இருட்டு ராஜா/10
மறுநாள் தனபாக்கியம் விசேஷமாக சுகியன் தயாரித்திருந்தாள். அருமையாக ருசித்தது. அதில் பத்து எடுத்துக் கட்டிக் கொண்டு முத்துமாலை மங்கையையும் திரிபுரத்தையும் பார்ப்பதற்காகப் போனான்.
திரிபுரசுந்தரி பளிச்சென்று பட்டாடையோடு விளங்கினாள். “அத்தான் வாங்க” என்று முகமலர்ச்சியோடு வரவேற்றாள்.
"மாமா வந்தாச்சி” என்று கூவிக் கொண்டு ஓடிவந்த மங்கை அவன் கால்களைக் கட்டிக் கொண்டது.
“இது உனக்கு மாமா இல்லேடி, அப்பா முறை” என்று திரிபுரம் சொன்னாள்.
“உக்குங்...மாமாதான்...நல்ல மாமா” என்று. குழைந்தாள் மங்கை.
முத்துமாலை சிரித்தான். குழந்தையிடம் ஒரு சுகியனைக் கொடுத்து விட்டு, பாக்கியை திரிபுரத்திடம் தந்தான்.
“இது என்னது?” என்று உருட்டி உருட்டிப் பார்த்தது குழந்தை.
“சுகியன். தின்னுபாரு இனிச்சுக்கிடக்கும்”
குழந்தை அதை ருசி பார்த்தது. பிறகு ரசித்துக் தின்றது.
“என்ன, எப்படி இருக்கீங்க? ஏன் நின்னுக்கிட்டே இருக்கீங்க? உட்காருங்க” என்று திரிபுரம் உபசரித்தாள். வேறு ஒரு பெரிய பெண் எட்டிப் பார்த்தது. பன்னிரண்டு வயது இருக்கும்.அவளுடன் ஒரு பையன் வந்தான். எட்டு வயது இருக்கலாம்.
“இவ தான் மூத்தவ, காந்திமதி. அடுத்தது.நடராசன், மூன்றாவது தான் மங்கை” என்று அவள் அறிமுகப் படுத்தினாள்.
பிள்ளைகள் ஆரோக்கிய மினுமினுப்புடனும் விலை உயர்ந்த உடைகளின் பளபளப்போடும் விளங்கின.
பணத்துக்குக் கவலையில்லை, செழிப்பா வாழ்றாங்கன்னு தெரியுது என்று முத்துமாலையின் மனம் கணித்தது.
திரிபுரம் ஆளுக்கு ஒரு சுகியன் கொடுத்து விட்டு, மீதியை உள்ளே கொண்டுபோய் வைத்தாள். பெரிய பெண்ணுக்குச் சில உத்திரவுகளிட்டுவிட்டு வெளியே வந்தாள்.
“இப்போ எந்த ஊரிலே இருக்கீங்க?” என்று கேட்டு வைத்தான் முத்துமாலை.
“பம்பாயிலே தான். ஆனா ஒரு இடத்திலே இருக்க முடியிறதில்லே. டில்லி, கல்கத்தா, மெட்ராஸ் அங்கே இங்கேயின்னு சுத்திக்கிட்டே இருப்பாங்க. மெட்ராஸிலே ஒரு வீடு வாங்கி, எங்களை அங்கேய வச்சிட்டு, தான் வழக்கம் போல பிசினஸை கவனிக்கலாம்னு நினைச்சிருக்காங்க. வீடு கூடப் பார்த்தாச்சு.”
“அப்ப இந்த ஊருக்கு வந்து தங்கறதா எண்ணம் இல்லையாக்கும்?” .
“வடக்கேயே பெரிய ஸிட்டிகளிலே இருந்து பழகிப் போச்சு. இங்கே வந்தா பிள்ளைகளுக்கும் பிடிக்காது. அவுகளுக்கும் பிடிக்காது.” “அம்மாவுக்குப் பிறகு இந்த வீடு; இங்கே இருக்கிற நிலம், எல்லாம்?”
