இலட்சிய வரலாறு/இலட்சியம் வளர்ந்த வரலாறு
இலட்சியம் வளர்ந்த வரலாறு.
இலட்சியம் நமது மூல முழக்கம்
திராவிடநாடு திராவிடருக்கே என்ற இலட்சியம், இப்போது நமது மூல முழக்கமாகி விட்டது. மற்றப் பல பிரச்சினைகள் யாவும், இலட்சியத்துக்குத் துணை தேடும் அளவுக்கே கவனிக்கப்படுகின்றன. ஒரே நோக்கமாக, இந்த இலட்சியத்தைக் கொண்டிருக்கிறோம். திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்களுக்கு, மத,சமுதாய, பொருளாதாரப் பிரச்சினைகளிலே பலவகையான கருத்துகளும், திட்டங்களும் உண்டு என்ற போதிலும். இவையாவும், இசைக்கு உள்ள 'சுருதி ' போல, திராவிட நாடு திராவிடருக்கே என்ற இலட்சியத்துக்குத் தக்க விதமாகவே அமைத்துக் கொள்ளப்படுகின்றன.
உறுதிகொள்ள ஓர் நாள்
இந்த இலட்சியத்தை நாம் கைவிடப் போவதில்லை என்ற நமது உறுதியைத் தெரிவிக்கவும், இந்த இலட்சியம் நிறைவேற முன்னம், இடையிலே வீசப்படும் சில்லரைகளைக் கண்டு திருப்திப்பட முடியாது என்பதைத் திட்டமாகத் தெரிவிக்கவும், திராவிட நாடு பிரிவினை நாள் கொண்டாட்டம் ஏற்பாடாகிறது. இந்தச் சமயத்தில் 'திராவிட நாடு திராவிடருக்கே' என்ற நமது இலட்சியம் வளர்ந்த விதத்தைக் கவனப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.
உரிமை முழக்கத்தில் உயிர் துறந்த வீரன்
முப்பது ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு, திராவிடர் என்ற உரிமை முழக்கம் கிளம்பிற்று. ஆனால், அந்த முழக்கம் மாளிகைவாசிகளின் தொடர்பினால் கெட்டுவிட்டது. இந்த நாடு திராவிட நாடு-இங்குள்ள நாம் திராவிடர்-என்ற முழக்கத்தை மக்கள் மன்றத்திலே, தமது கடைசி மூச்சு இருக்கும் வரை செய்து வந்தவர் டாக்டர் சி. நடேச முதலியார். அவர் துவக்கிய அந்த அரிய இயக்கத்தினால் உண்டான வேகத்தை, உண்மையான விடுதலைக்குப் பயன் படுத்திக்கொள்ளாமல். அரண்மனைகளிலே வீற்றுக்கொண்டு அரசியலை நடத்தி வந்த சீமான்கள், பட்டம் பதவிகளுக்கு இந்த வேகத்தைப் பயன்படுத்திக்கொண்டதுடன், தங்களுடைய முழுத் திறமையும், காங்கிரசைக் குறை கூறவும், அதே நேரத்தில் பிரிட்டிஷாருக்குத் துதி பாடவுமே உபயோகப்பட வேண்டுமென்று நோக்கம் கொண்டவர்களாக இருந்தனர். எனவே, திராவிடர் என்ற உரிமைச் சொல், திராவிட அரசு அமைக்கும் பரணியாகாமல், சர்க்கார் காரியாலயக் கதவைத் தட்டும் சுயநலச் சத்தமாகி விட்டது. டாக்டர் நடேச முதலியார், உள்ளம் உடைந்தே மாண்டார்; இருந்த வரையில் அவர் திராவிடன் என்று பேசத் தவறியதில்லை.
