16

விடிந்தும் விடியாமலுமிருந்த வைகறையில், யாரோ “அண்ணாச்சி, அண்ணாச்சியோவ்” என்று கூப்பிட்டு, கதவைத் தட்டுவதை உணர்ந்த தனபாக்கியம் வாரிச் சுருட்டி எழுந்தாள். “யாரது?” என்று கேட்டாள்.

முத்துமாலை நன்றாகத் துாங்கிக் கொண்டிருந்தான்.

“நான்தான் மதினி,ராமதுரை” என்ற பதில் வந்ததும் “வாய்யா” என்று கூறியவாறே அவள் கதவை திறந்தாள். “என்ன விசேஷம், விடியத்துக்கு முன்னாலே அண்ணாச்சியைத் தேடி வந்திருக்கே?” என்று விசாரித்தாள்.

 ராமதுரை வீட்டுக்குள் வந்தான். “ஒரு அவசர காரியம். அண்ணாச்சி இன்னும் எழுந்திருக்கலியா?” என்று அங்குமிங்கும் பார்த்தான்.

முத்தொளி சிந்தி சுவரோடு ஒட்டியிருந்த சிறு விளக்கை அவள் தூண்டி விட்டாள்.வெளிச்சம் மங்கலாகப் பரவியது.

'“அண்ணாச்சியை எழுப்பனுமா? அவ்வளவு அவசரமா?”

"“ஆமா மதனி...உடனே எழுப்பினா நல்லது...” தயங்கித் தயங்கிப் பேசினான் அவன்.

அவன் குரலும் பார்வையும். ஏதோ நடக்கக்கூடாதது நடத்திருக்கிறது என்று எண்ணச் செய்தன.அவள் அறைக்குள்ளே போய்,முத்துமாலையை எழுப்பினாள். “எதிர்த்த வீட்டு துரை வந்திருக்கான். எதுக்கோ உங்களை கூப்பிடுறான்” என்று அவள் சொன்னது வெளியே நின்றவனின் காதுகளிலும் நன்றாக விழுந்தது.

முத்துமாலை நீட்டி நெளிந்து எழுந்து உட்கார்ந்தான். “என்ன துரை, இங்கே வா” என்று அழைத்தான்.

ராமதுரை அவன் அருகில் சென்று உட்கார்ந்து, ரகசியக் குரலில் பேசினான். “அண்ணாச்சி, நீலா இப்படிப் பண்ணுவான்னு நான் நினைக்கவேயில்லே...மோசம் பண்ணிப்போட்டா. வீட்டிலே அவளைக் காணலே...”

“வாய்க்காலுக்குப் போயிருப்பா, வரக் கொஞ்சம் நேரமாயிருக்கும். இதுக்குப் போயி...” என்று பரபரப்படையாமல் இழுத்தான் முத்துமாலை.

“இல்லே அண்ணாச்சி. நீலா பிளான் பண்ணித்தான் இப்படி செஞ்சிருக்கணும். வீட்டை விட்டே போயிட்டா. ராத்திரி பத்து மணி வரை வேலை எல்லாம் செஞ்சிக் கிட்டு இருந்தா.நான் வழக்கம் போலே படுத்துத் துங்கிட்டேன். தினசரி அவ வேலைகளை எல்லாம் முடிச்சிட்டுப் படுக்கிறதுக்கு பத்து,பத்தரை ஆயிரும். அம்மா கூடத்தான் படுத்து உறங்குவா. ஒண்ணரை ரெண்டுமணி இருக்கும். அம்மாதான் என்னை எழுப்பினா, நீலாவை காணோம்னு சொல்லி கண்ணீர் வடிச்சா. புறவாசல் கதவு சும்மா சாத்தியிருந்தது. உள் தாப்பா போட்டிருக்கலே. விளக்கை ஏத்திக்கிட்டு அம்மாவும் தானும் பின் பக்கம் போய்ப் பார்த்தோம். வீட்டைச் சுத்தி வந்து பார்த்தோம். ஆளே இல்லை. அப்புறம் தூக்கம் ஏது? விளக்கை வச்சுகிட்டு, குறுகுதுன்னு உட்கார்ந்திருந்தோம். அம்மா அழுது கிட்டேயிருக்கா. வாய்விட்டு ஒப்பாரி வைக்கக் கூடிய விஷயமா இது? மவுனமா கண்ணீர் வடிச்சபடி முடங்கிக் கிடக்கா. இப்படி பண்ணிப்போட்டுதே சின்னச்சவம்! “படக்குன்னு பாடையிலே போயிருந்தாலும் நிம்மதியா யிருக்குமே! இப்போ தன் பேரு, குடும்பப் பேரு, எல்லாரு பேரையும் சந்தி சிரிக்கும்படி செய்திட்டாளே என்று முணுமுணுத்தபடி கிடக்கா...”

