்தோம். இனி, இடையின ஒற்று பற்றியும் மெல்லின ஒற்று பற்றியும் பார்க்கலாம்:-

இடையின ஒற்றுகளுள் ‘வ்’ தவிர மற்றவை மிகா: அவ்வண்டி, இவ்வண்டி, எவ்வண்டி - அ, இ-சுட்டு; எ வினா. மெல்லின ஒற்றுக்களுள் ண், ன் என்பன எங்கும் மிகா. மண், பொன் எனத் தனிக்குறிலின் பின் இருப்பின் வருமொழியில் உயிர்வந்தால், மண் + எடுத்தான் = மண்ணெடுத்தான், பொன் + அளந்தான் = பொன்னளந்தான் என இரட்டிக்கும்.

அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம் - எனச் சுட்டிலும் வினாவிலும் ‘ங்’ மிகும்.

அஞ்ஞான்று, இந்நாய், எம்மாடு - எனச் சுட்டிலும் வினாவிலும் ஞ், ந், ம் என்பன மிகும்.

மெய்ஞ்ஞானம், செய்ந்நன்றி, செய்ம்முறை - எனத் தனிக்குறில் பக்கத்தில் ‘ய்’ வந்த நிலைமொழிகளில், ஞ், ந், ம் மிகும்.

மாங்காய், மாந்தளிர், மாம்பழம், விளாங்காய், விளாம்பழம், காயாம்பூ - எனச் சில மரப்பெயர்களில் ங், ந், ம் - மெலி மிகும்.

மேலே, இடை - மெலி மிகுதலில், மிகவும் இன்றியமையாதன எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. எந்த ஒற்றும் மிகுதலோ மிகாமையோ பொருள் பொருத்தம் கருதியேயாம். உடம்படு மெய்

மணி தீ-தலை என்னும் இ - ஈ ஐ என்னும் ஈறுகளில் முடியும் நிலைமொழிகளின் பின் உயிர் முதல் வருமொழிவரின், இடையில் ‘ய்’ என்னும் மெய் தோன்றும். சே - தே போன்ற ‘ஏ’ ஈற்றுச் சொற்களின் பின் உயிர்வரின், இடையில் ய், வ் என்பவற்றில் ஏதாவது ஒன்று தோன்றும். மற்ற உயிரீற்றுச் சொற்களின் பக்கத்தில் உயிர்வரின் இடையில் ‘வ்’தோன்றும். இந்த ய், வ் என்னும் மெய்கட்கு ‘உடம்படு மெய்’ (இணைக்கிற மெய்) என்று பெயராம். எனவே, மணி x ஓசை என்பதை மணிவோசை என்பது தவறு; மணியோசை என்பதே சரி. பலா இனிது என்பதைப் பலாயினிது எனல் தவறு; பலாவினிது என்பதே சரி.

இது நிற்க,- ஒரு-கரு-பெரு என்பவற்றின் பின் ஆசிரியர், இருள், ஒளி என உயிர் முதல் வருமொழி வரின் ஒரு ஆசிரியர், கரு இருள் பெரு ஒளி எனல் தவறு ஓராசிரியர், காரிருள், பேரொளி எனலே சரி.

கெடுதல் - திரிதல்

இதுகாறும் புணர்ச்சி விதிகளுள், இடையே ஓர் எழுத்து தோன்றி மிகுதலைப் பற்றிப் பார்த்தோம். இனி, இடையே எழுத்து கெடுதல் பற்றியும் திரிதல் பற்றியும் பார்க்கலாம்.

காலொடிந்தது என உடல் மேல் உயிர் ஒன்று தலையும், கல்லுடைந்தது எனத் தனிக்குறிலின் பக்கத்தில் உள்ள ஒற்று இரட்டுதலையும், விளக்கெரிந்தது என ஈருயிர் இணையின் ஓருயிர் கெடுதலையும் முன்பு கண்டோம் மேலும் சில காண்பாம்.

மரம் + வேர்=மரவேர் எனவும், வட்டம் + வடிவம்= வட்ட வடிவம் எனவும் ஈற்று ‘ம்’ மெய் கெடுதல் உண்டு.

