இலங்கைக் காட்சிகள்/இலங்கையில் இறங்கினேன்


2
இலங்கையில் இறங்கினேன்

தற்கு முன்னல் நான் விமானத்தில் பிரயாணம் செய்ததில்லை. விமானப் பிரயாணம் புதிதாக இருந்த காலத்தில் அதன் மகிமையைப்பற்றியும் ஆச்சரியமான வேகத்தைப்பற்றியும் அடிக்கடி பத்திரிகைகளில் செய்திகள் வந்துகொண்டிருந்தன. இப்போதோ பத்திரிகைகளில் விமானத்தைப்பற்றி ஏதேனும் செய்தி வருவதாக இருந்தால் அது பெரும்பாலும் விபத்தாகவே இருக்கிறது !

நான் புதிதாக விமானத்தில் பிரயாணம் செய்தமையால் எனக்கு அதில் புதுமை உணர்ச்சிதான் உண்டாயிற்று. விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் என் பெட்டியைச் சோதனை போட்டு, " கட்டிக் கொள்ளும் துணியும் புத்தகங்களுமே இருக்கின்றன." என்று அநுமதித்து விட்டார்கள். அங்குள்ள டாக்டர் அம்மை அத்தாட்சியையும் காலரா அத்தாட்சியையும் பார்த்துச் சரி என்று சொல்லிவிட்டார். கையில் இருந்த இந்திய நாணயத்தை இலங்கை நாணயமாக மாற்றிக்கொண்டேன். ரூபாய்க்கு ரூபாய் கொடுத்து விட்டார்கள். ஆனால் இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது இலங்கை ரூபாயை இந்திய நாணயமாக மாற்றியபோது வட்டம் பிடித்துக்கொண்டார்கள்.

விமானம் சரியாகக் காலை 11-45-க்குப் புறப்படுவதாக இருந்தது. அதற்குச் சிறிது நேரத்திற்கு முன் விமானத்துக்குள் நுழைந்து அமர்ந்தேன். விமானம் புறப்படுவதற்கு முன் பப்பர்மிட்டும் பஞ்சும் கொடுத்தார்கள். பப்பர்மிட்டு வாயில் அடைத்துக்கொள்ள; பஞ்சுகாதில் அடைத்துக்கொள்ள. உட்காரும் ஆசனத்தில் இருந்த வாரைப் பூட்டிவிட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களையெல்லாம் பார்க்கிறபோது ஏதோ சர்க்கஸ் வேடிக்கைக்குத் தயார் செய்வதுபோல் இருந்தது. காதில் உள்ள ஜவ்வுக் கெட்டுப்போகும்படி விமானம் சத்தம் போடும் என்று நினைத்தேன். விமானம் புறப்படும் நேரத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

விமானம் தரையில் ஓடத் தொடங்கியது. விமானத்தின் ஓட்டம் சிறிது அதிகமாயிற்று. பிறகு இரைச்சல் மிக மிக அதிகமாயிற்று. ஓட்டமும் படுவேகமாக இருந்தது. வேகமாக ஓடிக்கொண்டிருந்தபோதே அது மெல்ல மேலே எழுந்தது. அப்படி மேலே எழும்பும்போது ஒரு தனியான அநுபவம் உண்டாயிற்று. அந்த மாதிரியான அநுபவத்தை முன்பே நான் அடைந்திருக்கிறேன் என்று தோன்றியது. எங்கே எப்படி அந்த அநுபவம் எனக்கு முன்பு உண்டாயிற்று? யோசித்துப் பார்த்தேன்.

