5

முத்துமாலையோடு பேசிய இரவுக்குப் பிறகு ஒவ்வொரு நாள் ராத்திரியும் தங்கராசு திண்ணையிலேயே வெகு நேரம் வரை தங்கலானான்.

“ராத்திரி ஏழு மணிக்கும் ஏழரை மணிக்கும் கதவை அடைச்சிக்கிட்டு வீட்டுக்குள்ளே முடங்கி விடுகிறது இந்த ஊர்க்காரங்களுக்கு உகந்த பழக்கமாக இருக்கலாம். எனக்கு அது ஒத்து வராது ராத்திரி பத்து மணி பத்தரை மணி என்று படுத்தே பழகிட்டேன்” என்று அவன் அம்மாவிடம் கூறினான்.

“இங்கே இருக்கிறவங்க நாங்க. ராத்திரி வேளையிலே என்னத்தைப்பண்ணப் போறோம்? எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்தே இருக்க முடியும்? குறுக்கு வலிக்கிறது தான் கண்ட பலன். படுத்துக் கிடந்தா கண்ணை மூடிக்கிட்டு இருந்தால், தூக்கம் வாறப்போ வந்திட்டுப் போகுது. இதுக்கு காசை கேட்குதா பணத்தைக் கேட்குதா !” என்று அவனுடைய அம்மா பார்வதி சொன்னாள்.

“உன் செளகரியப்படி செய்யி. ஆனா முத்துமாலை தெருவோடு வந்தால் அவன் வழிக்குப் போகாதே” என்றும் எச்சரித்து வைத்தாள்.

தங்கராக விளக்கை எரியவிட்டுக் கொண்டு ஏதாவது புத்தகம் அல்லது பத்திரிகையை வைத்துக்கொண்டு திண்ணையில் ஈஸிசேரில் சாய்ந்திருப்பதை வழக்கமாக்கினான். பத்தரை மணிக்கு வீட்டுக்குள் போய் படுத்தான்.  அவனுக்கே வியப்பாகத்தானிருந்தது. அவன் திண்ணையில் விழித்திருந்த சமயங்களில் முத்துமாலை அந்தக் கோட்டைத் தெரு வழியாக நடப்பதில்லை. அப்புறம் அந்த வழியே போனாலும் சத்தம் போடுவதில்லை; சீட்டி அடிப்பதுமில்லை.

இதை அவன் தனக்கு அளிக்கும் கெளரவமாகவே தங்கராசு மதித்தான். “பரவாயில்லே அவனும்,சில பாலிசிகளை கடைப்பிடிக்கிறான்!” என்று எண்ணி மனசுக் குள் சிரித்துக் கொண்டான்.

ஒரு ராத்திரி இரண்டு பேரும் பேசிக்கொண்ட பிறகு நான்கு நாட்கள் ஓடியிருந்தன. அன்று தங்கராசுக்கு படிப்பு ஒடவில்லை. கொசுக்கடி மிக அதிகமாக இருந்தது. அதனால் விளக்கை அணைத்து விட்டு ஈஸிசேரிலேயே சாய்ந்திருந்தான்.

வெளியே நிலவு நன்றாக இருந்தது. அதனால் வசீகரிக்கப்பட்டு அவன் முன்னே வந்து வாசல் படியில் நின்றான்.

அப்போது அந்த வழியாக முத்துமாலை வந்தான். திண்ணையில் விளக்கு வெளிச்சம் காணப்படாததனால், தங்கராசு வீட்டுக்குள் போயிருக்கலாம் என்று அவன் எண்ணியிருக்க வேண்டும்.

தங்கராசு வெளியே வந்து நடையில் நின்றதும். முத்துமாலை பேசாமல் போக விரும்பவில்லை. “என்ன ராசு விளக்கில்லாமல் இருக்கிறே?” என்று கேட்டான்.

“கொசுத் தொல்லை ஜாஸ்தியாப் போச்சு. அதனாலே விளக்கை அணைச்சிட்டேன்...” என்றான் தங்கராசு.

