இயல் தமிழ் இன்பம்/மூவர் தமிழ்
‘மூவர் தமிழ்’ என்பது சில நூல்களில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஔவையார் தமது ‘நல்வழி’ என்னும் நூலின் நாற்பதாம் பாடலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“தேவர் குறளும் திருநான் மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம் என்றுணர்” (நல்வழி-40)
மூவர் தமிழ் என்பதில் மூவர் என்பவர் யார் -யார்? மூவர் தமிழ் என்பது எது? இதற்கு விடை, உமாபதி சிவா சாரியாரால் (உமாபதி சிவத்தால்) இயற்றப்பட்டதாகக் கூறப்படும் ‘திருமுறை கண்ட புராணம்’ என்னும் நூலில் உள்ளது.
இந்த நூலில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் மூவர் தொடர்பான செய்திகளும், இவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்கள் தொடர்பான செய்திகளும் பேசப்பட்டுள்ளன. இவர்கள் அருளிய தமிழ்ப் பாடல்கள் ‘மூவர் தமிழ்’ (9), ‘மூவர் செந்தமிழ்கள்’ (10), ‘மூவர் பாடல்’ (13, 22) எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இம் மூவரும் ‘தமிழ் மூவர்’ (19) என்று ஒரு பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதனால், மூவர் யார் - யார்? என்பதும், மூவர் தமிழ் என்பது இம்மூவரும் பாடிய தமிழ்ப் பாடல்களைக் குறிக்கும் என்பதும் பெறப்படும். இனி, இந்த மூவர் தமிழ் பற்றிய வரலாற்றை, திருமுறை கண்ட புராணத்தில் உள்ளவாறு காண்பாம்.
இராச ராச சோழனிடம், அவ்வப்போது சிலர் வந்து, இந்த மூவரால் அருளப்பட்ட சிற்சில பாடல்களைப் பாடிக் காட்டினர். பாடலைக் கேட்டுச் சுவைத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்த மன்னன், இம்மூவரின் பாடல்கள் அனைத்தையும் அறியவேண்டும். அவை எங்கே உள்ளன எனத் தேடச் செய்தான். எங்கும் கிடைக்கவில்லை. பின்னர், நம்பியாண்டார் நம்பி யிருந்த திருநாரையூருக்கு வந்து, மூவர் பாடல்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தரல் வேண்டும் என நம்பியிடம் வேண்டுகோள் விடுத்தான். சிதம்பரத்து நடராசர் கோயிலில் ஓர் அறைக்குள் காப்பிட்டுக் கிடக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
இராசராசன் சிதம்பரம் சென்று, கை இலச்சினை (முத்திரை) இட்டு மேற்குச் சுற்றில் உள்ள அறையிைனைத் திறக்கும்படி, கோயில் பூசனை புரியும் அந்தணர்களை வேண்டினான். அந்தணர்கள், “தமிழ் வைத்த மூவர் வந்தால் அறை திறக்கும்” (19) என்றனர். அதாவது, சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் என்னும் மூவரும் வந்தாலேயே அறை திறக்கப்படும் என்று கூறிவிட்டனர்.
வீட்டுலகில் (மோட்சத்தில்) இருக்கும் அம்மூவரையும் மன்னன் எந்தப் போக்கு வரவு ஊர்தியின் வாயிலாக எவ்வாறு அழைத்து வர இயலும்? பார்த்தான் மன்னன். உடனே, கோயிலில் மூவர் திருவிழா நடத்தச் சொன்னான். மூவர் சிலைகளையும் அணி செய்து ஊர்வலமாக அந்த அறைக்கு எதிரில் கொண்டுவரச் செய்தான்; இதோ மூவரும் வந்து விட்டனர் - கதவைத் திறக்கலாம் - என்றான்.
அந்த மூன்று சிலைகளையும் மூவர் இல்லை எனக் கூறின், எந்தக் கோயிலில் உள்ள எந்தச் சிலைக்கும் வேலை கிடையாதன்றோ? எனவே, கை காப்பு நீக்கி அறை திறக்கப்பட்டது.