முத்துமாலை நன்கு விழிப்புற்றவனாய் நிமிர்ந்து உட்கார்ந்து, அவன் சொல்வதைக் கேட்டான். பிறகு விசாரித்தான்.

“நீ என்ன நினைக்கிறே? வீட்டுப் பக்கத்திலே எவனாவது அடிக்கடி வாடை புடிச்சுக்கிட்டுத் திரிஞ்சானா? நீலா கண்ணு எவனையாவது சுத்தி அலைஞ்சு கிட்டிருந்துதா? உனக்கு யார் பேரிலாவது சந்தேகம் இருக்குதா?”

ராமதுரை பெருமூச்சு விட்டான். சிறிது நேரம் மவுனமாக இருந்தான். “மூக்கன் பயல் அலைஞ்ச அலைச்சல் சரியில்லே. சில நாளாகவே எனக்கு டவுட்டு இருந்தது. நீலாவும் அவனைப் பார்க்கிறப்ப எல்லாம்  சிரிக்கிறதும் சினிமாப் பாட்டு பாடுறதுமா இருந்தது...” என்று இழுத்தான்.

“எந்த மூக்கன் பய?”

“ஆசாரிப் பையன். சிவப்பா, உயரமா, கொஞ்சம் தடியா நம்ம தெருவிலே அடிக்கடி லாத்துவானே...”

“ஓ அவனா? சரி சரி.”

“சில நாளிலே நீலாவும் இன்னும் ரெண்டு மூணு பேரும் டூாிங் சினிமாவுக்குப் போறது உண்டு. அப்போல்லாம் மூக்கன் பயலும் படம் பார்க்க வருவான்னு சிலபேரு சொன்னாங்க. இவங்க பக்கம் வந்து பேச்சுக் கொடுக்கிறது, சிரிக்கிறதுன்னு...எப்படியோ, அண்ணாச்சி ரெண்டு பேருக்கும் சினேகம் ஏற்பட்டிருக்கும்னு எனக்குத் தோணுது...”

“இப்போ என்ன செய்யனுமின்னு விரும்புறே என்னை ஏன் தேடி வந்தே?” என்று முத்துமாலை கேட்டான்.

“எனக்குத் தோணுது, நீலாவும் மூக்கன் பயலும் சேர்ந்துதான் போயிருக்கணும். எங்கே போயிருப்பாங்க? டவுனுக்குப் போயி, ராத்திரி எங்காவது லாட்ஜிலே தங்கியிருப்பாங்க. பகல்லே அல்லது அதிகாலையிலே பஸ் புடிச்சு மதுரை, குற்றாலம்னு போனாலும் போவாங்க...நாம டவுனுக்குப்போகணும்.பஸ் ஸ்டாண்டிலேயே துப்புக் கிடைச்சாலும் கிடைக்கும். நீங்க என் கூட வந்தா எனக்கு ஒரு தைரியம் ஏற்படும். அந்த மூக்கன் பயலை எங்கே கண்டாலும் மடக்கி...”

“சரி, புறப்படு” என்று உடனே கிளம்பினான் முத்துமாலை. “பல்லு விளக்குங்க. காப்பி சாப்பிட்டுட்டுப் போகலாம்” என்று தனபாக்கியம் கூறவும், காப்பி போட்டிருக்கியா என்ன?” என்று முத்துமாலை கேட்டான்.