ஆரியத்தை அகற்ற ஆர்வம் காட்டாத தலைவர்கள்
அந்த நாட்களிலே, ஆங்கிலத்திலே, S. I. L. F. என்றும், ஜஸ்டிஸ் என்றும் மாளிகைகளில் வழங்கி வந்ததேயொழிய, மக்களின் முன்பு, திராவிடன் என்ற பெயரே வழங்கப்பட்டது. தமிழ்ப் பத்திரிகையின் பெயரே ' திராவிடன்' திராவிடக் கலை, திராவிட மதம், திராவிட வைத்யம், திராவிட இசைவாணர்கள் -- என்றெல்லாம், அந்த நாளில், பலர், பல்வேறு துறைகளிலே, திராவிட மறுமலர்ச்சிக்காகப் பணிபுரிய முனைந்தனர். ஆனால் அந்த அடிப்படை வேலையில் ஆர்வம் காட்டத் தலைவர்கள் தவறி விட்டனர். அவர்கள் தங்கள் ஆற்றலை எல்லாம் அரசியல் அதிகாரம் எனும் மாய மானை பிடிக்கவே செலவிட்டனர். அதனால், அவர்கள், ஒவ்வொரு நகரிலும், பிரமுகர்களைச் சந்தித்தபோது, தேர்தலைப் பற்றிப் பேசி வந்தனரே தவிர, உத்தியோகத் துறையிலே, ஐயர்களுக்கு ஆதிக்கம் இருக்கிறது, அதை ஒழிக்க வேண்டும் என்பதை வலியிறுத்தி வந்தனரே யொழிய சமுதாயத்திலே படிந்து கிடந்த ஆரியத்தை அகற்ற, திராவிட உணர்ச்சியை ஊட்ட, பணிபுரியவில்லை.
"அந்த நாள்" தலைவர்கள்
மக்களுக்குப் புதிராயினர்
சமுதாயத் துறையிலே பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்துவது ஆபத்தல்ல; அரசியலில் ஆதிக்கம் பெற்றுள்ள பார்பனர்களாலேயே நமக்கு ஆபத்து- என்று வெளிப்படையாகவே அந்த நாள் தலைவர் பேசிவந்தனர். தலைவர்களின் பேச்சு அவ்விதமிருந்தது, டாக்டர் நடேச முதலியார் போன்ற ஒருவரிருவர் தவிர; அதேபோது மக்களின் பழகி, பிரசாரம் புரிந்து வந்த ஜே. என். ராமநாதன், கண்ணப்பர், டி. வி. சுப்பிரமணியன் போன்றவர்கள், திராவிடன் என்ற உணர்ச்சியை ஊட்டியும்
அரசியலிலே மட்டுமல்லாமல், சமுதாயத் துறையிலே பார்ப்பனர்கள் பெற்றிருந்த ஆதிக்கத்தை விளக்கிக் கண்டித்தும் வந்தனர். மக்களை அவர்கள். திராவிடர்களாக வாழும்படி வலியுறுத்தி வந்தனர். தலைவர்களோ, மக்களை, பார்ப்பனருக்கு எதிராக 'ஓட்' கொடுக்கும் அளவுக்குத்தான் உபயோகித்தனர். எனவே, மக்களுக்கு அந்தத் தலைவர்களின் போக்கு முதலில் புரியவில்லை; புரிந்த பிறகு பிடிக்கவில்லை; பிடிக்காததால் விலகினர்.மாயமான் வேட்டையில் 'மாடமாளிகைக்காரர்கள்'
திராவிட இன உணர்ச்சிக்காக எடுத்துக் கொண்ட முதல் முயற்சி முறியடிக்கப்பட்டது, மக்களுக்கு ஆர்வம் ஏற்படாமல் போனதால் அல்ல; நமது தலைவர்கள் அரசியலை மட்டுமே கவனித்து சமுதாயத்தில் தலையிடுவதைத் தவறு என்று எண்ணியதால். ஒரு இருபதாண்டுகள் மாயமான் வேட்டையில்-மந்திரிப் பதவி அமைப்பதில், அதாவது சுயநல வேட்டைக்கு, அதன் விளைவாக, சதியாலோசளைகளுக்குச் செலவிடப்பட்டன. அந்தக் காலத்திலே, மாளிகை சதியாலோசனை மண்டபங்களாயின! ஆள் தூக்கிகள் அரசியல் சூத்திரதாரிகளாயினர்! பதவி தேடுவோர், அரங்கமேறினர்! பரங்கிக்கும் கொண்டாட்டம், மக்கள் இந்தக் காரியம் தங்களுக்கு அல்ல என்பதைத் திட்டமாகத் தெரிந்து கொண்டு கட்சியைக் கண்டிக்கவே தொடங்கினர். மாளிகைகளிலே சதிச்செயல்கள், கட்டுக்கடங்கா நிலைபெற்று ஒருதலைவர் இன்னொரு தலைவரை வீழ்த்துவதையே தொழிலாகக் கொண்டு, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, கும்பலாகச் சாய்ந்தனர். அந்த அதிர்ச்சியிலே, ஆரம்பத்திலே ஆர்வத்துடன் கிளம்பிய திராவிட இன உணர்ச்சி மங்கிற்று; மடியவில்லை. அந்த உணர்ச்சி, என்றுமே மடிந்ததில்லை— அடிக்கடி மங்கி இருக்கிறது — ஏனெனில், அந்த உணர்ச்சி, உள்ளத்தின் பேச்சு — அரசியல் வெட்டுக்கிளிகள் கூச்சல் அல்ல.
