இருண்ட வீடு/அத்தியாயம்-18


18

மஞ்சள் தாள் திருமணத்தாள் தானே வேறென்ன?

காகிதம் படிக்கையில் தலைவர் வருகிறார்.


அண்ணனும் தங்கையும் அருகில் நெருங்கியே
பிறந்தஊர்க் கதைகள் பேசலா னார்கள்.
"நமது வீட்டின் நாலாவது வீட்டுக்
கமலத் துக்குக் கண்ணாலம் என்று
காயிதம் வந்தது கண்டீரா" என்றுதன்
அண்ணனைக் கேட்டாள். அண்ணன் சிரித்துக்
கமலம் இறந்து கணக்கிலா நாட்கள்
ஆயின என்றான். அதுகேட்டு மங்கை
இல்லை அண்ணா இதோ பாருமென்று
மஞ்சள் உறைக்குள் வந்த அஞ்சலைக்
கொண்டு வந்து கொடுத்தாள். அதை அவன்
மேலுறை கிழித்து நாலு சொல் படித்தான்.
அதற்குள் காரும் பொதுக்கென்று வந்தது.
வீட்டுத் தலைவர் வீட்டில் நுழைந்தார்.
சாய்வுநாற் காலியில் சலிப்புடன் சாய்ந்தார்.
"ஐதாரப் பாக்கம் அவன்போய் விட்டான்
பணமும் போனது பற்றாக் குறைக்கோ
இன்று ரூபாய் இருபத் தைந்தும்,
பட்டினி யோடு பறந்து திரிந்த
தொல்லையும் வீணாய்த் தொலைந்தன" என்றான்.
அந்த நேரம் அண்ணன் அங்கே
திருமண அழைப்பை விரைவாய்ப் படித்தான்.

ஏட்டினில் இருந்த தென்னவென்றால்:
'அன்புடை யவரே அவ் வாசாமி
ஐந்து நாளில் ஐதாரப் பாக்கம்
போவதாய்த் திட்டம் போட்டிருக் கின்றான்
கடிதம் இதனை கண்டவுடனே
வந்தால் தொகையை வட்டியும் முதலுமாய்
வாங்கி விடலாம் வந்து சேரவும்
அங்கவன் போனபின் இங்குநீர் வருவது
விணே இங்ஙனம் வீரா சாமி”

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-18&oldid=1534760" இலிருந்து மீள்விக்கப்பட்டது