இலக்கியத்தின் எதிரிகள்
← | இலக்கியத்தின் எதிரிகள் எழுதியவர்: ம. பொ. சிவஞானம் |
→ |
இலக்கியத்தின் எதிரிகள்
தொகுஏதேனும் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது பெரியார் ஈ.வெ.ராவுக்கு வழக்கமாகி விட்டது. காரண காரியத்தோடு எதிர்ப்பு நடத்தப்பட்டால் அதைப்பற்றிக் குறை கூறுவதற்கில்லை. ஆனால், காரண காரியம் இல்லாமலே சுய விளம்பரத்திற்காக எதிர்ப்பு இயக்கம் நடத்துவது குறைமட்டுமல்ல குற்றமுமாகும்.
பெரியார் ஈ.வெ.ரா, அரசியலில் நல்ல அனுபவமுடையவர். சமூக சீர்கேடுகளைப் பற்றியும் வெகுவாக ஆராய்ந்திருக்கிறார். இந்த இரண்டு துறைகளிலும் அவருடைய திறமைக்கு இன்னொருவரை ஈடாகச் சொல்லமுடியாது. ஆம், அந்த திறமையை வேண்டுமென்றே தீய வழியில் பயன்படுத்துகிறார் என்று குற்றம் சொல்லலாம். ஆனால் திறமையைக் குறை கூற முடியாது. இலக்கியத்துறையில், அதுவும் ஆராய்ச்சி வழியில் ஈ.வெ.ராவுக்குப் போதிய பயிற்சியோ அனுபவமோ இருப்பதற்கில்லை. பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பற்றியே அவருக்கு நல்லெண்ணம் கிடையாது. பழமை எனப்படும் அனைத்துமே பயனற்றவை: தீயிலிட்டுப் பொசுக்கப்பட வேண்டியவை என்பது அவருடைய திடமான கருத்து.
ஆகவே, தமிழ்க்காப்பியங்களில் நல்லெண்ணமும் நம்பிக்கையுமில்லாத ஈ.வெ.ராவுக்கு அவற்றைப்பற்றி ஆழ்ந்த அறிவோ அனுபவ ஞானமோ இருக்குமென்று எப்படி நம்பமுடியும்?
ஆயினும், இலக்கியத் துறையில் எல்லாம் உணர்ந்தவர் போல அடிக்கடி அபிப்பிராயம் கூற முற்படுவதும், 'ஆராய்ச்சி' என்ற பெயரால் ஆபாசக் கருத்துக்களை வெளியிடுவதும் ஈ.வெ.ரா-வுக்குத் தொழிலாகிவிட்டது. வேறு வேறு துறைகளில் அவருடைய கருத்துக்களையும் செயல்களையும் வரவேற்பவர்கள் கூட இலக்கியத் துறையில் அவருடைய போக்கை எற்றுக் கொள்வதில்லை.
இப்போது ஈ.வெ.ரா., கம்பராமாயணத்தையும் அதில் கடவுளாக வர்ணிக்கப்படும் ராமனையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப்புறப்பட்டிருக்கிறார். முன்னொரு முறையும் அவர் கம்பராமாயன எதிர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், கண்டனக் கணைகள் உடலைத் துளைத்ததால் அப்போதைக்கு எதிர்ப்பைக் கைவிட்டு விட்டார். இப்போது அரசியல் துறையில் அவருடைய வட்டாரத்திற்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டு விட்டது. பொருளாதாரத் துறையோ அவருக்குப் புரியாத விஷயம். பூர்ஷூவாக்களின் நண்பரான அவருக்கு அது பிடிக்காத விஷயமுமாகும். சமூக சீர்திருத்தத் துறையிலும் அவருடைய 'சரக்குகளு'க்கு மார்க்கெட் இல்லை. ஆகவே, இடைக்கால இயக்கமாக கம்பராமாயண எதிர்ப்பு நாடகத்தை நடத்தப் புறப்பட்டிருக்கிறார். அதற்கு ஆரம்ப ஒத்திகையாக ராமன் சிலைகளை உடைக்கப் போகிறாராம்.
சிலை உடைப்பு ஒரு புறம் இருக்கட்டும். கம்ப ராமாயணத்தை எதிர்ப்பதற்கு அவர் கூறும் காரணங்களை ஆராய்வோம். அயோத்தி ராமனை 'மன்னன்' என்று மட்டுமே வால்மீகி சொன்னாராம். ஆனால், தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர் ராமனைக் கடவுளாக்கி விட்டாராம். ஆகவே வால்மீகி ராமாயணப் பிரச்சாரம் செய்வதின் மூலம் கம்ப ராமாயணத்தின் கடவுள் தன்மையை எதிர்க்கப் புறப்பட்டிருக்கிறார் ஈ.வெ.ரா.
ராமன் சாதாரண மன்னனா? சர்வ லோகத்தையும் படைத்துக் காத்து அருள் புரியும் கடவுளா? இந்த விவாதத்தில் நான் இங்கு ஈடுபடப்போவதில்லை. அது சமயப் பிரச்சாரகர்களின் வேலை. ஆனால், தமிழ் மக்களுக்கு ராமனைக் கடவுளாக அறிமுகப்படுத்திய முதற் கவிஞர் கம்பர் அல்லர். அவருக்கு முன்பே அகில இந்தியாவிலும்-ஏன்? நமது தாயகமாம் தமிழகத்திலும் ராமன் கடவுளாகவே கருதப்பட்டு வந்திருக்கிறான்.
சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ, கம்பருக்கு முற்பட்டவர். ஆம். கம்பர் தோன்றி ராமாயணத்தைத் தமிழில் எழுதுவதற்கு முன்பே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றிக் கொடுத்திருக்கிறார். அந்தச் சிலப்பதிகாரமும் ராமனைக் கடவுளாகவே கூறுகிறது
மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே
என்ற வரிகள் சிலப்பதிகாரத்துள் ' ஆய்ச்சியர் குரவை'யில் வருகின்றன. இவ்வரிகளில் இராமன் 'திருமால்' என்ற தெய்வமாகவே அறிமுகப்படுத்தப் படுகின்றான். மற்றும் 'ஊர்காண்காதை'யில்,
தாதை யேவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ
என, கவுந்தியடிகள் ராமனைப் பற்றிக் கோவலனிடம் கூறுமிடத்து, "அவர் நான்முகனைப் பெற்ற திருமால்" என்றே தெரிவிக்கின்றார். மற்றும், ராமன் கடவுள் என்பது தமிழகத்தின் புது மொழியல்ல; நெடுமொழி. அதாவது; நீண்ட காலமாகவே தமிழ் மக்களிடையே இருந்துவரும் நம்பிக்கை என்றும் கவுந்தியடிகள் கூறுகின்றார்.
பெரியார் ஈ.வெ.ரா சிலப்பதிகாரத்தைக் கருத்தூன்றிப் படித்திருப்பாராயின், ராமனைக் கடவுளாக்கியது கம்பர்தான் என்று கூற மாட்டார்.
சிலப்பத்காரத்துக்கு முன்பே இயற்றப்பட்ட சங்க இலக்கியங்களில் கூட ராமனைப்பற்றிய செய்திகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றிலும் ராமன் வழிபடும் கடவுளாகவே வர்ணிக்கப்படுகின்றான்.
கடவுள் மனித உடல் தாங்கி மண்ணுலகில் பிறப்பதில்லை என்பது மதவாதிகளும் அறிந்த உண்மைதான். ஆனால்; மண்ணுலகில் வாழ்வாங்குவாழ்ந்த மனிதர்களை விண்ணுறையும் தெய்வமாக எண்ணுவது மதவாதிகளின் மரபு. அந்த மரபு வழிதான் மண்ணாண்ட மன்னனான ராமபிரான் தம்முடைய ஒழுக்கம், உயர்குணம், ஏகபத்தினி விரதம், அரக்கத் தன்மையை அழித்த ஆற்றல், அரசுரிமையைத் துறந்த தியாகம் ஆகியவற்றிற்காகத் தெய்வமாக எண்ணப்பட்டான். பெரியார் ஈ.வெ.ரா. போற்றிப்புகழும் திருக்குறளும்,
வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
என்றே கூறுகின்றது. இதற்காக ஈ.வெ.ரா. திருக்குறளுக்கும் தீ வைப்பாரா? அல்லது இந்தக் குறளை யேனும் எடுத்தெறிவாரா? முடியாதே!
சிலப்பதிகாரத்துள் கதாநாயகியான கண்ணகிதேவி மனித வடிவந்தாங்கி மாநாய்க்கனுக்கு மகளாய்ப் பிறந்தவள்தான். ஆயினும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து பெண்ணுலகத்திற்குப் பெருமை தேடிய காரணத்தால் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டாள்.
"அயோத்தி வேந்தன் தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்து வாழ்ந்ததாக ராமாயணம் கூறுகின்றதே, இது அடுக்குமா? பெண்ணுலகம் அங்கீகரிக்குமா?" என்றெல்லாம் கேள்வி கேட்டு அங்கலாய்த்துக் கொள்கிறார் ஈ.வெ.ரா. வடமொழியில் ராமாயணம் எழுதிய வால்மீகியும் சரி; அந்தக் காப்பியத்தின் கட்டுக் கோப்புக் குலையாமல் தமிழில் எழுதிய கம்பரும் சரி; தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை "மணந்து வாழ்ந்த" சம்பவத்தைச் சிறப்பித்துக் கூறவில்லை, உண்மையில், அது நிகழ்ந்த சம்பவமும் அல்ல; கவிஞன் வால்மீகியின் கற்பனைச் செய்தியே. அதைக் கம்பனும் அப்படியே ஒலி பரப்பி யிருக்கிறான். இதை மெய்யென்று நம்பிய ஈ.வெ.ரா வின் அறிவுக்கு எனது அனுதாபம் உரித்தாகுக!
வரலாற்றுச் சம்பவங்களும், கவிஞனின் கற்பனைகளும் கலந்துதான் காப்பியம் உருவாகின்றது. ராமாயணக் காப்பியம் மட்டும் இதற்கு விதி விலக்கல்ல. காப்பியத்தில் வரும் செய்திகளை யெல்லாம் உண்மைச் சம்பவங்களாக நம்பிவிடுவது அப்பாவித்தனம். காப்பியப் புலவன் நடந்த சம்பவங்களை மட்டுமே கூறும் சரித்திர ஆசிரியன் அல்லன். நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து, நடக்க வேண்டும் என்று தாம் விரும்பும் நல்ல எண்ணங்களையும் அவற்றோடு இணைத்து விடும் லட்சியவாதி,
கவிஞனுடைய கற்பனைகள் இருவகைப்படும்.