“அதை எல்லாம் வித்திட வேண்டியதுதான், இந்த ஊரிலே என்னத்துக்கு வீடும் நிலமும்? அம்மா இருக்கப்போய்த்தான் இந்த ஊருக்கு வரவேண்டியிருக்கு அம்மாவுக்குப் பிறகு யாரு இங்கே வரப்போறா?” என்றாள். அவள்.
“ஏன், ஊரோடு இருக்கிற சொந்தக்காரங்களையும் பிடிக்கலையாக்கும்?”
பதில் பேசாது சிரித்த திரிபுரம் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, உள்ளே போனாள்.
இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தமோ என்று நினைத்தான் அவன்.
மங்கை அவனிடம் ஒட்டிக் கொண்டு சிரித்து விளையாடியது. அவனும் குழந்தையோடு விளையாடிய வாறே, “யாருக்குப் பிடிச்சாலும் பிடிக்காமப் போனாலும் உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு,இல்லையா?” என்றான்.
சிறிது நேரத்தில் திரிபுரம் காப்பி எடுத்து வந்தாள். மகளை காப்பி தயாரிக்கும்படிதான் ஏவியிருந்தாள். காப்பி டம்ளரை அவன் அருகில் வைத்துவிட்டு, “உம் சாப்பிடுங்க” என்றாள்.
“இப்ப எதுக்கு காப்பி?” என்றான். பிறகு எடுத்துக் குடித்தான்.
“காந்தி போட்டதா? நல்லாத்தான் போட்டிருக்கா?” என்று பாராட்டுரை வழங்கினான்.
“நீங்க உங்க போக்கு எதையும் மாத்திக்கிடலேன்னு தெரியுது. நிலத்தை எல்லாம் வித்துட்டிகளாமே? அந்தப் பணத்தையும் சுட்ட மண்ணாச்கியாச்சு,இல்லையா? அதை வச்சுக்கிட்டு ஊரை விட்டு வெளியேறி, ஊத்துக்குடி, மதுரை, இதுமாதிரி எங்கேயாவது போயி, ஒரு கடை வச்சிருக்கலாமில்லா? பணம் சேர்ந்திருக்கும். அதை விட்டுப் போட்டு பணத்தையும் பாழாக்கி, உடம்பையும் கெடுத்து, கெட்ட பேரும் வாங்கிக்கிட்டு இதெல்லாம் என்னத்துக்கு?”
அவள் அனுபவப்பட்ட பெரியமனுஷி தோரணையில் பேசினான்.
முத்துமாலை பெருமூச்செறிந்தான். “யாராரு எப்படி எப்படி வாழனுமின்னு ஏற்பட்டிருக்கோ, அப்படி தான் ஒவ்வொருத்தன் வாழ்கையும் அமையும். நான் பெரிசா திட்டம் போட்டுகிட்டு பணத்தோடு பட்டணம் போயிருந்தாலும் பாழாகணும்னு இருந்தால், இருக்கிற பணம் பாழாகித்தான் போகும். நான் இப்படி இருக்கேனே என்றதுக்காக நான் என்னைக்குமே வருத்தப் பட்டதில்லை. இனிமேலா வருத்தப்படப் போறேன்? நீ ஊரைவிட்டுப் போனதினாலே பணமும் பவிசுமா, சீரும் சிறப்புமா இருக்கிறதாத் தெரியுது. சந்தோஷமா இருக்கணும். அதுதான் முக்கியம். சரி, அவாள் என்ன பிசினசு பண்ணுதாக?” என்றான்.
“என்னென்னவோ பண்ணுறாங்க. அதெல்லாம். எனக்குத் தெரியாது.”
“எப்போ இந்த ஊருக்கு வருவாக?”
“அதுவும் தெரியாது. திடும்னு புறப்பட்டுப் போவாங்க. ரெண்டு மூணு நாள் வரமாட்டாங்க, திடீர்னு வந்துநிப்பாங்க.எங்கே போறேன்னும் சொல்லமாட்டாக, கேட்கவும் கூடாது. அவங்க குணத்தை புரிஞ்சுக்கிட்ட பிறகு நானும் கேட்கறதில்லே. வீட்டோட கிடக்கிற எனக்கு அதெல்லாம் தெரிஞ்சுதான் என்னஆகப்போகுது. கேட்கிறதெல்லாம் வாங்கித் தந்திருவாங்க. பணமும் கொடுத்திட்டுப் போவாக, அப்புறம் என்ன?” என்று பிடிப்பில்லாமல் பேசினாள் திரிபுரம்.