பல சமயங்களில் நான் பறப்பதாகக் கனவு காண்பதுண்டு. நின்ற இடத்தில் நின்றபடியே இரண்டு கைகளையும் விரிப்பேன் காலை ஓர் உந்து உந்துவேன். கிர்ரென்று மேலே பறந்து விடுவேன். இப்படி எத்தனையோ தடவை நான் கனாக் கண்டிருக்கிறேன். அடுத்தடுத்துப் பறப்பதாகக் கனவு காண்பதில் ஏதோ விசேஷம் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். சில அன்பர்களைக் கேட்டேன். "உங்களுக்குப் பறக்கவேண்டும் என்ற ஆசை மனத்தின் அடித்தளத்திலே ஆழத்தில் உங்களை அறியாமல் இருக்கிறது. அந்த ஆசை நனவில் நிறைவேறாது. ஆகவே, கனவு உண்டாகிறது" என்றார் ஒரு நண்பர். மற்றொரு நண்பர் வேறு ஒரு காரணம் சொன்னார் : “நீங்கள் போன பிறவியில் பறவையாக இருந்திருக்க வேண்டும். அந்தப் பூர்வ ஜன்ம வாசனைதான் கனவிலே வந்து வந்து நிற்கிறது” என்றார் அவர். வேறு ஓர் அன்பர் தத்துவ நூல்களைப் படித்தவர். அவர் சொன்னதுதான் எனக்குப் பொருத்தமாகத் தோன்றியது. "ஆத்மாவானது பிறவிதோறும் பல வகை வாசனைகளால் உந்தப்படுகிறது. வரவர உயர்ந்த சிந்தனைகளும் உன்னதமான பண்பும் உடையவராகச் சிலர் ஆகிறார்கள். ஆத்மா உன்னத லட்சியத்தை எட்டித் தாவும் இயல்பு இத்தகைய குறிப்புகளால் வெளிப்படும். நீங்கள் மேலே மேலே உயரவேண்டும் என்ற ஆர்வத்தோடு பண்பு பெற்று வருகிறீர்கள் என்பதற்கு அடையாளமே, நீங்கள் கனவில் பறப்பதாகக் காணும் காட்சி " என்று அந்த அன்பர் என் கனவுக்குப் பொருள் உரைத்தார். இதுதான் பொருத்த மென்று எனக்குத் தோன்றுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது ? சொல்லுங்கள்.

பறக்கிற கனவுகளில் இந்த மாதிரி அநுபவம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. அப்பொழுதெல்லாம் மிகவும் இயற்கையாக ஒரு காரியத்தைச் செய்வதுபோலத்தான் தோன்றும். ஆனால் இப்போது அடைந்த உணர்ச்சி இயற்கையாக இல்லை. முன்னால் ஜாக்கிரதைப் படுத்தினபோது எதிர்பார்த்தபடி பயங்கரமானதாகவோ,சகிக்கத் தகாததாகவோ இல்லை. 'அப்படியானால், இந்த அநுபவம் நமக்கு எப்படிப் பழையதாகத் தெரிகிறது ?'

கண்டு பிடித்துவிட்டேன். விழாக் காலங்களில் நம் நாட்டில் ராட்டினம் நட்டுக் குழந்தைகளை ஏற்றிச் சுற்றுவார்கள். அந்த ராட்டினம் இரண்டு வகை. ஒன்று குடை ராட்டினம்; பம்பரம்போலச் சுழலுவது. மற்றொன்று தொட்டில் ராட்டினம் ; தொட்டில் மாதிரி இருக்கும்; மேலும் கீழும் போய்வரும் அந்தத் தொட்டில் ராட்டினத்தில் ஏறினால் தொட்டில் மேலே போகும்போது ஒரு விதமான உணர்ச்சி ஏற்படும். விமானம் மேலே எழும்பும்போது எனக்கு ஏற்பட்ட அநுபவமும் தொட்டில் ராட்டின அநுபவமும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. அப்படியே விமானம் இறங்கும்போதுகூட அந்தத் தொட்டில் ராட்டினத்தில் கீழே வரும்போது உண்டான உணர்ச்சியே ஏற்பட்டது.

விமானம் மேலே எழும்பி வானவெளியில் பறக்கத் தொடங்கியது. அப்போது அது அசைவதாகவே தோன்றவில்லை. ஒரே இடத்தில் நிற்பதாகவே தோன்றியது. ஆனால் அதன் சத்தம் மாத்திரம் பலமாக இருந்தது. அதற்கு மேலே சத்தம் போட்டுப் பேசினார்கள், அந்த விமானத்தில் பயணம் செய்த பெண்கள். ரெயிலில் பிரயாணம் செய்யும்போது ஆட்டம் எடுக்கிறது. எதையாவது எழுதலாமென்றால் கை ஒரு பக்கம் பேனா ஒரு பக்கம் ஓடுகின்றன. எப்படியோ சிரமப்பட்டு எழுதினாலும் அந்த எழுத்தை நம்மாலே வாசிக்க முடியாது. ஆனால் விமானத்தில் இந்தத் தொல்லையே இல்லை. விமானம் வேகமாகப் பறந்தாலும் நாம் உள்ளே அமைதியாக எழுதிக் கொண்டிருக்கலாம். அங்கே நம்மைக் கவனித்துக் கொள்வதற்காகவே இருக்கும் பணிப்பெண் (Air Hostess) அடிக்கடி வந்து புன்சிரிப்புடன் என்ன வேண்டுமென்று கேட்கிறாள். பத்திரிகைகளை வாசிக்கக் கொடுக்கிறாள். காபி, டீ. ரொட்டி, பிஸ்கத் வேண்டுமானால் தருகிறாள்.

