இருண்ட வீடு/அத்தியாயம்-30


30

விளையாட்டுத் துப்பாக்கியை மெய்யானதென்று திருடன் நடுங்கினான்.

ஆனால் பையன், அவனை உண்மையுணரச் செய்துவிட்டான்.


அந்த வேளையில் அருமைத் தலைவி
'கள்ளனா?" என்று வெள்ளையாய்க் கேட்டாள்
கள்ளன் அதுகேட்டுக் கதவிற் பதுங்கினான்;
கைத்துப் பாக்கியைக் கண்டு நடுங்கினான்;
என்னைச் சுடாதீர்!" - என்று கூறிப்
பணத்தைக் கொடுத்துப் பயணப்படவும்
பண்ணினான் முடிவு! பையன் அப்போது
நிலைமை யாவும் நேரில் அறிந்தும்
பொய்த் துப்பாக்கியை மெய்த்துப் பாக்கி
என்று நினைக்கும் தன்னருந் தந்தையை
மடையன் என்றெண்ணி வாளாவிருந்தான்
"எடுத்ததை வைத்துப் பிடியடா ஓட்டம்
சுடுவேன் பாரடா சுடுவேன்" என்று
கைத்துப் பாக்கியைக் காட்டினார் தலைவர்.
அதுகேட்டுப் பெரியவன் அப்பா! அப்பா!
அத்துப்பாக்கி பொய்த் துப்பாக்கி;
தக்கை வெடிப்பது தானே என்றான்.
திருடனுக்கு - அச்சம் தீர்ந்து போயிற்று.

மெதுவாய் நடந்து வெளியிற் செல்கையில்
இதுவா தெருவுக்கு - ஏற்ற வழியென்று
திருடன் கேட்டுச் சென்று மறைந்தான்.
திருடன் கையோடு செல்வமும் மறைந்தது.
தலைவியும் பையனும் தலைவர் தாமும்
குலைநடுக் கத்தால் கூவா திருந்தனர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-30&oldid=1534772" இலிருந்து மீள்விக்கப்பட்டது