இலங்கைக் காட்சிகள்/பத்தினித் தெய்வம்

4
பத்தினித் தெய்வம்

“இதுதான் கண்ணகியின் திருவுருவம்!” என்று நண்பர் சுப்பிரமணியன் சுட்டிக் காட்டினார்.

முன்னாலே நின்ற திருவுருவத்தைப் பார்த்தேன். துடியிடை யென்று கவியிலே சொல்வதைச் சிற்பி உலோகத்திலே வடித்திருந்தான். ஆலிலை வயிறு என்பதன் பொருள் அந்த அற்புத விக்கிரகத்தைப் பார்த்தபோது நன்றாக விளங்கியது. தலையில் கூந்தல் மேல்நோக்கிய கொண்டையாகக் கட்டியிருந்தது; ஒரு வகைத் திருமுடி வைத்தாற் போல அழகாக இருந்தது.

பெண்களின் உருவத்தை ஓவியமாகவும் சிற்ப உருவமாகவும் மிகவும் அழகாகப் பழங் கலைஞர்கள் வடித்திருக்கிருர்கள். அந்தத் திருவுருவங்களில் கூந்தலைக் கொண்டை போட்ட கோலத்தில் அமைத்திருப்பார்கள், குழலை ஐந்து வகையாகக் கொண்டை போடுவார்களாம். குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என அந்த ஐந்து வகைகளையும் வழங்குவார்கள். இதனால் கூந்தலுக்கு ஐம்பால் என்று பெயர் உண்டாயிற்று. இந்தக் காலத்தில் ஓவியர்கள் எழுதும் பெண்களின் படங்களில் கூந்தலை விரித்துப் போட்டிருப்பதாகக் காட்டுகிறார்கள்! அவர்களுக்கு அது அழகாகப் படுகிறது. ரவிவர்மாவே அப்படித் தீட்டியிருக்கிறார்.

கண்ணகியின் காதுகள் தாழ்ந்திருந்தன. திருநெல்வேலியில் இன்றும் சிலர் கனமான அணிகளைக் காதிலே இட்டு வளர்த்திருப்பார்கள். அந்த அணிகள் காதில் ஊசலாடும். பழைய சிற்பங்களில் இந்த வடிகாதைத்தான் காண முடியும். கண்ணகியின் காதுகளும் வடிகாதாக இருந்தன. திருமுகத்தில் சாந்தம் ததும்பியது. கண்ணகி கோபம் ஆறித் தெய்வமாய் நின்ற கோலத்தில் சிற்பி அந்தத் திருவுருவத்தைப் படைத்திருப்பான் என்று தோன்றுகிறது. அந்த உருவத்தில் இரண்டு நகில்களும் இருந்தன.

நம் நாட்டில் கண்ணகியை வழிபடும் இடங்கள் சில உண்டென்றும், அங்கே கண்ணகியை ஒற்றை முலைச்சி, மங்கலாதேவி என்ற பெயர்களால் வழங்குவார்கள் என்றும் என்னுடைய ஆசிரியராகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கண்ணகியின் திருவுருவத்தின்முன் நின்ற பொழுது அந்த நினைவு வந்தது.

“கண்ணகிக்கு ஒற்றை நகில் என்று சொல்வார்களே! இந்த உருவம் இரண்டு நகில்களோடே இருக்கிறதே; இது கண்ணகியின் உருவந்தான் என்று எப்படித் தெரியும்?” என்று நண்பர் சுப்பிரமணியனைக் கேட்டேன்.

“ஆனந்த குமாரசாமி இதைக் கண்ணகியின் உருவம் என்றே சொன்னார். வேறு அறிஞர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள்."

“வேறு இடங்களில் கண்ணகியின் திருவுருவம் உண்டா?”

“இலங்கையில் பல இடங்களில் பத்தினித் தெய்வத்துக்குக் கோயில்கள் இருக்கின்றன. சிங்களவரும் அத்தெய்வத்தை வணங்குகிறார்கள். முக்கியமாக இலங்கையின் கிழக்குப் பகுதியாகிய மட்டக்களப்பில் கண்ணகி வழிபாடு அதிகம்."

"அப்படியானால் அவ்விடங்களில் உள்ள திருவுருவங்கள் எல்லாவற்றிலுமே இரண்டு நகில்கள் இருக்கின்றனவா?"

"ஆம்; ஒற்றை நகில் உடைய உருவம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை."

