இலங்கையில் ஒரு வாரம்/8
8
பள்ளிக்கூடத்தில் நான் படித்துக்கொண்டிருந்த போது, — சில நாள் படித்துத் தொலைத்ததுண்டு என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன் — இந்தியா தேசத்துக்கு ஒரு பெரிய ஆபத்து வந்தது. “இந்தியா கிணற்றில் விழுந்துவிட்டது!” என்ற ஒரு பரிதாபமான கூக்குரல் எழுந்தது. ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லாரும் ஓடிப் போய்ப் பார்த்தோம். கிணற்றில் இந்தியா தேசம் விழுந்துதானிருந்தது. இதற்கு ஒரு பையனுடைய அஜாக்கிரதைதான் காரணம் என்றும் தெரிந்தது. ஆனால் அந்த நெருக்கடியான நிலைமையில் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லாரும் விழித்துக் கொண்டு நின்றார்கள். நான் அந்த நாளில் கேட்ட சில தேசியப் பிரசங்கங்களில் “தேசத்துக்காக நீங்கள் ஒரு துரும்பையாவது எடுத்துப் போட்டதுண்டா?” என்று நம் தலைவர்கள் அலறியது என் காதில் விழுந்தது. அது அச்சமயம் என் ஞாபகத்துக்கு வந்தது. உடனே “இந்தியாவுக்காகத் துரும்பை எடுத்துப் போடுவது என்ன? ஒரு கல்லைத் தூக்கியே போடலாம்!” என்று முடிவு செய்தேன். கிணற்றில் விழுந்து முழுகாமல் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியாவின் பேரில் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டேன். உடனே இந்தியா தேசம் ஒரு ‘கீச்’ சத்தம் கூடப் போடாமல் தண்ணீரில் முழுகிப் போய்விட்டது.
இவ்வாறு இந்தியாவுக்குச் சேவை செய்ததினால் நான் அச்சமயம் அடைந்த கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி முடியாது. அன்று முழுதும் ஆசிரியர் கட்டளைப்படி பெஞ்சியின் மேல் நிற்கும் கஷ்டம் ஏற்பட்டது. அல்லாமலும் ஒரு புதிய இந்தியா தேசப்படம் வாங்கிக்கொண்டு வந்து கொடுக்க வேண்டி இருந்தது. இதன் மூலம் மூன்றரை ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டது. இதைப்பற்றி முன்னம் ஒரு தடவை நான் எழுதித் தானிருக்கிறேன். ஆயினும் சமீப காலத்தில் திருவாங்கூர்ப் பகுதியிலிருந்து, “அந்தோ! கடவுளுக்கு ஆபத்து!” “ஆகா கடவுளைக் காணோம்!” என்று கூக்குரல்கள் வந்தபோது மேற்படி சம்பவம் என் நினைவுக்கு வந்தது. திருவாங்கூர்ப் பகுதியிலுள்ள கோயில்களிலிருந்து திடீர் திடீர் என்று விக்கிரகங்கள் காணாமற்போய் வருகின்றனவாம்! கடவுளின் விரோதிகள் அல்லது ஹிந்து மதத்தின் விரோதிகள் இவ்விதம் செய்கிறார்கள் என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால் மேற்படியார்கள் கடவுளையோ, ஹிந்து மதத்தையோ தாக்குவதற்கு இம் மாதிரி முறையைக் கையாளுவது பைத்தியக்காரத்தனமேயல்லவா?
இந்தியா தேசப்படம் கிணற்றில் விழுந்து முழுகுவதினால் இந்தியா தேசம் எவ்வித ஹானியும் அடைந்துவிடாது. அதுபோலவே, விக்கிரகங்களுக்கு ஏற்படும் ஆபத்து கடவுளையோ ஹிந்து மதத்தையோ பாதித்து விடாது. அப்படிப் பாதிக்கும் என்று நினைப்பவர்கள் அறியாதவர்கள்.
நமது முன்னோர்களாகிய மகான்கள் விக்கிரகங்களையே தெய்வம் என்று எண்ணிவிடவில்லை. எங்கும் நிறைந்த கடவுளை, நெஞ்சகத்தில் வீற்றிருக்கும் கடவுளை, நினைத்துத் துதிப்பதற்கு ஒரு சின்னமாகவே கோவில் விக்கிரகங்களைக் கொண்டார்கள். மனம் குவிந்து இறைவனை வழிபடுவதற்கு விக்கிரக ஆராதனையை ஒரு சாதனமாகவே ஏற்படுத்தியிருந்தார்கள். எனவே, இந்தியா தேசத்தின் சரித்திரத்தில் விக்கிரகங்களுக்கு அவ்வப்போது பல ஆபத்துக்கள் நேர்ந்திருந்தபோதிலும் ஹிந்து மதத்துக்குத் தீங்கு ஒன்றும் நேர்ந்திடவில்லை.
