6

வாஸ்கோடிகாமா என்னும் பெயர் கொண்ட கப்பல் தலைவனைப் பற்றி எப்போதோ சரித்திரப் புத்தகத்தில் படித்திருப்பதாக ஞாபகம். அந்தத் தடியன் இப்போது என் முன் எதிர்ப்பட்டால் அவன் கன்னத்தில் நாலு அறை கொடுத்துவீட்டு மறு காரியம் பார்ப்பேன் ஆனால் அவன் இறந்து தொலைந்து போய்விட்டான்! இறந்து போனவர்களின் விஷயத்தில் அஹிம்சையைக் கைக் கொள்ளுவது அவசியமில்லையென்பது என்னுடைய கொள்கை. உயிரோடிருப்பவர்களிடம் அவசியம் அஹிம்சா தர்மத்தை அனுசரிக்க வேண்டியது தான். ஏனெனில் நாம் அவர்களுடைய கன்னத்தில் நாலு அறை கொடுப்பதற்கு முன்னால் அவர்களும் நம்மோடு ஒத்துழைப்பது என்று தீர்மானித்து விடக்கூடும். இறந்து போனவர்களின் விஷயத்தில் அத்தகைய கவலை இல்லை. ஆகையால் வாஸ்கோடிகாமா மட்டும் இப்போது நம் முன்னால் வந்தால் அவன் கன்னத்தில் நாலு அறை கொடுக்கத் தயங்க வேண்டியதில்லை.

ஐரோப்பாவில் உள்ளவர்கள் கீழ் காட்டுக்கு வருவதற்கு முதன் முதலில் அந்த வாஸ்கோடிகாமாதான் வழி காட்டினானாம். அவன் ஒரு போர்ச்சுகீயன். அவனைத் தொடர்ந்து வந்த போர்ச்சுகீயர்கள் இலங்கையில் சில பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டு வந்தார்கள். அப்பப்பா! அவர்கள் ஆண்ட காலத்தில் யாழ்ப்பாணத்தார்கள் பட்ட அவதிகள் கொஞ்சநஞ்சமல்ல. போர்ச்சுக்கல் நாட்டார், கொடுமைக்கும் குரூரத்துக்கும் பெயர் போனவர்கள். இப்போதுகூட இந்தியா தேசத்தில் ஒருச் சாண் அகல முள்ள கோவாவில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் என்ன பாடு படுத்துகிறார்கள், பாருங்கள்! இருநூறு முந்நூறு வருஷங்களுக்கு முன்னால் கேட்க வேண்டுமா? பற்பல கொடுமைகள் செய்து ஹிந்து மதத்தாரைக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவத் தூண்டினார்கள். போர்ச்சுகீய ஆட்சியின் போது யாழ்ப்பாணத்து மக்கள் இலை போட்டுச் சாப்பிடப் பயப்படுவார்களாம்! ஏனெனில் வாசலில் எச்சில் இலை விழுந்தால், இந்த வீட்டார் ஹிந்துக்கள் என்று ஊகித்துக்கொண்டு போர்ச்சுகீய அதிகாரிகள் வீட்டுக்குள் புகுந்து அதிக்கிரமம் செய்வார்களாம். இதன் காரணமாக அந்த நாளில் யாழ்ப்பாணத்தார் இலை போட்டுச் சாப்பிடுவதைக் கைவிட்டுத் தட்டில் சாப்பிடத் தொடங்கினார்கள். ஆனால் ஹிந்து மதப்பற்றை அவர்கள் இழந்துவிடவில்லை. ஹிந்து மத பக்தி காரணமாக அமாவாசையன்று மட்டும் இலையில் சாப்பிட்டுவிட்டு எச்சில் இலையைக் கூரை முகப்பில் செருகி விடுவார்களாம்! நாளடைவில் அது ஒரு குருட்டு மத சம்பிரதாயமாகி, இன்றும் யாழ்ப்பாணத்து வைதிக குடும்பங்களில் அமாவாசையன்று எச்சில் இலையைக் கூரை முகப்பில் செருகும் வழக்கம் நடைபெற்று வருகிறது!

கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது வீட்டு வாசலில் எச்சில் இலையைப் போடும் வழக்கத்தைத் தடை செய்த போர்ச்சுகீயர்களும் ஒரு நல்ல காரியத்தைத்தான் செய்தார்களோ என்று தோன்றுகிறது. எதுவும் ஒரு நன்மைக்கே என்று தெரியாமலா நம் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்? ஆகையால் வாஸ்கோடிகாமா போனால் போகிறான் என்று அவனை மன்னித்து, கன்னத்தில் அறையாமல் விட்டுவிடுவோமாக!

முன் அத்தியாயத்தின் இறுதியில் ஸ்ரீ ஹாண்டி பேரின்பநாயகம் அவர்களின் கைத் தடியைப் பற்றிச் சொல்லியிருந்தேன். இங்கு அந்த மனிதரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லத்தான் வேண்டும். அவரை ‘மனிதர்’ என்றா சொன்னேன்? அது அவ்வளவு பொருத்தமில்லை தான்! ஸ்ரீ ‘ஹாண்டி’ யை ஒரு மனிதர் என்று சொல்லுவதைக் காட்டிலும் அவரை ‘ஒரு ஸ்தாபனம்’ என்று சொல்லுவது பொருத்தமாயிருக்கும்.

அவருடைய நீளமான பெயரில் ‘ஹாண்டி’ (Handy) என்பது பழைய போர்ச்சுகீய ஆட்சியின் ஞாபகச் சின்னமாகும். போர்ச்சுகீய ஆட்சியில் கிறிஸ்துவர்களாக மாறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ பேரின்ப நாயகம். ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவர் - ஹிந்துக்கள் என்ற வேற்றுமை அதிகம் கிடையாது. ஒரே குடும்பத்தில் அண்ணன் கிறிஸ்துவராயும் தம்பி ஹிந்துவாயும் இருப்பார்கள். ஆனால் எல்லாரும் தமிழர்கள்; தமிழ்ப் பண்பாடு உடையவர்கள்.

ஸ்ரீ ஹாண்டி பேரின்பநாயகமோ கிறிஸ்துவரும் அல்ல; ஹிந்துவும் அல்ல. அவருடைய மதம் காந்தீய மதம்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது ஸ்ரீ பேரின்பநாயகம் அகில இலங்கை யுவர் காங்கிரஸின் காரியதரிசியாயிருந்தார். அப்போது அவர் யுவராகவும் இருந்தார். இன்றைக்குத் தலை நரைத்த முதியவராயிருக்கிறார். இந்த மாறுதலுக்குக் காரணமான இரண்டு நிகழ்ச்சிகள் ஒரே நாளில் ஒரே சமயத்தில் அவருடைய வாழ்க்கையில் நேரிட்டன என்று அறிந்தேன்.

ஸ்ரீ பேரின்ப நாயகம் தம் வாழ்க்கையில் இரண்டு பேரைக் காதலித்தார். அவர் காதலித்தவர்களில் ஒருவர் காந்திமகான்; இன்னொருவர் அவரது மனைவியார்.

1947-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி மாலை 6-மணிக்கு ஸ்ரீ பேரின்ப நாயகத்தின் அருமை மனைவி இறந்து போனார். இந்தப் பொறுக்க முடியாத துயரத்தில் அவர் ஆழ்ந்து தவித்துக் கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவர் வந்தார். “உங்களுக்கு இன்னொரு பேரிடி போன்ற செய்தி வந்திருக்கிறது!” என்றார். “அது எப்படி முடியும்? அது என்ன செய்தி!” என்று ஸ்ரீ போரின்ப நாயகம் கேட்டார். அவருடைய மனைவி காலமான ஏறக்குறைய அதே நேரத்தில் காந்திமகான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியை நண்பர் தெரிவித்தார். அன்று இரவே ஸ்ரீ பேரின்ப நாயகத்தின் வயதில் பத்து வயது கூடிவிட்டது என்று அவருடைய நண்பர்கள் தெரிவித்தார்கள்.