செல்லுப் புற்று மண்ணால் சுவடிகள் மூடப்பட்டிருந்தன. புற்று மண்ணைத் தட்டிக் கொட்டிச் சீர்செய்து, நல்ல உருப்படிகளாகக் கிடைத்தவரையும் எடுத்துப் போற்றினர். மன்னன் வேண்டுகோளின்படி, நம்பியாண்டார் நம்பி, மூவர் பாடல்களையும் ஏழு திருமுறைகளாக வகுத்துத் தொகுத்தார்.
பன்னிரு திருமுறைகள்
சைவப் பெரு நூல்கள் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுப் போற்றப்படுகின்றன. அவற்றுள் முதல் ஏழு திருமுறைகள் மூவர் பாடல்களேயாகும். சம்பந்தரின் பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாகவும், நாவுக்கரசரின் பாடல்கள் அடுத்த மூன்று திருமுறைகளாகவும் அதாவது நான்காவது - ஐந்தாவது - ஆறாவது திருமுறைகளாகவும், சுந்தரர் பாடல்கள் ஏழாவது திருமுறைகளாகவும் தொகுக்கப் பெற்றன.
பின்னர், மாணிக்கவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாகவும், திருவிசைப்பா-திருப்பல்லாண்டுப் பாடல்கள் ஒன்பதாம் திருமுறையாகவும், திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகவும், திரு முகப் பாசுரம் முதலானவை பதினோராம் திருமுறையாகவும் தொகுக்கப் பெற்றன. சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகப் பின்னர்க் கொள்ளப்பட்டது.
திருமுறைகள் வெளிவரச் செய்ததால், இராச ராசன், திருமுறைகண்டசோழன் என்னும் சிறப்புப் பெயரால் வழங்கப்படுகிறான்.
இந்தப் பன்னிரண்டு நூல்களையும் இணைத்துப் ‘பன்னிரு திருமுறைகள்’ எனத் தொகைப் பெயர் தந்திருப்பது, ‘பன் மாலைத் திரள்’ வகையாகும்.
முதல் ஏழு
இங்கே, இறுதி ஐந்து திருமுறைகளை விடுத்து, முதல் ஏழு திருமுறைகளை மட்டும் முதலில் எடுத்துக் கொள்ளலாம். மூவர் பாடல்களும் மூன்று நூல்களாக ஆக்கப் பட்டன. இவையே ‘மூவர் தமிழ்’ என்னும் தொகைப் பெயர் பெற்றன. ‘மூவர் தமிழ்’ என்னும் தொகையையும் ‘பன் மாலைத் திரள்’ வகையில் சேர்க்கலாம்.
மூவர் தமிழ் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப் பட்டதைப் பற்றிக் கூறும் பாடல்கள் இதற்கு அகச்சான்றுகளாம். மந்திரங்கள் ஏழுகோடியானதால் இப்பாடல்கள் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டனவாம். பாடல்கள் வருமாறு:“மன்னுதமிழ் விரகர்எங்கள் காழிவேந்தர்
வகுத்தருளால் அமைத்த திரு முறையோர் மூன்றும்,
அன்னவகை வாகீசர் முறையோர் மூன்றும்,
ஆரூரர் உரைத்ததிரு முறைய தொன்றும்,
துன்னவகை ஏழாகத் தொகுத்துச் செய்தான்
தூயமனு எழுகோடி என்ப துன்னித்
தன்னிகரில் திருவருளால் மன்னன் தானும்
தாரணியோர் வீடுபெறும் தன்மை சூழ்ந்தே” (24)
“மந்திரங்கள் எழுகோடி யாதலினால் மன்னுமவர்