மண் + குடம் = மட்குடம், பொன் + குடம் பொற் குடம் என ‘ண்‘ என்பது ‘ட்’ ஆகவும், ‘ன்’ என்பது ற் ஆகவும் திரியும்.

பொன் + தொடி = பொற்றொடி, முள் + தாள் + தாமரை = முட்டாட்டாமரை என நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் ஆகிய இரண்டுமே திரிதலும் உண்டு. இவ்வாறு இன்னும் பல உள.

மேற் குறிப்பிட்டுள்ள புணர்ச்சி விதிகளை யெல்லாம் நன்கு கற்றுத் தெளியின் பிழையின்றி எழுதலாம்; செய்யுள்களைச் சந்தி பிரித்துப் பொருள் புரிந்து கொள்ளவும் இயலும், இவைதொடர்பான நன்னுால் பாக்களை எல்லாம் கற்றுக் கொள்ளவேண்டும்.

வழக்கியல்

‘இலக்கணம் உடையது’ (267) என்னும் நன்னூல் பாவில் உள்ள ஆறு வழக்கியல்களுள், சிறப்பாக மரூஉ, இடக்கரடக்கல், மங்கலம் என்னும் மூன்றையும் கட்டாயம் கற்றறிய வேண்டும்.

புதுச்சேரி புதுவை எனவும், சென்னப்பட்டணம் சென்னை எனவும் மருவி - சுருங்கி - வருவது மரூஉ எனப்படும். இதனை ஒருவகைச் சுருக்கெழுத்து (Short hand) என்றும் கூறலாம். நடைமுறை இலக்கணம் என்ற பெயரில் இது மிகவும் தேவை.

மலங் கழுவுதலைக் கால் கழுவுதல் என்றும், ‘பீ’ என்பதை ‘பவ்வீ’ (ப் + ஈ) என்றும் மறைமுகமாகக் கூறுவது இடக்கர் அடக்கல் ஆகும். இஃதும் மிகவும் தேவை. செத்தாரைத் துஞ்சினார் - இயற்கை எய்தினார் - கைலாச - வைகுந்த பதவியடைந்தார் - திருநாடு அணி செய்தார் என்றெல்லாம் கூறுவது மங்கலம். வழக்காற்றில் இன்ன பிற மிகவும் இன்றியமையாதவை. தொடரிலக்கணம்

எழுத்துகளால் ஆனது சொல் - சொற்களால் ஆனது சொற்றொடர். சொற்றொடரைத் தொடர் எனவும் வாக்கியம் எனவும் கூறலாம். தொல்காப்பியமும் நன்னூலாரும் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் எழுதினார்களே தவிர, தொடர் அதிகாரம் எனத் தனியே ஒன்றும் எழுதவில்லை. ஆனால், தொல்காப்பியர் தொடரதிகாரத்தை - அதாவது தொடரிலக்கணத்தை, சொல்லதிகாரத்தின் ஒன்பது இயல்களுள் முதலாவதான ‘கிளவியாக்கம்’ என்னும் இயலுள் கூறியுள்ளார். அதன் பின்பே, பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய சொற்களின் இலக்கணத்தைத் தனித்தனி இயலில் கூறியுள்ளார்.

உளவியல் முறை

சொல்லால் ஆனது தொடராதலின், சொல்லிலக்கணம் முதலில் கூறித் தொடரிலக்கணம் பின்பு கூறுவது ‘காரண காரிய முறை’ (Logic Method) ஆகும். தொடர் பற்றி முதலில் கூறிப் பின்னர்ச் சொற்களைப் பற்றிக் கூறுவது உளவியல் முறை (Psychological Method) ஆகும். இவற்றுள் பின்னதே சரியானது. மக்கள் தொடராகவே பேசுகின்றனர்; சொல் - சொல்லாக இடைவெளி விட்டுப் பேசுவதில்லை. முதற்கால மக்களும் இக்காலக் குழந்தைகளுங் கூட, தொடராகவே பேசினர். பேசுகின்றனர். சில நேரம் தனிச்சொல் கூறினால், ஒரு தொடர் அதில் தொக்கியிருப்பதாகப் பொருள் கொள்ளல் வேண்டும். தனிச் சொல்லுக்கு மதிப்போ பொருளோ இல்லை. தொடராகச் சொல்லும் போது தான் ஒவ்வொரு சொல்லும் உரிய மதிப்பு பெறுகின்றது. கற்பிக்கும் ஆசிரியர், தனித் தனிச் சொல் தந்து சொற்றொடரில் (வாக்கியத்தில்) அமைத்து எழுதும்படி மாணாக்கர்க்குப் பயிற்சி அளிப்பார். தொடரில் வரும் போது, கடினமான அரிய சொல்லுக்கும் பொருள் விளங்கக் கூடும். இதற்குத் ‘தன் பொருளைத் தானே விளக்கும் தொடர்’ என்று பெயர் கூறுவர். தனிச் சொல்லுக்கு மதிப்பு இல்லாதது போலவே, தனி எழுத்துக்கும் மதிப்பு இல்லை. சொல்லில் வரும் போதே சொல்லாக வரும் போதே தனி எழுத்துக்கு மதிப்பு உண்டு.

