20

நாளுக்கு நாள் அதிகம் அதிகமாக மனச் சோர்வுபெற்று வந்த முத்துமாலை, திரிபுரத்தின் தாக்குதலினால் வெகுவாக பாதிக்கப்பட்டான். அவனுடைய மனம் உடைந்து சிதைந்து தகர்ந்துவிட்டது போன்ற உணர்வு அவனுள் படிந்தது.

திரிபுரம் இப்படி வெறியுடன் தன்னை ஏசிப் பேசுவாள், கேவலமாகப் பேசி வெளியே துரத்துவாள் என்று அவன் எவ்வாறு எண்ணியிருக்க முடியும்? நீ—வா—போ என்று ஏகவசனத்தில் அவள் பேசுவாள் என்றுகூட எண்ணியவனில்லை அவன். அப்படி இருக்கையில் “போடா” என்று அவள் தன்னை மரியாதைக் குறைவாகப் பேசியதைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனான். அவள் சுய உணர்வுடன் பேசவில்லை; மன நோய்க் கோளாறுதான் அவளை இவ்வாறெல்லாம் ஆட்டி வைக்கிறது என்ற நினைப்பு அவனுக்கு சிறு ஆறுதல் அளித்த போதிலும், அவனது மனம் உதைத்துக் கொண்டு தாணிருந்தது.

அவளுடைய குடும்ப வாழ்க்கை சிதைவுற்றதற்கு திரிபுரம் தன்னைக் குற்றம் சாட்டியதை முத்துமாலையினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் வாழ்வு சீர் குலைந்ததுக்கு அவனா காரணம்? அவளுடைய புருஷனின் குணக்கேடுகளும் அயோக்கியத்தனங்களும் அதர்மச் செயல்களும் அல்லவா அடிப்படைக் காரணம்? இதை ஏன் அவள் மறந்தாள்?

இதை எண்ண எண்ண அவன் மனம் குழம்பியது. திரிபுரமா இப்படி மாறிப் போனாள் நம்ம திரிபுரமா?  அவன் உள்ளத்தில் வேதனைகலந்த வியப்பு குறுகுறுத்துக் கொண்டிருந்தது.

அமைதி இழந்த முத்துமாலை நிறைய நிறையக் குடித்தான். அவனுடைய கூட்டாளிகளே அவன் போக்கைக் கண்டு அஞ்சினார்கள். “இது நல்லதில்லே அண்ணே. உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது” என்று எச்சரித்தார்கள்.

“ப்ச்!” குடிமுழுகிப் போகுமாக்கும்! இத்தனை நாள் இருந்து என்னத்தை கிழிச்சிட்டோம்? இனிமேலும் உசிரோடிருந்து எதை பெரிசா வெட்டி முறிக்கப் போறோம்? இன்னிக்குச் செத்தா நாளைக்கு காடாத்து; பதினாறாம் நாள் கருமாதி. ‘சவத்தை விட்டுத் தள்ளு’ என்று சுரத்தில்லாமல் பேசினான்.

இது வேறு முத்துமாலை என்று பட்டது அவனது நண்பர்களுக்கு. முன்பெல்லாம் இப்படி வறண்ட குரலில், வாழ்ந்து முடிந்து ஓய்ந்து போனவன் போல, அவன் பேசியிருக்கமாட்டான்.

அவன் செயல்களிலும் மாறுதல் தென்படத்தான் செய்தது.

எதிலுமே அவனுக்கு ஆர்வம்இல்லாமல் போய்விட்டதாகத் தோன்றியது. ஊர் விவகாரங்களில் அக்கறை காட்ட மறுத்தான்.

இரவு நேரங்களில் நிகழ்கிற அக்கிரமங்களில் அநியாயச் செயல்களில் தலையிட்டு, நீதி வழங்கவேண்டியது தண்டனை கொடுப்பது அல்லது சமரசம் செய்து வைப்பது—தனது பொறுப்பு என்று நம்பியவன் போல் அனைத்து விவகாரங்களிலும் குறுக்கிட்டு ஆக்கினைகள் செய்து வந்த “அண்ணாச்சி” யாக இல்லை. அவன் இப்போது.

ஒரு ராத்திரி, ஒரு சிறிய வீட்டில் பெரும் கூச்சலாக  இருந்தது அந்த வீட்டுக்காரன் தன் மனைவியை அடி அடி என்று அடித்துக் கொண்டிருந்தான்.

அடிக்கடி தலைதுாக்குகிற ஒரு நிகழ்ச்சிதான் இது. மாசத்தில் ஒரு தடவை அந்த வீட்டில் இந்தக் கூத்துதான். புருஷனுக்கு மனைவி பேரில் சந்தேகம். அவள் எங்கோ போய்,எவனுடனோ ஜாலிபண்ணிவிட்டு வந்திருக்கிறாள் என்று ஏசுவான். அவளும் பேச்சுக்குப் பேச்சு வீச, வார்த்தைகள் தடித்து கை வீச்சில் வந்துநிற்கும். அவன் கண்ணு மண்ணு தெரியாமல் அவளை அடித்து நொறுக்குவான்.

