9

அம்மன் கோயில் கொடை வந்தது.

ஊர் பொதுத் திருவிழா அது. எல்லோரும் உற்சாகமாகக் கலந்து கொள்வார்கள்.

முத்துமாலை சில வருடங்கள் வரிப்பணம் கொடுக்க மறுத்து வந்தான். அவனுடைய அம்மா இறந்த தருணத்தில் ஊரார் அவனுக்குப் பாடம் கற்பித்து விட்டதிலிருந்து, அவனும் ஒழுங்காக பணம் கட்டலானான். அத்துடன் விழாக் குதூகலத்தில் அவனும் ஆர்வத்தோடு கலந்து மகிழ்ந்தான்; மற்றவர்களுக்கம் மகிழ்ச்சி அளிக்தான்.  கொடை நாட்களில், சில வருடங்கள் அவன் காளி வேடம் தரித்து ஆடிப்பாடி அமர்க்களப்படுத்தினான். பிறகு அவனாகவே அதை விட்டுவிட்டான்.

என்றாலும் கூட்டத்தில் அங்குமிங்கும் அலைந்து கார்வார் பண்ணி தான் இருப்பதைக் காட்டிக் கொள்ளுவது அவன் சுபாவமாக இருந்தது. அவனும் அவனைப் போன்ற சிலரும் சேர்ந்து கொண்டு விழாக்காலத்தில் வியாபாரம் பண்ண வருகிற மிட்டாய்க்கடைக்காரர்கள், டி பலகாரக் கடைக்காரர்கள், தேங்காய் பழம் விற்பனையாளர்கள், மற்றும் பல தரப்பட்ட சில்லறை வியாபாரிகள் அனைவரிடமும் காசு வசூலிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். மிட்டாய், பழம், இதர பொருட்களையும் இலவசமாகப் பெற்றார்கள். “எங்களுக்குக் கொடுக்கலேன்னு சொன்னால், ஏதாவது கலாட்டா ஏற்பட்டால், பொருள்கள் களவு போனால், அப்புறம் வருத்தப்படக் கூடாது, நாங்கள் கவனிக்க மாட்டோம். இப்ப நாங்க கண்காணித்து வர்றதனாலேதான் திருட்டுப் போகாமல் இருக்கு. இப்ப எட்டிணா, ஒரு ரூபா கொடுக்கிறதுக்கு மூக்காலே அழுதா, அப்புறம் இருபது முப்பது நஷ்டமாகி. லபோ லபோன்னு வாயிலும் வயித்திலும் அடிச்சிக் கிட்டுப் போவீங்க. ஆமா” என்று ஆலோசனை போலவும் மிரட்டல் போலவும் எடுத்துச் சொல்வார்கள்.

அவர்களையும், அவர்கள் பேச்சையும், போக்கையும் பார்க்கிற வியாபாரிகள், “இந்த அண்ணன்களுக்கு வாய்க் கரிசி போடலேன்னா இந்தத் தடிமாடன்களே கலாட்டா பண்ணவும், கடைகளைச் சூறையிடவும் ஆட்களை ஏவி விடுவாங்க போலிருக்கு, சிறுசிறு திருட்டுக்களையும் நடத்துவிப்பாங்க, இவங்கபேசுற தோரணையைப் பார்த்தாலே தெரியுதே” என்று பயந்து போய், பணமும் பொருள்களும் கொடுப்பார்கள், கொடுத்து விட்டு,  “காளியாத்தாதான் இவனுகளைக் கேட்கணும்” என்று முணு முணுப்பார்கள்.

ஒரு தடவை இப்படிச் சாபம் கொடுப்பது போல் ஒரு கடைக்காரன் சொன்னது முத்துமாலை காதுகளில் விழுந்து விட்டது. கேட்டு அவன் கோபிக்கவில்லை.

