இலக்கியத்தில் வேங்கட வேலவன்/இலக்கியத்தில் வேங்கட வேலவன்

இலக்கியத்தில் வேங்கட வேலவன்

புதுச்சேரி சமரச சன்மார்க்க சங்கத்தில் 26-11-1987 ஆம் நாள் யான் ஒரு சொற்பொழிவு செய்தேன். அப்போது ஒரு கருத்தை விளக்குவதற்கு எடுத்துக்காட்டாக, திருப்பதி—திருமலையில் இருந்த முருகன் கோயில் பிறகு திருமால் கோயிலாக மாற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறதல்லவா? அதுபோல! என்று கூறினேன்.

சித்தன் வினா

நான் இதைச் சொல்லி முடிப்பதற்குள், எனக்குப் பலமுறை இலவசமாகப் பல் மருத்துவம் செய்தவரும் என்னை கழகப் புலவராகக் கொண்டிருந்த புதுவைக் கல்விக் கழகத்தின் தலைவரும் தமிழ்ப்புலவரும் கவிஞரும் என் அரிய பெரிய நண்பருமாகிய திரு. சித்தன், திருப்பதி முருகன் கோயில் திருமால் கோயிலாக மாற்றப்பட்டது என்பதற்கு ஆதாரம் கூற வேண்டும் என்று கேட்டார். அவர் கேட்டதனால் யான் பின்வரும் ஆதாரத்தைக் கூறினேன்:

பத்தர் கூறியது

யானும் திரு அரங்கநாத-பரம தயாளம் பிள்ளையும் சங்கச் செயற்குழு உறுப்பினர் திரு. கோவிந்தப்பத்தரும் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது கோவிந்தப் பத்தர் பின்வரும் செய்தியைக் கூறினார் : “நான் (பத்தர்) ஒரு முறை திருப்பதி மலைக்குச் சென்ற போது, கோயில் கோபுர வாயிற்படி எதிரில், சுமார், இருபது காவடிகளை அன்பர்கள் சுமந்து கொண்டு ‘முருகனுக்கு ஆரோகரா’ - என்று சொல்லிக் கொண்டே ஆடினார்கள். என்ன இது என்று பட்டாசாரியரைக் கேட்டதற்கு எங்களுக்கு இரண்டும் (முருகன், திருமால்) ஒன்று தான் என்று கூறினார். காவடி ஆடிய அன்பர்களைக் கேட்டதற்கு, எங்களுக்குப் பரம்பரையாகத் திருமலைக் கோயில் முருகன் கோயில் தான். நாங்கள் பண்டைக்கால வழக்கப்படி தொடர்ந்து காவடி கொண்டு வந்து ஆடிப் பாடுகிறோம் என்று கூறினர். மற்றும், கோயில் மதில்களின் மேல் கருடன் சிலைக்குப் பதிலாகச் சிங்கத்தின் சிலைகள் நான்கு பக்கமும் வைக்கப்பட்டுள்ளன’-இது, உயர்திரு பத்தர் கூறிய செய்தி.

சிங்கம் இருப்பது, திருமாலின் நரசிங்கப் பிறவியைக் குறிக்கும் என்று சிலர் கூறலாம். அப்படியானால், வெறுஞ் சிங்க வடிவம் இன்றி நரசிங்க வடிவம் வைத்திருக்கலாமே என்று சிலர் கேட்கலாம், இந்த ஆதாரத்தை யான் திரு. சித்தனுக்குக் கூறினேன்.

கோபாலய்யரின் குறுக்கீடு

அப்போது, எந்தச் சமயத்திலும் யாருக்கும் தரப்படாத தலைமைப் புலவர் என்னும் பட்டம், சங்கத்தாரால் தமக்குந் தரப்பெற்றுள்ள திரு. கோபாலய்யர் என்பவர் என்னைநோக்கி, சிலப்பதிகாரத்தில் திருப்பதி மலை திருமாலுக்கு உரியதாகச் சொல்லப்பட்டுள்ளது: நீங்கள்தான் சிலப்பதிகாரம் இற்றைக்கு 1800 ஆண்டுகட்கு முற்பட்டது என்று சொல்கிறீர்களே. எனவே, அது முருகன் கோயில் என்பதற்கு வேறு இலக்கியம் சான்றுவேண்டும் என்று கேட்டார். "நீங்கள்தான் சிலப்பதிகாரம் 1800 ஆண்டுகட்கு முற்பட்டது என்று கூறுகிறீர்களே என அய்யர் குறிப்பிட்டது, நாங்கள் ஏதோ ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் போலவும், அவர் அதற்கு மாறான குழுவைச் சேர்ந்தவர் போலவும், நாங்கள் தகாததைச் சொல்வது போலவும்-எண்ணத்தக்க ஒரு பொருட்படுத்தாமைப் போக்கு (அலட்சியப் போக்கு) அவர் பேச்சில் தென்பட்டது.

அவருக்கு முன்பே சிலப்பதிகாரம் படித்திருந்த நான்-சிலப்பதிகாரத்தைப் பற்றி முப்பத்தொரு தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு எழுதி வைத்திருக்கும் நான், அதை மறுக்கவில்லை! சிலப்பதிகாரக் காலத்திற்கு முன்பு அது முருகன் கோயிலாக இருந்திருக்கலாம் அல்லவா? என்று கூறினேன். அதற்கு அய்யர். எனக்கு இலக்கிய ஆதாரம் வேண்டும் என்றார். அதற்கு நான் பின்வரும் செய்தியைக் கூறி விளக்கலானேன் அதாவது:

மூவகை வரலாறு

வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ள உதவும் துணைக் கருவிகளைக் கொண்டு வரலாற்றை மூன்று வகையாக வரலாற்றறிஞர்கள் பிரித்து வைத்துள்ளனர். அவையாவன:-ஒன்று, பட்டப் பகலில் நடந்த வரலாறு இரண்டு, வைகறையில் தெரிந்தும் தெரியாததுமாய் இருக்கின்ற பனி மூட்டத்தில் நடந்த வரலாறு மூன்று, வெளிச்சம் சிறிதும் இல்லாத அமாவாசை நள்ளிரவில் நடந்த வரலாறு-என்பன

பட்டப் பகலில் நடந்த வரலாறாவது:-ஆண்டு, திங்கள், நாள் மணி, இடம், ஆட்கள், நிகழ்ச்சி ஆகிய அனைத்தும் குறிப்பிடப்பட்டு எழுதி வைத்திருக்கும் வரலாறு. வைகறையில் பனி மூட்டத்தில் நடந்த வரலாறாவது : முறையாக எழுதி வைக்கப்படாமல், சங்க இலக்கியங்கள் போன்ற இலக்கிய நூல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தரப்பட்டிருக்கும் கருக்கமான செய்திகளைக் கொண்டு ஒரு தோற்றமாக எழுதிவைக்கும் வரலாறாகும். சேர, சோழ, பாண்டியர் வரலாறு இத்தகையதே. அமாவாசை நள்ளிரவில் நடந்த வரலாறாவது:- புதைபொருள் அகழ்வாராய்ச்சி, வழிவழியாக வரும் மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டு எழுதிவைக்கும் வரலாறாகும், இவற்றுள், பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து காவடி கொண்டு வந்து ஆடும் மக்களின் பழக்க வழக்கப் பண்பாட்டைக் கொண்டு, மிகவும் பழைய காலத்தில் முருகன் கோயிலாயிருந்தது என்று தீர்மானிக்கலாம்-என்று யான் கூறினேன். இந்த மூன்று வரலாற்று வகை பற்றி யான் ஒர் ஆங்கில வரலாற்று நூலில் படித்தறிந்தேன். இந்த மூவகை பற்றிய செய்தியை 1964 ஆம் ஆண்டே யான் எனது “தமிழ் அகராதிக்கலை” என்னும் நூலில் தந்துள்ளேன்

”Tradition”

யான் இதிசெய்தியை அறிவித்தும், திரு கோபாலய்யர் ஒத்துக் கொள்ளாமல் இலக்கிய ஆதாரம் கேட்டார். இந்த நேரத்தில், ஓய்வு பெற்ற புதுவை அரசுச் செயலராகிய திரு. முத்துக் குமாரசாமி என்னும் அறிஞர் Tradition தான் முக்கியம் என்றார்: அதாவது, மக்களின் பழக்க வழக்கந்தான்-மரபு வழிச் செய்திதான்-செவி வழிச் செய்திதான் முக்கியம் என்பது அவர் சொன்ன கருத்தாகும்.

முருகாற்றுப்படை

பிறகும் கோபாலர் இலக்கியச் சான்று கேட்டார். அதற்கு நான், திருமுருகாற்றுப்படையில் முருகன் குன்று தோறும் ஆடுவதாகவும் குறிஞ்சிக் கிழவன்-மலை கிழவோன் என்றெல்லாம் கூறப்பட்டிருப்பதாகவும் சொல்வி, திருப்பதி மலையும் முருகன் ஆடும் குன்றாயிருக்கலாம் என்று கூறினேன். பின்னர் அய்யர், திரு முருகாற்றுப்படையில் திருப்பதி மலையை ஏன் நக்கீரர் சொல்லவில்லை என்று கேட்டார். அதற்கு நான், எல்லா மலைகளையும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? அப்படியென்றால் திருத்தணிகை முதலிய மற்ற மலைகளையெல்லாம் சொல்ல வேண்டியதில்லையா? என்று கூறிப் பின்வரும் செய்தியையும் கூறினேன்:

சங்க நூல்களில், நக்கீரர், மதுரைக் கணக்காயனார். மகனார் நக்கீரனார் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளார். அவர் பாண்டிய நாட்டுக்காரர். அவர் திரு. முருகாற்றுப்படையில் கூறியிருக்கும் பெயர்களுள் பெரும்பாலன பாண்டிய நாட்டுப் பெயர்களே. திருவாவினன் குடி (பழநி) மதுரை மாவட்டத்தில் உள்ளது. திருப்பரங்குன்றம் மதுரைக்கு மேற்கே 1 கி. மீ. தொலைவிலுள்ளது. அருணகிரிநாதர் போன்றோர் ஓர் ஊராகக் கொண்டிருக்கும் பழமுதிர் சோலை என்பது மதுரைக்கு வடக்கே 20 கி. மீ. தொலைவில் உள்ளது. பழமுதிர் சோலை ஓர் ஊர் இல்லை என்றால் விட்டுவிட லாம். மற்றும் திருச்செந்தூர், தென்பாண்டி நாட்டில் - அதாவது-மதுரை மாவட்டத்தை அடுத்த நெல்லை மாவட்டத்தில் உள்ளது. எனவே, தொலைவிலுள்ள திருப்பதிமலை, திருத்தணிகைமலை முதலியவற்றை அறிந்தோ அல்லது அறியாமையாலோ சொல்ல வில்லை, மற்ற ஊர்களையெல்லாம் 'குன்று தோறு ஆடல்' என்பதனுள் அடக்கி விட்டார் என்று நான் கூறிக் கொண்டிருந்தேன்.

நான் முற்றும் முடிப்பதற்குள், திருமுருகாற்றுப் படையிலுள்ள ஏரகம் மலை நாட்டில் உள்ளது என்று அய்யர் கூறினார். ஏரகம், தஞ்சையை அடுத்த சுவாமி மலை என்றும் மலைநாட்டு ஊர் என்றும் இருவகையாகக் கூறுவதை யான் இளமையிலிருந்தே அறிவேன். மலையாளத்தில் உள்ள ஏரகம், பாண்டிய நாட்டு எல்லைக்கு எத்தனையாவது கல் தொலைவில் உள்ளது என்பதைக் கோபாலய்யர் கூறவில்லை.

மற்றும், கோபாலய்யர், பழமுதிர் சோலை ஓர் ஊர் இல்லை. பழமுதிர் சோலையையுடைய மலைக்கு உரியவன் (கிழவோன்) என்பது பொருள்-என்று கூறினார். சரி, பழமுதிர் சோலை ஓர் ஊர் இல்லை; 'மலை கிழவோன்' என்பது மலைப் பகுதிகட்கு உரியவன் என்னும் பொருள் படுமாயின், திருப்பதி மலையை' விலக்குவது எதற்காகவாம்?