நிகழாத, ஆனால் மனித சக்தியால் நிகழ்த்தக்கூடிய கற்பனைகள் ஒருவகை. நிகழாததுமட்டு மல்லாமல், மனித சக்தியால் நிகழ்த்த முடியாததுமான கற்பனைகள் இன்னொரு வகை. அவற்றில், தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்ததாகக் கூறப்படும் செய்தி, இரண்டாவது வகையைச் சேர்ந்த-மனித சக்தியால் சாத்தியமில்லாத -கற்பனையாகும். இதை ஈ.வே.ரா. புரிந்துகொள்ள வேண்டும். மனித சக்தியை மீறிய கற்பனைச் சம்பவத்தை வால்மீகி போன்ற பெரும் புலவர், ராமாயணம் போன்ற பெருமை மிக்க காபியத்தில் சேர்க்கக் காரணம் என்ன?
24 ஆயிரம் சுலோகங்களால் பிரம்மாண்டமான காப்பிய மாளிகையைக் கட்டி முடித்த வால்மீகியும் சரி, பன்னீராயிரம் கவிதைகளில் ராமாயணத்தைத் தமிழில் எழுதிய கம்பரும் சரி, ஈ.வெ.ராவை விட அறிவில் குறைந்தவரல்லர். பொய் சொல்லிப் பணம் திரட்ட வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருந்திருக்க முடியாது.
பின் எதற்காக நடக்க முடியாத சம்பவத்தைக் கற்பனை செய்தார்கள்? இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பது கஷ்டமல்ல; சுலபந்தான்.
ராமாயண காப்பியத்தின் தலைவன் ராமனே ஒழிய, அவன் தந்தை தயரதன் அல்லன். ஆகவே காப்பியத்தின் கருப்பொருளை-அதன் பயனை ராமனிடம் காணமுயல வேண்டுமேயன்றி, தயரதனிடம் காண முயற்சி செய்யக்கூடாது.
ராமனிடம் காணும் நற்பண்புகள் பலவற்றுள்ளும் தலையாயது அவன் கடைப்பிடிக்கும் ஏகபத்தினி விரதமே. காப்பியத் தலைவனிடம் காணப்படும் இந்த உயர் பண்பையே காப்பியத்தின் கருப்பொருளாகவும் கொள்ளவேண்டும். இதன்படி பார்த்தால், ஏக பத்தினி விரதத்தை மனித சமுதாயத்திற்கு; குறிப்பாக அரச பரம்பரைக்கு அறிவுறுத்தவே வால்மீகி முனிவர் ராமாயணத்தை இயற்றினாரென்று சொல்லலாம்.
மேலும், ராமாயணம் இயற்றப்படும் காலம் வரை இல்வாழ்க்கையில்'ஒருத்திக்கு ஒருத்தன்' என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதுபோல, 'ஒருத்தனுக்கு ஒருத்தி' என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆம்; பெண் கற்பு வற்புறுத்தப்பட்டதே யன்றி ஆண் கற்பு வற்புறுத்தப்படவில்லை. இந்தக் கொடுமைக்கு எதிராக ஆண் கற்பைப் போதிக்கின்றது ராமாயணம்.
தந்தை தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்தவன். மைந்தன் ராமனோ எகபத்தினி விரதன்! இல்வாழ்க்கைப் பண்பில் எத்தகைய புரட்சிகரமான மாற்றம்!
இவர்களில், ஈ.வெ.ரா, பின்பற்ற வேண்டியது தயரதனை அல்ல.ராமபிரானையே! அப்படியிருக்க, ராமனை மறந்து தயரதனை நினைத்துக்கொள்வானேன்?
ராமாயணத்தில் தயரதனுடன் கூடி வாழ்ந்த மனைவியர் மூவர்தான். அறுபதினாயிரம் மனைவியர் என்பது பலதார மணத்தின் கொடுமையை மிகைப் படுத்திக்காட்ட கவிஞன் செய்த கற்பனை. ஆம். 'பலதார மணம்' என்ற தவறின் சிகரத்தில் தயரதனை எற்றி விடுகின்றான் கவிஞன். காப்பிய அமைப்பின் இலக்கணங்களை அறிந்தவர்கள் இந்தக் கற்பனையை அனுபவிப்பார்களே யன்றி ஆத்திரப்படமாட்டார்கள். ஆனால், ஈ.வெ.ராவோ, கற்பனையை உண்மையாக்கிக்கொண்டு ஆத்திரப்படுகின்றார். அவருடைய ரஸிகத்தன்மையை என்னென்பது!
ராமன் அவனுடைய ஒழுக்கத்திற்காகவும் உயர் குணங்களுக்காகவும் தெய்வமாக்கப்பட்டிருப்பினும், வடநாட்டானாதலால் தமிழ் நாட்டார் அவனை வழிபடக் கூடாதென்கிறார் ஈ.வெ.ரா. எவ்வளவுதான் உயர் குணத்தவனாயினும் மனிதனை தெய்வமாக கருதுவது கூடாது என்றால், அந்த வாதத்திற்கு மதிப்பு தரலாம். தெய்வ வழிபாடே கூடாதென்றாலும், அதை நாத்திகத் தத்துவமாக வேனும் கணக்கில் வைக்கலாம். ஆனால், ராமன் வடநாட்டான்; ஆகவே தமிழ் நாட்டார் அவனை வழிபடக்கூடாது என்று வம்பு பேசுவது நிறவெறிப் பேயாட்டமேயன்றி அறிவுவழிப் போராட்டமன்று.
மொழிவழி இனத்தின் உரிமைகளுக்கு எல்லை இருப்பது போல அதன் பண்புகளுக்கும் எல்லையுண்டு. ஆனால்; சமய வழிப் பண்புகளுக்கு எல்லை கிடையாது. சர்வ உலகத்திலும் அது வியாபித்திருக்கிறது. சமயம் தெய்வீக சக்தியின் நிழலாகத்தானே கருதப்படுகின்றது. தங்கள் அரசியலுக்கும் மொழிக்கும் எல்லை கண்ட பண்டைத் தமிழ் மூவேந்தர் கூட தெய்வ வழிபாட்டுக்கும் சமய நெறி வளர்ச்சிக்கும் எல்லை கண்டார்கள் இல்லை. சங்ககாலத் தமிழகத்திலேயே வேங்கடத்திற்கு வடக்கே நிலவி வந்த சகல சமயங்களும், சமயக் கடவுளர்களும் தெற்கே நம் தமிழகத்திலும் பரவியிருந்ததுண்டு. காரணம் சமயம் தனிப்பட்ட மனிதனின் புனிதமான உரிமையாகக் கருதப்பட்டது தான். அதனாற்றான், மன்னர் குலத்தின் மாணிக்க மான ராமனையும் தமிழ் நாட்டவர் தங்கள் தெய்வமாகக் கருதினர். தெய்வவழிபாட்டில் தவறில்லை என்றால் இதிலும் தவறிருக்க முடியாது. ஆனால் பெரியார் ஈ.வெ.ரா. தெய்வ வழிபாட்டிலேயே நம்பிக்கை யற்றவர். ஆகவே; அவர் ராமனைத் தெய்வமாக ஏற்க மறுப்பதைக் கண்டு வியப்பதற்கில்லை. ராமன் வடநாட்டுத் தெய்வம் என்று அவர் கூறுவது தமிழ் நாட்டவரின் இன உணர்ச்சியை நாத்திகப் பிரசாரத்திற்குப் பயன் படுத்தும் தந்திரமாகும்.
ஈ.வெ.ரா. தற்போதைக்கு ராமாயணத்தை மட்டுமே எதிர்த்தாலும், தமிழ் இலக்கியங்கள் எனப்படும் எல்லா நூற்களுக்குமே அவர் எதிரிதான்.முன்னொரு சமயம் சேக்கிழார் இயற்றிய சைவ சமயக் காப்பியமான பெரிய புராணத்தை எதிர்த்தார்; தீயிலிட்டுக் கொளுத்தவும் தேதி நிச்சயித்தார். பின்னொரு கலத்தில் சிலப்பதிகாரத்தைத் தமிழாகக் கழகத்தார் போற்றுகின்றார்கள் என்பதற்காக ஈ.வெ.ரா. வாயில் வந்தபடி தூற்றினார். இதற்கெல்லாம் முன்பு பெண்கள் அடிமைப் பட்டதற்கே திருக்குறள்தான் காரணம் என்று அவர் நூல் எழுதியதும் உண்டு. ஆம், சுருங்கச் சொன்னால், ஈ.வெ.ரா. இலக்கியங்களின் எதிரி - கடவுள் நெறியின் எதிரி, ஒருவார்த்தையில் சொன்னால் நாட்டில் நடை முறையிலிருக்கும் நல்லதற்கெல்லாம் எதிரி!
பழைய தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்துமே வரலாற்று நிகழ்ச்சிகளென்று நாங்கள் நம்பி விடுவதில்லை. அதுபோல, இலக்கியத்தில் கூறப்படும் செய்திகள் அனைத்துமே கற்பனை என்றும் நாங்கள் எண்ணுவதில்லை. வரலாற்றுச் செய்திகளும், கவிஞனின் கற்பனைகளும் கலந்ததுதான் காப்பியம் என்பது தமிழரசுக் கழகத்தாரின் திடமான கருத்து. இந்தக் கண்ணோட்டத்துடந்தான் நாங்கள் கம்பராமாயணத்தைக் காண்கிறோம்.
கம்பர், பல தெய்வங்கள் உண்டென்று நம்புவோருக்கு எதிராக ஒரே தெய்வக் கொள்கையை வற்புறுத்தி இருக்கின்றார்.
கம்பரின் கடவுள் நெறி
தொகுஉலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க் கேசரண் நாங்களே.
என்பது கம்பர் இயற்றிய ராமாயண நூலின் துவக்கத்திலுள்ள காப்புச் செய்யுள். இதில் சமய வாதிகள் இட்ட வேலிகளுக்கும், புராணங்கள் புகல்கின்ற நாம-ரூப பேதங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரே தெய்வத்தையே வழிபடுகின்றார் கம்பர். அதையும் 'தலைவர்' என்ற பொதுப் பெயராலேயே குறிப்பிடுகின்றார்.
