4

தங்கராசு வடக்கேயிருந்து வந்திருக்கிறான் என்று அறிந்ததும் அநேகர் அவனைப் பார்த்துப்போவதற்காக வந்தார்கள். அவனும் சொந்தக்காரர்கள், பெரியவர்களை அவரவர் வீட்டில் போய் பார்த்துவிட்டு வந்தான்.

யார் வந்து பேசினாலும், அல்லது எவரோடு அவன் பேசினாலும் பேச்சோடு, பேச்சாக முத்துமாலை விஷயமும் தலை தூக்கிவிடும். அவனைப்பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொன்றைச் சொன்னார்கள். எப்படியிருந்தாலும், முத்துமாலை அந்த ஊராரின் பேச்சுக்கு முக்கியமான ஒரு பொருளாக வளர்ந்திருந்ததை தங்கராசு புரிந்து கொண்டான்.

—அவன் நல்லவன்தான். குடிதான் அவனைக் கெடுத்துப் போட்டுது.

—குடிக்காத நேரங்களிலே முத்துமாலை ரொம்ப ஒழுங்காக நடந்து கொள்வான்.

—குடித்தாலும்தான் என்ன! தப்புத் தண்டாவுக்கு போகமாட்டான்.

—குடித்துவிட்டு ராத்திரி நேரங்களிலே கூச்சல் போட்டுக்கிட்டுத் திரிகிறான் என்கிறதைத் தவிர, அவனாலே மற்றபடி எந்தவிதமான தொந்தரவும் கிடையாது.

ஆரம்பத்திலே கொஞ்சம் ஒவராப் போனான். அரிவாளை வச்சுக்கிட்டு எல்லாரையும் மிரட்டினான். தன்னைப் பத்தி பயங்கரமான ஒரு அபிப்பிராயம் உண்டாக்குதற் காக அப்படிச் செய்திருக்கலாம். பிறகு போகப் போக அவன் யார் வம்புக்கும் போவதில்லை.

வந்த வம்பையும் விடமாட்டான். சில சமயங்களிலே அவன் மனசுக்கு நியாயம்னு படலேன்னு சொன்னா, அநாவசியமா மத்தவங்க வம்பிலே கூடத் தலையிடுவான்...

அப்படித்தான் ஒரு சமயம், கோயில் மாந்தோப்புக் குத்தகைக்காரன் ஒரு சின்னப் பையனிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டான். சில சிறுவர்கள் சேர்ந்து கொண்டு மாமரத்தில் கற்களை எறிந்து மாங்காய்களைத் தட்டியிருக்கிறார்கள். குத்தகைக்காரன் வருவதைக் கண்டதும் பையன்கள் சிட்டாய் பறந்தார்கள். ஆனால் ஒரு பையன் மாட்டிக் கொண்டான். அவன் மடியில் ஒரு மாங்காயும் இருந்துவிட்டது பாவம்.

அவன் ஒரு ஐயர் பையன். குத்தகைக்கார முரடன், அவனை உருட்டி மிரட்டினாலும் அடித்து உதைத்தாலும் தட்டிக் கேட்பதற்கு யாரும் கிடையாது என்பதைத் தெரிந்து வைத்திருந்தான். இந்தப் பையனைப் பயமுறுத்துவதன் மூலம் மற்ற சிறுவர்களுக்குப் பாடம் கற்பிக்க ஆசைப்பட்டான்.

சிறுவன் கைகளில் நல்ல ‘பொச்சக் கயிரை’ கட்டி அவன் கால்களையும் கட்டி, அவனைக் கிணற்றினுள் இறக்கத் திட்டமிட்டான். எல்லாம் வேடிக்கை பார்க்க வாங்க என்று உற்சாகமாகக் கூவி, கும்பல் சேர்த்தான். பையன்கள், பெண்கள் பெரிய ஆட்களாகப் பலர் கூடிவிட்டார்கள். கல்லெறிந்து விட்டு ஓடிய சிறுவர்களில் அநேகர் கூட பம்மிப் பம்மி வந்து கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து நின்றார்கள்.  தோப்புக் குத்தகைக்காரன், அகப்பட்டுக் கொண்ட எலிக் குஞ்சை கொப்பரைத் தண்ணீருக்குள் முக்கி முக்கி எடுப்பதுபோல ஐயர் பையனை ஆழக் கிணற்றினுள் இறக்கியும் மேலே தூக்கியும் கயிற்றை ஊஞ்சலாட்டியும் விளையாடினான்.

பையன் பயந்து நடுங்கினான். “ஐயா, ஐயா, கிணத்திலே போட்டிராதிங்க. மன்னிச்சிடுங்க. தெரியாமப் பண்ணிட்டேன். இனி மாமரத்துப் பக்கத்திலே மறந்துபோய் கூடப் போக மாட்டேன்” என்று அலறினான்.

தோப்புக்காரனுக்கு குஷி பிறந்தது, “ஏ, தண்ணிக் குள்ளே முக்கப் போறேன். ... கயிறை விட்டிரப் போறேன்” என்று வேகமாக ஆட்டினான்.