இந்த வகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்து...” (28)
என்பன பாடல்கள். திருமுறைகண்ட புராணத்தில், மூவர் தமிழின் தெய்வ ஆற்றல்களும் கூறப்பட்டுள்ளன. சம்பந்தர் தமிழ், எரியிலே வேக வில்லை-வைகை யாற்றில் எதிரேறி வந்தது. அதாவது-மதுரையில் அனல் வாதத்திலும் புனல் வாதத்திலும் வென்றது; திருமயிலாப்பூரில் எலும்பைப் பெண்ணாக்கியது; திருமருகலில் பாம்பு நஞ்சை நீக்கியது. நாவுக்கரசரின் தமிழ் திங்களூரில் நஞ்சை நீக்கியது; கொல்ல வந்த யானையை வணங்கச் செய்தது; கருங் கல்லை மிதிக்கச் செய்தது. சுந்தரரின் செந்தமிழ், அவிநாசியில் முதலையுண்ட சிறுவனை வரவழைத்தது-இவ்வாறு மூவர் தமிழின் ஆற்றல்கள் போற்றப் பெற்றன:
“எரியினிடை வேவாது; ஆற்றெதிரே ஓடும்;
என்புக்கும் உயிர்கொடுக்கும்; இடுநஞ் சாற்றும்;
கரியை வளைவிக்கும் கல் மிதக்கப் பண்ணும்
கராமதலை கரையிலுறக் காற்றுங்காணே” (17)
மூவர் தமிழின் ஆற்றலைப் பரஞ்சோதி முனிவரும் தமது திருவிளையாடல் புராணத்தில் கூறியுள்ளார்:
சிவனைப் பரவையாரிடம் தூது விடுத்ததும், முதலை உண்ட சிறுவனை வரவழைத்ததும், எலும்பைப் பெண்ணாக் கியதும், மறைக் காட்டில் திறக்கப்படா திருந்த கதவினைத் திறந்ததும், கன்னித் தண்தமிழ் மொழிச் சொற்களா? அல்லது-வேற்று மொழிச் சொற்களா? என்று வினவுவது போல் மூவர் தமிழின் முதன்மை ஆற்றலை அறிவித்துள்ளார் பாடல்:-
“தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை
உண்ட பாலனை அழைத்ததும், எலும்பு பெண்ணுருவாக்
கண்டதும், மறைக் கதவினைத் திறந்ததும், கன்னித்
தண்டமிழ்ச் சொல்லோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்”
என்பது பாடல். இவ்வளவு பெருமைக்கு உரிய மூவர் தமிழைத் திட்டமிட்டு அறைக்குள் போட்டுச் செல் அரிக்கச் செய்ததும், மூவர் வந்தால்தான் கதவைத் திறக்க முடியும் என அடம் பிடித்ததும் கொடுமை என ஒரு சாராரைச் சிலர் தூற்றலாம். ஆனால், மூவர் தமிழை அடியோடு எரித்து விடாமல், அறைக்குள் வைத்துக் காத்து வந்தார்களே - என அன்னாரைப் போற்றுதலே ஒரு வகையில் பொருந்தும்.
மூவர் தமிழாகிய முதல் ஏழு திருமுறைப் பாடல்களும் ‘தேவாரம்’ என்று பெயர் வழங்கப் படுகின்றன. இப்பெயர் பாடல் ஆசிரியர்களால் தரப்பட்டதன்று; பிற்காலத் தாராலேயே தரப்பட்டதாகும். இதன் பொருள் என்ன? தே + ஆரம் எனப் பிரித்து, தெய்வ மாலை - அதாவது-தெய்வத்திற்குச் சாத்தும் பாமாலை என்று இதற்குப் பொருள் செய்ய வேண்டும். தே + வாரம் எனப் பிரித்துத், தெய்வ அன்பு - அதாவது தெய்வத்தின்பால் செலுத்தும் அன்பு எனச் சிலர் கூறுவர்.
