12

அம்மன் கோயில் கொடை நடந்து முடிந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.

கோயிலின் முன்னே போடப்பட்டிருந்த பெரிய கொட்டகைப் பந்தல் இன்னும் பிரிக்கப்படவில்லை. சிரத்தையோடு சிங்கார வேலைப்பாடுகள் செய்யப் பெற்றிருந்த அலங்காரப் பந்தல், தட்டு தட்டாக (படிப்படியாக) அடுக்கி, நடுவில் ஒரு “தெப்பக்குளம்” (சதுர அமைப்பு) தென் இரு பக்கத்திலும் “கிணறுகள்” (வட்ட அமைப்புகள்) கொண்டு, பார்ப்பதற்கு வெகு அழகானது.

ஒரு வாரம் கோயில் முன்னால் அழகுப் பந்தல் நிற்கட்டுமே என்று விட்டு வைத்திருந்தான் பந்தல்காரன்  உடனடியாக வேறு இடத்தில் பந்தல் போட வேண்டிய அவசியமும் இல்லை அவனுக்கு. அதனால், சாவகாசமாகப் பிரிக்கலாமே என்று எண்ணியிருந்தான்.

கோயில் மீண்டும், பக்தர்களின் வருகை இல்லாமல் வெறிச்சிட்டுத் தோன்றலாயிற்று. ராத்திரி வேளையில் தான் முத்துமாலையும் அவனுடைய நண்பர்களும் அங்கே கூடுவார்கள். பகலில் ஆள் நடமாட்டம் இராது.

பதினோரு மணி சுமாருக்கு பூசாரி வருவான். கதவைத் திறப்பான். “நெவித்தியம்” (நைவேத்தியம்) என்று ஏதோ ஆக்குவான். அப்போது மடப்பள்ளிவில் புகை வரும். கிணற்றில் தண்ணீர் எடுத்து, அம்மன் சிலை, இதர சில்லறைத் தேவதைகளின் சிலைகள், பலிபீடம் எல்லாவற்றையும் குளிப்பாட்டுவான். பூமாலைகள் சாத்துவான்.

காக்கைகள் வந்து அருகில் உள்ள வேப்பமரக் கிளைகளில் பொறுமையாக உட்கார்ந்திருக்கும்.

பூசாரி பலி பீடத்தில் சிறிது சோற்றை வைத்து நீர் தெளித்து “நெவித்தியம் பண்ணி” விட்டு, அந்தச் சோற்றைச் சிதறிப் போடுவான். அதைத் தின்பதற்குக் காக்கைகள். பாயும். இந்தப் பரபரப்பு தவிர வேறு எந்த விதமான பரபரப்பும் இராது அங்கே, சாதாரண நாட்களில்.

செவ்வாய்க்கிழமை என்றால், ஒரு சில பெண்கள் தலை காட்டுவார்கள். கோயில் திறந்திருந்தால் உள்ளே போய்க் கும்பிடுவார்கள். இல்லாவிடில், பிரகாரத்தைச் சுற்றி வந்து, அடைத்த கதவின் முன் நின்று அம்மனை நினைத்துக் கும்பிட்டு விட்டுப் போவார்கள்.

இதெல்லாமே பன்னிரண்டு மணிக்குள் முடிந்து போகும். நடுப்பகலுக்கு மேலே அந்தக் கோயிலின் பக்கம் யாருமே தலை காட்ட மாட்டார்கள்.  அது போன்ற சமயத்தில் தான் அந்த நிகழ்ச்சி நடத்தது. பிற்பகல் இரண்டரை மூன்று மணி அளவுக்கு.

பத்தல் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தற்செயலாகத் துாரத்திலிருந்து அதைப் பார்க்க நேர்ந்த ஒருவன் தீ தீ என்று கூப்பாடு போட்டான். ‘அம்மன் கோயில்லே தீ’ என்று கத்தினான்.

