இலங்கைக் காட்சிகள்/கொழும்பு நூதன சாலை


3
கொழும்பு நூதன சாலை

நானும் உடன்வந்த நண்பரும் கொழும்பு தேசீயப் பொருட்காட்சிச் சாலைக்குள் புகுந்தபோதே எங்களுக்கு நல்ல சகுனம் உண்டாயிற்று. அந்தக் காட்சிச் சாலையில் உள்ள பொருள்களை வருவோருக்கு விளக்கிக் காட்டுவதற்காகச் சில அறிஞர்களை நியமித்திருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் திரு நா. சுப்பிரமணியம் என்பவர். அவர் எங்களைக் கண்டவுடன் தமிழ் நாட்டுக்காரர்கள் என்று தெரிந்துகொண்டார். அவர் இலங்கைத் தமிழர்.

இளைஞராகிய அவர் புன்முறுவலோடு எங்களை அணுகினார். என்னை இன்னாரென்று அவர் ஊகித்துக் கொண்டார். “இந்த நூதனசாலையில் உள்ள பொருள்களைப்பற்றிய விவரங்களைச் சொல்கிறேன்; அதற்காகவே நான் இங்கே இருக்கிறேன்" என்றார். இது நல்ல சகுனம் அல்லவா? அவர் ஒரு தமிழ் எழுத்தாளர். சிங்கள இலக்கியத்தில் பயிற்சி உள்ளவர். திருக்குறளைச் சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

நூதன சாலை என்ற பெயர் எனக்கு நூதனமாக இருந்தது. மியூசியத்தைக் காட்சிச்சாலை, பொருட்காட்சிச் சாலை என்று இங்கே வழங்குகிறோம். அநேகமாக மியூசியங்களில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிவந்த பண்டங்களும், கண்டெடுத்த பொருள்களுமே இருக்கின்றன. எல்லாம் பழைய பொருள்கள். அவற்றை வைத்திருக்கும் சாலைக்கு நூதன சாலை என்ற பெயர் வழங்குவது வேடிக்கையாக இருந்தது. இந்தப் பொருள்களைப் பார்க்க வருகிறவர்கள். இவற்றைப் புதிதாகப் பார்க்கிறார்கள். பொருள்கள் பழையனவாக இருந்தாலும் பார்க்கிறவர்கள் புதுமைப் பொருள்களைப் பார்க்கிறது போலவே காண்கிறார்கள். அவர்கள் காணும் காட்சி புதுமையானது. காண்போருக்கு நூதனமாக இருப்பதனால் அந்தப் பெயர் வந்திருக்கலாம்.

எப்படியோ நூதன சாலையென்றால் மியூசியம் என்று இலங்கையில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். அதுதானே வேண்டும்? சொல்கிறவன் எந்தக் கருத்தோடு சொல்லைச் சொல்கிறானே, அந்தக் கருத்தைக் கேட்கிறவன் தெளிந்துகொண்டால் சொல் பயனுடையதாகிறது. இங்கே சென்னையில் உள்ள மியூசியத்துக்கு மிக மிக வேடிக்கையான பெயர் வழங்குகிறதை அன்பர்கள் அறிந்திருப்பார்கள். “செத்த காலேஜ்" என்று பாமர ஜனங்கள் வழங்குவதை எத்தனையோ முறை கேட்டிருக்கிறோம். 'பீபிள்ஸ் பார்க்'கை உயிர்க் காலேஜ் என்றும், பொருட்காட்சிச் சாலையைச் செத்த காலேஜ் என்றும் சொல்கிறார்கள். உயிர்க் காலேஜில் யானையும் ஒட்டகமும் ஒட்டைச் சிவிங்கியும் உயிருடன் நடமாடுகின்றன. செத்த காலேஜில் செத்துப் போன பிராணிகளே வைத்திருக்கிருர்கள். மியூசியத்தில் பாமர மக்களைக் கவர்கிற பகுதி இன்னதென்று இந்தப் பெயரே சொல்கிறது. சென்னை மியூசியத்தில் உள்ள அற்புதமான சிற்பங்களையோ மர வேலைப்பாடுகளையோ பழையதுப்பாக்கி முதலியவைகளையோ அவர்கள் கவனித்துப் பார்க்கவில்லை. பிராணி வர்க்கங்கள் உள்ள பகுதியைத்தான் அவர்கள் அதிகமாகக் கண்டு ரஸித்திருக்க வேண்டும்.

