13

வழக்கம் போல் முத்துமாலை ராத்திரி நேரங்களில் குடித்தான்; தெருக்களைச் சுற்றினான், அடிக்கடி சீட்டி அடித் தான். என்றாலும் அவன் உள்ளத்தின் ஆழத்திலே எதுவோ இடிந்து விழுந்துகொண்டிருந்தது போன்ற உணர்வு அவனுக்கு ஒயாது இருந்தது. வழக்கமான உற்சாக வெறி அவனைவிட்டு விலகிச் செல்வது போல்  அவனுக்கே பட்டது. அர்த்தம் புரிந்து கொள்ளமுடியாத ஒரு கலக்கம் அவனுள் சதா அரிக்கலாயிற்று.

கொடைக்குப் பிறகு திரிபுரசுந்தரியைக் கண்டு பேச நேர்ந்ததும், அவளுடைய வாழ்வின் நிலைமையை அறிந்து கொள்ள நேர்ந்ததும், முத்துமாலையின் உள்ளத்தில் அதிர்வுகளை உண்டாக்கியிருந்தன. அத்துடன் அம்மன் கோயில் பந்தல் எரிந்து சாம்பலாகிப் போனதும் அப்படிச் செய்தவனைக் கண்டுபிடிக்க இயலாமலிருப்பதும் அவனை வெகுவாகப் பாதித்திருந்தன. “சே, என்ன வாழ்க்கை! என்ன மனுஷங்க” என்று அவன் அடிக்கடி கசப்போடு கூறிக் கொண்டான்.

நாலைந்து நாட்களுக்குப் பிறகு அவனுடைய மனக் கசப்பை அதிகரிக்கச் செய்யும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

அவனும் அவனுடைய சகாக்களும் அம்மன் கோயிலில் உட்கார்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தார்கள். இரவு பதினோரு மணிக்கு மேலிருக்கும். ஒருவன் ஓடிவந்தான்.

“முத்துமாலை, நீங்கள்ளாம் உடனே புறப்பட்டு பெரிய கோயிலுக்கு வரணும். சீக்கிரம்” என்று அவசரப் படுத்தினான்.

“என்னடே, என்ன விசயம்?”

“ரெண்டு பேரு காரிலே வந்து, கோயிலுக்குள்ள சின்ன வாசல் வழியாக நுழைஞ்சாங்க விளக்கு எதுவும் வச்சுக்கிடலே. எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு” என்று வந்தவன் அறிவித்தான்.

மற்ற அனைவரும் விருட்டென்று கிளம்பினார்கள். முத்துமாலை அரிவாளை எடுத்துக்கொண்டான். நண்பர்களிடமும் கத்தி, கைத்தடி, டார்ச் லைட் எல்லாம் இருந்தன.  வேகமாகப் போகிற போதே, வந்தவன் கூறிக் கொண்டு நடந்தான் “அரை மணி நேரத்துக்கு முந்தி மேலத்தெரு வழியாக ஒரு காரு போச்சு.டாக்சி ஏதாவது இருக்கும். யாரு வீட்டுக்காவது ஆளுக வரும்னு நினைச்சேன். பத்து நிமிசத்துக்குப் பிறகு நான் வாய்க்கால் பக்கமா வந்தேன். காரு பெரிய கோயில் கிட்டே நின்று கார் லைட்டை போட்டுப் பார்த்திட்டு அணைச்சிட்டாங்க. ரோடிலே வந்த போது கூட லைட்டுக எரியலே. நான் ஒரு மரத்து மறைவிலே நின்று பார்த்தேன். ரெண்டு பேரு மெதுவா உள்ளே போனாங்க, சின்னக் கதவு இருக்குல்ல, அது வழியே...”

“சரி சரி, அவங்க யாருன்னு , தான் பார்த்திடலாமே” என்று முத்துமாலையும் மற்றவர்களும் வெகு வேகமாக நடத்தார்கள்.

இருட்டுக்காலம் தான். ஆயினும் மங்கிய ஒரு வெளிச்சம் நிலவியது.

“எவனாக இருந்தாலும் சரி.ராத்திரி இருட்டுக்குள்ளே திருட்டுத்தனமா கோயிலிலே புகுந்திருப்பவங்க நல்ல எண்ணத்தோடு நுழைஞ்சிருக்க மாட்டாங்க. அதனாலே முதல்லே நாம செய்ய வேண்டியது, கார் சக்கரங்களில் காற்றைத் திறந்து விட்டிரணும். வெளியே வந்த உடனே காரிலே ஏறி ஓடிவிடாதபடி அது தடுக்கும்” என்று முத்துமாலை வழி வகுத்தான்.