மைவரை உலகம்

இவ்வாறு உரையாடல் நடந்து கொண்டிருந்தபோது சங்கத்தில் பாடம் நடத்துபவர்களுள் ஒருவராகிய திரு. பழநி பிள்ளை என்னும் அறிஞர், கோபாலய்யருக்குப் பதில் தரும் வகையில் இலக்கிய ஆதாரம் வேண்டுமா? தொல்காப்பியத்தில்

"மாயோன் மேய காடுறை உலகமும்
சே யோன் மேய மைவரை உலகமும்"—

என்று தொல்காப்பியர் கூறியுள்ளாரே. சேயோனாகிய முருகனுக்கு மலைகள் உரியன என்று கூறியிருக்கும் போது இன்னும் என்ன இலக்கிய ஆதாரம் வேண்டும்? திருமுரு காற்றுப் படையில் உள்ள "குன்று தோறாடல்" என்பதில் திருப்பதி மலையும் அடங்கி விடுமே-என்று கூறினார். அதற்குச் சித்தன், எல்லாக் குன்றுகளிலுமா முருகன் ஆடுகிறார் (அல்லது முருகன் கோயில் உள்ளதா) என்று வினவினார். இது என்ன கேள்வி: செங்குத்தாயும் உச்சி கூராயும் குவிந்தும் உள்ள மலைகளில் கோயில் கட்ட முடியவில்லை. ஒரளவு சரிவாயும் உச்கி ஒரளவு தட்டையாயும் உள்ள மலைகளில் முருகன் கோயில் கட்டியுள்ளனர். இஃது இயற்கைதானே!

கந்தபுராணத்திற்குக் கல்லறை

பின்னர், திரு பழநி பிள்ளை "கந்த புராணத்தில்" என்று தொடங்கினார்; இன்னும் ஏதும் சொல்வதற்குள் கோபாலய்யர் கந்த புராணம் பிற்காலத்தது என்று உதறி விட்டார். திரு. சித்தன், கந்த புராணம் ஒரு புராணமா? அது கந்தல் புராணம் என்று கூறிக் கந்த லாக்கி விட்டார். இவ்வாறாக இருவரும் சேர்ந்து கந்த புராணத்திற்குக் கல்லறை கட்டி விட்டனர். தமிழ்த் தெய்வம்-தமிழ் முருகன் என்றெல்லாம் எப்படியோயாராலோ போற்றப் பெறும் முருகனைப் பற்றியது கந்த புராணம்-முருகன் தமிழ் நாட்டில் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டதாகக் கூறுவது கந்த புராணம். இந்த நூலுக்குக் கல்லறை கட்டப்பட்டது. கந்த புராணம் போலவே ஊசிப்போன கதைப் பகுதிகள் பல அடகிேயுள்ள பாரதம், பாகவதம், இராமாயணம், இன்ன பிற நூல்கள் கந்த புராணத்தின் கல்லறைமேல் களிநடம் புரியட்டுமே!

பாண்டுரங்கனாரின் பரிந்துரை

இந்த நேரத்தில், சங்கத்தின் பொருளாளராகிய திரு. கோ. பாண்டுரங்கன் என்பவர், திருப்பதி மலைக்கோயிலின் மதில்மேல் கருடன் இல்லாமல் சிங்கம் இருப்பதை நினைவூட்டினார். உடனே திரு பழநிபிள்ளை, "இதோ பாருங்கள்! வைணவராகிய இவரே சிங்கம் உள்ளது என்று கூறுகிறார்-என்று சுட்டிக்காட்டினார்.

வேங்கட வேலவன்

பிறகு நான் ஒரு சான்று கூறினேன். அஃதாவது:- ஆனந்தா எம்போரியம் புரவலர் திரு. ந. கோவிந்தசாமி கந்தர் சட்டி நாளன்று, புதுவை-காமராசர் நகரில் ஒரு சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் கூறிய ஒரு செய்தியாவது:-புதுவைப் பல்கலைக் கழகத் துணை வேந்தரின் பெயர் வேங்கட சுப்பிரமணியன் என்பது. இந்தப் பெயரைக் கொண்டு, திருப்பதி மலைக் கோயில் முன்னொரு காலத்தில் முருகன் கோயிலாயிருந்தது என அறியலாம்-என்பது அந்தச் செய்தி. இந்தச் செய்தி எனக்கு நினைவு வந்தது. பல்லாண்டுகட்கு முன்பே நான் அறிந்த செய்திதான் இது இந்தத் துணைவேந்தர் சென்னையில் பணியாற்றிய போது "வேங்கட வேலவன்" என்று சிலர் இவரைக் குறிப்பிடுவது வழக்கம். இங்கே நானும் இந்தப் பெயரைக் குறிப்பிட்டு வேங்கடத்தில் சுப்பிரமணியர் கோயில் (முருகன் கோயில்) இருந்தது என்பதை இதனாலும் அறியலாம் என்று கூறினேன்.

கொடுமை

இதைக் கேட்ட கோயாலய்யர், இதற்கு நேர்ப் பதில் கூறாமல், சப்பிரமணியம் என்பது ஏதோ பிரகாசத்தைக் குறிப்பதாக, எல்லாக் கடவுளர்க்கும் பொருந்துவதான ஒரு பொருள் கூறி, வேங்கட சுப்பிரமணியன் என்பது முருகனைத்தான் குறிக்கும் என்று சொல்ல முடியாது என்று கூறினார். இஃது என்ன மேதைமை-இல்லை யில்லை. என்ன கொடுமை! இசுலாமியர் வணங்கும் "அல்லா" என்னும் தெய்வப் பெயர்க்கும் எல்லாக் கடவுளர்க்கும் பொருந்துமாறு பொருள் சொல்ல முடியுமே! திரு, கோபாலர் இதோடு விட்டாரா என்ன !

கொடுமையிலும் கொடுமை

திருப்பதி மலையில் முருகன் இருப்பதாகத் திருப்புகழில் அருணகிரி நாதர் பாடியுள்ளார் என்று திரு. பழநி பிள்ளை கூறினார். அதற்கு அய்யர், திருப்பதி என்பது வேங்கடத்தைக் குறிக்கவில்லை; திருப்பதி என்றால் அழகிய ஊர் என்று பொருளாகும் என்பதாக ஏதோ சொன்னார். திருப்பதி வேறு-திருமலை வேறு என்றும் எங்கட்குப் புதிதாகக் கற்றுத் தந்தார். இது கொடுமையிலும் கொடுமை! தலைமைப் புலவர் அல்லவா அவர்? அருணகிரியார் திருப்புகழில் "வேங்கட மாமலை" என்றே வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்

தலமைத் தருக்கு

முருகனுக்கு அரோகரா என்று கூறிக்கொண்டே மக்கள் காவடி சுமந்து ஆடியதை யான் குறிப்பிட்ட போது, அய்யர் அதற்கு நேர்ப்பதில் கூறாமல், காவடி என்பதைக் கா அடி என்று ஏதோ பிரித்து ஏதோ அறுவை மருத்துவம் பண்ணி என் பேச்சுக்கு இடையீடு செய்து கொண்டேயிருந்தார். திரு. சித்தன் குறுக்கிடுவதை எப்போதே நிறுத்திக் கொண்டார். ஆனால், கோபாலர் மட்டும், என் பேச்சின் தொடக்கத்திலிருந்து முடிவு வரையும் இடைமறித்து ஏதாவது சொல்லிக் கொண்டேயிருந்தார். மற்றவர்கள் அமைதியாயிருக்கக் கோபாலய்யர் மட்டும் குறுக்கிட்டார் என்றால், அவர் தலைமைப் புலவர் அல்லவா? அந்தச் சங்கத்தில் எவரையும் மீற விடுவாரா என்ன! என்னிடம் யாரும் இதுபோல் குறுக்கிட்டது-இடைமறித்தது கிடையாது.

இராமாநுசரின் திருவிளையாடல்

இந்த நிகழ்ச்சி நடந்தபின்னர் ஒருநாள் யான் உயர்திரு. கோவிந்தப் பத்தர் அவர்கவைக் கண்ட போது, அவர்கள் முன்பு கூறியது போலவே கூறினார்கள். மற்றும் வைணவப் பெரியாராகிய உயர்திரு பாண்டுரங்கன் அவர்களும் மூன்போலவே சிங்கம் இருப்பதைக் குறிப்பிட்டு, மேலும் இரண்டு செய்திகள் தெரிவித்தார்கள். ஒன்று:- திருப்பதி மலைக் கோயிலில் மார்கழி மாதத்தில் வில்வம் கொடுக்கப்படுகிறது என்று கூறினார்கள். வில்வம் சைவத்திற்கு உரியதாகக் கொள்வது மரபு. இரண்டு:-வைணவத் தலைவராகிய இராமாநுசர் பாம்பு வடிவம் எடுத்து, தெய்வத் திருமேனியின் முழுக்கு நீர் வெளிவரும் கால் வழியாகக் கருவறைக்குள்ளே நுழைந்து, தெய்வத் திருமேனியில் சங்கையும் சக்கரத்தையும் பதித்து வந்து விட்டார் என்றும் கூறினார். இச்செய்திகள் சங்கப் பொருளாளராகிய பாண்டுரங்கனார் சங்கக் கட்டடத்திலேயே என்னிடம் தெரிவித்தவையாகும்.

பிறகு நான் வெளியில், வெளியூர்களில் யாரிடம் கேட்டாலும், "ஆமாம், முருகன்தான் பெருமாளாக்கப் பட்டதாகச் சொல்லப்படுகிறது. நெற்றி முழுவதும் நாமம் இட்டிருப்பது, வேறு எந்தக் குறியையோ மறைப்பதற்குத் தானாம் என்று கூறுகின்றனர். மற்றும் ஒரு வைணவ அறிஞர் கூறியன வருமாறு:-

புதுச்சேரியில் திரு. காந்தாளன் என்னும் வைணவப் பெரியார் ஒருவர் உள்ளார். அவர் தமிழ் அறிஞர்- தமிழ் ஆசிரியர்-நேர்மையானவர்-கண்டிப்பானவர்- அஞ்சாநெஞ்சுறுதி படைத்தவர் - என் அரிய பெரிய நண்பர். "தங்கள் மரபினர் நெற்றியில் கட்டாயம் திரு மண் (நாமம்) அணிந்து கொள்ள வேண்டும்-என்பது ஒரு கொள்கை"-என்று அவர் ஒருமுறை என்னிடம் கூறியுள்ளார். அவர் ஒரு நாள் எங்கோ சென்ற இடத்தில் திருநீறு (விபூதி) கொடுக்கப்பட்டதாகவும் சிறிதளவு திருநீற்றை அவர் நெற்றியில் தடவிக்கொண்டதாகவும், வழியில் அவரைக் கண்ட பெரியார் பரம தயாளம் பிள்ளையவர்கள், என்ன காந்தாளா! மதாந்தரம் போய் விட்டீரா' என்று கேட்டதாகவும்-அவர் என்னிடம் கூறி யுள்ளார். மாதாந்தரம் (மத+ அந்தரம்) என்றால் வேறு மதம் என்று பொருளாம்:

அண்மையில் ஒரு நாள் அறிஞர் காந்தாளனும் யானும் நேர் கண்டு சில செய்திகள் பற்றிப் பேசிக்கொண் டிருந்தோம். அவர் பின்வருமாறு ஒரு கருத்து கூறினார். புஷ்பங்களுள் சிறந்தது ஜாதி மல்லிகை; புருஷர்களுள் சிறந்தவர் விஷ்ணு; நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம்- என்னும் கருத்துடைய பாடல் ஒன்று கூறினார். இந்த அடிப்படையில் தான், "புருஷோத்தமன்" என்ற பெயர் திருமாலுக்கு உள்ளது போலும் என்று யான் கூறினேன். பின்னர் யான், பின் வருமாறு அவரிடம் ஒன்று. வினவினேன்:

காந்தாளன் கருத்துரை

கணேசன், விக்னேசுவரர், முருகேசன், குமரேசன், பாடலேசுவரர், காளத்தீசுவரர், வேத புரீசுவரர், திருக்காமேகரர் என்றெல்லாம் ஈசன்--ஈசுரர்- ஈசுவரர் என்று முடியும் பெயர்கள் சைவத்தில் உள்ளவாறு வைணவத்தில் உண்டா?-என்று வினவினேன். அவர் சிறிது. நேரம் ஏதோ எண்ணிப் பார்த்து விட்டு இப்படி வைணவத்தில் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை" என்று. கூறினார், உடனே நான், வேங்கடேசன். வேங்கடேசுவரர் என்ற பெயர்கள் வைணவத்தில் உள்ளனவே, இவை திருப்பதி-திருமலைத் திருமாலைக் குநிக்காவா?-என்று கேட்டேன்- அதற்கு அவர் கூறியதாவது:- வேங்கடேசன், வேங்கடேசுவரர் என்பன வைணவப் பெயர்கள் அல்ல; அவை சைவப் பெயர்கள்: ஒரு காலத்தில் சைவக் கோயிலாயிருந்த திருப்பதி-திருமலைக் கோயில் பின்னர் வைணவக் கோயிலாக மாற்றப்பட்டது என்று சொல்கி றார்கள்; வைணவத் தலைவர் இராமாநுசர். தமது ஆத்ம சக்தியால் அந்தக் கோயிலின் வருவறைக்குள் உள்ள தெய்வத் திருமேனியில் சங்கு சக்கரத்தைப் பதித்துவிட்டதாக ஒரு செய்தி கூறப்படுகிறது-என்றெல்லாம் தெரிவித்தார்: நண்பர் காந்தாளன் மேல் வைணவர் யாரும் போர் தொடுக்க வேண்டா என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு மேல் இன்னும் என்ன சொல்ல வேண்டும்? சரி, இன்னும் சொல்வாம்.

