இலட்சிய வரலாறு

இலட்சிய வரலாறு

நூலாசிரியர்: காஞ்சிபுரம் நடராசன் அண்ணாத்துரை

(அறிஞர் அண்ணா)

'இலட்சிய வரலாறு' நூலின் முன்னுரை:

தந்தைபெரியார்

"நான், திராவிடர் கழகத்தை அது ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரோடு இருந்தகாலத்தில் இருந்ததுபோல் இது ஒருகட்சியல்லவென்றும், திராவிடர் கழகம் ஒரு பிரச்சார இயக்கம் என்றும் பத்து ஆண்டுகளாகச் சொல்லிவருகிறேன். அதனாலேயே திராவிடர் கழகத்தை, மக்கள் ஒரு கட்சி என்று கருதாமல் இயக்கம் என்றே கருதவேண்டும் என்பதற்காக, அதற்கு ஏற்றபடி கழகத்தை ஒரு பிரச்சார ஸ்தாபனமாகச் செய்துவருகிறேன். ஏனென்றால், 1925-இல் நாம் ஆரம்பித்து நடத்திவந்த சுயமரியாதை இயக்கம்தான், ஜஸ்டிஸ் கட்சியைக் கைப்பற்றி இயக்கப் பிரச்சாரம் செய்து வருகிறதே ஒழிய, இது ஒரு தனிக்கட்சியாளர் கையில் இல்லை. சுயமரியாதை இயக்கத்தின் திட்டங்களில், ஏதாவது ஒருசிறு மாறுதல் காணப்படலாமே ஒழிய, சுயமரியாதை இயக்க அடிப்படையிலும் அதன் தலையாய கொள்கைகளிலும் திராவிடர் கழகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. இதைச் சேலம் மாநாட்டிலேயே அண்ணாதுரை தீர்மானம் தெளிவுபடுத்தி ஆய்விட்டது. ஆகவே ஜஸ்டிஸ் கட்சி எந்த மக்களுக்காக என்று தோற்றுவித்து நடத்திவரப்பட்டதோ, அந்த மக்கள் (திராவிட மக்கள்) சுயமரியாதை இயக்கத்ததை அப்படியே ஒப்புக்கொண்டு பெரிதும் சுயமரியாதைக்காரர்களாக ஆகிவிட்டார்கள் என்பதும், சுயமரியாதைக்காரர்கள் அல்லாதவர்களாய் இருந்தவர்கள் மெல்ல நழுவிவிட்டார்கள் என்பதும்தான் கருத்தாகும். எனவே, சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் என்னும் பேரால், பெரிதும் தன்இயக்கப் பிரச்சார வேலையே செய்து வருகிறது என்று சொல்லலாம். அதனால்தான் நான் அடிக்கடி திராவிடர்கழகம் ஒரு பிரச்சார இயக்கம் என்றும், இது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோஷியலிஸ்ட், இந்துமகாசபை, வருணாஸ்ரம சுயராஜ்ய சங்கம், பிராமண பாதுகாப்புச் சங்கம், மிதவாத சங்கம், முஸ்லீம் லீக், கிறிஸ்தவ சங்கம், தாழ்த்தப்பட்டவர்கள், ஷெடியூல் லீக் முதலாகியவைபோலும் ஒருகட்சி ஸ்தாபனமல்ல என்றும் சொல்லுகிறேன். எப்படி எனில், இக்கழகம் மக்கள் அறிவுத்துறையிலும், சமுதாயத்திலும், மதத் துறையிலும், கடவுள் துறையிலும், நீண்டநாட்களாக இருந்துவரும் மடமைகளையும், முன்னேற்றத் தடைகளையும், குறைபாடுகளையும் நீக்கவும், மக்கள் யாவரையும் ஒன்றுபடுத்தி ஒருசமுதாயமாக ஆக்கவும், சிறப்பாக நமக்கு- திராவிடமக்களுக்கு- இருந்துவரும் சமுதாய இழிவு, மத மூட நம்பிக்கை, ஜாதிப்பிரிவு வேறுபாடு அடியோடு அழிக்கப்பட்டு, ஆரியக்கொடுமையிலிருந்து மீளவுமே பாடுபட்டு வரும்படியான- அதாவது, மக்களுக்கு வலியுறுத்திவரும்படியான- ஒரு ஸ்தாபனமாகும்.

திராவிடர் கழகத்திற்கு சுயராஜ்யம் பெறவேண்டும் என்கிற ஒரு கற்பனைத்தத்துவமோ, தேர்தலுக்கு நின்று மெஜாரிட்டியாகி, "அரசியலைக்" கைப்பற்றவேண்டும் என்கிற தப்புப் பாவனையோ இல்லை. ஏனென்றால், இன்று நாட்டில்நடப்பது சுயராஜ்யம் என்றுதான் சொல்லப்படுகிறது. அன்னியனான வெள்ளையன் (பிரிட்டிஷார்) ஆதிக்கம் போய்விட்டது. திராவிட நாட்டுக்குத் திராவிட மக்களே முதல் மந்திரி, இரண்டாம் மந்திரி, மொத்தத்தில் 13-இல் 10 மந்திரி திராவிடர்கள் என்று சொல்லும்படியான திராவிட மெஜாரிட்டி மந்திரிசபையாக இருக்கும்போது, இனிச் சுயராஜ்யம் பெறுவது என்பதற்கு வேறு கருத்து என்ன இருக்கமுடியும்? யார் பெறுவது? அரசியலைக் கைப்பற்றுவது? யாரிடமிருந்து யார் கைப்பற்றுவது? திராவிட மக்கள் அல்லாதவர்கள் கைக்கு இனி அரசியல் எப்படிப்போகும்? ஆகவே, சுயராஜ்யம் பெறுவது என்பதோ, அரசியலைக் கைப்பற்றுவது என்பதோ இனி அர்த்தமற்ற பேச்சுகளாகும்; அர்த்தமற்ற காரியங்களுமாகும். இந்த மாகாணத்தில் இனி நாம்தான் 100-க்கு 90-க்கு மேற்பட்ட ஓட்டர்களாகவும் ஆக்கப்படப்போகிறோம். பெரும்பாலான மந்திரிகள், உத்தியோகஸ்தர்கள் திராவிடர்களாகத்தான் இருக்கப்போகிறார்கள். அதில் சந்தேகம் இருக்க நியாயமில்லை. ஆனால், இதில் என்ன குறை சொல்லலாம் என்றால், இதனால் திராவிடநாடு பிரிந்து கிடைக்குமா? திராவிடர் கழகக் கொள்கைகள், திட்டங்கள் நடைமுறைக்கு வருமா? என்பதுவேயாகும். சுலபத்தில் வராது என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், நாம்- திராவிடர்கழகத்தார்- சட்டசபைக்குப் போய்விடுவதாலோ, அரசியலைக் கைப்பற்றுவதாலோ, மந்திரிகளாய் விடுவதாலோ, திராவிடநாடு வந்துவிடுமோ, திராவிடர் கழகக் கொள்கைகளும், திட்டங்களும் அரசியல் மூலம் நடத்தப்பட்டு விடுமோ? என்று பார்த்தால் இன்றைய நிலைமையில் அவை சுலபத்தில் ஆகக்கூடிய காரியங்கள் அல்ல என்பதே நமது கருத்து.

வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது
"நம் இழிவு நீக்கம், நம் முன்னேற்றத் தடைநீக்கம், ஆரியத்தில், மூடநம்பிக்கையில் இருந்து விடுபடுதல், பகுத்தறிவாளர்களாக, மானமுள்ள சமுதாயமாக ஆவது, இப்படிப்பட்ட நம் வேலை நெருப்போடு பழகுவதுபோல் பாமர மக்களிடம் பழகுவதாகும். அவர்கள் நம்பிக்கையைப் பெறவேண்டும். அவர்களைத் திருத்தியே ஆகவேண்டும். இதற்கு நல்ல பிரச்சாரம் வேண்டும், ஒத்துழைப்புவேண்டும், ஒன்றுபட வேண்டும். நிலைகுலைந்து சின்னாபின்னப்பட்டுக் கிடக்கும் மக்களை ஒன்றுசேர்த்து யாவர் பலத்தையும் ஒன்றாய்த்திரட்டி ஒருமூச்சுப் பார்த்தாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இனி நாம் சூத்திரர்களாக வாழமாட்டோம் என்பதே நமது இலட்சியச்சொல், நமது மூச்சு. வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது. அது கானல் நீரல்ல. கருத்தும் கவலையும் இருந்தால் கண்டிப்பாக அடைந்தே தீருவோம் என்கிற உறுதி எனக்கு உண்டு."
தலைவர்

பெரியார்.

நூல்

1. கண்ணீரால் எழுதப்பட்டது


திராவிட மன்னர்கள்

தருமராஜன் போல் நாட்டைச் சூதாட்டத்தில் தோற்றதில்லை.
அரிச்சந்திரன்போல் நாட்டை முனிவருக்குத் தானம் செய்ததில்லை.

திராவிடக் கவிஞர்கள்

அதல சுதல பாதாளமென அண்டப்புளுகு எழுதவில்லை.
கண்ட கண்ட உருவெடுத்தார் கடவுள் எனக் கதை தீட்டவில்லை.
காலடியில் புரண்டு தொழுதால் கடாட்சம் என்று கூறவில்லை.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றனர்.


திராவிடர்

உயிர்வாழ மானத்தை இழந்ததில்லை.
உறுதியின்றி உலுத்தராய் இருந்ததில்லை.
சூது, சூட்சியை ஆயுதமாகக் கொண்டதில்லை.
சுதந்திர வாழ்வுக்காக உயிரையும் தந்தனர்.


திராவிடம்

அன்னிய ஆட்சிக்கு அடிமைப்பட்டிருக்கவில்லை.
பஞ்சமும் பிணியும் பதைப்பும் கண்டதில்லை.
பாட்டாளி பதைக்கப் பார்த்துச் சகித்ததுமில்லை.
உழைப்பால் உயர்ந்து உரிய இடம் பெற்றது உலகில்.


