இருண்ட வீடு/அத்தியாயம்-31
31
திருடன் போனது தெரிந்த பின் தலைவர்க்கு எரிச்சல் வந்தது.
அந்த எரிச்சல் தலைவியைக் கொன்றது.
திருடன் அந்தத் தெருவை விட்டகன்றதை
ஐய மின்றி அறிந்த பின்னர்
தலைவர் அலறத் தலைப்பட்டார் : அடே
கொலைஞனே எனக்குக் குழந்தையாய் வந்தாய்
கைத்துப் பாக்கியால் கள்ளன் நடுங்கினான்
பொய்த்துப் பாக்கி பொய்த்துப் பாக்கி
என்றாய்; சென்றான் பொருளையும் தூக்கி
என்று கூறி எதிரில் இருந்த
சந்தனக் கல்லைச் சரேலென எடுத்துப்
படுத் திருந்த பையனை நோக்கி
எறிந்தார், பசியும், எரிபோல் சினமும்,
மடமையும் ஒன்றாய் மண்டிக் கிடந்த
தலைவன் எறிந்த சந்தனக் கல்லோ
குறிதவறிப் போய்க் கொண்ட பெண்டாட்டி
மார்பினில் வீழ்ந்தது மங்கை "ஆ" என்று
கதறினாள் அதுஅவள் கடைசிக் கூச்சல்!