இருண்ட வீடு/அத்தியாயம்-17


17

மாலை ஏழு மணிக்கு காப்பி முடிகிறது.


அண்ணன் உடனே அருகி லிருந்த
உணவு விடுதியில் உண்டு வந்தான்.
குறட்டைத் தூக்கம், குழந்தையின் அழுகை
பெரியவன் உதடுகள் புரிந்த இன்னல்
இவற்றுடன் மாலை ஏழுமணி ஆயிற்று.



வேலைக் காரிகள் பாலைக் காய்ச்சி
நாலைந்து செம்பு நன்றாய்க் குடித்தபீன்,
தலைவியை எழுப்பித் தந்தார். குடித்தாள்
பெரியவன் குடிப்பது சரியல்ல என்றே
இருபணிப் பெண்டிரும் இருப்பதைக் குடித்தார்.
அருமையான அண்ணனை எழுப்பி
ஒரு செம்புக் காப்பி தரும்படி, தலைவி
இயம்பினாள். சங்கிலி எழுப்பினாள். எழுப்பி
காப்பி கீப்பி சாப்பிடு கின்றீரா
ஏற்பாடு செய்யவா என்று கேட்டாள்,
வேலைக்காரியின் விருப்பப்படி அவன்
வேண்டாம் என்று விளம்பி விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-17&oldid=1534759" இலிருந்து மீள்விக்கப்பட்டது