“இதோ அஞ்சு நிமிசத்திலே ரெடியாயிரும்” என்று அடுக்களைப் பக்கம் திரும்பினாள் அவள்.

“வேண்டாம் பாக்கியம். அதுக்கெல்லாம் நேரம் இல்லே” என்று சொல்லிவிட்டு வெளியேறினான் முத்துமாலை.

ராமதுரை அவன் பின்னாலேயே நடந்தான்.

அவர்களது ‘நல்லகாலம்’ பஸ்ஸுக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதே போல டவுன் பஸ் நிலையத்திலும் சந்தர்ப்பம் அவர்களுக்கு உதவியது.

அவர்கள் வந்த பஸ் நிலையத்தினுள் புகுந்த வேளையில், திருச்செந்துார் செல்கிற பஸ் வெளியேவந்து கொண்டிருந்தது. மெதுவாகத்தான் வெளியேறியது. தற்செயலாக அந்த பஸ்சினுள் முத்துமாலையின் பார்வை பாய்ந்தது. அதனுள் மூக்கன் இருப்பது தெரிந்தது. “ஏ துரை அந்த பஸ்சிலே மூக்கன் பய இருக்கானே” என்றான் அவன்.

ராமதுரையும் கவனித்தான். “பொம்பிள்ளைகள் பக்கத்திலே நீலா மாதிரி ஒருத்தி இருப்பது தெரியுது. அந்த மூதியாத்தான் இருக்கும். இப்ப நாம என்ன செய்யலாம்” என்று பதட்டல் காட்டினான் அவன்.

முத்துமாலை அவன் கையைப் பற்றினான். “அவசரப்படாதே. அவங்க நம்மைப் பார்க்கலே. அதனாலே பயமில்லை. இடைவழியிலே எங்கேயும் இறங்கிட மாட்டாங்க. நேரே திருச்செந்துாருக்குத்தான் போவாங்க. நாம அடுத்த பஸ்சிலே போவோம். அங்கே யாரும் அவங்களைத் தேடி வருவாங்க என்கிற எண்ணமே அவங் களுக்கு ஏற்படாது. அதனாலே பயமில்லாம கவலையில்லாம ஜாவியா கோயிலுக்குப் போவாங்க கடற்கரையிலே நிப்பாங்க. எப்படியும் நாம அவங்களைப் புடிச்சிரலாம்” என்று முத்துமாலை தெரிவித்தான்.

அரைமணி நேரத்துக்குப் பிறகுதான் திருச்செந்துருக்கு அடுத்த பஸ் என்று தெரிந்ததும், இரண்டுபேரும் ஒட்டலுக்குப் போய் சிற்றுண்டி சாப்பிட்டு வந்தார்கள். பஸ்சில் வசதியாக இடம் பிடித்துக் கொண்டார்கள்.

பயணத்தின் போது ராமதுரை நீலாவை திட்டிக் கொண்டே வந்தான். “மூக்கன் பயலுக்கு சரியானபடி பாடம் கத்துக்கொடுக்கணும். அவனைப் பார்த்ததுமே கழுத்திலே துண்டைப்போட்டு முறுக்கி புடரியிலே ரெண்டு கொடுத்து...” என்ற ரீதியில் முணுமுணுத்தபடி இருந்தான்.

