இராக்கெட்டுகள்/கலைச்சொற்கள் விளக்கம்

பின்னிணைப்பு
கலைச்சொற்கள் விளக்கம்

அகச்சிவப்புக் கதிர்கள் (Infra - red rays): நிறமாலையின் (spectrum) கண்காணும் சிவப்பு நிறத்திற்கு அப்பாலுள்ள கண்காணாக் கதிர்கள்.

அகிலம் (Universe): வானவெளியிலுள்ள கோள்கள், விண்மீன்கள் முதலிய அனைத்தும் அடங்கிய பகுதி.

அடிவளி மண்டலம் (Troposphere): பூமியின் அருகி லுள்ள வளிமண்டலத்தின் அடுக்கு. இது துருவங்களில் சுமார் 5 மைல் உயரம்; பூமியின் நடுக்கோட்டில் சுமார் 10 மைல் உயரம்.

அடுக்குவளி மண்டலம் (Stratosphere): வளிமண்டலத்தில் கடல்மட்டத்திற்கு மேல் சுமார் 8 - 20 மைல் உயரமுள்ள அடுக்கு இது.

அண்டக்கதிர்கள் (Cosmic rays): சூரியனிடமிருந்து பெருவேகத்துடன் பூமியை அடையும் கதிர்கள். அவற்றின் ஆற்றல் பல ஆயிர இலட்சம் வோல்ட்டுக்களுக்குச் சமம்.

அயனப்பாதை (Orbit): வான இயலில் சூரியனைச் சுற்றிக் கோள்கள் செல்லும் பாதை. எ - டு. பூமியைச் சுற்றிக் கொண்டு சந்திரன் செல்லும் வழி.

அயனி மண்டலம் (Ionosphere) : வளிமண்டலத்திலுள்ள ஓர் அடுக்கு. இது கடல் மட்டத்திற்குமேல் 50 - 300 மைல் வரை பரவியுள்ளது. இதில் அயனியான வாயுக்கள் உள்ளன. அயனியாதல் (Ionization): இச் செயலால் ஏதாவது ஒரு பொருள் (எ - டு. பூமிக்கு மேலுள்ள காற்று மண் டலப் பகுதிகள்) மின்னூட்டம் ஏற்றப்பெற்று ஏராளமான ஆற்றல் உணடாக்கப்பெறுகின்றது.

இராக்கெட்டு (Rocket): சிறு வாணத்தின் தத்துவத்தைப் பயன்படுத்தித் தன்னுள்ளே நிகழும் வெடிப்புக்களின் எதிர்வினை அல்லது எதிர் - இயக்கத்தால் முன் செல்லும் எய்கருவி. அந்த வெடிப்பினால் உண்டாகும் வாயுக்கள் பின்புறமாகச் செல்லுவதால் (அவை பின்னுள்ள காற்றைத் தள்ளுவதால் அல்ல) இக்கருவி முன் நோக்கிச் செல்கின்றது.

இராக்கெட்டின் சுமை (Payload): இராக்கெட்டு சுமந்து செல்லும் வளிமண்டல நிகழ்ச்சிகளை அளக்கும் கருவித் தொகுதி, வானெலியின் அனுப்பும் கருவி, காமிராக்கள் முதலியவை அடங்கிய பகுதி இது. இவை இராக் கெட்டில் மூக்கில் அமைக்கப்பெறுகின்றன.

இராடார் (Radar): இது ‘Radio Detection and Ranging’ என்பதன் சுருக்கம். இப்பொறியமைப்பு வானொலிச் சிற்றலைகளைப் பயன்படுத்திப் பொருள்களின் இருப்பிடத்தை அறியும்.

ஈர்ப்பு ஆற்றல் (Gravity) : பூமி பொருள்களைத் தன்னுடைய மையத்தை கோக்கி இழுக்கும் விசை இது.

உந்து விசை (Thrust): ஒர் இராக்கெட்டு தன்னுள்ளே வளர்க்கும் “தள்ளுதலி”ன் அளவாகும் இது; இஃது இராத்தல்களில் அளக்கப்பெறுகின்றது.