இதற்கிடையில் ஸ்ரீ பேரின்பநாயகம் ஒரு தப்புக் காரியம் செய்தார். அதாவது இலங்கைச் சட்டசபைத் தேர்தலுக்கு நின்றார். சட்டசபைக்கு நின்றது தவறான காரியம் இல்லை. “காந்தீயவாதி” என்று சொல்லிக் கொண்டு நின்றதுதான் தவறு. சிங்களவர்களின் கொடுமையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுவோம் என்றும், தமிழர்களுக்கு 100-க்கு 50 பிரதிநிதித்துவம் கேட்போம் என்றும், இல்லையேல் தனித் தமிழரசு ஸ்தாபிப்போம் என்றும் சொல்லிக் கொண்டு பிறர் நின்றார்கள். சண்டமாருதப் பிரசாரம் செய்தார்கள். இப்படிப்பட்ட சூழ் நிலையில் ஸ்ரீ பேரின்பநாயகம் காந்தீயத்தின் பெயரால் நின்றார். நிற்கலாம்; ஆனால் ஜயிக்க முடியுமா?

சூறாவளியின் முன்னால் இளந்தென்றல் நிற்குமா? எனவே, தோற்றுப்போனார்.

இதனால் காந்தீயத்தினிடம் அவருக்குப் பற்றுக் குறைந்து விடவில்லை. இன்று அகில இலங்கைக் காந்திய சேவா சங்கத்தின் தலைவராக இருக்கிறார். எது எப்படியானாலும் காந்தியக் கொள்கையை இலங்கையில் பரப்புவது என்று இந்தச் சங்கம் கங்கணம் கட்டிக்கொண் டிருக்கிறது. காந்திஜியின் மணி மொழிகள் அனைத்தையும் சிங்கள பாஷையில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு ஒரு பெரிய திட்டம் போட்டிருக்கிறது. இச்சங்கத் தின் காரியதரிசி மற்றொரு பரம காந்தி பக்தரான ஸ்ரீ சி.க. வேலாயுதம் பிள்ளை

இலங்கைக்கும் சிறப்பாக யாழ்ப்பாணத்துக்கும் ஸ்ரீ பேரின்ப நாயகம் செய்திருக்கும் தொண்டுகளை அளவிட முடியாது. இலங்கைத் தீவுக்குக் காந்தி மகானையும், நேரு அவர்களையும், ராஜாஜியையும் தருவிப்பதற்கு மூல காரணமாயிருந்தவர் அவர்தான். ஏன் நான் இம்முறை இலங்கை சென்றதற்குக்கூட முக்கிய குற்றவாளி அவர்தான் “இங்கே பலர் உங்களுடைய சொற்பொழிவைக் கேட்க விரும்புகிறார்கள். நீங்கள் வருகிறீர்களா, அல்லது நாங்கள் புறப்பட்டு அங்கே வரட்டுமா?” என்று எழுதியிருந்தார். இப்போதைய தமிழ் நாட்டு உணவு நிலைமையில் நான் என்ன பதில் சொல்ல முடியும்? நான் வருகிறேன்; நானே வருகிறேன் என்று கதறிக் கொண்டு கிளம்பினேன்.

முதலில் பொதுத் தொண்டிலேயே வாழ்க்கையைச் செலவிட்டு வந்து, பிறகு சில காலம் வக்கீல் தொழில் செய்த ஸ்ரீ பேரின்பநாயம், இப்போது பல நண்பர்களின் விருப்பத்தின் பேரில் கொக்குவில் ஹிந்துக் கல்லூரித் தலைமை ஆசிரியர் பதவியை ஏற்றிருக்கிறார். அவருடன் ஒத்துழைத்துப் பல ஆசிரியர்கள் தொண்டு புரிகிறார்கள். கொஞ்சம் இக்கட்டான நிலைமையை அடைந்திருந்த கொக்குவில் ஹிந்துக் கல்லூரி ஸ்ரீ பேரின்ப நாயகம் பொறுப்பு ஏற்ற பிறகு பெரிதும் முன்னேற்றம் அடைந்திருக்கின்றது.

