15

“கொஞ்சம் செயலாக இருந்த” சிவன் அணைந்த பெருமாள் பிள்ளை தன் மகள் வளர்மதிக்கு சீரும் சிறப்புமாகக் கல்யாணம் நடத்தி வைத்தார். சந்தோஷமாகத் தான் எல்லாம் செய்தார்.

அவருடைய வீடு ஒளி நிறைந்த இல்லம் என்று சிலர் கிண்டலாகக் குறிப்பிடுவது வழக்கம். காரணம் , அவர் தன் பெண்களுக்கு வளர்மதி, வெண்ணிலா, இளம் பிறை, பூர்ணிமா, சந்திரா என்று பெயர்வைத்திருந்தார். ஆறாவது பெண் பிறந்தால் அதுக்கு என்ன நிலவு என்று அவர் பெயர் சூட்டுவாரோ என்று அறிய சிலர் ஆவலாக இருந்தார்கள். ஆனால் சந்திராவுக்குப் பிறகு அவருக்குக் குழந்தை எதுவும் பிறக்கவில்லை.

அவருடைய பெயரை அணைந்த பெருமாள் என்று அழகாக உச்சரிப்பதற்குப் பதிலாக, அணஞ்ச பெருமாள் என்றே எல்லோரும் சொல்லி வந்தார்கள். “டிம் அடிச்ச பெருமாள்” என்று வம்பர்கள் குதர்க்கம் பண்ணுவதும் உண்டு. அந்த இருட்டைப் போக்கடிப்பதற்காகத்தான் அவர் தன் மகள்களை எல்லாம் நிலா ஆக்கியிருக்கிறார் என்று முத்துமாலை அடிக்கடி கூறுவான்.

அணஞ்ச பெருமாள் தன் மகள்களை அன்பாக, மிகுந்த பிரியத்தோடு, வளர்த்து வந்தார். எனவே, மூத்த மகளுக்கு தடபுடலாகத் திருமணம் செய்து வைத்ததில் அதிசயம் எதுவும் இல்லைதான்.

ஆனால், கல்யாணமாகிப் போன மறுமாதமே வளர்மதி பிறந்த விட்டுக்கு வந்து சேர்ந்ததுதான் ஊரா  ருக்கு அதிசயமாகப்பட்டது. அப்புறம் கசமுச என்று பேச்சு பரவியது.

மாப்பிள்ளையோடு சண்டை போட்டுக் கொண்டு அவள் வந்துவிட்டாள் என்று சிலர் சொன்னார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்தான் சண்டை பிடித்து அவளை விரட்டிவிட்டார்கள் என்று வேறு சிலர் சொன்னார்கள்.

“மாமியார்க்காரி சரியான தாடகை, மாப்பிள்ளை அம்மா சொல்லை கேட்டு நடக்கிற அப்பிராணி. இரண்டு பேரும் சேர்ந்து இந்தப் பெண்ணை பாடாய்படுத்தியிருக்காங்க. இதுதான் என்ன செய்யும், பாவம், ஊரைப் பார்த்து வந்திட்டுது” என்று ஒரு பெரியம்மா ஒலி பரப்பினாள்.

அதில் உண்மை இருந்தது என்பதை அணைந்த பெருமாள் பிள்ளையைக் கண்டு பேசியவர்கள் உணர்ந்தார்கள். மாமியார் இசக்கி அம்மாள் சரியான காளியாகத்தான் இருந்தாள் என்று தெரிந்தது. எடுத்ததுக் கெல்லாம் மருமகளை குறை கூறினாள்.வசை பாடினாள். அவளைப் பெற்றவளையும், பெண்ணை வளர்த்து விட்டிருக்கிற லெட்சணத்தையும் பழித்துப் பேசினாள். ஆரம்பத்தில் “உன்னை விறகுக்கட்டையாலே அடிச்சா என்ன? விளக்குமாத்தாலே ரெண்டு போடு போட்டா என்ன?” என்று வாயினால் கொடை கொடுத்தவள், பிறகு கையில் கிடைத்ததைக் கொண்டு அந்தப் பெண்ணுக்கு “பூசைக் காப்பு” கொடுக்கத் துணிந்தாள்.