ஒரு சொல் தொடர்

தனிச் சொல்லுக்கு மதிப்பு இல்லை எனினும், சில இடங்களில், ஒரு சொல்லே ஒரு தொடரின் பொருளைத் தருவதுண்டு. குழந்தை அம்மாவை நோக்கி 'அம்மா’ என்று ஒரே சொல் சொல்லி விளித்தால், அம்மா தண்ணீர் வேண்டும் - அம்மா பால் வேண்டும் - அம்மா காசு வேண்டும் - என ஒரு தொடரே அதில் அடங்கியிருப்பதாகப் பொருள் கொள்ளல் வேண்டும்.

இலக்கண இன்பம்

இலக்கணக் குறிப்பின் வாயிலாக இலக்கியத்தைச் சுவைக்கும் பயிற்சியும் வேண்டும். காட்டாக வினைத் தொகையை எடுத்துக் கொள்வோம். வினைத் தொகை என்பது பெயரெச்சத்தின் சுருக்கமேயாகும். வாழ்ந்த மனை - வாழ்கின்ற மனை - வாழும் மனை என்பனவும், முதிர்ந்த கனி - முதிர்கின்ற கனி - முதிரும் கனி என்பனவும், முறையே முக்காலம் காட்டும் பெயரெச்சங்களாகும். வாழ் மனை, முதிர் கனி என்பவற்றில் உள்ள வாழ், முதிர் என்பன வினைத் தொகைகள். இவற்றில் காலம் காட்டும் ‘த்’, ‘கின்று’ என்னும் இடை நிலைகளும், ‘உம்’ என்னும் விகுதியும் தொக்கு (மறைந்து) இருப்பதால், இவை வினைத் தொகை எனப்படும். அதாவது, வினைக்கு இன்றியமையாததாகக் கருதப்படும் காலம் மறைந்த பெயரெச்சம் வினைத் தொகையாகும்.

“வினையின் தொகுதி காலத்தியலும்” (தொல் - சொல் எச்சவியல் -19) என்பது தொல்காப்பிய நூற்பா. வினையின் தொகுதி என்பது வினைத்தொகை.

“காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை” (364). என்பது நன்னூல். எந்த வினைத் தொகையிலும் இடையில் ஒற்று மிகுதலோ, ஓரெழுத்து கெடுதலோ, ஒன்று மற்றொன்றாகத் திரிதலோ - எதுவும் கூடாது. வினைத் தொகை பற்றித் தெரிந்தால்தானே எந்த மாறுதலும் இன்றி இயற்கையாக எழுதமுடியும்! இந்தப் பயனோடு, இதில் உள்ள மொழி நயத்தைச் சுவைப்பதற்கு சாத்தனாரின் மணிமேகலை நூலிலிருந்து ஒரு பகுதியைக் காண்போம்:-

மாலைக்காட்சி ஒன்றைச் சாத்தனார் (ஷுட்டிங் செய்து) படம் பிடித்துக் கொடுத்துள்ளார். அதை நான் படிப்பவரின் உள்ளத்திரையில் (ஆப்பரேட் செய்து) போட்டுக் காட்டுவேன்:

