இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/காதலன் பரிசு


காதலன் பரிசு

என் அன்பே ! நினது வாழ்வு ஆரம்பமாகு முன்பே இன்பக் கனவுகளென்னும் நீர் வீழ்ச்சியின் அடியில் நீ நின்றுகொண்டு, அதன் கொந்தளிப்பால் நீ வெறி கொண்டு நிற்கின்றாய், என்று நான் நினைக்கிறேன். அன்றி ஒருகால் மல்லிகை முல்லை அல்லி முதலிய மலர்கள் உனது கரத்தில் வந்து குவியவும், உனது நெஞ்சத்தில் நுழைந்து ஆரவாரிக்கவும், தேவர்கள் பூங்காவின் வழியாகத்தான் நீ சென்றனையோ?

உனது சிரிப்பே, ஒரு பாட்டு; அப்பாட்டின் செஞ் சொற்கள், கீதத்தின் ஆரவாரத்திலே மூழ்கிவிடுகின்றன. காண்டற்கரிய பூக்களின் நறுமணம். அம் முறுவல், சந்திரன் நினது நெஞ்சில் ஒளிந்திருக்க, அவனது பிரகாசம் நினது அதரம் என்னும் வாயிலைக் கடந்து ஒளி வீசுவதுபோல, அது காட்சியளிக்கிறது நான் காரணம் கேட்கவில்லை. காரணத்தையே மறந்துவிடுகிறேன், நினது சிரிப்பே புரட்சி வாழ்க்கையின் கொந்தளிப்பே என்பதை நான் அறிவேன். -கா.ப