கொழும்பு நூதனசாலை பார்க்கத்தக்க இடம். 'ராயல் ஏஷியாடிக் சொசைடி'யினர் முதல் முதலாக 1847-இல் ஒரு காட்சிச் சாலையைத் தொடங்கினார்கள். அதுவே நாளடைவில் வளர்ந்து பெருகிப் பெரிய மியூசியம் ஆகிவிட்டது. அவ்வப்போது கிடைத்த பொருள்களைத் தொகுத்து அங்கே பாதுகாக்கலானர்கள். இரண்டடுக்கு மாளிகைகளில் இன்று பல பொருள்கள் போற்றி வைக்கப்பெற்றிருக்கின்றன.

இரண்டாவது உலகப் போர் வந்தபோது மியூசியம் உள்ள இடத்தைக் காலி செய்தார்கள். காட்சிப் பொருள்களெல்லாம் பாதுகாவலில் இருந்தன. சண்டை முடிந்த பிறகு வெளிவந்திருக்கின்றன. இதனால் சில பொருள்கள் நிலைகுலைந்து போயினவாம்.

இப்போது கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி என்ற நான்கு இடங்களில் காட்சிச்சாலைகள் இருக்கின்றன. தலைநகராகிய கொழும்பில் உள்ளது பெரிதென்று சொல்ல வேண்டியதில்லை. இங்கே பல பகுதிகள் உள்ளன. நான் அதிகமாகக் கவனித்துப் பார்த்தவை உலோக விக்கிரகங்கள், சிலா விக்கிரகங்கள், ஓவியங்கள் ஆகியவை உள்ள பகுதிகளே.

இலங்கையைப் பழங்காலத்தில் பல அரசர்கள் வெவ்வேறு இடங்களில் இராசதானியை அமைத்துக் கொண்டு ஆண்டார்கள். அவர்களுக்குள் கண்டியிலிருந்து ஆண்ட கடைசி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்பவன். அந்த அரசனுடைய தங்கச் சிங்காதனம் லண்டனில் இருந்தது. இலங்கை சுதந்தரம் பெற்ற பிறகு அந்தச் சிங்காதனம், கண்டி அரசனுடைய கிரீடம், செங்கோல், துப்பாக்கி முதலியவை மீட்டும் இலங்கைக்கே கிடைத்தன. அவற்றைக் கொழும்பு மியூசியத்தில் காணலாம். இந்தப் பொருட்காட்சிச் சாலைக்கு வருகிறவர்கள் யாரானாலும் இந்தச் சிங்காதனத்தைப் பாராமல் போவதே இல்லை.