“கூறுகெட்ட கோப்புரம்! ஒரு எழவு வேலையும் தெரியலே. நல்லபடியா, வாய்க்கு ருசியா ஆக்கி வைக்கக் கூடத் தெரியாத பொம்பிளை.என்ன பொம்பிளை எங்க தலையிலே கொண்டாந்து கட்டிட்டாங்க இந்த முண்டத்தை.. சதிர்தாசி மாதிரி சிங்காரிச்சுக்கிட்டு,  குலுக்கி மினுக்கதிலே குறைச்சல் ஒண்ணும் இல்லே. வேலை வெட்டி செய்றதிலே அந்த அக்கறை இருக்கணுமில்லே?” என்று அவள் நாள்தோறும் “ஆயிரத்தெட்டு அர்ச்சனை” பண்ணுவதும், மருமகள் தலையில் குட்டுவதும், கன்னத்தில் இடிப்பதும், முதுகில் அறைவதும் அதிகரித்து வந்தது.

மாப்பிள்ளை குமரகுரு அம்மா செய்கிற ஆக்கினைகளையும் அதட்டல்களையும் பார்த்தும் கேட்டும் திருதிரு. என்று விழித்துக் கொண்டிருந்தானே தவிர, மனைவிக்கு பரிந்து பேசுவதற்கு வாய் இல்லாதவனாக இருந்தான். அம்மா முறுக்கேற்ற முறுக்கேற்ற, அவள் சொல்படி ஆடுகிறவனாகவும் ஆனான்.

“அம்மா சொல்வதும் சரிதானே? உனக்கு சோறு சமைக்கத் தெரியலே. வெறும் ரசம் வைக்கக் கூடத் தெரியலே. சாம்பார்னு நீ பண்றது சப்புனு இருக்கு. சிலநாள் குழம்பிலே உப்பு அதிகமாப் போயிருது; சில நாளைக்கு உப்பு காணாமப் போகுது. பசியோடு உட்காரும் போது, சாப்பாடு வாயிலே வைக்க விளங்காம இருந்தால் மனுசனுக்கு எப்படி இருக்கும்?” என்ற ரீதியில் தொண தொணக்கலானான்.

பிறகு, அம்மாவும் மகனும் சேர்ந்து கொண்டு “பிறந்த வீட்டிலேயிருந்து அரிசி கேளு. பணம் வாங்கிட்டு வா. எவர்சில்வர் பாத்திரங்கள் வாங்கிவா என்று தொல்லை கொடுத்தனர். வளர்மதி பிறந்த ஊருக்கு வந்து சேர்ந்தாள். அவள் தேய்பிறையாய் கரைந்து போயிருந்ததைக் கண்டு அனுதாபப்படாத ஊரார் உறவினர் எவரும் இல்லை.

ஒரு மாதம் வீட்டில் இருந்து உடம்பைத் தேற்றிக் கொண்டு புருஷன் வீட்டுக்குப் போன பெண்ணை மாமியார்க்காரி சுடுசொல் கூறித்தான் வரவேற்றாள். ‘அங்கே  எந்த மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு இத்தனை நான் இருந்தே? உடம்பிலே சூடு சொரணை இருந்தா இப்படி இருப்பியா, சவத்து மூளி’ என்றெல்லாம் ஏசினாள்.

வளர்மதி பொறுமையாக அனைத்தையும் சகித்துக் கொண்டுதான் நாளோட்டினாள். அந்த வீட்டில் மாடாக உழைத்தாள். இருந்தாலும், மாமியாரை திருப்திப்படுத்த முடியவில்லை.

“வாசலில் நின்று அவனையும் இவனையும் பார்க்கிறா. சன்னல் வழியாக எவன் எவனையோ பார்த்துச் சிரிக்கிறா. பால்காரன் கிட்டே பல்லை காட்டிக் குழையுதா, காய்கறி விற்க வாறவன் கிட்டே எல்லாம் இளிச்சு இளிச்சுப் பேசுதா” என்று குற்றப் பட்டியலை நீட்டிக் கொண்டே போனாள் அந்த நீலி.