அவனுடைய ஆத்திரம் ஒரளவுக்குத் தணியட்டும் என்று முத்துமாலை பொறுமையாக இருந்தான். திருச்செந்தூரை நெருங்கியபோது பேசலானான்; “துரை இப்போ ஆத்திரப்படறதிலே பிரயோசனமில்லே. ஆரம்பத்திலேயே இவ்வளவுக்கு முத்தவிடாம கண்காணிச்சு நடவடிக்கை எடுத்திருக்கணும். இப்போது இவ்வளவு தூரத்துக்கு ஆயிட்ட பிறகு, அவள் துணிஞ்சு திட்டம் போட்டு அவனோடு கூட வீட்டை விட்டு வெளியேறி வந்துவிட்ட பிற்பாடு ஏசுறதிலேயும், உன் மனசை நீயே குழப்பிக்கிடுறதிலேயும் லாபம் இல்லே. நீலா அந்தப் பயலோடு ஒடி வந்து, ராத்திரியை அவன்கூடக் கழிச்சுப்போட்டு. ஜாலியா ஊர் சுத்தவும் துணிஞ்சிருக்காள்னா, அவளுக்கு அவன் மீது பற்றுதலும் பிரியமும் நிறையவே ஏற்பட்டுருக்குன்னு தான் அர்த்தம். அவளையும் அவனையும் மிரட்டியும் உதைச்சும் பிரிச்சிடலாம். நீலாவைத் திரும்பவும் வீட்டுக்குக் கூட்டி வந்து உதைச்சு கார்வாரு பண்ணறதும் கஷ்டமில்லே. உடம்பினாலும், உள்ளத்தினாலும்  களங்கப்பட்டவளாத்தான் அவ இருப்பா. ஊரிலேயும் கெட்ட பேரு தான் நிலைக்கும். அதனாலே அவளுடைய வாக்கையும் பாதிக்கப்படும். அவளுக்குக் கல்யாணம் ஆகிறதும் பெரிய பிரச்னையாகத் தான் ஆகிப்போகும். மூணு நாலு வருசம் கழியட்டும், மூடி மறைச்சு, துர தொலையிலே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுத்திடலாம்னு நினைச்சாலும், அதிலும் நடைமுறை சிக்கல்கல் ஏற்படும் கல்யாணத்தை கலைகிறதுக்குள்ளே உண்மை விளம்பின்னு எவனாவது மொட்டைக் கடுதாசி எழுதிப் போடுவான். மூட்டை கட்டிக்கிட்டு ஊரு தேடிப்போயி, மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்டே பெண்ணைப்பத்தி வத்திவச்சிட்டு வாறதுக்கு நம்ம ஊரிலே ஆளுக ரெடியா இருப்பானுக...”

“ஆமாமா. இதுக்கு முன்னாடியும் அப்படியெல்லாம் செஞ்சிருக்கானுக தான். அது சரி, நீங்க என்ன செய்யலாமுங்கிறீக அண்ணாச்சி?”

“பணபலம் இருந்தா எதையும் வெற்றிகரமா சாதிச்சிடலாம். ஒடிப்போன பெண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து, எதுவுமே நடக்காதது போல் சமாளிச்சு, நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடலாம். அப்படியும் நடக்கத்தான் செய்யுது. அல்லது, பணம் எதுவும் இல்லாம, உழைச்சுப் பிழைக்கிற அன்றாடங் காய்ச்சிகள் மத்தியிலும் இது மாதிரி விவகாரங்கள் பெரிய பிரச்னை ஆவதில்லே. வீட்டை விட்டு வெளியேறி அல்லும் அவளும் சேர்ந்து, வாழ்றவரை வாழ்வாங்க. இல்லேன்னா பிரிஞ்சு போவாங்க. அவள் வேறொருத்தனை தேடிக்கிடுவா; அவன் இன்னொருத்தியை சேர்த்துக்கிடுவான். நம்ம மாதிரி ரெண்டுங்கெட்டான் நிலையிலே இருக்கிறவங்க—மத்தியதர வர்க்கம்னு பெரிசா பேர் பண்ணப்படுதே, அவங்க—மத்தியிலேதான் விவகாரம், வில்லங்கம் எல்லாம்...”  முத்துமாலை என்னதான் சொல்ல விரும்புகிறான் என்று புரிந்து கொள்ள இயலாதவனாய் ராமதுரை அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் என்ன நினைக்கிறேன்னா, நீலாவுக்கு மூக்கனைப் புடிச்சிருக்கு, அவன் பேரிலே அவளுக்கு ஆசை வளர்ந்திருக்கு. அதே மாதிரி அவனுக்கு அவ மீது ஆசை, பின்னாலே என்ன நிகழும், எப்படி முடியும்கிறதைப் பத்திக் கவலைப்படாம, ரெண்டுபேரும் வீட்டை விட்டு. ஊரை விட்டு, உற்றார் உறவினரை விட்டுவிட்டு வெளியே போகிற அளவுக்கு ஒருவரை ஒருவர் விரும்பி இருக்கிறாங்க. அவங்க வாழ்க்கையை, அவங்க எதிர்காலத்தை, அவங்களே அமைச்சுக்கிடட்டும்—அதிலே எதிர்ப்படுகிற இன்ப துன்பங்கனை, லாப நஷ்டங்களை அவங்களே எதிர் கொள்ளட்டும்னு விட்டுட வேண்டியதுதான். அந்தப் பெரிய மனசு உனக்கு வேணும்...”