ஆனால் விமானம் விரைவிலே குறித்த இடத்துக்குப் போகத்தான் உதவும். பிரயான இன்பத்தை அதில் அநுபவிக்க முடியாது. உல்லாசப் பிரயாணம் செய்ய வேண்டுமானால் நம்முடைய தென்னாட்டு ரெயில் வண்டியில்தான் போகவேண்டும். எவ்வளவு நிதானமாக இருமருங்கும் தோன்றும் காட்சிகளைப் பார்க்க வேண்டுமோ அவ்வளவு நிதானமாகக் காணலாம். விமானத்தில் உட்கார்ந்தபடியே வெளியிலே பார்க்கச் சாளரங்கள் இருக்கின்றன. அதன் வழியாகப் புற உலகைப் பார்க்கலாம். ஆனால் வானத்தில் விமானம் பறக்கும்போது கீழே உள்ள பொருள்கள் தெளிவாகத் தெரிவதில்லை. நிலப்பரப்பிலே உள்ள சோலைகளையும் அழகிய கட்டிடங்களையும் மனிதக் கூட்டங்களையும் ஆடுமாடுகளையும் தரையில் செல்லும் பிரயாணத்திலே கண்டு கண்டு மகிழலாம். விமானத்திலிருந்து பார்த்தால் காடுகளில் உள்ள மரங்கள்கூட வெறும் புல் பூண்டாகத் தோன்றுகின்றன. மனித உருவமே புலப்படுவதில்லை. ஆறுகள் மாத்திரம் வளைந்து வளைந்து வருவதைப் பார்க்கலாம். பெரிய ஏரிகள் அங்கங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் பாத்தி போலத் தோன்றும். கடல் நன்றாகத் தெரியும். கடல் ஆழத்தின் பேதத்தை நீலவண்ணத்தின் பேதங்களால் தேசபடத்தில் காட்டுவார்கள். அந்தப் படத்தில் காண்பதுபோலக் கடலின் தோற்றத்தைக் காணலாம். கரையை அடுத்த பகுதிகளில் வெளிறிய நீலமாகவும் வரவர நீலம் மிகுதியாகி நடு இடத்தில் கரு நீலமாகவும் காட்சி அளிக்கும்.

சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் கடற்கரை ஓரமாகவே பறந்து சென்றது. ஆறுகளும் குன்றுகளும் தெரிந்தனவேயொழிய இன்ன ஊர்ப் பக்கம் இது என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. தெற்கே பறந்து சென்ற விமானம் ஓரிடத்தில் கிழக்கு நோக்கிப் பறந்தது. அதுதான் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போகக் கடலைத் தாண்டிச் சென்ற நிலை. ஐந்து நிமிஷத்தில் கடலைத் தாண்டிவிட்டது. விமானம். அப்போது எனக்கு மிகவும் வியப்பு உண்டாயிற்று. ஹநுமான் இந்தக் கடலைத் தாண்டிச் செல்ல எத்தனை பாடுபட்டார் என்ன என்ன சங்கடங்கள் அவருக்கு இடைவழியிலே உண்டாயின! இந்த விமானம் அஞ்சு நிமிஷத்திலே தாண்டிவிட்டதே!