ஒரு நாள் மாலை மயங்கும் நேரம் - ஒரு தாமரைத் தடாகம். காதலர்களாகிய சேவல் அன்னம் ஒன்றும் பெடை அன்னம் ஒன்றும் தடாகத்தில் தாமரை மலர்மேல் தாவித் தாவி விளையாடிக் கொண்டிருந்தன. பெடை அன்னம் விளையாடியதால் அயர்ந்து ஒரு பெரிய மலர் மேல் அமர்ந்தது. அப்போது அம்மலர் இயற்கையாகக் குவிந்து மூடி பெடை அன்னத்தை மறைத்து அடக்கிக் கொண்டது. பெடையைக் காணாத சேவல் சுற்று முற்றும் தேடி, பின் தாமரை மலரால் மூடப்பட்டிருந்ததை அறிந்து, இதழ்களை - மெதுவாக அன்று-கண்டபடி விரைந்து கிழித்து பெடையை அழைத்துக் கொண்டு கரையேறி விட்டது. இதனை, மணிமேகலையில்-மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதையில் உள்ள (123-126)

“அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்கப்
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு-ஏற”

என்னும் பாடல் பகுதியால் அறியலாம். ஈண்டு, தன்னுறு பெடை, அடக்க, பொதி சிதையக் கிழித்து-என்னும் சொல்லாட்சிகள் குறிப்பிடத்தக்கன.

சேவலுக்கு நீர் என்றாலே அச்சம் (அலர்ஜி) ஏற்பட்டு விட்டது. தண்ணீரினின்றும் நீண்ட இடைவெளி உள்ள ஓர் இடத்தில் தங்க வேண்டும் என எண்ணியது. கரையில் உள்ள ஒரு செடியில் தங்கலாமா? செடி உயரம் இல்லை. தண்ணீருக்கும் செடிக்கும் இடைவெளி குறைவு. அதனால் ஒரு மரத்தில் தங்க எண்ணியது. மரம் என்றால் உயர்ந்த மரமாயிருக்க வேண்டுமே! எனவே, அங்கிருந்த மர வகைகளில் உயர்ந்ததான தென்னையில் தங்க எண்ணியது. இருந்த தென்னை மரங்கட்குள்ளும் உயர்ந்த - மிக உயர்ந்த தென்னை மரத்தைத் தேர்ந்தெடுத்தது - அந்த மிக உயர்ந்த தென்னையிலும் எவ்விடத்தில் அமரலாம்? ஏதாவது ஒரு மடலில் (மட்டையில்) தானே அமர வேண்டும்! எந்த மடலில் அமரலாம்? நாள்பட்டதால் கீழ் நோக்கித் தொங்கும் மடல்களில் அமரப் பிடிக்கவில்லை. பக்க வாட்டத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் நடுத்தர மடல்களிலும் தங்க விருப்பம் இல்லை. மேல்நோக்கிச் செங்குத்தாக உயர்ந்து நீண்டு கொண்டிருக்கும் மடலிலே தங்க விரும்பியது. ஏனெனில், அந்த மடல், விநாடிக்கு விநாடி உயர்ந்து கொண்டே இருந்ததாம். (இந்தக் கருத்தைச் செகதீச சந்திரபோசின் ஆராய்ச்சியாலும் அறியலாம்). எனவே, அந்த மடலிலேயே தங்க எண்ணியது. இதனை, அந்தப் பாடல் பகுதியைத் தொடர்ந்துள்ள

“ஓங்கு இரும் தெங்கின் உயர்மடல் ஏற” (126)

என்னும் அடியால் அறியலாம். ‘ஓங்கு’ என்னும் வினைத் தொகை, மரம் ஓங்கிக் கொண்டே - உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை அறிவிக்கின்றது. உயர் மடல் என்னும் வினைத்தொகை, மடல் (மட்டை) நேரத்துக்கு நேரம் உயர்ந்து கொண்டிருக்கின்றது என்னும் நயத்தை அறிவிக்கிறது. உயர்ந்துகொண்டே இருப்பதால்தான் ‘மடல் அமர’ என்று கூறாமல், ‘மடல் ஏற’ என இன்னும் ஏறு முகமாகவே இருப்பதாகச் சாத்தனார் புனைந்து ஓவியப்படுத்தியுள்ளார். ஓங்கு தெங்கு - உயர்மடல் என்னும் வினைத்தொகைகளில் பொதிந்து கிடக்கும் மொழி நயச்சுவை - இலக்கண இன்பம் இப்போது விளங்கலாம்.