பால காண்டத்திலுள்ள உலாவியற் படலத்திலும். ராமன் உலாவரும் காட்சியைக் கண்ட மிதிலைப் பெண்களின் நிலையைக் கூறுமிடத்து,
தோள்கண்டார் தோளேகண்டார்
தொடுகழற் கமலமன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கைக்க ண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கண்ட சமயத்து அன்னார்
உருவு கண்டாரை ஒத்தார்!
என்றுபாடுகின்றார். இந்தப் பாடலிலும், தெய்வங்கள் பல உண்டு என்று நம்புவோரின் கொள்கையைக் கம்பர் நையாண்டி செய்கிறார். ஆம், கடவுட் கொள்கையில் கம்பர் வள்ளுவரையே பின்பற்றுகிறார். ஆகவே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை உடைய தமிழரசுக் கழகத்தார் அந்தக் கொள்கைவழிக் காப்பியம் எழுதிய கம்பனைப் போற்றுவதில் தவறு இருக்க முடியாது அல்லவா?
சமூகக் காப்பியம்
தொகுகம்பராமாயணம் வைணவருக்கு மட்டுமே உரிய சமயக் காப்பியம் அன்று. சமுதாயம் முழுவதுக்கும் பயன்படத்தக்க சமூகக் காப்பியம் ஆகும். இது தமிழரசுக் கழகத்தாரின் நம்பிக்கை மட்டுமன்று; நாட்டின் நடைமுறைச் சம்பவங்களால் உறுதிப்படும் உண்மையுமாகும்.
ஒருகூட்டத்தார் கம்ப ராமாயணத்தை எரிக்க முயன்ற போது, அதை எதிர்த்துத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார் பேராசிரியர் ரா.பி.சேதுப் பிள்ளை.
கம்பருடைய காப்பியத்தின் சுவைகளை யெல்லாம் திரட்டி 'கம்பராமாயண சாரம்' என்ர பெயரால் நூல் இயற்றினார் வெ.ப. சுப்பிரமணிய முதலியார்.
கம்பருடைய காப்பியத்தைப் போற்றிப் புகழ்வதற்கென்றே தம் வாழ்நாட்களை யெல்லாம் அர்ப்பணம் செய்தார் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்.
கம்பர் தமிழில் இயற்றிய ராமாயணத்தின் பெருமையை ஆங்கிலத்தில் எழுதி அகில உலகுக்கும் அறிவித்தார் வ.வே.சு. ஐயர்.
இந்தப் பெரியார்களெல்லாம் சைவர்களேயன்றி வைணவர்களல்லர். அவர்கள் கம்ப ராமாயணத்தை வைணவ சமயக் காப்பியமாக அல்லாமல்,சைவருக்கும் உரிய சமூகக் காப்பியமாகவே எண்ணினர் என்பது வெளிப்படை. அவர்கள் மட்டுமல்ல. இஸ்லாமிய கிறித்துவ சமயங்களைச் சேர்ந்த தமிழ்ப் புலவர் பலரும் கம்பராமாயணத்தைப் போற்றிப் புகழ்கின்றனர்.
சர்வ தேசக் கண்கொண்டு பழைய காப்பியங்களை ஆராயும் மனப்பான்மை உடைய மார்க்ஸீய வாதிகள்கூட, கம்பனுடைய காப்பியத்தைப் போற்றிப் புகழ்கின்றனர் என்றால், தமிழரசுக்கழகத்தார் கம்பரைப் போற்றுவதில் அதிசயம் என்ன இருக்கிறது!
கம்ப ராமாயணம் தமிழில் தோன்றிய மூல காப்பியமன்று. வால்மீகி ராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டதுதான். இதைத் தமிழரசுக் கழகத்தார் அறிவர். உலகில் மொழிவழி நாடுகளும் இனங்களும் பலவாயினும் மனித சமுதாயம் ஒரே உலக லட்சியத்தை நோக்கியே பிரயாணம் செய்து கொண்டிருக்கிறது. ஆகவே, ஒரு நாட்டினரின் கருத்துக்களையும் கதைகளையும் இன்னொரு நாட்டினர் விரும்பி ஏற்பது வெறுக் கத்தக்கதன்று. ஆகவே, கம்பர், வால்மீகி ராமாயணக் கதையையொட்டி தமிழில் ராமாயணம் எழுதியது தவறன்று.
கம்பர் சிறந்த பகுத்தறிவாளர். அத்னாற்றான், வால்மீகி ராமாயணத்திலுள்ள சம்பவங்கள் ஒவ்வொன்றையும் வரலாற்று நிகழ்ச்சிகளாக நம்பிவிடாமல், தமிழகத்தின் நெறிக்கும் தான் வாழ்ந்த காலத்தின் நிலைமைக்கும் ஏற்ப அக்காப்பியத்தைத் திருத்தியமைத்தார்.
பெண்ணுரிமைப் பிரகடனம்
தொகுசங்ககாலத் தமிழகம் பெண்ணடிமை பேணாதது. ஆனால், கம்பர் காலத்திலே தமினகத்தில் ஆண்களின் ஆதிக்கம் அரும்பெடுத்து விட்டது. ஆகவே, கம்பர் ராமாயணத்தின் மூலம் பெண்ணுரிமைப் பிரகடனம் செய்தார்.
பெருந் தடங்கண் பிறைநுத லார்கலெலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்து மன்றி விளைவன யாவையே.
என்ற பாடலில் பெண்கள் செல்வத்திலும் கல்வியிலும் ஆண்களோடு சரிநிகர் சமானமென இருந்ததாகக் கூறுகின்றார். இது அயோத்தியில் கம்பன்கண்ட காட்சியன்று. வருங்காலத் தமிழகத்துப் பெண்கள் எப்படி யிருக்கவேண்டுமென்று கூறும் லட்சியக் கற்பனையே.
கம்பர் செய்யும் பெண்ணுரிமைப் பிரகடனம் தமிழரசுக கழகத்தார் காண விரும்பும் புதிய தமிழகத்தில் அமுல் நடத்தப்படும். ஆகவே, இவ்விஷயத்தில் கம்பர் எங்களுக்குச் சிறந்த வழிகாட்டி.
கம்பர் குடியரசு வாதி
தொகுகம்பர் முடிமன்னர் ஆட்சியில் பிறந்து வாழ்ந்தவர். அவர் காலம் வரை தமிழகம் குடிமக்களுக்குத் தீங்கிழைத்த கொடுங்கோலரைக் கண்டதில்லை. ஆயினும் கம்பரின் உள்ளம் முடியரசு முறைக்கு எதிரான குடி அரசையே நாடியது.
தயரத மன்னன் குடிமக்கள் வழிபட்ட கோவேந்தன் என்பதை,
வயிரவான் பூணணி மடங்கன் மொயம்பினான்
உயிரெலாந் தன்னுயி ரொப்ப வோம்பலால்
செயிரில வுலகிற் சென்று நின்றுதீர்
உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
என்ற வரிகளில் நமக்கு நினைப்பூட்டுகின்றார்.அயோத்தியில் மன்னன் ஆட்சி நடப்பினும் மக்களில் ஒவ்வொருவரும் தாம் தாமே முடிசூட்டிக் கொண்டு ஆள்வது போல நினைத்தனராம். இதை,
"தத்தமக்குற்ற அரசெனத் தழைக்கின்ற மனத்தர்" என்ற வரிகளில் சுட்டிக் காட்டுகின்றார்.
காப்பிய முறைப்படி கம்பர் தமது குடியரசு லட்சியத்தை அயோத்தி மன்னன் மீதும், மக்கள் மீதும் வைத்துக் கூறியிருபபினும், குடியாட்சி முறையில் தமக்குள்ள ஆவலையே இங்கு உணர்த்துகின்றார்.
எனவே தமிழரசுக் கழகத்தார் மட்டுமல்லாமல் குடியரசுக் கொள்கையில் நாட்டமுடைய ஒவ்வொருவரும் கம்பருடைய காப்பியத்தில் வரும் லட்சியக் காட்சிகளைக் கண்டு மகழ்வது இயற்கை.
பூங்காவை போர்களமாக்குவதா?
தொகுகடந்த இதழில் "இலக்கியத்தின் எதிரி ஈ.வெ.ரா. .. என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையைப் படித்த பண்புடைய அன்பர்கள் பலர், ராமாயணத்தைப் பற்றி எனது கண்ணோட்டத்தின் வழி தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரவேண்டுமென்று கடிதங்கள் மூலமும் நேரிலும் என்னை வற்புறுத்தி வருத்துகின்றனர். ஆனால் பண்பாட்டிற்குப் புது இலக்கணங் கண்டுவிட்ட தி.க.-தி.மு.க வட்டாரத்தினர் தங்களுக்கே உரிய திராவிட பாஷை'யில் என்னை ஏசி எழுதி வருகின்றனர். அவர்களிடம் இதைத்தவிர வேறு கண்ணியமான விவாதத்தையோ, கருத்தையோ எதிர்பார்க்கமுடியாதுதான்.
நவீன 'கலாச்சாரம்!'
தொகுஅறிவு இருப்பவர்களிடையே அபிப்பிராய பேதம் ஏற்படுவது இயற்கை. அவர்களுக்கு அறிவு இருக்கிறது என்பதற்கே அதுதான் அடையாளம். ஆனால் அறிவோடு பண்பாடும் உடையவர்களானால் அபிப்பிராய பேதத்தைப் பரிமாறிக்கொள்ளுகிறபோது ஆத்திரத்துக்கு இடங்கொடுக்க மாட்டார்கள். அரசியல் விவாதங்களில் ஆத்திர உணர்ச்சி கலப்பது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். தமிழ் இலக்கியத்தைப் பற்றிய விவாதத்தில் ஆத்திர உணர்ச்சி கலப்பதற்குக் காரணமேயில்லை. ஆனால் இன்றைய தமிழ் நாட்டில்; அதுவும் தி.க.-தி.மு.க. வட்டாரத்தில்-பண்பாடு என்பது அபிப்பிராய பேதத்திற்குரிய விஷயமாகி விட்டது. ஆகவே, இலக்கியத்தைப் பற்றிய விவாதத்தில் கூட பண்பாட்டை எதிர்பார்க்க முடியவில்லை.
