21

அன்று வழக்கம் போல்தான் பொழுது விடிந்தது.

ஆனால், சிவபுரத்துக்கு அது வழக்கம் போல் மற்றும் ஒரு நாளாக அமையவில்லை. விபரீதமான செய்தியை வைத்திருந்தது. இருட்டு. விடிவின் பேரொளி அந்த ஊர்க்காரர்களுக்கு அதிர்ச்சியைக் கொண்டு தந்தது.

—ஐயோ, இப்படியும் நடக்குமா!... அவனுக்கு இது மாதிரிச் சாவு வரும்னு யாரு நெனச்சா?... முத்துமாலை திடீர்னு செத்துப் போவான்னு யாரு கண்டது?...

—பாவி போயிட்டானே... ஊரை ஊரை சுத்தி வருவானே... சவத்து மட்டை குடிச்சுக் குடிச்சுக் கெட்டான்.

—குடிகாரனாத் திரிஞ்சாலும் யாருக்குமே தீங்கு செய்யமாட்டானே. நன்மையை நெனச்சு நல்லதுகளைச் செய்யனுமின்னுதான் அலைஞ்சான்! இப்படியா பொட்டுப் பொடுக்குன்னு போகணும்?

இந்த விதமாகவும் இன்னும் பலவாறும் பேசினார்கள். ஆண்களும் பெண்களும் ஆற்றாமையோடு புலம்பினார்கள்.  செய்தியைக் கேட்டு எவர்தான் அதிர்ச்சி ஆடையவில்லை? எல்லோருக்கும் அது நம்ப முடியாத செய்தியாகத்தான் ஒலித்தது. ஆனால் உண்மையாகவே நடந்து முடிந்திருந்தது.

முத்துமாலை செத்துப்போனான்.

ஊருக்குக் கிழக்கே, குளத்தங்கரைச் சாலையை ஒட்டிய பள்ளமான் வயல் பகுதியில், விழுந்து கிடந்தான் அவன்.

ராத்திரி எந்நேரத்தில் விழுந்தானோ? எப்படி விழுந்தானோ? குப்புறக் கிடந்தான்.

காலையில் அந்தப் பக்கமாகச் சென்ற ஒருவன் வயலில் எவனோ விழுந்து கிடப்பதைக் கண்டான். குடிகாரப் பய. மூக்கு முட்டக் குடிச்ச போதையிலே கிடக்கான் போலே என்று எண்ணியவனாய் அருகில் போய் கவனித்தான். திடுக்கிட்டான், அது முத்துமாலை.

அந்த ஆள் குரல் கொடுத்தான். தட்டி எழுப்பினான். உடம்பின் மேலே கைவைத்ததுமே விளங்கி விட்டது.முத்துமாலை கட்டையாய்க் கிடந்தான்; உயிர் போய் ரொம்ப நேரம் ஆகியிருக்க வேண்டும். .

அவன் ஊரை நோக்கி நடந்தான். கிராம முனிசீப்பிடம் தெரிவிக்க வேண்டுமே. அவசரமாக நடந்தான். எதிரே வந்தவர்களிடம் தகவல் அறிவித்தவாறு போனான்.

கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் அந்த இடத்துக்கு விரைந்தார்கள். சேதி வேகமாகப் பரவவும், கூட்டம் கூட்டமாய் சென்றார்கள். ஊர் பூராவுமே திருவிழா பார்க்கத் திரண்டது போல் அங்கே கூடியது.

அங்கே முத்துமாலை செத்துக் கிடந்தான்.

ரோட்டு ஓரத்தில் கால் சறுக்கித் தவறி விழுந்து, சரிவில் உருண்டு உருண்டு போய், வயலுக்குள் விழுந்திருக்க வேண்டும். தலையில் பின்புறத்தில் ரத்தம் வந்து, காதின் ஒரம் வழிந்து, கழுத்தில் கறையாகப் படிந்து காய்ந்திருந்தது. கீழே விழுந்ததில் ஏதாவது ஒரு கல் தாக்கி, ‘பொருத்தில் அடிபட்டு அவன் செத்துப் போயிருக்க வேண்டும்’ என்று ஊகித்தார்கள்.

எவனாவது பின்னாலிருந்து கல்லை வீசி எறிந்து தாக்கியிருப்பானோ? அப்படி அடிபட்டு இவன் கீழே விழுந்து மேலும் காயப்பட்டு செத்திருப்பானோ?

சிலர் சந்தேகக் குரல் எழுப்பினார்கள்.