“ஆமா. இந்த ஊரிலே கொசுக்கள் ரொம்ப நிறையத்தான் இருக்கு!”  “கொசுவா, அது ஒவ்வொண்ணும் எத்தாத் தண்டி இருக்கு!”

“ஒலுங்கு அது பேரு. ஊசி குத்தறாப்பலே சுருக் சுருக்குனு கடிக்கும்” என்று முத்துமாலை விளக்கினான்.

“கொசு இல்லாத வேறு என்னென்னவோ ஜந்துக் கள்ளாம் பறந்து வருது. மொய்க்குது, பிச்சுப் பிடுங்குது. உடம்பெல்லாம் தடிப்பு தடிப்பா ஆயிடுது. இந்த ஊருக்காரங்க எப்படித்தான் துரங்குறாங்களோ தெரியலே!”

“பழகிப் போச்சு அதுதான் காரணம். முன்னாலெல்லாம் வயல்களிலே பயிர் இல்லாத காலத்திலேதான் ஊருக்குள்ளே கொசு அதிகமா வரும். வீட்டுக்குள்ளே எரு குச்சி செத்தையை எல்லாம் போட்டு தீக்கங்கை வச்சுப் புகை மூட்டம் போடுவாங்க, கொசுகுக செத்துப் போகட்டும்னு. வயலுகளிலே பயிர் வளர்ந்து கதிர் வச்சு, நெல்லிலே அன்னம் கோதியாச்சுன்னு சொன்னா, ஊருக்குள்ளே கொசு குறைஞ்சு போம். கொசுகுக வயல் காட்டிலே பயிர்களிலே கதிர்களில் ஊறுகிற பாலைக் குடிக்கப் போயிரும்னு சொல்லுவாங்க. பிறகு பிறகு என்னாச்சு? எல்லா நாட்களிலும் கொசு நிறைய ஊருக்குள்ளே வீடுகளிலே, மொய்ப்பதே சகஜமாப் போச்சு. அதுகளுக்கு கதிர்களிலே ஊறுகிற பாலோட ருசியை விட ஊரு ஆள்களின் உடம்பிலே ஒடுற ரத்தத்தின் டேஸ்ட்டுத்தான் ஜோராயிருக்கு போலிருக்கு!”

இதைச் சொல்லிவிட்டு முத்துமாலை சிரித்தான். தங்கராசும் லேசாகச் சிரித்து வைத்தான்.

“நீ மட்டும் தான் வந்திருக்கியா ராசு? வீட்டிலே புள்ளைகளை கூட்டி வரலையா?” என்று கேட்டான் முத்துமாலை.

“அவளும் புள்ளைகளும் அவ அப்பா வீட்டுக்குப் போயிருக்காங்க. கொஞ்ச நாள் கழிச்சு இங்கே வருவாங்க...” திடீரென்று முத்துமாலை பழங்கால நினைவோட்டத்தில் ஆழ்ந்தவனாகப் பேசினான். நீ எப்பவாவது எண்ணிப் பார்ப்பதுண்டா ராசு? ஒவ்வொருத்தன் வாழ்க்கை எப்படி எப்படியோ போயிடுது. சின்னவயசிலே பள்ளிக்கூடத்திலே நம்ம கூட ஒண்ணாச் சேர்ந்திருந்தவங்களைப் பத்தி நான் எப்பவாவது நினைக்கிறது உண்டு. பொன்னம்பலம் என்ன ஆகியிருப்பான் முத்தய்யா இப்போ எப்படி இருக்கானோ? சாமிக்கண்ணு எப்படி இருப்பான். அப்படீன்னெல்லாம் யோசனை போகும். பல வருசங்கள் ஒண்ணாக் கூடிப் பழகினோம். பிறகு பிரிஞ்சிட்டோம். ஒவ்வொருவர் வாழ்க்கை வெவ்வேறு திசையிலே போயிடுது. சின்ன வயசிலே பெரிசாக் கனவு கண்டவங்க, ஆசைப்பட்டவங்க, வாழ்க்கையின் நிஜத்தை அனுபவிக்கையிலே ரொம்பவும் மாறிப்போறாங்க. அபூர்வமா ஒருத்தன் ரெண்டுபேரை நாம அப்புறம் என்னைக்காவது பார்க்க முடியுது...ரொம்ப ஏமாற்ற மாயிடுது; இல்லைன்னா எதிர் பார்த்திராத ஒரு பெரும் திருப்பமா இருந்திருது!