அதுபோன்ற சமயங்களில் தெருவோடு போகிற முத்துமாலை தன் பாட்டுக்கு நடக்கமாட்டான். புருசன் பெண்டாட்டி சண்டை; தனிப்பட்ட விவகாரம் என்று நினைக்கமாட்டான். கதவைத் தட்டி, கூப்பாடு போடுவான்.

“ஏ வீராசாமி! மாட்டுப் பயலா நீ? அவளை பொம்பிளைன்னு நெனச்சியா எருமை மாடுன்னு நெனச்சியா? இப்படி மடார் மடார்னு போட்டு அடிக்கிறியே! செத்துப் போகப் போறா, பாவம்” என்பான்.

அடிப்பவன் ஏதாவது சொல்லுவான். இவனும் தர்ம நியாயமாக ஏதேனும் கூறுவான். சமாதானம் பண்ணி விட்டுத்தான் போவான்.

இந்த ராத்திரியிலோ...

வீராசாமி வெட்டரிவாளைத் துரக்கிக் கொண்டு பாய, அவன் மனைவி பேச்சி பயந்து அலறிக் கொண்டு வெளியே பாய்ந்தாள். “அய்யோ பாவி கொல்ல வாறானே! வெட்ட வாறானே” என்று தெருவில் ஒடினாள்.

அப்போது தான் முத்துமாலை அந்தத் தெருவில் வந்தான். அவன் குறுக்கே பாய்ந்த பேச்சி “அண்ணாச்சி, அண்ணாச்சி! என்னைக் காப்பாத்து...அந்தப் பாழறுவான் அரிவாளைத் தூக்கிக்கிட்டு வெட்ட வாறான்” என்று புலம்பினாள்.

“உங்களுக்கு வேறே வேலையில்லே! இதே கூத்து  தான் எப்பவும். வெட்டிக்கிட்டு சாவிகளோ நாசமாப் போவிகளோ... எக்கேடும் கெட்டுப் போங்க” என்று சொல்லியபடியே அவன் நடந்துபோனான்.

போகிற போதே தானாகவே பேசிக் கொண்டான்; “இதெல்லாம் என்னமனுச சென்மங்க! வீட்டையும் தெருவையும் நாறடிச்சுக்கிட்டு! செத்துத் தொலையட்டுமே சனியங்க.

முத்துமாலையின் உள்ளத்தில் கசப்பு மண்டிச் சுழன்றது ஒருவெறுமை அவனுள் புகுந்தது. குழந்தைகள் கூட அவன் கவனத்தைக் கவரும் சக்தியை இழந்துவிட்டன. எதிலுமே அவனுக்குப் பிடிப்பு குறைந்து போயிற்று.

குழந்தை ஒன்று கீழே விழுந்துவிட்டால் அதுக்கு அடி கிடி பட்டதோ என அங்கலாய்த்துப் பதறக் கூடியவன் தான் அவன்.

இப்போதோ?

ஒரு சிறுமி வீட்டுப் படிக்கட்டில் உருண்டு விழுந்தது. அதன் நெற்றியில் காயம் பட்டு அது கதறி அழுதது.

பகல் நேரம் தான். பார்த்துக் கொண்டு போன முத்துமாலை இரக்கத்தோடு முன்னே பாயவில்லை. குழந்தையை எடுத்து அன்போடு உதவி புரியவில்லை.

“தொலையட்டும். ஆடிக் கொண்ணு அமாவாசைக்கு ஒண்ணுன்னு தான் பிள்ளைகளை வதவதன்னு பெத்துத் தள்ளுதாங்களே. ஒண்னு குறைஞ்சா என்ன கெட்டுப் போச்சு!” என்று முணு முணுத்தபடி நடந்தான்.

இவ்வாறு அநேக நிகழ்ச்சிகள்.

“ஆளே அடியோடு மாறிப் போனான்” என்பதை அவனுடைய கூட்டாளிகள் உணர்ந்தார்கள். தனபாக்கியமும் புரிந்து கொண்டாள். ஏன் இப்படி திடீர்னு மாறினான் என்பதுதான் ஒருவருக்கும் விளங்கவில்லை.

தனபாக்கியம் அவனிடம் கேட்டாள்; “உங்களுக்கு என்ன செய்யுது? ஏன் ஒரு மாதிரி இருக்கீக?”  முத்துமாலை பெருமூச்செறிந்தான். “என்ன வாழ்க்கை! என்ன மனுசங்க! எனக்கு எதுவுமே பிடிக்கலே” என்றான்.

—சே, திரிபுரம் என்னன்னமோ பேசிப் போட்டா! அவ என்னை புரிஞ்சுக்கிடவே இல்லையே!

இதை அவன் வாய்விட்டுச் சொல்லவில்லை.

—அவளை நெனைக்கையிலே பாவமாகத்தான் இருக்கு. திரிபுரம்தான் என்ன செய்வா பாவம்.

வேதனையால் குமைந்து புழுங்கினான் முத்துமாலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/20&oldid=1143567" இலிருந்து மீள்விக்கப்பட்டது