சிக்கல்

மற்றும் ஒரு செய்தி கவனிக்கத் தக்கது. திருவயிந்திரபுரத்தைப் பற்றியோ-திருவரங்கத்தைப் பற்றியோ மாறு பட்ட செய்திகள் இல்லை. திருவேங்கடத்தைப் பற்றி மாறு பட்ட செய்திகள் பலரால் சொல்லப் படுகின்றன வெனில், அங்கு ஏதோ சிக்கல் இருக்கிறது - குழப்பம் உள்ளது - என்பது தெளிவாகவில்லையா? இதை நான் சங்கத்திலும் குறிப்பிட்டேன். இங்கே, 1959 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் ஆறாம் பகுதியில் 22முதல் 25ஆம் பக்கம் வரை திருப்பதி - திருமலை பற்றித் தெரிவிக்கப்பட் டிருக்கும் செய்திகளுள் சிலவற்றை அங்குள்ளவாறே தருவது நல்லது : 

கலைக் களஞ்சியச் சான்று

"இத்தலத்தின் பெருமானை ஸ்ரீ நிவாசன், வேங்கடாசலபதி எனத் தென்னாட்டவரும் பாலாஜி என்று வட நாட்டவரும் பொதுவாகக் குறிப்பர். இத்தலத்தில் தாயாருக்குத் தனிக் கோயில் இல்லை............. இங்குள்ள திருமாலைப் பற்றிக் கூறுவோர் இவரது ஒரு பாதி விஷ்ணுவாகவும் மற்றைப் பாதி சிவனாகவும் இருப்பதாகவும், விஷ்ணு பாகத்தில் இலக்குமியை மார்பின் மீது வைத்திருப்பதாகவும், ஒவ்வோர் இரவிலும் பிரமதேவன் இவரைப் பூசிப்பதாகவும் சொல்லுகிறார்கள். இப்படியாக இவர் எல்லா மதத்தினராலும் துதிக்கப்படும் தெய்வமாகத் திகழ்கின்றார். ............... இக்கோயிலின் கருப்பக் கிருக்கத்தின் மதில்கள் மேல் சிம்மப் பதுமைகள் வைக்கப்பட்டிருப்பது சக்தியின் பெருமையைக் குறிக்கும். சாதாரணமாக எல்லாத் திருமால் கோயில்களிலும் கருடப் பதுமைகள் வைக்கப்பட்டிருக்கும்." -

பாலாஜி

இது கலைக் களஞ்சியப் பகுதியாகும். தாயாருக்குத் தனிக் கோயில் இல்லையாம்-ஏன் இல்லை? பெரும்பாலான முருகன் கோயில்களில் வள்ளிக்கும் தெய்வயானைக்கும் தனிக்கோயில் இல்லை என்பது ஈண்டு எண்ணத் தக்கது! முருகன் கோயிலில் சிவன் திருமேனி இருப்பினும் அம்மன் திருமேனியும் இருக்கும். இதுபோல் திருமலையில் தாயார் திருக்கோயில் இல்லாத குறையை மறைக்க, கீழே உள்ள அலர் மேல் மங்கைக் கோயிலைத் திருமலைக் கோயிலோடு கதை கட்டி முடிச்சு போடுகின்றனர். 

திருப்பதி திருமலையிலுள்ள தெய்வத் திருமேனியின் ஒரு பாதி சிவன் என்பதும் ஈண்டு குறிப்பிடத் தக்கது. கருடப் பதுமைகள் இல்லாமல் சிம்மப்பதுமைகள் இருப்பதும் ஆய்வுக்கு உரியது. மற்றும் 'பாலாஜி' என்னும் பெயரும் எண்ணத் தக்கது. "ஜி" போடுவது வடநாட்டார் வழக்கம். ராஜ கோபாலாச்சாரியாரை ராஜாஜி: என்று கூறுவதுபோல் பாலசுப்பிரமணியரைப் பாலாஜி" என்று குறிப்பிடுவதாகச் சிலர் கூறுகின்றனர்; மகாராட்டிரத்தில் 'பாலாஜி விசுவநாத்' என்னும் பெயருடைய அமைச்சர் ஒருவர் இருந்ததாக வரலாறு கூறுகிறது. 'விசுவநாத்' என்பது சைவப்பெயர். எனவே, அதனோடு 'பாலாஜி விசுவநாத்" என இணைந்த 'பாலாஜி' என்பதும் சைவப் பெயராக இருக்கக்கூடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், பாலாஜி என்னும் பெயர் பற்றித் திட்டவட்டமான முடிவு எதுவும் யான் கூறுவதற்கில்லை. அறிஞர்களின் எண்ணத்தைக் கிளற இதனை இங்கே நினைவு செய்துள்ளேன்.

இம்கே சுப்புராயர் என்னும் பெயரையும் குறிப்பிட வேண்டியுள்ளது. "சுக்குக்கு மிஞ்சின மருந்து இல்லை; கப்புராயருக்கு மிஞ்சின. தெய்வம் இல்லை" என்பது ஒரு சார் பழமொழி. மயிலத்தில் முருகன் கோயில் உள்ளது. முருகன் பெயராக "மயிலம் சுப்புராயர்" என்பது சொல்லப்படுகிறது. இதனை 'வேங்கட சுப்பையா' என்னும் பெயரோடு ஒத்திட்டு நோக்கலாமா? பால சுப்பையா என்னும் பெயரும் தமிழ்நாட்டில் உண்டு. இதனைப் 'பாலாஜி' என்னும் பெயரோடு ஒத்திட்டு நோக்கலாமா? அறிஞர்கள் ஆய்க..

ஆச்சாரியார் அருளுரை :

மற்றும். இங்கே, காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் கூறியனவாகத் தெரிவிக்கப்படும் சில கருத்துகள் குறிப்பிடத்தக்கன. அவையாவன:- திருப்பதி-திருமலை சக்தி பீடமாகும். மதில்களின் மேல் சிங்கப்பதுமைகள் உள்ளன. தலை உச்சியில் சடை உண்டு. பெண்கட்கு உரிய முறையில் முப்பத்தாறு முழ உடை (சேலை) உடுத்தப் படுகிறது-என்பன, ஆச்சாரிய அடிகளார் அருளியனவாகக் குறிப்பிடப்படுகின்றன.

ஈசன் - ஈசுவரன்

மற்றும்,

ஈசன், சசுவரன் என்று முடியும் பெயர்களை ஈண்டு விதந்து காண வேண்டும். சிவன் கோயிலை 'ஈசுவரன் கோயில்' என்று கூறுதல் உண்டு. சூடாமணி நிகண்டு- பதினோராம் தொகுதி-முதல் பாடலில் பகவான்களின் (கடவுள்களின்) பெயர்ப் பட்டியல் தரப்படுகிறது; அதாவது:-"பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்"-என்னும் பாடல் பகுதியில் சிவன் "ஈசன்" என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளமை கருதத்தக்கது. இனி, ஈசன்-ஈகவரர் என்று முடியும் சிவன் பெயர்களை ஊர்வாரியாகக் காண்போம்:

திருக்கச்சி அநேக தகோபதம் - அநேக தங்காபதேசுவரர் திருக்கச்சி நெறிக் காரைக்காடு - காரைத் திருநாதேசுரர். திருக்கசிசூர் ஆலக் கோயில் - அமுததியாகேசர். ஔஷத கிரி - மருந்தீசர், இரந்திட்ட ஈசுவரர். திருக்கஞ்சனூர் - அக்கினிசுவரர். திருக்கடம் பந்துறை - கடம்பவன நாதேசுரர். திருக்கடம்பூர்-அமுத கடேசுவரர். திருக்கடவூர்-அமிர்தகடேசர். திருக்கடவூர் மயானம் - பிரமபுரீசன். (இனிவரும் ஊர்ப் பெயர்கட்கு முன்னால் திரு என்பதைச் சேர்த்துப் படிக்கவும்) கடிக்குளம் - கற்பகேசுவரர். கடைமுடி - கடைமுடி நாகேசுவர்ர். கன்டியூர் - வீரட்டேசுவரர். கண்ணார் கோயில் - கண்ணாயிரேசுவரர். சரவீரம் - கரவீரேசுவரம் கருக்குடி - சற்குண லிங்கேசுவரர். கருகாவூர் - முல்லை வனேசுவரர். கலிக்காமூர் - சுந்தரேசுவரர் கழுக்குன்றம் - வேதகிரீசுவரர். உருத்திர கோடி - உருத்திர கோடீசுவரர். கள்ளிலை சிவானந்தேசுவரர். கற்குடி - முத்தீசர். காட்டுப்பள்ளி - ஆரணிய சுந்தரேசுவரர். குடந்தைக் கீழ்க் கோட்டம் - நாகேசுவரர். குடவாயில் - கோணேசுரர். குரக்குக்கா - கொந்தளேசுரர். குரங்கணில் முட்டம் - வாலீசுரர். குருகாவூர் - வெள்ளடையீசுவரர். குறுக்கை - வீரட்டேசுவரர். கேதீச்சுரம் (ஈழம்) - கேதீச்சுரநாதர். திருகோணமலை (ஈழம்) கோணேசர். கொட்டையூர் - கோடீசுரர். கொண்டீச்சுரம் - பசுபதீச்சுரர். கொள்ளம் பூதூர் - வில்வனேசுரர், கொள்ளிக்காடு - அக்கினிசுரர். கோட்டாறு - ஐராவதேசுரர். கோட்டுர் - கொழுந்தீசர். திருக்கோடி - அமிர்தகடேசர். கோடிகா - கோடீசுரர். கோலக்கா - சத்தபுரீசர். கோழம்பம் - கோகிலேசுரர். சக்கரப்பள்ளி - ஆலந்துறையீசுரர். சக்தி முற்றம் - சிவக்கொழுந்தீசர். சாத்தமங்கை - அயவந்தீசர். சாய்க்காடு - சாயாவனேசுரர். சிக்கல் - வெண்ணெய் இலிங்கேசர். சிறுகுடி - மங்களேசுரர். செங்காட்டங்குடி- கணபதிச்சுரர், செம்பொன் பள்ளி - சொர்ணபுரீசுரர். சேய்ஞலூர் - சத்தியகிரீசர் தலைச்சங்காடு - சங்கருணா தேசுரர். திலதைப்பதி - முத்தீசர். திருத்தினைநகர்- சிவக்கொழுந்தீசுரர், திருத்துறையூர் - பசுபதீசுரர் தெளிச் சேரி - பார்வதீசுரர். தென்குடித்திட்டை - பசுபதீசர். தென் குரங்காடுதுறை - ஆபத்சகாயேசுரர். தேவூர் - வேத புரீசர். தேவன்குடி - கர்க்கடேசுரர் நல்லம் - உமா மகேசுரர் நல்லூர்-கலியான சுந்தரேசர் நல்லூர்ப் பெருமணம் - சிவலோகத் தியாகேசர் நள்ளாறு - தர்ப்பாரணியேகரர். நறையூர்ச்சித்தீச்சுரம்- சித்தநாதேசுரர். நன்னிலம் - மருதவனேசுரர்கு நாகேச்சுரம் - சண்பகாரணியேசுரர். நாகைக் காரோணம்- காயாரோகணேசுரர். நாரையூர் - சவுந்தரேசர், நாலூர் மயானம் - பலாசவனேசுரர். நாவலூர் - பக்த சனேசுரர் நின்றியூர் - மகாலட்சுமீசுரர். நீலக்குடி - நீலகண்டேசுவரர். நெடுங்களம் - நித்தியசுந்தரேசர், பட்டீச்சுரம் - பட்டீச்சுரர், பந்தனை நல்லூர் - பசுபதீச்சுரர். பயற்றூர் - திருப்பயற்றீசர் பழையாறை வடதளி - சோமேசர், பள்ளியின் முக்கூடல் - முக்கோண நாதர் பறியலூர் . வீரட்டேசுரர். பனையூர் - செளந்தரிய நாதர். பாதாளிச்சுரம் - சர்ப்பபுரீசர். பாதிரிப்புலியூர் - பாடலேசுரர். பாம்புரம் - பாம்புரேசர், புகலூர் - அக்கினிசுவரர். புகலூர் வர்த்தமானிச்சுரம்- வர்த்த மாணிச்சுரர். புள்ளமங்கை - ஆலம்தரித்த ஈசர். புறவார் பனங்காட்டூர் - பனங்காட்டீசர். பெரும் புலியூர் - வியாக்ரபுரீசர். பெருவேளூர் - பிரியா ஈசர். பேணு பெருந்துறை - சிவானந்தேசுரர். பேரெயில் - சகதீசர் மணஞ்சேரி - அருள்வள்ளல் நாயகேசுரர், மாந்துறை - ஆம்பிரவனேசுரர். மாற்பேறு - மணிகண்டேசுரர். மீயச்சூர் - முயற்சிநாதேசுரர், முருகன்பூண்டி - முருகநாதேசுரர். முல்லை வாயில் - மாசிலாமணிசுரர். வலஞ்சுழி - கற்பகநாதேசுரர். பனங்காட்டூர் (திருப்பனங்காடு)-தாளபுரீசர். வாஞ்சியம் - வாஞ்சலிங்கேசர். திருவாடானை - ஆதிரத்தினேசுவரர் திருவாப்பனூர் - இடபபுரேசர். திருவாப்பாடி - பாலு கந்த ஈசுரர். ஆமாத்தூர் - அபிராமேசுரர். திருவாமூர் - பசுபதீசுவரர். ஆலங்காடு - ஊர்ந்துவத் தாண்டேசுவரர். ஆலம் பொழில் - ஆத்துமநாதேசுரர். ஆவடுதுறை - மாசிலாமணி யீசர்- திருவான்மியூர் - மருந்தீசர், இடை மருதூர் - மகாலிங்கேசுரர், விற்குடி - வீரட்டானேசுரர். இன்னம்பர் - எழுத்தறி நாதேசுரர். ஈங்கோய்மலை - மரகதாசலேசுரர். வீழி மிழலை - நேத்திராப் பணேசுரர். திருவு சாத்தானம் - மந்திர புரீசர்திருவூறல் - உமாபதீசுரர். வெண்காடு - சுவேதாரணியேசுரர். வென்ணெய் நல்லூரி - கிருபா புரீசுவரர். வெண்பாக்கம் - ஊன்றீசர். எதிர் கொள்பாடி - ஐராவதேசுவரர். எருக்கத்தம் புலியூர் - நீலகண்டேசுரர். வேட்தளம் - பாசுபதேசுரர். ஏடகம் - ஏடகநாதேசுரர். வேதிகுடி - வேத புரீசர் வேற்காடு - வேத புரீசர். ஒற்றியூர் - ஆதிபுரீசுவரர். ஓண காந்தன்தளி - ஓண காந்தேசுவரர். திருவோத்தூர் - வேத நாதேசுவரர், வில்லியனூர் - திருக்காமேசுரர். புதுச்சேரி - வேத புரீசுவரர் - காளத்தீசுவரர்,