ஒரு நாள் சோறு குழைந்து விட்டது என்று சொல்லி, கொள்ளிக்கட்டையை எடுத்து மருமகளுக்குச் சூடு போட்டாள் மாமியார். அதுக்குக் கூட கணவன் குமரகுரு தலையிட்டு அவளை கண்டிக்கவில்லை.

இன்னொரு தடவை, அடுப்பில் பாலை பொங்க விட்டுவிட்டாள் என்று அகப்பையால் தாக்கினாள். வளர்மதி குமரகுருவிடம் முறையிட்ட போது, ‘நீ ஒழுங்காக் கவனிச்சு வேலைகளை செய்றதுக் கென்ன? நீ வேலையிலே கெட்டிக்காரி ஆகணும்கிறதுக்காகத்தான் அம்மை இப்படிப் பண்ண வேண்டி ஏற்படுது’ என்றான் அந்த சத்புத்திரன்.

அந்த அப்பாவிப் பெண் தனது நிலையை எண்ணி அழுது புழுங்கினாள்.

அப்படி அழுவதற்குக் கூட அந்த வீட்டில் அவளுக்கு உரிமை அளிக்கப்பட வில்லை. ‘மூதேவி மூதேவி! இப்படி எப்ப பார்த்தாலும் அழுதுகண்ணிர் வடிச்சுக்கிட்டிருந்தா இந்த வீடு எப்படி உருப்படும்? விடிஞ்சாலும் அடைஞ் சாலும் மூஞ்சியை கொண்டை முடிஞ்சு போட்டது போல தொங்க விட்டுக் கிட்டுத் திரிஞ்சா இந்த வீட்டிலே சீதேவி எட்டிப் பார்ப்பாளா? விடியா மூஞ்சி! ஊம். அவன் தலை எழுத்து ராசா மாதிரி இருக்கவனுக்கு இப்படி ஒரு தரித்திரம் வந்து சேர்ந்திருக்கு. எட்டு வீட்டு அக்கா ஒண்ணா வந்து குடியிருக்கிற இந்த மோறைக்கட்டையை அவனுக்குப் பிடிக்கலேன்னு சொன்னா, அதிலே என்ன குத்தம் இருக்கு” என்று பொரிந்து கொட்டினாள் மாமியார்.

அவள் ஓயாது இவ்விதம் பொரிந்து கொட்டியதால் அக்கடி பக்கத்தினர் அவளுக்கு பொரி அரிசி என்று பெயர் சூட்டியிருந்தனர் என்பது வளர்மதிக்குத் தெரிய வந்தது. ஆயினும் அதை ரசிக்கும் மன நிலையில் அவள் இல்லை.

மாமியார்க்காரியின் ராட்சச தர்பார் அதிகரித்துக் கொண்டு போயிற்றே தவிரக் குறைவதாயில்லை. மகனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்து மருமகளை பேயாய் படுத்த வேண்டும் என்று தவமிருந்து அவள் இஷ்டசித்தி பெற்றவள் போல் நடந்து கொண்டாள்.

“இப்படி என்னை ஆட்டிப்படைக்கணும்னு காத்திருந்தவள் போல் நடந்து கொள்கிறாளே! எடுத்ததுக் கெல்லாம் குறை கூறி, எப்பவும் ஏசிப்பேசி என் சந்தோஷத்தையும் குலைச்சு, தன் அமைதியையும் கெடுத்துக் கொள்கிறாளே பாவி, இதை விட மகனுக்கு என்னை பெண் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்காமலே இருந்திருக்கலாம்” என்று வளர்மதி எண்ணுவதும் இயல்பாயிற்று.

