இராக்கெட்டுகள்/அதிசயச் செய்திகள்

இராக்கெட்டுகள்


1. அதிசயச் செய்திகள்


ன்று ஞாயிற்றுக்கிழமை. குமணனும் அவனுடைய தங்கை குமுதமும் மாலையில் நடைபெறும் படக் காட்சிக்குச் சென்று வந்தனர். அன்று படக்காட்சிக்கு முன்னதாக அவர்கள் ‘செய்திச் சுருளில்’ பல அதிசயச் செய்திகளைக் கண்டு களித்தனர். வான்வெளிப் பயணத்தில் அமெரிக்கர்கள் ஒரு மனிதனை அனுப்பிய நிகழ்ச்சிகள் செய்திச் சுருளில் காட்டப்பெற்றன. படம் முடிந்து வீடு திரும்பும் பொழுது இருவரும் வான்வெளிப் பயணம்பற்றிய உணர்ச்சியுடன் இருந்தனர்.

குமுதம் ஒரு செல்லச் சிறுமி. பள்ளியில் படித்து வருகின்றாள். குமணன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றான். ஒரு வாரமாக ஏதோ அலுவலாக வெளியூர் சென்று திரும்பிய அவர்களின் தந்தை தம் செல்வச் ‘சிட்டுக்கள்’ படக்காட்சிக்குச் சென்றதை அறிந்தார். ஒரு வாரமாகக் குழந்தைகளைப் பாராத அவர் முகம் வழிமேல் விழியை வைத்துக் காத்துக் கொண்டிருந்தது. குமணனும் குமுதமும் வீடு திரும்பினர்.

தந்தையைக் கண்ட குமுதம் ஓடோடி வந்து அவர் அருகில் அமர்ந்து கொண்டு, "அப்பா, நானும் அண்ணனும் படம் பார்க்கச் சென்றிருந்தோம். செய்திச் சுருளில் நாங்கள் கண்ட 'வான்வெளிப் பயணம்' எங்கள் மனத்தை விட்டு அகலவில்லை” என்று கொஞ்சிக் கூறினாள்.

படம் 1: தந்தை மக்களுடன் உரையாடும் காட்சி

"அப்படியா கண்ணு, இந்தப் பயணத்தைப்பற்றிய செய்திகள்தாம் அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவருகின்றனவே? அமெரிக்காவும் இரஷ்யாவும் மாறிமாறி இத்தகைய பயணங்களை மேற்கொள்ளுகின்றன. இரண்டு நாட்டு அறிவியலறிஞர்களும் அடிக்கடி வான்வெளியைப் பற்றி ஆராய்ந்த வண்ணம் இருக்கின்றனர். செயற்கைத் துணைக்கோள்கள் அடிக்கடி வான வெளியில் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் பத்திரிகைகளைப் படிக்கும் பொழுது இத்தகைய செய்திகளையும் நன்கு படிக்கவேண்டும்” என்று கூறினார் தந்தை.

“நான் படிக்காமல் இல்லை. படிக்கத்தான் செய்கின்றேன். ஆனால், அந்தப் பயணத்தின் நோக்கமும் வான்வெளி ஆராய்ச்சியின் நோக்கமும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆதலால், இத்தகைய செய்திகள் எனக்கு இனிக்கவில்லை. பொதுமக்கள் பெரிய எழுத்துக்களில் வெளியாகும் இத்தகைய செய்திகளை ஒருவித உற்சாகத்துடன் பேசுகின்றனர். ஆனால், பெரும்பாலோருக்கு இவை ஒரு வியப்பினை விளைவிப்பதுடன் நின்று போகின்றன. வரவரப் பெரும்பாலோர் இத்தகைய செய்திகளைப் படிப்பதும் இல்லை. பத்திரிகைகளிலும் இச்செய்திகள் எங்கோ ஒரு மூலையில் வெளியிடப்பெறுகின்றன” என்றான் குமணன்,

“நம்நாட்டு மக்களுக்கு இன்னும் போதுமான கல்வியறிவு ஏற்படவில்லை. அதுவும் அறிவியல் பற்றிய செய்திகள் அவர்கள் உள்ளத்தைக் கவர்வதில்லை” என்றார் தந்தை,

“நாங்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் அறிவியல் புத்தகங்கள் வெளிவந்தால் இவற்றைப் புரிந்து கொள்வோம். தமிழில் இத்தகைய அறிவியல் புத்தகங்கள் அரியனவாகவே உள்ளன” என்றாள் குமுதம்.

