இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள்/முன்னுரை

முன்னுரை

திருநெல்வேலியின் ஒருபகுதியான வண்ணார பேட்டையில் நடைபெற்று வந்த வட்டத்தொட்டி அந்த நாட்களில் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு நன்கு அறிமுகமான ஸ்தாபனம். மேலைநாட்டில் டாக்டர் ஜான்ஸனின் Library Clubக்கு எவ்வளவு பெருமையும் முக்கியத்துவமும் உண்டோ, அந்த அளவுக்கு திருநெல்வேலியிலிருந்த இந்த 'வட்டத்தொட்டி'க்கும் உண்டு. தமிழ்க் கவிதைகளையும், கம்ப ராமாயணத்தையும், கம்பன் பாடல்களில் காணப்படும் நயங்களையும் அனுபவிப்பதற்காகவே, ரசிகமணி டிகேசியின் வீட்டில் கூடிய கூட்டத்துக்குத்தான் நாளடைவில் 'வட்டத்தொட்டி’ என்ற பெயர் ஏற்பட்டது. ரசிகமணியின் வண்ணாரபேட்டை வீட்டில் நடுமுற்றமாக இருந்த, வட்டவடிவமான ஒரு தொட்டிக்கட்டு அமைப்பில்தான் டிகேசியின் அன்பர்கள், மாலைவேளைகளிலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூடுவார்கள். அறுபது வயதை எட்டியவர்கள், அதற்கும் மேற்பட்டவர்கள் முதல் பதினெட்டு ஆண்டு கூட நிறையாத கல்லூரி மாணவர்கள் வரை வட்டத்தொட்டியின் உறுப்பினர்களாக இருப்பார்கள். அரசாங்க உத்தியோகஸ்தர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், என்று பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர்கள் எல்லோரும் வந்திருந்து, வட்டத்தொட்டிக்குப் பலம் கூட்டுவார்கள். ஒரே கவிதைக் கோலாகலம்தான். செவிக்கு அளிக்கப்படும விருந்தோடு, வயிற்றுக்கும் விருந்து உண்டு. அப்போது நான் சிறுமி. என் தந்தையாருடன் இரண்டொரு முறை போயிருக்கிறேன். அங்கு பேசப்படுவதெல்லாம் புரியாத வயது. வயிற்று விருந்து மட்டும் நினைவிருக்கிறது. "இந்த நாடு முழுவதும் வட்டத்தொட்டி உறுப்பினர்களின் வீரமுழக்கம் கேட்கிறது இன்று" என்று அப்போது தூத்துக்குடியில் பிரபலமாயிருந்த வக்கீல் ஏ.சி. பால்நாடார் அவர்கள் கார்டியன் என்ற பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.

வட்டத்தொட்டியின் தலைவரும், ஸ்தாபகரும் ரசிகமணி டிகேசிதான். ஆனால் அதைத் தாங்கிநின்ற கற்றூண் செயலாளர், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்தான். நல்ல தமிழறிவு படைத்த குடும்பத்திலிருந்து வந்தவர். கல்லூரியில் பயிலும் காலத்திலேயே, அவருடைய தமிழார்வத்தை மேலும் வளர்த்தவர் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளையவர்கள். பின்னர், முதுபெரும் புலவர் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் அவர்களின் அறிமுகம் கிடைத்து, கிட்டத்தட்ட அவருடைய இலக்கியப் பணிகளுக்கெல்லாம் உறுதுணையாக இருந்து மேலும் தம் தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து ரசிகமணி டிகேசியினால் காந்தம் போல கவரப்பட்டு, அவருடைய நிழலில் ஒதுங்கிய பின்னர்தான் தமிழ்க்கவி என்றால் என்ன? கம்பன் யார்? அவன் படைத்த காவியத்தின் மகிமை என்பதெல்லாம் புலப்படத் தொடங்கிற்று என்று தொண்டைமானே பெருமிதத்துடன் பேசுவார்.

அரசாங்க அலுவல் காரணமாக, தொண்டைமான் ஊர் ஊராக மாற்றலாகிப் போக வேண்டியிருக்கும். அப்படி அவர் அந்த ஊருக்குப் போய்ச்சேர்ந்த உடனே, அங்கே ஓர் இலக்கியச் சங்கம் முளைவிடும். அது வளர்ந்து செழிப்படைய, டிகேசியின் தலைமையில் 'வட்டத்தொட்டி'யுமே, அந்தந்த ஊர்களுக்கு முகாம் போகும். "தமிழின் பின் சென்றார் பச்சைப் பசுங்கொண்டலான பெருமாள்."அப்படியே இந்த வட்டத் தொட்டியுமே பாஸ்கரன் வேலை பார்க்கும் ஊர் தேடிப் போகிறது என்று பாராட்டுவார்கள் நண்பர்கள். ரசிமகணி, நண்பர் தொண்டைமானுக்கு எழுதிய எல்லாக் கடிதங்களிலுமே 'வட்டத்தொட்டி'யைப் பற்றிய செய்தி வந்திருப்பது, அதை நிரூபணம் செய்கிறது. ரசிகமணிக்கு வட்டத்தொட்டியின் மீது எவ்வளவு ஆர்வமும் அக்கரையும் இருந்தது என்பதையே அந்தக் கடிதங்கள் நன்கு உணர்த்துகின்றன.

