இறைவர் திருமகன்/என்றும் அன்பரோடு இருப்பவர்

18. என்றும் அன்பரோடு இருப்பவர்

ஞாயிற்றுக் கிழமை காலையில் மேரியும் மேரிமக்தலேனாவும் கல்லறையைப் பார்த்து வருவதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அப்போது ஒரு பெரும் பூகம்பம் ஏற்பட்டது. இறைவனின் தூதன் விண்ணுலகிலிருந்து இறங்கி வந்து குகைவாயிலை மூடிக் கொண்டிருந்த பாறையைப் புரட்டினான். அதன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டான்.

அவனைக் கண்ட காவல் வீரர்கள் அஞ்சிச் செத்தவர்கள் போல் ஆகிவிட்டார்கள்.

குகையை நோக்கி வந்த பெண்மணிகளைப் பார்த்த தேவதூதன், "அஞ்சாதீர்கள். சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரைத் தேடிக் கொண்டு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். அவர் இப்போது இங்கு இல்லை அவர் எழுந்து சென்றுவிட்டார் வாருங்கள்; அவர் கிடந்த இடத்தை வந்து பாருங்கள்.

"செத்தவர்களிருந்து அவர் எழுந்துவிட்டார் என்ற இச் செய்தியை அவரின் சீடர்களிடம் கூறுங்கள். அவர் கலீலிக்குச் சென்றுள்ளார். அங்கே நீங்கள் அவரைக் காணலாம்."

தேவதூதன் கூறிய இச் செய்திகளைக் கேட்டு அச்சமும் மகிழ்ச்சியும் ஒருங்கே அடைந்த அப்பெண்மணிகள் மற்ற சீடர்களைத் தேடி விரைந்து சென்றார்கள்.

அவர்கள் மற்ற சீடர்களைத் தேடிச் சென்ற போது இயேசுநாதர், "யாவரும் வாழ்க!” என்று கூறிக் கொண்டே அவர்களைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் திருவடியைப் பற்றிக் கொண்டு வணங்கினார்கள்.

"அஞ்சாதீர்கள்! கலீலிக்குச் செல்லுமாறு என் அன்பர்களிடம் கூறுங்கள். அங்கு அவர்கள் என்னைக் காணலாம்" என்று கூறினார்.

அப்பெண்மணிகள் சீடர்களைத் தேடிச் சென்று கொண்டிருந்த போது காவலுக்கிருந்த வீரர்களில் சிலர் ஓடிச்சென்று குருமார்களிடம் நடந்ததெல்லாம் கூறினார்கள்.

குருமார்கள் அந்த வீரர்களிடம் நிறையப் பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள். “அந்த மனிதனுடைய சீடர்கள் இரவில் வந்து, நீங்கள் தூங்கும் போது அவர் உடலைத் திருடிக் கொண்டு போய் விட்டதாகச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அந்தக் காவல் வீரர்களும் அவ்வாறே செய்தார்கள்

இயேசுநாதரின் பதினொரு சீடர்களும், அவர் குறிப்பிட்டபடி கலீலியில் ஒரு மலையில் சென்று அவரைச் சந்தித்தார்கள். அவரைக் கண்டவுடன் அவர்கள் வணங்கினார்கள். அப்படியும் அவர்களில் சிலருக்கு ஐயமாகவே யிருந்தது.

“விண்ணுலகிலும் மண்ணுலகிலும் எல்லா அதிகாரமும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் இப்போதே புறப்படுங்கள். எல்லா நாடுகளிலும் என் போதனைகளைப் பரப்புங்கள். எல்லாருக்கும் தந்தையான இறைவன் பெயராலும், அவர் மகனாகிய என் பெயராலும், புனிதஆவியின் பெயராலும், எல்லாருக்கும் திருமுழுக்குச் செய்து வையுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ள எல்லா நன்னெறிகளையும் யாவருக்கும் போதியுங்கள். நான் எப்போதும் உலக முடிவுகாலம் வரையிலும் உங்களுடனே இருப்பேன்! அவ்வாறேயாகுக!” என்று கூறிச் சென்றார் இயேசு நாதர்.