கோயில், ஊரை விட்டுச் சிறிது துாரம் தள்ளி ஒரு தோப்பினுள் ஒதுங்கியிருந்தது. கோயில்பக்கம் நடப்பது ஊருக்குள் தெரியாது. அதிலும், இருட்டு. ஊரில் எல்லா வீடுகளிலும் ஏழுமணிக்குள்ளேயே கதவுகள் அடைக்கப்பட்டு விடுவதனால், தெருக்கள் வெறிச்சிட்டே கிடந்தன.

அவர்கள் சீக்கிரமே கோயிலை அடைந்தார்கள். ஆளுக்கு ஒரு சக்கரமாகச் சீண்டி, காற்றைத்திறந்து விட்டார்கள்.

“அவனுக திட்டிவாசல் வழியாத்தான் வருவானுக. வேறுவழி கிடையாது. மதில் சுவரு ரொம்ப உசரம். ஏறிக் குதிக்க முடியாது. மேலும், அவனுகளுக்கு சந்தேகம் எதுவும் ஏற்பட்டிருக்காது. எவன் இந்த வேளையிலே இங்கே வரப்போறான்கிற தைரியத்தோடுதான் வேலை பண்ணுவாங்க. நாம ரொம்ப ரெடியா நிற்கணும்” என்று முத்துமாலை மெதுவான குரலில் பேசினான். பார் எந்த இடத்தில் நிற்கணும், என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் வகுத்துக் கொடுத்தான்.

நேரம் மிக மிக மெதுவாக ஊர்வது போலிருந்தது. அவர்களுக்கு தனிமை, இருட்டு. சில பூச்சிகள் ரீங்கரித்த வண்ணம் இருந்தன. சிறிது தொலைவில் ஒரு தவளை சாவுக்குரல் இழுத்து இரவின் அமைதியைக் கெடுத்தது. பாம்பின் வாயில் வசமாகச் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும் அது.

நேரம் கடந்தது. எவ்வளவு நேரம் ஒடியிருக்கும் என்று அவர்களுக்குத் தெரியாது.

கோயிலுக்குள் ஓசைகள் எழுந்தன, திட்டி வாசல் திறந்து கொண்டது.

முதலில் ஒருவன் வெளியே வந்தான். உள்ளேயிருந்து ஒருவன் கனமான பொருளை நீட்ட, இவன் கஷ்டத்தோடு அதை வாங்கிக் கீழே வைத்தான். பிறகு மற்றொன்று தரப்பட்டது. அதையும் பெற்றுக்கொண்டான். இப்படி ஐந்து தடவை கொடுக்கல் வாங்கல் நடந்தது. முதல் இரண்டும் சற்றுப் பளுவானவை, மற்ற மூன்றும் அவ்வளவாகக் கனம் இல்லாதவை என்பதை அவர்கள் கொடுத்து வாங்கிக் குனிந்து வைத்த தன்மையிலிருந்தே  பதுங்கியிருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அவை சிலைகள் என்றும் தெரிந்து கொண்டார்கள்.

முத்துமாலைக்கு ஆத்திரம் பொங்கியது. சிலைகளைத் திருடிச்செல்லும் முயற்சியா? அவன் ரத்தம் கொதித்தது. இருப்பினும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். மொத்தம் எத்தனை பேர் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

உள்ளேயிருந்து இரண்டு பேர் வந்தார்கள். ஒருவன் காரில் வந்த கூட்டாளியாக இருக்க வேண்டும்.இன்னொருவன்?

அவன் திட்டி வாசலின் கதவை இழுத்துச் சாத்தி, கொக்கி போன்ற வளைந்த கம்பி ஒன்றை உபயோகித்து அதை பூட்டினான்.

இவன் கோயில் தொழிலாளி என்று ஊர்க்காரகளுக்குப் புரித்தது. பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த வேலையின் அவனும் சேர்ந்திருக்கிறான்.

முத்துமாலை ‘ஹவிட்டோ ஹ்வீட்’ என்று சீட்டி அடித்தான்.

தொழிலாளி திடுக்கிட்டு அங்குமிங்கும் பார்த்தான். மற்றவர்களும் திமிர்ந்து நோக்கினார்கள்.

முத்துமாலையும் நண்பர்களும் வேகமாகச் செயல்பட்டார்கள். பாய்ந்து, மூன்று பேரையும் லபக்கென்று பிடித்துக்கொண்டார்கள்.