விமானத்திலிருந்து இலங்கையின் மேற்குக் கடற்கரை புலனாயிற்று. இலங்கையின் தலைச்சொருக்குப்போல் படத்தில் தோன்றும் இடம் யாழ்ப்பாணம். 'ஏர் இந்தியா' விமானத்தில் இலங்கை செல்வதாக இருந்தால் திருச்சி சென்று அங்கிருந்து கொழும்பு செல்லவேண்டும். 'ஏர் சிலோன்' விமானமானால் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொழும்புக்குப் போகவேண்டும். நான் சென்றது 'ஏர் சிலோன்' விமானம். ஆதலால் யாழ்ப்பாணத்தில் அது இறங்கியது. 1-45-க்கு யாழ்ப்பாண விமான நிலையத்தில் வந்து இறங்கினேன். அங்கே சுங்கச் சோதனையும் ஆரோக்கிய சோதனையும் நடந்தன. அம்மை அத்தாட்சி, காலரா அத்தாட்சி கொண்டுவராவிட்டால் இங்கிருந்து மீட்டும் அனுப்பி விடுவார்களாம். அரை மணி நேரம் யாழ்ப்பாண விமான நிலையத்தில் இருக்க வேண்டியிருந்தது. சரியாக 2-15க்கு வேறு விமானத்தில் எங்களை ஏற்றிக்கொண்டார்கள். அங்கிருந்து பிற்பகல் 3-10-க்குக் கொழும்பு வந்து சேர்ந்தேன்.

இலங்கையின் தலைநகரம் கொழும்பு. ஏறக்குறைய ஐந்து லட்சம் ஜனத்தொகை உள்ள நகரம். நகரத்திலிருந்து தெற்கே எட்டு மைல் தூரத்தில் ரத்மலானா என்ற இடத்தில் விமான நிலையம் இருக்கிறது. விமான நிலையத்துக்கு அன்பர்கள் வந்திருந்தார்கள். மாலையிட்டு வரவேற்றார்கள். ஸ்ரீ கணேஷும், வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீ ஹரன் அவர்களும், இலங்கை ரேடியோவிலுள்ள ஸ்ரீ சிவபாத சுந்தரம்[1] . அவர்களும், வேறு சிலரும் வந்து வரவேற்றார்கள். எனக்கு முன்பே தெரிந்தவர்களும் புதிய அன்பர்களும் முகமலர்ந்து தங்கள் அன்பை வெளியிட்டார்கள். என்னைச் சுற்றிலும் தமிழர்கள். என்னை அவர்கள் அன்புடன் தமிழிலே செளக்கியம் விசாரித்தார்கள். தமிழ் நாட்டிலே உள்ள ஓர் ஊருக்குப் போனதாகத் தோன்றியதே ஒழிய அயல் நாட்டுக்கு வந்ததாகவே தெரியவில்லை.

அப்போது ஓர் அன்பர் வந்தார். வீரகேசரிப் பத்திரிகையின் நிருபர் அவர். “ஏதாவது ச்சொல் உண்டா?" என்று கேட்டார். சொல் என்பதை நாம் சொல்வதுபோலச் சொல்லாமல் வல்லோசையுடன் உச்சரித்தார். முதலில் அவர் பேசினது விளங்கவில்லை. “என்ன?" என்று கேட்டேன். ஏதாவது செய்தி உண்டா?” என்று விளக்கினர். அவர் யாழ்ப் பாணக்காரர்.

சில நாட்களுக்கு முன்னே ஏதோ ஒரு குருட்டு யோசனையில் ஆழ்ந்திருந்தேன். நாம் பேசும் தமிழைப் பற்றி என் மனம் எண்ணமிட்டது. வல்லின எழுத்துக்கள் சொற்களின் முதலில் வரும்போது முழு வல்லினமாக, வன்மையாக உச்சரிக்கிறோம். மகன், தங்கம் என்ற இடங்களில் ககரம் முழு வல்லினமாக இல்லை. கல் என்னும்போது வன்மை ஒலியோடு ககரம் ஒலிக்கிறது. பண் என்றாலும், தந்தை என்றாலும் பகரத்தையும் தகரத்தையும் வல்லோசையோடு உச்சரிக்கிறோம். ஆனால் சகரத்தை மாத்திரம் மொழிக்கு முதலில் வரும் போது கௌசிகன் என்ற சொல்லில் வரும் வடமொழி எழுத்தாகிய சி என்பது போல உச்சரிக்கிறோம், சட்டி, சொன்னான், சொக்கன், சோலை, சிறுவன்-எல்லாவற்றிலுமே சகரம் வல்லோசை பெறுவதில்லை. வல்லினமாக உள்ள மற்றவற்றின் இயல்பு இந்தச் சகரத்துக்கு மாத்திரம் இல்லையே! முன்காலத்தில் அதையும் வல்லோசையுடன் உச்சரித்திருப்பார்கள் போலும்!- இவ்வாறு அன்று ஒலியாராய்ச்சியில் என் சிந்தனையை ஓடவிட்டேன்.