இப்படி நான் பேசிக் கொண்டிருந்தபோது என் மனம் தமிழ் நாட்டில் உள்ள திருச்செங்கோட்டுக்குப் போய் நின்றது. ரெயில் ஏறாமல், பஸ் ஏறாமல் போய் அங்குள்ள மலையில் ஏறிக் கோயிலுக்குள் புகுந்தது. அதற்குக் காரணம் கண்ணகிக்கும் அந்த மலைக்கும் தொடர்பு இருப்பதாக நான் கேள்வியுற்ற செய்திகளே.

கண்ணகி தன் கணவனை இழந்த பிறகு, தன் நகிலில் ஒன்றைப் பறித்து மதுரையின் மேல்வீசி அதை எரித்தாள். அப்பால் தன் கணவனைக் கொலை செய்த பாண்டி நாட்டில் இருக்கக்கூடாது என்று கருதி அதை விட்டு மேற்கு நோக்கிப் புறப்பட்டாள். பாண்டி நாட்டைக் கடந்து வந்து 'நெடுவேள் குன்றம்' என்னும் மலையின்மேல் ஏறினாள். சிலப்பதிகாரம் இந்தச் செய்திகளை விரிவாகச் சொல்கிறது.

“நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறிப்
பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர்
தீத்தொழி லாட்டியேன் யானென்று”

ஏங்கிக் கண்ணகி நின்றாள். அப்போது தேவர்கள் வந்து அவளை வான விமானத்தில் அழைத்துச் சென்றனர். அந்த மலையில் இருந்த குறவர்கள் அவளைக் கண்டு வியந்து, கடவுளைப் பாடிக் குரவைக் கூத்தாடினார்கள்.

நெடுவேள் குன்றம் என்று மூலத்தில் உள்ள தொடருக்குத் திருச்செங்கோடு என்று உரையாசிரியர் பொருள் எழுதியிருக்கிறார். பின்னல் குறவர்கள் முருகனைப் பாடும்போது, "சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும், ஏரகமும் நீங்கா இறைவன்” என்று பாடுவதாக மூலத்தில் இருக்கிறது. இப்போது திருச்செங்கோட்டில் அர்த்தநாரீசர் எழுந்தருளியிருக்கிறார், ஒரு பால் பெண்ணும் ஒரு பால் ஆணுமாக அமைந்த திருவுருவம் அது. இடை சுருங்கி, கூந்தல் மேல்நோக்கித் தொகுத்த கொண்டையாக இருக்க, இந்தத் திருவுருவம் காட்சியளிக்கிறது.

சிலப்பதிகாரத்தில் செங்கோடென்று வருவதையும், அங்குள்ள திருவுருவம் ஒற்றை நகிலும் ஓங்கிய கொண்டையும் உடையதாக இருப்பதையும் சில ஆராய்ச்சிக்காரர்கள் பார்த்தார்கள். "கண்ணகியின் திருவுருவம் இது. யாரோ இதைப் பிற்காலத்தில் மாதொரு பாதியன் என்று கதை கட்டிவிட்டார்கள்” என்று சொல்லத் தொடங்கினார்கள். ஒற்றை நகிலோடு அந்தத் திருவுருவம் நிற்பதே அவர்கள் ஆராய்ச்சிக்கு முக்கியமான ஆதாரம்.

இந்த நினைவினால்தான் என் மனம் திருச்செங்கோட்டுக்குப் பிரயாணம் செய்தது. மறுபடியும் கொழும்பிலுள்ள நூதன சாலைக்கு வந்தது. பிறகு சிலப்பதிகாரத்தில் புகுந்தது.

கண்ணகி பாண்டியனுக்கு முன் சென்று கனற்பொறி பறக்கும் கண்ணுடன் வழக்குரைத்தாள். அவன் சிங்காதனத்தில் இருந்தபடியே உயிர் நீத்தான். பிறகு அவள் வெளியே வந்து தெய்வத்தையும் முனிவரையும் பிறரையும் அழைத்துப் புலம்பினாள். அதன்பின்,

“இடமுகில கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அமைந்து
மட்டார் மறுகில் மணிமுலையை வட்டித்து
விட்டெறிந்தாள்.”

அப்படிப் பறித்து எறிந்தது இடநகில். ஆகவே,வேங்கை மரத்தின்கீழ் நின்றபோது அவளுக்கு இருந்தது வலப்பக்கத்து நகில்.

திருச்செங்கோட்டில் கோயில் கொண்டுள்ள அர்த்தநாரீசுவரருடைய வாமபாகம் பெண் உருவம். ஆகவே, அத்திருவுருவத்தில் இடப் பக்கம் நகில் இருக்கிறதேயன்றி வலப்பக்கம் இல்லை. ஆகையால், கண்ணகியின் உருவந்தான் அர்த்தநாரீசுவர உருவம் என்று சொல்வது சரியன்று. அன்றியும் கண்ணகி வையையாற்றங்கரை வழியே சென்று செவ்வேள் குன்றத்தை அடைந்தாள் என்று இருக்கிறது. அது வேறு குன்றமாக இருக்கவேண்டும்.