திராவிடம்: இன்று

திராவிட மன்னர்கள் மறைந்தனர்; மக்கள் பண்பை மறந்தனர்.
வீரம் கருகிவிட்டது! வீணருக்கு ஆதிக்கம் ஏற்பட்டது.
திராவிடக் கலைக்கும், மொழிகட்கும் மதிப்பு இல்லை.
திராவிடத்தொழில் வளம் தூங்குகிறது. திராவிடன் தேம்புகிறான்.
திராவிடச் செல்வம் கோயிலில், கொடிமரத்தில், கொட்டுமுழக்கில், வெட்டிவேலையில், வெளிநாட்டில் சென்று முடங்கிவிட்டது.
திராவிடன், தேயிலை-கரும்பு-ரப்பர் தோட்டக் காடுகளில் கூலியாய் வதைகிறான்.
திராவிட நாட்டிலே, மூலை முடுக்கிகளிலெல்லாம் மார்வாடிக் கடைகள், குஜராத்திகளின் கிடங்குகள், முல்தானியின் முகாம்கள், சேட்களின் கம்பெனிகள்.
பெரிய வியாபாரங்களெல்லாம் வட நாட்டாரிடம்.
தொழிற்சாலைகளிலே, துரைமார்கள் இல்லை- பனியாக்கள்!
டால்மியாவுக்கு்த் திருச்சிக்குப் பக்கத்திலே நகரமே இருக்கிறது.
ஆஷர் சேட்களுக்குத் திருப்பூர்- கோவை வட்டாரத்தில் ஆலை அரசர்கள் எல்லாம் கட்டியம் கூறவேண்டிய நிலைமை.
சென்னையிலே சௌகார் பேட்டைஇருக்கிறது. பாரத் பாங்க் இருக்கிறது.
தினம் ஒலிக்கும் மணி, ஒருவடநாட்டுக் கோயங்கா உடையது. சென்னையில், பெரிய கட்டிடங்கள் இன்று வடநாட்டாருக்குச் சொந்தம்!
இந்நிலையில் உள்ள திராிடத்திலே, ஆடை முதல் ஆணி வரை, வடநாட்டிலிருந்து வருகிறது. வருகிறது என்னும்போது, ஏராளமான பணம் இங்கிருந்து வடநாட்டுக்குப் போகிறது என்று பொருள்.
வளம் இழந்து, இருக்கும் கொஞ்ச நஞ்சம் வளத்தையும், வடநாட்டுக்குக் கொட்டி அழுதுவிட்டு, வறுமைப்பிணியுடன் வாடும் திராவிடம், தலைதூக்க, அதன் மக்களுக்கு முழுவாழ்வு கிடைக்க, வெளிநாடுகளுக்குக் கூலிகளாகச் சென்றுள்ளவர்கள் திரும்பிவர, வாழ்க்கைத்தரம் உயர, திராவிட நாடு திராவிடருக்கு என்ற நமது திட்டம் தவிர வேறு திட்டம் இல்லை!
பொருளாதாரத்தையே அடிப்படையில் கொண்ட இப்பிரச்சினையை, வெறும் கட்சிக் கண்களுடன் நோக்காமல், நாட்டுப்பற்று நிரம்பிய கண்கொண்டு காணும்படி, திராவிடர்கழகத்தைச்சாராதவர் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
தலையிலே பிரிபிரியாக வர்ணத் துணியைச் சுற்றிக்கொண்டு, போர் போராக உள்ள சாமான்களின் பக்கத்திலே உட்கார்ந்துகொண்டு, வட்டிக்கணக்கைப் பார்த்துக் கொண்டே வயிற்றைத் தடவிக்கொண்டுள்ள மார்வாரியையும் பாருங்கள், பாரம் நிறைந்த வண்டியை, மாட்டுக்குப் பதிலாக இழுத்துச் செல்லும் தமிழனையும் பாருங்கள்! மெருகு கலையாத மோட்டாரில் பவனிவரும் சேட்டுகளையும் பாருங்கள், கூலி வேலைக்கு வெளிநாடு செல்ல, கிழிந்த ஆடையும், வறண்ட தலையும், ஒளியிழந்த கண்களும் கொண்ட தமிழன், கப்பல் டிக்கட்டுக்குக் காத்துக்கொண்டிருக்கும் காட்சியையும் காணுங்கள். இங்கே பச்சைப் பசேலென்று உள்ள நஞ்சை புஞ்சையையும் பாருங்கள், அதேபோது நடக்கவும் சக்தியற்று, பசியால் மெலிந்துள்ள தமிழர்களையும் பாருங்கள்-எங்களை மறந்து- இந்தக் காட்சிகளைக் காணுங்கள். நாங்கள் கூறுகிறோம் ஒரு திட்டம் என்பதைக் கூட மறந்து- நாங்களாக யோசித்து ஒருதிட்டம் கூறுங்கள். பண்டைப்பெருமையுடன் இருந்த ஒரு நாடு, பல்வேறு வளங்கள் நிரம்பியநாடு, இன்று, வடநாட்டுடன் இணைக்கப்பட்டு, இப்படி வதைபடுவது நியாயமா, இந்த இணைப்பிலிருந்து விடுபட்டு, தனித்து நின்று, தனி அரசு நடத்தி, நாட்டுவளத்தைப் பெருக்கி, அந்த வளம் நாட்டுமக்களுக்கே பயன்படும்படி செய்வது குற்றமா? அதற்கு, திராவிடநாடு திராவிடர்க்கே என்பதன்றி வேறென்ன திட்டம் இருக்கமுடியும்? இருந்தால் கூறுங்கள்!
கப்பல் தட்டிலே நின்றுகொண்டு, வளமிகுந்த என் தாய்நாட்டிலே என் வாழ்வுக்குப் போதுமானவழி கிடைக்காததால், "இதோ நான் மலேயா போகிறேன்; கண்காணாச் சீமை; காட்டிலே வேலை செய்யப் போகிறேன்; தாயைப்பிரிந்து போகிறேன்; தாய் நாட்டிலிருந்து வறுமை என்னைத் துரத்துகிறது; வெளிநாடு செல்கிறேன் கூலியாக" என்று ஏக்கத்துடன் கூறித் தமிழன் சி்ந்திய கண்ணீர்கொண்டு எழுதப்பட்ட இலட்சியம், திராவிட திராவிடருக்கே என்பது.

2. புதிய வரலாறு


11-09-1938 தமிழ்நாடு தமிழருக்கே என்று பரணி பாடினோம்.
27-12-1938 வேலூர் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு எதிர்காலத் திட்டம் பேசப்பட்டது.


29-12-1938 சென்னை, ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் தமிழ்நாடு தனிநாடு ஆகவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.
10-12-1939 தமிழ்நாடு தமிழருக்கே என்ற திட்டத்தை நாட்டுமக்களுக்கு விளக்க விழாக் கொண்டாடப்பட்டது.


2-07-1940 காஞ்சிபுரத்தில் திராவிடநாடு பிரிவினை மாநாடு நடத்தப்பட்டுப் பிரிவினைக்குக் கமிட்டி நியமிக்கப்பட்டது.
24, 25-08-1940 திருவாரூர், மாகாண மாநாட்டில், திராவிட நாடு தனிநாடாக வேண்டும் என்ற திட்டம் தீர்மானமாயிற்று.


20-08-1944 மாகாண சேலம் மாநாட்டில், திராவிட நாடு தனிநாடாக வேண்டும் என்பது, கட்சியின் மூலாதாரத் திட்டமாக்கப்பட்டதுடன், கட்சியின் பெயரே திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது.
29-09-1945 திருச்சியில், மாகாண மாநாட்டில் திராவிட நாடு தனிநாடாக வேண்டும் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.


01-07-1947 திராவிட நாடு பிரிவினை நாள் கொண்டாட்டம்.
சொன்னோம்
பாகிஸ்தான் பெறுவது, இன் கபர்ஸ்தான் புகுவது என்று எண்ணுமளவுக்கு இஸ்லாமியர் துணி்ந்து விட்டனர். அவர்கள் தோட்டா இல்லாத துப்பாக்கிகளல்ல. - விடுதலை 1940 டிசம்பர் 16.
சொன்னார்
"பாகிஸ்தான் திட்டம் ஆபாசமானது; விஷமத்தனமானது. காங்கிரஸ் யோசித்துப் பார்க்குமளவு யோக்யதை உள்ள விஷயம் என்று கூட அதனைக் காங்கிரஸ் கருதவில்லை" - 1940 அக்டோபர், ஜவஹர்


நடந்தது?

பாகிஸ்தான் கிடைத்துவிட்டது.