வடக்கு இலங்கை போர்ச்சுக்கீயரின் ஆட்சியில் இருந்த போது ஹிந்து மதத்தின் தெய்வங்களுக்கு, அல்லது விக்கிரகங்களுக்கு, ஆபத்துக்கள் நேர்ந்தன! அதிர்ஷ்டவசமாக, யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள தமிழர்கள் நமது சமய தத்துவங்களை நன்கு உணர்ந்தவர்கள். ஆகவே, விக்கிரகங்கள் போய்விட்டனவே என்று அழுது கொண்டிருந்துவிடவில்லை. விக்கிரகத்துக்குப் பதிலாக வேறு சின்னங்களை வைத்துக்கொண்டார்கள்.
யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் கந்தசாமி கோவில் உற்சவத்தைப்பற்றி முன்னமே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? இந்தக் கோவிலின் மூல ஸ்தானத்தில் முருகன் விக்கிரகம் இல்லை. அதற்குப் பதிலாக,
“சுற்றி நில்லாதே போ! பகையே!
துள்ளி வருகுது வேல்!”என்று அமரகவி சுப்பிரமணிய பாரதியார் பாடிய வெற்றி வேலாயுதத்தையே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
பருத்தித்துறைக்குப் போகும் வழியில் ஸ்ரீவல்லிபுரம் என்னும் விஷ்ணு ஸ்தலத்தைத் தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கும் கிடைத்தது. இந்த ஊர் ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்திலும் விக்கிரகம் இல்லை. மகாவிஷ்ணுவின் சின்னமாக அவருடைய கையில் ஏந்திய சக்கரத்தையே பிரதிஷ்டை செய்து பூஜை நடத்திவருகிறார்கள். இந்த ஆலயமும் மிகவும் பரிசுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ சக்கர ஸ்வாமியின் சந்நிதிக்கெதிரே விஸ்தாரமான வெண்மணல் பிரதேசம் கண்ணையும் கருத்தையும் கவருமாறு அமைந்திருக்கிறது. இந்த வல்லிபுர ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்களுக்குத் தமிழகத்திலிருந்து பிரசித்தி பெற்ற நாதஸ்வர வித்வான்களைத் தருவிப்பார்களாம். வெண்ணிலவில் வெண் மணலில் பதினாயிரம் இருபதினாயிரம் மக்கள் திரண்டிருந்து நாதஸ்வரத்தின் இசையைக் கேட்டுப் பரவசமடைவார்களாம். இதை யெல்லாம் கேட்டபோது,
“நேற்று முன்னாளில் வந்த உறவன்றடி — இது
நெடும் பண்டைக் காலமுதல் நேர்ந்து வந்ததாம்!”என்ற பாரதியார் வாக்கு என் நினைவுக்கு வந்தது. தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் ஏற்பட்ட உறவு நெடும் பண்டைக்கால முதல் நேர்ந்து வந்த உறவு என்பதில் ஐயமில்லை. அந்த உறவின் அழியாத சின்னங்களாக இது போன்ற ஆலயங்கள் விளங்குகின்றன. இராஜராஜ சோழன் ஈழத்தை வெற்றி கொண்டு பொலன்னருவா (புலஸ்தியநகர்) என்னும் அப்போதைய தலைநகருக்கு ஜனநாதபுரம் என்று புனர்ப் பெயர் அளித்து அரசுபுரிந்த காலத்திய சிவன் கோயில்கள் இன்னமும் அந்தப் புலஸ்திய நகரில் இருக்கின்றன. இராஜராஜன் காலம் 950 வருஷங்களுக்கு முந்தியது. அதற்கும் இருநூறு வருஷங்களுக்கு முன்னால் ஸ்ரீ சுந்தரமூர்த்தியும் இன்னும் நூறு ஆண்டுக்கு முன் ஸ்ரீ ஞானசம்பந்தரும் இலங்கையில் இருந்த சிவன் கோயில்களைப்பற்றிப் பாடியிருக்கிறார்கள். அப்படி அவர்களால் பாடப் பெற்ற கோயில்களில் ஒன்று மன்னார் தீவில் பாலாவி நதிக்கரையில் மாதோட்டம் என்னும் ஊரில் இருந்தது. இந்தக் கோயிலுக்கு அந் நாளில் திருக்கேதீசுவரம் என்று பெயர். சம்பந்தர் — சுந்தரர் காலத்தில் இந்தக் கோயில் இராமேசுவரம் கோயிலைப்போல் அவ்வளவு பெரியதாயிருந்ததாம். சேதுக்கரையில் நின்று பார்த்தால் கோபுரம் தெரிந்ததாம். எனவே, ஸ்ரீ சம்பந்தரும் சுந்தரரும் இராமேசுவரக் கடற்கரையில் நின்று தரிசித்துத்தான் திருக்கேதீசுவரத்தைப் பற்றிப் பாடினார்கள் என்பது ஒரு சாராரின் கருத்து.
