இருண்ட வீடு/அத்தியாயம்-6


6

பிட்டை நாய் தின்றது. மீண்டும் வாங்கிய பிட்டுக்குத்

தலைவர் தொடங்குகிறார் காலைக்கடன் கழிக்க!

புதிய பிட்டைத் தின்னப் பையன் உதடு இடந்தரவில்லை.


அழுமூஞ்சி பிட்டை அணுகினான். நாயும்
நழுவிற்றுப் பிட்டை நன்று தின்று!
தொட்டுச் சுவைக்கப் பிட்டில் லாமையால்
பெரிய பையன் சிறிய நரிபோல்
ஊழ் ஊழ் என்றே ஊளையிட்டிருந்தான்.
வீடு பெருக்கும் வேம்பு வந்தாள்!
சமையல் செய்யும் சங்கிலி வந்தாள்
கடைக் கென்றமைந்த கணக்கன் வந்தான்!
கூடத்து நடுவில் ஏடு விரித்தே
மறுபடி வாங்கிய வடையையும் பிட்டையும்
சங்கிலி படைத்தாள்; தலைவருக் காகவே!
பல்லைச் சுரண்டுவோர் பார்த்தார் அதனை
மெல்ல எழுந்தார், மெல்ல நடந்தார்.
காலைக் கடனைக் கழிக்கக் கருதினார்.
பிட்டையும் வடையையும், பெட்டியில் குந்திக்
கிட்ட இழுத்தான் கிழிந்தவாய்ப் பெரியவன்.
அவனுடல் கொஞ்சம் அசைந்தது. வாய் எயிறு
கவலை மாட்டின் கழுத்துப் போல
வீங்கி இருந்ததால் வெடுக்கன வலித்தது !
தாங்காது கையால் தடவிப் பார்த்தான்!
நோயையும் பெரியவன் நோக்க வில்லை !
வாயில் நுழைய வடைக்கு வழியில்லை !

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-6&oldid=1534747" இலிருந்து மீள்விக்கப்பட்டது