இலங்கையில் ஒரு வாரம்/7
7
மேற் கூறிய நண்பர்களிடம், வடக்கு இலங்கைக் கடற்கரையோரமாக எங்களை அழைத்துச் செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். ‘மதுரையும் ஈழமும்’ கொண்ட பராந்தக சோழன் என்ன, பழையாறைச் சுந்தர சோழன் என்ன, தமிழ் நாட்டுப் பேரரசர்களிலே இணையற்ற பெருமை வாய்ந்த இராஜ ராஜ சோழன் என்ன, ‘கங்கையும் கடாரமும் கொண்ட’ இராஜேந்திர சோழன் என்ன, இத்தகைய அழியாப் புகழ்பெற்ற தமிழ் மன்னர்கள் மாபெரும் படைகளுடன் கப்பல் ஏறிக் கடல் கடந்து வந்து ஈழ நாட்டில் இறங்கியிருக்கக் கூடிய கடலோரப் பகுதிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்குச் சில காலமாக இருந்து வந்தது. இதைப் பற்றி நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது வந்தார் ஒரு மனிதர். அவர் உருவத்தில் குட்டையாயிருந்தார். களை பொருந்திய முகத்துடன் சமுகம் தந்தார்.
இவருக்கு ஊர் பருத்தித்துறை என்றும், இவரும் ஓர் ஆசிரியர்தான் என்றும், பெயர் திரு. ஏரம்பமூர்த்தி என்றும் அறிந்தேன்.
பெயர், இதற்கு முன் கேள்விப் பட்டிராத பெயராயிருந்தது.
“ஐயா! நீங்கள் பேச வேண்டியதேயில்லை!” என்றார், திரு. ஏரம்ப மூர்த்தி.
இல்லை, நான் பேசவில்லை! என்று பணிவுடன் தெரிவித்துக் கொண்டேன்.
“நிச்சயமாக நீங்கள் பேச வேண்டியதில்லை!” என்றார் மறுபடியும்.
“இல்லை நான் பேசவே இல்லை!” என்று மீண்டும் கூறினேன்.
“உண்மையாகத்தான் சொல்லுகிறேன்; நீங்கள் பேசவேண்டாம்! தெரிகிறதா” என்றார் பருத்தித் துறையார்.
உள்ளத்தில் பொங்கி எழுந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டேன். அப்பேர்ப்பட்ட பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் இந்தியாவை ஆண்ட காலத்தில் “நீர் பேசக்கூடாது!” என்று 144-வது பிரிவின்படி எனக்கு உத்தரவு போட்டார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை. உத்தரவைக் கையில் வைத்துக் கசக்கிக் கொண்டே பேசித் தீர்த்தேன். அப்படிப்பட்ட என்னை இந்த இலங்கைத் தீவில் “பேசக்கூடாது!” என்று கட்டளையிடுவதற்கு இந்த மனிதர் யார்? இவருக்கு என்ன அதிகாரம்? ஸ்ரீ சேனநாயகாவின் சுவீகார புத்திரர் என்று தம்மை இவர் நினைத்துக் கொண்டாரா? இவ்விதம் எண்ணிப் பொருமினேன். எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், பருத்தித் துறைக்கு நீங்கள் சும்மா வந்துவிட்டுத் திரும்பினால் போதும்! தங்களைச் சொற்பொழிவு ஆற்றச் சொல்லித் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை!” என்று சொன்னார் திரு. ஏரம்பமூர்த்தி .
“அப்படியா சமாசாரம்? மனதிற்குள் இவ்வளவு கெட்ட எண்ணமா வைத்துக் கொண்டிருக்கிறீர்கள?” என்று நானும் மனதில் நினைத்துக் கொண்டேன். முன்னமேயே கடற்கரையோரமாகப் பருத்தித்துறை வரையில் போகத் தீர்மானித்திருந்தபடியால், “அதற்கு என்ன? அப்படியே ஆகட்டும்” என்றேன்.
“தாங்களும் ஸ்ரீ தூரனும் பருத்தித்துறைக்கு வந்து சமுகம் தந்தால் போதும். ஒரு வரவேற்பு நடத்துவோம். அதை ஏற்றுக்கொண்டு திரும்பிவிடலாம். பேச்சு, பிரசங்கம், சொற்பொழிவு எதுவும் கண்டிப்பாக வேண்டியதில்லை. தாய் நாட்டிலிருந்து வந்தவர்களைச் சேய் நாட்டிலுள்ள நாங்கள் உபசரிப்பது எங்கள் கடமையல்லவா? ஆனால் தங்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு மட்டும் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை! ஆகையால் நீங்கள் பேச வேண்டியதில்லை!” என்றார் ஸ்ரீ ஏரம்ப மூர்த்தி.
“சேய் நாட்டிலுள்ள உங்கள் கடமையைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் என் கடமை என்னவென்று எனக்குத் தெரியும். கட்டாயம் உங்களுக்குத் தொந்தரவு கொடுத்தே தீருவோம். நானும் ஸ்ரீ தூரனும் நாளை மத்தியானம் பருத்தித்துறைக்கு வந்தே தீருவோம்!” என்று சொன்னேன்.