எக்ஸ்புளோரர்-1 (Explorer-I): பூமியின் அருகிலுள்ள வளிமண்டலத்தையும், வளிமண்டலத்திற்கு அப்பாலுள்ள வெளிமண்டல நிலைமைகளையும் ஆராய்வதற்கு அமெரிக்கர் களால் அனுப்பப்பெற்ற இவ்வகைப் பெயர்கள் தாங்கிய இராக்கெட்டு வரிசையில் முதலாவது. இதுதான் ‘வான் அல்லென் கதிர்வீச்சு வளைசூழல்,’ என்ற பெயர் கொண்ட கதிர்வீச்சு மண்டலத்தைக் கண்டது. இது 1958 சனவரி 31 இல் அனுப்பப்பெற்றது. இஃது உருளை வடிவமானது. இதுகாறும் (21-7-1961) இந்தவரிசையில் பல்வேறு நாட்களில், ஒன்பது வரை அனுப்பப் பெற்றுள்ளன.

எதிர்ப்பு இராக்கெட்டு (Retro-rocket): ஓர் ஊர்தியின் மீது அல்லது அதனுள் பொருத்தப்பெற்றுள்ள இராக்கெட்டு. ஊர்தியின் முன்னோக்கிச் செல்லும் வேகத்தைத் தணிப்பதற்குப் இது பயன்படுத்தப்பெறுகின்றது.

எரிந்து போதல் (Burn out): எரிபொருள்கள் தீர்ந்து போன நிலையில், அல்லது அஃது இயந்திரத்திற்குக் செல்லுவதைத் தடுத்த நிலையில், இராக்கெட்டு எரிவது நின்று போகும் தருணம்.

எரிபொருள் (Propellent): உந்துவிசையை உண்டாக்குவதற்கு ஓர் இராக்கெட்டில் எரிக்கப்பெறும் திரவநிலை அல்லது திடநிலையிலுள்ள பொருள்.

ஏவுகணை (Missile): பகைவன்மீது அல்லது பகைவனுக்குச் சொந்தமான விமானங்களின் மீது வீசியெறியப் பெறுவது. பறந்து செல்லும்பொழுதே செல்லும் வழியில் சரியாகச் செலுத்தப் பெறுவது வழிகாட்டி ஏவுகணை (Guided missile); பறக்கும் முதல் நிலையின் பொழுது மட்டிலும் சக்தி தரப்பெற்று நெறிப்படுத்தப்பெறுவது உந்து ஏவுகணை (Ballisitc missile).

ஒலித்தடை (Sound barrier): ஒலியின் வேகமும் விமானத்தின் வேகமும் இணைந்து செல்லும்பொழுது உண்

டாகும் ஓர் உயர் அமுக்கமுள்ள காற்றுச் சுவர். இது விமானத்தைத் தடுத்து நிறுத்துகின்றது.

ஃபெயித்-7 (Faith-7): இது 1963 மே-15 இல் அமெ ரிக்கர்களால் வானவெளியில் எடையின்றி ஒருவர் எவ்வளவு காலம் தங்கியிருக்கலாம் என்று ஆய்வதற்கு அனுப்பப் பெற்ற விண்வெளிக்கூடு (Capsule). இதில் தங்கியிருந் தவர் ‘கார்டன் கூப்பர்’ என்ற விண்வெளி வீரர்.

கவர்ச்சி விதி (Law of gravitation): “இந்த அகிலத்திலுள்ள பொருள்கள் தம்மொடு தாம் கவரப்பெறும் ஆற்றல் அப் பொருள்களின் பொருண்மைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்விகிதத்திலும், அவற்றிற்கிடையேயுள்ள தாரத்தின் வர்க்கத்திற்குத் தலைகீழ் விகிதத்திலும் இருக்கும்” என்பதே இந்த விதி: சர் ஐசாக் நியூட்டன் கண்டறிந்தது.

குதிகுடை (Parachute): விபத்து நேருங்கால் விமானத்திலுள்ளோர் பூமியில் இறங்குவதற்குப் பயன்படும் ஒரு வித குடைபோன்ற அமைப்பு. செல்லும் வழி (Trajectory) : ஓர் இராக்கெட்டு அல்லது ஏவுகணை ஏவப்பெறும் இடத்திலிருந்து தாக்கும் இடம்வரை செல்லும் வழி இது.

ஞாயிற்று மின்கலம் (Solar battery) : ஞாயிற்றின் ஒளியினால் மின்னூட்டம் பெற்று இயங்குவது. விண்வெளி ஆராய்ச்சியில் அனுப்பப்பெறும் தொலைக்காட்சிச் சாதனத்தில் பயன் படுவது.