“திருவிழாக் கடையிலே நீங்க வச்சதுதானே வரிசையாக இருக்கு. அநியாயவிலை சொல்லி ஊர்க்காரங்களை நீங்க கொள்ளையடிக்கிறீங்க. உங்கக் கிட்ட வசூல் பண்ணும்படி காளி அம்மா தான் எங்களை ஏவியிருக்கிறா. அவ எங்களை கேட்கிறபோது கேட்டு கிடட்டும். அப்படிக் கேட்கிறதுக்கு முன் வந்தா, முதல்லே அவ உங்களைத்தான் தட்டிக் கேட்பாள்” என்று லெக்சரடித்து விட்டே அங்கிருந்து நகர்ந்தான்.

இந்த வருஷம் கொடை கோலாகாலமாக நடந்து கொண்டிருந்தது அம்மன் சப்பரம் “எழுந்திருந்து ஆவதற்கு” இரவில் வெகு நேரம் பிடிக்கும். அதுவரை ஜனங்கள் விழித்திருப்பதற்காகவும் மற்றும் திருவிழாக்கோலம் காட்டுவதற்காகவும் ஸ்பெஷல் நாதசுரம் நையாண்டி, மேளம், கரக ஆட்டம் எல்லாம் ஏற்பாடு செய்வது வழக்கம். வில்லுப் பாட்டும் நடைபெறும்.

கரகம் ஆடுவதற்கு இரண்டு பெண்கள் வந்திருந்தார்கள். கூட்டம் அவர்களைச் சுற்றிலும் வட்டமிட்டிருந்தது. “ஆடு ஆடு” என்று ஒயாது கூச்சலிட்டு அவர்களை ஆடும் படி தூண்டிக்கொண்டேயிருந்தார்கள். தெருத்தெருவாக போய், முக்கிற்கு முக்கு நின்று, வெகுவாக ஆடிக் களைத்துப் போனார்கள் அவர்கள். இருப்பினும் ஒருசிலர் “ஏய் ஏன் நிக்கிறே? பணம் வாங்கலே நோட்டு நோட்டா? ஆடுங்கடி”என்று உத்திரவிட்டு அந்தப் பெண்களைக் கிண்டல் பண்ண லானார்கள்.  களைத்துச் சோர்ந்து போன அப் பெண்கள் கையெடுத்துக் கும்பிட்டார்கள். “ஐயா சாமி! நாங்க ஆடமாட்டோமின்னு சொல்லலே. இதுவரை ஆடி ஆடி ஒரே களைப்பாயிருக்கு. கிறுகிறுன்னு வருது. ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அப்பாலே ஆடுறோம்” என்று பணிவாகச் சொன்னார்கள். அவர்களது குரலே அழுவது போல் தானிருந்தது.

“ஏயம்மாடி, ரெஸ்டாமில்லே... இவொளுக்கு. ரெஸ்டு, அதுவும் ஒரு மணி நேரமில்லா வேணுமாம்!” என்று ரகளைக்கார வாலிபர்கள் கேலி பேசினார்கள்.

அந்தப் பக்கமாக வந்த முத்துமாலை ஆட்டக்காரிகள் கெஞ்சியதையும், வாலிபப் பையன்களின் பேச்சையும் கேட்டான். முன்னே வந்து, “ஐயா தம்பிமாருகளா நீங்க ஒரே அடியா ஆட்டத்தை ரசிச்சுப்போடாதீங்க. வில்லுப் பாட்டு நாதஸ்வரம் இதுகளையும் ரசிக்கப்போங்கடே. அந்தப் பொண்ணு சொல்றதும் நியாயம் தானே? அவங்களும் மனுசப் பிறப்பு தானே. மிஷினு இல்லையே ஒய்வுதேவையின்ணு கேட்கிறதிலே என்ன தப்பு? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு அப்பாலே ஆடுவாங்க. அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டாங்களோ இல்லையோ பாவம்” என்று கூறினான்.

பெண்கள் அவனைப் பார்த்து வணங்கினார்கள். சரி முதல்லே டீ குடியுங்க. அப்புறம் உங்களுக்கு எங்கே சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோ அங்கே போயி சாப்பிடுங்க” என்றான். அவனே டீ வாங்கிக் கொடுத்தான்,

“நன்றி, அண்ணாச்சி” என்று கூறிக் கும்பிட்டார்கள் அவர்கள்.