அவனுக்குச் சிலர் துணை சேர்ந்தாா்கள். ‘தீ தீ!’ என்று கூவிக் கொண்டு கோயில் பக்கம் ஓடினார்கள். அந்தக் கூச்சலும் திமு திமு ஒட்டமும் மற்றும் பலரைக் கவர்ந்திழுக்க, பலரும் விரைந்தார்கள். பெரும் கூட்டம் சேர்ந்து விட்டது.

பந்தல் முற்றிலும் எரிந்து, மூங்கில்கள் வெடித்துச் சிதறுவதை வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது அவர்களால். அங்கே தண்ணிர் வசதி எதுவுமில்லை, மொண்டு வீசித் தீயை அணைப்பதற்கு. மேலும் நன்கு காய்ந்த பிரப்பம்பாயும் மூங்கிலும். வேகமாகத் தீ பரவிப் படர்ந்து சாம்பலாக்கி விட்டது. அரை மணி நேரத்துக் குள் எல்லாம் முடிந்து போயிற்று.

தீ எப்படிப் பிடித்தது? யாராவது வைத்திருப்பார் களா? யார் பந்தலில் தீ வைத்திருக்கக கூடும்? இப்படி ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். விளக்கம் தான் கிடைக்கவில்லை.

இவ்வளவுக்கும் முத்துமாலை வீட்டில் படுத்து சுகமாகத் துாங்கிக் கொண்டிருந்தான். அம்மன் கோயில் பந்தல், தீப்பிடித்து எரிகிறது என்ற தகவல் காதில் விழுந்ததுமே, தனபாக்கியம் அவனை எழுப்பினாள்.

பகலில் உறக்கத்தின்போது முத்துமாலையை விழிப்புற வைப்பது அரும் பெரும் காரியமாகும். அவன் சரியான கும்பகர்ண வாரிசு இவ்விஷயத்தில்.  ரொம்ப நேரம் உருட்டிப் புரட்டி, தட்டி சத்தம் போட்டு எழுப்பிய பிறகு அவனுக்கு விழிப்புக் கண்டது. “ஏன் இப்ப காட்டுக் கூப்பாடு போட்டு என்னை எழுப்புதே? வீடா தீப்புடிச்சிக்கிட்டுது?” என்று எரிந்து விழுந்தான்.

அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்: “வீடு பத்தி எரியலே. அம்மன் கோயில் பந்தல் தான் எரியுது”

“என்னது பந்தல்லே, தீயா?” என்று பதறி எழுந்தான் முத்துமாலை. “நேத்தே பந்தலைப் பிரிக்கும்படி சொன்னேன். ரெண்டு நாள் கழிச்சுப் பிரிக்கே னேன்னு சொன்னான். சவத்துப் பயலுக்குப் பொறந்த பய எவன் அதிலே தீவெச்சான்?” என்று முனகிக்கொண்டு வேகமாக நடந்தான்.

எரிந்து கருகிய சாம்பலையும், புகையும் சில மூங்கில் கழிகளையும் தான் அவன் கண்டான். கும்பலையும் பார்த்தான். என்ன செய்வது என்று புரியாமல் சும்மா சுற்றி வந்தான்.

“என்ன முத்துமாலை இப்படி நடந்து போச்சு? தீ எப்படிப் பிடிச்சிருக்கும்? எவன் வச்சிருப்பான்?” துக்கம் விசாரிப்பது போல் ஆளுக்கு ஆள் அவனிடம் கேட்டார்கள்.

அவனுக்கு எரிச்சல் வந்தது. “எனக்கென்ன தெரியும் நானும் உங்களை மாதிரித்தான். எவன் தீ வச்சானோ? அவன் விளங்கமாட்டான்! தனது ஏலாத்தனத்தை எரிச்சலோடு சாபம் கொடுத்து வெளிக்காட்டிக் கொண்டான்.