டிஸ்கவரர் XIII (Discoverer-XIII); அமெரிக்க விமானப் படையினரால் திரும்பப்பெறும் யுக்திமுறைகள், வான வெளி நிலைமைகள், துணைக்கோள்கள் இயங்கும் உயரத்தில் பொருள்களில் ஏற்படும் மாறுதல்கள் முதலியவற்றை ஆராய அனுப்பப்பெற்ற துணைக்கோள்களுள் பதின்மூன்றாவது இது. 1960ஆகஸ்டு 10இல் அனுப்பப்பெற்று மறுநாள் திரும்பப் பெறப்பட்டது. இதுவரை (21-7-61) இந்த வரிசையில் 26 துணைக்கோள்கள் அனுப்பப்பெற்றுள்ளன.

துணைக்கோள் (Satellite) : வானத்தில் ஒரு பெரிய கோளினைச் சுற்றி அயனப் பாதையில் சுற்றும் சிறுகோள். எ-டு. சந்திரன் பூமியின் துணைக்கோள்.

தொலை ஒலிப்பான் பதிவு (Telemetering) : ஓர் இராக்கெட்டிலுள்ள ஒரு கருவியிலிருந்து வானவெளியைப் பற்றிய தகவல்களை (Space data) வானொலி மூலம் நிலத்திலுள்ள ஒரு பொறிக்கு அனுப்பிப் பதிவு செய்யும் முறை.

பயனீயர்-1 (Pioneer-I) : இது ஆழ்ந்த விண்வெளி ஆராய்ச்சியில் கோள்களுக்கிடையிலுள்ள விண்வெளியின் நிலைமைகளைக் காணத் தொடர்ந்து அனுப்பப்பெற்ற துணைக்கோள்களுள் முதலாவது. இது 1958-அக்டோபர் 12-இல் அனுப்பப்பெற்றது. இது 71,000 மைல் உயரத்தை எட்டியது. இன்றுவரை (21-7-61) இந்த வரிசையில் ஐந்து துணைக்கோள்கள் அனுப்பப்பெற்றுள்ளன.

பல நிலை இராக்கெட்டுகள் (Multistaged rockets) : ஒன்றன் மீது ஒன்றாகப் பல இராக்கெட்டுகளை அமைத்து ஒன்றன் பின் ஒன்றாகச் சுட்டு மிக உயரத்திற்குச் செலுத்தப்பெறும் இராக்கெட்டுகளின் தொகுதி.

புறஊதாக் கதிர்கள் (Uitra-violet rays) : சூரிய ஒளியின் கண்காணாக் கதிர்கள்; இவை சுடுபுண்களை (Sunburn) உண்டாக்கும். கண்காணா அலைநீளங்களையுடைய இவை நிறமாலையின் கண்காணும் ஊதாக் கதிர்களுக்கு அப்பாலுள்ளவை.

புறவாயு மண்டலம் (Exosphere): கடல் மட்டத்திற்குச் சுமார் 200 மைல் உயரத்திற்கு மேலே உள்ள வளிமண்டலப் பகுதி.

போலேரிஸ் (Polaris): இவை கடற் படையின் ஒருவகை ஏவுகணைகள்; திட எரிபொருளைக் கொண்டவை. இந்த மாபெரும் இராக்கெட்டுகளைக் கப்பல் தளத்தினின்றும் இயக்க முடியாது. இஃது 1500 மைல்வரை செல்லக் கூடிய இடைநிலை எல்லை உந்து ஏவுகணை (IRBM) ஆகும். இது நீர் மூழ்கிக் கப்பலினின்றும் எய்யப்பெறலாம். ஒரு நீர்முழ்கிக் கப்பல் 16 இவ்வகை ஏவுகணைகளைச் சுமந்து செல்லக்கூடும்.

மிகஅண்மை உயரம் (Perigee): சந்திரன் அல்லது ஒரு செயற்கைத் துணைக்கோள் தனது அயனப் பாதையிலிருந்து பூமிக்கு மிக அண்மையிலுள்ள உயரத்தின் இடம்.

மிகத் தொலைவான உயரம் (Apogee): சந்திரன் அல்லது ஒரு செயற்கைத் துணைக்கோள் தனது அயனப்பாதையிலிருந்து பூமிக்கு மிகச் சேய்மையிலுள்ள உயரத்தின் இடம்.