பையன் பயந்து அலறினான்.

தோப்புக்காரன் சிரித்தான். “ஏஹேய், ஐயரே ரெண்டரே, அமுக்கிப் புடிச்சாஒண்னரே! பையன்களா, எல்லாரும் சேர்ந்து பாடுங்க! ஐயரே ரெண்டரே, அமுக்கிப் புடிச்சா ஒண்ணரே” என்று ராகம் போட்டுக் கத்தினான்.

அவனுக்கு வேண்டிய பையன்கள் அதைக் கோரஸாக எதிரொலித்தார்கள்.

அந்தச் சமயத்தில்தான் முத்துமாலை அங்கே வந்து சேர்ந்தான். அவன் வளர்ந்து பெரியவனாகி, பெயர் பெற்றுச் சில வருடங்கள் ஆகியிருந்த சந்தர்ப்பம் அது. நிலைமையைப் புரிந்து கொண்டான். கிணற்றினுள் தொங்கிய பையனின் பரிதாபகரமான தோற்றம் அவன் மனசைத் தொட்டது.

“ஏ செல்லையா, இதென்ன வேலை? ஒரு மாங்காய்க்காக இந்த பையனைக் கொல்லணுமா? மேலே துாக்கு அவனை” என்று கூப்பாடு போட்டான். “எல்லோரும்  வேடிக்கை பார்த்து நிக்கிறீங்களே, வெட்கமாயில்லே? அந்தப் பையன் நிலையிலே உங்க மகனோ, பேரனோ இருந்தா, இப்படிச் சும்மாகூடி வேடிக்கை பாப்பீங்களா?” என்று கூட்டத்தைப் பார்த்துக் கத்தினான் முத்துமாலை.

“இவனை சாகடிக்கவா போறேன்? சும்மனாச்சியும் பயம் காட்டலாமேன்னு”

“பயத்தினாலே அவன் செத்துப் போவான் போலிருக்கு. சீக்கிரம் தூக்கு மேலே” என்று முத்துமாலை அவசரப்படுத்தினான்.

தோப்புக்காரன் சிறுவனை மேலே தூக்கி, கட்டுகளை அவிழ்த்து விட்டான். அவன் கிணற்றுத் துவளத்தின் அருகில் நின்றபோது அவன் எதிர்பாராத நிலையில், முத்துமாலை குத்தகைக்காரனைப் பிடித்து உலுக்கி கிணற்றுப் பக்கமாகத் தள்ளினான்.

செல்லையா பதறிப் போனான். அவன் உள்ளே விழுத்திருக்க வேண்டியவன்தான். முத்துமாலையே அவனைப் பிடித்துக்கொண்டான். அவனுடைய உடல் நடுங்கி கொண்டிருந்தது.நெஞ்சு படக் படக் கென்று அடித்தது. நிஜமாகவே அவன் பயந்துவிட்டான். “என்னய்யா இது! ஒரு வேளையைப் போல ஒரு வேளை இருக்குமா? இசை கேடா தான் உள்ளே விழுந்திருந்தால்” என்று குறை கூறினான்.

முத்துமாலை சிரித்தான். “பெரியவனான உன் பாடே இப்படின்னா, அந்தச் சின்னப் பையனுக்கு எப்படி இருந்திருக்கும்? நீ இப்ப சொன்னது அவனுக்கும் பொருந்தும் இல்லையா? உனக்கு ஒரு பாடம் கற்பிக்கத்தான் இப்படிச் செய்தேன்” என்றான்.

குத்தகைக்காரன் அதன் பிறகு முத்துமாலையை விரோதியாக பாவித்துத் திரிந்தான். அதைப் பற்றி முத்து மாலை கவலைப்படவும் இல்லை,  இந்த நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற தங்கராசு முத்து மாலையின் போக்கை எண்ணி வியந்தான்.

முத்துமாலை எதற்கும் துணிந்தவன் என்று ஒருவர் சொன்னார்.

ஒரு தடவை சிலபேர் ஜாலியாகப் பந்தயம் பேசிப் பொழுது போக்கினார்கள். ‘அதைச் செய்வையா’ ‘இதை செய்து போடு பார்ப்போம்’ என்று பேசினார்கள். ஒருவன் சொன்னான். “அமாவாசை ராத்திரி சுடுகாட்டுக்குப் போயி, அங்கே நிக்கிற ஆலமரத்திலே ஆணி அடிச்சிட்டு வந்திரனும். அப்படி அடிக்கிறவனுக்கு நான் பத்து ரூபா தரத் தயார்.”

யாரும் துணிய மாட்டார்கள் என்ற எண்ணம் அவனுக்கு. பகல் வேளையிலேயே சும்மா அந்தப் பக்கம் போக அஞ்சுவார்கள். ஆலமரத்தில் பேய் இருக்கு, சுடுகாட்டு முனியன், பொல்லாதவன் ஒரே போடாப் போட்டிடுவான் என்றெல்லாம் நம்பினார்கள். சங்கிலிக்கறுப்பு குடியிருக்கிறது.கொஞ்சம் பயந்தாலே லபக்குனு புடிச்சுக்கிடும், வீட்டிலே வந்து படுத்தால் அவ்வளவு தான். ஆள் குளோஸ் என்றும் சொல்லிக் கொள்வார்கள். இந்நிலையில் அமாவாசை ராத்திரி எவன் போக முன் வருவான்?