3. திராவிடர் கழகம்

சேலத்திலே, 27-ஆந்தேதி நடைபெற்ற மாநாட்டிலே, தெ.இ.ந.உ.சங்கத்திற்குத் திராவிடர் கழகம் என்ற புதுப்பெயரும், பட்டம் பதவிகளை விட்டொழித்துவிட்டு, நாடு மீளவும் கேடுதீரவும் பணிபுரியும் அணிவகுப்பினை அமைக்கும் திட்டமும், உணர்ச்சியும் வேகமும் கொண்ட பல்லாயிரக்கணக்கான திராவிடத்தீரர்கள் ஆதரவைப் பெற்றுவிட்டன. வெற்றிகரமாக நடந்தேறிய அம்மாநாடு வெறும் வைபவமென்றோ, ஒரு குழுவின் வெற்றியென்றோ நாம் கருதவில்லை; ஒரு இயக்கவளர்ச்சியிலே முக்கியமான, குறிப்பிடத்தக்க ஒரு கட்டம் என்றே கருதுகிறோம். தீவிரமான திட்டங்களை நிறைவேற்றிவிட்டது, மனத் திருப்திக்காக அல்ல! திட்டங்களைத்தீட்டிவிட்டு, எட்டிநிற்போராக இருப்பவர்களைப் பற்றிக் கவலையில்லை. அத்தகையவர்க்ளுக்குத் திட்டங்களைப்பற்றியும் கவலையில்லை. ஆனால், கஷ்டநஷ்டம் ஏற்கும் துணிவுடன் அன்று அங்குக் கூடிய வீரர்கள் கூட்டம் விரும்புவது, விடுதலைப்போரினையேயாகும்! விவேகசிந்தாமணிக்கு விளக்கவுரையாற்றும் காரியத்திலோ, அரசியல் தந்திரங்களுக்கு அட்டவணை தயாரிக்கும் வேலையிலோ, அந்த அஞ்சா நெஞ்சு படைத்த ஆயிரமாயிரம் தோழர்களுக்கு அக்கறை கிடையாது. அவர்கள், பட்டம் பதவி கிட்டுமா என்று பக்குவம் பார்த்துப் பொதுவாழ்வு நடத்தும் பண்பினரல்ல! 'ஒரு பெரிய பண்டைப் பெருமை வாய்ந்த இனம் பாழாகிவிடுவதா, உலகவரலாற்று ஏடுகளிலே இடம்பெற்ற ஒருநாடு உதவாக்கரைகளுக்கு உலவுமிடமாவதா, இந்நிலையை மாற்றப் போரிடாது ஆண்மையாளர் என்ற பெயரைத்தாங்குவதா?' என்ற தீ உள்ளே கொழுந்துவிட்டெரியும் கோலத்துடன் கூடிய அந்த வீரர்கள் விரும்புவது, உரிமை! ஆம்! திராவிடநாடு திராவிடருக்கே என்ற உரிமையைத்தான் அவர்கள் விரும்புகின்றனர். அந்தக் கண்கள் காட்டிய ஒளி, அவர்கள் அன்று கிளப்பிய ஒலி, தோள்தட்டி மார்நிமிர்த்தி அணிவகுத்து நின்ற காட்சி, ஒருஇனத்தின் ஏழுச்சியின் அறிகுறியாக, விடுதலைப்படையின் எக்காளமாக, மூலத்தை உணர்ந்தோரின் முழக்கமாக இருந்ததேயன்றிக் காருண்யமுள்ள சர்க்காருக்கு வாழ்த்துக்கூறிக் கனதனவான்களுக்கு நமஸ்காரம் செலுத்திச் சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் சேதி கூறிடும் சிங்காரக் கூட்டமாக இல்லை. இதனை நாடு அறிதல் வேண்டும்; நாமும் மனதிலே பதியவைத்துக் கொள்ளவேண்டும்.
ஆளும் கூட்டத்தாரால் அலட்சியப்படுத்தப்பட்டு, மாற்றுக் கட்சிகளால் கேலிசெய்யப்பட்டு, ஆரியர்களால் அவமதிக்கப்பட்டு, வடநாட்டவரால் வாட்டப்பட்டு, மண் இழந்து மானம் இழந்து, பொருளைப் பறிகொடுத்து, மருளைத் துணைக்கழைத்து, மார்க்கமின்றி மமதையாளரிடம் மண்டியிட்டுக் கிடக்கும் ஒரு இனம், அன்று, "விடுதலை பெற்றுத் தீரவேண்டும், அதற்காக நான் உழைப்பேன்! உயிர் அளிப்பேன்! இடையே இன்பம் என்ற பெயரிலே எதுவரினுங்கூட மயங்கிடேன்; போரிடுவேன்! பெற்றால் வெற்றிமாலை, இல்லையேல் சாவு ஓலை!" என்று பெரியதோர் சூள் உரைத்த சூரர்கள் கூட்டம் அது.