யாழ்ப்பாணத்திலே இடறி விழுந்தால், ஒரு ஆசிரியர் மேல் நாம் விழும்படியாக இருக்கும் என்று சொன்னேன் அல்லவா? அங்கே படிப்பும் அதிகம், பள்ளிக் கூடங்களும் அதிகம். இது மட்டுமல்ல. தமிழ்நாட்டில் ஒரு ஆசிரியர் மேல் நாம் இடறி விழுந்தால் அந்த ஆசிரியர் தெருவில் ‘அப்படா!’ என்று கீழே விழுவார். அநேகமாக அவர் அரைப் பட்டினிக்காரராகவும் மெலிந்த மனிதராகவும் இருப்பார். யாழ்ப்பாணத்தில் அப்படியில்லை. அங்கே ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம். இந்தியாவில் உயர்நிலைப் பள்ளிகளில் (அதாவது ஹைஸ் கூல்களில்) ஆசிரியர்கள் 60 முதல் 120 வரை சம்பளம் பெறுகிறார்கள். தலைமை ஆசிரியர்களுக்கு 150 முதல் 250 வரை இருக்கலாம். யாழ்ப்பாணத்தில் நமது ஹைஸ்கூல்களையே ‘கோலேஜ்’ என்கிறார்கள்; ஆசிரியர்களுக்கு 200 முதல் 300 வரை கிடைக்கிறது. தலைமை ஆசிரியர்களுக்கோ 400 முதல் 600 வரை சம்பளம். இன்னொரு விசேஷம் என்னவென்றால், இலங்கையில் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்து கொழும்பு யுனிவர்ஸிடி வரையில் மாணவர்கள் சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. உபாத்தியாயர்கள், பேராசிரியர்கள், எல்லாருடைய சம்பளங்களையும் இலங்கை அரசாங்கமே கொடுத்து வருகிறது. இதில் அதிசயம் ஒன்றுமில்லை. அரசாங்கத்துக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறபடியால், கல்வித் துறைக்குத் தாராளமாகப் பணம் செலவு செய்ய முடிகிறது.

யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் நல்ல சம்பளம் பெறுவதோடுகூட, சமூக வாழ்க்கையில் நல்ல அந்தஸ்தும் பெற்றிருக்கிறார்கள். அரசியல் தொண்டிலும், கலைத் தொண்டிலும், இலக்கியத் தொண்டிலும் ஈடுபட்டு வேலை செய்கிறார்கள். பொது ஊழியத்தில் பற்றுக்கொண்ட ஆசிரியர்களில் வைத்தீசுவரக் கல்லூரியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீ அம்பிகை பாகன் ஒருவர். தோற்றத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி யிருந்தாரோ அப்படியே இவர் இன்றைக்கும் இளம் பிள்ளைத் தோற்றத்துடன் இருக்கிறார். பன்னிரண்டு வயதையும் எப்படித்தான் சாப்பிட்டு ஜீரணம் செய்து கொண்டாரோ, தெரியவில்லை. தோற்றத்தில் மாறுதல் இல்லாவிட்டாலும் அவருடைய வாழ்க்கையில் ஒரு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. முன்னம் நான் பார்த்த போது கட்டைப் பிரம்மச்சாரியாக இருந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் பற்றும் தொடர்பும் கொண்டிருந்தார். நமது மாஜி கல்வி அமைச்சர் திரு அவிநாசிலிங்கத்தைப் போல் இவரும் நித்தியப் பிரம்மச்சாரியாகவே இருந்து விடுவாரோ என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. இலங்கையில் சிங்களவரின் தொகை தாறுமாறாகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலைமையில், ஸ்ரீ அம்பிகைபாகனைப்போன்ற இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருந்தால், இலங்கைத் தமிழர்களின் கதி என்ன ஆகிறது? ஆகவே, அச்சமயம், “பெண்ணைப் பெற்ற எந்தப் பாக்கியசாலியான தகப்பனார் ஸ்ரீ அம்பிகை பாகனை மருமகனாக அடையப் போகிறாரோ?” என்று எழுதிவைத்தேன். இந்தக் கலியாண விளம்பரம் வெகு சீக்கிரத்திலேயே பலன் அளித்தது. பெண்ணைப் பெற்ற ஒரு பாக்கியசாலி இவரை மருகராக அடைந்தார். இன்றைக்கு ஸ்ரீ அம்பிகைபாகன் தம் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு அம்பிகையைப் பெற்று இல்லறம் நடத்தி வருகிறார். அவருடைய வீட்டில் சின்னஞ்சிறு குழந்தைகள் மழலை பேசி ஓடியாடுகின்றன!