இவ்வாறு இன்னும் பற் பல பெயர்கள் உண்டு, ஈசுவரன் கோயில் ஆனதால் சசர் - ஈசுவரர் என்னும் ஈற்றில் பெயர்கள் முடிந்துள்ளன என எளிதாய் எண்ணிவிட முடியாது. ஈசன் - ஈசுவரர் என்னும் ஈறுகளில் முடியாத பல பெயர்கள் சைவத்தில் உண்டு. விரிப்பிற் பெருகும். இதே முறையில் தான் வேங்கடேசன், வேங்கடேசுவரர் என்னும் பெயர்களையும் சைவப் பெயர்களாகக் கொள்ளவேண்டும் என்பது ஒரு கருத்து. எங்கேனும் வேறு இடத்தில் ஈசர் அல்லது ஈசுவரர் என்னும் ஈற்றில் முடியும் வைணவப் பெயர் இருப்பினும், சைவப் பெயர்களின் பெரும்பான்மை நோக்கி, வேங்கடேசரை சைவப் பெயராகக் கொள்வதே பொருத்த முடையதாகும். ஏனெனில், பலராலும் பல விதமாகப் பேசப்படும் சிக்கல் நிறைந்த இடம் வேங்கடம் ஆதலின் என்க. சசன் என்னும் பெயர் சிவனுக்கு இருப்பதன்றி, சைவ சார்புடைய பிள்ளையாருக்கும் முருகனுக்குங் கூட உண்டு. கணேசர், விக்னேசுவரர் என்பன பிள்ளையாரின் பெயர்கள். முருகேசன் குமரேசன் என்பன முருகன் பெயர்கள். இந்த அடிப்படையில் வேங்கடேசன் என்ற பெயரையும் பொருத்திப் பார்க்கலாம். இதற்கு நடுவு நிலைமை உணர்வு வேண்டும். சமயப்பித்தின்றி நோக்க வேண்டும்." 

இலக்கியச் சான்றுகள்

திருப்பதி-திருமலைக் கோயில், முன்பு ஒரு காலத்தில் முருகன் கோயிலாய் இருந்தது என்பதற்கு மேற்கூறிக ஆதாரங்களே போதும். மேற்கொண்டு இலக்கிய ஆதாரம் வேண்டும் என்றதனால், அந்த ஆதாரத்தையும் பிற் காலத்திலிருந்து முற்காலத்தை நோக்கிப் படிப்படி யாக முன்னேறிக் காண்போம்:-

இலக்கிய ஆதாரம் எனில், வைணவ இலக்கியங்கள் மிகப் பல உள்ளனவற்றை இங்கே எண்ணலாகாது. பல நூற்றாண்டுகளாகத் திருமால் கோயிலாக இருந்து வருவதனாலே, ஏராளமான வைணவ நூல்கள், திருப்பதி-திருமலைத் தெய்வத்தைத் திருமாலாகப் போற்றியுள்ளன. இங்கே இந்தக் கருத்துக்கு இடம் இன்று. இது முருகன் கோயிலாய் முன்னர் இருந்தது என்பற்கு உரிய இலக்கிய ஆதாரங்களே இங்கே ஆராயப்படும்.

நச்சினார்க்கினியர் கருத்து

தொல்காப்பிய நூலின் தொடக்கத்தில், தொல் காப்பியரின் சிறப்பு பற்றிப் பனம் பாரனார் என்பவர் இயற்றிய சிறப்புப் பாயிரப் பாடல் ஒன்றுள்ளது. அப் பாடலின் தொடக்கம்,

"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் கல்லுலகத்து"

என்று உள்ளது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், வடவேங்கடம் பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார்:- "நிலங்கடந்த நெடுமுடியண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடு பெற்ற மலையாதலானும் எல்லாரானும் அறியப்படுதலானும் வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் - என்பது உரைப் பகுதி. வேங்கடம் நிலம் கடந்த நெடு முடி யண்ணலாகிய திருமாலுக்கு உரியது என்பது, பிற்காலத்தவராகிய தச்சினார்க்கினியரின் கருத்து. இவர் போன்ற அந்தணர்கட்கும் சைவம், வைணவம் ஆகிய இரண்டிலும் பிடிப்பு. உண்டு. வைணவ அந்தணர்களே மறந்தும் புறம் தொழார். சைவம் சார்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இங்கே ஆராய வேண்டும்.

நாமம் சாத்தல்

சேற்றூர் இராமசாமிக் கவிராயரின் மகனாரும் 19ஆம் நூற்றாண்டினருமான அருணாசலக் கவிராயர் என்பவர் வேங்கடம் பற்றிப் பின் வருமாறு ஒரு பாடல் பாடியுள்ளார். அதாவது:

"வடவேங் கடமலையில் வாழ்முருகா நிற்கும்
திடமோங்கு நின்சீர் தெரிந்து - மடமோங்க
நாமத்தைச் சாத்தினார் நம்மையென் செய்வாரோ
காமுற்றிங் காரிருப்பர் காண்"

- (தனிப்பாடல்)

என்பது பாடல். வேங்கட மலையில் முதலில் முருகன் சிலை இருந்ததாகவும், பின்னர் முருகன் சிலையை நெற்றியில் நாமம் சாத்தித் திருமாலாக்கியதாகவும் கவிராயர் கூறியுள்ளார். இஃது உண்மையில்லை, எனில் எத்தனையோ ஊர்கள் இருக்க, வேங்கடத்தைப் பற்றி மட்டும் இவ்வாறு பாடுவதற்குக் கவிராயருக்குப் பைத்தியமா என்ன? எண்ணுக. 

தமிழ் முருகன் மலை

அடுத்து 18 ஆம் நூற்றாண்டின ராகிய சிவஞான முனிவரின் கருத்தைக் காண்போம். பனம் பாரனார் இயற்றிய "வடவேக்கடம் தென்குமரி" என்னும் சிறப்புப் பாயிரப் பாடலுக்கு இவர் விரிவுரை எழுதியுள்ளார். இதனைப் 'பாயிர விருத்தி' என்பர். இவ்வுரையில் வட வேங்கடம் தென்குமரி பற்றி அவர் எழுதியுள்ள பகுதி வருமாறு:-

"வேங்கடம் குமரி எனவே திசை பெறப்படுமாயினும் எல்லை கூறப் புகுந்தா ராதலின், அதற்கேற்பத் திசை கூறி எல்லை கூறுதல் மரபென்பது பற்றி, "வடவேங்கடம் தென்குமரி என்றார்.

தமிழ் நாட்டுக்கு வடக்கண் பிற எல்லையும் உளவாக வேங்கடத்தை எல்லையாகக்கூறினார் அகத்தியனாருக்கு. தமிழைச் செவியறிவுறுத்திய செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பு (மலை) என்னும் இயைபு பற்றி என்பது. தெற்கண் குமரியாதலின் அதுவே எல்லையாயிற்று. கிழக்கு மேற்குக்கடல் எல்லையாகலின் வேறு எல்லை கூறாராயினார்" -என்பது உரைப்பகுதி.

வேங்கடம் முருகனுக்கு உரியது என்பது சிவஞான முனிவரின் கருத்து. இதில் உண்மை யில்லையெனில் இவருக்கும் பைத்தியமா என்ன இவ்வாறு கூற? அடுத்து, 15ஆம் நூற்றாண்டினராகிய அருணகிரி நாதர் தம் திருப் புகழ்ப் பாடல்களில் இது பற்றிக் கூறியுள்ள பகுதிகள் வருமாறு:-

திருப்புகழ்ச் சான்று

1. 'கறுத்த தலை’ என்று தொடங்கும் திருப்புகழில்

"மலர்க் கமல வடிவுள செங்கை
அயிற் குமர குகைவழி வந்த
மலைக் சிகர வடமலை நின்ற பெருமாளே"-



2. என்றும், 'சரவண பவநிதி' என்னும் பாடலில்,

"திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய
குமர சமரபுரி தணிகையும் மிகுமுயர்
சிவகிரியிலும் வடமலையிலும் உலவிய வடிவேலா"

3. என்றும், 'நெச்சுப் பிச்சி' என்னும் பாடலில்,

"கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு
கறுவிய சிறியவ! கடவைகள் புடைபடு
கடவட மலையுறை பெருமாளே"-

4. என்றும், 'கோங்கின நீரிளக' என்னும் பாடலில்,

"வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும்வளர்
வேங்கட மாமலையில் உறைவோனே"

5. என்றும், 'சாந்தமில் மோக' என்னும் பாடலில்,

"வேந்த குமார குக சேந்த மயூரவட
வேங்கட மாமலையில் உறைவோனே"

6. என்றும், 'வரி சேர்ந்திடு சேல்' என்னும் பாடலில்,

"தெச மாஞ்சிர ராவணனார் முடி பொடியாகச்
சிலை வாங்கிய நாரணனார் மரு
மகனாங் குகனே பொழில் சூழ்தரு
திரு வேங்கட மாமலை மேவிய பெருமாளே”

என்றும் உள்ள பாடல் பகுதிகளால், வேங்கட மலை முருகனுக்கு உரியதாக அருணகிரி நாதரால் அறிவிக்கப் பட்டிருப்பதை அறியலாம்.