வழக்கமாகக் கூடி, வசீகரமாகப் பேசி, வளையாது குனியாது வாய்வீரம் காட்டிவிட்டு, வாகை சூடியதாக மனப்பால் குடித்துவிட்டுத் தோகையர் புடைசூழப் போக பூமிக்குச் செல்லும் சுகபோகிகளின் கூட்டம் அல்ல! வறுமையின் இயல்பைத் தெரிந்தவர்களின் கூட்டம்! பசியும் பட்டினியும் எப்படி இருக்கும் என்பதை அறிந்தவர்கள்! பாட்டாளிகள்! ஆனால் பார்ப்பனீயத்தின் பாதத்தைத் தாங்கும் ஏமாளிகளல்ல, அந்தப் பார்ப்பனீயத்தை மத-சமுதாயத் துறைகளிலேயே முறியடிக்காமலேயே பட்டத்தரசராகிவிடமுடியும் என்று கருதும் கோமாளிகளல்ல, ஊருக்கு உழைத்து உருமாறிக் கிடக்கும் உத்தமர்கள் கூடினர் அன்று! உறுதியை வெளிப்படுத்தினர், ஊராள்வோரின் உளமும் உணரும் விதத்திலே. பட்டம் பதவிக்காகவே கொட்டாவி விட்டுக்கிடக்கும் கட்சி என்றிருந்த பழிச்சொல்லை அன்று துடைத்தனர், மணிமீது கிடந்த மாசுதுடைக்கப்பட்டது; ஒளி வெளிவரத் தொடங்கிவிட்டது, பட்டம் ஏன்? பதவி ஏன்? பரங்கியும் பார்ப்பனனும் பார்த்தா, பாராண்ட தமிழனுக்குப் பட்டம் சூட்டவேண்டும்? கடல் கடந்தவன் தமிழன்! இமயத்தில் புலி பொறித்தவன் தமிழன்! கடாரத்தைக் கொண்டவன் தமிழன்! ரோம் நகருக்குப் பொன்னாடை விற்றவன் தமிழன்! இலக்கியச் சுவையைக் கண்டவன் தமிழன்! எந்நாடும் வியக்கும் வீரன் தமிழன்! ஏறு நடையுடையான் தமிழன்! இன்னல்கண்டும் புன்னகை புரிவான் தமிழன்! அவனுக்குப் பட்டம், சோப்பும் சீப்பும் கண்ணாடியும் விற்கவந்து, பின்னர் அரசாள ஆரம்பித்த துரைமார்கள் தருவதா? ஏன்? அந்நாள்தொட்டு, ஆரியன் நமக்கு இட்ட "சூத்திரன்" என்ற இழிபட்டம் போக்கச் சிறுவிரலை அசைக்காதவருக்கு, 'இராவ்பகதூர்' எதற்கு? இந்தப் பட்டமும் பதவியும், தமது காலிலே தட்டுப்பட்டால் மட்டுமே, எடுத்துக்கொள்ளும் பண்பினர் பலர் உண்டு! ஒருசிலர் உண்டு, பகலிலே அதுபற்றியே பேச்சு, இரவிலே கனவு, எந்தநேரமும் அந்தச் சிந்தனையே! அவர்களின் தொகை மிகக்குறைவு! பிரிட்டனின் பாரதிதாசன் எனத்தகும் ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிஞன் கூறினதுபோல, "அவர்கள் சிறுதொகை, நாம் மிகப்பலர்" மிகப்பலர் கூடி, அவர்களை "ஒன்று உமது இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள், அது இயலாது எனின், எமக்குத் தனிவாழ்வு நடாத்த வழிசெய்துவிடுங்கள்" என்று கேட்டுக் கொண்டனர். பட்டம் பதவிகளை விட்டுவிடுவது என்ற தீர்மானத்தின் கருத்து அதுதான்! தளபதி பாண்டியன் அவர்கள் இத்தீர்மானத்தை ஆதரித்ததுடன், அது நடைமுறைக்கு ஏற்றதாக அமைவதற்கு முக்கியமாகக் கட்சியிலே ஒழுங்கான அமைப்பு வேலை இருக்கவேண்டும் என்று கூறினார்கள். 'ஆம்! செய்வோம்!' என்று கூறினர் அன்பர்கள்.
தமிழகத்தைப்பொறுத்த வரையிலே, தளபதிகள் இசைந்துவிட்டனர், இந்த ஆக்கவேலைக்கு. இதற்கான ஊக்கம் அளிக்கவேண்டிய பொறுப்பு உணர்ச்சியுள்ள தோழர்களுடையது. இதைக் காரியத்திலே காட்டும் "சக்தி" வாலிபர்களிடம் இருக்கிறது. சிறு கிராமம் முதற்கொண்டு பெரிய நகரம் வரையிலே செல்லுங்கள், செய்தியைச் சொல்லுங்கள், திராவிடர் கழகத்திலே ஏராளமாகத் தோழர்களைச் சேர்த்துக் காட்டுங்கள். தலைவர்கள ஆச்சரியப்படவேண்டும், அந்த அணிவகுப்பைக் கண்டு. ஆரியம் அலற, உலகம் உணர ஒருஅணிவகுப்புத் தேவை! விரைவாகத் தேவை! வேலை மிகுதியாக இருக்கிறது, விடுதலை முரசு கொட்டப்பட்டுவிட்டது. இன அரசுக்குப் போர், இறுதிப்போர் நடந்தாகவேண்டும். இன்றே கிளம்புக, திராவிடர் பாசறை நிறுவ, பலப்படுத்த!


ஆந்திரமும், கேரளமும் இந்த வேகத்தைக் காணும்நாள் தூரத்தில் இல்லை. அதற்கான வழிவகையும் நிச்சயம் வகுக்கப்படும்.
இன்று நமது இனமிருக்கும் நிலைமை மாறித் திராவிடநாடு திராவிடருக்கே ஆகவேண்டும் என்பதுதான். அதைச்செய்யவே நாம், வடு நிரம்பியஉடலும், வைரம்பாய்ந்த உள்ளமும், சிந்தனை ததும்பும் மனமும், செய்வகை அனுபவமும் தெளிந்த, சிறைக்கோட்டத்துக்கும் வீட்டுக்கும் வித்தியாசமிருப்பதாகவே கருதாத, ஓய்வு தெரியாத ஒருபெரியாரின் தலைமையிலே கூடி நிற்கிறோம். அவர் களம்பல கண்டவர். போர்பல நடத்தியவர், போகவாழ்வை வெறுத்து ஏழை வாழ்வை நடாத்திவருபவர். அவருக்கு அநேக தாலமுத்து நடராஜன்கள் கிடைப்பர். புற்றிலிருந்து ஈசல் கிளம்புவதுபோல வாலிபர்கள் வருகிறார்களே என்று ஆளும் கூட்டம் ஆயாசத்தோடு கூறும் விதத்திலே, வாலிபர்களை வரச்சொல்லும் வசீகரம் அவருக்கு உண்டு. அவர் நமக்குப்போதும். வேறுசிலருக்கு வேறுசிலர் தேவையாம்! நமக்கு அதுபற்றிக் கவலை வேண்டாம்! போரிடத் தெரிந்த பெரியார், போர்வீரர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்: "போர்வீரர்களே! வருக! வருக!" நமக்கு வேறு அறிக்கை வேண்டாம்- தேவையுமில்லை.


"உழைக்கவாருங்கள்; பிழைக்கும் வழி என்ன என்று என்னைக் கேட்காதீர்கள்! உங்கள் இனத்தை மீட்க வாருங்கள், அதற்கு ஏற்ற சக்தி உண்டா என்று என்னைக் கேட்காதீர்கள்! போருக்கு வாருங்கள்; அது எப்படி முடியும், எப்போது முடியும் என்று என்னைக் கேட்காதீர்கள்"- இதுவே பெரியாரின் அறிக்கை.
ஓய்வை விரும்புவோர் ஒதுங்கி நிற்கலாம், சாய்வு நாற்காலியினர் சாய்ந்து கிடக்கலாம், பதவிப்பிரியர்கள் பாதையை விட்டு விலகலாம்; மானத்தைப்பெற, உயிரையும் இழக்கும் மனப்போக்குடையோர் வரலாம்!!- சேலம் விடுத்த செய்தி அதுவே.4. இலட்சிய விளக்கம்