பல மலர்களால் தொடுத்த பூமாலைபோல், பல்வகைப் பாக்களால் தொகுத்த பாமாலையே தேவாரம் ஆகும். தேவாரம், திருஞான சம்பந்தர் தேவாரம், அப்பர் என்னும் திருநாவுக்கரசர் தேவாரம், சுந்தரர் தேவாரம் என மூவகையாக ஆசிரியர் பெயரால் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு வரும் பாடிய தேவாரப் பாக்கள் அவரவர் பெயரால் தனித் தனியாகக் குறிப்பிடப் படும்போது, அவ்வத் தொகையைத் ‘தனி மலர் மாலை’ என்னும் வகைக்குள் அடக்கலாம்.
தேவாரப் பெயர் ஆட்சி
தேவாரம் என்னும் பெயர் முதலில் பாக்களைக் குறிக்கவில்லை. கடவுள் தொடர்புடையது - கடவுள் வழிபாட்டுத் தொடர்புடையது-கடவுள் திருமேனி (விக்கிரகம்) தொடர்பானது. வழிபாட்டு இடத் தொடர்புடையது என்னும் பொருளில் சில நூல்களிலும் சில கல்வெட்டுகளிலும் தேவாரம் என்னும் பெயர் ஆட்சி காணப்படுகின்றது. உமாபதி சிவம் என்பவர் இயற்றிய கோயில் புராணம்-திருவிழாச் சருக்கம் என்னும் பகுதியில்,
“உயர்தர மூவாயிரவர் கடாவா மறையொடு
தேவாரக் கைப்பற்றிய பணிமுற்ற...” (27)
என்றும் ஈடு முப்பத்தாறாயிரப்படி என்னும் வைணவ விரிவுரை நூலில், ‘உம்முடைய தேவாரமோ’ (6.8-10) என்றும் இப் பெயராட்சி உள்ளது.
மற்றும், தென்னிந்தியக் கல்வெட்டு ஒன்றில் (7-269), “பெரிய வுடையார் தேவாரத்தில் கேட்டருளி” என்றும், மற்றொரு கல்வெட்டில் (2.155) “பெரிய பெருமாளுக்குத் தேவார தேவராக எருந்தருளிவித்த தேவர்” என்றும், முனியூர்க் கல்வெட்டில் (8-205) “திருமுறைத் தேவாரச் செல்வன்” என்றும், திருக்களார் கல்வெட்டில் (8-260) “நம் தேவாரத்திற்குத் திருப்பதிகம் பாடும் பெரியான்” என்றும் தேவாரப் பெயர் ஆட்சி காணப்படுகிறது.
பண்டு அரசர், அருளாளர் முதலியோர் வெளியூர்க்குச் செல்லும்போது, உடன் எடுத்துச் செல்லும் சிறு சிறு கடவுள் உருவம் வைக்கப்பட்ட பெட்டி ‘தேவாரப் பெட்டி’ எனப்பட்டது. மற்றும், கடவுள் வழிபாடாகிய தேவாரத்தின்போது (தேவாரம்-கடவுள் வழிபாடு), ஓதப்பட்ட பாடல்கள் நாளடைவில் தேவாரப் பாடல்கள் என்னும் திருப்பெயர் வழங்கப்பட்டன. இந்த அடிப்படையில், பின்னர், மூவர் தமிழ்ப் பாடல்கள் தேவாரம் என்று குறிப்பிடப்பட்டன.
தேவாரத்தின் வேறு பெயர்கள்
தேவாரம் என்ற பெயர் பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே மூவர் தமிழுக்கு வழங்கப்படத் தொடங்கியது. சேக்கிழார், திருப்பதிகம், தமிழ்த்தொடை, உரைமாலை முதலிய பெயர்களாலேயே மூவர் தமிழைக் குறிப்பிட்டுள்ளார். தொடக்கத்தில், சம்பந்தர் திருமுறை-நாவுக்கரசர் திருமுறை - சுந்தரர் திருமுறை எனவும், சம்பந்தர் பதிகம் நாவுக்கரசர் பதிகம் - சுந்தரர் பதிகம் எனவும் மூவர் பாடல்கள் பெயர் வழங்கப் பெற்றன. மற்றும், சம்பந்தர் தேவாரம் ‘திருக் கடைக் காப்பு’ எனவும், சுந்தரர் தேவாரம் திருப்பாட்டு எனவும் பெயர் வழங்கப் பட்டதுண்டு. திருநாவுக்கரசர் பாடல்களே - பதிகங்களே முதல் முதலில் ‘தேவாரம்’ என்னும் திருப்பெயர் பெற்றன.