ஊர்காரர்கள் எதுவும் செய்ய இயலவில்லை. என்றாலும், எல்லோராலும் தாராளமாகப் பேச முடிந்தது. முன்பு எப்பவோ எங்கெங்கோ பிடித்து எரிந்த தீ விஷயங்களை சுவாரஸ்யமாக விவரித்தார்கள். 

—பாளைங்கோட்டையிலே தசரா சமயம், ஒரு தடவை ஒரு அம்மன் கோயில் முன்னாலே இப்படித் தான் பெரிய கொட்டகைப் பந்தல் மத்தியானம் பன்னிரண்ரை மணிக்கு, தீ புடிச்சு எரிஞ்சது. எப்படிப் புடிச்சுதுன்னு கடைசிவரை கண்டு பிடிக்கவே முடியலே, பள்ளிக் கூடம் விட்டு, பையன்கள் சாப்பாட்டுக்கு வீடு திரும்புகிற நேரம். அதனாலே படிக்கிற பையன்கள் கூட்டம் நிறையவே சேர்ந்திட்டது. திடீர்னு தீ எப்படிப் புடிச்சுருக்க முடியும்னு ஆராச்சியிலே இறங்கி விட்டானுக. படிக்கிறவங்க இல்லையா? ஆகவே புத்தி வேலை செய்தது பாஸ்பரஸ் என்பதை கொண்டாந்து யாரோ பந்தலில் போட்டுவிட்டுப் போயிருப்பான், ஈரம் உலர்ந்ததும் அது தானாகவே குபிர்னு பற்றிக் கொள்ளும்; அது தான் பந்தலையும் தீப்புடிக்கவச்சிருக்கும்னு சொன்னாக. பாஸ்பரஸ் என்கிறதை எப்பவும் தண்ணிரிலே தான் போட்டு வச்சிருப்பாங்களாம்.

“அது மாதிரி இங்கேயும் பாஸ்பரஸ் வந்து வேலை பண்ணியிருக்கும்கிறீரா!” என்று கிண்டலாகச் சொன்னான் முத்துமாலை.

“இல்லே. முன்னாலே நடந்த விஷயம் இப்போ நினைப்பிலே வந்து, சொன்னேன். பாஸ்பரஸ் என்கிற சமாச்சாரம் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அதைச் சுலபமா வாங்கிவர முடியுமா? அப்படி அதை வாங்கி, சும்மா விளையாட்டா பந்தலிலே ஏன் போடணும்? இதை எல்லாம் பத்திப் பையன்கள் எண்ணிப்பார்க்கலியேங் கிறதுக்காகச் சொன்னனேன்” என்றார் அதைச் சொன்ன ஆசாமி.

“எல்லாரும் பேசத்தான் ஆசைப்படறாங்க. விஷயம் இருக்கோ இல்லையோ,சொல்கிற விஷயத்துக்கும் சந்தர்ப் பங்களுக்கும் பொருத்தம் இருக்குதோ இல்லையோ, எல்லாம் தெரிஞ்வங்க மாதிரி எதையாவது சொல்லி  வைக்க வேண்டியது. இது தான் ரொம்பப் பேருடைய போக்கு ஆக இருக்கு!” என்று கூறிவிட்டு முத்துமாலை வேறுபக்கம் நகர்ந்தான்.

அங்கே இது அவன் காதில் விழுந்தது.