இது ஒரு கட்சியின் முழக்கமல்ல; ஒரு இனத்தின் இருதயகீதம்! மூலாதார உண்மை. எங்கும் எந்தவகையான மக்களாலும் ஏற்றுக்கொள்ளபட்ட உண்மை. இந்தக் கருத்தை, நாம் கூறுகிறோம் என்ற காரணத்தால், எதிர்க்கத்தான் வேண்டும் என்று எண்ணுபவர்கள், அலட்சியப்படுத்துபவர்கள், நமக்கல்ல நாட்டுக்குக் கேடு செய்கிறார்கள், தங்கள் இனத்துக்குத் துரோகம் செய்கிறார்கள்.
சின்னஞ்சிறு நாடுகள், இயற்கைவளமற்ற நாடுகள், இரவல் பொருளில் வாழ்வு நடத்தவேண்டிய நாடுகள்கூடத் தனி அரசுரிமை பெற்றுவிட்டன. இங்கோ, இலக்கியச்செறிவை இருஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்று வாழ்ந்துவந்த நாடு. இன்று மற்ற நாட்டுடன் பிணைக்கப்பட்டு, பிடி ஆளாகிக்கிடக்கிறது. தங்கள் வாழ்நாளில் தாய்நாட்டின்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளை உடைத்தெறிவதை, பெரும்பணி என்று கருதும் வீர்ர்களுக்கு அழைப்பு விடுகிறோம்; திராவிடநாடு திராவிடருக்கே என்பதை மூலை முடுக்கிலுள்ளோரும் அறியச் செய்யுங்கள்- அணிவகுப்பில் சேருங்கள் என்று கூறுகிறோம்.
நமது கொள்கையின் மாசற்ற தன்மையை, திட்டத்தின் அவசியத்தை, இலட்சியத்தின் மேன்மையை, அனைவரும் அறியும்படி, விளக்க, இந்த ஜூலை 1-ஆம்தேதி, திராவிடப்பிரிவினை தினமாகக் கொண்டாடத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. திராவிடநாடு திராவிடருக்கு என்ற திட்டததை, நாம் அர்த்தமற்றுத் தீட்டிக் கொள்ளவில்லை- தக்க- மறுக்க முடியாத காரணங்கள் உள்ளன.
கண்டனம் செய்வோர், கேலி செய்வோர், அலட்சியமாகக் கருதுபவர், அசட்டை செய்பவர், யாராயினும் சரியே- திராவிடநாடு திராவிடருக்கே என்பதற்காக நாம் கூறும் காரணங்களைக் கொஞ்சம் ஆர அமர இருந்து யோசித்துப் பார்த்துவிட்டு ஒருமுடிவு்க்கு வரும்படி கேட்டுக்கொள்கிறோம். பன்முறை கூறியிருக்கிறோம், இக்காரணங்களை இம்முறை இதற்கென ஓர் நாள் கொண்டாடும் சமயத்திலே நாட்டு மக்களுக்கு மீ்ண்டும் ஓர்முறை, அதே காரணங்களைக்கூறுகிறோம்:
1. இந்தியா என்பது ஒருகண்டம். எனவே, அது பலநாடுகளாகத்தான் பிரிக்கப்பட வேண்டும். ஐரோப்பாக் கண்டத்தில் 32 தனித்தனி நாடுகள் உள்ளன. ஐரோப்பா முழுவதும் ஒருகுடைக்கீழ் இருக்கவேண்டுமென யாரும் கூறவில்லை. இந்தியாவும் ஒரே குடையின்கீழ் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.
2. இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு தனித்தனி ஆட்சி கொண்ட 56 தேசங்கள் உள்ள கண்டமாகத்தான் இருந்துவந்தது. பிரிட்டிஷார் தமது ஆட்சி சரியாக நடக்கச் சௌகரியம் தேடிக்கொள்ளவே இந்தியாவை ஒரேநாடு என்று கருதினர்; மற்றவரையும் கருதும்படி செய்தனர்.
3. மதம், மொழி, கலை, மனோநிலை, ஒருகுடிமக்கள் என்ற உணர்ச்சி வரலாற்றுப் பந்தத்துவம்- இவைகள்தாம் இன இயல்புகள். இந்த முறையில் பார்த்தால் இந்தியாவில் தனித்தனி இனங்கள் பல உள்ளன. அவைகளை மூன்று பெரும் பிரிவுகளாகக் கொள்ளலாம்: திராவிடர், முஸ்லீம், ஆரியர் என்று. இந்த மூன்று இனங்களில், திராவிடரும் முஸ்லீமும் இன இயல்புகளில் அதிகமான வித்தியாசம் இல்லாதவர்கள். ஆரிய இன இயல்புகளுக்கும் மற்ற இரு இன இயல்புகளுக்கும் துளியும் பொருத்தம் கிடையாது; பகைமை பெரிதும் உண்டு. இந்தத் தனித்தனி இயல்புகள் இருப்பதால், இனவாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால்தான் அந்தந்த இனத்துக்கென இடமும் ஆட்சியும் கிடைக்கும். இல்லையேல் எந்த இனம் தந்திரத்தாலும், சூது சூழ்ச்சியாலும், தனனலத்துக்காகப் பிறரை நசுக்கும் சுவாபத்திலும் கைதேர்ந்து இருக்கிறதோ, அந்த இனத்திற்கு மற்ற இனங்கள் அடிமைப்பட்டு வாழவேண்டி நேரிடும்.
4. இந்தியா ஒரே நாடு என்று கூறி வருவதால், ஆரிய ஆதிக்கம் வளருகிறது. ஆரிய ஆட்சியின் காரணமாக மற்ற இனநலன்கள் தவிடு பொடியாயின.
5. முரண்பாடுள்ள இயல்புகளைக்கொண்ட இனங்களைச் சூழ்ச்சியால் பிணைத்துக் கட்டுவதால், கலவரமும், மனக்கிலேசமும், தொல்லையுமே வளர்ந்தன. எனவே, எதிர்காலத்தி்ல் தொல்லைகள் வளர்ந்து இந்தியா இரத்தக்காடாகாதிருக்கவேண்டுமானால், இப்போதே சமரசமாக, இனவாரியாக இந்தியாவைப் பிரிக்கவேண்டும்.
6. இனவாரியாக நாடு பிரிக்கப்படுவது என்பது புதிதுமல்ல, கேட்டறியாததுமல்ல. ஏற்கனவே, இந்தியாவில், பிரிட்டிஷ் இந்தியா, சுதேச இந்தியா, பிரெஞ்சு இந்தியா, டச்சு இந்தியா எனப் பல இந்தியாக்கள் உள்ளன. இதுபோல் முஸ்லிம் இந்தியா, ஆரிய இந்தியா, திராவிட இந்தியா என மூன்று தனித்தனி வட்டாரங்கள் தேவை எனக்கேட்பது தவறல்ல.
7. சுதேச சமஸ்தானங்கள் மட்டும் 574 உள்ளன. அவைகளில் தனித்தனி ஆட்சி, தனித்தனி முறை. அதுபோல், மூன்று பெரும்பகுதிகள் தனித்தனி ஆட்சிமுறையுடன் தத்தமது இன இயல்புகளை வளர்த்துக்கொள்ள வழிதேடிக் கொள்வது, தடுக்கமுடியாத உரிமை.
8. ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் பிணைப்பிலிருந்து விடுபட்ட துருக்கி, வல்லரசுகளில் தலைசிறந்ததாக ஆனதுபோல, இன வாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால், ஒவ்வொரு வட்டாரமும், தனிக்கீர்த்தியுடன் விளங்கும்.
9. தனித்தனி வட்டாரமானால், இராணுவ பலத்தை அவரவர் இயல்புகளுக்கு ஏற்றபடி, வளர்க்க ஏது உண்டாகும்.
10. அசோகர், கனிஷ்கர்,க்ஹர்சர், சமுத்திரகுப்தர், அக்பர் முதலிய மன்னாதி மன்னர்கள் காலத்திலும், இந்தியா ஒரேநாடாக இருந்ததில்லை. அப்போதும் திராவிடநாடு எனத் தனிநாடு இருந்தது.
11. தனித்தனி வட்டாரம் பிரிந்தால், அங்கங்குள்ள வசதிகளுக்கேற்றபடி பொருளாததார விருத்திசெய்துகொள்ளவும், ஒரு வட்டாரம் மற்ற இடங்களைச் சுரண்டும் கொடுமையை ஒழிக்கவும் முடியும்.
12. அந்தந்த இனத்துக்கென தனித்தனி இடமும் ஆட்சியும் இருந்தால்தான், அந்தந்த இனமும், மற்றவைகளிடம் சம உரிமை, சமஅந்தஸ்து பெறமுடியும்.
13. இந்தியா ஒரே நாடாக இருக்கிறது என்று கூறித்தான் ஆரியர்கள், இமயம் முதல் குமரிவரை உள்ள இடத்தைத் தமது வேட்டைக்காடாக்கிக் கொண்டு, அரசியலில் அதிகாரிகளாய், கல்வியில் ஆசான்களாய், மதத்தில் குருமார்களாய், சமுதாயத்தில் பூதேவர்களாய், பொருளாதாரத்தில் பாடுபடாது உல்லாச வாழ்வு வாழக்கூடியவர்களாய் இருக்கவும், மற்ற இனத்தவர் தாசர்களாய், பாட்டாளிகளாய் உழைத்து உருவின்றிச் சிதைபவர்களாய் வாடவும் நிலைமை ஏற்பட்டது. இந்தக்கொடுமை நீங்க, வர்க்கத்துக்கொரு வட்டாரத்தைப் பிரிப்பதுதான் சிறந்தவழி!
14. ஒரு இனத்திடம் மற்றொரு இனத்துக்கு நம்பிக்கை இல்லை. ஒரு இனத்து ஆட்சியின் கீழ் மற்றொரு இனம் இருப்பது என்று சொன்னாலே அச்சம் உண்டாகிவிட்டது. அச்சமும் அவநம்பிக்கையும் பெற்றெடுக்கும் குழந்தையே பயங்கரப்புரட்சி. இந்தப் பயங்கரப்புரட்சியைத் தடுக்கவே, இப்போது பிரியவேண்டும் என்கின்றோம்.
15. இந்தியா பிரியாது இருந்தால் இதுவரை, ராணுவப் பொருளாதார அறிவுப் பலம் வளர்ந்ததாகவோ, இந்திய இனம் என்ற புதுச் சமுதாயம் அமைந்ததாகவோ கூற எந்த ஆதாரமும் இல்லை. ஒரு இனத்தின் குரல்வளையை மற்றொரு இனம் அழித்து நெரித்து்க் கொல்லாது போனதற்குக் காரணம் எல்லா இனத்தையும் பிரிட்டிஷ் துப்பாக்கி ஏககாலத்தில் அடக்கிவைத்திருந்தததால்தான். எனவே, பிரிட்டிஷ் பிடிபோய்விட்டால், இந்தியா இரணகளமாகும். இதற்கு ஐரோப்பாவில் அடிக்கடி நடக்கும் போர் ஒரு உதாரணம். எனவே, இத்தகைய இன்னல்கள் உண்டாகாதிருக்க இனவாரியாக இடம் பிரித்து விடுவதே, ஆபத்தைத் தடுக்கும் வழி.