போற்றிப் பேணாமை
தேவார ஆசிரியர்கள் மூவரும், ஊர்தோறும் சென்று பதிகங்கள் பாடினர். அவை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டன. அவரவர் காலத்திலேயே அவரவர் பெயரால் நூல் தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தக் காலத்தில், முப்பது தலைப்புகளில், தலைப்புக்கு இரு பாடல்கள் வீதம் எழுதினாலும், அப்பாடல்களுக்கு, இன்னார் கவிதைகள் என்ற மகுடம் இட்டு வெளியீட்டு விழாவும் நடத்துகின்றனர்.
இவ்வாறு தேவாரப் பாடல்கள் உரிய காலத்திலேயே போற்றிப் பேணப்படவில்லை. அவை அழிவதற்கும் அழிக்கப்படுவதற்கும் தக்க காரணம் இருந்தது. சமணர்களையும் பௌத்தர்களையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்ததால் போற்றிக் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் ஓலைச் சுவடிகளைத் திட்டமிட்டு அழித்திருக்கலாம்.
தமிழ் - தமிழ் - தமிழ்
தேவாரப் பாடல்கள் மூவர் தமிழ் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டன. தேவாரப் பதிகங்கள் தமிழ்மாலை என ஆசிரியர்களாலேயே அறிவிக்கப்பட்டன. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் எனத் தமிழ் பரப்புவதாகச் சொல்லப்பட்டதும் உண்டு. இவ்வாறு தமிழ்-தமிழ்-தமிழ் என்று ஓலமிட்டதற்கு உரிய காரணம் யாது?
சமசுகிருதத்தின் திரிபு மொழிகளாகிய பிராகிருதம், பாலி என்னும் இரு மொழிகளில், சமணர்கள் பிராகிருத மொழியைக் கையாண்டும், பௌத்தர்கள் பாலி மொழியைப் பயன்படுத்தியும் தத்தம் சமயம் வளர்த்தனர். தேவார ஆசிரியர்களோ, அந்த மொழிகளில் மதம் மாறிய மக்கட்கு இருந்த ‘மாயை’யை அகற்றத் தெய்வத் தமிழைக் கையாண்டனர். தமிழ் மணம் எங்கும் வீசச் செய்தனர். தேவார ஆசிரியர்களும் ஆழ்வார்களும் தமிழ்-தமிழ்-தமிழ் என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு அடித்துக் கொண்டதில் உள்ள மறைபொருள் (இரகசியம்) இதுவே. சமசுகிருதம் - ஆங்கிலம் முதலிய மொழிகளின் மேலாட்சி ஏற்பட்ட போதெல்லாம் தமிழ்ப் புலவர்கள் தம் முன்னோரின் முறையையே பின்பற்றித் தமிழ் வளர்த்தனர். இதற்கு வழிகாட்டிகளாய் இருந்தவர்கள் தேவார-திவ்வியப் பிரபந்த ஆசிரியர்களேயாவர்: இந்த அடிப்படை நோக்கத்தில்தான், தேவாரப் பாடல்கள் ‘மூவர் தமிழ்’ என்னும் தொகைப் பெயர் பெற்றன.
இந்தப் பாடல்களை வெளிவரச் செய்து ‘திருமுறை கண்ட சோழன்’ என்னும் பட்டப் பெயரை இராசராச சோழன் தட்டிக் கொண்டான். பிற்கால மன்னர்கட்கு இத்தகைய தமிழ் உணர்வு இல்லாமற் போனது வருந்தத்தக்கது.