இறைவர் திருமகன்/இறைவனின் பிள்ளை இவரே
வீரர்கள் இயேசுநாதரைப் பொதுக் கூடத்திற்கு நடத்திச் சென்றார்கள். அங்கு எல்லாப் போர் வீரர்களும் வந்து அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.
அவர் உடுத்தியிருந்த ஆடைகளைக் கழற்றி விட்டு ஒரு சிகப்புத்துண்டை எடுத்து அவரைப் போர்த்தினார்கள்.
அரசர்களின் திருமுடியைப் போல் முள்ளினால் செய்து அதை அவர் தலையில் சூட்டினார்கள். அவரது வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்தார்கள். அவர் எதிரில் மண்டியிட்டு வணங்கி, "யூதர்களின் அரசரே, வாழ்க!" என்று கூவி நகையாடினார்கள்.
பின்னர் அவர்மேல் உமிழ்ந்தார்கள். கைக்கோலைப்பறித்து அதனால் அவர் தலையில் அடித்தார்கள்.
இந்தப் புன் செயல்களெல்லாம் முடிந்த பின் சிலுவையில் அறைய நடத்திச் சென்றார்கள். சைமன் என்ற ஒருவன் அவ்வழியாகச் சென்றான். அவனைப் பிடித்து வந்து கட்டாயப்படுத்தி அவரை அறைவதற்குரிய சிலுவையைத் தூக்கிக் கொண்டு வரச் செய்தார்கள்.
ஜெருசலம் நகருக்கு வெளியில் கல்வாரிக் குன்றில் சிலுவையை நாட்டி அதில் அவரை அறைந்தார்கள். உயிரோடு சிலுவையில் அறையப் பெற்ற அவருடைய தலைக்கு மேலே “இவர் தான் இயேசு; யூதர்களின் அரசர்" என்று எழுதி வைத்தார்கள். அவருக்கு வலதுபுறத்திலும் இடது புறத்திலும் நாட்டிய சிலுவைகள் இரண்டிலும் இரண்டு திருடர்களை அறைந்து வைத்தார்கள்.
"கடவுளின் மகனாக இருந்தால் நீ இந்தச் சிலுவையிலிருந்து இறங்கிவா!" என்று கூறி நகையாடினார்கள் அந்த வீரர்கள்.
“இவர் மற்றவர்களைக் காப்பாற்றினார்; தம்மைக் காத்துக் கொள்ள முடியவில்லை. இவர் இஸ்ரேலின் அரசராயிருந்தால், சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும்! அப்படி வந்தால் நாம் இவரை நம்புவோம். கடவுளின் மகனல்லவா இவர். அந்தக் கடவுள் தன் மகனை இப்போது சிலுவையிலிருந்து விடுதலை செய்யட்டும்” என்று பலபலவரறு ஆத்திரத்தோடு பேசினார்கள் குருமார்கள்.
இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட ஆறாவது மணி நேரத்தில், பெரிய பெரிய மேகங்கள் யாவும் கீழிறங்கி வந்தன. அவை கதிரவனை மறைத்தன. எங்கும் கனத்த இருள் சூழ்ந்தது. தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கும்பல் அஞ்சி நடுங்கி ஜெருசலம் நகருக்குத் திரும்பியது.
மூன்றுமணி நேரம் இருள் உலகைக் கவ்விக் கொண்டிருந்தது.
இறுதியில் "இறைவா என் வேலை முடிந்தது. உன் கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன்." என்று இயேசுநாதர் மகிழ்ச்சியோடு கூவினார். அதே நேரத்தில் பூமியதிர்ந்தது. பாறைகள் வெடித்தன. ஜெருசலம் ஆலயத்துத் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது.
அவர் அருகில் காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோமானிய வீரன் " உண்மையில் இந்த மனிதன் கடவுளின் பிள்ளைதான் " என்று தன் வாய்க்குள் கூறிக்கொண்டான்.
இயேசுநாதரின்பால் அன்பு மிகவுடையவனான ஜோசப் என்னும் செல்வன், பாண்டியஸ் பைலேட்டிடம் சென்று அவருடைய உடலை ஒப்படைக்கும்படி கேட்டான். பைலேட் அவ்வாறே கட்டளையிட்டான்.
அந்திப் பொழுதில் ஜோசப்பும் மற்றோர் அன்பனான நிககேடெமசும் அவர் உடலைத் தூக்கிக் கொண்டு ஒரு மலைக் குகைக்குச் சென்றார்கள். அவர்களைத் தொடர்ந்து, மேரியன்னையும், மேரிமக்தலேனாவும் வேறு சில பெண்மணிகளும் சென்றார்கள். அக்குகையின் உள்ளே அவருடைய உடலைக் கிடத்தி, கடைசியாக ஒரு முறை பார்த்து விட்டு அவர்கள் திரும்பினார்கள். ஒருபெரும் பாறாங்கல்லால் அந்தக் குகை வாயில் மூடப்பட்டது.
மறுநாள் ஆலயத்துக் குருமார் பைலேட்டைத் தேடிக் கொண்டு சென்றார்கள்.
“ஐயா, அந்த ஏமாற்றுக்காரன் தான் இறந்த மூன்றாவது நாள் மீண்டும் எழுந்திருப்பேன் என்று சொல்லியிருக்கிறான். அதனால் அவன் சீடர்கள் உடலைத் திருடிச் சென்று அப்புறப்படுத்திவிட்டு, செத்தவன் எழுந்துவிட்டதாகக் கதைகட்டிவிடுவார்கள். ஆகவே, அந்தக் கல்லறைக்குக் காவல் போட வேண்டும்” என்று கூறினார்கள்.
காவல் வைப்பதாக ஆட்சித் தலைவன் கூறியவுடன், அந்தக் குருமார்கள் மனநிறைவுடன் திரும்பினார்கள்.
அவர்களுக்குக் கூறியவண்ணம் காவலுக்கு ஏற்பாடு செய்தான். அவர்களே நேரில் சென்று குகை வாயிலை அடைத்துக் கொண்டிருந்த பாறையில் முத்திரை வைத்து விட்டுச் சென்றார்கள்.