இயல் தமிழ் இன்பம்/பெண் தெய்வ வழிபாடு

12. பெண் தெய்வ வழிபாடு


‘கடவுள் மனிதரைப் படைத்தார்; மனிதர்கள் கடவுள்களைப் படைத்தனர்’ என்பதாக ஒரு கருத்து கூறப்படுகிறது. உயிர் இனங்கள் அனைத்திலும் ஆண் - பெண் உண்டு. எனவே, கடவுளர்களிலும் மக்கள் ஆண் - பெண் கண்டனர். இந்த இரண்டும் இன்றித் தோற்றம் இல்லை.

இந்து மதத்தில் ஆண், தெய்வங்களாகவும், பெண் தெய்வங்களாகவும் தெய்வங்கள் பல உண்டு. இவண் நாம் பெண் தெய்வ வழிபாடு பற்றிச் சில செய்திகள் காண்போம்.

இயற்கை வழிபாடு

விண், காற்று, தீ, நீர், மண் என்னும் ஐந்து முதற் பொருள்களுள், விண் விண்ணவன் - விண்மகள் - விண் மடந்தை - ஆகாச வாணி என்றும், நீர் துர்காதேவி - காவிரித்தாய் என்றும் மண் மண்மகள் - மண்மடந்தை - நில மகள் - பூமாதேவி என்றும் பெண்ணாக உருவகிக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. இயற்கைப் பெண் தெய்வ வழிபாடு இது. பால் தரும் பசுவையும் பெண் தெய்வமாக வழிபடுவது இந்திய மக்களின் மரபு.

மாரியம்மன் வழிபாடு

மாரியம்மன் என்னும் பெயரில் நாடெங்கும் கோயில்களும், வழிபாடுகளும் உண்டு. மாரியம்மன் மாரியாத்தா என்ற பெயராலும் வழங்கப்படும். அம்மன் - ஆத்தா என்றால் தாய் என்று பொருள். மாரி என்றால் மழை. எனவே, மழையைத் தந்து மக்களை வாழ வைக்கும் தெய்வம் என்னும் பொருளில் மாரியம்மன் - மாரியாத்தா என்னும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மாரியம்மன் கோயில் விழாக்கள் நாட்டில் மிகவும் பெயர் பெற்றவை.

மாரியம்மன் வரலாறு

திருவள்ளுவரின் மனைவிதான் மாரியம்மன் ஆனாள் என்பது ஒரு கதை. பிறகு முனிவரின் மனைவி நாகாவலி என்பவளே மாரியம்மன் ஆனாள் என்பது மற்றொரு கதை. சமதக்கினி முனிவரின் மனைவி இரேணுகாதேவி என்பவளே மாரியம்மன் ஆனாள் என்பது வேறொரு கதை. இரேணுகாவின் மகன் பரசுராமன் தாய் செய்த ஒரு பெருங் குற்றம் பற்றி, அவளைத் தலை வேறாகவும், உடல் வேறாகவும் வெட்டி விட்டானாம். எனவேதான், சில இடங்களில் கழுத்தை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். கழுத்து மாரியம்மன் கோயில்கள் தோன்றிய வரலாறுகளுள் இஃதும் ஒன்று. சிலர் வழிபடும் வாசவி என்னும் வாசவாம்பாளுக்கும் மனிதத் தொடர்புடைய வரலாறு சிலரால் கூறப்படுகிறது. பூவாடைக்காரி வழிபாடு

பெண் ஒருத்தி கணவன் இருக்கும்போதே கட்டுக் கழுத்தியாய்ப் (சுமங்கலியாய்ப்) பூவுடனும், பொட்டுடனும் இறந்துவிடின், அவளுக்குப் பூவாடைக்காரி என்னும் பெயர் வழங்கிப் புதுப் புடவை எடுத்து வைத்துச் சிறப்பு உணவு வகைகள் செய்து ஆண்டுதோறும் படையல் போடுவது ஒரு சில குடும்பங்களின் மரபாகும். இது மாட்டுப் பொங்கலன்றோ அல்லது வேறொரு நாளிலோ நடைபெறும்.

கண்ணகி வழிபாடு

களவு செய்யாத கணவனை - இழந்த மறக்கற்பு உடைய கண்ணகி தெய்வமாக வழிபடப்பட்டது பலரும் அறிந்த வரலாறு. கண்ணகிக்காக இளங்கோவடிகள் ‘சிலப்பதிகாரம்’ என்னும் ஒரு சொல் கோயில் கட்டினார். அவருடைய தமையன் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்காக ஒரு கல் கோயில் கட்டினான். தமிழ்நாடு முழுவதும் கோயில்கள் எழுந்தன. இலங்கைக் கயவாகு மன்னன் இலங்கையில் கண்ணகிக்குக் கோயில் கட்டினான். வேறு சில இடங்களிலும் கண்ணகி வழிபாடு பரவியது.