அனைவரும் சாக்குப் போக்குச் சொன்னார்கள். ஒருவன், ‘முத்துமாலை, நீ பெரிய சூரன்னு சொல்றாங்களே? நீ இதைச் செய்வியா?’ என்று சீண்டினான்.

“பந்தயப் பணத்தை கொடுத்திரனும், ஏமாற்றப் படாது” என்றான் முத்துமாலை.

“நீ இதை செய்திட்டா, நான் என் மீசையை எடுத்திருவேன்” என்றான் அவனைச் சீண்டியவன்.

“உனக்கு மீசை இருந்தாலும் ஒண்னுதான், இல்லாட்டியும் ஒண்ணுதான். சுப்பய்யா சொன்ன பத்து ரூபா  யோட, நீயும் அஞ்சு ரூபா தருவியா?” என்று முத்து மாலை கேட்டான்.

“ஓ, ரெடியா!” என்றான் மற்றவன்.

அமாவாசை இரவு.முத்துமாலையின் ‘பேமஸ்’பாட்டு கோட்டைக்கொத்தளம் மீதிலேறி தொடர்ந்து ஒலித்தது சுடுகாட்டு ரோடில் கேட்டுக் கொண்டேயிருந்தது.

அந்தப் பாட்டை பாடியவாறே அவன் சுடுகாட்டுக்குப் போனான்.குறிப்பிட்ட ஆலமரத்தில் பெரிய ஆணி ஒன்றை நிதானமாக அறைந்தான். பாடிக்கொண்டே திரும்பினான்.

மறுநாள், சம்பந்தப்பட்டவர்கள் கும்பலாய் போய் பார்த்தார்கள். ஆணி அழுத்தமாக அடிக்கப்பட்டிருந்தது. அனைவரும் ஆச்சர்யத்தோடும், ஒருவித மதிப்போடும், முத்துமாலையைப் பாராட்டினார்கள்.

முதலில் பந்தயம் கூறியவன் மறு பேச்சுப் பேசாமல் பத்து ரூபாயை எடுத்து முத்துமாலையிடம் கொடுத்து விட்டான்.

எடக்குப் பேசியவன் பின்வாங்கினான். “அதுதான் அண்ணாச்சி கொடுத்திட்டாகளே. அவாள்தானே பந்தயத்துக்குக் கூப்பிட்டாக” என்றான்.

“ஏ மீசை! நீ மீசையை எடுத்திடுவேன்னு சொன்னே உன் மீசை எனக்கு வேண்டாம், அஞ்சு ரூபா தருவியான்னு கேட்டேன். நீயும் சாீன்னியே” என்று முத்துமாலை அதட்டினான்.

“கந்தா, கொடுத்திருடே” என்று மற்றவர்களும் சொன்னார்கள்.  கந்தன் மழுப்பினான். பணம் கொடுக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை என்று தெரிந்தது

முத்துமாலையா சும்மா விடுவான்? அவன் மீசையைப் பிடித்து ஒரு சுண்டு சுண்டினான், ‘ஐயோ அம்மா’ என்று வேதனையினால் அலறினான் கந்தன்.

மேலும் இழுத்துச் சுண்டினான் முத்துமாலை. சில ரோமங்கள் அவன் கையோடு வந்தன.

“நீ ரூபா தரத் தயாராயில்லே. நீ சொன்னபடியே மீசையை எடுத்திரலாம். நானே அதை எடுக்கிறேன்” என்று மறுபடியும் வேகமாய் பலமாகப் பிடித்து இழுத்தான் முத்துமாலை.

கந்தன் வலி பொறுக்கமாட்டாமல் கத்தினான். “விட்டிரு, விட்டிரு, முத்துமாலை ரூபாவை வாங்கிக்கோ” என்று கெஞ்சினான். ஐந்து ரூபாயைக் கொடுக்கவும் செய்தான்.

“இதை ஒழுங்கா முதல்லியே தந்திருக்கலாமில்லே?” என்று சிரித்தான் முத்துமாலை. சொன்னால் சொன்ன படி நடக்கணும். வார்த்தை மாறப்படாது. என்னை ஏமாத்தணுமின்னு நினைச்சா, நான் பொல்லாதவனாயிடுவேன். முத்துமாலை நல்லவனுக்கு நல்லவன், பொல்லாதவனுக்குப் பொல்லாதவன், ஆமா!” என்றான்.

இது போல் சிறு சிறு விஷயங்கள் பல தங்கராசுவின் காதுகளில் விழுந்தன. முத்துமாலை தனக்கு என்று சில கொள்கைகள் வச்சிருக்கான் போலிருக்கு என்று அவன் எண்ணிக்கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/4&oldid=1143547" இலிருந்து மீள்விக்கப்பட்டது