இந்தக் காட்சியைப் பார்த்து மகிழ்ந்தேன். உடனே, ஸ்ரீ இராஜ அரியரத்தினத்தின் ஞாபகம் வந்தது. அடாடா! இதோ ஒரு அருமையான இளைஞர் இன்னும் பிரம்மச்சாரியாக இருந்து வருகிறாரே? இதனால் இலங்கைத் தமிழர் சமூகம் எத்தனை நஷ்டம் அடைந்து வருகிறது? எந்தப் பாக்கியசாலி இவரை மருகராக அடையப் போகிறாரோ?

யாழ்ப்பாணத்தில் “ஈழ கேசரி” என்னும் வாரப் பத்திரிகை பல ஆண்டுகளாகச் சிறப்பாக நடந்து வருகிறது. “இந்து சாதனம்” ஹிந்து சமயப் பிரசாரத்துக்குச் சாதனமாயிருந்து வருவதுபோல், “ஈழ கேசரி” இலங்கையில் உள்ள தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளருக்கு ஓர் அரிய சாதனமாக விளங்கிவருகிறது. இந்தப் பத்திரிகையைத் திறம்பட நடத்திவரும் ஆசிரியர் ஸ்ரீ இராஜ அரிய ரத்தினம். அருமையான பிள்ளை; திறமையான எழுத்தாளர்; குணம், தங்கக் கம்பிதான்! இதற்கு மேலே நான் சொல்ல வேண்டியதில்லை. பிறகு, பெண்ணைப் பெற்ற பெரியவர்களின் அதிர்ஷ்டம்!

“ஈழ கேசரி” பத்திரிகையின் அதிபர் யாழ்ப்பாணத்துப் பிரமுகர்களில் ஒருவரான ஸ்ரீ பொன்னையா அவர்கள். இந்தச் சிறந்த பத்திரிகையை நடத்துவதோடு பல அரிய பழந்தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்த் தாய்க்குத் தொண்டு புரிந்து வருகிறார். இம்முறை நான் சென்றிருந்தபோது ஸ்ரீ பொன்னையா வைத்திய சாலையில் நோய்ப் படுக்கையில் படுத்திருப்பதாக அறிந்து, அவரை வைத்தியசாலைக்குப் போய்ப் பார்க்க விரும்பினேன். ஸ்ரீ பொன்னையா அவ்வளவு தூரத்துக்கு வைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் பேசுவதாக இருந்த பொதுக்கூட்டத்துக்கு எப்படியோ வந்து சேர்ந்து விட்டார். தமிழன்பும் உண்மையான நட்பும் எவ்வளவு சக்திவாய்ந்தவை?

"https://ta.wikisource.org/w/index.php?title=இலங்கையில்_ஒரு_வாரம்/6&oldid=1651162" இலிருந்து மீள்விக்கப்பட்டது