“நீலாவும் மூக்கனும் கல்யாணம் பண்ணிக்கிடட்டும்னு விட்டுறவா? அப்படியா சொல்லுதீங்க அண்ணாச்சி?”

“நீலா எவனாவது ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ வேண்டியவள் தானே? முன்னைப்பின்னே தெரியாத எவனோ ஒருத்தனை கட்டிக்கிட்டு வாழிறதை விட அவளா விரும்பித் தேர்ந்து கொண்ட, அவளுக்கு நல்லாத் தெரிஞ்ச மூக்கனோடு சேர்ந்து வாழறதுனாலே என்ன கெட்டுப் போகப் போகுது?”

முத்துமாலையின் பேச்சு ராமதுரைக்கு அதிர்ச்சி தந்தது. “அது எப்படி அண்ணாச்சி முடியும்? அவன் சாதி என்ன, நம்ம சாதி என்ன? ஊரிலே காறித்துப்ப மாட்டாங்களா? நம்ம சொந்தக்காரங்க நம்மளை மதிப்பாங்களா?” என்று பட படத்தான்.

“இப்ப ரொம்பத்தான் மதிக்கிறாங்களாக்கும்!” என்று சொல்லிச் சிரித்தான் முத்துமாலை. “தங்கச்சிக்கு  கல்யாணம் பண்ணி வைக்கத் திராணியில்லாமல் இருக்கான்னு புறம் பேசு தானுக, நீலா மரம் மாதிரி வளர்ந்திட்டா—குதிரு மாதிரி வளர்ந்து நிக்கறா—இருபத்து நாலு இருபத்தஞ்சு வயசாகியும் கல்யாணமாக வழியில்லே என்று பொம்பிளைகளும் ஆம்பிளைகளும் பேசுறாங்க பழிக்கிறாங்க. யாராவது உதவி செய்ய முன் வந்தாங்களா?”

“இருந்தாலும் மூக்கன் ஆசாரிப் பையன்...”

“நாம பத்தரைமாத்து சைவப் பிள்ளைமாராச்சேன்னு மனசு கெடந்து அடிச்சுக்கிடு தாக்கும்? ஏ, துரை இதில் எல்லாம் அர்த்தமே கிடையாது. பணமும் சொத்தும் இருக்கவங்க பெருமை கொழிச்சுக்கிடலாம். அதிலே அவங்க மதிப்பை காணலாம். அதைவிட்டுத் தள்ளு. ஊர் சிரிக்குமே, கேலி பேசுமேன்கிறதும் பெரிய விசயம் இல்லே. சிரிச்சால் சிரிச்சிட்டுப் போட்டுமே. கொஞ்ச காலத்துக்குச் சிரிக்கும். அப்புறம் மறந்து விடும். இல்லாட்டி அதுக்கு எண்ணியும் பேசியும் சிரிக்கதுக்கு வேறே புது விசயம் வந்துடும்!” என்றான் முத்துமாலை.

ராமதுரை பேசாமல் வெளியே பார்த்தபடி இருந்தான்.