“நடராசன்னு ஒருத்தன். ஒன்பதாம் வகுப்பு வரை ஒண்ணாப் படிச்சோம். அப்புறம் நான் படிக்கலே. அவன் ஹைஸ்கூல் படிப்பை முடிச்சான். ஒவ்வொரு வகுப்பிலும் அவன்தான் முதலாவதா இருப்பான். தமிழ், இங்கிலீஷ், கணக்கு—எல்லாத்திலியும் ஃபஸ்ட் மார்க் வாங்குவான். அவன் காலேஜ் படிப்பு படிச்சு நல்லா முன்னுக்கு வருவான்னு வாத்தியாரெல்லாம் சொன்னாங்க.”

“ஆனா, நடந்தது என்ன தெரியுமா தங்கராசு? பல வருஷத்துக்குப் பிறகு அந்த நடராசனை நான் சந்திக்க நேர்ந்தது. எங்கே தெரியுமா? சப்ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்லே, சாதாரண குமாஸ்தாவாக. பாரு! பெரிய புத்திசாலிப் பையன். நல்ல அறிவாளி. வெறுமனே ஈயடிச்சான் காப்பி வேலை பண்ற உத்தியோகம்னு கிண்டலாச் சொல்லு வசாங்களே, அந்த வேலை. பத்திரங்களப் பார்த்து எழுதிக் கொண்டே இருக்கிற கிளார்க்கு வேலை செய்யும் மிஷின் மனிசனாக மாறியிருந்தான்.”

“ஒளிமுத்துன்னு ஒருத்தன். சுமாராத்தான் படிப்பான். விட்டிலே வசதியும் கிடையாது. அப்பன் ஏதோ வித்து வியாபாரம் பண்ணி, தெருத்தெருவாகக் கூவி விக்கற வேலை பிழைப்பு நடத்துறவன். உபகாரச் சம்பளத்திலே படிச்சான் பையன். அவன் காலேஜுக்குப் போக மாட்டான்லு வாத்திகள்ளாம் சொன்னாங்க. ஆனா, அவன் பி.ஏ. படிச்சிட்டு ஏதோ ஒரு ஆபீசராவந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு அலைய முடிஞ்சிருக்கு! இதுக்கு என்ன சொல்றே?”

“பழனியப்பன்னு ஒரு நோஞ்சான் பையன். புல் தடுக்கி சாண்டோ, காத்தடிச்சாலே கீழே விழுற மாதிரி இருந்தான். அந்தக் காலத்திலே. ஆனா பையன், சிவப்பா அழகா இருப்பான். நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாலே அவனைப் பார்த்தேன். ஏயம்மா! எவ்வளவு வாட்ட சாட்டமா ஜம்னு இருந்தான்கிறே! சின்னப்பயலா, பயந்தாங்குளியா இருந்தவன் போலீஸ் இன்ஸ்பெக்டராகி மோட்டார் பைக்கிலே ஜாம் ஜாம்னு எடுப்பா மிடுக்கா அலைறான். பழைய பழனியப்பனா இவன்னு என்னாலே நம்பவே முடியலே.”

