இராம கவிராயர் தனிப்பாடல்கள்

இராம கவிராயர் தனிப்பாடல்கள்

பாடல் 9 தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 129 & 130

பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்

பாடல் 1

தொகு
கார்படைத்த கரதலத்தான் றுரைதிரு வேங்கடம் அளித்த கன்னா வெங்கும்
பேர்படைத்த வானந்தரங்க மகிபாலா நின்பிரம்பூர் நாட்டி
னேரிழைக்கு விழியேழு முலையாறு காதைந்து நெற்றி நான்கு
பாரிடத்தில் இப்புதுமை கண்டு வந்தேன் இதன்பயனைப் பகர்ந்திடாயே. (1)

பாடல் 2

தொகு
கொக்குப்பறக்கும் புறாப்பறக்குங் குருவிபறக்குங் குயில்பறக்கும்
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர் நானேன் பறப்பேன் அராதிபனே
திக்கு விசயஞ் செலுத்தியுயர் செங்கோல் நடாத்தும் அரங்காநின்
பக்கம் இருக்க வொருநாளும் பறவேன் பறவேன் பறவேனே. (2)

பாடல் 3

தொகு
மூவொன் தென்பதிலோர் நாளில்லை மொய்வனத்திற்
றாவுந் தனிமிருகம் தானில்லை- நேரே
வளையா நடையில்லை வாரிறுக விம்மும்
முளையாளை யான் முயங்கு தற்கு. (3)

பாடல் 4

தொகு
சென்னபுரி வந்து சிவனாயினேன் நல்ல
அன்னமது காணாதவன் ஆகி- மன்னுசிரங்
கைக்கொண்டரைச் சோமன் கட்டிச்சடை முறுக்கி
மெய்கண்ட நீறணிந் துமே. (4)

பாடல் 5

தொகு
தனம்பொன் பணம் படைத்த சம்பரி பரப்பின்னோர்
முனம் பிச்சைகள் வனிலமூட்டை- கனம்பெற்ற
மீதலத்தும் போற்றுகின்ற வேதாசலா நினைப்போல்
ஈதலத்த மார்கிலரே யென். (5)

பாடல் 6

தொகு
சேரா நாளெல்லாம் வெண்டிங்களனமே சேர்ந்தால்
ஆரா வமுதாம் என்னாச்சரியம்- ஓராமல்
நானி வாசைமேவ நரசையன்றந் தருளும்
சீனிவாசையன் மணஞ் செய்து. (6)

பாடல் 7

தொகு
அஞ்சம்பினால் எய்தும் அன்னநடைக் கன்னிகையை
அஞ்சம்பினால் எய்யும் அப்பாவி- நெஞ்சமுறும்
காவிக்கணந்தார் கலசை வேதாசலனே
காவிக் கணந்தார் கடந்து. (7)

பாடல் 8

தொகு

விருத்தம்

மதுமேவு குவளையணி புயன் என்றேனோ
மருவனஞ் சூழ் கலசை நகர் மன்னென்றேனோ
முதுநீதி தெய்வ சிகாமணி மாலுக்கு
மூத்தவொரு மகனென நான் மொழிந்திட்டேனோ
பதுமாசனத்தி மகனென் மேற்சண்டை
பண்ணுகின்றா னானவனால் படுந் துன்பத்தால்
இதுவேதாசலம் என்றேன் இதற்கென் அன்னை
ஏதேதோ வைதுபழி யிடுகின்றாளே. (8)

பாடல் 9

தொகு
பூங்கமலன் கலசை வேதாசலன் போலுரு வமைக்கும் பொற்பிலானென்
றாங்கயலார் சொல்லக் கேட்டு வாணியரி பாலுரைக்க அடைந்தாள் அன்னோன்
தூங்குவனம் போயிருந்தான் அரனிடத்திற் சொலப் பித்தாய்ச் சுழலல் உற்றான்
ஏங்கியந்தத் திறங்கற்பான் இவனாவில் வீற்றிருந்தாள் எழிற்கண் மானே. (9)