ஆரியத்தின் அணைப்பில் அவதியுற்ற திராவிடம்
இங்கு நெடுங்காலமாகவே, ஆரியத்தின் அணைப்பிலிருந்து விடுபட, திராவிடம் பலமுறை முயன்றிருக்கிறது. சில நேரத்தில் செயலற்று இருந்தது என்றபோதிலும், அடியோடு சரண் புகுந்ததில்லை. அடிக்கடி தனித்தமிழ், வேளாள நாகரிகம், உண்மைச் சைவம், பண்டை நாகரிகம், என்று பல்வேறு தலைப்புகளிலே கிளம்பிய இயக்கங்கள் யாவும், மூல முயற்சியின் சிறு சிறு பதிப்புகளேயாகும். இவை ஒவ்வொன்றும், தேவை, பலனுமுண்டு இவைகளால் என்று போதிலும், இவை, மக்களில் ஒரு சிலரால் மட்டுமே உணரக்கூடியதாக இருந்த காரணத்தால், மூல முயற்சியை இந்த இயக்கங்கள் பலப்படுத்த முடியவில்லை. ஒவ்வொன்றும், தனித்தனி இயக்கங்களாக மாறி விட்டன. முரண்பாடுகளாகவும் தெரியலாயின. விரோத உணர்ச்சியும்கூட வளர்ந்தது. தமிழகத்திலே, பல முகாம்கள் தோன்றலாயின! மூல முயற்சியை மறந்து விட்டனர்.
மடிந்த உணர்ச்சி கண்டு மாற்றார் மனமகிழ்ந்தனர்
கண்ணைக் கட்டிவிடப்பட்ட வீரன், சாலையிலே நடந்து செல்கையில், மரத்துக்கு மரம் மோதிக்கொண்டு சங்கடப்படுவதைப்போல, நாடு, இருந்தது. மீண்டும் ஒருமுறை திராவிட இன உணர்ச்சி தோன்றுமா என்பதே சந்தேகமாகிவிட்டது. அந்த உணர்ச்சி அடியோடு மடிந்து விட்டது என்று மாற்றார்கள் மகிழவும் செய்தனர்.ஆனால் இலட்சியம் மடியவில்லை—சமயத்துக்காகக் காத்து கொண்டிருந்தது. பலப்பல சமயங்கள் வந்தன— ஆனால் சரியான சமயங்களாகவில்லை.