“கோயில் சிலையைத் திருடிப் போகவா வந்தீங்க, அயோக்கிய ராஸ்கல்களா” என்று முத்துமாலை கத்தினான். அவன் பிடியில் சிக்கியிருந்த நபரின் கழுத்தில் ஒரு பேயறை; முதுகில் ‘கும்-கும்மா’ குத்துக்கள் தயக்கமில்லாமல் கொடுத்தான். மற்றவர்களுக்கும் சரியானபடி கிடைத்தது.

“டார்ச் லைட்டை அடியப்பா, இவனுக மூஞ்சி அழகைப் பார்க்கலாம்” என்று முத்துமாலை சொன்னான்.

திருட வந்தவர்கள் திமிறி விடுபட முயன்றது பலிக்கவில்லை. அவர்கள் தப்புவதற்கு முயன்றபோதெல்லாம் அடியும் குத்தும்தான் கிடைத்தன.

லைட்டின் பிரகாசமான ஒளி அவர்கள் முகத்தைத் தடவியது. அவர்களுடைய கண்கள் கூசின.

“எலே, மாடசாமி, உனக்கு ஏமிலே இந்தப் புத்தி? நம்ம ஊர் கோயில் சிலைகளைக் களவாடிக்கிட்டுப் போக நீயே துணை வந்தியா?” என்று சீறினான் முத்துமாலை.

மற்றவர்களின் கைகள் மாடசாமியை விசாரித்தன.

“ஏ, இவங்க வேட்டிகளை அவிழ்த்து இவங்க கைகளை இறுக்கிக் கட்டுங்க” என்று உத்தரவிட்டான் முத்துமாலை.

காரில் வந்தவர்கள் நாகரிகமானவர்கள். ஒருவன் கோட்டு அணிந்திருந்தான். இருந்தாலும், வேட்டிதான் கட்டியிருந்தான். இன்னொருவன் ஸ்லாக் ஷர்ட் போட்ருந்தான். மாடசாமி வெறும் உடலில். துண்டைத் தலைப்பா கட்டியிருந்தான், இடுப்பு வேட்டியை தார்ப் பாய்ச்சிக் கட்டியிருந்தான்.

அவர்கள் கைகள் நன்கு இறுக்கிக் கட்டப்பட்டன.

“ஐயாமார்களே, நீங்க வாலாட்ட முடியாது. ஏதாவது இசகுபிசகா நடக்க முயன்றா, இந்தா பார்த்துக் கிடுங்க”என்று தனது சுடலைமாடன் அரிவாளை முன்னே துாக்கிக் காட்டினான் முத்துமாலை.

“சுப்பய்யா, நீ ஒடிப்போயி, ஊரிலே எல்லா வீட்டுக் கதவையும் தட்டி விசயத்தைச் சொல்லு. கோயில்லே  திருட்டு நடந்திருக்கு, சிலைகளைத் திருட வந்து, திருடியும் போட்டாங்க, அவங்களைப் புடிச்சுவச்சிருக்கோம்னு சோல்லு. பெரியவங்க எல்லாம் இங்கே உடனே வரும்படி சொல்லு” என்றான்.

“அவன் போகவேண்டாம். சிலையை எடுத்துப் போக வந்தது தப்புதான். நீங்கதான் புடிச்சிட்டீங்களே? உங்க சிலைகள் உங்களுக்குக் கிடைச்சுப்போச்சு. வேணும்னா கொஞ்சம் ரூபா தந்திடுறேன். எங்களைப் போகவிடுங்க” என்றான் ‘கோட்டுவாலா’.

“து எப்படி முடியும்?”

“முத்துமாலை இவரு நம்ம ஊரு மாப்பிள்ளை, அதுதான் ஊராருக்கு விசயம் தெரியவேண்டாம்னு பாக்காரு.” என்று ஒரு தகவலை அறிவித்தான். முதலாவதாக அவர்களைத் தேடி வந்து சேதி சொன்னவன்.

“யாரு?”

“நம்ம ஊரு பூமியா பிள்ளைக்கு மருமகன். அவரு மக திரிபுரத்தின் மாப்பிள்ளை...”

“என்னது?” என்று அதிர்ந்தான் முத்துமாலை. “முருகா, இவன் மூஞ்சியிலே லைட்டை அடி!” என்றான்.

டார்ச் ஒளி அந்த ஆளின் முகத்தைப் பளிச்சென்று எடுத்துக் காட்டியது. பூமியை நோக்கித் தாழ்ந்த அந்த மூஞ்சியிலே காறித் துப்ப வேண்டும்போல் வந்தது முத்துமாலைக்கு. தரையில் தான் துப்பினான்.

