இறைவர் திருமகன்/திருவடியில் நறுமணத்தைலம்
ஜெரிச்சோ நகருக்கும் ஜெருசலம் நகருக்கும் இடையில் குன்றுகள் நிறைந்திருக்கின்றன. இந்தக் குன்றுப் பகுதியில் பெத்தானி என்ற ஒரு சிற்றூர் இருக்கிறது. இந்தச் சிற்றூரில் இயேசுநாதரின் மூன்று நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் மார்த்தா, மேரி, லாசரஸ் என்போராவர்.
இயேசுநாதர் ஜெருசலத்திற்குப் போகும் போதெல்லாம், பெத்தானிக்குச் சென்று அந்நண்பர்களைப் பார்த்துவிட்டுப் போவது வழக்கம். அவர் வரும் போதெல்லாம், அவருக்கு நல்ல உணவுகளைச் சமைத்துப் படைத்து இன்பங் காண்பாள் மார்த்தா. அவர் லாசரசோடு பேசிக் கொண்டிருக்கும் போது கூட இருந்து கவனித்துக் கொண்டிருப்பாள் மேரி.
விருந்து விழாவிற்காக ஜெருசலம் செல்ல நேர்ந்த போது, பெத்தானியில் தங்கியிருந்து நாள்தோறும் ஜெருசலம் போய் வருவது என்று முடிவு செய்திருந்தார் இயேசுநாதர்.
இயேசுநாதர் வரும் செய்தியறிந்து முன்னதாகவே விருந்து தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள் மார்த்தா. இயேசுநாதருடன் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அவள் பல நண்பர்களையும், பன்னிரு சீடர்களையும் கேட்டுக்கொண்டிருந்தாள்.
மேரியோ துயரத்தோடு சிந்தனையில் ஈடுபட்டிருந்தாள். குருமார்கள் இயேசுநாதரின் மீது அழுக்காறு கொண்டிருந்தார்கள் என்று அவள் அறிவாள். ஜெருசலத்தில் அவருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று அவள் பயந்தாள். இயேசு நாதருக்கும் இது தெரியும் என்று அவள் நம்பினாள். துணிவுடன் அவள் அதைச் சந்திக்கப் போவது குறித்து அவள் வியந்தாள்.
இயேசுநாதர் மீது தான் கொண்டுள்ள அன்பையும் மதிப்பையும் எவ்வாறு வெளிப்படுத்துவது என்று அவள் சிந்தித்தாள். விருந்தினர் அனைவரும் வந்து சாப்பாட்டுக்கு உட்காரும் வரையில் அவள் காத்திருந்தாள். எல்லோரும் அவரவர் இடத்தில் வந்து அமர்ந்தபின் அவள் ஒரு சிறு போத்தலில் இருந்த நறுமணத் தைலத்தை எடுத்துச்சென்றாள். மெல்ல மெல்ல அவள் நடந்து சென்று இயேசு நாதரின் திருவடிகளில் அந்த நறுமணத் தைலத்தை ஊற்றினாள். பின்னர் தன் நீண்ட கூந்தலினால், அதைத் துடைத்தாள். இனிய நறுமணம் வீடெங்கும் நிறைந்து கமழ்ந்தது. இயேசுநாதர் குனிந்து பார்த்தார். மேரி தன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைக் கண்டார். தன் மீது அவள் கொண்டிருக்கும் மதிப்பைக் காட்டுவதற்காகவே அவள் இவ்வாறு செய்தாள் என்பதை அவர் புரிந்து கொண்டார்.
விருந்தினர் அனைவரும் மேரிக்கு இயேசு நாதரிடம் இருந்த அன்பினைக் கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் அவரின் பன்னிரு சீடர்களில் ஒருவனான ஜூடாஸ் இஸ்காரியட் என்பவன் இச்செயலைக் கண்டு தன் முகத்தைச் சுளித்தான்.
‘அந்த நறுமணத் தைலம் எவ்வளவு விலை யிருக்கும்' என்று அவன் எண்ணினான். அவன் பணத்தாசை கொண்டவன். 'காலடியில் இவ்வளவு விலையுயர்ந்த தைலத்தை அப்படியே போத்தலோடு கவிழ்த்து விட்டாளே; வீணாக்கி விட்டாளே; என்ன மூடத்தனம்!" என்று அவன் நினைத்தான்.
"முந்நூறு பென்சுக்கு அதை விற்றிருக்க முடியும். அவ்வாறு விற்றிருந்தால் எத்தனை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்!" என்று அவன் முணுமுணுத்தான்.
மேரியின் அன்பு நிறைந்த முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இயேசுநாதர் தம் கண்களை இருண்ட முகத்துடன் இருந்த அச்சீடனின் பக்கம் திருப்பினார்.
“அவளை ஒன்றும் சொல்லாதீர்கள். அவள் ஒரு நற்செயலையே புரிந்தாள். ஏழைகள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள். நீங்கள் நினைத்தபோது அவர்களுக்கு நன்மை செய்யலாம். ஆனால், நான் எப்போதும் உங்களுடன் இருக்க முடியாதே!” என்று கூறினார் இயேசுநாதர்.
தாம் உலகில் இருக்கும் நாள் அதிகமில்லை என்பதை இயேசுநாதர் உணர்த்தினார். ஆனால் இவ்வாசகங்களின் பொருளைச் சீடர்கள் புரிந்து கொள்ளவில்லை.