ரசிகமணி டிகேசியுடன் தொண்டைமானுக்கு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகவே பழக்கம். குற்றால முனிவராக, ரசிகமணி குற்றாலத்தில் குடியிருந்த காலத்தில், கிட்டத்தட்ட வாராவாரம் அவர்களைப் போய்ப் பார்த்து, உடனிருந்து, உறவாடி, உரையாடி மகிழ்வார். அப்படிப் போக முடியாத சமயங்களில்தான் கடிதங்கள் பரிமாறிக் கொள்ளப்படும். அப்படி ரசிகமணி தொண்டைமானுக்கு எழுதிய கடிதங்கள் அறுபதுக்கு மேல் இருக்கும். அவற்றில் கிடைத்தவற்றை மட்டுமே தொகுத்து வெளியிட்டிருக்கிறேன்.

தொண்டைமான் அவர்களே- ரசிகமணியுடன் தனக்குள்ள தொடர்பின் அடிப்படையில், ரசிகமணி டிகேசி என்று ஓர் அருமையான புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார். அந்த நூல் கல்லூரிகளில் பாடமாகவும் அமைந்திருக்கிறது. ரசிகமணியின் தமிழ்க் காதல், கம்பன் பக்தி, கலை அறிவு, பண்பாடு எல்லா வற்றுக்கும் சரியான வாரிசு நமது நண்பர் பாஸ்கரன்தான் என்று அந்த நூலைப் படித்துவிட்டு பேராசிரியர் கல்கியே சொல்லியிருக்கிறார் என்றால் அதிகம் சொல்வானேன்.

ரசிகமணி டிகேசி என்ற நூல் மட்டுமன்று, ரசிகமணி தம் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களையும் திரட்டி, அவற்றிலிருந்து பலவற்றைத் தேர்ந்தெடுத்து, ரசிகமணியின் கடிதங்கள் என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூல் வெளியிட்டிருக்கிறார். மூதறிஞர் இராஜாஜியிலிருந்து, கவிமணிதேவி, திருப்புகழ்மணி, டாக்டர் திருமூர்த்தி, பேராசிரியர் கல்கி, ஜஸ்டிஸ் மகாராஜன், மீ.ப.சோமு, என பலதரப்பட்ட நண்பர்களுக்கும், தம்மிடம் அன்பு காட்டிய பெண் குழந்தைகளுக்கும் எழுதிய கடிதங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன. அதைத் தொடர்ந்து, சென்னை 'வட்டத் தொட்டி'யின் வெளியீடாக, ஜஸ்டிஸ் மகராஜன் அவர்களின் ஒரு தொகுப்பு வெளிவந்திருக்கிறது. ரசனையின் ஒலி என்ற தலைப்பில் திருச்சி நண்பர் ஜி.ஸி.பட்டாபிராம் ஒரு தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். 'பேசும் கடிதங்கள்' என்ற தலைப்பில், தொண்டைமானுடைய புதல்வி ஒரு சிறு தொகுப்பு வெளியிட்டிருக்கிறார்.

ரசிகமணியவர்களுக்கு எழுத்தைவிடப் பேச்சிலே தான் ஆர்வமும் நம்பிக்கையும் அதிகம். இதய ஒலி, கம்பன் யார், அற்புதரசம், கம்பர் தரும் காட்சி என்று அவர்கள் எழுத்தின் பட்டியல் நீண்டாலும் கூட, அவர்கள் பேசிய பேச்சுக்களுக்கு ஈடு கொடுக்க முடியாது. ஆனால் அவர்களுடைய கடிதங்கள் அந்தக் குறையை நீக்கிவிடும். டிகேசியின் ஆழ அகலங்களையும், அவரது ஆளுமையையும் அவரது கடிதங்களில் தான் காண முடியும் என்று ஜஸ்டிஸ் மகராஜன் அவர்கள், தீர்மானமாய் சொல்வார்கள். நீதியரசரே சொல்லிவிட்ட பிறகு வேறு யார் என்ன சொல்ல முடியும்?

ராஜேஸ்வரி நடராஜன்


❖❖❖