தி.க-தி.மு.க வட்டாரத்தினரின் வசை மொழிகளுக்காக நான் வருந்தவில்லை. ஏனென்றால், அது அவர்களுக்கு வழக்கமாகி விட்ட தொழில். எப்பொழுதும் யாரையும் ஏசிக் கொண்டிருப்பதையே அவர்கள் நவீன 'கலாச்சாரம்’ ஆக்கிவிட்டார்கள். ஆகவே, அவர்களுடைய போக்கை, ஜனநாயகத்தின் விளைவாக நேர்ந்த விபத்து என்று எண்ணிப் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
திரு ஈ.வே.ரா.வுக்கோ அவரைப்பின்பற்றும் தோழர்களுக்கோ 'தெய்வம்’ என்பது தேவை இல்லாதபொருள்; 'ஒழுக்கம்’ என்பது மூடநம்பிக்கையின் சின்னம்; பழக்க வழக்கம்-பண்பாடு என்பனவெல்லாம் பத்தாம் பசலிக் கொள்ககள்!
ஆனால் கம்பராமாயணமும் அதற்கு முன்னும் பின்னும் தோன்றிய தமிழ் இலக்கியங்களும் கடவுள் உண்மையை வற்புறுத்துகின்றன; ஒழுக்கத்தை உபதேசிக்கின்றன; பழக்கவழக்கங்களையும் பண்பாடுகளையும் பின்பற்றத் தூண்டுகின்றன.
ஆகவே தி.க.-தி.மு.க. வட்டாரத்தினர் தங்களுடைய நம்பிக்கைகளுக்கும், நடத்தைகளுக்கும் எதிராக இருக்கும் தமிழ் இலக்கியங்களை எரிக்க விரும்புவதும் எதிர்த்துப் பிரசாரம் செய்வதும் இயற்கைதான்.அதைக்கண்டு வியப்பதற்கு என்ன இருக்கிறது! ஒழுக்கம் என்னும் ஒளி புகாத இருட்டில் வாழ விரும்பும் எல்லொருமே தமிழ் இலக்கியங்களின் எதிரிகள்தான். ஆனால், ஈ.வெ.ரா.வுக்கும், அவரது தோழர்களுக்கும் நேரிடையாக கம்பன் மீது கல்லெறியத் துணிவில்லை.
முன்னொரு சமயம் அவர்கள் கம்பன் மீது கல்லெறிந்தார்கள். ஆனால், எறிந்த கல் திரும்பி வந்து அவர்கள் தலையையே தாக்கித் தழும்பு வைத்து விட்டது. அதனாற்றான், அவலை நினைத்து உரலை இடிப்பது போல, வால்மீகி ராமாயணத்தை எதிர்ப்பதின் மூலம் கம்ப ராமாயணத்தின் மதிப்பைக் குறைக்கும் தந்திரத்தைக் கையாளுகிறார்கள். ஆனால், கன்னித் தமிழ் உள்ளவரை கம்பனுடைய காப்பியத்தின் மதிப்பைக் குறைக்க எவராலும் முடியாது. ஆகவே, ஈ.வெ.ரா. கூட்டத்தாரின் இலக்கிய எதிர்ப்பைக் கண்டு நான் கலக்கமடையவில்லை. இலக்கியப்பூஞ் சோலையைப் போர்க்களம் ஆக்க நினைப்போர் எந்நாளும் தமிழ் மக்களின் மதிப்பைப் பெறமுடியாது. ஆகவே, தி.க,-தி.மு.க. வட்டாரத்தினரின் வசைமாரிகளுக்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை. ஆயினும், கம்ப ராமாயணத்தைப் பற்றி தமிழரசுக் கழகத்தாரின் கருத்தைக் பொதுமக்களுக்குத் தெளிவாக்க விரும்புகின்றேன்.
கழகத்தின் கண்ணோட்டம்
தொகுதமிழரசுக் கழகம், தமிழ் இனத்தின் அரசியல்- பொருளாதார நலன்களுக்காகப் பாடுபடுவதோடல்லாமல், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பாடுபடும் கொள்கை உடையதாகும். அந்தக் கொள்கை வழிதான் கம்ப ராமாயணத்தையும் ஆரய்ந்து அதிலுள்ள சுவை மிக்க கருத்துக்களைச் சேகரித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விருந்து வைக்க கழகம் விரும்புகிறது.
தமிழரசு இயக்கத்தாருக்கு இலக்கியம் என்பது பொழுதுபோக்குக்குப் பயன்படும் பொருளல்ல. கடந்த காலத் தமிழகம் எப்படி இருந்தது என்பதைக் காட்டும் கண்ணாடி: இன்றைய தமிழகத்தின் பண்பாட்டுத் தரத்தை உரைத்துப் பார்க்க பயன்படும் உரைகல்; எதிர்காலத் தமிழகத்துக்குத் தேவைப்படும் செல்வங்கள் எல்லாம் நிரம்பியுள்ள களஞ்சியம். இந்தக் கண்ணோட்டத்துடன் தான் தமிழரசு இயக்கத்தார் கம்ப ராமாயணத்தைக் காணுகின்றனர்.
கவிமணியும் கண்டிக்கிறார்!
தொகு'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்'என்பது பழமொழி. அதுபோல, ஒரு கவிஞனின் உள்ளத்தை- உணர்வை இன்னொரு கவிஞந்தான் சரியாக அளந்து காட்ட முடியும். அறிஞன், கவிஞனை அனுபவிக்கலாம். ஆனால், கவிஞனுடைய உள்ளத்தின் ஆழத்தை அறியமுடியாது. அதனாற்றான்;"அணிசேய் காவியம் ஆயிரங்கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்" என்றார் பாரதியார்.
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. இக்காலக் கவிஞர்களுள் தலை சிறந்த கவிஞராகத் திகழ்ந்தார். கட்சிச் சார்பால் சில கவிஞர்கள் பெருமை பெற்றதுண்டு. கவிமணி தேசிக விநாயகனார், காலமெல்லாம் கட்சிச் சார்பற்று விளங்கினார். அதுமட்டுமா? மக்களுடைய காட்சிக்கும் அப்பாற்பட்டவராக இருந்தார். இப்படிக் கட்சிக்கும், மக்களுடைய காட்சிக்கும் அப்பாற்பட்டவராக இருந்தும், கவிதைத் திறன் ஒன்றின் மூலமே புகழ் பெற்றார் தேசிகவிநாயகம். கவிமணி தேசிகவிநாயகம் ஆணவமற்றவர்: அப்பழுக்கற்ற நெஞ்சுடையவர். அவருடைய குழந்தை உள்ளத்தை அவரோடு பழகியவர்கள் நன்கறிவர் தம்முடைய கவிதையில் மட்டுமல்லாமல், தமது பேச்சிலும் தமிழின் இனிமையை வெளிப்படுத்தி வந்தார்.
இந்நாளில், ஒரு கவிதை கூட எழுதத் தெரியாதவரெல்லாம் பெருங் கவிஞர்கள் எழுதிய காப்பியங்களைக் குறை கூறுகின்றனர். கம்பனுடைய காப்பியத்தில் இங்கொரு கவிதை, அங்கொரு கவிதை எனப்படித்துவிட்டு, காப்பியம் முழுவதையுமே கரைத்துக் குடித்து விட்டவர்கள் போலப் பேசுகின்றனர் - எழுதுகின்றனர்.
கவியரசர் பாரதியார் தமக்கு முன்தோன்றிய கவிஞர் பெருமக்களைப் போற்றிப் புகழ்ந்தார்:
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை.
என்று கூறிப் பெருமிதமடைந்தார். அவருக்குப் பின்வந்த கவிமணியும் பாரதி போற்றிய முப்பெரும் புலவர்களைத் தாமும் புகழ்ந்து கவி எழுதினார். அதோடு பாரதியையும் தமது வழிகாட்டியாகக் கொண்டு "பாட்டுக்கொரு புலவன் பாரதியடா" என்று வாடி வதங்காத பாமாலை சூட்டினார்.பாரதியும் கவிமணியும் நிறைகுடம் போன்ற அறிவுடையவர்கள். அதனாற்றான், தங்களுடைய முன்னோர்களைவிட தாங்கள் தான் புத்திசாலிகள் என்று தலை மயங்கிப் பேசவில்லை.
கவிமணி தேசிகவிநாயகனார் கம்பனைப் புகழ்ந்து அவனுக்கென்றே தனியாகப் பல கவிதைகள் எழுதியிருக்கிறார். தாம் இயற்றிய வேறு பல கவிதைகளிலும் இடை இடையே கம்பனின் பெருமையை நுழைத்திருக்கிறார்.
ஒரு கவிதையில், கம்பனுடைய காப்பியத்தை நாவினிக்கப் பருகத்தக்க சுவை மிக்க பாற்கடலுக்கு ஒப்பிடுகின்றார் கவிமணி:
பாலின் சுவைக்கடல் உண்டெழுந்து-கம்பன்
பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை
நாவின் இனிக்கப் பருகுவமே - நூலின்
நன்னய முற்றும் தெளிகுவமே.
என்பது அப்பாடல். நாத்தழும்பேற கம்பனைத்திட்டுகின்றார் சிலர். நாவினிக்கக் கம்பன் கவிதையைப் பருகுங்கள் என்கிறார் கவிமணி.
கம்பன் ஆரிய மொழியைக் கற்றறிந்தவன்; கன்னித் தமிழின் ஆழத்தை அளந்தவன். அதனாற்றான் மாரியைப் போன்று கவிதை மழை பொழிய முடிந்தது அந்த இருமொழிப் புலவனால்!
ஆரியம் நன்குணர்ந் தோன் - தமிழின்
ஆழம் அளந்து கண்டோன்
மாரி மழைப் போலக் - கவியின்
மழை பொழிந்திடு வோன்.
என்று பாடுகின்றார் கவிமணி. கம்பன் சிறப்புக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்!
ஒரு சில தமிழர்கள் 'கம்பனைப் பழிப்போம். அவனுடைய காப்பியத்தை எரிப்போம்' என்று காட்டுக் கூச்சலிடுகிறார்கள் அல்லவா? இந்தக் கூச்சல் நமது கவிமணி காதுக்கும் எட்டியபோது, அவர் ஆத்திரப்படவில்லை. கூச்சலிடும் மக்களின் அறியாமை குறித்து அனுதாபப்பட்டார்.