எனவே, இனவாரியாக இந்தியா பிரிந்தால், இன இயல்புகள் தனித்துத் தனிச் சிறப்புடன் விளங்கவும், ஆரிய ஆதி்க்கம் அடங்கவும் பொருளாதாரச்சுரண்டல் போகவும், அறிவை அடக்கும் அவதி நீங்கவும், எதிர்காலத்தில் பூசல் எழாதிருக்கவும், சாந்தம் சமாதானம் நிலவவும் மார்க்கமுண்டு. எனவேதான் இந்தியா இனவாரியாகப்பிரியவேண்டும் என்று, இந்தியாவை இனப்போர்க்களமாகக் காணக்கூடாது என்ற நல்ல நோக்கம் கொண்டவர்கள் கூறுகின்றனர். இதை மறுப்பவர்கள், சரிதத்தை மறந்தவர்களாக இருக்கவேண்டும் இல்லையேல் சரிதத்தை மக்கள் தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணங்கொண்டவர்களாக இருக்கவேண்டும். ஒரே இனஇயல்பு அதாவது ஆரிய ஆதிக்கம், மற்றவைகளை மிதித்துத் துவைத்து அழி்க்கவேண்டுமென்ற கெட்ட எண்ணங் கொண்டவர்களும், வலுத்தவனுக்கு வாழ்க்கைப்படும் வனிதைபோல, இந்தியாவைச் செய்துவிட்டுத் தாங்கள் எப்படியேனும் வழிசெய்து கொள்ளவேண்டும் என்ற கேடுகால யோசனையும் கொண்டவர்களே, இந்தப்பிரிவினைத் திட்டத்தை எதிர்ப்பர். இன்னோரன்ன காரணங்களையும், ஆரிய ஆதி்க்கம் வளர்ந்த விதம், அதனால் பிற இயல்புகள் அழிந்த கொடுமை, இனி ஆரியத்தை அடக்கித் தீரவேண்டியதன் அவசியம் ஆகியவைகளை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினோம். இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் வாதங்கள் ஏலாதனவென்று விளக்கினோம். காரணங்களை அவர்கள் கதைகளால் வீழ்த்தவும், ஆதாரங்களை வெறும் அளப்பினால் அடக்கவும், சரித்திரத்தைச் சவடாலால் சாய்க்கவும், உறுதியை உறுமிக்கெடுக்கவும் நமது எதிரிகள் முனைந்து நிற்பதைப் பொருட்படுத்தாது நம்கடனை நாம் செய்தல் வேண்டும் என்று கூறினோம.
*** *** ***
இஸ்லாமியர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து தங்களின் தலைவரின் திட்டத்தின்படி பணிபுரிந்து வெற்றிபெற்றுவிட்டனர். வடக்கே இனஅரசு -பாகிஸ்தான்- ஏற்பட்டுவிட்டது. அவர்கள் எந்த இலட்சியத்துக்காகப் போராடி வெற்றிபெற்றார்களோ, அந்த இலட்சியத்தை, அவர்கள் முழக்கமாகக் கொள்ளாததற்கு முன்பு நாம்கொண்டோம்; அவர்கள் லாகூரில் பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றாததற்கு முன்பு நாம் திராவிடநாடு திராவிடருக்கே என்று தீர்மானம் செய்தோம். நாடெங்கும், இந்த இலட்சிய்த்தை விளக்கிப் பிரசாரம் செய்தோம் - செய்தும் வருகிறோம். பாகிஸ்தான் தேவை என்பதற்குக் கூறப்பட்ட காரணங்களைவிட, அதிகமான, சிலாக்கியமான காரணங்கள், திராவிடத்தனி அரசு தேவை என்பதற்கு உள்ளன. ஆனால், திராவிடப் பெருங்குடி மக்கள், இதனை இன்னும் உணர்ந்ததாகக் காணோம்.

