இலக்கியத்தில் வேங்கட வேலவன்/முன்னுரை

ஆசிரியர் முன்னுரை

புதுச்சேரியிலுள்ள சன்மார்க்க சங்கத்தில் யான் 26–11–1987 ஆம் நாள் ‘மனிதனும் தெய்வமும்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்த பொழுது இடையிலே திருவேங்கடமலை பற்றிக் குறிப்பிட்டு ஒரு கருத்து கூறினேன். உடனே, யான் நகைச்சுவையோடு பேசி மகிழும் நண்பர்களாகிய திரு. சித்தனும், திரு. கோபாலய்யரும் குறுக்கிட்டு வினா எழுப்பினர். யான் விடை இறுக்க - இறுக்க மேலும் மேலும் கோபாலய்யர் குறுக்கிட்டுக்கொண்டேயிருந்தார்: எடுத்துக்கொண்ட தலைப்பைப் பற்றிப் பேசி முடிக்க இடையூறாக இருந்தது இது.

ஒருவர் சொற்பொழிவாற்றும்போது, வேண்டுமானால் ஒரு முறை குறுக்கிடலாம். பேசி முடித்த பின்னர், ஐயப்பாடுகளையும் மாற்றுக் கருத்துகளையும் வெளியிடலாம். இடையிலேயே பல முறை தொடர்ந்து குறுக்கிட்டுக் கொண்டிருக்கலாமா ?

அப்போது நான், “இதுபற்றி இதோடு நிறுத்திக் கொள்ளலாம்; பின்னர் இதுபற்றி யான் தனியாக ஒரு நூல் எழுதித் தந்துவிடுகிறேன்” — என்று கூறினேன் அன்று அங்கேதந்த வாக்குறுதிப்படி இந்தச் சிறிய நூலை எழுதி வெளியிடலானேன்.

நூலை அன்புடன் நன்முறையில் விரைந்து அச்சிட்டுத் தந்த வெற்றி அச்சகத்தாருக்கு மிக்க நன்றி செலுத்துகிறேன்.

சுந்தர சண்முகன்
16–8–1988