“சுப்பய்யா, ஓடு எல்லாவீட்டிலும் சொல்லு பூமியா பிள்ளை மருமகன்... கந்தபிள்ளை, இவன் பேரு உமக்குத் தெரியுமா?”

“நாரம்புநாதன்...”

“வாரியக்கொண்டை! நாறும்பூநாதன்... பேருக்குக் குறைச்சல் இல்லே” என்று எரிச்சலோடு முணுமுணுத்  தான் முத்துமாலை. தொடர்ந்தான்; “சுப்பய்யா, ஊர்ப் பெரியவங்ககிட்டே இதையும் சொல்லு. சீக்கிரம் போ... பூமியாபிள்ளை வீட்டிலும் தகவல் சொல்லிட்டு வா.ஒடு!”

சுப்பய்யா ஓடினான். முத்துமாலை அப்புறம் எதுவும் பேசவில்லை. திரிபுரத்தின் புருசனா இவன்? இவன் பணம் சம்பாதிக்கிறது இந்த வழியிலேதானா! சிலை திருடறது, கடத்தல் பண்றது... அயோக்கிய ராஸ்கல்...

அவன் மனம் புழுங்கிக் குமைந்தது.

சிறிது நேரத்திலேயே அந்த இடம் பரபரப்பின் களமாக மாறியது. ஒருவராய், பலராய், கும்பலாய் ஓடிவந்தார்கள். ஜனங்கள், விளக்குகள் எடுத்து வந்தார்கள். அந்த இடத்தின் அமைதி ஆரவாரத்தில் அமிழ்ந்து மறைந்தது.

வந்தவர்கள் அனைவரும் கட்டுண்டு, தலைகவிழ்ந்து. மண்மீது உட்கார்ந்திருந்த இரண்டு பேரையும், நின்ற மாடசாமியையும் பார்த்தார்கள். வாயில் வந்தபடி ஏசினார்கள், மாடசாமியை சிலர் அடிக்கவும் செய்தார்கள். சிலைகள், காட்சிப் பொருள்கள் போல், அவர்கள் பக்கத்தில் இருந்ததையும் கவனித்தார்கள்.

“கோயில் சிலைகளைத் திருட உங்களுக்கு எப்படித் தான் மனசு வந்ததோ? இப்படி எத்தனை ஊர் கோயில்களிலே திருடி இருக்கிறீங்களோ, பாவிகளா!” என்று கைகளை நதட்டி முறித்து அவர்களைப் பழித்தார்கள்.

பெரியவர்களும், சின்னவர்களுமாய், ஆண்களும் பெண்களுமாய், ஊரே அங்கே திரண்டு விட்டது.

முத்துமாலை நடந்ததைச் சொன்னான்.

“இவங்களை என்ன செய்யலாம்னு யோசனை சொல்லுங்க, கோயில் சிலைகளைத் திருடி வித்துப் பிழைக்கிற  துக்கென்றே ஒரு கும்பல் வேலை செய்யுது. அவங்களுக்கு அதிலே நல்ல பணமும் கிடைக்குது. இந்த ஆளும் அந்தக் கோஷ்டியிலே ஒருவன்னு தெரியுது. மாடசாமி இவங்க கையாள்.இவங்க மூணு பேரையும் போலீசிலே ஒப்படைக கிறதுதான் நல்லதுன்னு எனக்குப்படுது.இரண்டு பேரிலே இவன் பூமியாபிள்ளை மருமகனாம்...”

பெரியவர்கள் தலையாட்டினார்கள். ஆமா, ‘உம் உம்’ என்று ஒலிகுறிப்புகளும் தெறித்து விழுந்தன.

இந்தச் சமயத்தில் எதிர்பாராதது நடந்தது. திரிபுரம் மங்கையைத் துாக்கிக் கொண்டு ஓடி வந்தாள். அவள் கூட மூத்த பெண்ணும் பையனும் மூச்சிறைக்க ஒடி வந்தார்கள்.

அவர்களுக்குக் கூட்டம் வழி விட்டது. அவள் கூட்டத்தின் நடுவில் வந்து நின்று எல்லோரையும் பார்த்தாள். தன் புருஷனையும் பார்த்தாள். ஊர்க்காரர்களைக் கும்பிட்டாள். “உங்க எல்லாரையும் கும்பிடுறேன். இந்தப்பிள்ளைகள் முகத்தைப் பாத்து, இதுகளுக்காகவாவது, இதுகளோட அப்பாவை மன்னிச்சுருங்க...”