இப்படி ஆராய்ச்சி உலகத்தையும் கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு வந்தது என் மனம், 'கடவுள் தன்மை எய்தினபோது கண்ணகி முகத்தில் சினக்குறிப்பு மாறியிருக்கும்; உடம்பில் உள்ள உறுப்புக் குறையும் மாறி இருநகிலும் அமைந்திருக்கும்' என்று சமாதானம் செய்துகொண்டேன்.

நூதன சாலையில் 'கொம்பு முறிக்கும்' கொம்பு ஒன்று இருந்தது. அதைக் காட்டி அது கண்ணகியோடு தொடர்புடையது என்று நண்பர் சொன்னார். அவரிடம் காதை அதிகமாக நீட்டினேன். அவர் விளக்கிய விஷயமும் பிறகு தெரிந்துகொண்ட செய்திகளும் இலங்கை மக்களுக்குப் பத்தினித் தெய்வத்தினிடம் உள்ள பக்தியை நன்றாகத் தெரிவித்தன.

இலங்கையில் உள்ள புத்த தேவாலயங்களில் இந்து மதத்துக்குரிய சில தெய்வங்களையும் பௌத்தர்கள் காவல் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். முருகன், விஷ்ணு, பத்தினி என்ற மூவரையும் பல இடங்களில் காணலாம். கத்தரகம தெய்யோ, விஷ்ணு தெய்யோ, பத்தினித் தெய்யோ என்று அவர்கள் சொல்வார்கள். பத்தினித் தெய்வம் என்பதன் திரிபே பத்தினித் தெய்யோ என்பது. கண்ணகியைப் பௌத்தர்கள் பத்தினி என்றே வழங்குகிறார்கள்.

பழங்காலத்தில் முதல்முதலில் சேரன் செங்குட்டுவன் இமாசலத்திலிருந்து கல்கொண்டு வந்து அதில் கண்ணகியின் திருவுருவத்தை வடிக்கச் செய்து அதற்குத் திருக்கோயில் கட்டி வழிபட்டான். பிறகு தமிழ் நாட்டிலுள்ள பாண்டி நாட்டிலும் கொங்கு நாட்டிலும் சோழ நாட்டிலும் அந்த நாட்டு அரசர்கள் கண்ணகிக்குக் கோயில் அமைத்து வழிபட்டு வந்தார்கள்.

அப்போது இங்கே வந்திருந்த கஜபாகு என்ற இலங்கை வேந்தன் கண்ணகிக்குத் தன் நாட்டிலும் படிமம் அமைத்து வழிபட்டான். இதைச் சிலப்பதி காரம் சொல்கிறது.

"அது கேட்டுக் கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டம் முந் துறுத்து, ஆங்கு அரந்தை கெடுத்து வரந்தரும் இவள் என, ஆடித்திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப, மழைவீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று"
என்பது உரைபெறு கட்டுரை என்ற பகுதியில் வருகிறது. கயவாகு இலங்கையில் கண்ணகிக்குக் கோயில் கட்டினான். நாள்தோறும் பூசை நடக்கும்படி செய்தான். ஆடி மாதத்தில் சிறப்பு விழா நிகழ்வித்தான். அதனால் மழை நன்றாகப் பெய்து வளம் பெருகியது. மற்ற இடங்களிலும் கண்ணகி வழிபாட்டின் பிறகு எங்கும் மழை நிறையப் பெய்தது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

கயவாகு வேந்தன் காலமுதல் கண்ணகி வழிபாடு இலங்கையில் பரவியது. இலங்கையின் மேற்குப் பகுதிக்கு மட்டக்களப்பு என்று பெயர் வழங்குகிறது. அங்கே பல இடங்களில் கண்ணகிக்குக் கோயில் உண்டு.[1]

அந்தப் பக்கங்களில் 'நாடு மழை வளம் குன்றி, பசியும் பிணியும் மிகுந்த மக்கள் அல்லற்படும் காலத்து, அவை நீங்கி மழையும் வளமும் சுரக்குமாறு கண்ணகியம்மனைச் சாந்தி செய்யும்' ஒரு விழா நடைபெறுவதுண்டாம். ஒவ்வோர் ஆண்டும் கண்ணகிக்குத் திருவிழா நடைபெறுகிறது. ஒரு கவைக் கொம்பின் இரண்டு கவைகளிலும் இரண்டு கயிறு கட்டி ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு கட்சியார் இழுத்து அந்தக் கொம்பை முறிப்பார்கள். இதற்குக் கொம்பு விளையாட்டு என்று பெயர். கயிற்றை இருபுறமும் இழுத்து விளையாடும் கயிற்றுப் போர் (Tug of war) போல இது நடக்கும் என்று தெரிகிறது. இந்த விளையாட்டுக்கு உபயோகமாகும் கொம்பைத்தான் கொழும்பு மியூசியத்தில் நான் பார்த்தேன்.