அன்றியும், வேங்கடம் திருமாலுக்கும் உரியதாக 'இப மாந்தர்' என்னும் திருப்புகழில் அருணகிரிநாதரால் கூறப்பட்டுள்ளது. பாடல் பகுதியாவது :

"உல கீன்ற பச்சை உமையணன்
வட வேங்கடத்தில் உறைபவன்
உயர் சார்ங்க சக்ர கரதலன் மருகோனே"

என்பது அப்பகுதி. இந்தக் குழப்பம் ஏன்? அருணகிரி நாதர் காலத்தில் வேங்கடத்துக் கோயில் திருமால் கோயிலாக இருந்ததால், அந்த உண்மையை அவரால் சொல்லாமல் விட முடியவில்லை. அவர் காலத்தில் அவ்வாறு இருந்ததால் சொன்னார் எனினும், பண்டைக் காலத்தில் முருகன் கோயிலாக இருந்ததால் முருகனுக்கு உரியதாகக் கூறினார் என்னும் உண்மையை மறைக்க முடியாது. எனினும், கருத்தில் குழறுபடி (குழப்பம்) ஏற்படச் செய்திருப்பது அருணகிரிநாதரின் குற்றமேயாகும். -

கந்த புராணச் சான்று

அடுத்து, பதினோராம் நூற்றாண்டினராகிய கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணத்துக்கு (கந்தல் புராணத்திற்கு அன்று) வருவாம்: கந்தபுராணம் உற்பத்தி காண்டம் - வழிநடைப் படலத்தில், முருகன் சூரனை அழிப்பதற்காக, வடக்கேயுள்ள தன் கந்தகிரியிலிருந்து புறப்பட்டுத் தெற்கு நோக்கி வரும் வழியில் உள்ள தெய்வப் பதிகளையெல்லாம் கண்டு சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. அப்பகுதிகளைப் பற்றிய செய்திகளைக் கூறும் பாடல்களை ஈண்டு முறையே காண்பாம்:

"என்னையா ளுடையானிடம் சேர்வன்என் றிமையக்

கன்னி பூசனை செய்த கேதாரமும் கண்டான்" (3)

"மையல் மானிடர் உணர்ந்திட மறைமுனி எடுத்த

கையதே யுரைத்திட்டதோர் காசியைக் காண்டான்"



"பொருப்ப தாகியே ஈசனை முடியின் மேற் புனைந்த
திருப்பருப் பதத் தற்புதம் யாவையும் தெரிந்தான்"

"அண்டம் மன்னுயிர் ஈன்றவளுடன் முனிவாகித்
தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
மண்டு பாதலத் தேகியே ஒர் குகை வழியே
பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்"

"பலந்தரு வழிபாட்டினால் பாட்டினால் பரணைக்
கலந்து முத்திசேர் தென்பெருகேயிலையும் கண்டான்"

"அடைய அஞ்சலும் அவள் செருக்கு அழிவுற அழியாகி
கடவுள் ஆடலால் வென்றதோர் வடவனம் கண்டான்" (8)

"எம்பிரான் தனி மாநிழல் தன்னில் வீற்றிருக்கும்
கம்பை சூழ்தரு காஞ்சியந் திருநகர் கண்டான்" (9)

"உன்னினர் தங்கட் கெல்லாம்
ஒல்லையின் முத்தி நல்கித்
தன்னிக ரின்றி நிற்கும்
தழல் பெருஞ் சயிலம் கண்டான்" (11),

"துண்ணென வழக்கில் வென்று
சுந்தரன் தனையாட் கொள்ளும்
பெண்ணையம் புனல்சூழ் வெண்ணெய்ப்
பெரும்பதி தனையும் கண்டான்" (12)


"காசியின் விழுமிதான முதுகுன்ற
வரையும் கண்டான்"

"திருநட இயற்கை காட்டும்
தில்லைமு தூரைக் கண்டான்' (14)

இவ்வாறாக முருகன் பல பதிகளையும் கண்டுசென்று கொண்டிருந்தான். அதாவது-கேதாரம், காசி, திருப்பருப்பதம், வேங்கடம், திருசைலம், திருவாலங்காடு (வடவனம்), காஞ்சி, திருவண்ணாமலை, திருவெண்ணெய் நல்லூர், முதுகுன்றம், தில்லை (சிதம்பரம்) முதலிய பதிகளைக் கண்டு சென்றானாம். பாடலில் ஒவ்வொரு பதியையும் பற்றிப் பின்வருமாறு சிறு விளக்கம் தரப்பெற்றுள்ளது.

கேதாரம் : இமையக்கன்னி பூசனை புரிந்த இடம்.

காசி : மறைமுனி எடுத்த....காசி

திருப்பருப்பதம் : ஈசனை முடிமேல் புனைந்தது,

திருசைலம் (தென்கயிலை) : வழிபாட்டினால் முத்தி சேர்விப்பது . -

திருவாலங்காடு : சிவன் நடனத்தால் காளியை வென்ற இடம்.

காஞ்சி : சிவன் மாமர நிழலில் வீற்றிருக்கும் இடம்.

திருவண்ணாமலை : நினைப்பவர்க்கு வீடு பேறளிப்பது.

திருவெண்ணெய் கல்லூர் : சுந்தரரை ஆட்கொண்ட இடம்.

முதுகுன்றம் (விருத்தாசலம்) : காசியினும் சிறந்தது.

தில்லை : சிவன் நடம் புரிவது.

இவ்வாறு இவ்வூர்களைச் சிவனோடு தொடர்பு படுத்திக் கூறிய கச்சியப்பர் வேங்கடத்தைப் பற்றிக் கூறியிருப்பது வேறு விதமாயுள்ளது. அதாவது:- முருகன் தன் தாயிடம் முரணிக் கொண்டு, பாதாளப் பாதை வழியாக வந்து ஒரு குகை வழியே மேலே ஏறித் தங்கிய இடம் வேங்கடமலை-என்று கூறியுள்ளார். கச்சியப்பர் காலத்தில் வேங்கடம் திருமாலுக்குரிய இடமாக இருந்ததால், முருகன் முன்பு இருந்த இடம் வேங்கட மலை என்று கூறிவிட்டார். பண்டு வேங்கடம் முருகன் திருப்பதியாக இருந்திராவிடின், மற்ற ஊர்களைப் பற்றி வேறு விதமாகக் கூறிய கச்சியப்பர் வேங்கட மலையைப் பற்றி மட்டும் இவ்வாறு கூற அவருக்குப் பைத்தியமா என்ன? எனவே, வேங்கட மலை முருகன் மலை என்பதற்குக் கந்த புராணத்தில் இலக்கியச்சான்று உள்ளமையை உணரலாம்.

கந்த புராணத்தை ஒட்டி தி. சு. வேலு சாமிப் பிள்ளை இயற்றிய 'கந்தபுராண வெண்பா' என்னும் நூலிலும் இச்செய்தி கூறப்பட்டுள்ளது. பாடல் வருமாறு:

"மன்னன்னை யோடுமுனி வாகித்தன் வெற்பொரீஇக்
கொன்னதத்தe டேகிக் குகைவழியே-முன்னம்
வருவேல் கடமாம் வரைகண்டான் அன்பாம்
குருவேங் கடமாங் குசன்"

(உற்பத்தி காண்டம்–வழிநடைப் படலம்–6)

என்பது பாடல். இச்செய்தியை அடியொற்றித்தான் அருணகிரி நாதர் 'குகை வழி வரு வேங்கட கிரி' என்றார்.

ஆனால், கந்த புராணம் சிலப்பதிகாரத்திற்குப் பிற்பட்டது; எனவே, இன்னும் முற்பட்ட இலக்கிய ஆதாரம் தேவை என்பது கோபாலய்யரின் கூற்று. சரி, மேலும் பார்ப்போம்:

தொல்காப்பியப் பாயிரம்

தமிழில் இப்போது கிடைத்திருக்கும் நூல்களுள் தொல்காப்பியமே பழமையானது–முதன்மையானது. இற்றைக்கு இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு. முன்னே தொல்காப்பியம் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நூலின் தொடக்கத்தில், பனம்பாரனார். என்பவரால் இயற்றப் பெற்ற "வடவேங்கடம் தென் குமரி" என்று தொடங்கும் சிறப்புப் பாயிரப் பாடல் ஒன்று அமைந்துள்ளது என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது.

இந்தப் பனம்பாரனார், தொல்காப்பியரைப் போலவே அகத்தியரின் மாணாக்கர் என்றும், தொல்காப்பியரும் பனம்பாரனாரும் ஒரு சாலை மாணாக்கர்கள் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். குறுந்தொகையில் உள்ள 52ஆம் பாடலை எழுதியவர் பனம்பாரனார் என்பவர் என்று அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது). தொல்காப்பியப் பாயிரப் பனம்பாரனாரினும் குறுந் தொகைப் பனம்பாரனார் வேறானவர். இருவரும் ஒருவரே என்று எவரேனும் கூறினும், குறுந்தொகை 52ஆம் பாடலை எழுதியவர் மிகவும் பழங்காலத்தவரே.

இங்கே நமக்கு வேண்டிய கருத்தாவது:- பனம்பாரனாருக்கு வடவேங்கடம் தெரிந்திருக்கும் போது, தொல்காப்பியருக்கும் வடவேங்கடம் தெரிந்திருக்கும். அப்போது வேங்கட மலையில் திருமால் கோயில் இருந் திருப்பின், 'முருகனது இருப்பிடம் மலைப் பகுதிகள்–என்னும் பொருள் உடைய 'சேயோன் மேய மை வரை உலகம்’ என்னும் அடியைத் தம் தொல்காப்பித்தில் எழுதியிருக்க மாட்டார். சேயோன் என்றால் முருகன் வரை என்றால் மலை. எனவே, வேங்கடமலையும் முருகனுக்கு உரியது என்பதற்குத் தொல்காப்பியச் சான்று ஒன்றே போதும். தொல்காப்பியம் இலக்கண நூல்தான். இலக்கியம் கண்டதற்குத்தானே இலக்கணம் உள்ளது. ஊரில் உள்ள–நாட்டில் உள்ள அமைப்பு களைக் கொண்டு எழுதுவதுதான் இலக்கியம். எனவே, தொல்காப்பியர் காலத்திலேயே வேங்கட மலையில் முருகன் கோயில் இருந்தது என்பது பெறப்படும்.

நக்கீரர் கூறாமை

தொல்காப்பியனாருக்கும் பனம்பாரனாருக்கும் வேங்கடமலை தெரிந்திருக்கும் போது நக்கீரருக்கு ஏன் வேங்கடமலை தெரிந்திருக்கவில்லை? அவர் தமது திருமுருகாற்றுப் படை நூலில் வேங்கடமலையை ஏன் குறிப்பிடவில்லை - என்று சிலர் கேட்கலாம். குறிப்பிட்ட ஒரு சிலருக்குத் தெரிந்த ஒன்று வேறு சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படியே நக்கீரருக்குத் தெரியாமல் இருக்கலாம் அப்படியே நக்கீரருக்கு வேங்கடத்தைத் தெரியும் எனினும் அவர் தமது நூலில் வேங்கட மலையைக் குறிப்பிட்டுத்தான் தீர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வேங்கடத்தைக் குறிப்பிட்டாலும் திருத்தணிகை என்ன ஆவது? இன்னும் மற்ற மற்ற ஊர்கள் என்ன ஆவது?

இங்கே இன்றியமையாத ஒரு செய்தி எண்ணத்தக்கது. அதாவது:– நக்கீரர் திருமுருளாற்றுப் படையில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்). திருவாவினன்குடி, திருவேரகம் ஆகிய ஊர்களைக் குறிப்பிடும் போது, அண்மையிலுள்ள அவ்வூர்களைப் பற்றிய சில விவரங்களும் சில இலக்கியப் புனைவுகளும் (வர்ணனைகளும்) தந்துள்ளார். நக்கீரர் இந்த ஊர்கட்குச் சென்று நேரில் கண்டிருக்கலாம். ஆனால், தொலைவிலுள்ள திருப்பதி-திருமலை, திருத்தணிகை முதலிய ஊர்களைப் பற்றிக் கேட்விப்பட்டிருப்பதைத் தவிர நேரில் சென்று கண்டறியாமல் இருக்கலாம் எனவே அவ்வூர்களைப் பற்றி விதந்து குறிப்பிட முடியாமல், “குன்று தோறாடல்“ என்னும் பொதுத் தலைப்பில் அடங்கட்டும் என விட்டிருக்கலாம். ஆக, நக்கீரர் வேங்கட மலையை விட்டு விட்டதற்கு உரிய காரணம் இப்போது விளங்கலாம்.

