இறைவர் திருமகன்/இறைமகன் சென்ற திருவுலா
மேரி நறுமணத் தைலத்தால் இயேசு நாதரின் திருவடிகளைக் கழுவித் தன் கூந்தலினால் துடைத்த நிகழ்ச்சி நடந்ததற்கு மறுநாள் ஜெருசலம் நோக்கி இயேசுநாதர் புறப்பட்டார். தம் சீடர்கள் பின்தொடர அவர் ஆலிவ் மலையின் மீது நடந்து சென்றார். தம் சீடர்களில் இருவரை அவர் அழைத்து தமக்கு முன்னதாக விரைந்து செல்லச் சொன்னார்.
"அடுத்தாற்போல் இருக்கும் சிற்றூருக்குச் செல்லுங்கள். அவ்வூருக்குள் நுழைந்தவுடன் ஒரு சிறு கழுதை கட்டிக் கிடப்பதைக் காண்பீர்கள். இதுவரை மனிதர்கள் யாரும் ஏறிச் செல்லாத கழுதை அது. அதை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது ஏதாவது கேட்டால், பெருமானுக்கு அது தேவைப்படுகிறது என்று சொல்லுங்கள்.
அவர்கள் மறுப்புரைக்காமல் நேரே அதை இங்கே அனுப்பி வைப்பார்கள்” என்று கூறி அந்த இரு சீடர்களையும் அனுப்பினார்.
அந்த இரு சீடர்களும் ஆர்வத்தோடு விரைந்து சென்றார்கள். அரசர்களும் ஆண்டவனின் திருத்தூதர்களும் கழுதையின் மேல் ஏறிச்செல்வார்கள். அதுபோல் இயேசு நாதரும் ஜெருசலத்துக்குக் கழுதையின் மேல் ஏறிச் செல்லப் போவதால், இந்த முறை அவர் தம்மையே அரசராக அறிவித்து விடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் ஆர்வத்திற்குக் காரணம் இதுதான்.
இயேசுநாதர் குறிப்பிட்ட இடத்தில் கழுதை கட்டிக் கிடந்தது. கழுதைக்கு உரியவனிடம் பெருமானுக்கு அது தேவைப்படுகிறது என்று கூறியவுடன், அவன் மறுப்பெதுவும் கூறாமல் கழுதையை அவிழ்த்துச் செல்ல அனுமதித்தான். சீடர்கள் இருவரும் அதை நடத்திக் கொண்டு வந்து சேர்ந்தார்கள்.
சீடர்கள் தங்கள் மேல் சட்டைகளைக் கழற்றிக் கழுதையின் முதுகில் போட்டார்கள். இயேசுநாதர் அவற்றின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, மெல்ல மெல்ல முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தார். சீடர்கள் பின் தொடர்ந்து வந்தார்கள். ஜெருசலம் நெருங்க நெருங்க அவரைப் பின்தொடர்ந்து சென்ற கூட்டம் அதிகரித்தது. அம்மக்களில் சிலருக்கு முன்னிருந்த திருத்தூதர்களில் ஒருவர் வேதத்தில் மொழிந்திருந்த வாசகம் நினைவுக்கு வந்தது. உடனே அவர்கள், "டேவிட்டின் மைந்தர் வாழ்க இறைவன் பெயரால் வருபவர் அருளுக்குரியவரே! மேலானவர் வாழ்க!" என்று கூவினார்கள். உடனே கூடியிருந்த மக்கள் அனைவரும் அவ்வாழ்த்து மொழிகளைச் சேர்ந்து முழக்கினார்கள்.
மக்கள் கூட்டத்தினரில் பலர் முன்னால் ஓடிச் சென்று, தங்கள் மேல்சட்டைகளைக் கழற்றி தூசியும் புழுதியும் நிறைந்த அந்தப் பாதையில் வரிசையாய் விரித்தார்கள். ஓர் அரசருக்குரிய பாதையாக மாற்றுவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள். சிலர் மரக் கிளைகளை ஒடித்து இழுத்துவந்து வீதியின் இரு மருங்கிலும் கிடத்தினார்கள். ஒரு சிலர் நகரினுள் ஓடிச் சென்று அரசர் வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை அங்கிருந்தோர் அனைவருக்கும் விளம்பரப்படுத்தினார்கள். இச் செய்தியைக் கேட்டு. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூட்டங்கூட்டமாக அவரைச் சந்திக்க விரைந்து சென்றார்கள். குருத்தோலைகளை விரித்து ஆட்டி வரவேற்று, “டேவிட்டின் மைந்தர் வாழ்க" என்று முழங்கினார்கள்.
பெருமிதமான - வெற்றிகரமான அந்த ஊர்வலம் கோயில் வாசலில் சென்று சேர்ந்தது. இயேசுநாதர் கழுதையின் முதுகிலிருந்து இறங்கி அந்தப் பெரிய ஆலயத்தினுள் நடந்து சென்றார். எழுச்சி மிக்க அக்கூட்டமும் அவரைத் தொடர்ந்து ஆலயத்தினுள் நுழைந்தது.
"டேவிட்டின் மைந்தர் வாழ்க! டேவிட்டின் மைந்தர் வாழ்க!" என்று கூச்சலிட்டுக் கொண்டே குழந்தைகள் ஆலயத்தினுள் சென்றார்கள். ஆலயத்துக் குருமார்கள் ஆத்திரத்துடன் இயேசுநாதரை அணுகினார்கள். ஐயா, அவர்கள் என்ன சொல்கிறார்கள், கேட்டீர்களா? முதலில் அவர்கள் கூச்சலை நிறுத்துங்கள்” என்று அதிகாரத்தோடு கூறினார்கள்.
இயேசுநாதர் அதைப் பொருட்படுத்தவில்லை. குழந்தைகளைத் தடுக்க அவர் முற்படவில்லை. "குழந்தைகளின் மழலையிலிருந்து வெளிப்படுவதுதான் உண்மையான புகழ்ச்சியாகும்" என்று வேதத்தில் எழுதியுள்ளதை நீங்கள் படித்ததில்லையா? என்று அவர்களையே திருப்பிக் கேட்டார்.
குருமார்கள் மனத்திற்குள் அவரைச் சபித்துக்கொண்டே திரும்பிச் சென்றார்கள்.
இயேசுநாதரைப் பிடித்து அப்போதே அவருக்குச் சாவுத் தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம். ஆனால் அவரைத் தொடக்கூட அவர்களுக்குப் பயமாயிருந்தது. ஏனெனில் மக்கள் கூட்டம் அவர் பக்கமிருந்தது. எனவே இயேசுநாதருக்கு எதிராக மக்களைத் திருப்புவதில் அன்றுமுதல் அவர்கள் முனைந்தார்கள்.