இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/வேண்டுதல்

வேண்டுதல்


நலங்கெட்ட இந்நாட்டினின்று இழிவு தரும் அச்சம் யாவுமே அகற்றிடுவாய், மங்கலம் நிரம்பியவனே! மாந்தரால் வரும் துன்பம், அரசினால் வரும் அழிவு, தீம்பு, மறலியால் மூளும் அச்சம் யாவையும் எளிய உயிரினை ஒடுக்கிடும், இப்பாறையின் சுமையை, நொறுங்கிக் குழைந்து மண்மிசை உழன்றிடும் தொல்லையை; நீடித்த இந்தத் தாழ்வினை; கணமும் உயிரை வாட்டும் மானக்கேட்டை; அகத்தையும் புறத்தையும் இறுக்கிடும் இவ் அடிமைத் தளையை; நடுங்கித் தலைதாழ்ந்து பலர் காலடியில் மாந்தன்மையை இழந்திடும் இக் கொடுமையை, மாபெரும் இழிவின் இவையை, உன் காலால் மிதித்துத் துகளாக்கிடு. மங்கலம் தரும் வைகறையில் எல்லை இல்லா வானிடையே பரவிய ஒளியினலே காற்றின் திறந்த மச்சிடையே தலை நிமிர்ந்து நின்றிடுவேன். -நைவேத்தியம் விண்ணில் திரியும் வெண்முகிலாய் மாற ஏங்கியது மாமலை மண்ணின் சிறையிலிருந்து மீண்டும் வெளியேற சிறகடித்தது மரமும். -நூ.பா

டுகின்ற நிழல்களிலும் பாடுகின்ற பாடல்களிலும் ஏன் எளிதாக என்னைப் பறிகொடுத்துவிட்டேன். -கீ

என் அன்பே, எனது வாழ்வின் இடையில் ஒளி தாண்டவம் ஆடுகின்றது. அந்த ஒளி எனது வீணையின் கம்பிகளை மீட்டுகிறது, விசும்பு தெரிகிறது, காற்று அலறி ஓடுகிறது, உலகம் உவப்புடன் களி நடம் புரிகிறது. -கீ

என் உள்ளத்தில் உலகம் சொற்களை மாலையாக நெய்கிறது. உனது பெருமகிழ்ச்சி அச்சொற்களுக்கு இசை ஊட்டுகிறது. காதலினால் நீ உன்னையே எனக்கு அளித்துவிடுகிறாய், பின்னர் என்னகத்தே உன் இனிமை முழுவதையும் நிறைந்திருக்கக் காண்கிறாய். -கீ

அல்லும் பகலும் என் நாடி நரம்புகளில் ஒடும் உயிர் ஆறே இந்த உலகின் ஊடும் ஓடிச் பெருகி இசையோடு நடம்புரிகின்றது. -கீ

எல்லாப் பொருள்களும் ஓடிக் கொண்டே இருக்கின்றன, நிற்கவே இல்லை. பின்புறம் திரும்பிப் பார்க்கவில்லை. எந்த ஓர் ஆற்றலும் அவற்றை நிறுத்தவே முடியாது. அவை ஒடிக் கொண்டே இருக்கின்றன. -கீ

நீயும் நானும் இணைந்த காட்சி வானகம் முழுதும் நிறைந்திருக்கிறது . நீயும் நானும் கலந்து பாடும் இன்னிசை காற்றில் குமுறிக் கொண்டு வருகிறது. நாம் ஒருவரை ஒருவர் தேடிப் பிடித்துக்கொண்டு அலைவதில் பல ஊழிகள் கழிந்து ஒழிகின்றன. -கீ

பிரிவின் துயரமே வையத்தில் பரவிப் பாய்கிறது. இதுவே எல்லையற்ற வானவெளியில் எண்ணற்ற உருவங்களைத் தோற்றுவிக்கிறது. -கீ

எனது உயிரின் உயிரே, எனது உடல் முழுதும் நினது உயிருணர்ச்சி பரவி இருப்பதை அறிந்து எனது உடலை எக்காலமும் தூய்மையாய் வைத்துக் கொள்ளமுயல்வேன். -கீ

நினது முகம் மறைந்தால் எனது நெஞ்சம் ஓய்வற்றும் துடிக்கின்றது. வேலைக் கடலில் எனது வேலையும் முடிவுறாமல் திகைக்கிறது. இன்று என் பலகணியின் முன், கோடை பெருமூச்சிடுகிறது, குழம்பி ஒலிக்கின்றது, வண்டுகள் பூந்தோட்டத்தில் தேனிசை பொழிகின்றன. -கீ