"கம்பனை எரிக்க விரும்பும் அன்பர்களே! கம்பன் வெறும் தமிழ்க்கவி அல்லன். உலக மகாகவி. சாதாரண கவிஞன் அல்லன்-அருட்கவி; அவனுடைய கவிதைகள் பிணி, மூப்பு, சாக்காடு போக்கும் தேவலோகத்து அமிழ்தம்" என்று எரிக்க விரும்புவோருக்கு அன்போடு அறிவுரை கூறினார். இதோ அந்தக் கவிதையைப் படியுங்கள்:
அம்புவிக்கு வாய்த்த அருட்கவி; ஐயமின்றி
உம்பரமு தொத்த உயிர்க்கவி-கம்பனும் தன்
மந்திரச் சொல்லால் வனைந்த கவி; என்றேனும்
வெந்திடுமோ தீயால் விளம்பு.
இதோடு விட்டாரா? "கம்பனை எரிப்போம் என்ற கூச்சல் அவருடைய உள்ளத்தில் எரி மூட்டி விட்டது. ஆகவே, இலக்கியத்தின் எதிரிகளை ஒரு வெண்பாவில் தாக்குவதோடு விட்டுவிட அவர் மனம் விரும்பவில்லை.
ஓலை எரியும் தாளெரியும்
உள்ளத் தெழுதிவைத்து நிதம்
காலை மாலை ஓதுகவி
கனலில் வெந்து கரிந்திடுமோ.
என்று கேட்கின்றார். பாவம்! 'கம்பனை எரிப்போம் என்ற கூக்குரலைக் கேட்டு கவிமணியின் உள்ளம் என்ன வேதனைப் பட்டதோ!
உண்மைதானே, கம்பன் கவிதைகள் ஓலையோடு தாளோடு நின்றுவிடவில்லை. லட்சாதி லட்சம் மக்கள் உள்ளங்களிலே குடிபுகுந்திருக்கின்றன. ஓலையை எரிக்கலாம், காகிதத் தாளையும் எரிக்கலாம்; உள்ளங்களை எரிக்க முடியுமோ? அங்கன்றோ கம்பன் இருக்கின்றான்! இதோடும் விடவில்லை கவிமணி:
சிந்தை மகிழ விழாக் கண்டு
தேர்ந்த புலவர் முன்வந்து
சந்த மெழவே பாடுகவி
தழலில் வெந்து நீறாமோ?
என்கிறார். ஆம்; கம்பனுக்கு விழா என்றால், அந்த விழாவில் அவனுடைய பெருமை பேச எத்தனை புலவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வருகிறார்கள்!
கம்பன் பாடல்களை சந்தத்தோடு பாடப் போட்டியிடுவோர் எத்தனை பேர்! அந்தப் பாடலும் எரியுமோ- எரிக்கத்தான் விடுமோ நாடு!
உள்ளத் துவகை பொங்கியெழ
உரைகள் சொல்லப் பொருளேறித்
தெள்ளத் தெளிந்த கவியமுதம்
தீயில் வெந்து பொடியாமோ?
அந்தோ! தமிழன்னைக்கு சாகாவரம் தந்த அமிழ்தம் கம்பன் கவிதை. அதையுமா எரிப்பது? என்கிறார் கவிமணி.
திருமாலே இராமனாக அவதரித்தான் என்பர் சமயவாதிகள். அந்தத் திருமாலும் தன்னைப்பற்றி எழுதப்பட்ட காவிய்த்தை- கவிதையை காதாரக் கேட்டுக்களிக்க ஆர்வமுற்று மனித உடல் தாங்கி மண்ணில் வந்தால் கன்னித் தமிழ் நாட்டுக்குத்தான் வருவானாம்.
ஆம்; இங்கேதானே கம்பனுடைய கவியமுதம் இருக்கிறது!
இந்தக் கருத்தைக் கவிமணி எவ்வளவு அழகாகச் சொல்லுகின்றார் கேளுங்கள்:
கம்பன் கவியின் களியமுதம் உண்டிட, மால் அம்புவியில் வந்திங்கு அவதாரம் செய்தானோ!
என்கின்றார். கவிமணி மறைந்து விட்டார். அவருடைய புகழ் கம்பனுடைய புகழோடு சேர்ந்து சிரஞ்சீவித் தன்மை பெற்றுவிட்டது. கன்னித் தமிழுள்ளவரை கம்பனும் கவிமணியும் வாழ்வர்.
கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர்
தொகுசிலப்பதிகாரத்திற்கு சிறப்புத்தேட தேசீய வாதிகள் மாநாடு கூட்டுகின்றனர் என்ற செய்தி கேட்டவுடனே திராவிடக்கழக் வட்டாரத்தில் கலக்கம் கண்டு விட்டது. தேசீய வாதிகள் என்றாலே, வடமொழிக்கும் வடவருக்கும் அடிமைப்பட்டவர்கள்; தமிழுக்கும் தமிழருக்கும் துரோகம் செய்பவர்கள் என்று இத்தனை காலமும் செய்து வந்த பிரச்சாரம் எல்லாம் பொய்யாய்- கனவாய்- பழங்கதையாய்ப் போய்விடுமே என்பதுதான் கலக்கத்திற்குக் காரணம். ஆகவே, சிலப்பதிகார மாநாடு நடக்கு முன்பே, சிலம்பின் பெருமையைப்பற்றி 'விடுதலை' பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டது. திராவிடக் கழகத்தின் இலக்கியப் பிரச்சாரகரான புலவர் இலக்குவனார், ஆம்பூரில் சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பற்றிச் சொற்பொழிவாற்றினார். அதை 15-3-51-ல் "சிலப்பதிகாரத்தின் பெருமை"என்ற தலைப்புக் கொடுத்துப் பிரசுரித்தது 'விடுதலை' 21-3-51 இதழில், சாமி சிதம்பரனாரைக் கொண்டு சிலப்பதிகாரத்தைப் பற்றி மிக நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதச் செய்து, அதையும் பிரசுரித்தது 'விடுதலை' இவற்றால் நாம் மருளவில்லை; மகிழ்ந்தோம். சிலம்பைப் பழித்தவர்களும் அதன் சிறப்பை உணர்ந்து பாராட்டுவதென்றால் மகிழத்தானே வேண்டும்! மொழித் தொண்டு கட்சிப் பூசல்களுக்கு அப்பாற்பட்டதலவா?
ஆனால், ஈ.வெ.ரா. இத்தனைக்கும் எதிமாறான போக்கிலே 30-3-51ல் காங்கேயத்தில் சிலப்பதிகாரத்தைப் பழித்துப் பேசியிருக்கிறார்:
"உண்மையான திராவிடன் -தமிழ் மகனாக
இருந்தால் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா?
பார்பனருக்கு நல்ல பிள்ளயாக நடந்து கொள்
வதற்கு ஆக நடத்தப்படுவது என்பதல்லாமல்
வேறு என்ன சொல்ல முடியும்?"
என்று சிலப்பதிகார மாநாடு நடத்தியவர்களுக்கு 'சிறப்புரை' வழங்கியிருக்கிறார் ஈ.வெ.ரா.அவர் கருத்துப்படி, சிலப்பதிகார மாநாடு நடத்துவோர் அத்தனை பேரும் போலித் தமிழர்களாகின்றனர்.இதற்குப் பதில்ளிக்க வேண்டிய பொறுப்பை புலவர் பெருமக்களுக்கு விட்டுவிடுகிறோம்.
"சிலப்பதிகார மென்பது ஆரியத்தைப் பரப்புகிற ஒரு நூலென்பது அல்லாமல், வேறு என்ன?ஆரம்ப முதல் இறுதிவரை ஒரே ஆரியந்தானே காட்சியளிக்கிறது.
என்கிறார் ஈ.வெ.ரா. 'மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பார்கள். அதுபோல எப்போதோ, எதற்காகவோ ஆரியத்தின் மீது வெறுப்பேற்பட்டதன் காரணமாக,காண்பதெல்லாம் 'ஆரிய'மாகக் காட்சியளிக்கிறது ஈ.வெ.ரா.வுக்கு!
கொடுங்கோலனை எதிர்த்துப் போராடும்
கண்ணகியின் புரட்சி 'ஆரியம்’!
அறியாது செய்த பிழைக்கு, தனது உயிரையே
அர்ப்பணிக்கும் நெடுஞ்செழியனின் தியாகம் ’ஆரியம்’!
அரசன் உயிர் நீத்த அக்கணமே தானும் உயிர் நீத்த
கோப்பெருந்தேவியின் அன்பு நிறைந்த காதல் 'ஆரியம்’!
வாய் கொழுத்துப் பேசிய வட வேந்தருடன் போரிட்டுத் தமிழரின்
ஆற்றலைப் புலப்படுத்திய செங்குட்டுவன் செயல் 'ஆரியம்’!
மூன்றாகப் பிளவுபட்டுக் கிடந்த தமிழகத்தை ஒன்றாகப் பிணைத்துக்
காட்டிய இளங்கோவின் சித்திரம் 'ஆரியம்’!
விலை மகளூக்குப் பிறந்தும் ஒருவனையே காதலித்து வாழ்ந்து அவன் இறந்த
பிறகு வாழ்விற்குரிய இன்பங்கள் அனைத்தையும் இழந்துவிட்ட மாதவியின்
மனப் பண்பு 'ஆரியம்’!
பார்ப்பனத் தோழியின் கருத்து வழி காமன் கோயில் சென்று
வழிபட மறுத்த கண்ணகியின் செயல் 'ஆரியம்’!
இத்தனையும் தமிழ்ப் பண்பிற்கு எதிரான 'ஆரியப் பண்பு’தான் என்றால்,
அந்த ஆரியப் பண்பு நீடூழி வாழ்வதாகுக.!
"கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடக்கிற கல்யாணம் பெண்ணடிமைத் திருமணம். அடுத்தபடியாக அது பண
மூட்டைகள் திருமணம்."