விக்கிரகங்கள் உள்ள பகுதியில் மிகவும் சிறந்த வேலைப்பாடுள்ள நடராஜ விக்கிரகங்கள் சிலவற்றைப் பார்த்தேன். 'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்' என்று திருநாவுக்கரசர் பாடினர். 'குமிண் சிரிப்பு' என்பது அவருடைய பாவனை என்று நினைப்பவர்கள் இங்கே உள்ள இரண்டொரு நடராஜத் திருவுருவங்களைக் காணவேண்டும். உண்மையாகவே அந்த மூர்த்திகளின் திருமுகங்களில் புன்முறுவல் குமிழ்ப்பதைக் காணலாம். அந்தப் புன்முறுவல் பூத்த திருமுகமண்டலத்தில் நம் விழியைச் செருகிவிட்டால் செம்பும் வெண்கலமும் என்றா தோன்றுகிறது? உலகத்தின் பூசல்களுக்கிடையே, வாழ்ந்தும் தாழ்ந்தும், இன்புற்றும் துன்புற்றும் வந்து வந்து செல்லும் மக்கட் கூட்டத்தின் முன் நடராஜப் பெருமான் என்றும் மாருத புன்னகையுடன், எதனாலும் வேறுபாடு அடையாத பொலிவுடன் நடனமாடிக் கொண்டிருக்கிருன் என்றே நினைக்கத் தோன்றுகிறது. முகத்தை வடித்த சிற்பி வாயை வடித்தான் இதழை வடித்தான்; அது பெரிதல்ல;அதனிடையே புன்னகையை வடித்து வைத்தானே, அந்த அழகை என்னவென்று சொல்வது!

அழகிய சுந்தரமூர்த்தி நாயனரின் திருவுருவத்தைக் கண்டு சில கணம் நின்றேன். இன்னும் பல பல திருவுருவங்களைக் கண்டேன்.

சிலா விக்கிரகங்கள் உள்ள பகுதியில் எத்தனை புத்த விக்கிரகங்கள் உலோகத் திருவுருவத்திலும் அப்படியே உள்ளன. புத்தர் பிரான் நின்றும் இருந்தும் கிடந்தும் காட்சி தருகிற கோலங்களைக் கண்டேன். கொந்தளிக்கும் உலகில் அமைதியின் திருவுருவாக வீற்றிருக்கிறார் அவர். அலை கடல் துரும்புபோல மக்கள் அலைந்து பகலில் ஓய்வின்றி உழைத்தும், இரவில் உறக்கமின்றி உழன்றும், படுத்தால் கனவும் பல நினைவும் அமைதியைக் குலைக்கக் கிடந்தும் வாழும் காட்சிகளுக்கிடையே தம்மை மறந்த லயந்தன்னில் துயில் கூரும் புத்தரின் கோலம் கண்டேன். வலப்பக்கம் திரும்பி வலக்கையைத் தலையின் கீழ்வைத்துப் படுத்திருக்கிறார் அவர். சயனத் திருக்கோலத்தில் புத்தரை எங்கே கண்டாலும் வலப்பக்கம் திருப்பிப் படுத்த கோலத்தையே கண்டேன். ஆடவர்கள் இடப் பக்கம் படுக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள். "இடது கையிற் படுப்போம்" என்பது தேரையர் வாக்கு, பெண்கள் வலப்பக்கம் திரும்பிப் படுக்க வேண்டுமாம்.

திருமால் வலப்பக்கம் கைவைத்து அறிதுயில் புரிகிறார். திருவரங்கத்தில் அரவணையின்மேல் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் வலக்கையில் தலைவைத்துத் திருத்துயில் கொண்டிருக்கிறார். புத்தரும் வலக்கையில் தலை வைத்துத் துயில்கிறார். இரண்டையும் ஒன்றுபடுத்திப் பார்த்தேன். மனசு சும்மா இருக்கிறதா? முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்குங்கூட முடிச்சுப் போட்டுப் பார்ப்பது அதன் தொழில். அப்படியிருக்கச் சிறிது ஆதாரமும் கிடைத்துவிட்டால் சும்மா இருக்குமா?