“ஊர்க்காரங்க சிரிப்பும் சொந்தக்காரங்க பழிப்பும் பணம் நிறைய வச்சிருக்கிறவங்களை எதுவும் செய்வதில்லே. அதே மாதிரி இல்லாதவங்களையும் ஒண்ணும் பண்ணுவதில்லை. மத்தியதரங்களைத்தான் அது பாடாப்படுத்தும். பெரிய பண்ணை புன்னைவளம் பிள்ளை மகள் ரஞ்சிதம், முதலிப் பையன் ஒருவன் கூடப் போயிட்டா. அவங்க ரெண்டு பேரும் புருஷன் பெண் சாதியா நம்ம ஊருக்கு திரும்பி வந்தாங்க. யாரு என்ன பண்ண முடிஞ்சுது அவங்களை? இப்பவும் ஊரோடு ஜம்னு தான் இருக்காங்க. கூலி வேலை செய்து பிழைக்கும்  பிச்சையா மகள் பாப்பா கொத்தனார் மகனை கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஊரும் உறவும் என்ன செஞ்சு போட்டுது? அதெல்லாம் ஏன்? நான் இல்லையா? இருட்டோடு வந்த எவளோ ஒருத்தியான தனபாக்கியத்தை சேர்த்துக்கிட்டு ஊர் நடுவிலேயே வாழ்க்கை நடத்தலையா? ஊரு உறவு, பழிப்பு சிரிப்புன்னு யோசிச்சுக் கிட்டிருந்தா, நம்ம சந்தோஷங்களை நாமே காவு கொடுக்க வேண்டிய கட்டங்கள்தான் நிறைய வரும்.”

முத்துமாலையின் உபதேசம் ராமதுரையை சிந்திக்க வைத்தது. அவன் மவுணத்தில் ஆழ்ந்தான். அவன் யோசிக்கட்டும் என்று முத்துமாலையும் விட்டுவிட்டான்.

இரண்டு பேரும் பஸ்ஸிலிருந்து இறங்கியதும் மெது நடையாகக் கோயில் பக்கம் போனார்கள். வழியில் ஒரு ஒட்டலில் வயிற்றுப்பாட்டை கவனித்துக் கொண்டார்கள்.

“நேரே நாம கோயிலுக்குப் போவோம். கடற்கரையாண்டி கோயில் மண்டபத்திலே காற்று ஜிலுஜிலுன்னு வரும். சுகமாயிருக்கும். அங்கே உட்கார்ந்தபடி வாற வங்க போறவங்களை கவனிப்போம். நம்ம புள்ளிக்காரங்களும் அங்கே எப்படியும் வந்து சேருவாங்க” என்று முத்துமாலை சொன்னான்.

கோயிலுக்கு வந்ததும் ராமதுரை சொன்னான், “வந்ததோ வந்தோம்.சாமி தரிசனமும் பண்ணிரலாமே” என்று.

“ஆகா, பண்ணினாப் போச்சு!” என்று உள்ளே போனான் முத்துமாலை.

பிறகு இருவரும் பிரகாரம் சுற்றி வந்தார்கள். உள் பிரகாரம் வெளிப் பிரகாரம் இரண்டையும்தான், வள்ளி ஒளிஞ்சக் குகையைபார்த்து வைக்கலாமே” என்று திரும்பி அங்கே போவதற்கான வழியில் நடந்தார்கள்.  மீண்டும் சந்தர்ப்பம் அவர்களுக்கு உதவியது.நீலாவும் மூக்கனும் வள்ளிக்குகையை பார்த்துவிட்டு அவர்களும் நேரே வந்து மாட்டிக் கொண்டார்கள்.

“வாங்க வாங்க! ரொம்பவும் எதிர்பாராத சந்திப்பு” என்று உற்சாகமாக வரவேற்றான் முத்துமாலை.

இவர்களை அங்கே எதிர்பார்த்திராத நீலாவும் மூக்கனும் திடுக்கிட்டுத் திகைத்துத் திகிலடித்துப் போய் நின்று விட்டார்கள். நீலா மூக்கனின் முகத்தைப் பார்த்தாள். அண்ணனைப் பார்த்தாள். முத்துமாலையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து விட்டு அவன் கண்களை சந்திக்க முடியாதவளாய் தலை குனிந்தாள்.