என்கிறார் ஈ.வெ.ரா. எங்கேயோ - யாரோ செய்துகொண்ட திருமணத்தை நினைப்பிலே வைத்துக்கொண்டு கண்ணகியின் திருமணத்தைக் கண்டித்துப் பேசியிருக்கிறார் போலும்! உணர்ச்சிக்காக அல்லாமல்- கடமைக்காகவும் அல்லாமல், வெறும் உடைமைக்காக மட்டும் திருமணம் செய்துகொண்ட பெண் அல்லள் கண்ணகி. கண்ணகியின் காதலன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன்தான், ஆனால், அவனுடைய பணத்துக்காக தனது இளமையை அடகு வைக்கும் அறிவுகெட்ட நிலை கண்ணகிக்கு இருந்ததில்லை.
பார்ப்பனப் புரோகிதர் மறைவழிப்படி நடத்தி வைத்ததற்காக, கண்ணகி-கோவலன் திருமணத்தைப் பழிப்பது ஆராய்ச்சி அறிவன்று -ஆபாசக் கூக்குரல்!
"கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதளவாவது அறிவு-
மனித உணர்ச்சி- தன்மானம் இருந்தது என்று யாராவது ஒப்புக் கொள்ளமுடியுமா?"
என்று கம்பீரமாகக் கேள்வி போடுகிறார் ஈ.வெ.ரா. உணர்ச்சிக்காக அல்லாமல் உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித உணர்ச்சி அற்றவள் தான்! ஊரார் பழிக்கும் நிலையிலும் உணர்ச்சியற்ற கட்டையாக கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானமற்றவள்தான்!
இந்தக்குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈ.வெ.ரா. எப்போதோ- எங்கேயோ சந்தித்து விட்டார் போலும்! அவளை நினைவில் வைத்துக் கொண்டு கண்ணகியைச் சாடுகிறார்.
கண்ணகிக்கு அறிவு இருந்ததால்தான் கணவனைப் பிரிந்த காலத்திலும் கற்புநெறி தவறாது வாழ்ந்தாள்.
மனித உணர்ச்சி இருந்ததால்தான் ஆயர்சேரியில் கோவலன் தன்னை இறுதியாகப் பிரியும்போது அவனது போற்றா ஒழுக்கத்தை எடுத்துக்காட்டி இடித்துக் கூறினாள். அவளுக்குத் தன்மானம் இருந்ததால் தான் குற்றமற்ற தன் கணவனைக் கள்வன் எனக் குற்றம் சாட்டிக்கொன்ற கொடுங்கோல் அரசை அழித்தாள்!
அத்தகைய பெண்ணரசியையா பழிப்பது? என்ன துணிச்சல்? புலவர் பெருமக்களே! நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் பரம்பரைதானா நீங்கள்? 'ஆம்' என்றால், இளங்கோவைப் பழிப்பதைப் பார்த்தும் பொறுத்திருப்பதேன்? ஒருவேளை தமிழே வீரத்தைவிட்டு விலகி விட்டதோ? அறிவு பீடத்தை விட்டு விலகிவிட்டதோ? பதில் கூறுங்கள்.
திராவிடத்தார்க்களுக்கு ஒரு நிலையான கொள்கை கிடையாது என்று நாம் கூறினால் கோபம் பொத்துக் கொண்டுவருகிறது சில 'புரட்சி' வீரர்களுக்கு. இதோ பாருங்கள், இலக்கியத் துறையில் அவர்களுக்குள்ள ஞானத்தை!
"சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமை படுத்திப் பேசும் பேரிலக்கியம்"
என்று பேசுகிறார் திராவிடக் கழகத்தின் இலக்கியப் பிரச்சாரகரான புலவர் இலக்குவனார். அதை'சிலப்பதிகாரத்தின் சிறப்பு' என தலைப்புக் கொடுத்துப் பிரசுரிக்கிறது 'விடுதலை'.
"சிலப்பதிகாரம் சிந்தித்து ஆராய்வதற்குரிய சிறந்த தமிழ்நூல்...தமிழர் நாகரிகத்தை விளக்கும் நூல்...ராமாயணத்தைப்போல்-பெரிய புராணத்தைப்போல்- ஜீவக சிந்தாமணியைப் போல் பூசை பண்ணும் மனப்பான்மை உண்டாக்கும் நூலல்ல. இதுதான் அந்த நூலுக்குரிய தனிச்சிறப்பு."
என்று 21-3-51 'விடுதலை'யில் எழுதுகிறார், பெரியாரை நிழல்போலப் பின்பற்றிச் செல்லும் சாமி. சிதம்பரனார். இதை:
"சிலப்பதிகாரம் சொல்லும் செய்திகள் யாவை?
பகுத்தறிவு, ஜனநாயகம், தன்மானமே தமிழர்பண்பு".
என்று கொட்டை எழுத்துக்களில் இரண்டு பத்தி தலைப்புக் கொடுத்து 'விடுதலை'யில் பிரசுரித்திருக்கிறார் அதன் ஆசிரியர். அந்தக் கட்டுரையில் சாமி சிதம்பரனார் மேலும் கூறுவதைப் படியுங்கள்:
"கண்ணகி சிறந்த குணமுடையவள், அழகும்
அரிய குணங்களும் அவளிடமிருந்தன."
என்கிறார் ஈ.வெ.ரா.வின் சீடர். குருவுக்கு அறிவு- மனித உணர்ச்சி- தன்மானம்
முதலிய நல்ல குணங்கள் அற்றவளாகக் காட்சியளிக்கிறாள் கண்ணகி.
சீடருக்கோ அத்தனை குணங்களும் உடையவளாகக் காட்சியளிக்கிறாள்.
ஒரே பாத்திரம்; இரு வேறுகாட்சிகள். காண்பவர்கள் இருவரும் ஒரே கட்சியினர்;
அதுமட்டுமல்ல; குருவும் சீடரும். இதைக்கண்டு வெட்கப்படுவது மட்டுமல்ல;
இவர்களையும் பொதுவாழ்வில் நடமாடவிட்டதற்காக வேதனையும் படவேண்டும்.
சிலப்பதிகாரத்தின் கருப்பொருளைப் பற்றிக் கூறும்போது "ஆரிய நெறியைப் பரப்புவதற்காகவே எழுதப்பட்டது" என்கிறார் ஈ.வெ.ரா. "ஆரம்பமுதல் இறுதி வரையில் ஒரே ஆரியந்தானே காட்சியளிக்கிறது." என்றும் ஆத்திரத்தோடு கேட்கிறார். அவருக்கு நாம் பதிலளிக்கத் தேவையில்லை.அவரது சீடர் சிதம்பரனாரைக் கொண்டே பதிலளிக்கச் செய்கிறோம்.'விடுதலை'யில் தாம் எழுதிய கட்டுரையின் இறுதியில் சிலப்பதிகாரத்தின் சீரிய கருப் பொருள்களைக் கணக்கோடு கூறுகிறார் சிதம்பரனார்.
"சிலப்பதிகாரக் கதையிலே கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்களைப் புகுத்திப் படித்தால், இந்த மூன்று உண்மைகளை மறுக்கமுடியாது. (1) தெய்வீகச் சடங்குகளால் பயனில்லை. (2) அறிவின்றி, விசாரணை யில்லாமல் நிரபராதிகளுக்குத் தண்டனை அளிக்கும் அரசாங்கம் பொதுமக்களால் அழிக்கப்படும். (3) தமிழன் தன்னை அவமதிக்கும் எவனுக்கும் தலைவணங்க மாட்டான். தன்னை அவமதிப்போரை அடக்கித் தன்மானத்தைக் காப்பாற்றியே தீர்வான். பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் தமிழன் ஏமாறமாட்டான். இந்த உண்மைகளை விளக்கவே சிலப்பதிகாரம் எழுதப்பட்டது. இதை மெய்ப்பிக்க நாம் எப்பொழுதும் தயார். எந்த இடத்திலும் வாதிக்கவும் முன்னிற்போம்." இது சாமி சிதம்பரனாரின் கருத்துக்கள்.
சிலப்பதிகாரம் பயனுள்ள நூல்-படிக்க வேண்டிய நூல்- கழிக்க தக்கன சில இருப்பினும், பொதுவாகப் பாராட்ட வேண்டிய நூல் என்று கூறுவது மட்டுமல்ல; அவ்ரது கூற்றை மறுப்போரை வாதுக்கும் அழைக்கிறார் சிதம்பரானார். ஈ.வெ.ரா. வுக்குத் தன்மான மிருப்பின் சிதம்பரனாரோடு சமருக்குச் செல்லட்டும். இல்லையேல் சிதம்பரனாரின் சிலப்பதிகாரப் பற்று உண்மையாயின்; தமது மானத்தைக் காத்துக் கொள்வதற்காக வேனும் ஈ.வெ.ரா.வின் வட்டாரத்தை விட்டு அவர் வெளியேறட்டும். பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் என்பது போல, தமிழுக்குத் தொண்டு செய்வதாக நடிப்பது அதே சமயத்தில் தமிழ்ன் பெருமையை இழித்துப் பேசும் ஈ.வெ.ரா. வுக்கும் துதிபாடுவது என்ற இழிநிலை இனியும் நீடிக்கக் கூடாது.
இப்படி முன்னுக்குப் பின் முரணாக ஒருவர்க்கு ஒருவர் எதிர்மாறாகப் பேசும் ஒரு கூட்டமும் தமிழ் நாட்டில் இருக்கிறதே!
இந்த லட்சணத்தில் சிலப்பதிகார மாநாடு கூட்டியவர்களின் தமிழ்ப்பற்றை நையாண்டி செய்கிறது 'திராவிட நாடு'. அதுமட்டுமல்ல. தாங்கள் என்றென்றும் சிலப்பதிகாரப் பக்தர்கள் போலவும், தேசிய வாதிகள் இப்போதுதான் சிலம்பின் சிறப்பைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கி இருப்பதாகவும் கூறுகிறது.
தமிழ்மொழிக் கலைகளுக்கோ, காவியங்களுக்கோ திராவிடத்தார்கள் எந்தக் காலத்திலும் மதிப்பளித்ததில்லை. அதுமட்டுமல்ல, அவற்றிற்கு மதிப்பளிக்கும் அறிஞர்களின் மானத்தைக் கெடுக்கும் வகையில் ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு ஏசிப்பேசுவதும் அவர்களின் அன்றாடவேலை. ஆங்கிலேயன் இந்த நாட்டை விட்டுப் போகமாட்டான் என்ற நம்பிக்கை இருந்தவரை, திராவிடத்தார்கள் ஆங்கிலமாயைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். சைமன் ராமசாமி, ஸ்டாலின் ஜெகதீசன், எட்வர்டு மாணிக்கம், மேயோ குப்பம்மாள், மிஸஸ் மிராண்டா என மேல் நாட்டாரின் ஆங்கிலப் பெயர்களைத் தங்கள் பெயர்களுக்கு முன்னே முடிசூட்டியது போன்று வைத்துக் கொள்வதில் ஆனந்தப்பட்டார்கள்.