புத்தரைத் திருமாலின் அவதாரங்களில் ஒன்றாகச் சொல்லுவதுண்டு. ஜயதேவர் தம்முடைய அஷ்டபதியில் தசாவதாரங்களை வருணிக்கும் இடத்தில் "புத்தசரீர" என்று பாராட்டுகிறார். புத்தர் திருமாலின் அம்சமாதலால் திருமாலைப் போலவே வலப்பக்கம் கைவைத்துப் படுத்திருக்கிறார் என்று ஒரு பொருத்தம் எனக்குத் தோன்றியது. இதை ஒரு பெரிய காரணமாகச் சொல்லி, புத்தர் திருமாலின் அவதாரந்தான் என்று சாதிக்க நான் வரவில்லை. அங்கும் இங்கும் படித்த செய்திகளை ஒன்றோடு ஒன்று ஒட்டுப்போட்டுப் பார்ப்பது மனித இயல்பு. அப்படி என் மனத்திலும் சிறிது நேரம் இந்த ஆராய்ச்சி குடிகொண்டது. அதன் பயனாக இன்னும் சற்று நேரம் புத்தர்பிரான் திருமுன்னர் நின்று அவர் திருமேனியை நன்றாகக் கண்டு களிக்கும் வாய்ப்பு உண்டாயிற்று. அவருடைய அடிகளில் அழகிய தாமரை மலர் முத்திரைகளைக் கண்டேன்.

இலங்கையில் சிகிரியா, பொலன்னறுவை, தம்புல்லா முதலிய பல இடங்களில் குகைகளிலும் சுவர்களிலும் பல வண்ண ஒவியங்கள் இருக்கின்றன. அவற்றின் மாதிரிகளை இங்கே ஓவியப்பகுதியில் கண்டேன். புத்தருடைய ஜாதகக் கதைகளை வண்ண ஓவியமாகக் கண்டேன். சிலையிற் பொறித்த சிற்பத்திலும் பார்த்து மகிழ்ந்தேன்.

இந்தப் பொருட்காட்சிச் சாலையில் ஒரு புத்தக சாலையையும் வைத்திருக்கிறார்கள். நாம் இங்கே வாசக சாலை என்று சொல்வதை இலங்கையில் வாசிக சாலை என்று சொல்கிறார்கள். கொழும்புப் பொருட்காட்சியில் உள்ள 'வாசிகசாலை' 1870-ஆம் வருஷம் திறக்கப்பெற்றது. இங்கே பல துறைகளில் உள்ள புத்தகங்கள் எழுபதியிைரத்துக்கு மேல் இருக்கின்றன. 3500 ஓலைச் சுவடிகள் உள்ளன. வடமொழி, சிங்களம், பாளி, தமிழ் என்ற மொழிகளில் அமைந்த பல பழைய நூல்களை இந்தச் சுவடித் தொகுதிகளில் காணலாம். இலங்கையின் பழஞ்சரிதையைக் கூறும் இதிகாசம் ஒன்று உண்டு. அதற்கு மகாவம்சம் என்று பெயர் சொல்வார்கள். கல்வெட்டினாலும் பிற சான்றுகளாலும் சரித்திர வரலாற்றை அறிய முடிகிறது. அவற்றால் தெரியவரும் காலத்துக்கு முற்பட்ட செய்திகளை மகாவம்சம் தெரிவிக்கிறது. அந்த மகாவம்சத்தின் மிகப் பழைய சுவடிகள் இந்த நூல் நிலையத்தில் இருக்கின்றன.

இத்தனையையும் பார்த்ததோடு விக்கிரகப் பகுதியில் நான் கண்ட ஒரு விக்கிரகத்தைப்பற்றி அவசியம் சொல்ல வேண்டும். இலங்கையையும் தமிழ் நாட்டையும் பழங்கால முதல் பிணைத்து வைப்பதற்கு இந்த விக்கிரகம் கருவியாக விளங்குகிறது. சரித்திரக்காரர்களும், பக்தர்களும், சிற்பக் கலைஞர்களும், இலக்கிய வல்லுநர்களும், பெண்மையைப் பேணுகிறவர்களும் கருத்தோடு கண்டு எழிலைப் பாராட்டிக்களிக்கும் திருவுருவம் அது. அதுதான் பத்தினித் தெய்வமாகிய கண்ணகியின் திருவுருவம். அதைப்பற்றி இரண்டொரு வரிகளிலே சொல்லி முடித்துவிட முடியுமா?