ஆனால் இது தவறான கருத்து என்று நான் எண்ணுகிறேன். ஸ்ரீ ஞானசம்பந்தரும் சுந்தரரும் இலங்கையிலுள்ள சிவஸ்தலங்களுக்குப் போய்த் தரிசித்திருந்தால்தான் அவ்வளவு தத்ரூபமாய்ப் பாடியிருக்கமுடியும். கடல்கடந்து செல்வது ஆசாரத்துக்கு விரோதம் என்ற குருட்டுக்கொள்கை பிற்காலத்தில் தமிழகத்தில் தோன்றியது. எனவே சம்பந்தரும் சுந்தரரும் கடல் கடந்து போயிருக்கவே மாட்டார்கள் என்று வைத்துக்கொண்டு இந்தக் கரையிலிருந்தே பாடினார்கள் என்று கற்பனை செய்திருக்கவேண்டும்.
இதன் உண்மை எப்படியானாலும் சம்பந்தர் காலத்திலேயே இலங்கையின் வட பகுதியில் பிரசித்தமான சிவாலயங்கன் இருந்தன என்று ஏற்படுகிறதல்லவா? சம்பந்தருடைய காலம் இன்றைக்கு 1,300 வருஷங்களுக்கு முன்பு என்பது சரித்திரத்தில் முடிவு கண்ட உண்மை. எனவே, அதற்கும் முற்பட்ட மிகப் பழமையான காலத்தில் தமிழர்கள் இலங்கையில் குடியேறிச் சைவ சமயத்தை வளர்த்துச் சிவாலயத் திருப்பணிகளும் செய்திருக்க வேண்டும்.
திருக்கேதீசுவரம் ஆலயம் இப்போது அழிந்து பாழ் பட்டுக் கிடக்கிறது. காலம் என்னும் அரக்கனோ, யுத்தம் என்னும் பூதமோ அல்லது மதத் துவேஷம் என்னும் பிசாசோ அந்த ஆலயத்தை விழுங்கியிருக்க வேண்டும். திருக்கேதீசுவரம் ஆலயம் இருந்த இடத்தில் வேறொரு புதிய ஆலயத்தை நிர்மாணிப்பதற்குப் பெரும் பிரயத்தனம் ஒன்று இலங்கையில் தொடங்கியிருக்கிறார்கள். இந்த முயற்சிக்குப் பிரபல இலங்கை இந்தியர்களின் ஆதரவு இருக்கிறது. எந்த இடத்தில் புதிய ஆலயத்தை நிர்மாணிக்கலாம் என்றும், எப்படி அதை நிர்மாணிக்கலாம் என்றும் யோசனைகள் நடந்துவருகின்றன. இதற்காகத் தமிழ் நாட்டிலிருந்து ஆலய நிர்மாண ஆராய்ச்சி நிபுணரான ஸ்ரீ வி. எம். நரசிம்மன் யோசனை சொல்ல அழைக்கப்பட்டுப் போயிருக்கிறார் என்று அறிந்து மகிழ்கிறேன். இந்த ஸ்ரீ வி. எம். நரசிம்மன் இக்காலத் தமிழர்கள் கம்பரைப் படித்துத் தெரிந்து கொள்ள உதவுமாறு உரையுடன் கம்பராமாயணத்தைப் பதிப்பித்த ஸ்ரீ வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்களின் புதல்வர். ஆலயச் சிற்பங்களைப்பற்றி நன்கு ஆராய்ச்சி செய்து பல அரிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கட்டிட நிர்மாணத் துறையில், அவருடைய புலமையைக் குறிக்கும் பல இந்திய — ஆங்கிலப் பட்டங்கள் பெற்றவர் ஸ்ரீ நரஸிம்மன், B.A., B.E. A. M.I.E., M.R. San. I (Lon) அவர்கள் இலங்கைக்குச் சென்று திருக்கேதீசுவர ஆலயத்தைப் புதுப்பிக்க உதவி புரிவது தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் உள்ள நீடித்த கலாச்சார உறவை மறுபடியும் புதுப்பித்து நிலைநிறுத்தி உறுதிப் படுத்துவதாகும்.