ஆனால், தேசிய எழுச்சியாலும், பாரதியாரின் கவிதைகளாலும் மக்களிடையே நாட்டுப் பற்றோடு மொழிப்பற்றும் வேகமாக வளர்ந்தது. அதோடு, வெள்ளையாட்சி வெளியேறுவது திண்ணம் என்ற நிலையும் தோன்றியது. ஆகவே, தமிழை வாழ்த்தினாலொழிய தாங்கள் வாழமுடியாது என்பதை உணர்ந்து கொண்டனர் திராவிடத்தார்கள். அதனால் சைமன், ஸ்டாலின், எட்வர்டு, மேயோ, மிராண்டா என்ற பெயர்களுக்கெல்லாம் தலை முழுக்குப் போட்டுவிட்டு, நாராயண சாமி- நெடுஞ்செழியரானார்! ராமையா-அன்பழகனானார்! நடராசர்- கூத்தரசரானார். ஆம்; விலை போகாத பண்டத்திற்கு வியாபாரி லேபிள் மாற்றுவது போல, புதிய பெயர்களில் பழைய பேயாட்டங்களைத் தொடர்ந்து நடத்துகின்றனர். உள்ளத்தில் உண்மைத் தமிழ்ப்பற்று இல்லாவிடினும், இவர்களது நடிப்பில் மயங்கி இவர்களும் உண்மையான தமிழ்ப் பற்றுடையவர்கள்தான் என்று நம்பினர்- நம்புகின்றனர் பண்டிதப் பெருமக்களில் பலர். ஆனால், என்னதான் திறமையாக வேஷம் போட்டாலும், சில சந்தர்ப்பங்களில் வேஷம் கலைந்து உண்மை வெளிப்பட்டு விடுகிறது.
சிலப்பதிகாரம், நாம் திராவிடர் அல்லர்-தமிழர்; நமது தாயகத்தின் பெயர் திராவிடமன்று-தமிழகம்; அதன் வடக்கெல்லை விந்தியமன்று-வேங்கடம்; தமிழ் நாட்டு அந்தணர் ஆரியரல்லர்-தமிழர் என்கின்றது. மற்றும், தமிழருடைய பண்பாடும் பழக்க வழக்கங்களும் பெரும்பாலும் வேங்கடத்திற்கு வெளியே உள்ளவர்களின் பண்பாடுகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் வேறானவையாயினும் விரோதமானவையல்ல என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. இந்த உண்மைகளுக்கு நேர்மாறான போக்கிலே'காலட்சேபம்' நடத்திக் கொண்டிருக்கும் ஈ.வெ.ரா., சிலப்பதிகாரத்தை எதிர்ப்பதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், ஒரு கோடி ஈ.வெ.ரா.க்கள் புறப்பட்டாலும், தமிழ் மக்களிடையே சிலப்பதிகாரத்திற்குள்ள செல்வாக்கை குறைக்க முடியாது.
தமிழ் முரசு -ஏப்ரல், 1951
சிலம்பொலிக்கு எதிரொலி!
தொகுசென்னையில் கூடிய சிலப்பதிகார மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. தலைமை வகித்த டாக்டர்.மு.வ. கூறியது போன்று, தமிழ் மொழியின் வரலாற்றிலேயே சிலப்பதிகாரத்தின் பெயரால் மாநாடு கூடியது இதுதான் முதல் தடவை. என்றாலும், முடிவானது அன்று. இனி, மாவட்டங்கள் தோறும், சிற்றூர்கள் தோறும் சிலப்பதிகார மாநாடுகள் தொடர்ந்து நடைபெறும். ஏனெனில், சென்னையில் மாநாடு கூட்டியவர்ககள் செந்தமிழின் பெயரால் சிந்துபாடி வயிறு வளர்ப்பவர்கள் அல்லர்.செந்தமிழின் வாழ்வுக்காகவும், வளர்ச்சிக்காகவும், தங்கள் வாழ்வையும் வளர்ச்சியையும் இழக்கத் துணிந்தவர்கள்.ஆகவே, துவக்கி வைத்த இந்த நற்பணியை இனியும் தொடர்ந்து நடத்த அவர்களிடம் திட்டம் உண்டு. அதை நிறைவேற்றும் திறமை படைத்த தீரர்களும் உண்டு. ஆம்; இனி செந்தமிழ் நாட்டில் சிலம்பு தொடர்ந்து ஒலிக்கும் என்பது மட்டுமல்ல; ஒளியும் வீசும் என்று கூறலாம். அந்த ஒளியிலே தமிழுக்காக-தமிழ் நாட்டுக்காக உண்மையாகப் பாடுபடுவோர் யார்;தமிழின் பெயரால் வருமானத்தைப் பெருக்கி வயிறு வளர்ப்போர் யார்? என்பதை மக்கள் நன்கு தெரிந்து கொள்வார்கள்.
சென்னையில் சிலப்பதிகார மாநாடு கூட்டியவர்கள் பெரும்பாலும் தேசீயவாதிகளாவர். ஆயினும், சிலப்பதிகார மாநாடு தேசீய விரோதிகளின் வட்டாரத்திலும் எதிரொலி செய்திருக்கிறது. இது எதிர்பார்த்ததுதான்!
'சிலம்பு ஒலித்தது’ என்ற தலைப்பில், சிலப்பதிகார மாநாடு பற்றி நையாண்டி செய்யும் கட்டுரை ஒன்றைப் பிரசுரித்திருக்கிறது திராவிடநாடு. நேருக்கு நேர் வாதாடுவது வீரர்களின் வழக்கம். ஒளிந்தும் நெளிந்தும் குறும்புத்தனம் செய்வது கோமாளிகளின் வேலை. ஆனால், "முன்னேற்றம்" என்ற முத்திரை தாங்கிய கட்சித் தலைவரின் ஏடு, வீரர்களுக்குரிய முறையில் வெளிப்படையாக வாதாடாமல், கோமாளிகளுக்குரிய குறும்புத்தனத்தில் இறங்கியிருக்கிறது.
"சென்னை மாநாட்டில் சிலம்பு ஒலித்தது.
ஆனால்,அதன் ஒளியை மறைத்து விட்டார்கள்."
என்று ஒலமிடுகிறது 'திராவிடநாடு’. மாரிக் காலத்தில் இடியொலி கேட்கும்போது, அதனோடு சேர்ந்து வருகிற மின்னல் ஒளியையும் காணத்தான் செய்கிறோம். ஆனால், அந்த ஒளியைக் காண முடியாத குருடர்களுக்கு இடியோசை மட்டுந்தான் கேட்கும். மின்னலின் ஒளி தெரியாது. அது போன்று, கண்ணிருந்தும் குருட்டுப் போக்கில் செல்லும் 'திராவிட நாடு’ வின் கட்டுரையாளருக்கு கண்ணகி பந்தலில் வீசிய பேரொளியைக் காண முடியாதுதான்!
டாக்டர் மு.வ., அறிஞர் சேதுப் பிள்ளை ஆகியோரின் பேச்சுக்களிலே, இங்குமங்குமாக இரண்டொரு வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து வைத்துக்கொண்டு, தம்முடைய குறும்புத் தனத்திற்கேற்ப ஆராய்ச்சி செய்கிறார், 'திராவிடநாடு' கட்டுரையாளர்.
ஏனைய காவியங்களைப்போல் அல்லாமல், சிலப்பதிகாரத்தில், கற்பனை குறைந்த அளவில் இடம் பெற்றுள்ளது" என்றார் டாக்டர் மு.வ. இதை வைத்துக்கொண்டு, கண்ணகி கொங்கையைப் பிய்த்தெறிந்த காட்சியைக் கற்பனை எனக் கூறுவதோடு நையாண்டியும் செய்கிறார் கட்டுரையாளர்.
பிறந்திடத்தைத் தேடுதே பேதை மடநெஞ்சம்
கறந்திடத்தை நாடுதே கண்.
என, காமவெறி படைத்த உள்ளத்தைக் கடிந்து கொண்டார் பட்டினத்தார். எங்கும் எதிலும் பிறந்திடத்தையும், கறந்திடத்தையும் காணுவதிலேயே களிப்படைந்த கூட்டத்தார் 'கடந்த காலத்தில் மட்டுமல்ல' இக்காலத்திலும் உண்டு என்பதைத் தம்மைக் கொண்டே மெய்ப்பிக்கிறார் கட்டுரையாளர்.
கண்ணகியின் ஆற்றலுக்கு அத்தாட்சியாக எத்தனை எத்தனையோ செய்திகள் உண்டு சிலப்பதிகாரத்தில். அதையெல்லாம் விட்டு விட்டு கறந்திடத்தையே நாடுகிறது கட்டுரையாளரின் கண். 'அரசியல் பிழைத்தோரை அறக்கடவுள் கூற்றுவன் வடிவில் வந்து கொல்லும்' என்ற சிலப்பதிகார வரிகளை எடுத்துக் காட்டி இன்றைய அரசினரை எச்சரித்தார் அறிஞர் சேதுப்பிள்ளை. இதை வைத்துக்கொண்டு கூத்தடிக்கிறார், கூற்றுவனிடம் நம்பிக்கையில்லாத கட்டுரையாளர். இந்தச் சான்றை சேதுப்பிள்ளை மட்டுமல்ல; இன்றைய ஆட்சியை ஆதரிக்கும் தேசியவாதிகளே ஆயிரமாயிரம் மேடைகளில் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். அரசினர் மீது பழி கூற அல்ல; அவர்களைப் பண்படுத்த! அரசு நெறிபிறழ்ந்த ஆங்கிலக் கொடுங்கோலைக் கூற்றுவன் வடிவில் வந்து கொன்றார்கள் தேசீயவாதிகள். ஆனால், அந்தக் கொடுங்கோலுக்குக் குற்றவேல் புரிந்தார்கள் திராவிடத்தார்கள். ஆகவே, சிலப்பதிகாரத்தில் வரும் அந்தப் பகுதியை இன்றைய அரசினருக்கு எதிராக எடுத்துக் காட்டத் திராவிடத்தார்களுக்கு உரிமை கிடையாது.