“வான்வெளிப் பயணம்பற்றிய நிகழ்ச்சிகளை நேரில் கண்ணால் படத்தில் கண்டும் அவைபற்றிய கருத்தினைப் புரிந்து கொள்ள முடியவில்லையே!” என்றான் குமணன்.

“கடந்த ஒரு சில ஆண்டுகளாக வான்வெளிப் பயணம் பற்றிய செய்திகளே பத்திரிகைகளில் அதிசயச் செய்திகளாக வெளிவந்துள்ளன. ஒவ்வோர் ஆண்டிலும் புதிய புதிய வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணமுள்ளன” என்றார் தந்தை.

மேலும் அவர் தொடர்ந்து கூறியது:

“வாணிகத்தில் சரக்குகளை வேகமாக ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குக் கொண்டுசெல்லுவது முக்கியமானது. அங்ஙனமே, ஜெட் முறையில் பொருள்களை உந்தித் தள்ளு தல் இராக்கெட்டுத் துறையில் அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளது. போரிடும் விமானங்கள், குண்டுகளை வீழ்த்தும் விமானங்கள், பல்வேறுவகை ஏவு கணைகள் (Missiles) இவற்றில் இம்முறை பெரிதும் பயன்படுகின்றது. ஆனால், அறிவியல் அறிஞர்கள் நவீன இராக்கெட்டினை ஒரு சிறந்த ஆய்கருவியாகப் பயன்படுத்துகின்றனர். இராக்கெட்டின் துணைகொண்டு வானொலி அமைப்பு, தொலைக். காட்சி அமைப்பு, ஒளிப்பட அமைப்பு போன்றவற்றை மிக உயரத்திற்கு அனுப்பி மேல்வளி மண்டலத்தைத் (Upper atmosphere) துருவி ஆராயவும், சூரியனை ஆராயவும் மனிதனால் இயலும். அவன் பூமியின் துணைக்கோள்களைப் படைத்து அவற்றைக்கொண்டு வெளிப்பரப்பிலும் (Outer space) தன்னுடைய ஆராய்ச்சியினை விரிவுபடுத்தக் கூடும்.

“பூமியைச் சுற்றியுள்ள அயனப்பாதையில் முதன் முதலாகச் செயற்கைத் துணைக்கோள் ஒன்றினை அனுப்பிய பொழுது தான் முன்னுக்குத் தள்ளும் இராக்கெட்டின் உந்துவிசையின் முழு ஆற்றலையும் திறனையும் அறிவிய லறிஞர்கள் அறிந்தனர். அமெரிக்காவில் விமானத்தில் பிரயாணம் செய்த ஒருவர் விமானத்தில் ஏறினபொழுது தான் இரஷ்யர்கள் [1]‘ஸ்புட்னிக்’ (Sputnik) என்ற துணைக் கோளினே வான்வெளியில் அனுப்பினர். அந்தப் பிரயாணி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒரு கோடியிலிருந்து பிறி தொரு கோடிக்கு விமானத்தில் பிரயாணம் செய்து முடிப்ப தற்குள் ‘ஸ்புட்னிக்’ பூமியை ஆறு தடவைகள் சுற்றி வந்து விட்டது.”

“இன்று நாம் வாழும் உலகம் மிகச் சிறிதாகி விட்டது. மிக விரைவில் இவ்வுலகிலுள்ள எல்லா இடங்களையும் ஒருசில நிமிடங்களில் அடைந்து விடலாம். இனி இவ்வுலகில் விமானங்களாலோ அன்றி ஏவுகணைகளாலோ தாக்கப்பெருத இடங்களே இரா. அந்த இடங்கள் எவ்வளவு தொலைவிலிருந்தாலும், மாபெருங் கடல்கள் அவற்றின் இடையே இருப்பினும், அவ்விடங்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்று சொல்வதற்கில்லே.”