தாழ்ந்த தமிழகம் தன்னார்வம் கொண்டது
இந்தி எதிர்ப்புப் போராட்டம் தக்க சமயமாயிற்று. நாடு எங்கும், காங்கிரஸ்மீது கோபமட்டுமல்ல அதன் அளவு குறைவுதான்— தமிழ்ப் பற்று, பரவிய காலம். எங்கும் சங்க நூற்களைப் வடிக்க ஆரம்பித்த காலம். தமிழனுக்கு தனியாக ஓர் மொழி உண்டு, தனியான பண்பு உண்டு என்ற பெருமையைப் பேசலாயினர்; ஐம்பெருங் காப்பியத்தைப் பற்றிய பேச்சு பொது மேடைக்கு வந்து விட்டது! ஆர்வம், தமிழ்மீது அதிகமானதும், இடையே, புராணீகர்களும் புகுந்து கொண்டனர். ஆனால் அவர்களின் ஆதிக்கம் வளரமுடியாதபடி, தமிழ் ஆர்வம் கொண்டவர்கள் தமிழ்மொழி தாழ்வுற்ற காரணம் என்ன, தமிழ்ப்பண்டி
மறைந்த காரணம், தமிழகச்சிறப்பு தேய்ந்த காரணம் ஆகியவற்றை ஆராயத் தொடங்கினர். அந்த ஆராய்ச்சி, அவர்களை விட்ட இடத்தில் கொண்டுவந்து சேர்த்தது அதாவது டாக்டர் நடேச முதலியாரின் கல்லறைக்கு அருகே கொண்டு வந்து நிறுத்திற்று. பழைய நினைவுகள், பழைய பரணிகள் மீண்டும் உலவலாயின !வாடிய தமிழ்ப்பயிர் செழிக்க "வாய்க்கால் வெட்டிய " வீரர்கள்
தமிழ்மொழியைக் காப்பாற்ற ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறை சென்ற காட்சி, தமிழரின் உள்ளத்திலே, ஓர் புது உணர்ச்சியை உண்டாக்கி விட்டது. தாலமுத்து நடராஜன் கல்லறைமீது தமிழர் கண்ணீர் சிந்தினர். இரு வாலிபர்களுக்குச் சாவு, பல வாலிபர்களுக்குச் சிறை, எல்லாம் தமிழ் மொழியின் பாதுகாப்பின் பொருட்டு என்பதை அந்தக் கல்லறையின் பக்கம் நின்று சிந்தித்த போதுதான், இந்நிலை மாறவேண்டும் என்ற உறுதி தமிழருக்குப் பிறந்தது. அப்போது தான் "தமிழ்மொழிக்குப் பிறமொழியால் ஆபத்து என்று அலறுகிறாயே தோழனே ! ஏன் வந்தது அந்த ஆபத்து, யாரால் வந்தது என்பதை எண்ணிப்பார். மொழிக்கு மட்டும் தானா, கலைக்கு, நெறிக்கு, பண்புக்கு, இனத்துக்கு, நாட்டுக்கு, உன் வாழ்வுக்கு, ஆபத்து வந்திருக்கிறதே அதைத் தெரிந்து கொண்டாயா ? எவரால் வந்தது இந்த ஆபத்து என்பதை அறிவாயா? ஏன் வந்தது என்பதை யோசிப்பாயா? நான் கூறுகிறேன் கேள். தமிழ்நாடு தமிழனிடம் இல்லை! ஆகவே தான் தமிழனுடைய பொருள் தமிழனிடம் இல்லை. பிற நாட்டான் எண்ணுகிற எண்ணமெல்லாம் இங்கு இப்போது சட்டமாகி விடுகிறது. பிறநாட்டானின் பொருளுக்கு இது மார்க்கட்டாகிறது. இந்நிலை மாறவேண்டும் மொழிப்போராட்டம் மட்டும் போதாது — இது முடிவல்ல; தொடக்கம்— இந்தியை விரட்டினால் மட்டும் போதாது; தமிழ்நாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தும் தீய சக்திகள் யாவும் தொலைய வேண்டும் - அதுவே நமது முழக்கமாக வேண்டும்— இனி அதுவே நமது போர்—நமது இலட்சியம்— தமிழ் நாடு தமிழருக்கே!" என்று பெரியார் இராமசாமி முழக்கமிட்டார். ஆம்! ஆம்! அறிந்தோம் ! தெளிந்தோம் ! என்று அன்று கடற்கரையிலே கூடிய இலட்சத்தை எட்டிப் பார்த்த பெருந்தொகையினரான மக்கள் முழக்கமிட்டனர் - உறுதி கொண்டனர். மக்களின் மனக் குமுறலைக் காட்டுவது போல கடலலை ஒலித்தது. மேலே நிலவு. தமிழரின் விழிப்புற்ற நிலைமை விளக்குவது போல ! வானத்திலே இங்கு மங்கும் மேகங்கள், தமிழ்ச் சமுதாயத்திலே உள்ள கரைகள் போல ! தமிழன் மீண்டும் தன் இலட்சியத்தைப் பெற்றுவிட்டான். தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டான். மங்கியிருந்த இலட்சியம், மீண்டும் உலவலாயிற்று ! இம்முறை நேரடியாக, மன்றத்துக்கு இலட்சியம் போய்ச் சேர்ந்தது ! ஆகவே அந்த இலட்சியத்துக்கு, புதியதோர் சக்தி ஏற்பட்டு விட்டது. மக்களுக்கு, தாங்கள் ஒரு இலட்சியத்துக்காகப் பணியாற்றப் போகிறோம் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மாளிகைக்கு அல்ல, பதவிக்கு அல்ல; நம் நாட்டின் தனி உரிமைக்குப் போராடப் போகிறோம் என்று எண்ணலாயினர்! அந்த எண்ணம், புரட்சிக் கவிஞரின் பொன்மொழிகளினால், மேலும் உரம் பெற்றது.