அவன் தலையை ஆட்டிக் கொண்டே நகர்ந்தான். அவனைத் தேடிச் சில பேர் வந்தார்கள். “முத்துமாலை, இங்கேயா இருக்கே? உன்னை எங்கே யெல்லாம் தேடினோம்!” என்றார்கள்.

“ஏன், என்ன விசயம்?” என்று கேட்டு சாவகாசமாக ஒரு பீடியைப் பற்றவைத்தான் அவன்.

“இந்த நாதசுரககாரன் ரொம்ப ரப்பா பேசுறான்.”

“அகம் பாவம் பிடிச்சி அலையிதான்”

“சரியான மண்டைக் கனம். ஆளைப் பார்த்தாலே தெரியலே!”

“பெரிய நாதசுரச் சக்கிரவர்த்தியின்னு நெனைப்பு அவனுக்கு அதனாலே தான் எடுத்தெறிந்து பேசு தான்.”

“பளபளக்கிற பட்டை மேலே போர்த்திக்கிட்டா, காதிலே வெள்ளைக் கடுக்கனும் கையிலே செயினும் போட்டுக் கிட்டா, நாதசுரத்திலே, தானே விலைக்கு வாங்கி ஒரு மெடலையும் தொங்க விட்டுக் கிட்டா, பெரிய சங்கீத வித்வான் ஆயிருவானோ இவன்!”

இவ்வாறு ஆள் ஆளுக்கு ஒன்று சொன்னார்கள்.

“அமைதியாகச் சொல்லுங்கடே. என்ன நடந்தது. நாதசுரக்காரன் என்னமோ பேசிப்புட்டான்னு புரியுது? என்ன சொன்னான் அவன்? அவன் கிட்டே யாரு என்ன கேட்டா?” என்று நிதானமாகக் கேட்டான் முத்துமாலை.

அவர்கள் சளசளத்ததிலிருந்து அவன் இதைப் புரிந்து கொள்ள முடிந்தது—

அந்த நாதசுரக்காரன் மேல்மினுக்கி ஆசாமியாக, வெறும் காட்சி பொம்மை மாதிரி எத்திக்கிட்டு அலைகிறான். பேருக்குக் குழலை கையிலே வச்சுக்கிட்டு ஒய்யாரமாப் பாக்கிறது. தளுக்காகச் சிரிக்கிறது. ரெண்டு ஊது  ஊதறது நிக்கறதுன்னு நேரம்போக்குறானே தவிர வாங்கின பணத்துக்கு நியாயம் பண்ணுறவனா இல்லே. என்ன ஐயா, வாசிக்காமலே பொழுதை ஊட்டிக் கிட்டு வாரீகளேயின்னு ரெண்டு பேரு கேட்டாங்க. அவன் தங்கப் பல்லு டல் அடிக்கும்படி ஒரு சிரிப்பு சிரிச்சான். ஹே, இந்த ஊரு ரசிக மகாஜனங்க நிறைந்தசபை அதுக்கு இந்த வாசிப்பு பத்தலையாங்காட்டியும்?” என்று விண்ணாரம் கொழிச்சான்.

“ஐயா நீங்க வாசிக்கிறதை வாசிச்சா கேட்கிற வங்க கேட்டிட்டுப்போறாங்க, ரசிக்கத் தெரிஞ்சவங்க ரசிக்கிறாங்க. நீங்க வாசிக்காமலே, ஆடாத சதிர்த்தாசி மாதிரி சும்மா தளுக்கி மினுக்கிக்கிட்டுப் பொழுது போக்கினா என்ன அர்த்தம்? வாங்கின பணத்துக்காவது சரியானபடி ஊதனுமில்லே?” என்று ஒரு பெரியவர் முறைத்தார்.

அவன் மறுபடியும் ஹேங் என்று ஏளனமாக நகைத் தான். “பணம்! மகாப் பெரிய சம்மானம் அள்ளிக் கொடுத்திட்ட மாதிரித்தான். இந்த ஊருக்கு இவ்வளவு போதும்” என்று அலட்சியமாகப் பேசினான்.