மின்காந்த அலைகள் (Electro-magnetic waves): மணிக்கு 1,86,000 மைல் வீதம் செல்லும் வானொலி அலைகள், ஒளி அலைகள் ஆகியவை.

மூலக்கூறு (Molecule): ஒரு பொருளின் பண்புகளைப் பெற்றுள்ள அப்பொருளின் மிகச் சிறிய பகுதி. எ-டு. நீரின் மிகச்சிறிய பகுதி நீரின் தன்மைகளைப் பெற்றுள்ளது.

லூனிக்-I (Lunik-I) : லூனிக் என்பது அமெரிக்கர்கள் இரஷ்யர்களின் சந்திரமண்டல வெளி ஆராய்ச்சிக்குத் தந்த சாட்டுப் பெயர் (Nickname). லூனிக்-1 என்பது முதன் முதலாகச் சந்திரனுக்கு மிக அண்மையில் செல்லுமாறு அனுப்பப்பெற்ற முதல் இரஷ்யச் செயற்கைத் துணைக்கோள். இது 1959 சனவரியில் அனுப்பப்பெற்றது. சூரியனைச் சுற்றி இது சுமார் 15 மாதகாலம் சுற்றிக் கொண்டிருந்தது.

லூனிக்-II (Lunik-11) : இது 1959 செப்டம்பர் 12 இல் அனுப்பப்பெற்றது. இது சந்திரனுக்குள் பாய்ந்த முதல் செயற்கைத் துணைக்கோள். 35 மணி நேரம் பிரயாணம் செய்து மறுநாள் சந்திரனைத் தொட்டது.

லூனிக்-III (Lunik-III) : 1959 அக்டோபர் 4 இல் அனுப்பப்பெற்ற இந்தத் துணைக்கோள் சந்திரனுக்கு அப்பாலும் சென்று அதன் பின்புறத்தோற்றத்தை ஒளிப்படங்களாக எடுத்து, உருத்துலக்கி, தொலைக்காட்சிச்சாதனத்தின் மூலம் பூமிக்கு அனுப்பியது. சந்திரனின் கவர்ச்சி ஆற்றலின் விளைவுகள் இதன் ஆயுட்காலத்தைக் குறைத்து விட்டது.

வழிகாட்டி அமைப்பு (Guidance system) இராக்கெட்டுகள் வானவெளியில் செல்லுங்கால் அவை சரியான முறையில் திட்டமிடப்பெற்ற பாதைகளில் செல்லுமாறு செய்வதற்குரிய அமைப்பு இது. ஒருவகையில் எதிர் இராக்கெட்டுகளும் மற்றொருவகையில் ஜைராஸ்கோப்பும் உள்ளன.

வளி மண்டலம் (Atmosphere) : பூமியைச் சூழ்ந்துள்ள காற்றின் தொகுதி இப்பெயர் பெறுகின்றது.

வான்கார்டு I (Vanguard-I) : இது முதன் முதலாக அனுப்பப்பெற்ற சூரிய ஒளியால் சக்திபெற்ற துணைக் கோள். 1958 மார்ச் 17 இல் அனுப்பப்பெற்ற இது 2,453 மைல் உயரம்வரை சென்றது.

வான் அல்லென் கதிர்வீச்சு வளைசூழல் (Van Allen Radiation Belt): பூமியிலிருந்து சில நூறு மைல்கட்கு அப்பால் வான வெளியில் தீவிரமான கதிரியக்கக் கிளர்ச்சியுள்ளது இது ‘வான் அல்லென் கதிர் வீச்சு வளை சூழல்’ என வழங்கப் பெறுகின்றது.

விடுபடு தேர்வேகம் (Escape velocity): மணிக்குச் சுமார் 25,000 மைல் வேகத்தில் ஒரு பொருள் பிரயாணம் செய்தால் அது பூமியின் ஈர்ப்பு ஆற்றலைச் சமாளிக்கும். அஃதாவது, அஃது அந்த ஆற்றலினின்றும் விடுபடும். இந்த வேகமே அதன் ‘விடுபடு நேர் வேகம்’ ஆகும்.

விண்கல் (Meteorite): வீழ்மீன் காற்றில் சரியாக எரியாததால் அது பூமியின் மேற்பரப்பின் மீது வீழ்கின்றது. வீழ்மீனின் எரியப்பெறாத சிறு பகுதியே ‘விண்கல்’ ஆகும்.