கந்த வேள் கதையமுதம்

இதுகாறும் கூறிய செய்திகளுள் சிவவற்றின் சுருக்கத் தொகுப்பு போல், பெரியவர் உயர்திரு கி. வா. ஜகந்நாதன் அவர்கள் எழுதி 1980 சூலைத் திங்களில் வெளியிட்ட 'கந்த வேள் கதையமுதம்' என்னும் நூலின் 197-201 ஆம் பக்கங்களில் இது தொடர்பாக உள்ள செய்திகள் அதில் உள்ளாங்கு அப்படியே வருமாறு:

"முருகப்பெருமான் தன்னுடைய தந்தையின் உத்தரலைப்பெற்றுக் கைலாசகிரிக்குப் பக்கத்திலுள்ள தன் ஆஸ்தான புரியாகிய கந்தகிரியிலிருந்து புறப்பட்டு வந்தான் இமாசலத்தில் கேதாரம் என்பது ஒரு தலம் அதை முருகன் தரிசித்து விட்டு மேலே போனான்.

வேங்கட மலை

பிறகு திருவேங்கட மலைக்கு வந்தான், வேங்கட மலை திருமாலுக்கும் முருகனுக்கும் உரிய இடம் என்று சொல்வார்கள். முருகன்தான் திருமால் ஆகிவிட்டான் என்று சொல்வதும் உண்டு. வட நாட்டில் உள்ளவர்கள் வேங்கடத்தில் உள்ள பெருமாளைப் பாலாஜி என்று கூறுவர். பாலன் என்பது முருகனுக்குப் பெயர் ஜி என்பது மரியாதையைக் குறிக்கும் விகுதி. வடநாட்டில் உள்ளவர் களுக்குச் சைவ வைணவ வேறுபாடு தெரியாது. அவர்கள் பாலாஜி என்று சொல்வதனால் அங்கே முருகள் எழுந்த குளியிருந்தான் எனற குறிப்புக் கிடைக்கிறது. திருவேங்கடத்தில் உள்ள சுவாமி கையில் சக்கரத்தையும் சங்கையும் லைக்கிறார்கள். இயற்கையாக அந்த மூர்த்தியின் திருக்கரத்தில் எந்த ஆயுதமும் இல்லை.

அருணகிரிநாத சுவாமிகள் நான்கு திருப்புகழ் திரு வேங்கட மலை பற்றிப் பாடியுள்ளார். திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே என்று ஒரு பாட்டு வருகிறது.

ஒரு கோவிலுக்குப் போனால் வெளியிலிருந்து அந்தக் கோவிலின் மதிலைப் பார்த்தாலே அது இன்ன கோவில் என்று தெரிந்து கொள்ளலாம். சிவபெருமான் கோவிலாக இருந்தால் மதிலின்மேல் இடபம் இருக்கும். கணபதி கோவிலாக இருந்தால் மூஷிகம் இருக்கும். திருமால் கோவில் என்றால் கருடன் இருக்கும். முருகன் கோவில் மதில் மேல் மயிலைக் காணலாம். -

சோழ நாட்டில் அம்பிகையின் சந்நிதியில் நந்திதான் இருக்கும். தொண்டை நாட்டில் பல கோவில்களில் அம்பிகைக்கு முன்னால் சிங்கம் இருப்பது வழக்கம். திருவேங்கடத்திலுள்ள திருக்கோயிலின் மதில்மேல் சிங்கந்தான் இருக்கிறது.

ஒரு சமயம் ஸ்ரீ காமகோடி ஆச்சாரிய சுவாமிகள் அவர்களை நான் தரிசித்தபோது அவர்கள் இதைப் பற்றிச் சொன்னார்கள். "திருவேங்கடத்தில் உள்ள கோவில் மதில்மேல் சிங்கம் இருக்கிறதே. எதற்கு?" என்று கேட்டார்கள். அவர்களே பின்பு விளக்கினார்கள்: "அது ஒரு சக்தி க்ஷேதிரம், கெளமாரி, வைஷ்ணவி ஆகிய இரண்டு சக்திகளும் சேர்ந்து அங்கே எழுந்தருளியிருக்கிறார்கள். இரண்டு சக்திகளும் சேர்ந்து இருப்பதனால் வேங்கடேசுவரருடைய பரிவட்டம் 36 முழமாக இருக்கிறது. நம்முடைய நாட்டில் ஒரு பெண்ணுக்கு 8 முழம் என்று சொல்வார்கள். இரண்டு பெண்கள் சேர்ந்து இருப்பதால் 36 முழம். இந்த 36 முழத்தை நெய்வதற்கு அங்கே தனியாகவும் நெசவுக்காரர்கள் இருக்கிறார்கள்" இப்படி ஆச்சாரிய சுவாமிகள் சொன்னார்கள்.

சிவபெருமானும் திருமாலும் சேர்ந்து ஒன்றாக இருக்கிற உருவம் என்று திருவேங்கட முடையானை ஆழ்வார் பாடியிருக்கிறார். வேங்கட சுப்பிரமணியன் என்ற பேரைப் பல பேர் வைத்துக் கொள்வார்கள். அதுவும் திருமாலுடன் சுப்பிரமணியன் இருப்பதைத் தெரிந்து கொள்வதற்குச் சான்று. சிலப்பதிகாரத்தில் வேங்கடத்தில் திருமால் இருந்ததாகச் செய்தி வருகிறது. ஆகவே, அங்கே திருமால் கோவிலும் முருகன் கோவிலும் தனித்தனியாக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். அங்கே உள்ள திருக்குளத்கின் பெயர் கவாமி புஷ்கரிணி என்பது. சுவாமி என்றால் முருகன். முருகன் அந்தக் குளத்தை உண்டாக்கித் திருமாலுக்குப் பூஜை செய்தான் என்று வைணவப் புராணம் சொல்கிறது. முருகன் எழுந்தருளியுள்ள கோவில் ஆகையால் அந்தத் திருக்குளத்திற்கு அந்தப் பெயர் வந்தது என்றும் சொல்ல லாம்.

கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்.......... ... அம்பிகை கோபித்துக் கொண்டதனால் முருகன் தானும் கோபம் கொண்டு, 'நான் இங்கே இருக்க மாட்டேன்; வேறு ஒரு மலைக்குப் போகிறேன்’ என்று பாதாளத்தின் வழியே வந்து வேங்கட மலையின் குகை வழியே வெளிப்பட்டானாம் ...... அப்போது அவன் தங்கின இடம் திருவேங்கடம். 'முன்பு தான் தங்கிய வேங்கட கிரியைப் பார்த்தான்' என்று கந்த புராணக்காரர் சொல்கிறார்......

திருவேங்கடத்தில் ஓர் அருவி இருக்கிறது. அதற்குக் குமாரதாரை என்று பெயர். குமாரன் என்பது முருகன் பெயர்தானே? திருப்பதியில் வெள்ளிக்கிழமை தோறும் வில்வ அருச்சனை நடக்கிறது. திருமால் கோவிலில் வில்வ அருச்சனை நடப்பது அருமை. மேலும் அங்கே சிறப்பான அபிஷேகங்கள் பல உண்டு. இத்தகையவற்றைக் காணும் போது முருகப் பெருமானின் சம்பந்தமும் அங்கே இருக்கிறது என்று தெரிகிறது.

அது மாத்திரம் அன்று. எல்லா மலைகளுக்கும் முருகன் தெய்வம். மலைகளும் மலைகள் சார்ந்த இடமும் குறிஞ்சி. குறிஞ்சிக்குத் தெய்வம் முருகன்தான். மலையில் மூர்த்தி இருந்தாலும் இல்லா விட்டாலும், வேறு மூர்த்தி இருந்தாலும் மலைக்குத் தலைவனாக அவன் இருக்கிறான்'- என்பது, கந்தவேள் கதையமுதம்" என்னும் நூலில் உயர் இரு கி. வா. ஜகந்நாதன் எழுதியிருக்கும் பகுதியாகும்.

யான் இந்தச் சிறுநூலை எழுதி முடித்த ஒரு திங்களுக்குப் பிறகு, கி. வா. ஜ.வின் கந்தவேள் கதையமுதம் எனக்குக் கிடைத்தது. ஒரு நாள் முற்பகல் 11 மணிக்கு இது கிடைத்தது. படித்துப் பார்த்தேன். உடனே 11-30 மணிக்கு உயர்திரு டாக்டர் ஆர். கோதண்டராமன் வந்தார். நான் அவரிடம், 'இதோ பாருங்கள்' என்று எனது கையெழுத்துப் படியைக் காட்டி, 'நான் எழுதியி ருப்பவற்றைக் கி. வா. ஜ. வும் எழுதியிருக்கிறார். இதோ உள்ளாரே இவர்தான் கடலூரிலிருந்து இந்நூலை இப்போது கொண்டு வந்து கொடுத்தார்' - என்று கடலூரிலிருந்து வந்தவரையும் காண்பித்தேன். இதன் பின்பே, கி. வா. ஜ. எழுதியதாக மேலே தரப்பட்டுள்ள பகுதியை இங்கே சேர்த்துள்ளேன். எனக்குத் தக்க சான்று இது. கி. வா. ஜ. சில இடங்களில் அப்படியும் இப்படியுமாகச் சொல்லியிருப்பினும், நடுமையக்கருத்து வேங்கடம் முருகன் மலையாயிருந்தது, என்பதே.

சொந்தக் கவி பண்ணு

பிறகு எண்ணிப் பார்த்தேன். ஏன், நாம் இப்போது ஒருமுறை திருவேங்கடம் சென்று நேரில் ஆய்ந்து வருவோமே-என்று முடிவு செய்தேன். சோறு பொங்கித் தின்னு-சொந்தக் கவி பண்ணு' என்பது ஒரு முதுமொழி. எண்ணியவாறே, உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் மறுநாள் விடியல் 5 மணிக்கே வீட்டை விட்டுத் திருவேங்கடத்திற்குப் புறப்பட்டு விட்டேன். திருப்பதி போய்ச் சேர்ந்தேன். திருமலைக்குப் போகும் திருக்கோயில் பேருந்தில் ஏறி ஆறு மலைகளை எண்ணிக் கொண்டே சென்று ஏழாவது மலையை-ஏழுமலையானை அடைந்தேன், ஆறு மலைகளைக் கடந்ததும். ஏழாவது பகுதி மிகவும் தாழ்ந்து தாழ்ந்து அமைந்தி ருந்தது. படிகளில் கீழே இறங்கி இறங்கிக் கோயில் பகுதியை அடைந்தேன். அந்தப் பகுதி பரந்து இருந்ததனால்தான் அங்கே கோயில் எழுப்ப முடிந்திருக்கிறது.

கோயில் மலைகளின் நடுவில் பள்ளமான பகுதியில் இருப்பதனால்தான், கந்தபுராண ஆசிரியரும் கந்த புராண வெண்பா ஆசிரியரும் அருணகிரிநாதரும், முருகன் பாதாள வழியாக வந்து குகை வழியாக மேலே வந்தான் என்று கூறினார்களோ என்று எண்ணிப் பார்த் தேன். களப்பணி தொடங்கினேன்:

களப் பணி

மதில்மேல் சிங்கப் பதுமைகளைக் கண்டேன். உடை 18 முழம் என்றும் 36 முழம் என்றும் இரண்டு விதமாகவும் உடுத்தப்படுவதுண்டு என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அன்று வெள்ளிக்கிழமையாதலால் காலையில் வில்வ அருச்சனை நடைபெற்றது என்பதையும் கோயில் பூசனையாளர் (பட்டாசோரியார்) ஒருவர் கூறக் கேட்டறிந்தேன். மார்கழித் திங்களில் 30 நாட்களும் வில்வ அருச்சனை நடைபெறும் என்று அவரே கூறினார். பூசனையாளர் இருவரை ஒரே இடத்தில் நேர்கண்டு, பெருமாள் சிலையின் கைகளில் சங்கு சக்கரம் இயற்கையாக இல்லை; வெள்ளியாலும் பொன்னாலும் செயற்கையாகச் செய்து பதித்திருப் பதாகச் சொல்கிறார்களே—உண்மைதானா?" என்று வினவினேன். உண்மைதான் என்று ஒருவர் கூறினார். மற்றொருவர், பெருமாள் சிலையின் காதுகளின் அருகே சங்கு சக்கரம் இருப்பதாகக் கூறினார் செயற்கையே என்று கி. வா. ஜ. எழுதியிருப்பதையும், பாண்டுரங்கமும் காந்தாளனும் இராமாநுசரே சங்கு சக்கரம் அமைத்ததாகக் கூறப்படுகிறது என்று கூறியதையும் எண்ணி ஒப்பிட்டுப் பார்த்தேன்.