“இப்படி எத்தனையோ! இதை எல்லாம் நான் யோசிச்சுப் பார்ப்பேன். எல்லாமே வேடிக்கையாத் தோணும் எனக்கு. வாழ்க்கை மனுசங்களோடு விளையாடுது—மனுசங்களை வச்சு விளையாடுதுன்னு நினைக்கத் தோணும். சரி, நாமும் வாழ்க்கையோடு—வாழ்க்கையை வச்சு-விளையாட வேண்டியதுதான். வாழ்க்கையிலே சந்தோசமா இருக்கிறதுதான் முக்கியம்னு முடிவுக்கு வத்தேன்...” முத்துமாலை பேசப் பேச, தங்கராசுவின் மனம் வியம்பினால் அலைமோதியது. ‘ஆளுக்குள்ளே ஆளு எத்தனையோ ஆளு என்பாக, இந்த முத்துமாலைக்குள்ளும் அதிசயமான ஆளுகள் இருந்து அவனை ஆட்டிப் படைக்குது’ என்று நினைத்தான்.

சட்டென்று முத்துமாலை கேட்ட கேள்வியை அவன் எதிர் பார்க்கவில்லை.

“ஆமா, தங்கராசு, நீ இப்படி பழையவனுக, பழகினவங்களைப்பத்தி எண்ணுவியா? என்னைப்பத்தி எப்பவாவது நினைச்சது உண்டா?”

“நினைக்காம என்ன!” என்று மழுப்பலாகச் சொன்னான் தங்கராக.

அடுத்த கேள்வியும் அவனைத் திகைக்க வைத்தது, “திரிபுரசுந்தரி பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா, ராசு?” என்று கேட்டான் முத்துமாலை.

“திரிபுரசுந்தரியா?” சட்டென்று அவனால் நினைவு கூற இயலவில்லை.

“அவதான், நம்ம த்ரீ ஸைட் பியூட்டி! இந்த ஊர் தான்...”

இப்போது தங்கராசுவுக்கு வெளிச்சமாயிற்று. திரீ புரசுந்தரியை “த்ரீ ஸைடு பியூட்டி” என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள் பையன்கள். முன்னழகு—டூ லைடு ப்யூட்டி தானே? மூன்றாவது ஸைடு ஏது?” என்று ஒருவன். எடக்காகக் கேட்டான் ஒரு சமயம். “பக்கத்தோற்றம்—பக்கவாட்டிலே தென்படும் அழகு–ப்ரொஃபைல் ப்யூட்டி—அதுதான் தர்டு லைடு” என்று தங்கராசு பதில் கூறவும், பிரமாதமான அப்ளாஸ் கிடைத்தது. அது நினைவுக்கு, வந்தது. சிரித்தான். “தெரியாது முத்துமாலை. நான் இந்த ஊருக்கு ரொம்ப வருஷமா வராமலே இருந்திட்டேனா? எனக்கு எதுவுமே தெரியாமப் போச்சு ஆமா, அவளுக்கென்ன?” என்று கேட்டான்.

“ஒண்னுமில்லே. அவளுக்குக் கல்யாணமாச்சு. புருஷனுக்கு ஏதோ பிசினஸ்னு சொன்னாங்க. வடக்கே எங்கேயோதான் இருப்பதாகக் கேள்வி. அதுதான் நீ எங்காவது பாத்திருப்பியோ, தகவல் ஏதாவது தெரியுமோன்னு கேட்டேன்...சரி, நான் வாறேன்” என்று கூறி முத்துமாலை நகர்ந்துவிட்டான்,

—யாருடைய மனம் எப்படி வேலை செய்யும், எப்போது எப்படி நடந்துகொள்ளும்னு கண்டுகொள்ளவே முடியறதில்லே. மனித மனம்கிறது மர்மமான, அற்புதமான விஷயம்தான். இந்த முத்துமாலையை நினைக்க நினைக்க எனக்கு ஆச்சர்யம்தான் அதிகமாகுது!

தங்கராசுவின் மனம் கிளர்ச்சியுற்றிருந்தது அன்றிரவு அவன் சரியாகத் துாங்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/5&oldid=1143548" இலிருந்து மீள்விக்கப்பட்டது