“தண்ணி தாராளமாவே உள்ளே போயிருக்கும் போலிருக்கு?” என்றான் முத்துமாலை. மற்றவர்களோடு நாதசுரக்காரன் நின்ற இடத்துக்குப் போனான்.

அப்போது அம்மன் புறப்பாடு ஆரம்பித்திருந்தது. சன்னிதியை விட்டு சப்பரம் வெளியே வந்தாச்சு. நாதசுரக்காரன் வெறுமனே குழலை அலங்காரமாகப் பிடித்தபடி, பகட்டாக நின்றான். சிறிது வாசித்தான். பிறகு மவுனமானான்.

சப்பரம் முக்கியமான இடத்தில் வந்து நின்றது. “நாதசுரம் நாதசுரம்!” என்று குரல்கள் எழுந்தன. “எப்ப வாசிக்கணுமின்னு எனக்குத் தெரியும்!” என்றான் நாதசுரக்காரன். பிறகு சிறிது வாசித்தான். தனது வாசிப்பில் தானே பெருமை கொண்டவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

“நாதசுரம் நாதசுரம்னு கத்தத் தெரியுதே தவிர, வாசிப்பை ரசிக்கிறவங்க யாரும் இருக்கதாத் தெரியலியே!” என்று பக்கவாத்தியக்காரனிடம் சொன்னான்.

“ரசிக மகாஜனங்கள் நிறைஞ்ச சபையிலே மட்டும் தான் வாசிப்பேன்; இப்படி திருவிழாவுக்கெல்லாம் ஊத வரமாட்டேன், அது நம்ம கொள்கையின்னு முதல்லேயே சொல்லியிருக்க வேண்டியது தானே? எதுக்காக இவ்வளவு ரேட்டுன்னு பணம் பேசி, அட்வான்சும் வாங்கினீரு? அப்படிப் பேசி வந்துட்டீரில்லையா? அப்போ ஒழுங்காக வாசிக்க வேண்டியதுதானே உம்ம கடமை? அதை விட்டுப் புட்டு எத்துவாளித்தனம் பண்றதும், எடக்குப் பேசுறதும், பல்லை இளிக்கிறதும்னு வந்தா, நாங்களும் எங்க குணத்தைக் காட்டத் துணிவோம்!”

கணீரிடும் குரலில் முத்துமாலைதான் அறிவித்தான்.

கூட்டம் விலகி அவனுக்கு வழி விட்டது. அவனையும், அவன் கூட வந்து நின்றவர்களையும் நாதசுரக்காரன் பார்த்தான். “நீங்க யாரோ?” என்றான்.

“நான் யாருங்கறது முக்கியமில்லே. இது ஊர் பொதுக்கோயில். கொடை பொதுத் திருவிழா. பொதுவான வரிப் பணத்திலேயிருந்துதான் சகல செலவுகளும் நடக்குது. வரிப்பணத்திலேயிருந்துதான் உமக்கும், நாதசுர வாசிப்புக்காகப் பணம் கொடுத்திருக்கு. நான் இந்த ஊர்க்காரன். இவங்களும் இந்த ஊர்க்காரங்கதான். அதாவது திருவிழா நடக்கிறதுக்காகப்  பணம் கொடுத்திருக்கிறவங்க. நீரு உம்ம கடமையைச் செய்யலே. அதனாலே நாங்க உரிமையோடு கேட்கிறோம்...”

“அப்படியா ஸேரி!” நாதசுரக்காரனின் தங்கப் பல் பளிச்சிட்டது.

முத்துமாலைக்குக் கோபம் வந்தது. இந்த எடக்கு மயிரெல்லாம் இந்த ஊரிலே வச்சுக்கிடாதே தம்பி, உன் தங்கப் பல்லு. உதிர்ந்து போயிரும். உன் வாசிப்பிலே உனக்குக் கெர்வம் இருக்கிறது சரி. அதுக்காக ஒரேயடியா மண்டைகனமேறிப் போகாதே. அப்படிப் போனா உன் டாப் எகிறிப் போகும் எகிறி. ஒகோன்னானாம்!” என்று கூவினான்.