ஆடுவமே பள்ளுப் பாடுவமே
தமிழ்ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!
என்றார் கவிஞர் ! ஆயிரமாயிரம் இளைஞர்களின் விழிகளிலே களிப்பு கூத்தாடலாயிற்று. தேர்தல், சட்டசபை, மந்திரி சபை முதலியன, அவர்களின் பார்வைக்கு மிக மிகச் சாமான்யப் பொருள்களாயின. அந்தப் பொருள்களுக்காக ஆவல் கொண்டிருப்பவர்கள், இளைஞர்களின் கண்களிலே, சேலத்தில் கேலிச் சித்திரங்களாகத் தெரியலாயினர். தடைகளை, சங்கடங்களை மீறி, இளைஞர்கள், அந்த இலட்சியத்தை நோக்கி நடக்கலாயினர், புதிய பாதை கிடைத்து விட்டது என்ற பூரிப்புடன் தமிழன், தன் மொழி, கலை, இவைகளைக் காப்பாற்ற நாட்டை மீட்டாகவேண்டும் என்பதைக் கண்டறிந்து, கூறிய போர் முழக்கம், தமிழ்நாடு தமிழருக்கே என்பது !
ஏளனம் பேசியோர் " எரிமலை" கண்டனர்
எலிவளை எலிகளுக்கே என்றனர், ஏளனம் பேசியே எதையும் ஒழித்துவிடமுடியும் என்று எண்ணிய அறிவாளிகள்! மக்களோ தமிழ் நாடு தமிழருக்கே என்பதை உச்சரிக்கலாயினர். உண்மைதானே, நியாயம்தானே, அவசியம்தானே கூறிக்கொண்டனர்; கூறிக்கொண்டே மேலும் யோசிக்கலாயினர்— இன்று எப்படி இருக்கிறது தமிழ் நாடு என்று. சர்வம் ஆரிய நியமாக இருக்கக்கண்டனர்— எப்போது இருந்து இந்நிலை என்று என்று ஆராயத் தொடங்கினர் - தமிழன் ஆரியத்துக்கு இடங் கொடுத்த நாள் தொட்டு இந்நிலை என்பதறிந்தனர் — அதற்கு முன்பு எந்திலை என்று ஆராய்ந்தனர்— முப்புறம் கடலும் வடபுறம் விந்தியமும் ஆரணளிக்க, அழகுத் திராவிடம், ஆற்றலுடன் விளங்கியிருந்ததைக் கண்டறிந்தனர். திராவிடத்தின் ஒரு பகுதி ஆந்திரராகி, பிறிதோர் பகுதி கேரளராகி விட்டதைக் கண்டனர்— பிரிந்தாலும், இவைகளுக்கிடையே மொழிவழியாக ஒருமைப்பாடு இருத்தலைக் கண்டனர்— பண்டைத் திராவிடத்தை நினைவிற் கொண்டனர்— ஆரியத்துக்கு எதிர்ச்சொல்லாக— ஆரியர் என்ற கலாசாரத்துக்கு முற்றிலும் மாறான கலாசாரத்தை உணர்த்தும் குறியாக — திராவிடம் என்ற சொல் இருக்கக் கண்டனர். சரிதமும், பூகோளமும், மக்கள் உளப்பண்பு நூலும் இந்த உண்மைக்கு ஆக்கம் அளித்திடக் கண்டனர்! ஓஹோஹோ கண்டோம் உண்மையை என்றனர். திராவிடநாடு