கண்டேன் காவடி

அடுத்துக் காவடியைப் பற்றிச் சிலரைக் கேட்டேன். காவடி வருவதுண்டு என்ற பதில் கிடைத்தது. பின்னர் ஓய்வுக்காகக் கோயிலின் அண்மையிலுள்ள ஒரு விகுதியில் தங்கியிருந்தேன். ஒரு மணி நேரக் காலம் கழித்து எங்கோ ஒரு மூலையில் 'அரோகரா’ ஒலி கேட்டது. எழுந்து ஓடினேன். பன்னிருவர் காவடி சுமந்திருந்தனர். அவர்களைச் சேர்ந்தவர்கள் சுற்றி ஒரு குழுவாக இருந்தனர். அனைவரின் நெற்றியிலும் திருநீற்றுப் பட்டையும் சந்தனப் பொட்டும் திகழ்ந்தன. முருகையா-முருகையா என்று முடிவதாக உள்ள பாடலும் முருகன் மேல் இன்னும் ஏதோதோ பாடல்களும் பாடிக் கொண்டும் 'அரோகரா’ போட்டு ஆடிக்கொண்டு பக்க இயங்களின் (பக்க வாத்தியங்களின்) ஆரவாரத்துடன் காவடிக் குழு கோயிலைச் சுற்றி வலம் வந்தது. யானும் குழுவுடன் கலந்து கொண்டேன். இறுதியில் கோயில் கோபுர வாயிலின் அருகில் காவடிக் குழு நெடு நேரம் முருகன் புகழ் பாடிக்கொண்டு ஆடியது. முடிவில் கோபுர வாயில் எதிரில் தேங்காய் உடைத்துச் சூடம் கொளுத்திப் படையல் செய்யப் பெற்றது.

'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு என்றபடி, யான் இடையிடையே காவடிக் குழுவினரிடம் சில செய்திகளை விசாரித்தேன். அவர்கள் அந்த வட்டாரத்து மக்களாம். அக்குழுவில் பல சாதியினரும் உள்ளனராம். ஆண்டாண்டு காலமாக இவ்வாறு செய்வது வழக்கமாம். முருகன்மேல் பாடிக்கொண்டு பெருமாள் கோயில் வாயிலில் படையல் செய்வது ஏன்?- என்று வினவினேன். இது பெரியவங்க நாளிலிருந்து நடக்குது என்ற பதில் கிடைத்தது. இது முதலில் முருகன் கோயிலாக இருந்ததாமே-என்று கேட்டேன். " அப்படித்தான் சொல்கிறாங்க" என்ற பதில் வந்தது.

அலர்மேல் மங்கை

சிவன் கோவில்களுக்குள்ளும் திருமால் கோவில்களுக்குள்ளும் பெண் தெய்வக் கோயில்களும் இருக்கும். ஆனால் வேங்கட மலைக்கோவிலுக்குள் பெண் தெய்வக் கோயில் இல்லை. இது பற்றிப் பூசனையாளர் ஒருவரை வினவினேன். திருமாலின் மனைவி அவர் மேல் சினங் கொண்டு மலைக்குக் கீழே சென்று தங்கியிருப்பதாக அவர் கூறினார். பின்னர் அந்த அன்னை தங்கியிருக்கும் அலர்மேல் மங்கைபுரம் சென்றேன். அது. அடிவாரத்தில் சில கல் தொலைவுக்கு அப்பால் இருக்கிறது.

அலர்மேல் மங்கைபுரக் கோவிலில் ஒரு வியப்பான அமைப்பு உள்ளது! மற்ற கோயில்களில், கோபுரத்திற்கும் கொடிக் கம்பத்திற்கும் நேராக உள்ளே உள்ள கருவறையில் அக்கோயிலின் முதன்மைத் தெய்வத்தின் சிலை இருக்கும். ஆனால், அங்கே, கோபுர வாயிலுக்கு நேரே உள்ள முதன்மைக் கருவறையில், கல்லால் ஆன கண்ணன் சிலையும் உலோகத்தால் ஆன பலராமன் முதலியோர் சிலைகளும் உள்ளன. அந்தப் பகுதியின் வலப்புறத்தில் சீநிவாசப் பெருமாள் கோயிலும் இடப்புறத்தில் அலர்மேல் மங்கைத் தாயார் கோயிலும் உள்ளன. அலர்மேல் மங்கைக் கோயிலில் இருந்த பூசனையாளரிடம், இங்கே உள்ள வரலாறு என்ன?-என்று யான் வினவினேன். அதற்கு அவர், இந்த அம்மா திருமலைமேல் உள்ள பெருமாளின் மனைவி; அவர்மேல் கோபித்துக் கொண்டு இங்கே வந்து விட்டார்கள்-என்று கூறினார். ஏதோ அகம்படையான்-பெண்டாட்டி கோபம்-நாம் அதைக் கிளறுவானேன்!

பின்னர் நான், அவரை நோக்கி, இங்கே சீநிவாசப் பெருமாள் கோயில் இருக்கிறதே-இவருடைய மனைவி இந்த அம்மா என்று சொல்லக் கூடாதா?-என்று வினவினேன். அதற்கு அவர், இல்லையில்லை-திருமலைப் பெருமாளின் மனைவிதான் இந்த அம்மா - என்றார். அங்ஙனமெனில், இங்கே உள்ள சீநிவாசப் பெருமாளும் மலைமேல் உள்ள பெருமாளும் வெவ்வேறானவர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர், இருவரும் ஒருவரே என்று ஏதேதோ கூறி முழுகி முழுகி எழுந்து தத்தளித்தார். அதோடு நிறுத்திக் கொண்டேன்.

இது தொடர்பாக - உறுதியாக இல்லை - ஒரு தோற்றமாக எண்ண இடந்தந்த கருத்தாவது:—கோபுர வாயிலுக்கு நேரே உள்ள நடுமையக் கருவறையில் இப்போது கண்ணன், பலராமன் முதலியோர் சிலைகள் உள்ளனவே – இந்த இடத்தில் முன்பு சீநிவாசப் பெருமாளின் சிலை இருந்திருக்கலாம்; இடப்பக்கத்துக் கருவறையில் இப்போதும் பெண் தெய்வச்சிலை உள்ளது. திருமலை முருகனைத் திருமால் ஆக்கி விட்டதால் பெண் தெய்வக் கோயில் அங்கே இல்லாத குறையை நீக்கக் கீழே உள்ள அலர்மேல் மங்கையை மலைப் பெருமாளின் மனைவியாக்கிவிட்டு, பக்கத்து நடுக்கருவறையில் இருந்த சீநிவாசப் பெருமாளை அதன் பக்கத்துக் கருவறைக்குள் தள்ளி, அவர் இடத்தில் கண்ணன் - பலராமன் குழுவை அமைத்து விட்டதாக எண்ணலாம் போல் தோன்று கிறது. இது உறுதியான கருத்து அன்று சீநிவாசப் பெருமாளின் கருவறைக்கும் பெண் தெய்வக் கருவறைக்கும் இடையே - கோபுர வாயிலுக்கு நேரே உள்ள நடுமையைக் கருவறையில் கண்ணன் - பலராமன் இருக்கிற நிலைமை இவ்வாறு எண்ணத் தோன்றுகிறது. எண்ணம் தவறாயின் யாரேனும் இந்நிலைமை பற்றி விளக்கம் தரலாம். மற்றும், யான் சென்று கண்டபோது, கண்ணன் - பலராமன் கருவறையும் பெண் தெய்வக் கருவறையும் திறந்திருக்கப் படையல்களும் நடந்தன. அப்பொழுது சீநிவாசப் பெருமாளின் கருவறை மூடி யிருந்தது எனக்கு மனக்குறையாயிருந்தது. இவ்வனவோடு இது நிற்க.

திருவேங்கட புராணம்

யான், திருமலையில், "திருவேங்கட புராணம்-ஸ்ரீ வேங்கடேசர் வரலாறு - தல புராணம்"-என்று பெயரிட்டுள்ள ஒரு நூலை விலைக்கு வாங்கினேன். வீட்டிற்கு வந்ததும் படித்தேன் அறிவியலுக்குச் சிறிதும் பொருந்தாத ஊசிப்போன கருத்துகள் அந்நூலில் நிரம்பக் கூறப்பட்டுள்ளன. மற்றும், திருமலை சிலையில் இயற்கையாக வளையும் ஆழியும் (சங்கும் சக்கரமும்) இல்லாத குறையைச் சரி செய்ய இரண்டு செய்திகள் தரப்பட்டுள்ளன. அந்நூலில் உள்ளாங்கு அப்படியே அவை வருமாறு :

“பகவான் தொண்டைமானுக்குச்
சங்கு சக்கரம் அளித்தது”

“ஆனால் பகைவர்கள் பலராக இருந்ததால் போரில் தொண்டைமானுக்குத் தோல்வி ஏற்படும் போல் இருந்தது. ‘பகவானே, இது என்ன சோதனை ! உன்னை நம்பியவர் கைவிடப்பட்டதுண்டா?- என்று மனம் கலங்கிய தொண்டைமான், நாள்தோறும் பகவானனத் தரிசிக்கச் செல்வதற்காகத் தன் அரண்மனையிலிருந்து கோயில் வரை வெட்டிக் குடைந்து உண்டாக்கியிருந்த சுரங்கப் பாதை வழியாகக் கோயிலை அடைந்து பகவானுடைய பாதாரவிந்தங்களில் சரண் புகுந்தவனாக ’ஹே அனாத ரட்சகா! அடியேனை நீதான் காப்பாற்ற வேண்டும். உன் அடிமையாகிய எனக்குத் தோல்வி ஏற்பட்டால் அதனால் எனக்கு ஏற்படும் அவமானத்தை விட, உன்னை நம்பியவன் கைவிடப்பட்டான் என்ற பழிச் சொல் ஏற்படுமே என்பதற்காகத்தான் வருந்துகிறேன். கருணா சாகரப் பிரபோ! வழி காட்டு! காப்பாற்று’ என்று முறையிட்டவனாகக் கண்ணிர் உகுத்து நின்றான். உடனே பகவான் தன் கைகளிலிருந்த சங்கு சக்கரங்களைத் தொண்டைமானிடம் கொடுத்துப் போருக்குச் செல்லும்படிப் பணித்தார். சக்ராயுதம் பகைவர்களை வீழ்த்தியது. தொண்டைமான் வெற்றி பெற்றான்.

போர் முடிந்தபின் தொண்டைமான் சங்கு சக்கரங்களைப் பகவானிடம் கொண்டு வந்து சமர்ப்பித்து, 'பகவானே! அடியவன்பால் நின் கருனைத் திறத்தை உலகோர் அறியும் படியாக நீ எனக்குச் சக்கரங்களை அளித்ததை எந்நாளும் மாந்தர் நினைவு கொள்ளும்படியாக இவை மாந்தரின் ஊனக் கண்களுச்குப் புலப்படாதவாறு சேவை தர வேண்டும்’ என்று வேண்டினான். பகவானும் அவன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்." (பக்கம்-61)

முருகனை மாற்றியமைத்த திருமால் சிலையின் கைகளில் சங்கு சக்கரம் இல்லாத குறையை மறைக்க, மாந்தரின் கண்களுக்குப் புலப்படாதவாறு செய்யப்பட்டதாகக் கூறும் இந்தக் கதை பொய்யாக இட்டுக்கட்டப் பட்டது என்பது நடுவு நிலைமையாளர்க்கு நன்கு புலனாகலாம். இஃதன்றி, நூலின் 64 ஆம் பக்கத்தில் உள்ள மற்றும் ஒரு செய்தி வருமாறு:

"இராமாநுஜர் வேண்டப் பகவான் சங்கு சக்கரம் தரித்தது”

"திருமலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் தொண்டைமான் வேண்டுகோளுக் கிணங்கத் தமது திருக்கரங்கவில் சங்கு சக்கரம் இல்லாமலே காட்சியளித்து வந்தார். அதைக் கண்டு ஜனங்கள், அக்கடவுள் சிவபெருமான் என்றும் முருகன் என்றும் பலவாறு கூறி முரண்பட்ட கருத்துக்களால் பகைமை பூண்டு ஒழுகுவாராயினர். அதை அறிந்த இராமாநுஜர் அக்கருத்து வேறுபாடுகளைப் போக்க நினைத்தார்.

இந்த இராமநுஜர் யாரெனில், ஆதியுகத்தில் ஆதி சேஷனாகவும் இரண்டாவது யுகத்தில் லட்சுமணனாக

வும் மூன்றாவது யுகத்தில் பலராமனாகவும் தோன்றிய அனந்தாழ்வாரே யாவார். கலியுகத்தில் இராமாநுஜராக அவதரித்துப் பொய் மதங்களை வென்று மெய்யான பரம்பொருள் விஷ்ணுவே என்பதை நிலைநாட்டிட வேங்கட மலையை அடைந்து அங்கிருந்த குதர்க்க வாதிகளை வென்றபின் பகவானைத் துதித்து, 'திருவேங்கடத்து அண்ணலே! இக்கலியுகத்தில் தங்கள் திருக்கோலம் முழுவதையும் காட்டாமல் சங்கு சக்கரங்களை மறைத்து நின்றால் மக்கள் பலவாறு பேசுகிறார்கள். தங்கள் தாமரைக் கைகளில் சங்கு சக்கரங்களை ஏந்திக் காட்சி தந்தருள வேண்டும்' என்று பிரார்த்தித்தார். பகவான் அன்று முதல் அவ்வண்ணமே காட்சி யளித்தார்.'