மூக்கன் கலவரமடைந்தவனாய் திரு திரு என்று விழித்தபடி நின்றான். அவன் பார்வை கடலின் பக்கமே நிலைத்திருந்தது.

முத்துமாலைதான் சீண்டினான். “முருகன் வள்ளி திருவிளையாடல் மாதிாி நீலா மூக்கன் திருவிளையாடலா? எந்த மட்டிலே நிக்குது? முருகன் லீனை வள்ளி திருமணத்திலே முடிஞ்சிது. மூக்கன் லீலை நீலா திருமணத்தை எட்டிப் பிடிச்சாச்சா? என்னமோ சொல்லுவாங்களே? நல்ல வார்த்தையில்லா ? ... ஆங். ஆங், தேன்நிலவ யாத்திரை நடக்குதோ இப்போ!”

நீலாவின் கண்கள் கலங்கின. நீரைச் சிந்தின.

ராமதுரை கோபத்தோடு அவளையே முறைத்து பாா்த்துக் கொண்டிருந்தான் “நீலிக்கு அழுகை எவரெடியா இருக்கும்னு சொல்லுவாங்க.செய்யறதை செங்சுபோட்டு அழுகை வேறயா? பாசாங்குக்காரி. நல்ல நடிக்கத் தெரிஞ்ச ஏமாத்துக்காரி. எத்தனை நாளாகட்டீ இப்படித் திட்டம் போட்டிருந்தே? அம்மை மூஞ்சிலேயும் எம்மூஞ்சிலேயும் இப்படிக் கரியை அள்ளிப் பூசணும்னுட்டு?...” என்று பொரிந்து தள்ளினான்.  நீலா அழுது கொண்டே நின்றாள். மூக்கனுக்கு ஒன்றும் ஒடவில்லை.

அது ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமாக இருந்ததால், வேடிக்கை பார்க்கும் கும்பல் கூடவில்லை.

அண்ணன்காரன் பேசவேண்டியதை எல்லாம். பேசட்டும் என்று காத்துக் கொண்டிருந்த முத்துமாலை ஒரு அளவு வந்ததும் இவ்வளவு போதும் என்று எண்ணியவனாய் குறுக்கிட்டான்.

“சரி துரை, நடந்தது நடந்துபோச்சு. அதுக்காக அலட்டிக் கிட்டிருப்பது வீண் வேலை. இனிமேலே நடக்க வேண்டியதைப் பற்றி யோசித்து ஒரு முடிவுக்கு வருவது தான் விவேகம்” என்றான். தொடர்ந்து “அம்மா நீலா, வீட்டைத் துறந்து, யாவரையும் உதறி விட்டு வந்தாச்சு, அடுத்தாப்லே என்ன செய்றதா உத்தேசம்” என்று நீலாவை நோக்கினான்.

அவள் வாயை திறக்காமல் நிற்கவும், மூக்கனை பார்த்துக் கேட்டான் “நீ ஏதாவது பிளான்வெச்சிட்டு தானே இவளை கூட்டிக்கிட்டு வந்திருப்பே? இனி ரெண்டு பேரும் என்ன பண்ணப் போறீங்க? எந்த ஊாிலே வாழ்க்கை நடத்தப் போறீங்க?”

மூக்கன் மாற்றி மாற்றி ஒவ்வொரு முகமாகப் பார்த்தான். “அதைப் பத்தி எல்லாம் இன்னும் தீா்னானிக்லே” என்றான்.