★★★
தாய்நாட்டில் உள்ளவர்கள் சேய் நாட்டுக்குப் போய்ப் பார்க்கும்போது அங்கே காணும் நல்ல அம்சங்களைக் கவனித்துக்கொண்டு வருவதுதான் நியாயம். நல்லதல்லாத அம்சங்கள் பலவும் இருக்கக் கூடுந்தான். ஆனால் அவற்றை ஆராய்வது ஒரு வாரத்து விருந்தினராகப் போகும் நம்முடைய கடமையன்று. மிஸ் மேயோவின் வேலை செய்கிறவர்கள் வேறு யாராவது இல்லாமலா போகிறார்கள்? ஆகவே மனதிற்கு மகிழ்ச்சிதரக்கூடிய நல்ல அம்சங்களைப்பற்றி மட்டுமே இதுவரை எழுதி வந்திருக்கிறேன். ஆயினும் மிகவும் வருந்தத்தக்க ஒரு நிலைமையைப்பற்றிச் சொல்லித் தீரவேண்டியிருக்கிறது. தமிழ் நாட்டைக் காட்டிலும் பிற்போக்கான நிலைமை ஈழ நாட்டில் ஒரு துறையில் இருந்துவருகிறது. அதுதான் தீண்டாமை ஒழிக்கும் துறை. ஹரிஜனங்கள் என்று மகாத்மாவினால் புது நாமகரணம் செய்யப்பட்ட நம் தீன சகோதரர்களுக்குத் தமிழ் நாட்டிலுள்ள ஆலயங்களையெல்லாம் மேளதாளத்துடன் திறந்து விட்டுவிட்டோம். நமது தார்மீக வாழ்க்கையின் கேந்திரஸ்தலங்களாகிய ஆலயங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவில் தீண்டாமையை ஒழித்துவிட்டோம். ஆழக்குழித் தோண்டிப் புதைத்து விட்டோம். ஆனால் ஈழ நாட்டில், கல்வியறிவில் சிறந்த தமிழ் மக்கள் வாழும் யாழ்ப்பாணப் பகுதியில், இன்னமும் தீண்டாமை அரக்கன் ஆட்சி செலுத்திவருகிறான்! கோயில்களுக்குள் ஹரிஜனங்கள் புகக்கூடாது என்று வழி மறிக்கிறான். இந்த வெட்கக்கேட்டை என்ன வென்று சொல்வது?
யாழ்ப்பாணத் தமிழர் சமூகத்துக்கு இது எவ்வளவு பெரிய அவகேடு என்பது, பருத்தித்துறைக்குப் போகும் வழியில் உள்ள வதிரி என்னுமிடத்தில் எங்களுக்கு நன்கு தெரியலாயிற்று. அந்தக் கிராமத்தில் எங்களை வழிமறித்து நிறுத்தினார்கள். ஒரு பள்ளிக் கூடத்தில் வரவேற்பு உபசாரமும் நிகழ்த்தினார்கள். தூய கதராடை புனைந்த ஒரு நண்பர் இனிய குரலில் அழகாகவும் தெளிவாகவும் தேவாரம் பாடினார். இன்னொரு நண்பர் மிக இனிய செந்தமிழில் வரவேற்புரை நிகழ்த்தினார். சபையோரின் முகங்களில் பண்பட்ட கல்வியறிவின் களை குடி கொண்டிருந்தது. அவர்கள் அத்தனை பேரும் ஹரிஜனங்கள் என்பது கூட்டத்தின் இறுதியில் ஸ்ரீ பேரின்ப நாயகம் சொல்லித்தான் நாங்கள் தெரிந்து கொண்டோம்; தெரிந்து அதிசயித்தோம். இவர்களையா ஈழ நாட்டு ஆலயங்களில் விடுவதில்லையென்று ஆத்திரமும் அடைந்தோம். அப்படியானால் திருக்கேதீசுவரம் ஆலயத் திருப்பணி முதலிய கைங்கரியங்கள் என்னத்திற்கு என்றும் எண்ணமிட்டோம். கடவுள் அருளால் மறுமுறை நான் இலங்கைக்குப் போக நேருமானால், அப்போது ஈழ நாட்டில் தீண்டாமை ஒழிந்து விட்டது என்ற நல்ல செய்தியைக் கேள்விப்பட விரும்புகிறேன்.