திராவிடருக்கே என்றனர். இலட்சியம் முழு உருவம் பெற்றது! இன்று அந்த இலட்சியத்தை ஆதரிக்க திராவிடநாடு திராவிடருக்கே என்று கூற மட்டும் கூச்சப்பட்டுக்கொண்டு, மாகாண சுதந்திரம், மாகாண சுயாட்சி என்று சில பலர் கூறுவர். சிலர், முழு உரிமை நமக்கு, ஆனால் அகில இந்தியத் தொடர்பு வேண்டுமன்றோ என்பர், அவர்களின் வார்த்தையிலே உள்ள வளைவு நெளிவுகள் அல்ல, முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியவை— அவர்கள் இலட்சியத்தை நோக்கி நடந்து வருகிறார்கள் என்பதே முக்கியம்.
பித்தம் தெளிந்தும் சிந்திக்க மறுத்தார்!
தமிழ்நாட்டுக் காங்கிரஸின் தலைவர், நாம்திராவிடப் பிரிவினை நாள் கொண்டாடும் சமயமாகப் பார்த்து "திராவிடநாடு தனிநாடு ஆகவேண்டும் என்ற திட்டம், நாட்டை மேலும் பிளவுபடுத்துவதாகவே முடியும்" என்று கூறினார். அதாவது, நண்பர் காமராஜர் நமது திட்டத்தின் விளைவு என்ன என்பதைக் கூறுகிறார். ஏன் அந்தத் திட்டம் தேவைப்படுகிறது என்பது பற்றிச் சிந்திக்க மறுக்கிறார்— ஒருவேளை சிந்தித்து உண்மையைக் கண்டபிறகு, மறைக்கிறாரோ என்னவோ! நமது விஷயத்தில் வடநாட்டுத் தலைவர்கள் குறுக்கிட்டபோது, காமராஜருக்கு மேலிடத்தின்மீது எவ்வளவு கோபம் வந்தது— நாம், அதே மேலிடம், உள்நாட்டு விவகாரத்தில், கலையில், நாகரிகத்தில், முக்கியமாகப் பொருளாதாரத் துறையிலே நுழைந்து, ஆதிக்கம் பெறுவதைக்கண்டு, கோபிப்பது குற்றமாகுமா என்பதை அவர் யோசிக்க வேண்டும். அவருக்குள்ள பல தொல்லைகளுக்கிடையே அவகாசம் கிடைப்பது அரிது என்றாலும், கொஞ்சம் அவகாசம் ஏற்படுத்திக்கொண்டு, நமது தலைவரிடம் பேசினால், திராவிடநாடு ஏன் தனி நாடாக வேண்டுமென்று கூறுகிறோம் என்ற காரணங்களைத் தெரிந்து கொள்ளலாம் — பிறகு அவர் தமது கருத்தை வெளியிட்டால் பொருத்த மிருக்கும். ஒரு பிரச்சினையை அதன் விளைவை முன் கூட்டித் தாமாகக் கற்பித்துக்கொண்டு கவனிப்பது, சரியான முறையல்ல. இந்தப் பிரச்சினையைக் கவனிக்கும்படி, காரணங்களை ஆராயும்படி காமராஜர்களை அழைக்கும் நாள்தான் ஜூலை I-ந் தேதி.
தனி அரசுரிமையிலே "தன்னலம்"
தோற்றமேன்?