குதிருக்குள் இல்லை

இச்செய்தி, 'எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை” என்னும் கதைபோன் றிருக்கிறதல்லவா? இப்பகுதியில் உள்ள ஜனங்கள் அக்கடவுள் சிவபெருமான் என்றும் முருகன் என்றும் பலவாறு கூறி முரண்பட்ட கருத்துக்களால் பகைமை பூண்டு ஒழுகுவாராயினர். அதை அறிந்த இராமாநுஜர் அக்கருத்து வேறுபாடுகளைப் போக்க நினைத்தார். வேங்கடமலையை அடைந்து அங்கிருந்த குதர்க்கவாதிகளை வென்றபின்.........சங்கு சக்கரங்களை மறைத்து நின்றால், மக்கள் பலவாறு பேசுகிறார்கள்" என்னும் தொடர்கள் எண்ணத் தக்கன. முருகனைத் திருமாலாக மாற்றிய செயலால் மக்கள் பகைமை பூண்டு ஒழுக நேர்ந்தது. அதனால் மக்கள் பலவாறு பேச நேர்ந்தது, குதர்க்கவாதிகளை வென்றது’ என்பது, சைவர்களோடு வாதிட்டு முருகனைத் திருமால் ஆக்கியதைக் குறிக்கும்.

செய்யுள் நடையில் உள்ள புராணப் பகுதிகளை மேலுள்ளவாறு உரைநடைப் படுத்தி இந்த நூலை உருவாக்கியவர் ஆர். சந்திரமோகன், பி. ஏ எனவும், விலை ரூ. 6-50 எனவும், லோட்டஸ் பப்ளிஷிங் ஹெளஸ் சென்னை-24-ஆறாம் பதிப்பு மார்ச் 1978 எனவும் இந் நூலின் முகப்பில் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குமேல் இன்னும் என்ன சொல்ல வேண்டும்? நடுவு நிலைமை கொண்ட உள்ளங்களே வேண்டும்.

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தை யான் மறந்து விடவில்லை. சில நாட்களில் மாலையில் கிழக்கே திங்கள் தோன்றுவதும் மேற்கே ஞாயிறு மறைவதும் ஒரே நேரத்தில் நிகழ்வதுண்டு. இந்த அடிப்படையில், இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் திருவேங்கட மலை தொடர்பாக ஒரு கற்பனை செய்துள்ளார். அஃதாவது:- முகிலானது ஒரு பக்கம் திங்களும் மற்றொரு பக்கம் ஞாயிறும் இருக்கத் தோன்றுவது போல, வேங்கட மலையில் திருமால் இரு கைகளிலும் சங்கு சக்கரத்துடன் இருக்கிறார் என்று கூறி யுள்ளார். பாடல் பகுதி வருமாறு :

"வீங்கு நீர் அருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடை நிலைத் தானத்து
மின்னுக் கொடி உயர்த்து விளங்குவில் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி

(காடு காண் காதை : 41—48)

என்பது பாடல் பகுதி, இதன்படி நோக்கின், நீண்ட காலத்துக்கு முன்பே, வேங்கட மலையில் திருமால் வளையும் ஆழியும் கைக்கொண்டிருந்தார் என்று எண்ண வேண்டியுள்ளது. உண்மையில் இளங்கோ வடிகள் காலத்தில் திருமால் சிலையின் கைகளில் சங்கு சக்கரம் இருந்திரா. பொதுவாகத் திருமாலுக்கு வளையும் ஆழியும் உண்டு என்பது அனைவரும் அறிந்த செய்தி, இந்த அடிப்படையில், வேங்கடமலைத் திருமால் கைகளிலும் வளையும் ஆழியும் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டே இளங்கோ வடிகள் இவ்வாறு கூறியிருக்க வேண்டும். இளங்கோ வடிகள் காலத்திற்கு முன்பே முருகன் திருமாலாக்கப்பட்டு விட்டார். பின்னர் செயற்கை வளையும் ஆழியும் பொருத்தப்பட்டன.

பரிபாடல்

இளங்கோ வடிகள் கூறியிருப்பது ஒருவகைக் கவிமரபு. பரிபாடல் என்னும் நூலிலும் பொதுவாகத் திருமாலைப் பற்றி இப்படி ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. பாடல் பகுதி வருமாறு:

"பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இருவேறு மண்டிலத் திலக்கம் போல
நேமியும் வளையும் ஏந்திய கையால்"

(பரிபாடல் 13 : 7—0)

என்பது பாடல் பகுதி. இருவேறு மண்டிலம் = ஞாயிறும் திங்களும். நேமி=சக்கரம். வளை = சங்கு. இப்பாடல் வேகேடமலைத் திருமாலைக் குறிப்ப தன்று: பொது, வாகத் திருமாலைப் பற்றிக் குறிப்பது. 

மணிமேகலை

சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும். இரட்டைக் காப்பியங்கள் எனல் மரபு, இவற்றின் ஆசிரியர்களாகிய இளங்கோவடிகளும் சாத்தனாரும் ஒரே காலத்தில் இருந்து ஒருவரை ஒருவர் நேரில் கண்டு உரை யாடிக் கொண்டவர்கள். எனவே, சாத்தனாரும் இளங்கோவடிகள் போலவே கற்பனை செய்துள்ளார். ஞாயிறும் திங்களும் போல் திருமால் ஆழியும் வளையும் வைத்திருப்பதாக இளங்கோ கூறியுள்ளார். சாத்தனாரோ காவிரிப்பூம்பட்டினம் (புகார்) என்னும் பெண், மாலையில் ஒரு பக்கம் வெண்தோடும் மற்றொரு பக்கம் பொன்தோடும் அணிந்திருந்தாற் போன்று, கீழ்பால் திங்களும் மேல் பால் ஞாயிறும் விளங்கின என்று கூறியுள்ளார். பாடல் பகுதி வருமாறு:

"புலவாை யிறந்த புகாரெனும் பூங்கொடி......
குணதிசை மருங்கில் நாள்முதிர் மதியமும்
குடதிசை மருங்கில் சென்று வீழ் கதிரும்
வெள்ளிவெண் தோட்டோடு பொன்தோடாக—"

(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய கதை).

என்பது பாடல் பகுதி. புகாரெனும் பூங்கொடி புகார் என்னும் பெண். குணதிசை = கிழக்கு. நாள் முதிர் மதியம் = முழுநிலா. குடதிசை = மேற்கு. வீழ் கதிர் = ஞாயிறு.

டென்னிசன்

இரு பக்கங்களிலும் ஒரே நேரத்தில் ஞாயிறும் திங்களும் தெரிவது பற்றிக் கூறுவது புலவர்கட்கு விருப்ய மான ஒன்றாகும். லார்டு டென்னிசன் (Lord Tennyson) இயற்றிய 'The Lotos Eaters” என்னும் ஆங்கிலப் பாடலிலும் இந்தக் காட்சி குறிப்பிடப்பட்டுள்ளது. யூலிசெஸ் (Ulysses) என்னும் கிரேக்க மன்னனின் போர் மறவர்கள், 'ட்ராய்' (Troy) பகுதியை வென்று தம்முடைய 'இதாகா' (Ithaea) என்னும் பகுதிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த வழியில் ஒரு தீவில் தங்கினார்களாம். அவர்கள் அத்தீவில் மாலையில் ஞாயிறுக்கும் திங்களுக்கும் இடையே அமர்ந் திருந்தார்களாம். பாடல் பகுதி:—

“They sat them down upon the yellow sand,
Between The sun and moon upon the shore”—

என்பது பாடல் பகுதி (5:1, 2). எனவே, இளங்கோவடிகள், திருமாலுக்கு வளையும் ஆழியும் உண்டு என்னும் எண்ணத்தில் வேங்கட மலைத் திருமாலைப் பற்றிக் கற்பனை செய்துள்ளாரே தவிர, உண்மையில் அப்போழ்து வளையும் ஆழியும் இருந்திருக்கி வாய்ப்பில்லை. இருந்திருந்தால், பிற்காலத்தில் இராமாநுசர் இவ்வளவு பாடுபட்டிருக்க வேண்டியதில்லையே. இராமாநுசர் வேங்கடமலைக் கோயிலில் சில திருப்பணிகள் செய்துள்ளமை ஈண்டு இணைத்து நோக்கத்தக்கது.

குகை வழி

மற்றும் ஒன்று:—தொண்டைமான் என்னும் அரசன் வேங்கட மலைக் கோயிலைக் கட்டினானாம். அவன் மலையை வெட்டிக் குடைந்த சுரங்கப் பாதை வழியாகச் சென்று திருமாலை வழிபடுவானாம்-என முற்கூறிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. முருகன் வேங்கட மலைக் குகை வழி வந்ததாகக் கந்தபுராணமும் கந்த புராண வெண்பா நூலும் அருணகிரியாரின் திருப் புகழும் கூறியுள்ள செய்தி ஈண்டு ஒப்பு நோக்கி எண்ணத் தக்கது.

இல்லாமல்—அள்ளாமல்

இலக்கியச் சான்று வேண்டுவோர்க்கு இதுவரை கூறிவந்த சான்றுகள் போதாவா? முருகன் காவடி ஒருபுறம் இருக்க, வேறு ஊர்களைப் பற்றி இவ்வாறு கூறாமல், இந்த வேங்கடத்தைப் பற்றி மட்டும் இவ்வளவு சிக்கலும் குழப்பமும் உண்டானதற்கு உரிய காரணமென்ன?- என்பதை மீண்டும் ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். இராமாநுசரே மாற்றுக் கொள்கையையும் குறிப்பிட்டுள்ளாரே. எங்கள் குடும்பத்தில் நடைபெறும் படையல் முறைக்கு-கடவுள் வழிபாட்டு முறைக்கு எந்த இலக்கியத்திலும் சான்று இல்லை. நாங்கள் செய்வதே வழி வழிச்சான்று. காவடியும் இன்னதே.

"இல்லாமல் பிறக்காது-அள்ளாமல் குறையாது’ என்னும் பழமொழி நூற்றுக்குநூறு பொருந்தாவிடினும் பெரும்பாலும் பொருந்தும். எனவே 'அரோகரா’ போடலாம். -

"திருப்பதி-திருமலை முருகனுக்கு அரோகரா"
"திருப்பதி-திருமலை முருகனுக்கு அரோகரா"
"திருப்பதி-திருமலை முருகனுக்கு அரோகரா"

"சாமி மலையேறி விட்டது."

கோவிந்தா - கோவிந்தா

யான் இவ்வாறு எழுதியதால் என்னை மத வெறியன் என்று எவரும் எண்ணலாகாது "எம்மதமும் சம்மதம்" என்னும் கொள்கையுடையவன் யான். உண்மை விளம்பியான். பின்வருவனவற்றை யான் கூட்டத்திலும் கூறினேன். எங்கள் குடும்பத்தில் சைவ வைணவ வேறுபாடே கிடையாது. எங்கள் குடும்பத்துக் குழைந்தைகட்கு முதல் (மொட்டை) முடி சைவப் பதியாகிய வைத்தீசுவரன் கோயிலிலும் இரண்டாவது (மொட்டை) முடி வைணவப் பதியாகிய திருவயிந்திர புரத்திலும் எடுப்பது வழக்கம். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு (விரதம்) தோன்பு உண்டு. புரட்டாசித்திங்களில் மூன்றாம் சனிக் கிழமை பெருமாளுக்குச் சிறப்புத் தளியல் - படையல் உண்டு. அன்றைக்கு என் பிள்ளைகள் தெருவாயிற்படிக் கதவிலும் என் நெற்றியிலும் நாமம் சாத்துவார்கள். எனவே, திருப்பதி - திருமலையில் திருமால் திருமேனி இருப்பதில் தடையொன்றும் எனக்கு இல்லை. இளமையிலிருந்து யான் அறிந்து வைத்திருக்கும் உண்மையை இங்கே உரைத்தேன்-அவ்ளவுதான்! கருத்து வேற்றுமைக்காகப் பகையுணர்வு கூடாது என எதிர் தரப்பினரின் திருவடிகளில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி, வணக்கம். நட்பு வளர்க!

      “கோவிந்த நாம சங்கீர்த்தனம்—
           கோவிந்தா கோவிந்தா!”