வதிரி பள்ளிக்கூடத்தில் நிசழ்ந்த வரவேற்பு நிகழ்ச்சியின் முடிவில் அந்தப் பள்ளிக்கூடத்தின் நன்கொடையாளரான திரு. கா. சூரன் என்பவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இப்பெரியார் நந்தன் சரித்திரத்தில் வரும் பெரிய கிழவனாரை எனக்கு ஞாபகப்படுத்தினார். ஆனால் அந்தப் பெரிய கிழவனாருக்கும் இந்தச் சூரனாருக்கும் வேற்றுமை மிக அதிகம். இவர் காந்தி மகான் மறைந்ததும் இயற்றி அச்சிட்ட ஒரு பாடல் புத்தகத்தை எனக்கு அளித்தார். அந்தப் புத்தகத்தை ஒரு பொக்கிஷமாக நான் போற்றி எடுத்துக்கொண்டு வந்தேன்.
பாடல் ஒருபுறம் இருக்கட்டும். முகவுரையில் இவர் எழுதியிருக்கும் வசன நடைக்கு ஒரு உதாரணம் பாருங்கள்:—
“மகாத்மா மறைந்த மறுதினம் 31-1-48 சனிக்கிழமை சுமார் 7 மணிக்கு மகாத்மா அவர்களை யாரோ சுட்டதால் அவர் இறந்ததாகக் கேள்விப்பட்டேன். நான் நம்பவில்லை. சில நிமிஷங்கழித்து விஷயம் உண்மைதான் என்றும், இரவு நேருஜி அழுதழுது பேசியதாகவும் அறிந்தேன்...... (மகாத்மா) மனிதனால் சகிக்கமுடியாத கஷ்டங்களையெல்லாம் மேற் கொண்டு ஜெயமடைந்த நிகழ்ச்சிகளெல்லாம் என் மனக்கண் முன் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்சி அளித்தன. மகாத்மா யாருக்காக மேற்படி கஷ்டங்களை அநுபவித்தாரோ அவர்களில் ஒருவனே அவருக்கு இறுதிக் காலனும் ஆனான். ஒரு நுண்ணிய ஊசியானது பெரிய சேலைகளையெல்லாம் தைத்து உடுப்பாக்கியது போலவும் ஒரு தீக்குச்சியானது எல்லையற்ற தீயைப் பரப்புவது போலவும் மகாத்மா ஆகிய சிறிய உருவம் தனது உடல் பொருள் ஆவி மூன்றையும் உலக சேவைக்கு ஒப்படைத்ததாலன்றோ இன்று எல்லா உலகமும் அவருடைய தத்துவங்களைப் பின்பற்றும்படி பிரசாரஞ் செய்து வருகின்றன!..........”
எப்பேர்ப்பட்ட தமிழ் வசன நடை! அதில் என்ன உணர்ச்சி! என்ன சக்தி! ‘நான் நம்பவில்லை’ என்ற சின்னஞ்சிறு வாக்கியம் எவ்வளவு பொருள் பொதிந்து உணர்ச்சி ததும்பி நிற்கிறது?
இதை எழுதியவர் ஒரு ஹரிஜனர்; அதிலும் வயது முதிர்ந்த கிழவர். இத்தகைய உத்தமர்களினால்தான் உலகில் மழை பெய்கிறது. இலங்கையை அடியோடு கடல் கொண்டு போய்விடாமல் கொஞ்சம் கொஞ்சம் கரையை இடிப்பதுடன் திருப்தியடைந்து நிற்கிறது. வாழ்க திரு சூரனார்! வாழ்க அவருடைய திருக்குலம்!இப்படிப்பட்டவர்களை ஆலயங்களில் விட மறுக்கும் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் மேற்படி அநீதியை நிவர்த்தி செய்கிறவரையில் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டுதான் வாழ வேண்டும்! சிங்களவரிடம் போராடத்தான் அவர்களுக்கு வலிமை ஏற்படுமா?