விழாக் காலத்தில் தென்சேரி என்றும் வடசேரி என்றும் கட்சி பிரிந்து கொம்பை முறிப்பார்களாம். தென்சேரி என்பது கண்ணகி கட்சி; வடசேரி என்பது கோவலன் கட்சி. அவர்கள் ஒருவரை ஒருவர் ஏசிப் பாட்டுப் பாடுவார்கள்.

தவிட்டங் காயான் தென்சேரியான் - அவன்
தன்மானம் சற்றும் இல்லாண்டி
அவிட்டுத் தலைப்பாவைக் கையில் எடுத்தே
அஞ்சி அதோ ஒடிப் போறாண்டி

என்று வடசேரியார் பாடுவார்கள். உடனே,

வாழைக் காயான் வடசேரியான் - அவன்
மான ஈனம் கெட்டவண்டி
பெண்பிள்ளை பேச்சுக்கு ஆற்றாம லேஅவன்
பேரழிந் தேவெட்கிப் போறாண்டி

என்று தென்சேரியார் பாடுவார்கள்.

'இந்தக் கோயில்களில் கண்ணகி காவியம், வழக்குரை காதை என்னும் மான்மியத்தைக் கூறும் நூல்கள் ஆண்டுதோறும் வைகாசிப் பூரணை விழாக் காலங்களில் படிக்கப்படும்' என்று முதலியார் குல. சபாநாதன் ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்.[2]

கண்டியில் இராசசிங்கன் என்பவன் அரசாண்டு வந்த காலத்தில் நல்ல மழை பெய்யவில்லையாம். பயிர் பச்சைகள் கருகிப் போயின. பஞ்சம் வந்தது. மழை பெய்ய என்ன செய்யலாம் என்று மன்னன் யோசித்தான். கண்ணகியை வழிபட்டால் மழை வரும் என்ற நம்பிக்கையும் பழக்கமும் பல காலமாக இருந்து வந்தன. ஆகவே, எல்லாக் கண்ணகி ஆலயங்களிலும் சிறப்பாகப் பூசை போடும்படி இராசசிங்கன் ஏவினான். கிழக்கு இலங்கையில் எல்லாக் கோயில்களிலும் பூசை நிகழ்ந்தது. தம்பிலுவில் என்ற ஊரில் உள்ள கண்ணகியம்மனுக்கும் சிறப்பான அபிடேக ஆராதனைகள் நடைபெற்றன. அந்தக் கோயிலில் கண்ணப்பன் என்ற பூசாரி அம்மனுடைய வழிபாட்டைச் செய்து வந்தான். அவன் பச்சைக் களிமண்ணால் பானை செய்து ஆலயத்திற்கு முன்னே நெருப்பை மூட்டி அதன்மேல் பானையை வைத்து அதில் சோறு பொங்கிக் கண்ணகிக்குப் படைத்தானாம். அப்போது அவன் உணர்ச்சி மிகுதியால் கண்ணகியைப் புகழ்ந்து பதினான்கு காவியங்களைப் பாடினானாம். கண்ணகியின் திருவருள் இருந்தால் பலவகை நன்மைகள் உண்டு என்று அந்தப் பூசாரி கூறுகிறான் :

கப்பல்திசை கெட்டது கரைக்குள் அடையாதோ?
கட்டைதனில் வைத்தபிணம் மற்றுயிர்கொ ளாதோ?
உப்பளம திற்பதர் விதைக்கவிளை யாதோ?
உத்தரவு ஊமையன் உரைக்க அறி யானே?
இப்பிறவி இக்குருடு இப்பதெளி யாதோ?
சிப்பிவளர் முத்துக்கள் ததிக்குள் விளை யாவோ
செப்பமுடன் உன்கிருபை வைத்திடுவை யானால்
சீர்மேவு தம்பிலுவில் சேருமா தாவே.[3]

கண்ணகியின் திருவருள் இருந்தால், திசை கெட்ட கப்பல் தரைக்கு வந்து சேருமாம். செத்த பிணம் மயானத்துக்குக் கொண்டு போய்க் கட்டையில் வைத்த பிறகும் உயிர் பெற்றெழுமாம். உப்பு விளையும் உப்பளத்தில் கருக்காயை விதைத்தால் அது நெல்லாக விளையுமாம். கேட்டதற்கு ஊமை விடை கூறுவானாம். குருடன் கண்பார்வை பெறுவானாம். கடலிலே சிப்பியில் உண்டாகும் முத்து ஆற்றிலே உண்டாகுமாம்.