“இந்தத் தடவை இந்த ஊருக்கு அவான் வரும்போது பார்த்துப் பேசணுமின்னு நினைக்கிறேன். போன தடவை வந்தப்போதான் அவாளைப் பார்க்கவே இல்லே. அப்போ நீங்கள்ளாம் வந்துட்டுப் போயி அஞ்சாறு வருடம் இருக்குமே. இருக்காது?”
“அஞ்சு வருசம் ஆச்சு. அடிக்கடி எங்கே வர முடியுது? ஒரு தடவை வந்திட்டுப் போறதுன்னு சொன்னா எவ்வளவு சிரமமா இருக்குது”
“அதுவும் சரிதான்” என்றான் முத்துமாலை. சட்டென்று எழுந்து கொண்டான். “சரி, நான் வாரேன்... மங்கை, போயிட்டு வாரேன்” என்று கிளம்பினான்.
“டா-டா” என்று விரல்களை அசைத்தது குழந்தை. “சீரியோ! பை பை” என்றது.
அதில் எதுவும் அவனுக்கு விளங்கவில்லை. “பிள்ளைகள் சீக்கிரமே புத்திசாலிகள் ஆகிவிடுகின்றன. இந்தக் காலத்திலே” என்று எண்ணியவாறே வெளியேறினான்.
—திரிபுரம் ரொம்பப் பெரியவளாயிட்டா. எனக்கே போதிக்க முன்வந்திருக்கிறா, பணமும் பவிசும் ஆட்களை ரொம்பவும் மாத்திப் போடும்கிறது சரிதான்...
அவனுக்குக் குடிக்க வேண்டும்போல் வந்தது. அப்போதே குடித்தாக வேண்டும். வழக்கமா ராத்திரி தான் குடிப்பான், திரிபுரத்தைப் பார்த்தபிறகு அவள் பேச்சைக் கேட்ட பிறகு, அவனுக்கு ஒரு வறட்சி ஏற்பட்டது. கசப்பு முட்டி வந்தது. நெஞ்சு எரிவது போலிருந்தது. குடித்தால் தான் அது தணியும்.
குடிக்கப் போனான். ராத்திரி வருகிற வரை குடித்துக் கொண்டேயிருந்தான். இருட்டியதும், முத்துமாலையின் சீட்டி ஒலி அன்று மிக அதிகமாகக்கேட்டது. பாட்டுகளும் தீவிரமாக முழங்கின. வழக்கமாக அவன் அடிக்கடி பாடாத பாட்டு ஒன்று இரவு பூராவும் திரும்ப திரும்பப் பொங்கி வழிந்தது அவனிடமிருந்து
அவள் போனாளே
பறந்து போனாளே!-என்னை
மறந்து போனாளே-விட்டுப்
பிரிந்து போனாளே-ஐயோ
போயே போனாளே!
தெருக்களைச் சுற்றிச் சுற்றி வந்தான். அமைதியை இழத்து ஆத்மா ஏங்கி அலறுவது போல் ஓலமிட்டான்.
எட்ளடிக்குச்சுக்குள்ளே-ஐயா
எத்தனை நாளிருப்பேன்-நான்
எத்தனை நாளிருப்பேன்-இன்னும்
எத்தனை நாளிருப்பேன்!
தனது வீட்டுக்குள்ளே தூக்கம் கலைந்து புரண்டு புரண்டு தங்கராசு அதிசயித்தான். இன்னிக்கு முத்துமாலைக்கு என்ன வந்துட்டுது? ஏன் இந்தப் போக்குக்குப் போறான்?
அவனுக்கு மனசுக்குள்ளே என்னவோ நேர்ந்திருக்க வேணும் என்று தங்கராசுக்குத் தோன்றியது. “நான் அவனைப் பார்த்துப் பேசியும் நாளாயிட்டுது; நாளைக்கு அவனிடம் கேட்கணும்” என்று எண்ணிக் கொண்டான்.