“பக்கத்து ஊர் கோயில் தேரு தீப்புடிச்சு எரிஞ்சது இதேமாதிரித்தான். ராத்திரி தீ நல்லாப் பத்திக்கிட்டுது. ஆட்கள் கூடி,தண்ணியை அள்ளி அள்ளிக் கொட்டினாங்க ஒருவன் சைக்கிளில் ஒடி, டவுன் தீயணைக்கும் மோட்டாருக்குச் சொல்லி, அதுவும் வந்தது. ரொம்ப நேரத்துக்குப் பிறகு தீயை அணைச்சாச்சுன்னு சொல்லி எல்லாரும் போனாங்க. ஆனா தீக்கங்குக உள்ளே சந்து பொத்துகளிலே இருந்திருக்கு. தேரு வேலைப்பாடு அப்படி. குடைஞ்சு குடைஞ்சு, கடைஞ்சு திறையிட்டு, எப்படி எப்படியோ செஞ்சிருக்காணுக. சிரமமான வேலைப்பாடு நல்ல வைரம் பாய்ந்த மரக்கட்டை. உள்ளுற கங்கு இருந்து கனிஞ்சு திரும்பவும் தீ எவ்வி எவ்வி மேலே வந்திட்டுது. தேரு பூரா குளோஸ். ஒரு ராத்திரியும், பகல்லே பாதி நேரமும் எரிஞ்சு கம்ப்ளிட்டா சாம்பலாகிப் போச்சு. தீ எப்பிடிப் புடிச்சுது, தேருலே யாரு தீ வச்சிருப்பாங்கன்னு விசாரிச்சாங்க. பிறகு விசயம் எப்படி முடிஞ்சுது தெரியுமா? யாரோ சின்னப்பையனுக தேருக்குள்ளே தேன்கூடு இருந்ததை பார்த்தாங்களாம். தேன் எடுக்க ஆசைப்பட்டாங்க. அதுக்காக புகை மூட்ட விரும்பி, ஒலைகளையும் மட்டைகளையும் கொளுத்தி தேரு ஓட்டைக்குள்ளே போட்டிருக்காங்க. தேன் கூட்டை எடுத்த பிறகு, தீ அணைஞ்சிட்டுதுன்னு எண்ணிக்கிட்டுப் போயிட்டானுக. ஆனா நெருப்பு உள்ளே இருந்திருக்கு அது கனிஞ்சு எரிஞ்சு,தேருலேயும் பத்திக்கிட்டுது.அருமையான மரக்கட்டை பாருங்க. நல்லா நின்னு எரிஞ்சிருக்கும்.

தீ, பிடிக்க எவ்வளவோ காரணங்க, எவனாவது பீடி பிடிச்சிட்டு, அதை அணைக்காம வீசி எறிஞ்சிருக்கலாம், அது பந்தலில் விழுந்துபத்திக் கொண்டிருக்கலாம்”என்று அபிப்பிராயப்பட்டார் ஒருவர்.

“நீ என்னடே நெனைக்கிறே முத்துமாலை?” என்று ஒருவர் அவனிடம் கேட்டார்.

“எனக்கு எதுவுமே தோணலே அண்ணாச்சி, ஆனா இது ஊருக்கு நல்லதில்லேன்னு படுது.கொடை கொடுத்த நாலாம் நாள் பந்தல் பத்தி எரியணும்னு சொன்னா தீ தானாப் பிடிக்காது. எவனாவது வச்சுத்தான் பிடிச்சிருக்கணும். எவன் எதுக்காக வச்சிருப்பான்கிறது புரியலே. விளையாட்டா சின்னப்பயலுக வச்சிருந்தாலும் சரி, விபத்தாக கட்டை பீடி விழுந்து தீப்புடிச்சிருந்தாலும் சரி, வினையாக எவனும் திட்டமிட்டுச் செஞ்சிருந்தாலும் சரி, இது நல்லதுக்கில்லே. அப்படிச் செஞ்ஞருப்பது யாருன்னு நம்மாலே கண்டுபிடிக்க முடியலியே, அது தான் எனக்கு வருத்தமா இருக்கு. குத்தம் செஞ்சிட்டு தண்டனை பெறாமல் தப்பிக்க முடிஞ்சிருது பாருங்க. அந்த அநியாயத்தை என்னாலே சகிக்க முடியலே!” முத்துமாலை இதைக் கூறி விட்டு தலைகுனிந்து நடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/12&oldid=1143555" இலிருந்து மீள்விக்கப்பட்டது