எனது வாழ்வை நாணற்குழல் போல் நேராக வைத்து அதில் ஏழிசை ஒலியை பெய்தருள்வாயாக. -கீ

ஆடையில் அழகுறப்புனையப்பட்ட குழந்தை கழுத்தில் தொங்கும் அணிமணி ஆரத்தால் கட்டுண்டு, விளையாட்டின் உரிமை இன்பத்தை இழக்கிறது. அதன் ஆடையே படிக்குப் படி பெருந்தடையாக வளர்கிறது. -கீ

சுமையின் பொறுப்பை ஏற்றுக் கொள்பவனிடம் உனது கவலையை விட்டுவிடு. வருந்தித் திரும்பிப் பார்க்காதே. -கீ

நான் பாடவந்த பாட்டை இன்றுவரைப் பாடவில்லை. எனது யாழினை இசை கூடிப் பண் அமைப்பதிலேயே என் காலமெல்லாம் கழிந்துவிட்டது. -கீ

மலர் இன்னும் இதழ் விரியவில்லை, தென்றல் மட்டும் ஆர்வத்துடன் அருகே வீசிக்கொண்டிருக்கிறது. -கீ

காலை மென்காற்றில் தங்கயாழ் இசைமிழற்றும் போது நின் முன் தோன்றும்படி என்னை நீ கட்டளை இடுவாய் - அதுவே என் அரும்பெரும் பேறு.

-கீ


காலைக் கதிர் உதிப்பது திண்ணம், காரிருள் கழிவதும் திண்ணம், வானத்தின் வழியாக நினது வண்ண இசைக் குரல் ஒளிமயமான பொன்னோடைகளாகப் பெருக்கெடுத்துப் பாய்வதும் திண்ணம். -கீ

ஒளி, ஒளி எங்கே இருக்கிறது? ஆசையின் ஆர்வ நெருப்பால் அதைத்தூண்டு, காதல் விளக்கை உன் உயிர்ச்சுடரால் ஏற்றிவை. -கீ

என்னை மூடியிருக்கும் போர்வை, புழுதியும் இறப்பும் கலந்த போர்வை; நான் வெறுத்தாலும், இன்னும் அதை அன்போடு பற்றி இருக்கிறேன். -கீ

தந்தையின் சீற்றத்தில் அழும் தாயின் கண்ணீர் முகம்போல, நின் அருள்முகில் கீழே கவிந்து கிடக்கட்டும். -கீ

ஒளியை நிழல் துரத்திச் செல்தும், கோடையைத் தொடர்ந்து மாரிவருவதுமான இந்தச் சாலை வழியே காத்திருப்பதே எனக்கு இன்பம்.

-கீ

இன்று எனது உயிர் ஏன் கிளர்ந்து துடிக்கிறது? எனது நெஞ்சத்தில் ஒரு பெருங்களிப்பின் மயக்கம் ஏன் பரவிக் கிடக்கிறது? என்று எனக்குத் தெரியவில்லையே! -கீ

காலை அமைதி இன்னிசைப் புட்களின் பண்ணோசை வெள்ளமெனப் பெருகுகின்றது. வண்ண மலர்கள் வழியில் பேருவகையாய்க் காட்சி அளிக்கின்றன. முகில் மண்டலத்தின் இடைவெளியில் தங்கம் செல்வமாகச் சிதறிக் கிடக்கின்றது; நாங்கள் வீதியில் செல்கிறோம், ஒன்றையும் காணவில்லை. -கீ

குழந்தைக்குப் பால்கொடுக்கும் தாய், அதை வலது கொங்கையிலிருந்து எடுத்தவுடன் குழந்தை வீரிட்டு அழுகிறது; மறு கணத்தில் இடது கொங்கையில் ஆருயிர்க்கு அமிழ்தம் கிடைக்கும் என்பதை அது உணர்வதில்லை. -கீ

தாமரையின் நூறு இதழ்களும் எப்போதும் மூடிய நிலையில் இராதென்றும் , அதனுள் கலந்துரையும் தேன் வெளியாகி விடுமென்றும் நான் நன்கு உணர்வேன்.

-கீ

****

காற்றில் கவிழ்ந்த என் படகைக் கொண்டு இனிமேல் துறைமுகம்தோறும் அலைய முடியாது. அவைகளில் அலைபடும் நாள்கள் மலையேறி விட்டன.

-கீ

****