எனவே, நன்னூலில் உள்ள இலக்கணக் குறிப்புகளைக் கற்பிக்கும்போது, இயன்ற அளவு இலக்கியத்தோடு இணைத்துப் பொருத்திக் காட்டி இன்பம் பெறச் செய்தல் வேண்டும். இதனால், மாணாக்கர் இலக்கணத்தை ஆர்வமுடன் கற்பர்.

இலக்கணத்தின் இன்றியமையாமை

பல இலக்கணச் செய்திகளையும் கற்று மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் வேண்டும் என்பது இதுகாறும் அறிவிக்கப்பட்டது. இலக்கண விதி தெரியாமற் போனால் என்ன? ஏறக்குறையக் கருத்தைத் தெரிவித்தால் போதாதா என்று கூறுபவர் இன்றும் உளர். அவர்கள் பேசுவதுபோல் எழுத வேண்டும் என்றும் கூறுவர்.

இதனால் ஏற்படும் இழப்பு சொல்லுந் தரத்த தன்று. பேசுவதுபோல் எழுத வேண்டும் எனில், யார் பேசுவது போல் எழுதல் வேண்டும். ஒரே மொழியை, மூலைக்கு மூலை வெவ்வேறு விதமாகப் பேசுகின்றனரே. இப்படியே போய்க்கொண்டிருந்தால் மொழி சிதைந்து பிரியும். தமிழில் தொடக்கக் காலத்தில் பேசப்பட்ட சொல்லுருவங்கள், எழுந்து வடிவம் பெற்றதும், இலக்கண நடை உடையனவாகக் கருதப்பட்டன. நாளடைவில் அவ்வுருவங்கள் பேச்சு மொழியில் சிதைந்து வழங்கப்படலாயின. பின்னர், சிதைந்த அந்தத் தமிழ் வடிவங்களே, நல்ல இலக்கண நடை உடையனபோல் கருதப்பட்டு, வேறு-வேறு மொழிகளாக மாறிப் பிரிந்தன. இவ்வாறு சிதைந்து பிரிந்ததற்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

தமிழ் -- தெலுங்கு -- கன்னடம் -- மலையாளம் --
அண்ணன் அன்ன அண்ணா --
தம்பி தம்புடு தம்ம --
அக்காள் அக்க அக்க --
தாத்தா தாத தாத --
மாமன் மாம மாவ அம்மாவன்
ஊண் -- ஊண்ட ஊண்
அது,இது,எது அதி,இதி,எதி அது,இது,எது அது,இது,எது
மழை வானெ மளெ மழ
பகல் பகலு அகிலு பகல்
யார் எவரு யாரு யாரானு
ஊர் ஊரு ஊரு ஊரி
ஊருக்கு ஊரிக்கி ஊரிகே ஊரிலே
கண் கண்ணு கண்ணு கண்ணு
மூக்கு முக்கு மூங்கி மூக்கு
வாய் -- பாயி வாயி
செவி செவ்வு -- செவி
நாய் -- -- நாயி
தலை தல தலெ தல
எருது, காளை எத்து எத்து காள
ஏழு ஏடு ஏளு ஏழு
கூழ் கூடு கூளு கூழு
தமிழ் -- தெலுங்கு -- கன்னடம் -- மலையாளம் --
கடை கட கடெ கட
மலை மல மலெ மல
கரை கர கரெ கர
உரல் ரோலு ஒரல் ஒரல்
கெடு செடு கெடு கெடு
இலை எல -- --
ஐந்து ஐது ஐது அஞ்சு
யான் நான் ஏனு, நேனு நானு ஞான்
பத்து பதி ஹத்து பத்து
பெயர், பேர் பேரு ஹெசரு பெயர்
பாம்பு பாமு ஹாவு பாம்பு
குன்று -- -- குன்னு
கொன்று -- -- கொன்னு
தின்று -- -- தின்னு
மகன் -- மகனு --
மகள் -- மகளு --