5. போர்வாள்

திருச்சியிலே! அதற்கு அடுத்தகிழமை நாம் கூடினோம். அங்கே ராஜகோலாகலர்கள் இல்லை! மிட்டாமிராசுகளும், ஜெமீன் ஜரிகைக் குல்லாய்களும் இல்லை! மாநாட்டுப்பந்தலிலே, வந்திருந்த தாய்மார்களின் தங்கக் கட்டிகள் தூங்குவதற்கு ஏணைகள் கட்டிவிடப்பட்டன! கொலுவீற்றிருக்கும் ராஜா கொடுத்த 2000-த்துக்காக, அவருடைய கோணல் சேட்டையைச்சகித்துக் கொண்டிருந்தனர் காங்கிரசில்- இங்கோ, அழுகிற குழந்தையை முத்தமிட்டுச் சத்தம் வெளிவராதபடி தடுத்த தாய்மார்களைக் கண்டோம்; பெருமையும் பூரிப்பும் கொண்டோம். நாட்டுப்பற்றுக்கு நாயகர் என்று கூறிடுவோர், அங்கு ஓட்டுவேட்டைக்கான ஓங்காரச் சத்தமிட்டனர்- இங்கோ, நலிந்து கிடக்கும் இனத்துக்கு நல்லதோர் மூலிகை தேடிடும் நற்காரியத்தில் ஈடுபட்டோம். அங்கு அரசாளவழிகண்டனர்! அங்குப் பதவி தேடிடும் பண்பின்ர் கூடினர்- இங்கு இனத்தின் இழிவுதுடைக்க எத்தகைய கஷ்டநஷ்டமும் ஏற்கத் தயார் என்று உறுதிகூறிய வீரர் கூடினர். அங்கு, வெள்ளை ஆடை அணிந்தவரின் விழா- இங்குத் துயர்கொண்ட திருஇடத்தின் இழிவைக்குறிக்க இனிக்கருப்பு உடைதரித்து, விடுதலைப்போர் துவக்குவோம் என்று சூள் உரைத்த வாலிபர்களின் அணிவகுப்பு. அங்கு அறுவடை- இங்கு உழவு! அங்குப் பேரம்- இங்கு வீரம்! அங்குக் காங்கிரசு- இங்குத் திராவிடர்கழகம்! செல்வம் கொழிக்கும் பம்பாய் நகரிலே, தாஜ் ஹோட்டல் என்ன! ராயல் ரெஸ்டாரண்ட் என்ன! ரம்மியமான பல விடுதிகள் என்ன! இவ்வளவு வசதிகள்! செல்வவான்களுக்கு்த் தேவையான சுவைகள்!- இங்கோ வெட்ட வெளியிலே, ஒரு கொட்டகை! கொட்டகைக்கும் நகருக்கும் இடையே இரண்டுமைல் தொலைவு! மாநாட்டார், சாப்பாடு போட இல்லை! தங்கப்போதுமான விடுதிகள் இல்லை! மழைத்தொல்லையோ தொலையவில்லை! இடியும் மின்னலும், அதிகாரவர்க்கத்தின் அமுலும் அமோகம்! மாநாட்டுக்கு மகாராஜாக்களும், பட்டமகிஷிகளும் இல்லை! அலங்கார புருஷரும் அவரை அடக்கியாளும் மெழுகுபொம்மைகளும் இல்லை! ஒரே ஒருமோட்டார்! இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தது; அதுவும் வாடகை வண்டி!
பதவிபெறப் பாதை வகுத்தனரா? இல்லை! இருக்கும்பதவியை விட்டுவிடு, இல்லையேல் விலகிநில் என்று கூறினர்! தேர்தல் முஸ்தீப்புகள் உண்டா? இல்லை! தீண்டினால் திருநீலகண்டம்!! மாஜி மந்திரிகள் உண்டா? தென்படவில்லை! மிட்டா மிராசுகள் உண்டா? இல்லை! காருண்ய மிகுந்த' சர்க்காருக்குக் காவடி தூக்குவோர் உண்டா? இல்லை! வேறு யார் இருந்தனர்? வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! அவர்கள் கூடிப்பேசி வகுத்த வழி என்ன? "நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்; இது நமக்கே உரிமையாம் என்பதும் தெரிந்தோம்" என்று கூறினர்.கொலைவாளினை எடடா! மிகு கொடியோர் செயல் அறவே என்று பாடினர். "திராவிடத்திருநாட்டினிலே ஆரிய அரசா? அதற்குப் பார்ப்பன முரசா?" என்று கேட்டனர். சர்க்கார்சனாதனத்துக்கு இடந்தரும் போக்கைச் சாடினர்; பெரியாரே, இப்பெரும் படைக்குகந்த தலைவர் என்று தேர்ந்தெடுத்தனர். களம் காட்டுக என்று முழக்கமிட்டனர், கடும் பத்தியத்துக்கெல்லாம் தயார் என்று உறுதிமொழி பூண்டுவிட்டனர்; போயுள்ளனர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=இலட்சிய_வரலாறு&oldid=719788" இருந்து மீள்விக்கப்பட்டது