தொடர்ந்து சொன்னான்: “அம்பாள் வீதி வலம் புறப்பட்டாச்சு. நீயும் கூடவே வாசிச்சிக்கிட்டு வரணும். இந்த ஊர்க்காரங்க ரசிப்பை நீ ஒண்ணும் எடைபோட வேண்டியதில்லை. வாசிக்காமல் எத்தினே, நீ உன்குழல், மெடல், தங்கப்பல்லோடு உன் ஊருக்குத் திரும்பிக்கிட மாட்டே, ஊரைப்பத்திக் கேவலமாப் பேச உனக்கென்ன தைரியம்? நிதானமா நடந்துக்கோ தம்பி” என்றான்.

அவனைச் சேர்ந்தவர்களும் அவன் போக்கினால் வசீகரிக்கப்பட்டவர்களும் பலமாகக் கைதட்டினார்கள்.

நாதசுரக்காரன் நிலைமையைப் புரிந்து கொண்டான். எல்லோருக்கும் பொதுவாக வணக்கம் தெரிவித்து விட்டு, குழல் வாசிப்பில் ஈடுபட்டான். நல்ல முறையிலேயே வாசித்தான்.

சப்பரம் ஒரு தெருவில் பிரவேசித்ததும், முத்துமாலை அங்கிருந்து நகர்ந்தான். கோயில் பக்கமாக நடந்தான். சன்னிதிக்குப் போனான்.  கோயில் பிரகாரத்திலும் சன்னிதியிலும் ஆட்களே இல்லை. விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வெளிச்சம் வெறுமையை நன்கு எடுத்துக் காட்டியது.

வெறுமை இல்லை என்று திடீர் அழுகைக் குரல் அவனுக்கு உணர்த்தியது. ஒரு குழந்தை பதறி அழுதது.

அவன் கவனித்தான்.

ஒரு ஒரத்தில் படுத்துத் தூங்கிக் கிடந்த குழந்தை பதறி விழித்ததும், தனிமையைக் கண்டு அஞ்சி அலறியது.

அவன் அதன் அருகில் போனான். யார் குழந்தை? யார் வீட்டைச் சேர்ந்தது? அவனுக்கு விளங்கவில்லை. சட்டையும் பாவாடையும், கழுத்தில் கிடந்த டாலர் செயினும், குழந்தையின் ஆரோக்கியமான உடம்பும், அது வசதியான வீட்டில் வளரும் பிள்ளை என விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தன. அவ்வூரில் யார் வீட்டிலும் அந்தப் பிள்ளையைக் கண்டிருப்பதாக அவனுக்கு ஞாபகமில்லை. வெளியூரிலிருந்து வந்த குழந்தையாக இருக்க வேண்டும். கொடைக்கு எவர் வீட்டுக்காவது வந்திருக்கக் கூடிய உறவினர் ஒருவரது மகளாக இருக்கலாம் என்று எண்ணினான்.

யாராக இருந்தாலும் சப்பரத்தின் அருகேதான் நிற்பார்கள். குழந்தையை எடுத்துப் போனால் அவர்கள் கண்டு கொள்வார்கள்; குழந்தையே கண்டு பிடித்தாலும் கண்டு பிடித்துவிடும் என்று முடிவு செய்தான்.

அதன் அருகேபோய், “பாப்பா ஊங்கிட்டியா?சாமி பார்க்கப் போலமா? அம்மா அங்கேதான் இருக்கா” என்று அன்பு கணியும் குரலில் பேசினான்.

குழந்தைக்கு மூன்று வயது இருக்கும். தூக்கிக் கொள்ளும்படி கைகளை முன்னே நீட்டி உயர்த்தியது. முத்துமாலை சிரித்துக் கொண்டே அதைத் துாக்கினான். “நல்லாத் துாங்கிட்டே. அதுதான் சாமி வெளியே போனது உனக்குத் தெரியலே. எல்லாரும் சாமி கூடவே போயிட்டாங்க” என்று பேசியவாறே நடந்தான்.

நல்லவேளை குழந்தை அழுகையை நிறுத்தி விட்டது.