திரௌபதி வழிபாடு

கண்ணகி போலவே திரௌபதியும் மனிதப் பெண் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் பாரதக்கதை பரவியதும், கண்ணகி கோயில்க்ளின் இடத்தைத் திரௌபதி பிடித்துக் கொண்டதாக ஆராய்ச்சியாளர் அறிவிக்கின்றனர். இப்போது, தமிழகத்தில் - எனக்குத் தெரிந்தவரையும் வட தமிழ் நாட்டில் - திரௌபதி கோயில் இல்லாத ஊர்களே இல்லை எனலாம். திரௌபதியம்மன் தொடர்பாகப் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதன் தொடர்பாகத் தீமிதிப்பு, தெருக்கூத்து போன்றனவும் நிகழ்கின்றன. மாதா கோயில் வழிபாடு

ஏசுநாதரின் அன்னையாராகிய மரி - மேரி (MARY) என்னும் அம்மையாரைக் கிறித்தவர்கள் வழிபடுவது கண்கூடு. ‘சர்ச்சு’ (CHURCH) என்னும் ஆங்கிலப் பெயரால் குறிப்பிடப்படும் கோயில், மாதா பெயரால் மாதா கோயில் எனக் குறிப்பிடுவது எண்ணத் தக்கது. கருத்து ஒப்புமை காண்டலுக்காக மாதாகோயில் வழிபாடு ஈண்டு குறிப்பிடப்பட்டது.

நவராத்திரி வழிபாடு

கல்வியைக் கலைமகள் (சரசுவதி) ஆகவும், செல்வத்தை அலைமகள் (இலக்குமி) ஆகவும் பெண் தெய்வங்களாக உருவகித்துக் கூறுவது ஒருவகை மரபு. இந்தப் பெண் தெய்வங்கள் மூவர்க்கும் மும் மூன்று இரவு வீதம் மொத்தம் ஒன்பதுநாள் விழா எடுப்பதுதான் நவராத்திரி வழிபாடு ஆகும். நவராத்திரி=ஒன்பது இரவு. புரட்டாசித் திங்கள் அமாவாசை கழிந்த முதல் மூன்று நாள் இரவில் துர்க்கைக்கும் (பார்வதிக்கும்), அடுத்த மூன்று நாள் இரவில் திருமகளுக்கும், இறுதி மூன்று நாள் இரவு கலைமகளுக்கும் வழிபாடு நடத்துவது மரபு. இந்த முறையை மாற்றி, இறுதி மூன்று நாள் இரவு துர்க்கைக்கு உரியது என்று கூறுவாரும் உளர். ஆனால், கலைமகளுக்கு உரியதாகக் கூறுவதே பொருத்தமாகும். ஒன்பதாம் நாளாகிய மகாநவமியன்று ‘சரசுவதி பூசை’ என்னும் பெயரிலேயே தமிழகத்தில் ‘பண்டிகை’ கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளை ‘ஆயுதபூசை’ நாள் என்று கூறிப் பல்வேறு கருவிகளைப் போற்றுவதும் மரபு.

பத்தாம் நாள் விசய தசமி என்னும் பெயரில் வாழ்க்கைக்கு வெற்றி தரும் நாளாகக் கொண்டாடுவர். பிள்ளைகட்கு அந்நாளில் கல்வி தொடங்கப்பெறும்.

இந்தப் பண்டிகைக் காலத்தில் கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைப்பதும், அரசர்கள், மடாதிபதிகள் முதலியோர் கொலுவீற்றிருப்பதும், பெண்கள் ஒருவரையொருவர் வரவேற்றுப் போற்றுவதும் நடைமுறை வழக்கம். ஆக இந்தக் கொண்டாட்டம் முழுக்க முழுக்க பெண் தெய்வ வழிபாட்டின் ஒரு கூறு (அம்சம்) ஆகும்.

கொற்றவை வழிபாடு

சிவனுடைய தேவியாகிய சிவைக்குப் பல வகையான பெயர்கள் இருப்பதுடன், பல வகையான கதைகளும் சிவை பற்றிச் சொல்லப்படுகின்றன். சிவைக்குப் பல் வகையான உருவங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று: சிங்க ஊர்தியில் (வாகனத்தில்) அமர்ந்து, மகிடாசுரனைக் கொன்று அவன் மார்பில் பாய்ச்சிய வேல் அல்லது சூலத்துடன் இருக்கும் தோற்றமாகும். இந்தத் திருமேனித் தோற்றத்திற்கு வட மொழியில் “துர்க்கை” என்னும் பெயரும் தமிழில் கொற்றவை என்னும் பெயரும் தரப்பட்டுள்ளன, சிவையாகிய பகவதிக்குக் கொற்றவை என்னும் பெயரும் துர்க்கை என்னும் பெயரும் உண்டு என்பதைத் திவாகரரின் சேந்தன் திவாகர நிகண்டினாலும், மண்டல புருடரின் சூடாமணி நிகண்டினாலும் அறியலாம். அப்பாடல் பகுதிகள் வருமாறு:-

சேந்தன் திவாகர நிகண்டு - தெய்வப் பெயர்த் தொகுதி 23-ஆம் பாடல்:

“கொற்றவை, ஐயை, காாத்திகை, கௌரி,
துர்க்கை, சூலி, மகிடற் காய்ந்தாள். .......
மேதித் தலைமிசை விசயை...........
சீர்சால் பகவதி சிறந்ததொல் பெயரே.........”