யார் அவ்வாறு தாக்கப் போகிறார்கள்? எவன் துணிச்சலாகக் கல்லெறிந்து முத்துமாலையைக் கொன்னிருக்க முடியும்? முத்துமாலைக்கு அப்படிப்பட்ட விரோதி யார் உண்டு?

அநேகர் எதிர்ப்புக் குரல் கொடுத்தார்கள்.

முத்துமாலையின் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் இல்லையா? மாடசாமி மாதிரி. நாரம்புநாதன் மாதிரி. ஏன் நாரம்புநாதனே பணம் கொடுத்து ஆளை ஏவி இவனைத் தாக்கியிருக்கக் கூடாது? அப்படி நடக்காதா என்ன?

மனிதர்கள் பலவிதம், பலரும் பலப் பல விதமாகப் பேசினார்கள். மனம் போன போக்கில் கற்பனையை ஒடவிட்டார்கள்.

“அதெல்லாம் ஒண்ணும் இராது. அவன் குடிச்சுப் போட்டு, தட்டுத் தடுமாறிக்கிட்டு, இந்தப் பக்கமா வெளிக்கு வந்திருப்பான். ரொம்ப ஒரமாப் போயிருப்பான். கால் சறுக்கிக் கீழே விழுந்திருக்கான். பெரிய கல்லுலே மண்டை இடிச்சிருக்கு. பொருத்திலே பலமான அடிபட்டிருக்கு. உயிரு போயிட்டுது. இதுதான் நடந்திருக்கும். வீணான சந்தேகங்களைக் கிளப்பிக்கிட்டு நின்னா, போலீசுக்கு ரிப்போர்ட்டு அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும். அவங்க வந்தா பிரேத பரிசோதனை நடத்தனும், பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பனும், உடம்பை அறுத்துப் பார்க்கணும்பாங்க. அநாவசியமான அக்கப்போருதான் எல்லாம். இதெல்லாம் என்னத்துக்கு? இவ்வாறு உறுதியாகப் பேசினார் கிராம முனிசீப்.  “நீங்க சொல்றது சரிதாமுங்கேன். அதுதான் நடந்ததிருக்கு. இருட்டு நேரமில்லா. தன்னறிவோடு நடக்கிறவனுக்கே தடுமாறும். குடிபோதையிலே தள்ளாடிக் கிட்டே போறவனுக்கு சொல்லுவானேன்!”

பெரியவர்கள் ஆமோதித்துப் பேசினார்கள். “ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்க சட்டுப்புட்டுனு சோலி முடியட்டும்” என்று அவசரப்படுத்தினார்கள்.

கட்டை வண்டி ஒன்று கொண்டு வரப்பட்டது. முத்துமாலையின் உடலை அதில் எடுத்து வைத்து வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள்.

தனபாக்கியம் தலைவிரி கோலமாய் அழுது அரற்றியவாறு வண்டி கூடவே வந்தாள். வீட்டில் தரையில் முட்டி முட்டி அழுதாள். அவளோடு சேர்ந்து அழுவதற்குப் பெண்கள் கூடினார்கள்.

ஆண்கள் கூடி ஆக வேண்டிய காரியங்கள் அனைத்தையும் ஒழுங்காகச் செய்து முடித்தார்கள்.

“ஊம்ம். முத்துமாலை கதை முடிஞ்சுது!என்ன போக்குப் போனான் கரிக்கொல்லன்! இப்படி ஒரேயடியாகப் போயிருவான்னு யாரு நெனச்சா?” என்று சொல்லலானாள் தங்கராசுவின் தாய்.

அவள் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில், ஊர் சமாச்சாரங்கள் பலவற்றோடும், முத்துமாலை செத்துக் கிடந்த விவரத்தையும் சேர்த்து எழுதினாள்.

அந்த செய்தி தங்கராசுக்கு மிகுந்த வருத்தம் அளித்தது.

“முத்துமாலை அவனுடைய வழியில் நல்லதையே செய்துகொண்டிருந்தான். அவனுடைய முரட்டு சுபாவங்களினாலும் போக்குகளினாலும் முத்துமாலையின் நல்லதனங்கள் பிரகாசிக்காமலே இருண்டு விட்டன. அதே மாதிரி, அவன் எப்படிச் செத்தான் என்பதும் வெளிப்படையாகத் தெரியாமல் போய்விட்டது. இருட்டிலே வாழ்ந்து, இருட்டிலே செயல் புரிந்த முத்துமாலை இருட்டில் செத்துப்போனதும் பொருத்தம் தான்” என்று அவன் எண்ணிக்கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/21&oldid=1143568" இலிருந்து மீள்விக்கப்பட்டது