“அதுதான் தப்பு.ஒரு பெண்ணை இழுத்துக்கிட்டு ஓடிப்போறதை விடப் பெரிய தப்பு, தன்னை நம்பி, தன் கூட வந்தவளுடைய எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்காமல் அவ வாழ்க்கைக்கு உறுதி—அளிக்காமல்—அவளை அந்தரத்திலே விட்டு விடுவது. நீலா உன் பேச்சைக் கேட்டு, உன்னை நம்பி, உன் மேலே ஆசை வச்சு, உன் கூட வந்திட்டா, அவளைக் கடைசிவரை வைச்சுக் காப்பாத்த வேண்டிய பொறுப்பு உனக்கு வந்திட்டுது. அஞ்சுநாள் ஆறுநாள், அல்லது ஒரு மாசம், ஜாலி பண்ணிட்டு அவளை உதறிவிடலாம்னு நீ உன் மனசிலே எண்ணியிருந்தால் அது பெரிய அயோக்கியத்தனம். அவளுக்குச் செய்கிற மகத்தான துரோகம். அவளுடைய எதிர்காலத்தை ஒரு பெண்ணின் வாழ்க்கையை—கொலை பண்ணிய குற்றமும் ஆகும். உங்க உறவு இவ்வளவு தூரம் முற்றிக் கணிஞ்சிட்டதுனாலே, நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்க்கை நடத்துவது தான் நியாயம் ஆகும். நீங்க இப்பவே நம்ம ஊருக்குத் திரும்பி வரணும்கிற அவசியம் எதுவும் இல்லே. தூத்துக்குடியிலோ, மதுரையிலோ, அல்லது உங்க மனசுக்குப் பிடிச்ச ஒரு நகரத்திலே போய் வசிக்கலாம். நீங்க எப்படிப் பிழைப்பீங்களோ, அது உங்க சாமர்த்தியத்தைப் பொறுத்தது. ஆனா, மூக்கா, ஒண்ணை மனசிலே வச்சுக்கோ, நீலாவை கைவிட்டு விடலாம்னு நினைக்காதே. உன்னை நம்பி எல்லோரையும் எல்லாத்தையும் துறந்திட்டு வந்திருக்கிற இந்தப் பெண்ணை ஏமாற்றி, இவளை அலைக் கழிய விட்டிராதே...”

“அப்படி எல்லாம் செய்ய மாட்டேன், ஐயா” என்று உணர்ச்சியோடு கூறி, கை எடுத்துக் கும்பிட்டான் மூக்கன்.

“அப்ப சரி. இங்கேயே இவளுக்கு நீ தாலி கட்டி விடு. நாங்களே சாட்சியாக இருப்போம்” என்றான் முத்துமாலை.

நாலு பேரும் ஒரு கடைக்குப் போய், தாலிச் சங்கிலி வாங்கினார்கள்.கோயிலில் வைத்து மூக்கன், நீலாவுக்குத் தாலி கட்டினான். சாமியை கும்பிட்டுவிட்டு, ஒட்டலுக்குப் போய் விருந்து உண்டார்கள்.

“நீலா, நீயாகத் தேடி அமைத்துக் கொண்ட வாழ்க்கை இது.என்றைக்கும் நீ சந்தோஷமா இருக்கும்படி  பார்த்துக் கொள். மூக்கா, உனக்குச் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லியாச்சு. எங்கே இருந்தாலும், என்ன தொழில் செய்தாலும்,மன நிறைவோடு சந்தோஷமாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்க. எங்களுக்குக் கடிதம் எழுத மறக்க வேண்டாம். சரி, நாங்க வாறோம்” என்று விடைபெற்றான் முத்துமாலை.

ராமதுரையும் சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

புதுமணத் தம்பதிகள் கண்கலங்க வணக்கம் தெரிவித்தார்கள்.

“இது இப்படி முடியும்னு நான் நினைக்கவேயில்லை” என்று ராமதுரை முத்துமாலையிடம் சொன்னான்.

“காலம் வழி அமைத்துக் கொடுக்கிறது. வாழ்க்கை தன் போக்கில் முன்னேறுகிறது” என்றான் முத்துமாலை.

“அம்மாவை எப்படி சமாதானப்படுத்தப் போறேனோ எனக்கே தெரியலே” என்று நெடுமூச்சுயிர்த்தான் துரை.

“எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்” என்று முத்துமாலை ஆறுதல் கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/16&oldid=1143559" இலிருந்து மீள்விக்கப்பட்டது