சூடாமணி நிகண்டு தேவப் பெயர்த் தொகுதி - 40, 41-ஆம் பாடல்களில் உள்ள பெயர்கள்:

“...மகிடற் செற்றாள் கொற்றவை சக்கிரபாணி...
மேதிச் சென்னிமேல் இடர்உற மிதித்த மெல்லியல்
சூலி சண்டிகையே கன்னி சுந்தரி துர்க்கை நாமம்”-

இந்த இரண்டு நிகண்டுகளிலும் கொற்றவை, துர்க்கை என்னும் பெயர்கள் உள்ளன; சூலம் உடையவள் என்னும் பொருளில் சூலி என்னும் பெயர் உள்ளது; மகிடாசுரனைக் கொன்றவள் என்னும் பொருளில் மகிடன் காய்ந்தாள், மகிடன் செற்றாள் என்னும் பெயர்கள் உள்ளன. கொற்றவைக்குச் சிங்க ஊர்தி உண்டெனினும், எருமைத் தலை அசுரன் என்னும் பொருளுடைய மகிடாசுரனை அழித்ததும் அவன் அவன் தலைமேல் அமர்ந்தாளாம். மகிடம், மேதி என்பவற்றின் பொருள் எருமை. இதைத் தான், ‘மேதித் தலைமிசை விசயை’ எனவும், ‘மேதிச் சென்னிமேல் இடர் உற மிதித்த மெல்லியல்’ எனவும் நிகண்டுகள் குறிப்பிட்டுள்ளன.

இதைத்தான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் வழக் குரை காதையில்,

“அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை” -

(34, 35, 36)

என்று குறிப்பிட்டுள்ளார். துணிக்கப்பட்ட - பச்சைக் குருதி (இரத்தம்) அடங்காமல் ஒழுகுகின்ற பிடரித்தலையாகிய இருக்கையில் அமர்ந்து கையில் வேலேந்திக்கொண்டுளள் கொற்றவை - என்பது இந்தப்பாடல் பகுதியின் கருத்தாகும்.

துர்க்கையைப் பற்றி மார்க்கண்டேய புராணம் முதலிய நூல்கள் பல கதைகளைக் கட்டியுரைத்துள்ளன. துர்க்கைக்கு நூறு கைகளாம் - ஒவ்வொரு கையிலும் படைக்கலம் (ஆயுதம்) இருக்குமாம் மற்றும் சில:

மகிடாசுரனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் திருமாலிடமும், சிவனிடமும் சென்று முறையிட்டார்கள். திருமால் முகத்திலிருந்தும், தேவர்களின் முகத்திலிருந்தும் ஒருவகை ஒளிப்பிழம்புகள் தோன்றினவாம். இந்தப் பிழம்புகள் ஒன்று கூடித் துர்க்கை என்னும் பெண் தெய்வமாயிற்றாம். இராவணனை வெல்வதற்காக இராமர் கூடத் துர்க்கையை வழிப்பட்டாராம். இன்னும் எத்தனையோ கதைகள் - என்னவோ கதைகள் பற்பல கூறப்படுகின்றன.

நடை முறைப் பயன்

யார் யாருக்கோ என்ன என்ன நன்மைகளோ புரிந்த துர்க்கை, இப்போது, உரிய காலத்தில் திருமணம் ஆகாமல், முதுமையை நெருங்கிக்கொண்டிருக்கும் கன்னிப் பெண் கட்குத் தாலிப் பிச்சை போடும் தெய்வமாகக் காட்சியளிக்கிறாள். இத்தகைய பெண்கள் செவ்வாய்க் கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்கு மேல் 4-30 மணிக்குள்ளான இராகு காலத்தில் துர்க்கை கோயிலுக்குச் சென்று என்னென்னவோ படையல் செய்து வழிபட்டு வணங்கி வருகின்றனர். இது மிகவும் இரங்கத்தக்க காட்சி!

‘சக்தி யின்றிச் சிவம் இல்லை’ என்பார்கள். இது, பெண் தெய்வங்களின் பெருமையைக் குறிக்கிறது. நன்மை கிடைக்கும் என நம்பி மக்கள் பெண் தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். இந்த நம்பிக்கை வீண் போகாமல் தக்க பயன் கிடைக்க வேண்டும் என்று வேண்டுவோமாக!