திராவிடஸ்தானால், நாடு துண்டாகும் என்று சொன்னவர், அதேபோது, நமது இலட்சியத்தின் அருகே வந்து போகிறார், தெரிந்தோ தெரியாமலோ ! அவர் கூறியிருக்கிறார், 'ஆந்திரம், கேரளம், தமிழகம் ஆகியவைகள் தனிச் சுதந்திர அமைப்புகளாகி இந்திய சமஷ்டியோடுகூடி வாழ வேண்டும்' என்று INDEPEN-DENT UNITS தனி உரிமையுள்ள அங்கங்கள் என்கிறார். ஏன், அந்த ஆசை பிறந்தது? தனி உரிமை கோரக்காரணம் என்ன? இப்போதுள்ள நிலைக்கும், தனி உரிமை பெற்றால் ஏற்படும் நிலைமைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? இதனை அவர் விளக்கவில்லை ! அதுமட்டுமல்ல, அவருடைய 'ஆசை'க்கு நேர்மாறாக இப்போது அ. நி. சபையில், இந்த 'அங்கங்கள்' பங்கப்படுத்தப்படுகின்றன என்பதையும் அவர் மறைக்கிறார்— தடுக்க முடியாத காரணத்தால் ! தனி அரசுரிமை கோருகிறார் நாம் அதிலே மாசு மருவற்ற நிலை கேட்கிறோம். அவர், 'தனி’ அரசுரிமை பெற்றாலும், இந்திய சமஷ்டியிலே சேரவேண்டும் என்கிறார். இந்திய சமஷ்டி மட்டுமல்ல, நேரு கூறும் ஆசிய சமஸ்டியானாலும் சரி, வெண்டல் வில்க்கி கூறிய உலக சமஸ்டியானாலும் சரி, சேருவோம்; தவறில்லை; தடையில்லை. ஆனால், தனி அரசுரிமை வேண்டுமே, எங்கே அதற்குத் திட்டம்— திட்டம் தீட்டிவிடுகிறார்களே அ. நி. சபையில் ! அது காமராஜரின் ஆவலைப் பூர்த்திசெய்யக் கூடியது அல்லவே ! அதற்கு என்ன சொல்லுகிறார் அன்பர் ?
எதிர்ப்பாளர்கூட “இலட்சியம்” பேசக் கண்டோம்
சகித்துக் கொண்டோம்! பின்னர் "சல்லடம்" கட்டுவோம்.
இராமகிருஷ்ணர் படங்கள், கல்கத்தாவில் அச்சாகி நமக்குக் கிடைத்து, டால்மியா சிமிட்டி பூசப்பட்ட சுவரிலே டாட்டா கம்பெனி அனுப்பும் ஆணியை அடித்து மாட்டும் போதெல்லாம், இந்த இலட்சியம், மெல்ல காதருகே நின்று கேட்கும் "இதுதான் உன் நிலையா? உன் நாட்டிலே இரும்பு, இல்லையா?" என்று கேட்டுவிட்டுச் சிரிக்கும் ! ஷோலாப்பூர், பம்பாயிலிருந்து வேட்டியும், சேலையும், லாகூருக்கும் விஷாவாருக்கும் போக முடியாததால், அதிகமாக இங்கே வருகிறபோது, இலட்சியம் கவனத்துக்கு வரும்! வங்காள ரசாயன சாலையிலிருந்து வரும் மருந்து வகை இலட்சியத்தைக் கவனப்படுத்தும்! வெளி உலகுடன் நடத்தும் வியாபாரமும், கொள்ளும் தொடர்பும், விந்தியத்துக்கு மேலே உள்ளவர்களோடு முடிந்து விடுகிற போது, இலட்சியம் கவனத்துக்கு வரும். முதலில் கொஞ்சம்
தயக்கம், பிறகு தைரியம் உண்டாகும். நாம் எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் "இந்த வடநாட்டு ஆதிக்கத்தை நம்மால் சகிக்க முடியவில்லை. திராவிட நாடு திராவிடருக்காக வேண்டும் என்ற இலட்சியம் பேசப்படும். அந்த நாளைக் காணவே இந்த நாட்களில் ஏற்படும் இழிவுகளை, பழிகளை, எதிர்ப்புகளை, ஏளனங்களைச் சகித்துக்கொள்கிறோம்—சகித்துக்கொள்வோம்—நாம் அல்ல இதிலே முக்கியம், நாடு !