மேலே காட்டியவற்றில் உள்ள தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மும்மொழிகளின் இலக்கண நடைச் சொற்கள் ஏறக் குறையத் தமிழ் மொழியின் பேச்சு வழக்கில் உள்ள கொச்சைச் சொற்கள் போல இருப்பதை யாவரும் அறிவர். எனவே, குறிப்பிட்ட ஓர் இலக்கண நடையைப் பின் பற்றாமல், கண்டபடி மொழியைக் கையாளின், ஒரு மொழிச் சொற்கள் பலமொழிச் சொற்களாக மாறும் - அதாவது, பல மொழிகளாகப் பிரியும்; அதனால், மக்கள் பல்வேறு மொழியினராகப் பிரிவர். சேர நாட்டுத் தமிழர்கள் மலையாளிகளாக ஆனமை அறிந்த ஒன்றே.

இலத்தின் மொழியிலிருந்து, இத்தாலி, பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்ச்சுகீசியம் முதலிய மொழிகள் பிரிந்தது இந்த மாதிரியே யாகும். இவற்றுள் சிலவற்றை Spoken Latin என்று சிலர் சொல்வர்; அதாவது, இலத்தீனின் கொச்சைப் பேச்சு வடிவங்களே இம்மொழிகளாகத்திரிந்தன என்பர். இதில் சிலர்க்குக் கருத்து வேற்றுமையும் இருக்கலாம்.

எனவே, இலக்கணம், மக்கள் பிரியாதிருக்கும்படி அவர்களிடையே ஒருமைப்பாட்டை உண்டாக்குகிறது எனலாம். தொல்காப்பியத்தில் உள்ளவற்றுள் சிலவற்றை நீக்கியும், இல்லாத சிலவற்றைச் சேர்த்தும் நன்னூலைப் பவணந்தியார் படைத்துள்ளார் என்பது உண்மைதான் அதனால், நடைமுறை இலக்கணம் என்று சொல்லிக் கொண்டு அளவு மீறிக் கண்டபடி மொழியில் மாற்றம் செய்யக்கூடாது. ஒரு சிறிதும் மாற்றம் செய்யக்கூடாது என்று பிடிவாதமாய் முரட்டுத்தனமாய்ப் பேசக்கூடாது. ஆர்தர் மன்னர் (King Arthur) தம் இறுதிக்காலத்தில் பெடீவர் (Bedeiver) என்னும் அமைச்சரை நோக்கி, “The old order changeth yielding place to new” என்று கூறினாராம். அதாவது, பழமை புதுமைக்கு இடம் தந்து மாறுகிறதாம். இதைத்தான் பவணந்தியார் தம் நன்னூலின் இறுதியில் பின்வருமாறு கூறிப்போந்தார்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே” (462)

கட்டுரைக்குக் கருத்து வழங்கிய கருவூலங்கள்

தொல்காப்பியம் - தொல்காப்பியர்
நன்னூல் - பவணந்தி முனிவர்
நற்றிணை - பாடல் 359 – கபிலர்
மலைபடு கடாம் - இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கெளசிகனார்
பெரும் பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங் கண்ணார்.
மணிமேகலை - சாத்தனார்
திருநாவுக்கரசர் தேவாரம் - திருவானைக்காப் பதிகம்
கம்ப ராமாயணம் - கம்பர்
ஒளவையார் தனிப்பாடல்
அம்பிகாபதி காதல் காப்பியம் - சுந்தர சண்முகனார்
தமிழ் இலத்தீன்பாலம் - சுந்தர சண்முகனார்
மொழியியல் கருத்துகள்
ஆங்கிலம் - பிரெஞ்சு - இலத்தீன் - இலக்கணக் குறிப்புகள் சில
தெலுங்கு - கன்னடம் - மலையாளம் - இவற்றின் சொற்கள் சில

பிற்சேர்க்கை
‘ஏ’ - இடைச்சொல்

புதிய கண்டுபிடிப்பு

இது தொடர்பான செய்தியைக் கூற, கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் - நட்புக் கோள் படலத்தில் உள்ள ஒரு செய்யுளை நோக்கிச் செல்லலாம்.

அனுமன் கூறிய சூழ்வுரைகளைத் தன் அறிவுக் கூர்மையால் ஆய்ந்தறிந்த சுக்கிரீவன், அனுமனை நோக்கி, பொன்னைப் போன்றவனே! உன்னையே உடைமையாகப் பெற்ற எனக்கு இயலாதது ஒன்றுமில்லை. இராமனிடம் போவோம் வருக என்று கூறிச் சென்று தனக்குத் தானே ஒத்தவனாகிய இராமனின் தாள் சேர்ந்தான்.