“உன் பேரு என்ன கண்ணு?” என்று செல்லக் குரலில் கேட்டான்.

“மங்கை...மங்கயக்கயிசி” என்று மழலைக் குரலில் அது பேசியதை அவன் ரசித்தான். அதன் பேச்சை மேலும் கேட்க ஆசைப்பட்டான்.

“அப்பா பேரென்ன?”

“அப்பா” என்று அழுத்தமாக அறிவித்தது குழந்தை.

“அம்மா பேரு அம்மாவா?”

“இல்லே. தியிபுயிசுந்தயி”

“தியிபுயிசுந்தயி-ரொம்பவும் புதுமையான பேராக இருக்குதே!” என்று சொல்லிச் சிரித்தான் அவன். குழந்தையும் அவனோடு சேர்ந்து சிரித்தது. “நல்ல மாமா” என்று கூறி அவன் முகத்தில் முகம் வைத்து முத்தமிட்டது.

முத்துமாலைக்குப் புல்லரித்தது. அதி இனிமையை ருசித்தது போல் சந்தோஷம் ஏற்பட்டது. உள்ளம் கிளுகிளுத்தது.

“தியிபுயிசுந்தயி மக மங்கயக்கயிசி சர்க்கரைக் கட்டி, பலாச்சுளை. மல்கோவா மாம்பழம்” என்று கொஞ்சி அதை முத்தமிட்டான்.  “ஒ, மாம்பயம் எனக்குப் பிடிக்குமே. இனிச்சுக்கிடகும். நீ வாங்கித் தாயியா மாமா?” என்று இனிமையாகப் பேசியது குழந்தை.

அவன் ஒரு திருப்பத்தை நெருங்கும்வேளை. அதே திருப்பத்தில் இரண்டு பேர் வேகம் வேகமாக வந்தார்கள். பெண்கள் கூட ஒரு சிறுமியும் ஓடி வந்தது.

குழந்தையின் பேச்சைக் கேட்டும், எதிரே வந்தவர்களைக் கண்டும், ஒருத்தி முன்னே பாய்ந்தாள். “இந்தா இருக்கு புள்ளெ. அம்மாடி, என் வயித்திலே பாலை வார்த்தே” என்று கூறி அவசரமாகக் கைகளை நீட்டினாள்.

“அம்மா!” என்று பாய்ந்தது குழந்தை. “அக்கா என்னை விட்டுட்டுப் போயிட்டா” என அழத் தொடங்கியது.

அவளைப் பார்த்து திகைத்துப் போய் நின்றான் முத்துமாலை. திரிபுரசுந்தரி! ஒ, இந்தப் பெயரைத் தான் குழந்தை அப்படிச் சொல்லியிருக்கிறது. எனக்கு அது புரியவில்லையே! எப்படிப் புரியும்? இவளை யார் இந்த ஊரில் இன்று எதிர்பார்த்தது!

“வா திரிபுரம், செளக்கியம்தானா?” என்று கேட்டான் முத்துமாலை.

குழந்தையை இழந்திருந்த பதட்டம். அது திரும்பக் கிடைத்து விட்ட பரபரப்பு, கழுத்திலே காதிலே கை கால்களிலே போட்டிருந்தவை எல்லாம் அப்படி அப்படியே இருந்த ஆனந்தம்—இப்படிப் பல ரக உணர்ச்சிகளினாலும் தன்னை மறந்த நிலையில் இருந்த திரிபுரம் இப்போது தான் அவனை கவனித்தாள்.

“ஒ நீங்களா!” என்றாள். “பிள்ளை எங்கே இருந்தது?”  “புள்ளை சுகமா ஒத்தையிலே படுத்துத் தூங்கிக் கிட்டிருந்தது. திடுக்கிட்டு முழிச்சு, பதறி அழுதது. நல்ல வேளையா நான் அந்தப் பக்கமா வந்தேன். வேறு யாரும் வந்திருந்தா என்ன ஆகியிருக்குமோ? திருவிழாக் கூட்டத்திலே யாரு எவருன்னு என்னத்தைச் சொல்ல முடியும்? கழுத்திலே சங்கிலி, காதுகளிலே ஜிமிக்கி, கைகளில் வளையல், கால்களில் கொலுசு எல்லாம்போட்டு பிள்ளையை இப்படித்தான் அலட்சியமா விடுறதாக்கும்?” குறை கூறும் தொனியில் பேசினான் அவன்.

