இருண்ட வீடு/அத்தியாயம்-23


23

வீட்டுக்காரி, பையன் தூக்கம்.


பெரிய பையன் பெட்டி யண்டையில்
கொரகொர வென்று குறட்டை ஏற
மெழுகுபோல அழுக்குப் படிந்த
தலையணை மீது தலையை வைத்து
விலகாது மூட்டை வெடுக்கென்று கடிப்பதும்
தோன்றா உணர்வோடு தூங்க லானான்.


ஈன்ற தாயோ ஈன்றகைப் பிள்ளையின்
அண்டையில் படுத்தாள். அலறிற்றுப் பசு;
வைக்கோல் போட மறந்தே னென்றே
ஓடி, வைக்கோல் தேடிப் போட்டு
நாடி வந்து நடுவிற் படுத்தாள்;
தெருவில் நாயும் குரைப்பது கேட்டுத்
தெருவின் கதவைச் சென்றுதாழ் இட்டாள்;
நாவாப்புக் குதிரை நாடு முழுதும்
சவாரி வந்து தரையில் புரளல்போல்
படுத்துப் புரண்டு பிடித்தாள் தூக்கம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-23&oldid=1534765" இலிருந்து மீள்விக்கப்பட்டது