இருண்ட வீடு/அத்தியாயம்-27


27

சாப்பாடு இல்லை என்று தெரிந்தபின்,

சாப்பிடமாட்டேன் என்று சத்தியம் செய்கிறார் தலைவர்


அமைவாய் விளக்கை அங்கையில் தூக்கிச்
சமையல் அறைக்குத் தாமே சென்றார்;
ஏனமெல்லாம் இறக்கி இறக்கிப்
பூனை போலப் புரட்டித் தள்ளிப்
பொரியற் சட்டியைப் போட்டு டைத்துச்
சரியல் சட்டியைத் தட்டென்று போட்டே
எண்ணெய்ச் சட்டியை எடுத்துச் சாய்த்து
வெண்ணெய்க் கலையம் விரியத் தள்ளிச்
சோற்றுப் பானை துடைக் கப்பட்ட தைக்
குழம்புச் சட்டி கழுவப் பட்டதைத்
தெரிந்து பசியோ, திகுதிகு என்றே
எரிவு கொள்ள, இழவே என்று
திறந்த வற்றைத் திறந்தே போட்டுப்
பெருச் சாளிக்குப் பிழைப்புண் டாக்கிக்
கூடத் தினிலே குந்திப் பார்த்துப்
பாடிப் பார்த்தும் படிந்து பார்த்தும்
எதுவும் நடவா தென்று தெரிந்தபின்
தலைவர் ஓர் உருதி சாற்றலானார்
சாப்பிட மாட்டேன் சத்தியம் என்று!

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-27&oldid=1534769" இலிருந்து மீள்விக்கப்பட்டது