இருண்ட வீடு/அத்தியாயம்-5


5

தலைவி, தலைவன் பேச்சு. பையனுக்கு மருத்துவம்.

சாணி ஒத்தடம்.


குறட்டி னின்று கோதை, உட்சென்றாள்;
கணவனின் எதிர் வந்து கையோய்ந்து குந்தினாள்


காலையில் புதுப்பேச்சுக் காண லாயினார்:
தன்னரு மனைவியைப் பொன்னிகர் கணவன்
"என்ன மணியடி?" என்று கேட்டான்.
சண்டி மணிப் பொறிக்குச் சாவி கொடுக்க
அண்டை வீட்டானை அன்றே அழைத்தேன்
வரவே இல்லை மாமா என்றாள்.
அந்த நேரம் அண்டை வீட்டுக்
கந்தன், குடையும் காலிற் செருப்புமாய்
வீட்டி னின்று வெளியிற் செல்வதைப்
பார்த்த கணவன் "பாரடி அவனை
அதற்குள் வேலை அனைத்தும் முடித்துக்
கடைக்குச் செல்லும் கருத்தை" என்றான்.
"வீடியா மூஞ்சி விடியு முன்பே
போனால் நீயும் போக வேண்டுமோ"
என்று கூறி இளிக்க லானாள்
பெரிய பையன் அருகில் வந்தான்
வடையும் கையும் வாயும் புண்ணுமாய்
நடைமெலிந் தேஅவன் நண்ணுதல் கண்டே
என்ன என்ன என்று கேட்டாள் தாய்

புன்னை அரும்புபோல் புதிதாய் முளைத்த
இரண்டு பற்கள் இல்லை என் றுரைத்தான்.
வீங்கிய உதட்டுநோய் தாங்கிலேன் ஒன்றான்.
உருண்டைச் சாணியை ஒருமுறை பூசினால்
மறு நொடி ஆறுமென்று மங்கை மருத்துவ
மறைநூல் வகுத்த வண்ணம் கூறினாள்
பிற காகட்டும் பிட்டைத் தின்பாய்
வேலைக் காரி விடிந்தபின் வருவாள்
பாலைக் காய்ச்சிப் பருகலாம் என்றாள்.
எட்டரை அடிக்கையில் இப்படிச் சொன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-5&oldid=1534746" இலிருந்து மீள்விக்கப்பட்டது