“ஸ்புட்னிக், எக்ஸ்புளோரர், வேன்கார்டு போன்ற செயற்கைத் துணைக்கோள்களைப்பற்றிய பகட்டும் மருட் சியும் குறைந்துகொண்டு வருகின்றன என்பது உண்மைதான். பொதுமக்களுக்கு இவை பத்தாம் பசலி'களாகி வருகின்றன. அதனால்தான் செய்தித்தாள்களிலும் இதைப் பற்றிய செய்திகள் எங்கோ ஒரு மூலையில் இடம்பெறுகின்றன. ஆனால், அறிவியலறிஞர்களுக்கு ஒவ்வொரு சோதனையும் புதிய புதிய அனுபவங்களேத் தருகின்றன; புதிய புதிய உண்மைகளைக் காட்டுகின்றன. இன்று மனிதனே வான்வெளிப் பயணத்தை மேற்கொண்டு பாதுகாப்புடன் திரும்பிவிட்டான்.”

“வளி மண்டலத்திற்கு அப்பாலுள்ள வெளிப்பரப்பில் மனிதன் பறந்தபொழுதுதான் இராக்கெட்டு உந்து விசையின் திறன்களையெல்லாம் அவன் உணர்ந்து வருகின்ருன். இதிலுள்ள தத்துவ உண்மைகள் அளவிட முடியாதவை. இனி, மனிதன் பூமியுடன் பிணைக்கப்பெற்றிருப்பான் என்று கூறவும் முடியாது. எந்த நேரத்திலும் அவன் பூமியினின்றும் விடுபடலாம். இதற்கு வேண்டியதெல்லாம் மனவுறுதி மட்டிலுமே. இந்த மனவுறுதியினை மட்டிலும் அவன் அடைந்துவிட்டால், பல்வேறு அருஞ்செயல்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து நடைபெறும். அமெரிக்களும், சோவியத் யூனியனும் இத்துறையில் அளவற்ற ஊக்கம் காட்டி வருகின்றன.”

“இராக்கெட்டு விமானிகள் (Astronauts) பயிற்சிதரப் பெறுகின்றனர். மனிதன் மேலே செல்லுவதற்கு வேண்டிய பொறி நுட்ப அமைப்புக்கள் ஆயத்தமாகி வருகின்றன. அவன் தங்குவதற்கு வேண்டிய மேலுறைகள் (Capsules) தக்கவாறு அமைக்கப்பெற்று வருகின்றன. இத்துறை பற்றிய எண்ணற்ற நுட்பச் செயல்கள் யாவும் முறையாகக் கவனிக்கப்பெறுகின்றன.”

“இறுதியில் இரஷ்யா தான் ஒரு மனிதரை வான் வெளிப் பயணத்தில் அனுப்புவதாக அறிவித்தது. 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் யூரி காக்கரின் (Yuri Gagarin) என்பார் முதன் முதலாக வான மண்டலத்தில் நுழைந்து வெற்றியுடன் திரும்பினார். வானவெளி எல்லை கடந்தாய் விட்டது! சோவியத் அருஞ்செயலைத் தொடர்ந்து அமெரிக் காவும் ஒரு மனிதரை அனுப்புவதாக அறிவித்தது. அதேயாண்டு மேத் திங்கள் 5ஆம் நாள் தளபதி ஆலன் பி. ஷெப்பார்டு (Commander Alen B. Shepard) என்பார் 115 மைல்வரை உயரத்தில் சென்று இவ்வுலகைச் சுற்றினார். இரண்டு மாதங்கள் கழிந்ததும் காப்டன் வி. ஐ. கிரிஸ்ஸம் (Captain V. I. Grissom) என்பார் ஷெப்பார்டு செய்த துணிகரச் செயலையே திரும்பவும் செய்து காட்டினார்.”

“குமணா, அடுத்தபடியாக நீ கல்லூரியில் நுழையப் போகின்றாய். நீ அறிவியல் பாடங்களை விருப்பப் பாடங்களாக எடுத்துப் படிக்கவேண்டும். ஆங்கிலத்தில் எளிய முறையில் வெளியிடப்பெறும் அரிய அறிவியல் நூல்களைப் பயில வேண்டும். நமது நாட்டின் முன்னேற்றம் பற்றிய ஆக்க வேலைகளில் நீ பெரும்பங்கு கொள்ளவேண்டும்.”

இங்ஙனம் தந்தை ஒரு சிறு சொற்பொழிவே நிகழ்த்தித் தம் செல்வர்கட்கு அறிவியல் துறையில் ஊக்கம் ஊட்டினார்.


  1. ‘ஸ்புட்னிக்’ என்ற இரஷ்யச் சொல்லுக்கு ‘உடன்-செல்லும் பிரயாணி' (Fellow-traveller) என்பது பொருள்.