இவ்வாறே கண்ணகியைப்பற்றிப் பல நாடோடிப் பாடல்கள் வழங்குகின்றன. சின்னப் புலவன் என்னும் கவிஞன் 'அம்மன் பள்ளு'[4] என்று ஒரு பிரபந்தம் பாடியிருக்கிறான். அதில் கண்ணகியின் கதையைச் சுருக்கமாகச் சொல்கிறான். கண்ணகி காளியின் அவதாரமென்றும், பாண்டியனுக்குக் கிடைத்த மாங்கனியிலிருந்து பிறந்தவளென்றும் அந்தப் பாட்டுக் கூறுகிறது. நம் நாட்டில் வழங்கும் 'கோவலன் கதை' என்ற நாடோடிக் காவியமும் அதே மாதிரிதான் சொல்கிறது.

கண்ணகி தெய்வத் தன்மையுடையாள் என்ற நினைவு ஆழமாகப் பதியப் பதிய, அவளுக்கு மூலம் சக்தி, காளி, துர்க்கை என்ற கற்பனை பின்னாலே எழுந்திருக்க வேண்டும். நம்பிக்கை சிதையாமல் இருக்க இப்படியெல்லாம் கற்பனைகள் உண்டாவது வழக்கமே.

தமிழ் நாட்டிலே தோன்றிய கண்ணகி வழிபாடு இந்த நாட்டில் மறைந்து போக, இலங்கையில் அது இன்னும் சிறப்பாக இருப்பது ஆச்சரியந்தான்.

கொழும்பு மியூசியத்தில் உள்ள கண்ணகி திருவுருவத்தில் தெய்விக அமைதி நிலவுகிறது. அதைப் பார்த்தபடியே சிறிது நேரம் நின்றேன்.

"இது எங்கேயிருந்து கிடைத்தது?" என்று கேட்டேன்.

"கிழக்கு மாகாணத்தில் கண்டெடுத்த அழகிய திருவுருவம் ஒன்று உண்டு. அது இப்போது பிரிட்டிஷ் மியூசியத்தில் இருக்கிறது. அதன் மாதிரி இது; அதைப் போலவே இயற்றியது."

எனக்கு ஏதோ ஒருவகை உணர்ச்சி உண்டாயிற்று. அது கோபமா, துக்கமா, பொறாமையா இன்னதென்று சொல்ல முடியாது. மயிலாசனம், கண்டியரசன் சிங்காதனம், நடராஜ விக்கிரகம், கண்ணகியின் உருவம் எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு இப்போது சிலவற்றை வாங்கியிருக்கிறோம். சிலவற்றுக்கு அசல் கிடைக்கவில்லை; நகல் தான் கிடைக்கிறது. பிறந்த இடத்தில் நகல்; வேறு எங்கேயோ அசல்! நம்முடைய நூற்றைம்பது ஆண்டு அடிமை வாழ்வில் கண்டது இது. இந்தத் திறத்தில் இலங்கையும் சரி, இந்தியாவும் சரி, சளைக்கவில்லை.

மனம் சிறிது வேதனைப்பட்டது. பிறகு, 'இப்போது நாம் சுதந்தர இந்தியன்; நாம் நிற்பது சுதந்தர இலங்கை' என்ற நினைவு வந்தது. கொஞ்சம் ஆறுதற் பெருமூச்சு விட்டேன்.


  1. இலங்கைத் தமிழ் விழா மலர் என்ற வெளியீட்டில், 'மட்டக் களப்புத் தமிழகம்' என்னும் கட்டுரையில் பண்டிதர் வி. சீ. கந்தையா என்னும் அன்பர் இது சம்பந்தமான செய்திகளை எழுதியிருக்கிறார்.
  2. ஈழத்தின் பிரசித்த இடங்கள்-நான்காம் தமிழ் விழா மலர். ப. 163.
  3. கிழக்கு இலங்கையிலே-கண்ணகி வழிபாடு என்ற கட்டுரை -'திருவருள்' எழுதியது. (ஸ்ரீலங்கா, ஆகஸ்ட், 1951).
  4. யாழ்ப்பாணம் கி. சதாசிவ ஐயர் பதிப்பித்த 'வசந்தன் கவித் திரட்டு'-பக்கம், 59.