சிலப்பதிகார மாநாடு கூட்டிய தேசிய வாதிகளின் தமிழ்பற்றை நையாண்டி செய்கிறார் கட்டுரையாளர். "மொத்தத்தில் சிலம்பு ஒலித்தது; அதுவரை லாபந்தான். சிலம்பையாவது ஒலிக்க நினைத்தார்களே!" என்கிறார்.
ஏதோ இத்தனை நாளும் தாங்கள்தான் சிலம்பை ஒலிப்பித்துக் கொண்டிருந்தது போலவும், இப்போதுதான் தேசீயவாதிகள் சிலம்பைப்பற்றிச் சிந்தித்திருப்பது போலவும், நாட்டு மக்களை நம்ப வைக்கப் பார்க்கிறார் 'திராவிட நாடு' கட்டுரையாளர். பன்னிரண்டு பக்கங்களுள்ள 'திராவிட நாடு' இதழில், ஏழு பக்கங்களுக்குக் கட்டுரை எழுதியிருக்கிறார், காஞ்சீபுரத்தாரின் திருத்தொண்டர். அந்த ஏழு பக்கங்களில் கண்ணகியின் கற்பைப் பற்றிப் பாராட்டும் வகையில் ஒரு வரிகூட-ஒரு வார்த்தை கூட இல்லை. இதுதான் இவர்கள் சிலப்பதிகாரத்திற்குச் சிறப்பு செய்யும் வகை போலும்!
சிலம்பின் சிறப்பை, கட்சிக் காழ்ப்பின்றி-சாதிப்பகையின்றி- காமவெறியின்றிச் சித்தரித்துக் காட்டினார்கள் மாநாட்டின் பேச்சாளர்கள்.அப்படிப் பட்டவர்களைப் 'போலிகள்' என்று கூறுகின்றார், போலித்தனமின்றி வேறொன்றறியாதவர். உண்மையிலேயே திராவிடத்தார்கள் சிலப்பதிகாரத்திற்குச் சிறப்புத்தேட விரும்பியிருந்தால், அதை எத்தனையோ வகைகளில் செய்திருக்க முடியும். எம்.ஏ. பட்டம் பெற்ற 'திராவிடநாடு' ஆசிரியர், கண்ணகியின் சிறப்பை ஆங்கிலத்தில் எழுதி அகில உலகத்திலும் பரப்பி இருக்கலாம். செய்ததுண்டா? கிடையாதே! ரோமாபுரி ராணிகளின் அங்க அழகை அந்தரங்க லீலைகளைக் காமத்தேன் நனி சொட்டச் சொட்ட எழுதுவதற்கு நேரமிருந்தது. அதை அச்சிட்டு மாணவர்களிடையே விற்றுப் பணமாக்கிக் கொள்ளவும் மனமிருந்தது. ஆனல், சிலம்பால் புரட்சி விளைவித்த வீரக் கண்ணகியின் செய்தியை ஆங்கிலத்தில் எழுத ஆற்றலிருந்தும், அவகாசமில்லை!
வலது கொங்கையைத் திறந்த கோலத்தோடு, ஒரு மங்கையைப் படம் போட்டு புத்தகம் தயாரிப்பது- அதை மாணவர்களீடையே விற்றுப் பணம் சம்பாதிப்பது அறிவுத் தொண்டாம்! கொடுங்கோலன் மீது கொண்ட கோபத்தால் ஒரு கற்பரசி, இடது கொங்கையைப் பிய்த்தெறிந்தாள் என்று கூறுவது அறியாமையாம். தாயினத்தின் பெருமையை- தமிழினத்தின் சிறப்பை நையாண்டி செய்வதையே தொழிலாகச் கொண்ட இந்தக் கூட்டத்திற்கும் தமிழகத்தில் வாழமனை இருக்கிறது; வயிறு வளர்க்க வசதியுமிருக்கிறது! தமிழகமே, நீ சீர்படும் நாள் எந்நாளே?
அறிஞர் சேதுப்பிள்ளை, "ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற தமிழகம் வேறு எவருக்கும் அடிமைப்படக் கூடாது" என்று தமது திறப்புரையில் கூறினார். நாவறட்சி கொண்டவன் கானலை நீர் என்று எண்ணிக் களிப்படைவது போல, சேதுப்பிள்ளையின் கூற்றைத் திரித்துக் கூறிக் களிப்படைகிறார், உண்மைக்கும் பொய்க்கும் வேற்றுமை காணாத கட்டுரையாளர். சேதுப்பிள்ளை, ' தமிழகம் வடநாட்டாரோடு தொடர்பு கொள்ளக் கூடாது' என்ற பொருளில் அப்படிக் கூறவில்லை. "தமிழகம் தனி ராஜ்ய உறுப்பாக விளங்க வேண்டும்" என்று ஐயத்திற்கிடமின்றி அறிவித்தார். இது தினசரிப் பத்திரிக்கைகளிலேயே வெளிவந்த செய்தி. குடியரசுச் சட்டப்படி,"தனிராஜ்ய உறுப்பு" என்பது இந்திய யூனியனில் இணைந்துள்ள மாகாணங்களுக்குப் பெயர். ஆங்கிலத்திலுள்ள குடியரசுச் சட்டத்தை தமிழில் பெயர்க்கும் பணியை ஏற்றுள்ளார் சேதுப்பிள்ளை. ஆகவே, தாம் கோரும் தமிழகத்தின் அரசியல் அந்தஸ்து எத்தகையது என்பதை சந்தேகத்துக்கு இடமற்ற வகையில்-சட்ட ரீதியான வார்த்தையில் கூறிவிட்டார்.
ஆனால், சத்தியத்திலும் நம்பிக்கையின்றி, சட்டத்திலும் ஞானமின்றி கட்சி வளர்ப்பதையே வாழ்க்கைத் தொண்டாகக் கொண்டுவிட்ட கட்டுரையாளருக்கு இது புரியாததில் வியப்பில்லை. தமிழகம் வேறு எவருக்கும் அடிமைப் பட்டிருக்கக்கூடாது என்று அவர் கூறியதன் பொருள் என்ன? தமிழகம் தனியரசு பெறாமல் ஆந்திர- கேரள கன்னடப் பகுதிகளோடு கட்டுப்பட்டிருக்கக் கூடாது என்பதேயாகும். கட்டுரையாளர் இந்த உண்மையை இனியேனும் உணர்வாரா?
"இருபது ஆண்டுகளாக நாம் ஆற்றும் பகுத்தறிவுப் பணியின் பரிசு, குறளும் சிலம்பும் கொண்டாடப் படும் முயற்சி"
என்கிறார் கட்டுரையாளர். இரவலுக்குப் பிள்ளை வாங்கி, அதைத் தம் பிள்ளையெனக் காட்டிப் பிச்சை எடுக்கும் சங்கை கெட்ட மங்கையர் சிலரைப் பார்த்திருக்கிறோம். இந்தப் போலித் தாயார் போன்று தமிழுக்கு-தமிழக வளர்ச்சிக்கு-தமிழகத்தின் வாழ்வுக்கு, எங்கு யார் பாடுபட்டாலும் அதெல்லாம் தங்கள் கிளர்ச்சியின் எதிரொலியின் என்று பிரச்சாரம் செய்வது-நன்றி, நாணயம் என்ற பண்பு கொஞ்சங்கூட இல்லாத திராவிடத்தாரின் தொழில். சிலப்பதிகாரம் பரவியதற்கு தங்கள் உழைப்பே காரணம் என்று கூறும் கட்டுரையாளர் எங்கே-எப்போது- எப்படி உழைத்தார்கள் என்பதை விளக்கவில்லை. பார்ப்பனரான உ.வே. சாமிநாதய்யர், செல்லரித்துக் கிடந்த சிலப்பதிகார ஏடுகளைச் சீராக்கி அச்சடித்துக் கொடுத்ததும், சிலப்பதிகாரத்தைப் பண்டிதரேயன்றி பாமரரும் படிக்கும் வகையில் புலவர் வேங்கடசாமி நாட்டார் உரை எழுதியதும் திராவிடத்தார்கள் செய்த முயற்சியின் எதிரொலிதானோ? இப்படியும் படுபொய் பேசி தமிழ் மக்களை ஏய்த்துப் பிழைப்பதைவிட, வேறொரு நல்ல தொழிலை நாடுவது நலம்.
சிலப்பதிகார மாநாட்டன்று இரவு. "ஒளவையார்" நாடகம் நடை பெற்றதல்லவா? அது பிடிக்கவில்லை 'பகுத்தறி'வாளருக்கு! மாநாட்டைக் கூட்டியதன் கருத்து கண்ணகியைப் போற்றுவதன் மூலம் அவ்வீராங்கனையைப் பெற்றெடுத்த பெண்ணினத்தைப் போற்றுவதாகும். இதை டாக்டர் மு.வ.,
"இது சிலப்பதிகார ஆராய்ச்சி மாநாடன்று காவியத் தலைவியைப் பாராட்டும் மாநாடு"
எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதனாற்றான், தமிழகத்தின் வீரப் பெண்ணைப் பாராட்டும் திருநாளில் தமிழ்ப் பெண்ணினத்தின் அறிவுக் களஞ்சியமான 'ஒளவையார்' நாடகம் நடத்தப்பட்டது.
போகட்டும்; கட்டுரையாளரின் பொய் வாதங்களால் சிலப்பதிகார மாநாட்டின் சிறப்பைக் குறைத்து விடமுடியாது. பாவம்!தமிழறிஞர்களை என்றென்றும் தேசீய முகாமுக்கு எதிர் முகாமிலேயே நிறுத்தி விடலாம் என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கையை நாசமாக்கிக் காட்டிவிட்டது சிலப்பதிகார மாநாடு. தேசீயத்தோடு தமிழ் இரண்டறக் கலந்து விட்டது. இனி, அது தேசீய விரோதிகளின் முகாமுக்குப் பயன்படாது. ஒருவேளை,அந்த முகாமை முறியடிப்பதற்குப் பயன் படலாம். ஆனால் சிலப்பதிகார மாநாட்டைக் கூட்டியவர்கள் சிந்தனை அதுவன்று.
'வித்தகம் பேச வேண்டாம்
பணி செய்தல் வேண்டும்'
தமிழ் முரசு - ஏப்ரல் 1951