‘முப்பந்தலை இசக்கி’ என்று அந்த வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற பேய்த்தெய்வம் பற்றி வளர்மதி கேள்விப்பட்டிருந்தாள். அந்தக் கொடுரமான பிடாரியின் அவதாரம்தான் மாமியார் இசக்கி அம்மை என்று அவள்  கருதினாள். இதை அவள் யாரிடம் சொல்ல முடியும்? தன் மனசிடம் தான் அடிக்கடி கூறிக்கொண்டாள்.

ஒரு நாள் நடுப்பகலில் மாமியார், ஏதோ அல்ப காரணத்துக்காக—எண்ணெய் செம்பை கீழே போட்டு விட்டாள் என்று (அதில் என்ணெய் சில சொட்டுகளே இருந்த போதிலும்)— வளர்மதியின் தலைமயிரைப் பிடித்து இறுக்கி, அவள் மண்டையை சுவரில் ‘ணங்குணங் கென்று’ ஒசை எழும்படி மோதினாள்.

“சீத்துவம் கெட்ட மூதி, வழிச்சு நக்கித் தின்கலே? உருட்டிப் புரட்டி வயிறு வீங்கும்படி தின்கிறவளுக்கு இந்தச் செம்பைப் புடிக்கிறதுக்கு வலு இல்லாமலா போச்சு? சாமானை எல்லாம் நாசமாக்க வந்த மூதேவி” என்று ஏசிக்கொண்டே தாக்கினாள் அவள். “போ, வெளியே போடி எச்சிக்கலை” என்று மருமகளைப் பிடித்து வெளியே தள்ளினாள்.

வளர்மதி திண்ணையிலேயே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். பகல் உணவுக்கு வீட்டுக்கு வந்த குமரகுரு அவளைப் பார்த்தவாறே உள்ளே போனான். ஏன், என்ன விஷயம் என்று கேட்க அவனுக்கு வாய் இல்லை; மன தைரியமும் கிடையாது, உள்ளே போய் அம்மாவின் குற்றச்சாடடுகளைக் கேட்ட பிறகுதான் அவன் வாயைத் திறப்பான். அது அவனது சுபாவமாக உறைந்திருந்தது.

அன்றும் அப்படித்தான் நடந்தது. அம்மா முறுக்கிய ஸ்குரூ அந்த பொம்மையை வேகமாக முடுக்கிவிட்டது. வெளியே எட்டிப் பார்த்து, ‘நீ இந்த வீட்டுக்கு சரிப்பட மாட்டே உன் அப்பா வீட்டுக்கே போய்ச்சேரு. உம், உடனேயே கிளம்பு’ என்று கத்தினான்.

வளர்மதி அப்படியே புறப்பட்டு விட்டாள். அந்த வீட்டில் அவளுக்கு சாப்பாடு வேண்டியிருக்கவில்லை. ‘இல்லை, நீ சாப்பிட்டு விட்டுத் தான் போகனும் என்று தாங்கித் தடுப்பதற்கு அங்கே ஒருவரும் இல்லை,

 பிறந்த ஊருக்கு அப்படி வந்து சேர்ந்தவளை ஊர்க்காரர்கள் அவரவர் இயல்புப்படி,மனம் போன போக்கில், விமர்சித்தார்கள்.

முத்துமாலை அந்தப் பெண்ணுக்காக மிக வருந்தினான். “அது தலையெழுத்து இப்படி இருக்கு. அதுக்கு யாரு என்ன பண்ணமுடியும்?”என்றே பெரியவர்கள் அபிப்பிராயம் ஒலிபரப்பினார்கள்.

அவர்களின் ஏலாத்தனத்தை எண்ணிப் பெருமூச்சு உயிர்த்தான் முத்துமாலை. அந்தப் பொட்டைப்பயல் குமரகுருவை ஒரு நா இல்லாட்டி ஒரு நா சரியான கேள்வி கேட்கணும்.அவனை மாதிரிப் பயல்களுக்கு புத்தி புகட்டுற விதத்திலே புகட்டணும் என்று மனசுக்குள் கறுவிக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/15&oldid=1143558" இலிருந்து மீள்விக்கப்பட்டது