வீழ்மீன் (Meteor: பூமியின் வளி மண்டலத்தினூடே செல்லுங்கால் எரியும் ஒரு சிறு வான்வெளிப் பொருளாகும் இது.

வெப்பத் தடை (Heat barrier) : ஒரு விமானத்தின் வேகம் அதிகரித்து, ஒலியின் வேகத்தையும் கடந்து, 1500 மைல் வேகம் அடையத் தொடங்கினால், அது காற்றின் மூலக்கூறுகளுடன் வன்மையாக மோதுகின்றது. இதனால் விமானம் சூடேறத் தொடங்குகின்றது. இதுவே வெப்பத்தடை; விமானிகள் இதனை ‘வெப்பத் தாக்குதல்’ என்கின்றனர்.

வெளியேறு நேர்வேகம் (Exhaust velocity): ஓர் இராக்கெட்டின் கூர் நுனிக் குழலின் வழியாக ‘ஜெட் வாயுக்கள்’ எந்த வேகத்தில் வெளியேற்றப் பெறுகின்ற னவோ, அந்த வேகம் இராக்கெட்டின் ‘வெளியேறு நேர் வேகம்’ என வழங்கப்பெறுகின்றது.

வேதியியல் வளி மண்டலம் (Chemosphere) : கடல் மட்டத்திற்குமேல் 20 லிருந்து 50 மைல்வரையிலுள்ள வளி மண்டலத்தின் அடுக்கு இப்பெயர் பெறுகின்றது. இதில் ‘ஓஸோன்’ அடுக்கும் உள்ளது.

ஸ்புட்னிக்-1 (Sputnik-1) : இது தான் உலகிலேயே முதன் முதலாக அனுப்பப்பெற்ற பூமியின் துணைக்கோளாகும். 1957-அக்டோபர் 4 இல் இரஷ்யர்களால் அனுப்பப் பெற்ற இது கடல் மட்டத்திற்குமேல் 588 மைல் உயரம் வரைசென்றது. இதன் எடை 184.3 இராத்தல்.

ஸ்புட்னிக்-11(Sputnik-II) : 1957 நவம்பர் 3 இல் அனுப்பப்பெற்ற துணைக்கோள் இது. இதன் எடை 1120 இராத்தல். இது கடல் மட்டத்திற்கு மேல் 1038 மைல் உயரம்வரை சென்று 1958-ஏப்ரல் 14 இல் திரும்பியது. இது முதன்முதலாக ‘லைக்கா’ என்ற நாயையும் விண் வெளிக்குக் கொண்டு சென்றது.

ஸ்புட்னிக்-III (Sputnik-IT1) : இது 1958 மே 15 இல் அனுப்பப் பெற்றது; அதே ஆண்டு ஏப்ரல் 6 இல் திரும்பியது. பல்வேறு அளவுகளை அளப்பதற்காகப் பல ஏற்பாடுகளுடன் சென்றது. அண்டக்கதிர்கள், கதிர் வீச்சுவளை சூழல், காந்தப் புலம், வீழ்மீன்கள் முதலியவற்றைப் பற்றிப் பல தகவல்களை இதனால் அறிய முடிந்தது. இதன் எடை 1 டன் 6 அந்தர் (2,912 இராத்தல்).

ஸ்புட்னிக்-IV (Sputnik-IV) : 1960 மே 15 இல் அனுப்பப்பெற்ற இது ஏதோ எதிர்பாராத வகையில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக அதனை மீண்டும் வளி மண் டலத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. இது மிகப்பெரிதாக இருந்ததால் இரஷ்யர்கள் இதனை 'விண்வெளி விமானம்' (Space ship) என்றே வழங்கினர்.

ஸ்புட்னிக்-V (Sputnik-V) : இஃது இரஷ்யர்களால் 1960-ஆகஸ்ட் 19 இல் அனுப்பப்பெற்ற இரண்டாவது 'விண்வெளி விமானம்'. இதிலிருந்த இரண்டு நாய்கள், நாற்பது சுண்டெலிகள், இரண்டு எலிகள், ஈக்கள், நுண் கிருமிகள் இவையாவும் விண்வெளி மண்டலத்தினின்றும் உயிருடன் மீண்டன. இந்தக் 'கப்பல்' மறுநாள் திரும்பியது.