“ஏதாவதுச்சொல் உண்டா ?” என்று வீரகேசரியின் நிருபர் என்னைக் கேட்டபோது எனக்கு அது நினைவுக்கு வந்தது. சகரம் வல்லினமாக ஒலிப்பதை அவர் வாய்மொழியால் தெளிந்தேன். இதைப்பற்றி முன்பு சிந்திக்காமல் இருந்திருந்தால் அவர் பேசியதில் அத்தனை சுவாரசியம் தோன்றியிராது. முன்பு சிந்தித்தமையினால் அவருக்கு நான் செய்தி ஏதேனும் சொல்வதைப்பற்றி யோசிப்பதற்கு முன் அவர் சொன்ன 'ச்சொல்'லில் ஈடுபட்டு நின்றேன். நான் செய்தியை யோசிப்பதாக நண்பர் எண்ணியிருக்கக் கூடும்.

அவர் விருப்பப்படி நான் என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். இலங்கைக்கு வந்தது தமிழ்நாட்டுக்கு வந்ததைப் போலவே இருக்கிறது. இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்குமிடையில் எவ்வித வேற்றுமையையும் என்னால் காண முடியவில்லை. இலங்கைக்கு இப்பொழுதுதான் முதல் முறையாக நான் வருகிறேன். இதற்கு முன் இந்த நாட்டுக்கு வரும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்படவில்லை. என் பழைய நண்பர்களின் முகங்களை விமான நிலையத்தில் இறங்கியவுடன் பார்க்கும்பொழுது பரமானந்தமாயிருக்கிறது" என்றேன்.

எல்லோரும் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டோம். அன்று இரவு வீரகேசரி ஆசிரியர் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

வண்டியிலே போய்க்கொண்டிருக்கும்போதே ஆசிரியர் ஹரன் தமிழ்நாட்டைப்பற்றி மிக ஆவலாகப் பல செய்திகளை விசாரித்தார். தமிழ் நாட்டில் உள்ள வறுமை நிலையை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. நான் நேரிலே கண்ட காட்சி ஒன்றைச் சொல்லி அதன் மூலம் இங்குள்ள வறுமையைப் புலப்படுத்த எண்ணினேன். “ரெயில்வே ஸ்டேஷனில் நாம் எதையாவது சாப்பிட்டுக்கொண்டிருந்தால் பசியைக் கண்ணிலே வைத்துக்கொண்டிருக்கும் ஏழைகள் சுற்றி நின்று கை நீட்டுகிறார்கள். அதைப் பிடுங்கிக்கொண்டு போகவும் தயாராக இருக்கிறார்கள்' என்றேன். அவர் அதைக் கேட்டு வருந்தினர். அன்று மாலைப் பத்திரிகையிலே அதைப்பற்றி அவர் எழுதி விட்டார்! தெய்வ பக்தி எப்படி இருக்கிறதென்று கேட்டார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப்பற்றி விசாரித்தார். தமிழ் மக்களைப்பற்றியும் தமிழ் மொழியைப்பற்றியும் தெரிந்துகொள்ள இலங்கைத் தமிழர்கள் எத்தனை ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதை அவர் கேட்ட கேள்விகள் காட்டின. அவர் வீட்டுக்கு வந்து அன்றிரவு ஓய்வு எடுத்துக்கொண்டேன்.

மறு நாள் கொழும்பு மாநகரத்தைப் பார்க்கப் புறப்பட்டேன். கொழும்பில் உள்ள சட்டசபைக் கட்டிடத்தையும், கடற்கரையையும், பெரிய வீதிகளையும் பார்த்தேன். அழகிய நகரம். போக்கு வரத்து வசதிகள் உள்ள நகரம். பின்பு அங்குள்ள மியூசியத்தைப் பார்க்கப் போனேன்.


  1. இப்போது கொழும்பு லிவர் பிரதர்ஸில் இருக்கிறார்