“அதெப்படி மன்னிக்க முடியும்?” என்று வெடித்தான் முத்துமாலை. “செய்த குத்தத்துக்கு தண்டனை வேண்டாமா?”

“அவங்களை முதல்லேயே அடிச்சிருப்பீங்க, அது மட்டுமில்லே. இந்த ஊர்ககாரங்க மத்தியிலே, இப்படிக் கையும் களவுமாய் பிடிபட்டு நிக்கிற அவமானமே அவங்களுக்கு ஒரு தண்டனைதான். இன்னும் போலீஸ்லே காட்டிக்குடுத்து, கேசு நடத்தி, ஜெயில் தண்டனை வேறே வாங்கிக் கொடுக்கணுமா? இந்தச் சின்னப்புள்ளைக தலைமேலே கெட்ட பேரும் சமூக தண்டனையும் சேராமக் காப்பாத்துங்க. உங்க காலிலே விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன்...”  திரிபுரம் முத்துமாலையின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தாள். அழுதாள்.

அவனுக்கு மிகுந்த சங்கடமாகி விட்டது. அவளுக்காக இரக்கப்பட்டான். என்ன செய்வது? இவனை என்ன செய்வது? திகைத்துத் தடுமாறினான்.

சில பெரியவர்கள் மனமிரங்கினார்கள். போகுது, குத்தம் பெரிசுதான். இருந்தாலும், அவங்க முயற்சியிலே வெற்றி பெற விடாம நீங்க தடுத்திட்டீங்க, அது ரொம்பப் பெரிய விஷயம் இந்த பொண்ணு அழுறதைப் பாக்கையிலே மனசுககுக் கஷ்டமாத்தான் இருக்கு. அவளுக்காகவும் இந்தச் சின்னப்புள்ளைகளுக்காகவும் அவனை மன்னிச்சுடுவோம். போலீசிலே ஒப்படைக்கவேண்டாம், கோயில் திருப்பணிச் செலவுக்காக இவங்க ஐநூறு ரூபா கொடுத்துடனும், மாடசாமி இனி இந்த ஊரிலே இருக்கப்படாது.அந்த ஆளுக கூட வேணும்னாலும் போகட்டும் என்று தீர்ப்பாகச் சொன்னார்கள். “என்ன முத்துமாலை நீ என்ன சொல்றே?” என்று கேட்டார்கள்.

“உங்கள் விருப்பம்” என்றான் அவன்.

அவ்வாறே செயல்படுத்தப் பட்டது. நாறும்பூநாதன் கோட்டு பையிலிருந்த பர்ஸை எடுத்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை உருவி அவர்களிடம் கொடுத்து விட்டான்,

தலை குனிந்தவனாய் காரை நோக்கிப் போனான். காரின் டயர்களில் காற்று இல்லை என்பதை அறிந்ததும், சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டான்.

பிறகு, அவனும் அவன் கூட்டாளியும் சேர்ந்து ஒவ்வொரு டயருக்கும் காற்றடித்ததையும், மவுனமாகக் காரில் ஏறி உட்கார்ந்து காரை ஸ்டார்ட் செய்து கொண்டு கிளம்பியதையும் எல்லா ஜனங்களும் வேடிக்கையாகப் பார்த்தார்கள்.  “என்னாங்க, வீட்டுக்கு வாங்களேன். விடிஞ்சதும் போகலாம்” என்று திரிபுரம் கூறியதை நாறும்பூ கவனிக்கவே யில்லை. மங்கை, “அப்பா, அப்பா நான் கூட வரட்டுமா?” என்று பிரியமாய்க் கேட்டதும் அவன் செவிகளில் ஏறவில்லை.

“நாங்களும் உங்க கூட வாரோம்” என்றாள் திரிபுரம்.

அதற்குதான் அவன் வாய் திறந்தான். வேண்டாம் லெட்டர் போடுவேன். அப்போ வந்தால் போதும் என்றான். போய் விட்டான்.

இது பயமுறுத்தலா, பிரியத்தோடு சொன்னதா என்பது அவளுக்குப் புரியவில்லை; முத்துமாலைக்கும் விளங்கவில்லை.

அவன் திரிபுரத்துக்காக ரொம்பவும் வருத்தப்பட்டான். அவனால் வேறு என்ன செய்ய இயலும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/13&oldid=1143556" இலிருந்து மீள்விக்கப்பட்டது