அன்னவாம் உரையெலாம் அறிவினால் உணர்குவான்
உன்னையே உடைய எற்கு அரியது எப்பொருளரோ
பொன்னையே பொருவுவாய் போதெனப் போதுவான்
தன்னையே அனையவன் சரணம்வந் தணுகினான் (16)

‘உன்னையே உடைய’ என்பது பொருள் பொதிந்த தொடர். நீயே என் முழு உடைமைப் பொருள் எனவும், என் உடைமைப் பொருள்களுள் நீயே சிறந்த உடைமை எனவும், மிகவும் சிறந்தவனாகிய உன்னையே யான் உடைமையாக உடையேன் எனவும் இந்தத் தொடருக்குப் பொருள் கூறலாம். இங்கே புதிய இலக்கணக் குறிப்பு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். அதாவது:

‘ஏ’ என்ற இடைச் சொல்லுக்குத் தேற்றம், வினா, பிரிநிலை, எண், ஈற்றசை என ஐந்து பொருள்கள் உண்டெனவும், ‘உம்’ என்னும் இடைச்சொல்லுக்கு எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் என்னும் எட்டுப் பொருள்கள் உண்டெனவும் தொல்காப்பியர் இடையியலில் கூறியுள்ளார்.

“தேற்றம் வினாவே, பிரிநிலை, எண்ணே,
ஈற்றசை இவ்வைந்து ஏகா ரம்மே” (9)

“எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்று
அப்பா லெட்டே உம்மைச் சொல்லே”(7)

என்பன நூற்பாக்கள்.

‘ஏ’ இடைச் சொல்லுக்குத் தொல்காப்பியர் கூறியுள்ளவற்றோடு ‘இசைநிறை’ என்ற ஒன்று கூட்டி ‘ஏ’ ஆறு பொருளில் வரும் என்று நன்னூலார் இடையியலில் கூறியுள்ளார்.

“பிரிநிலை வினாஎண் ஈற்றசை தேற்றம்
இசைநிறை என ஆறு ஏகாரம்மே” (3)

என்பது நூற்பா. ‘உம்’ (உம்மை) என்னும் இடைச் சொல்லுக்கு நன்னூலாரும் எட்டுப் பொருள்கள் கூறியுள்ளார்.

“எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம்முற்று அளவை
தெரிநிலை ஆக்கமோடு உம்மை எட்டே” (6)

என்பது நூற்பா.

தொல்காப்பியரும் நன்னூலாரும் ‘உம்’ என்னும் இடைச்சொல்லுக்கே ‘சிறப்பு’ என்னும் பொருள் உண்டு என்றுள்ளனர்; ‘ஏ’ என்னும் இடைச்சொல்லுக்குச் ‘சிறப்பு’ என்னும் பொருள் உண்டென அவர்கள் கூறிற்றிலர். ‘ஏ’ என்னும் இடைச்சொல்லும் ‘சிறப்பு’ என்னும் பொருள் தரும் என அடியேன் (சு. ச.) கூறுகிறேன். இதை விளக்க மீண்டும் ‘உன்னையே உடைய’ என்னும் தொடருக்கு வருவோம். இதற்கு, ‘நீயே என் முழு உடைமைப் பொருள்’ எனப் பொருள் கூறின் ‘ஏ’ தேற்றமாகும். ‘என் உடைமைப் பொருள்களுள் நீயே சிறந்த உடைமை’ எனப் பொருள் கூறின் ‘ஏ’ பிரிநிலையாகும். மிகவும் சிறந்தவனாகிய உன்னையே யான் உடைமையாக உடையேன்’ எனப் பொருள் கூறின் ‘ஏ’ சிறப்பு ஆகும். தொல்காப்பியரும் நன்னூல் இயற்றிய பவணந்தியாரும் கூறாத சிறப்புப் பொருள் ‘ஏ’ என்னும் இடைச் சொல்லுக்கும் உண்டு என்பதுதான் அடியேனது புதுக் கண்டுபிடிப்பாகும்.