“இந்தப் புள்ளை மங்கை கூடவே இருந்தது” என்று தன் அருகில் நின்ற சிறுமியைக் காட்டினாள் திரிபுரம், “விளையாடி அலுத்த மங்கை துாங்கிப் போயிருக்கு. சப்பரம் புறப்பட்ட பரபரப்பிலே நாங்க எல்லோரும் போயிட்டோம். இந்தப் புள்ளையும் வந்துட்டுது. மங்கை நினைப்பு யாருக்கும் வரலே. அந்தத் தெருவிலே பாதி தூரம் போனதும் தான், மங்கையை காணோமேன்னு கேட்டேன். இந்தப் புள்ளையைச் கேட்டா, அது என் கூட வரலியேன்னு கையை விரிக்குது. பிறகு என்ன ஏதுன்னு விசாரிச்சா, அது கோயில்லே தூங்கிட்டுது; அப்புறம் நான் கவனிக்கலேன்னு சொல்லுது. எனக்கானா பயம். குலை நடுங்கிப் போச்சு. ஐயோ, புள்ளைக்கு எதுவும் ஆகியிராம இருக்கனுமேன்னு கும்பிட்டுகிட்டு, இந்த அக்காளையும் துணைக்குக் கூட்டிக்கிட்டு, ஒடியாறேன். இந்தப் புள்ளையும் எங்களோடவே ஒடியாந்தது. நல்ல வேளை, நீங்க கடவுள் மாதிரி குழந்தையைப் பாதுகாத்து எடுத்துக்கிட்டு எதிரே வாறீங்க” என்று சொல்லி முடித்த திரிபுரம், குழந்தையைக் கொஞ்சலானாள். “பயந்துட்டியாடா ராஜா? ரொம்ப பயந்துட்டியாடா!”

“இல்லே. அதுக்குள்ளாய இந்த மாமா வந்துட்டா. நல்ல மாமா” என்றது குழந்தை.

திரிபுரம் முழுதலர்ந்த முகத்தோடு அவனைப் பார்த்தாள். புன்னகை பூத்தாள்.  “இந்த ஊருக்கு எப்ப வந்தே திரிபுரம்” என்று தனது பழைய கேள்வியைத் திரும்பபும் கேட்டான் அவன்.

“நேத்து வந்தேன்”

“எல்லோரும் சவுக்கியம் தானே?”

“ஊம்ம்”

“அவாள் வந்திருக்காளா?”

“அடுத்த வாரம் வருவாக...வீட்டுக்குப் போகலாமா, மங்கை சாமியைக் கும்பிட்டுப் போட்டு அப்படியே போவோம்”, என்று குழந்தையைப் பார்த்தாள் அவள்.

“சரி போங்க. நான் இந்தப் பக்கம் போறேன். புள்ளை பத்திரம், திரும்பவும் எங்காவது தனியாய் போயிறாமே” என்று சொல்லி அந்த இடத்திலேயே நின்று விட்டான் முத்துமாலை.

“நாளைக்கு வீட்டுக்கு வாங்களேன். பார்த்து எவ்வளவோ நாளாச்சு. வருவீகளா?” என்றாள் அவள்.

“உம். வாறேன் வாறேன்!”

“நாளைக்கு கண்டிப்பா வரணும். வாங்க அத்தான்” என்று அழைப்புக்கு அழுத்தம் கொடுத்தாள் திரிபுரம்.

“கண்டிப்பா வயணும்” என்று மொழிந்தது குழந்தை.

“சரி கண்ணு. அவசியம் வாறேன்” என்று சொல்லி விட்டு திரும்பவும் கோயிலை நோக்கி நடந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/9&oldid=1143552" இலிருந்து மீள்விக்கப்பட்டது